dhanush horseதனது புனைவுகளின் கதை மாந்தர்களை சமூகத்தின் விவாதத்திற்கு உட்படுத்தி இருக்கிறார் இயக்குனர் மாரி செல்வராஜ். கர்ணன் பாராட்டுக்களை குவித்துக் கொண்டிருக்கிறான்.

ஜாதிய ஒடுக்குமுறைகளையும் அவலங்களையும் பேசும் திரைப்படங்களை தமிழ்ச் சமூகத்தின் ஊடகங்களும், சமூகமும் அரவணைக்கத் தொடங்கி இருப்பது ஆறுதலையும், மகிழ்ச்சியையும் தருகிறது, என்பதை முதலில் பதிவிட வேண்டும்.

ஒரு தமிழ் நாளேட்டின் விமர்சனத்தைக் குறிப்பிட விரும்புகிறேன், “படம் நெடுக சுயமரியாதைக்கான வேட்கை கரைபுரண்டு ஓடுகிறது. எல்லாத் தளத்திலும் அவர்கள் தங்களுக்கான உரிமையை மட்டுமே கோருகிறார்கள் சலுகைகளை அல்ல” இது மிகச் சரியான மதிப்பீடு.

பொடியன் குளத்தில் நிற்க மறுக்கும் அந்தப் பேருந்தில் ஒட்டுமொத்தமாக உரிய கட்டணம் செலுத்தி 11 டிக்கெட்டுகளை எடுப்பதற்கு அவர்கள் தயார். ஆனால், பேருந்து தங்கள் ஊரில் நிற்க வேண்டும், அதுதான் அவர்களின் கோரிக்கை.

சமூகத்தாலும், நிர்வாகத்தாலும் ஒதுக்கப்பட்ட பொடியன் குளம் அவமானங்களைக் காலம்காலமாக சுமந்து பழகிவிட்டது. சண்டை சச்சரவுகள் எதுவும் வேண்டாம் கலகம் வேண்டாம் அடங்கிப் போய் பிழைப்பை ஓட்டுவோம் என்ற மன நிலைக்கு வந்து விட்டார்கள் அந்த ஊர் மக்கள். கர்ணன் மட்டுமே குமுறுகிறான். இன்னும் எத்தனை காலத்துக்கு என்று கேட்கிறான்.

அந்த மக்களை தயார் படுத்தவே அவன் போராட வேண்டியிருந்தது. மூத்த தலைமுறையின் இருவர் ஆதரவுக் கரங்கள் மட்டுமே கர்ணனுக்காக நீண்டது. அதில் ஒருவர் இராணுவத்தில் சேவை செய்தவராக இறுதிக் காட்சியில் அவரது புகைப்படம் வழியாக சித்தரிக்கப்படுகிறார். இவர் இம்மானுவேல் சேகரனின் குறியீடா? இருக்கலாம்.

கர்ணனின் போராட்டத்திற்கு முந்திக் கொண்டு களத்தில் வந்து நிற்கிறது அவனது அடுத்த தலைமுறை. இளைஞர்கள் அந்தப் பேருந்தை பொடியன்குளத்தில் நிற்க வைப்பதற்கு பல்வேறு உக்திகளை பின்பற்றி பார்க்கின்றன்றார்கள். அவற்றில் ஒன்று மட்டும் வலிமையானது.

திடீரென்று ஒரு விடலைப் பருவ இளைஞன் பேருந்து கண்ணாடியின் மீது வீசும் அந்தக் கல். ஊருக்குள் குதிரை வளர்க்க ஆசைப்படுகிறான் மற்றொரு இளைஞன். காவல்துறை கிராமத்தை சூறையாடி கொலைவெறித் தாக்குதல் நடத்தும் செய்தியை ஊரை விட்டு வெளியேறி இராணுவத்தில் சேர பேருந்தைப் பிடிக்க வெகு தூரம் நடந்து கொண்டிருக்கும் கர்ணனிடம் கொண்டு போய் சேர்க்க, தான் வளர்த்த குதிரையின் மீது ஏறி அந்த இளைஞன் பறந்து செல்கிறான்.

