உங்களுடைய பெயர், நீங்கள் எந்த ஊர், எந்த குலத்தைச் சேர்ந்தவர்?

என்னுடைய பெயர் செல்வி, கணவர் பெயர் கந்தன், எங்கள் ஊர் வடுகபாளையம். என்னுடைய அப்பா தாசர் குலத்தைச் சேர்ந்தவர், கடவுள் கருடபெருமாள். கணவனின் குலதெய்வம் சென்றாயப்பெருமாள் கணவரின் குலம் நாரமுத்துக் குலம் நான் செக்கிங் சென்டரில் வேலை செய்கிறேன்.

நீங்கள் எத்தனை தலைமுறைகளாக குலதெய்வத்தை வழிபடுகிறீர்கள்?

நாங்கள் 5, 6 தலைமுறைகளாக குலதெய்வத்தை வழிபட்டுக் கொண்டிருக்கிறோம். நாங்கள் சாமிக்கு 16 வகையான பூஜைகள் செய்வோம். 16 வகையான பூ வைத்து வழிபடுவோம். இந்தக் கோவிலுக்கு வானத்தில் இருந்து சங்கு பறந்து வந்து விழுந்திருக்கிறது. நாங்கள் அதை பூக்கூடையில் வைத்து இருக்கிறோம். பூசாரி வீட்டில் இருக்கும். கோவில் விஷேச நாட்களில் மட்டும் சாமியை (சங்கு) வெளியே எடுத்துக் கொண்டு வருவோம்.

எந்தெந்த நாட்களில் குல தெய்வ கோவில்களில் விஷேசம் இருக்கும்?

புரட்டாசி மாதம் சனிக்கிழமையும், கார்த்திகை மாதத்தில் கார்த்திகை தீபநாளிலும் விஷேசமாக இருக்கும். மாசி மாதத்தில் காரமடைக்கு பந்த சேவை எடுப்போம். இந்த மூன்று மாதங்களிலும் மிகவும் சிறப்பாக இருக்கும். மற்ற நாட்களில் அமாவாசை போன்ற தினங்களில் சிறப்பாக பூஜைகள் நடைபெறும். வாரம் வாரம் வெள்ளிக்கிழமை நாட்களில் பூஜைகள் நடக்கும். இந்தக் கோவிலைச் சார்ந்தவர்கள் இடைப்பட்ட நாட்களில் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்துவிட்டு போவார்கள்.

கோவிலுக்கு பூஜை செய்வது யார்? கோவில் செலவுகளையெல்லாம் யார் ஏற்றுக் கொள்வார்கள்?

கோவிலுக்கு பூஜை செய்வது எங்களுடைய குலத்தைச் சேர்ந்தவர்கள்தான். நாங்கள் அனைவரும் சேர்ந்து முடிவு எடுத்து பூசாரியைத் தேர்ந்தெடுப்போம். பூசாரியாக இருப்பவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். எந்த ஒரு வீடுகளிலும் தண்ணீர் கூட வாங்கிக் குடிக்கமாட்டார்கள். பாயில் படுக்க மாட்டார்கள். அவருக்குப் பின் அவருடைய மகன்கள் பூஜை செய்ய வேண்டும். மகன்கள் பூசாரி பட்டத்தை வேண்டாம் என்று சொல்லும்போது பங்காளிகள் யாராவது பூஜை செய்வார்கள்.

கோவில் செலவுகளையெல்லாம் கோவிலைச் சார்ந்தவர்களிடம் வரி வசூல் செய்வோம். கோவிலுக்கு வரி செலுத்தியும், அன்னதானச் செலவுகளையும் ஏற்றுக் கொள்ள முன்வருவார்கள். ஒவ்வொரு செலவுகளையும் தானாகவே முன்வந்து ஏற்றுக் கொள்ள பலர் வருவார்கள். வேறு சமூகத்தைச் சார்ந்தவர்களும் கோவிலுக்கு நன்கொடையாகவோ, செலவுகளை ஏற்றுக் கொள்வார்கள்.

