உங்கள் குலதெய்வத்தின் பெயர் அதன் வரலாறு பற்றி கூறுங்கள்

மாறநாட்டுக் கருப்பணசாமி எங்களின் குலதெய்வம். எங்கள் முன்னோர்கள் மாறநாட்டில் குடியிருந்தார்கள். மலையாள தேசத்தில் இருந்து வரும் ஆறு ஒன்றில் பெட்டி வருவதை வேடிக்கை பார்க்க மக்கள் சென்றுள்ளனர். வைகை ஆற்றுக் கரையின் ஓரம் அந்தப் பெட்டி ஒதுங்கியுள்ளது. அந்தப் பெட்டியைத் திறந்து பார்க்கும்போது, அதில் கருப்பணசாமி சிலையும் ஒரு அம்மனின் சிலையும் இருந்துள்ளது. அதை மார்நாட்டில் வைத்து பூஜை செய்ய ஆரம்பித்தார்கள்.

மறவர் இனப்பெண் எங்கள் மக்களோடு உறவாக இருக்கும். எங்கள் பகுதியில் வந்து விளையாட பழகவுமாக இருக்கும். அந்தப் பெண் வயதுக்கு வந்தவுடன் எங்கள் பகுதிக்கு வர எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள். அதையும் மீறி எங்கள் பகுதிக்கு வருவதை அந்தப் பெண் நிறுத்தவில்லை. அவர்கள் இருப்பதால்தான் பெண் போகிறது, எனவே அவர்களை காலி பண்ணி விடலாம் என பேசுகிறார்கள்.

இதைக் கேட்டு அந்தப் பெண் எங்கள் மக்களிடம் சொல்லுகிறது. அவர்களிடம் அடிவாங்கிச் சாவதைவிட நாமே தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்கின்றனர். எங்கள் மக்கள் அனைவரும் மார்நாட்டுக் கண்மாயில் இறங்கி தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்து இரவு 12 மணிக்கு அனைவரும் வரும் போது அந்தப் பெண்ணும் எங்கள் மக்களோடு வந்துவிடுகிறது.

நிறைந்த கண்மாயில் மக்கள் இறங்கும் போது தண்ணீர் ஒதுங்கி வழி விடுகிறது, அசரீரியாக மாறநாட்டுக் கருப்பணசாமி நீங்க எங்க இருக்கிங்களோ நான் அங்க இருப்பேன். போங்கடா நான் கூட வருகிறேன் எனக் கூறியதாகவும், தண்ணீர்வழிவிட்டு மீண்டும் ஒன்று சேர்ந்த்தாகவும் எங்கள் பெரியவர்கள் சொல்வார்கள்.

அப்படி வெளியேறியவர்கள் பல இடங்களில் தங்குகிறார்கள். அந்தப் பெண்ணும் கூடவே வருகிறது. என்னை அக்னியை வளர்த்து எரித்து விடுங்கள் என்றதாகவும் அந்தப் பெண்ணை எரித்த இடம் தாமரைப்பாடி கிராமம் சாலையூர் எனவும் எங்கள் முன்னோர்கள் சொல்லி இருக்கிறார்கள்.

எங்கள் பூசாரியை வரவழைத்து பழைய வரலாறு கேட்பார்கள். அவர் சொல்லும்போது உடுக்கே உடைந்து தடைபடுத்திவிடும். நானே பார்த்திருக்கேன். நாங்கள் இங்கே மார்நாட்டு கருப்பணசாமி, வடுகச்சி அம்மன், அந்தப் பெண் மறத்தி முத்தம்மாள் என அனைவரையும் எங்கள் குல தெய்வமாக வணங்குகிறோம்.

உங்கள் குல தெய்வத்திற்கும் பெருந்தெய்வங்களான சிவன்,விஷ்னுவுக்கும் உள்ள ஒற்றுமை என்ன?

மார்நாட்டுக் கருப்பணசாமி கோவிலின் முன் பகுதியில் சிவன், விஷ்ணு மற்றும் நவக்கிரகங்களின் ஆலயங்கள் உள்ளன. காவல் தெய்வமாகக் கருப்பணசாமி உள்ளார். அவற்றிற்கான வழிபாடுகள் எப்படி நடந்தன என்ற முறை பற்றி எங்கள் முன்னோர்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால் பல தெய்வங்களுடைய விக்ரகங்கள் உள்ளன. இன்றைக்கும் வழிபாடுகள் நடக்கின்றன.