மக்களை காப்பாற்ற கர்ணன் திரும்ப வேண்டும் என்ற ஆவேசம் அவனை உந்துகிறது. காவல் நிலையத்தில் சமரசம் பேசுவதற்காக அழைத்து வரப்பட்ட கிராம மக்களை மூர்க்கத்தனமாக அடித்து துவம்சம் செய்து பழிவாங்கும் காவல்துறை அதிகாரி பற்றிய தகவலை கர்ணனுக்கு தெரிவிப்பது, காவல் நிலைய வாயிலில் அருகே உள்ள டீக்கடையில் எச்சல் கிளாஸ்களை கழுவும் அந்த இளைஞன் தான். ஆக இளைய தலைமுறை கர்ணன் காட்டிய பாதையில் முன்னேறிச் செல்லும் என்பதை இந்தக் காட்சிகள் உணர்த்து வதாகவே இருக்கிறது.

எளிய மாந்தர்கள் எப்போதுமே உணர்வுகளை மறைக்கத் தெரியாதவர்கள். வாய்மொழிகளும் உடல் மொழிகளுமே அதற்குச் சான்று. காதல், அன்பு, கேலி, ஆத்திரம், கோபம் என்ற உணர்வுகளின் வெளிப்பாடு களால் கை நீட்டுவதும், ஓங்குவதும் அவர்களிடம் இருந்து கொண்டே இருக்கும்.

அப்படியே அந்தக் கதை மாந்தர்களை கண்முன் கொண்டுவந்து நிறுத்துகிறார் இயக்குனர். நான் உனக்கும் மேலானவன் நீ எனக்கும் கீழானவன் என்ற படிநிலை ஜாதியத்தின் அடித்தளமாக நிற்கிறது. அதே உணர்வு நிர்வாக கட்டமைப்புக்குள்ளும் எதிரொலிக்கிறது.

அந்தக் காவல்துறை அதிகாரியின் ஆத்திரத்திற்கும், கோபத்திற்கும் காரணம் இந்தக் கீழ் ஜாதிக்காரர்கள் தனக்கு உரிய மரியாதை தரவில்லை என்பது மட்டுமல்ல எஜமானர்களாக அங்கீகரித்து மரியாதை தரவில்லையே என்பதும் தான்.

புறக்கணிக்கப்பட்ட எளிய மாந்தர்களுக்கே உரிய அடையாளமான மொட்டை, மயிராண்டி, பாவாடை என்ற பெயர்களை எப்படித் துறக்கலாம் ? கர்ணன், துரியோதனன் என்றப் புனித இதிகாசங்களின் பெயர்களை எப்படிச் சூட்டிக் கொள்ளலாம்? இந்து மதத்தின் இதிகாசக் குறியீடுகளை தங்கள் அடையாளமாக்கிக் கொள்வதைக் கூட இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை.

புனிதம் தீட்டாக்கப்படுகிற உளவியலே இவர்களை இயக்குகிறது. அந்த அதிகாரியின் உயிர் கர்ணன் பிடிக்குள் வரும் போது “கந்தையா மகனாகிய நீ கண்ணபிரான் ஆகும் போது மாடசாமியின் மகன் கர்ணன் ஆகக் கூடாதாடா ?” என்று கர்ணன் எழுப்பும் கேள்வி அத்தனை வலிமையானது.

காட்சிகள் தோறும் விலங்கினங்கள் வந்து கொண் டே இருக்கின்றன. யானை, நாய், பூனை, கழுதை, குதிரை, பன்றி, கோழி ஆகியவற்றின் அசைவுகள் காட்சிகளுக்கு உயிரூட்டிக் கொண்டிருக்கின்றன.