பந்த சேவை எடுக்கும் வரலாறு பற்றிச் சொல்லுங்கள்

கோயம்புத்தூர் மாவட்டம் காரமடை பெருமாள் கோவில் அரங்கநாத சுவாமிக்கு வருடம் ஒருமுறை மாசி மாதத்தில் பெளர்ணமி நாட்களில் பந்த சேவை எடுக்கும் வழக்கம் உள்ளது. இந்தப் பந்த சேவை எடுப்பதன் நோக்கம் என்னவென்றால், இராமயணத்தில் வரும் ஆஞ்சநேயருக்குப் பெருமை சேர்க்கும் விதமாக இராமனும், சீதையும் செய்யும் வழிபாடு.

இராமயணத்தில் இராவணன், சீதையைத் தூக்கிக் கொண்டு போனதற்குப் பிறகு இராமனும், இலட்சுமணனும் மற்றும் அனுமன் படையும் இலங்கை இராவணனிடம் போர் செய்து, சீதையை அழைத்து இராமேஸ்வரம் வருகிறார்கள். அங்கு கடற்கரையில் சிவனை வழிபடுவதற்காக ஒரு சிலை தேவைப்படுகிறது. சூரிய உதயத்திற்குள் அந்தச் சிலையை வைத்து வணங்கவேண்டும் என்பது இராமன் மற்றும் சீதையின் நோக்கமாக இருந்தது.

அதற்காக ஒரு சிலை வேண்டும் என்று அனுமானிடம் கூறினார்கள். அனுமான் சிலையைத் தேட செல்கிறார். சிலையைக் கொண்டு வருகிறார். சூரிய உதயம் ஆகிவிட்டது. இராமனும், சீதையும் மணலிலே ஒரு சிலையை செய்து வணங்கிக் கொண்டிருந்தார்கள். அனுமான் கோவத்துடன்  “சாமி நான் சிலையைக் கொண்டு வந்துள்ளேன். அதற்குள் நீங்களே சிலையை வைத்து வணங்குகிறீர்கள். இது நியாயமா” என இராமனிடன் கேட்கிறார்.

இராமன் அனுமானிடம் “சரி இந்தச் சிலையை அகற்றி விட்டு அந்தச் சிலையை வை” எனக் கூறுகிறார். சிலையை தன் வாலால் அகற்ற முயற்சிக்கிறார் அனுமான். வால் அறுந்து விடுகிறது. இராமனிடம் அனுமான் கோபமுடன் பேசுகிறார் “சுவாமி என் வால் அறுந்து விட்டது. எனது கூட்டத்திற்கே இது மிகவும் ஒரு கவலையான செய்தியாக உள்ளது. என்னை இப்படி கொடுமைப்படுத்துவது சரிதானா எனக் கேட்கிறார். அதற்கு இராமன் “கோபப்படாதே.... இந்த வாலை வைத்து மிக முக்கியத்துவம் வாய்ந்த விழாவாக செய்கிறேன்” என்று சொல்லி இராமனும், சீதையும் இணைந்து ஒரு நிகழ்ச்சியை நடத்துகிறார்கள். இராமன் பந்தசேவை எடுக்கிறார். சீதாதேவி நேர்த்திக் கடனுக்காக வீடு வீடாக, தானியங்களை பிச்சை எடுக்கிறாள். இராமனும், சீதையும் இப்படிச் செய்யும்போது அனுமான் மகிழ்ச்சியுடன் ஆடிக் கொண்டிருக்கிறார்.

இதுதான் பந்த சேவை எடுப்பதன் வரலாறு. இதில் கவாளம் எடுப்பது என்பது ஊருக்குள் அனைவரும் அனுமானுக்குப் பழங்களைத் தருவார்கள். அதை அனுமான் கவாளம் எடுப்பார். திருமணம் ஆகி குழந்தை இல்லாத தம்பதியினர் நேத்திக் கடன் செய்வார்கள். எப்படி என்றால் கவாளம் எடுக்கும் பழங்களை வாயில் எடுத்து, பிள்ளை இல்லாதவர்களுக்கு பிள்ளைவரம் கொடுக்கும் நோக்கத்துடன் தருவார். அது ஒரு நம்பிக்கையாக இன்று வரை வணங்கி வருகிறார்கள்.