பூர்வீகக் கோவிலில் கும்பாபிஷேகம் எப்படி நடக்கும்?

நாங்கள் சிறுவர்களாக இருந்த காலத்தில் இருந்து கும்பாபிஷேகம் நடப்பதாகச் சொல்வார்கள். நாங்கள் கலந்து கொண்டது கிடையாது. சமீபத்தில் ஒரு வருடத்திற்கு முன்பு கும்பாபிஷேகம் நடந்தது. நாங்கள் கடைசி 48 நாள் பூஜை செய்தோம். கோவில் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. கும்பாபிஷேகம் அறநிலையத்துறைதான் நடத்துகிறது. ஆனால் பூஜை, நிர்வாகம் அனைத்தும் எங்கள் இனத்தவர் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. 

இங்கே உள்ள கோவிலில் எப்படி நடக்கும்?

எங்கள் முன்னோர்கள் சாலையூருக்கு வந்து குடியேறியபிறகு வீடு கட்டிக் குடியிருந்தார்கள். அதில் ஒரு அறையில் சாமியை வைத்து, பூஜை செய்து வந்தார்கள். காலப்போக்கில் சாமி இருக்கும் இடத்தில் இருக்கக்கூடாது எனக்கூறி அந்த வீட்டை இடித்துவிட்டுத் தரையில் ஒரு கல்லை வைத்து பூஜை செய்தனர். 5 அல்லது 6 வருடங்களுக்கு ஒரு முறை சாமி கும்பிடுவதை ‘களரி’ எனச் சொல்லுவார்கள்.

களரி அன்று பங்காளிகள் ஒன்ற சேர்ந்து கங்கணம் கட்டி விரதம் இருந்து ஆடிமாதத்தில் கிடாய் வெட்டி இரவு 12 மணிக்கு பூஜை செய்வார்கள். அனைத்தையுமே பங்காளிகள் மட்டுமே சாப்பிடுவார்கள். எங்கள் அப்பா காலத்தில் ‘பண்டு’ சேர்த்து கோயில் மாதிரி நான்கு பக்கமும் சுவர் எடுத்து மேலே ஒரு மண் கலசம் வைத்து, ஐயரை வைத்துக் கும்பாபிஷேகம் செய்தார்கள். ஐயர் மேலே கலசத்திற்கு மட்டும் பூஜை செய்தார். மூலஸ்தானத்தில் சிலையோ, விக்ரகங்களோ வைத்து பூஜை செய்ய மாட்டோம். மார்நாட்டில் என்ன மாதிரி இருக்கோ அதே மாதிரி வேல்கம்பு, சந்தனத்தடி, அருவாள் ஆகியவற்றை வைத்து பூஜை செய்கிறோம்.

நீங்களே பூஜை பன்னீர்களா அல்லது பார்ப்பனர்கள் செய்தார்களா?

குலதெய்வம் கும்பிட வேண்டுமென்றால் எங்கள் முன்னோர்கள் சில கட்டப்பாடு வைத்துள்ளார்கள். பாடியூரில் கோட்டை ஒன்று இருந்தது. கோட்டையின் பூசாரி ஊராளிக் கவுண்டர். அவர் சாமி கும்பிடுவதற்கு கங்கணம் கட்டி, திருநீர் கொடுத்து, இந்தத் தேதியிலிருந்து சாமி கும்பிடும்வரை விரதம் இருக்க வேண்டும் எனச் சொல்லுவார்கள்.

அதன் பிறகு சாமி கும்பிடுக்கு முதள்நாள், பக்கத்து ஊரில் தம்பிநாயக்கன்பட்டியில் கம்பளத்து நாயக்கர் கிராமத்து பூஜை செய்ய, தாமரைப்பாடி முனியப்ப கோவிலில் கோட்டையை எதிர் நோக்கி பூஜை செய்வர்கள். பாடியூர் கோட்டையை எதிர்நோக்கி பூஜை செய்வார்கள். கிராமத்து பூஜையை செய்து ஆரம்பித்துவிட்டு அவர்கள் சென்றுவிடுவார்கள். மற்ற அனைத்தும் எங்கள் இனத்தவரே செய்வர்கள். அந்தக்காலத்தில் ஜமீன்வாக்கு என எங்கள் முன்னோர்கள் செய்தார்கள். நாங்களும் அதை கடைப்பிடிக்கிறோம்.

