குலங்கள் மற்றும் அதன் அமைப்பு முறைகள்

கொங்கு வேளாளக் கவுண்டர்கள் தங்கள் குலங்களை, பேச்சு வழக்கில் கூட்டங்கள் எனக் குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 125 க்கும் மேற்பட்ட கூட்டங்கள் நடைமுறையில் உள்ளன. ஒவ்வொரு குலங்களுக்கும் தனித்தனியாக குலதெய்வங்கள் உள்ளன. ஒரே குலங்களைச் சார்ந்தவர்கள் தங்களுக்குள் பங்காளிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். நகரமயமாகாத கிராமங்களில் குறிப்பிட்ட பகுதிகளில் குறைந்தது 25 முதல் 50 குடும்பங்கள் வரை வாழ்கிறார்கள். ஆனாலும் மாவட்டங்கள் மாறி வெவ்வேறு பகுதிகளில் வாழ்ந்தாலும் இவர்களுக்குள் மணஉறவு வைத்துக் கொள்வதில்லை. திருமணப் பதிவு நிலையங்களில் மிக முக்கியமாகக் கூட்டம் (குலம்) எதுவெனக் குறிப்பிட வேண்டும்.

ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாழும் குலத்தினர், அவர்கள் வீடுகளில் நடைபெறும் துக்க நிகழ்வில் நிச்சயமாகப் பங்கேற்க வேண்டும். சடங்குகளை அவர்களே முன் நின்று நடத்துவார்கள். துக்கச் சடங்குகள் நடத்துபவர்கள் குறைந்தபட்சம் 16 நாட்களுக்கு திருமணம், கோவில் நிகழ்வுகள் ஆகியவற்றில் பங்கேற்க மாட்டார்கள்.

முழுக் காதன் குல வரலாறு

காங்கேயம் அருகே உள்ள காடையூரில் உள்ள காடேஸ்வரர் கோவிலில் உள்ளது. அக்கோவிலின் பிரகாரத்தில் முழுக்காதன் குல வரலாறு பதிவு செய்யப்பட்டுள்ளது. அக்கதையைப் பாருங்கள்.

தமிழ்நாட்டில் கொங்குநாட்டுப் பகுதியில் உள்ள காங்கயம் என்ற ஊருக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்தில் ஒரு பெரும் விவசாயிக்கு நான்கு மகன்களும் ஒரு பெண்ணும் பிறந்தார்கள். பெண் குழந்தை பிறவியிலேயே வெளுத்திருந்தாள். அவளை வெள்ளையம்மாள் என்று பெயரிட்டு அழைத்தார்கள். பெண் வளர்ந்து கல்யாணம் செய்யும் வயதை நெருங்கினாள். விவசாயியும் அவர் மனைவியும் பெண்ணின் திருமணத்தை நினைத்துக் கவலைப்பட்டார்கள்.

அவர் பண்ணையிலே மாடு மேய்க்க, தூர தேசத்திலிருந்து ஒரு வாலிபன் வந்து வேலைக்குச் சேந்தான். அவனும் அவர்கள் சாதியைச் சேந்தவன் தான். ஆனால் ஏழை. வெள்ளையம்மாளின் அய்யன் (தந்தை) அந்த மாடு மேய்ப்பவனுக்கே தம் பெண்ணைத் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார். நினைத்த உடனேயே அவர் பையனுடைய ஊருக்குச் சென்று அவன் பெற்றோரிடம் பேசி சம்மதிக்க வைத்தார். திருமணமும் நடந்தது. வெள்ளையம்மாள் மூன்று குழந்தைகளுக்குத் தாயானாள். பின்னர் வெள்ளயம்மாளின் அண்ணன்மார்களுக்கும் திருமணம் நடந்தது. அனைவரும் ஒன்றாக கூட்டுக் குடும்பமாக வாழ்ந்தனர்.

வெள்ளையம்மாளின் தந்தையின் இறுதிக் காலம் நெருங்கியது. அப்போது அவர் தம் பிள்ளைகளைக் அழைத்து வெள்ளையம்மாளுக்கு ஒரு காணி நிலம் கொடுக்கச் சொல்லி விட்டு இறந்தார். ஆனால் வெள்ளையம்மாளின் அண்ணன்கள் அவளது கணவனை வஞ்சகமாகக் கொன்றுவிட்டு அவளை வீட்டை விட்டுத் துரத்தி விட்டனர்.

கர்ப்பிணியாக இருந்த வெள்ளையம்மாள் தன் மூன்று குழந்தைகளையும் கூட்டிக்கொண்டு எங்கு போவது என்று தெரியாமல் மனம்போன போக்கில் சென்றாள். அப்போது ஒரு சர்தார் (அந்நாளைய முஸ்லிம் அரசாங்க உயர் அதிகாரி) குதிரையில் அமர்ந்து வருவதைக் கண்டு அஞ்சி புதரில் ஒதுங்கினாள்.