ஜாதி,மத அடையாளங்கள் திணிக்கப்படாத இனங்கள் இவை. இந்த உயிரினங்களின் பட்டியலில் ஆடு,மாடுகளைப் பார்க்கவே முடியவில்லை. சில கிராம சேரிகளில் இவை வளர்ப்பதற்குக் கூட தடை போட்டிருப்பதால் இயக்குனர் தவிர்த்திருப்பாரோ ?

அந்தக் கழுதையின் முன் கால்கள் இரண்டும் கட்டப்பட்டிருந்தன, இரண்டு பின் கால்களைக் கொண்டு நீண்ட காலமாக தத்தித் தத்தித் துயரங்களைச் சுமந்து அந்தக் கழுதை நகர்ந்து கொண்டே இருந்தது. முன் கால் கட்டுகளைக் கண்டு கர்ணன் கவலைப்படுகிறான்.

ஆனாலும் கூட இனியும் பொறுக்க முடியாது போருக்குத் தயாராக வேண்டியதுதான் என்ற சூழலுக்குத் தள்ளப்பட்ட நிலையில் தான் அந்தக் கழுதையின் கால் கட்டுகளை கர்ணன் அகற்றுவதற்கு முன் வருகிறான். ஒரு கத்தரிக்கோல் அல்லது ஒரு கத்தியால் அந்தக் கயிற்றை ஒரே நொடியில் வெட்டி எறிந்திருக்க முடியும்.

ஆனால் அருகே கிடந்த கல்லை எடுத்துக் கர்ணன் அந்தக் கயிற்றை நசுக்கி நசுக்கி கயிற்றை நையச் செய்து வெட்டுகிறான். இந்த அடிமைக் கயிற்றை போராடிப் போராடித்தான் வெட்ட வேண்டும். ஒரே நொடியில் கத்தரிக்கோல் அல்லது கத்தியால் வெட்டி எறிந்து விட முடியாது என்பதை உணர்த்துவதாகவே இந்தக் காட்சி தோன்றுகிறது.

விடுதலைப் பெற்ற கழுதைப் பாய்ந்துப் பாய்ந்து அதிவேகத்தில் சுதந்திர உணர்ச்சிகளைச் சுமந்து கொண்டு ஓடுகிறது, ஒரு கட்டத்தில் தாயின் அருகே போய் நிற்கிறது, கிராம மக்களின் சுயமரியாதைப் போராட்டங்கள் பாய்ந்து ஓடும் கழுதையுடன் காட்சிப்படுத்தப்படுகிறது. சில காட்சிகளில் வானத்தில் பறவைகளின் சிறகுகள் விரிந்து பறந்து கொண்டிருக்கின்றன.

ஊரில் நிற்க மறுக்கும் அந்தப் பேருந்து ஜாதியத்தின் குறியீடு. கல்வீச்சுக்குப் பிறகுதான் அது நிற்கிறது. கர்ணன் கண்ணாடிகளை, இருக்கைகளை பேருந்தின் ஒவ்வொரு பாகங்களையும் ஆவேசமாக தடி கொண்டு தாக்குகிறான். ஒவ்வொரு அடியும் ஜாதியின் மீதும் அது கட்டமைத்த ஒடுக்குமுறையின் மீதும் விழுகின்ற சம்மட்டி அடியாகவே பார்வையாளர்களிடம் கடத்துகிறார் இயக்குனர்.

கர்ணன் வன்முறைகளை நியாயப்படுத்துகிறானா? அல்லது தூண்டிவிடுகிறானா ? இல்லை. வன்முறை என்ற வரையறைக்குள் இதைப் பொருத்தி விட முடியாது. இது ஜாதியத்திற்கு எதிரான ஒரு போர் என்ற செய்தியையே உணர்த்தி நிற்கிறது. எளிய மக்கள் தங்களுக்கான சுயமரியாதையைத் தான் கேட்கிறார்கள், தங்கள் கிராமத்தில் தாங்களே 'பேருந்து நிறுத்தம்' என்ற பெயர்ப் பலகையை நிறுவுகிறார்கள். அதை ஜாதி வெறி தான் அடித்து நொறுக்குகிறது.