கும்பாபிஷேகம் ஐயரை வைத்து நடத்தினீர்களா?

ஆமாம். கும்பாபிஷேகம் என்றால் கலசத்திற்கு தண்ணீர் ஊற்றுவது. எந்த இனமாக இருந்தாலும் ஜாதியாக இருந்தாலும் ஐயர்கள்தான் பண்ணனும் என முன்னோர்கள் சொல்லி வைத்துள்ளனர். அதுப்படி நாங்கள் அய்யரை வைத்துப் பண்ணினோம். கோவில் கட்டிய பிறகு ஒரு தடவை தான் கும்பாபிஷேகம் பண்ணினோம். அதுவும் அய்யர் வைத்துத்தான் பண்ணினோம். அங்கேயும் அப்படித்தான் நடந்தது. மூலஸ்தானத்தில் அபிஷேகம் செய்வது எங்கள் இனத்து பூசாரி ஆவார். விமானம் எனப்படும் கோபுரக் கலசத்திற்கு மட்டும் ஐயர்கள் பூஜை பண்ணுவார்கள்.

உங்கள் குலதெய்வத்தை வழிபடும் மக்கள் தாகை எவ்வளவு? என்ன என்ன ஜாதி இருக்கிறார்கள்? அல்லது ஒரே ஜாதியா?

மார்நாட்டு கருப்பணசாமியை வழிபடுபவர்கள் அனைவரும் ஒரே ஜாதிதான். மக்கள் தொகைன்னு பார்த்தா இலட்சக்கணக்கான மக்கள் ஏகபோகமாகப் பரவி இருக்கிறார்கள். அதாவது மார்நாட்டிற்குச் சென்று வழிபடுபவர்கள். எங்கள் ஊரில் ஆயிரம் குடும்பம் எங்கள் பங்காளிகள் இருக்கிறார்கள். அவர்கள் வரிக்கொடுத்து மற்றும் உடன்பிறந்த பெண்கள் சாமி கும்பிட ஆரம்பித்தால் அரை வரி கொடுப்பார்கள். சாலையூரில் ஆயிரம் குடும்பம் இருக்கும். மற்ற இன மக்கள் வேண்டுதல் மட்டும் செய்வார்கள்.

ஒரே ஜாதிக்குள் என்றால் என்ன உட்பிரிவு? மற்ற உட்பிரிவுக்கும் ஜாதிக்கும் உள்ள உரிமை என்ன?

எங்களுடையது தேவேந்திரகுல பள்ளன், எங்களில் ஆத்தா பள்ளர், ஆயா பள்ளர் என உண்டு. ஆனால், இவர்கள் யாரும் கலந்து கொள்ள மாட்டார்கள். சாமியை வணங்குவதும் நேர்த்திக் கடன் செலுத்துவதும் உண்டு. சாமியை வணங்கியதால் நல்லது நடந்தது என கும்பிடு தளத்தில் வந்து நேர்த்திக்கடன் செலுத்துவாங்க.

எந்த உட்பிரிவை திருமண உறவாக வைத்தக்கொள்வார்கள்? அவர்களின் தெய்வம் அதன் கதை என்ன?

திருமணம் தேவேந்திர பள்ளர்களின் உட்பிரிவில் தான் நடக்கும். எங்கள் பங்காளிகளுக்கு இது குலதெய்வம் என்றால் மாமன் மச்சான் என அவர்களுக்கு குல தெய்வங்கள் உண்டு. அது ஊருக்கு தகுந்தமாதிரி வேறுபடும். அவர்களின் குல தெய்வம் பற்றி எங்களுக்கு அவ்வளவாக தெரியாது. எங்களின் பெண்கள் எந்தக் குலத்தில் திருமணம் செய்து இருந்தாலும் இந்த குலதெய்வத்திற்கும் காணிக்கை செலுத்துவார்கள்.