சர்தார் அவளைப் பார்த்தவுடன் நின்று விசாரித்து அவள் அனாதை நிலையைக் கண்டு இரக்கம் கொண்டார். “நான் வரி வசூலுக்காக அவசரமாகச் சென்று கொண்டிருக்கிறேன். திரும்பி வந்ததும் உன்னுடைய கஷ்டத்தைத் தீர்த்து வைக்கிறேன். அதுவரை பக்கத்தில இருக்கும் கோட்டையில் பத்திரமாக இரு” என்று ஆறுதல் சொல்லி, அவளைக் கோட்டையில் தங்க ஏற்பாடு செய்து வரி வசூலிக்கச் சென்றார்.

பல மாதங்கள் கழிந்தன. வெள்ளையம்மாளுக்குக் குழந்தை பிறந்தது. திரும்பிய சர்தார் வெள்ளையம்மாளை அவளது ஊருக்கு அழைத்துச் சென்றார். வெள்ளையம்மாளின் அண்ணிகள் அவளை அவதூறாகப் பேசினர். அவள் ஒரு விபச்சாரி என்று ஏசினர். வெள்ளையம்மாள் சாதி கெட்டு விட்டதால் அவளுக்கு நிலம் தர அவளது அண்ணன்மார்கள் மறுத்தனர்.

இதைக்கேட்ட வெள்ளையம்மாள் தான் கடவுள் சாட்சியா எந்தத் தவறும் செய்ய வில்லை. இதை எங்கே வேண்டுமென்றாலும் சத்தியம் செய்வேன் என்று சொன்னாள். அவளது அண்ணன்கள் வெள்ளையம்மாள் மூன்று சத்தியங்கள் செய்தால் நாங்கள் எங்கள் நிலம் எல்லாவற்றையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்துவிடுகிறோம். அப்படிச் செய்யாவிட்டால் இவள் தீக்குளிக்க வேண்டும் என்று கூறினர். அந்த சத்தியங்கள் என்னவென்றால்,

காளமாட்டை ஏரிலோ அல்லது வண்டியிலோ பூட்டுவதற்கு வெடத்தலா மரத்தில் நுகத்தடி செய்து வைத்திருப்பர். இது நன்றாக முற்றிய மரமாகவும், காய்ந்த மரமாகவும் இருக்கும். அந்த நுகத்தடியை மண்ணில் நட்டுத் தண்ணீர் ஊற்றினால் அது துளிர் விடவேண்டும்.

அந்த ஊர்க்கோவிலில் நிறுத்தியிருக்கும் மண் குதிரைக்குத் தண்ணீர் தெளித்தால் அது தலையைக் குலுக்கி கணைக்க வேண்டும்.

இதற்குத் தேவையான தண்ணீரைச் சுடாத பச்சை மண் குடத்தில் எடுத்து வரவேண்டும். அப்போது அந்த மண்குடம் கரையாமல் இருக்க வேண்டும்.

இதைக்கேட்ட சர்தார், வெள்ளையம்மாளிடம் இவர்கள் உன்னைக் கொல்லப் பார்க்கிறார்கள். நீ இதற்கு ஒப்புக்கொள்ளாதே என்று கூறினார். ஆனால் வெள்ளையம்மாளோ, நான் பதிவிரதை, நான் இந்தச் சத்தியங்களைச் செய்வேன் என்று கூறினாள். அவ்வாறே செய்தும் காட்டினாள்.

வெள்ளையம்மாளின் அண்ணன்மார்கள் நால்வரும் சர்தாரிடம் வந்து எங்கள் சொத்து அனைத்தையும் வெள்ளையம்மாளுக்கே கொடுத்து விடுகிறோம் என்று சொல்லி ஊரை விட்டுச் சென்றனர். சர்தாரும் வெள்ளையம்மாளுக்கு வாழ்த்து சொல்லிட்டு தன் ஊருக்குப் போனார். வெள்ளையம்மாளின் கணவரின் குலமே முழுக்காதன் குலம் அவரின் அப்பா சேடர் குலம்

இப்போதும் அக்கோவிலில் உள்ள வெடத்தலா மரம், வெள்ளையம்மாள் நட்ட மரம் தான் என நம்பப்படுகிறது. சர்தார் வெள்ளையம்மாவை காப்பாற்றியதால் முழுக்காதன் குலத்தார் இசுலாமியர்களை மாமா என அழைப்பார்கள். இப்போது அப்பழக்கம் வழக்கொழிந்து விட்டது...