காரமடைக்குப் பந்தசேவை எடுப்பது யார் வேண்டுமானாலும் எடுக்கலாமா? இதை எடுப்பதனால் என்ன நன்மை?

பந்தசேவை ஆண்கள் அட்டுமே எடுக்க முடியும்.  அவர்களும் முத்திரை போட்டவர்களாக இருக்க வேண்டும். அவர்கள் மட்டுமே சேவை எடுக்க அனுமதி இருக்கிறது. பெண்கள் எடுப்பதற்கு அனுமதி இல்லை. பந்த சேவை எடுப்பதனால் நல்ல மழை பெய்யும், கெட்ட சக்திகள் எதுவும் ஊருக்குள் இருக்காது என்பது ஐதீகம்.

முத்திரை போடுவது என்றால் என்ன?

இந்தப் பந்தசேவை எடுப்பதற்கு முழுமையான தகுதி என்னவென்றால் கணவன் இராமவதார முத்திரையும், மனைவி சீதையின் முத்திரையும் பதித்துக்கொள்ள வேண்டும். அந்த முத்திரைப் பதிப்பதற்கென்று காரமடை அரங்கநாத சுவாமி கோவிலுக்குச் சென்று ஜீயர் அய்யர்களிடம் காணிக்கை செலுத்தி,

“நாங்கள் இன்று முதல் இராமக் கடவுளுக்கும், சீதைக்கும், அனுமானுக்கும் நேத்திக்கடன் செலுத்தும் விதமாக மிகவும் கட்டுப்பாடான உணவுமுறை, வாழ்வியல் முறை (சடங்கு, தீட்டு இழவுத்தீட்டு நிகழ்வுகளில் கலந்து கொள்ளாமல் தள்ளி வாழ்வது) கட்டுப்பாடுடன் வணங்குகிறோம் என்று உறுதி எடுத்து முத்திரையிடுகிறோம்”

என்று ஐயர்களிடம் கூறி வருடவருடம் நடைமுறைப்படுத்துவார்கள். பந்தசேவை எடுக்கும் குடும்பம் அதை தலைமுறை தலைமுறையாக வழி நடத்தவேண்டும். இல்லையெனில் குடும்பத்தில் நீங்கா கஷ்டங்கள் ஏற்படும் என்று ஐயர்கள் கூறுவார்கள்.

அதேபோல முத்திரையிட்ட பின்னர் தொடர்ச்சியாக மூன்று வருடங்களுக்குப் பந்தசேவை எடுக்கும் பத்து தாசர்களுக்கு நாங்கள் அன்னதான சேவை நடத்தவேண்டும். இது அவரவர் வசதிக் கேற்றார் போல் செலவு செய்வார்கள். இது பெருமாளை வணங்கும் எந்தக் குலத்திற்காரர்கள் வேண்டுமானாலும் முத்திரையிட்டு வழிபடலாம்.

அதுபோல் இந்த முத்திரையிட்டதாசர் இறந்து விட்டால் முத்திரை இறக்குதல் என்ற சடங்கு உள்ளது.அதற்கு 10 தாசர்கள் வரவழைக்கப்பட்டு சடங்குகள் செய்து முத்திரையை இறக்கி மகன் மற்றும் மகன் வழி பேரன்களுக்குப் பந்தசேவை எடுக்கும் வழிபாட்டைத் தருவார்கள். இதற்கு 10 ஆயிரம்  முதல் 20 ஆயிரம் வரை செலவு கூட ஆகும்.

கோவிலுக்கு முத்திரை போடுவது யார்? யார் வேண்டுமானாலும் போடலாமா? இந்த முத்திரை எங்கே போடுவீர்கள்? யார் போடுவார்கள்? என்ன செலவாகும்?