குலதெய்வத்திற்கும் அதன் பூசாரிக்கும் உங்கள் வாழ்க்கையில் எந்த அளவிற்கு முக்கியத்துவம் தருகிறீர்கள்?

மார்நாட்டிற்குச் சாமி கும்பிடச் செல்லும்போது, முதலிலேயே தகவல் சொல்லி விடுவோம். பூசாரி எங்களுக்கு ஒரு குரு மாதிரிதான். இறைவனை எப்படி வணங்குகிறோமோ அதே மாதிரிதான். பூசாரிக்கும் முக்கியத்துவம் தருவோம். அவர் சொல்லும் வாக்கு, கொடுக்கும் திருநீர் என அனைத்தையும் நம்பிக்கையோடு நேசிக்கிறோம். இங்கே இருக்கிற பூசாரிக்கும் அதே மரியாதைதான். அவர் சொல்லும் வாக்கைத் தெய்வ வாக்காக ஏற்றுக்கொள்வோம். மார்நாட்டுக் கருப்பணசாமியே சொல்வதாக நம்பிக்கையோடு நேசிப்போம்.

பூசாரி பரம்பரை பரம்பரையாக ஒரே குடும்பத்தில் இருந்து வருவார்களா- அல்லது மாற்று உட்பிரிவில் இருந்து ஏற்றுக் கொள்வீர்களா?

இதுவரை எனக்குத் தெரிய மார்நாட்டிலும் சரி, சாலையூரிலும் சரி எங்கள் பங்காளி களிலிருந்தேதான் பூசாரி தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மாற்று உட்பிரிவில் எப்போதும் கிடையாது. பரம்பரை பரம்பரையாக அந்த வாரிசுப்படி யார் மூத்த மகனோ அவர்தான் பூசாரி அவர்க்கு ஆண் வாரிசு இல்லையென்றால் அவருடைய தம்பியோ அல்லது பங்காளியிலோ தேர்ந்தெடுப்பார்கள்.

குல தெய்வக் கோவிலின் இடம்  ஊர் கட்டிட அமைப்பு போக்குவரத்து வசதி ஆகியவற்றை பற்றி கூறுங்கள்?

பூர்விகத்துல இருக்கிருற கோவிலுக்கு மதுரையிலிருந்து திருப்புவனம் சென்று அங்கிருந்து திருப்பாச்சி சென்று மார்நாட்டிற்கு செல்ல வேண்டும். 50 வருடங்களுக்கு முன்பு சிரமம் இருந்தது. இன்று அனைத்து வாகனங்களும் போகலாம். சாலையூரிலும் திருச்சி - திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் அமைந்துள்ளதால் போக்குவரத்து வசதி பிரச்சனை இல்லை. இங்கே இருக்கிற கோவில் தரைமட்டமாக இருக்கும். ஒரு செட் போட்டு சாமி கும்பிடுவார்கள். இப்பொழுது கட்டிடம் கட்டி கும்பாபிஷேசகம் நடத்த திட்டமிட்டுள்ளோம்.

கோவிலுக்கு என்ன வகை காணிக்கை செலுத்தப்படுகிறது? திருவிழாவிற்கு ஆகும் செலவு என்ன? எப்படி திரட்டப்படுகிறது?

காணிக்கை என்பது சாமி கும்பிடு சாட்டிய பிறகு ஒவ்வொருவரும் வேண்டுதல் என்ற பெயரில் வானவேடிக்கை, கிடாவெட்டுதல் போன்றவை நேர்த்திக்கடனாக வரும். சாலையூரில் நடப்பது என்னவென்றால் இரவு 12 மணிக்கு பூஜை முடிந்து கிடாய் வெட்டி அங்கேயே சமைத்துச் சாப்பிட வேண்டும். மீதம் உள்ள உணவோ, எலும்போகூட எடுத்துச் செல்லாமல் குழி வெட்டிப் புதைத்துவிட வேண்டும். செலவு என்ற பார்த்தால் 1 லட்சத்திலிருந்து 2 லட்சம் வரை செலவாகும். சாமியை கும்பிடும் பங்காளிகளிடமிருந்து தலைக்கட்டு வரியாக வசூலிக்கப்படும். மேலும் நன்கொடையாக யார் கொடுத்தாலும் ஏற்றுக் கொள்வோம்.