பெரும்பாலான கவுண்டர் சமூகத்தினரின் குலதெய்வங்களில் முதன்மை கோவில்கள் பெரும்பாலும் ஈசுவரன் கோவில்களாகவும் கிளைக்கோவில்கள் அம்மன் கோவில்களாகவும் உள்ளன.  இவற்றில் கும்பாபிஷேகம் என்றால் அவை பார்ப்பனர்களை வைத்தே நடத்தப்படுகின்றன.

மாங்கல்ய வரி

இதில் முக்கியமாக ஆணின் குலம் இறுதிவரை மாறாது. ஆனால் பெண் திருமணத்திற்குப் பிறகு கணவனின் குலமாகவே கருதப்படுவார். குலதெய்வவரி வசூலிப்பதுகூட வீட்டில் உள்ள திருமணமான பெண்களின் எண்ணிக்கை அடிப்படையிலேயே உள்ளது. இதை மாங்கல்ய வரி என்பார்கள் ஒரு வீட்டில் மாமியார், மருமகள் இருவரும் கணவனை இழக்காமல் இருந்தால் இரண்டு வரி ஒரு பெண்னின் கணவர் இறந்திருந்தால் வரி இல்லை.

குலதெய்வக் கோவில்

பொதுவாகவே கொங்கு வேளாளக் கவுண்டர் சமுகத்தைச் சார்ந்தவர்களின் குலதெய்வக் கோவில்கள்  பெருந்துறை, காங்கேயம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலேயே அதிகம் காணப்படுகிறது. ஆனால் கோவை மாநகரம் மற்றும் அதைச் சுற்றி வாழ்பவர்கள் தாங்கள் அதிகம் வாழும் பகுதிகளில் கிளைக்கோவில்களை உருவாக்கி அதையே தங்கள் குல தெய்வக் கோவில்களாக ஏற்றுக் கொண்டுள்ளனர். ஒவ்வொரு குலத்தினரும் தங்கள் குல தெய்வக் கோவில்கள் 2 அல்லது அதற்கு மேற்பட்ட இடங்களில் வைத்து இருக்கிறார்கள். சில இடங்களில் கடவுள்களே கூட மாறி மாறி இருக்கிறது.

கடந்த பத்து ஆண்டுகளில் கோவை மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏற்பட்ட நில மதிப்பு உயர்வு காரணமாக உயர்ந்த பொருளாதாரச் சூழலால் பல்வேறு கோவில்கள் புதுப்பிக்கப் பட்டன. கிளைக்கோவில்கள் புதுப்பித்தலில் அந்தந்தப் பகுதிகளில் வாழும் அச்சமுதாயத்தைச் சேர்ந்த அரசியல்கட்சிப் பொறுப்பாளர்கள், ஊராட்சி மன்றத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.

மாற்றியமைக்கப்பட்ட கோவில்களில் முழுமையாக வாஸ்து பார்க்கப்பட்டது. குடமுழுக்கு சில இடங்களில் தமிழ் முறைப்படியும், சில இடங்களில் பார்ப்பனர்களாலும் நடத்தப்பட்டது. மிக முக்கியமாக புதுப்பிக்கப்பட்ட குலதெய்வக் கோவில்களில் முழுமுதற் கடவுள் என்ற பெயரில் விநாயகர் சிலை வைக்கப்பட்டுள்ளது. குலதெய்வக் கோவில் கட்ட குறிப்பிட்ட குலத்தாரிடம் மட்டும் வசூலிப்பது என்பது போய், குறிப்பிட்ட கோவில்கள் அமைந்துள்ள ஊரில் நிறுவனம் நடத்தும் வெளியூர் ஆட்களிடமும் வசூல் செய்யப்படுகிறது.

சடங்குகள்

கொங்கு வேளாளர் குடும்பங்களின் திருமணங்களில் முதல் நாள் முகூர்த்தக்கால் நடுவது என்ற சடங்கு அதே சமூகத்தைச் சேர்ந்த அருமைக்காரர் (சீர்க்காரர் எனவும் சொல்கிறார்கள்) என்பவர்களால் நடத்தப்படுகிறது இதில் சலவை தொழிலாளர் விளக்குப் பிடிக்கவும், அருந்ததியர் செருப்பு மாட்டவும் பயன்படுத்தப்படுகிறார்கள். முகூர்த்தம் எனும் தாலி கட்டும் நிகழ்வில் பார்ப்பனர்கள் வருகிறார்கள். இறப்பு நிகழ்வுகளில் பெரும்பாலான சடங்குகள் பங்காளிகள் எனப்படும் ஒரே குலத்தினரால் செய்யப்படுகிறது.

Pin It