மகளைக் கல்லூரியில் சேர்க்க, அந்த ஜாதி பெரிய மனிதர்கள் வாழும் பேருந்து நிறுத்தத்திற்கு அழைத்துச் செல்கிறார் தந்தை. அங்கே அந்தப் பெண்ணை ஜாதி வெறியுடன் கேலி கிண்டலுக்கு உள்ளாக்கி வீண் சண்டையை ஜாதி வெறியர்கள் தான் உருவாக்குகிறார்கள். உனக்கு என்னடா மரியாதை நீயெல்லாம் ஒரு மனுஷனா என்ற ஆதிக்கத்திற்கு எதிரான எதிர்வினையை வன்முறை என்ற வரையறைக்குள் பொறுத்திவிட முடியாது.

அப்படிப் பார்ப்பது மாபெரும் அநீதி. கர்ணன் ஏன் ஆயுதம் ஏந்தும் நிலைக்குத் தள்ளப்படுகிறான் என்பதற்கான நியாயங்களையே படம் பேசுகிறது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு அதே கிராமத்தில் நிகழ்ந்த மாற்றங்களையும் ஊருக்கு வெளியே பேருந்து நிற்காத காலம் மாறி வீதி வீதியாக 'மினி பேருந்துகள்' ஓடிக் கொண்டிருப்பதையும் நியாயமாக நேர்மையுடன் படத்தின் இறுதியில் பதிவு செய்திருக்கிறார் இயக்குநர்.

இறுதியாக ஒன்று ஜாதியத்திற்கு எதிரான இந்த திரைப்படம் நாட்டார் தெய்வ வழிபாட்டை புதிய வெளிச்சத்தில் போற்றுகிற திரைப்படமாக சிலர் கருத்துக்களை முன்வைக்க துவங்கி இருக்கிறார்கள். நாட்டார் தெய்வ வழிபாட்டை தீவிரமாக வலியுறுத்துகிறவர்கள் இந்த படத்தை அந்தக் கண்ணோட்டத்தில் கொண்டாடிக் கொண்டு இருக்கிறார்கள். இந்தப் படமும் நாட்டார் வழிபாட்டை முன்நிறுத்தி இருக்கிறது என்பது உண்மைதான்.

நாட்டார் தெய்வங்கள் கலக வரலாறுகளில் தோன்றியிருக்கலாம் ஆனாலும் காலம் காலமாக அந்த தெய்வங்கள் மீது புனைவுகள் ஏற்றப் பட்டு இருக்கின்றன, அதீத கற்பனைகளும், மூடநம்பிக்கைகளும் திணிக்கப்பட்டு இருக்கின்றன. அதன் வழியாக அச்சுறுத்தல்களின் பிம்பங்களாக அந்தத் தெய்வங்கள் மக்கள் மனதில் நிலைநிறுத்தப் பட்டு இருக்கின்றன.

இந்த வழிபாடுகளில் ஜாதிய படி நிலைகளும், பாகுபாடுகளும் நிறைந்து கிடக்கின்றன. ஆனால் இந்த புனைவுகளில் நம்பிக்கையில்லாத நவீனத்துவ அறிவியல் இளைஞராகவே கர்ணன் இருக்கிறான். புதையலைத் தோண்டத் தந்தை சாமியாடி கட்டளையிட்ட போது அந்தப் புனைவை நம்ப மறுக்கிறான் கர்ணன்.