பெருமாளுக்கு முத்திரை போடுவது 30 வயதுக்கு மேற்பட்ட ஆண்களும், பெண்களும் போடலாம். ஆனால் மிகவும் கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். இந்த முத்திரை காரமடையில் போய் போடுவோம். ஐயர் தான் போட்டு விடுவார். காரமடையில் போட்டால் சாமிக்கு பூ, பழம், தேங்காய், துளசிமாலை, ஐயருக்கு கொடுக்கும் பணம் எல்லாம் சேர்த்து 5000 ரூபாய் ஆகும். நம் வீடுகளில் முத்திரை போட்டால் ஐயரை வீட்டுக்கு அழைத்து வரவேண்டும். அன்னதானம் உள்பட 50,000 ரூபாய் வரை கூட செலவாகும்.

உங்களுடைய குல தெய்வ கோவில் கட்டுவதற்கு யாரிடமாவது ஆலோசனை செய்வீர்களா?

முதலில் எங்கள் குலத்தைச் சேர்ந்தவர்கள் எல்லாம் பேசி முடிவு எடுப்போம். அதன்பிறகு பல்லடம் தண்டபாணி கோவிலில் ஐயரிடம் போய்ப் பேசுவோம். அவர் நாள் குறித்துக் கொடுப்பார் அந்த நாளில் கோவில் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவோம். வேறு எந்த ஒரு விஷேசமாக இருந்தாலும் ஐயர் குறித்துக் கொடுத்த நாளில்தான் நடத்துவோம்.

கோவில் கும்பாபிகேஷத்தை உங்கள் குலத்து ஆட்களே சேர்ந்து நடத்துவீர்களா?

இல்லை. முதலில் ஐயர்தான் பூஜை செய்வார். கோவில் கலசத்தில் தண்ணிர் ஊற்றுவதும் அவர்கள்தான். நம்மிடம் கொடுக்க மாட்டார்கள். கும்பாபிஷேகம் முடிந்து 48 நாட்கள் நந்த தீபம் எரியும். அதன் பிறகுதான் எங்கள் குலத்தைச் சார்ந்தவர்களிடம் பொறுப்பைக் கொடுப்பார்கள். 48 நாட்கள் பூஜைக்கும் ஒரு நளைக்கு 500 ரூபாய் பணம் கொடுக்க வேண்டும். மற்றும் தேங்காய், பூ, பழம் போன்றவையும் வாங்கித்தர வேண்டும்.

வேறு சமூகத்தைச் சார்ந்தவர்கள் உங்கள் குலதெய்வ கோவில்களுக்கு வருவார்களா?

வருவார்கள். நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர்கள். வருவார்கள். சாமி கும்பிடுவார்கள். எங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்வார்கள். நாங்களும் அவர்களை மதிப்பும் மரியாதையுடனும் நடத்துவோம்.

நாயக்கர் சமூகத்தைச் சார்ந்தவர்கள் உங்கள் குலதெய்வக் கோவிலுக்கு வருவதுபோல் உங்களை அவர்கள் கோவிலுக்குள் அனுமதிப்பார்களா?

முதலில் அனுமதி இருந்தது. இப்பொழுது இல்லை. வெளியில் நின்றுதான் சாமி கும்பிட வேண்டும். அனுமதி இருந்த காலங்களில் அபிஷேகம் செய்வது, பொங்கல் வைத்து படையல் போட்டு வழிபடுவது என இருந்தது. நாங்கள் கோவிலுக்குள் உள்ளே சென்று வழிபடுவது நாயக்கர் சமூகத்தில் உள்ள ஒரு சிலர் ஏற்றுக் கொள்கிறார்கள். ஒரு சிலர் எதிர்க்கிறார்கள். அதனால் நாங்கள் யாரும் உள்ளே செல்வதில்லை. வெளியே நின்றே தேங்காய் பழம் உடைத்து சாமி கும்பிடுவோம்.

Pin It