மனப்பூர்வமாக நினைத்து வேண்டினால் நடக்கும். நாம் நினைத்த காரியம் நடக்க வேண்டுமானால் அவருடைய ஸ்தலத்தில் போய் வேண்டினால் ஒரு சகுனம் கிடைக்கும். அதுப்படி நினைத்தது நடக்கும். எதாவது காரியம் செய்ய வேண்டுமென்றால் அவரிடம் உத்தரவு கேட்போம். கிடைத்தால் தான் செய்வோம். இல்லையென்றால் செய்ய மாட்டோம். எந்த சமூகமாக இருந்தாலும் வேண்டிக் கொள்வார்கள். நிறைவேறினால் காணிக்கை செய்வார்கள். வேலை போன்ற காரியங்கள் நடப்பதாக நினைத்து நிறைய செய்கிறார்கள்.

பெண்களின் உரிமை என்ன- பெண் கடவுள்களின் கோவில்களில் பெண் பூசாரி உண்டா?

எனக்குத் தெரிய எங்கள் மூன்னோர் காலத்திலிருந்து இதுவரை பெண் தெய்வத்திற்கோ, ஆண் தெய்வத்திற்கோ பெண் பூசாரி இல்லை. கும்பிடு தலத்தில் சாமி வந்து ஆடும்போது எனக்கு வடுகச்சி அம்மன், மறத்தி முத்தம்மாள் வந்து ஆடுவதாக சொல்வார்கள். பூசாரி திருநீர் கொடுப்பார். இந்தப் பங்காளிகள் குடும்பத்தில் பிறந்த பெண்பிள்ளைகள் பாதி வரி கொடுப்பார்கள். எந்தப் பூஜை நடந்தாலும் அதில் அவர்களுக்குரிய ஒரு பங்கு அவர்கள் வந்தாலும் வராவிட்டாலும் கொடுக்கப்படும்.

திருமணமான பெண்கள் தந்தையின் குல தெய்வத்தை வணங்குவார்களா? கணவன் வீட்டு குலதெய்வத்தை வணங்குவார்களா? தலக்கட்டுவரி எந்தக் குடும்பம் சார்பாக வாங்கப்படுகிறது?

கணவன் வீட்டு குல தெய்வத்தையும் வணங்குவார்கள். தாய் தந்தையின் குல தெய்வத்தையும் வணங்குவார்கள். தாய், தந்தை வீட்டுக் குலதெய்வத்திற்குப் பாதிவரி கொடுப்பார்கள். வணங்குவதற்கும் வரி கொடுப்பதற்கும் பெண்களுக்கு உரிமை உண்டு.

குல தெய்வத்திற்கு மற்ற பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வாங்கப்படுமா?

பங்காளியிடம் மட்டும்தான் வரி வாங்கப்படும். மற்ற சமூகத்தினரிடம் வாங்கப்படுவது நன்கொடையாக மட்டுமே கணக்கு வைக்கப்படும். குலதெய்வத்திற்குச் சம்பந்தப்பட்ட பங்காளிகளிடம் மட்டுமே வரி வாங்கப்படும்.

தேவேந்திர வேளாளர்கள் அனைவரும் ஒன்று சேர்வது மார்நாட்டில் தானா? வேறு எங்கும் சேருவீர்களா?

மார்நாட்டில் கோவில் விழா மாசி மாதம் வளர்பிறையில் பவுர்ணமியில்தான் கும்பிடுவோம். அன்று அனைவரும் ஒன்று சேர்வோம். அவரவர் தங்கள் வேண்டுதல்களை செய்வார்கள். நடத்துவது மார்நாட்டுக்காரர்கள்தான்.

கோவில் யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது?

அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பூஜை செய்வது எங்கள் பங்காளிகள்தான்.

மார்நாட்டு கருப்பணசாமியை வணங்கும் மக்கள் தொகை எவ்வளவு?

மார்நாட்டில் 300 பேர்தான் இருப்பார்கள். ஆனால் வழிபடும் மக்கள் தென்தமிழகம் முழுக்க 4, 5 இலட்சம் பேர் இருப்பார்கள்.

தேவேந்திர குல வேளாளர் மக்களுக்கு மட்டுமான குல தெய்வமா?