ஆனாலும் தந்தையின் கட்டளைப்படி தோண்டுகிற போது அங்கே புதையல் கிடைத்துவிடுகிறது. இங்கே கர்ணனின் அறிவியல் பார்வையை புனைவும், மூடநம்பிக்கையும் வென்று விடுகிறது. அறிவியலைப் புறக்கணித்து புனைவுகளை நியாயப்படுத்துவது என்பது சரியான பார்வைதானா? நாட்டார் தெய்வ மீட்டுருவாக்கம் சமுதாயத்தை முன்னோக்கி நகர்த்துமா? அல்லது பின்னுக்கு இழுத்துச் செல்லுமா? என்ற கேள்விக்கு பின்னோக்கியே இழுத்துச் செல்லும் என்பதே வரலாறு நெடுக நமக்கு உணர்த்தும் பாடங்கள்.

ஜாதி வன்மத்தை பேசும் இந்த திரைப்படத்தை கூட நாட்டார் வழிபாட்டை போற்றும் ஒரு படமாக மாற்ற முயற்சிப்பதில், இந்த நாட்டார் தெய்வ வழிபாட்டு ஆதரவாளர்கள் முயற்சிக்கிறார்கள் என்பதில் இருந்தே இந்த ஆபத்தை நாம் புரிந்து கொண்டாக வேண்டும்.

ஜாதியத்தை எதிர்க்கும் திரைப்படங்கள் அதற்கான கருத்தியல் ஊற்றாக நிற்பது சனாதான தர்மம் என்ற மனு வாதம் என்பதை குறியீடாகக் கூட சித்தரிக்காமல் ஜாதிய கட்டமைப்புகளில் இருந்து சனாதான மதவாதத்தை துண்டித்துவிடுகிற போக்கு சரிதானா என்ற கேள்வியும் எனக்குள் எழுகிறது.

படத்தின் ஒவ்வொரு கதை மாந்தரும் மறக்கமுடியாத அவர்களாக உள்ளத்தில் பதிந்து நிற்கிறார்கள். நடிகர் தனுஷ் நடிப்பில் உச்சம் தொட்டு இருக்கிறார்.

ஒரு இலக்கிய படைப்பாளி திரைப்பட இயக்குனராகும் போது திரைப்படம் இலக்கியமா கிறது. திரைப்படத் தொழில் நுட்பங்கள் பற்றி எனக்கு எதுவும் தெரியாது. ஆனால் காட்சிகளையும் கதை மாந்தர்களையும் பார்வையாளர்களிடம் வலிமையாக கடத்துவதில் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறான் கர்ணன். மாரிக்கு பூமாரி பொழிய வேண்டும்.

இரண்டு வரலாற்று குறிப்புகள்:

1) வீரபாண்டிய கட்டபொம்மனின் தளபதி சுந்தரலிங்கம் பெயர் சூட்டப்பட்டதாலயே 1996-ல் ஊருக்குள் அரசு பேருந்து வரக்கூடாது என்று தென் மாவட்டங்களில் ஜாதி வெறியர்கள் கலகம் செய்தனர். இந்தப் படத்தில் ஓடும் பேருந்துக்கு அதன் குறியீடாகத்தான் கட்டபொம்மன் பெயர் சூட்டப்பட்டு இருக்க கூடும் என்று தெரிகிறது.

2) 1930- களில் ராசபாளையம் சென்ற பேருந்துகளில் தீண்டப்படாதவர்களுக்கு இடமில்லை என்று டிக்கெட்டுகளில் அச்சிட்டு வழங்கப்பட்டது. மதுரை இராமநாதபுரம் மாவட்ட தலைவராக இருந்த சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர், நீதிக்கட்சித் தலைவர் WPA சௌந்தர பாண்டியன் அத்தகைய பேருந்துகளுக்கு உரிமை யும் வழங்கப்பட மாட்டாது என்று கூறி உரிமத்தை ரத்து செய்தார் என்பதும் ஒரு வரலாற்றுக் குறிப்பு.

- விடுதலை இராசேந்திரன்

Pin It