ஆம். தேவேந்திர குல வேளாளர் சமூக மக்களுக்கான குலதெய்வம்தான். ஆனால் மற்ற மக்கள் வேண்டுத்ல் செய்தல், நேர்த்திக்கடன் செய்தல் போன்றவை செய்யலாம். சொத்து மார்நாட்டில் இருக்கு. அங்கு இருப்பவர்கள் நிர்வாகம் செய்கிறார்கள்.

மதுரை வீரன்

எங்கள் இனத்து ஆட்கள் நான்கைந்து தலைமுறைக்கு முன்பு புறம்போக்கு நிலத்தை ஆக்கிரமித்தல் மற்ற வழக்குகள் ஆகியவைக்கு மதுரை கோர்ட்டுக்குத்தான் செல்ல வேண்டும். வெள்ளைக்கார துரை தான் நீதிபதி. மதுரைக்கு நடந்தே செல்வார்கள். தாமரைப்பாடி வழியாக பாலமேடு சென்று விடிவதற்கள் மதுரை சென்று விடுவார்கள், அப்படி செல்லும் போது வனாந்தரத்தில் நட்டநடு இரவில் செல்கிறார்கள். நிலா வெளிச்சம், தலையில் உருமாள் கட்டி ஒருவர் பின்தொடர்ந்து வருவதைப் பார்த்து யார் என கேட்கிறார்கள்.

அதற்கு அந்த உருவம் டேய், நான் உங்களோடு இருப்பேன், நீ போகும் காரியம் ஜெயிக்குமடா. தைரியமாக போங்கடா எனக் கூறி நான் தான் மதுரை வீரன். என்னை உங்கள் வீட்டில் வைத்து பூஜை செய்யங்கள். உன் குடும்பம் நல்ல செழிப்பாக இருக்கும் என கூறியதாக முன்னோர்கள் சொல்வார்கள்.

அதன் பிறகு எங்கள் குல தெய்வங்களோடு மதுரை வீரனையும் வைத்து வணங்க ஆரம்பித்து விட்டார்கள். மதுரைவீரனுக்கு ஆடு, கோழி, பன்றி ஆகியவற்றை வளர்த்துப் பலி கொடுப்பார்கள். எங்கள் பாட்டியோட பாட்டி காலத்தில் வீட்டில் வளர்க்கும் பன்றியை அழைத்தால் தானாக பின் செல்லுமாம். தீருநீர்  போட்டவுடன் தானாக காலை நீட்டி படுத்துக் கொள்ளுமாம் பூசாரி வெட்டி பலி கொடுப்பாராம்.

முதல் நாள் கருப்பணசாமிக்கும், மறுநாள் மதுரைவீரனுக்கும் பூஜை நடக்கும். இரவு 12 மணிக்கு மதுரை வீரனுக்கு பூஜை செய்வார்கள்.

மதுரையில் எங்கள் இன மக்கள் வழிபாட்டில் பன்றிக் கறியை வெட்டி பூஜை கொடுத்து மேலே தூக்கி எறிந்தால் கீழே வராதாம். இன்றும் நடக்கிறது.

மார்நாட்டிற்கு மாசி மாதம் பூஜை செய்ய செல்லும் போது என்ன என்ன கொண்டு செல்வீர்கள்? சாலையூர் பூசாரி உங்களுடன் வருவாரா?

பூசாரி வர மாட்டார், அங்கே இருக்கும் பூசாரி பார்த்துக் கொள்வார். இங்கே கோவில் கும்பிடு வைத்துவிட்டால் இங்கே உள்ள பூசாரி போய் மார்நாட்டிலிருந்து தீர்த்தம் எடுத்து வருவார்கள். பூஜைக்கு 16 வகையான பூஜை பொருட்கள் எடுத்துச் செல்வோம். மேலும் ஆடு, கோழி போன்றவைகளையும் கொண்டு செல்வோம்.

பெட்டி முன்னோர் காலத்திலிருந்து இருக்கிறது. அதில் பெண் தெய்வத்திற்கான நகை ஆடைகள் இருக்கும், இப்பொழுது நகையெல்லாம் கிடையாது. அருவாள், சந்தனத்தடி எழுமிச்சைபழம் ஆகியவை மட்டும் இருக்கும். 

Pin It