உங்கள் குலதெய்வத்தைப் பற்றிச் சொல்லுங்க?

       எங்கள் குலதெய்வத்தின் பெயர் முதலக்குளம் கருப்பசாமி, இந்தக்கோயில் உசிலம்பட்டிக்கு பக்கத்தில், கப்ஸா என்ற ஊருக்கு அருகில் முதலக்குளம் என்ற இடத்தில் உள்ளது, இடத்தின் பெயரே சேர்த்து முதலக்குளம் கருப்பசாமி கோயில் என்று சொல்வோம். பக்கத்திலேயே பதினெட்டாம்படி கருப்பசாமி கோயிலும் இருக்கு, அதனால் பதினெட்டாம்படி கருப்பசாமி கோயில்னு கூட ஒரு சிலர் சொல்வாங்க.

குலதெய்வம் என்பது சாமியா? அல்லது மனுசனா? அதைப் பற்றிய வரலாறு இருந்தா சொல்லுங்க?

       முதலில் இந்தக் கோயிலுக்கு 800 வருடப்பாரம்பரியம் இருக்கு. தஞ்சைப் பகுதியிலிருந்து எங்கள் மூதாதையர்கள் பிழைப்புத்தேடி கொஞ்சம் கொஞ்சமாக பாசனப் பகுதியைத் தேடி நகர்ந்துகொண்டே வராங்க. அப்ப இங்க பாண்டிய மன்னர்களின் ஆட்சி நடந்துகொண்டிருந்தது. வந்த கூட்டத்தில் ஒரு சிலர் அழகர்மலைப் பகுதியில் தங்கி விடுகிறார்கள். எங்க மூதாதையர்களில் ஒருவரான பல்லாக்கு ஒச்சாத்தேவர் பாண்டிய மன்னரிடம் வேலை செய்துள்ளார். மன்னரின் ஆலோசானைப்படி இந்தப் பகுதியில் (உசிலை) எங்கள் மூதாதையர்கள், பல்லாக்கு ஒச்சாத்தேவர் தலைமையில் குடியேறி விவசாயம் செய்து பிழைத்தார்கள் என்பது நானறிந்த வரலாறு.

குலதெய்வ விழா எங்கே, எப்படி, எப்பொழுது, யாரால் நடைபெறும் அதைப் பற்றிச் சொல்லுங்க?

       குலதெய்வ வழிபாடு வருசம் வருசம் மாசிப்பச்சை சிவராத்திரி அப்ப நடக்கும். மொத்தம் மூணு நாள் நடக்கும். வேற தனிபட்டநாள் கிடையாது. விழாவுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே அந்த ஊரில் உள்ள பரம்பரைப்பூசாரி மற்றும் எங்கள் குலதெய்வத்தை வழிபடும் எங்கள் சொந்தங்கள் அந்த ஊரிலேயே அல்லது அதற்கு அருகில் இருப்பவர்கள் ஒரு 40 அல்லது 50 பேர் சேர்ந்து முடிவெடுப்பார்கள்.

அந்தக் கூட்டத்தில் என்ன என்ன நிகழ்ச்சிகள் நடைபெறவேண்டுமென்பதையும் முடிவு செய்வார்கள். உதராணமாக, நாடகம் போடுவது, கரகாட்டம், எத்தனை கிடாய் வெட்டுவது, பந்தல், தோரணம் போடுவது, இதற்கான செலவுக்கு தலக்கட்டுவரி எவ்வளவு வசூலிப்பது, யாரெல்லாம் வசூலிப்பது என்பது பற்றியும் முடிவு செய்வோம். முடிவு செய்தபின் நோட்டீஸ் அடித்து ஒரு பதினைந்து நாட்களுக்கு முன் எங்கள் குலதெய்வம் கும்பிடுகிறவர்களின் வீடுகளில் கொடுத்து தலக்கட்டுவரி 5000 அல்லது 10000 வசூலிப்போம்.

விழாக்கமிட்டியில் பெண்கள் யாராவது இருப்பாங்களா? அவர்கள் ஏதாவது யோசனை சொல்லுவாங்களா?

       விழாக்கமிட்டின்னு, தனிப்பட்டமுறையில் இல்ல. ஆனால் பூசாரிவகையறா வீட்டுப் பெண்கள், அப்புறம் கோயில் முக்கிய வேலையில் இருக்கிறப் பெண்கள் (சாமி பூசைக்கு உதவுபவர்கள், சாமி ஆபரணப்பெட்டி தூக்கிவருகிறவர்கள் பின்னால் சாமியாடும்பெண்கள்) இவங்க ஏதாவது யோசனைச் சொன்னாக் கேட்டுக்குவோம்.

நீங்கள் தலக்கட்டுவரின்னு சொல்லும்போதுதான் ஞாபகம் வந்தது, பெண்கள்கிட்ட தலக்கட்டு வரி வாங்குவீங்களா?

       வாங்குவோம். ஆண் வாரிசு இல்லாத வீட்டில் மட்டும் பெண்கள்கிட்ட வாங்குவோம், என்ன மத்தவங்ககிட்ட 1000 ம் வாங்கினால் இவுங்ககிட்ட 500 வாங்குவோம். 500 வாங்கினால் 200 அவ்வளவு தான். சில நேரம் குடுத்தத மட்டும் வாங்கிக்கவோம். ரொம்ப கட்டாயப்படுத்தமாட்டோம். ஆண்கள் உள்ள வீட்டில் பெண்களுக்கென்று தனிவரி விதிக்க மாட்டோம்.

உங்க சாதியைச் சேர்ந்த, ஆனால் வேற சாமிய கும்பிடுபவர்களிடம் தலக்கட்டு வரி வசூலிப்பிங்களா?

       கண்டிப்பாக மாட்டோம். அவர் எங்க சாதியாக இருந்தாலும் வேற சாமி கும்பிடுகிறவர்களாக இருந்தால் வரி வசூலிக்கமாட்டோம். இது பங்காளிகளின் சாமி, பங்காளிகளாச் சேர்ந்து நடத்துறது. வேற சாமி கும்பிடுகிறவர்கள் எங்கள் மாமன், மச்சானா கூட இருக்கலாம். மாமன், மச்சானக் சாப்பிடக்கூப்பிடுவோம், ஆனால் வரிகேட்கமாட்டோம்.

இது எங்கள் கோயிலில் மட்டுமல்ல, பக்கத்தில் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டாமங்கலம் சுத்துபட்டு எல்லா இடத்திலேயும் ஒரே நாள் மாசிப்பச்சைக்குத்தான் திருவிழா நடக்கும். எல்லாக் கோயிலும் ஒரே மாதிரியான முறையைக் கடைபிடிப்பாங்க. இது ஏன்? எங்க குலசாமி இருக்கிற இடத்துக்கு வந்துபோக முடியாத எங்க பங்காளிக, எங்கள் கோயிலுக்கு வந்து, கோயில் மண்ண ஒரு கைப்பிடி எடுத்து, அவுங்க இருக்கிற இடத்துக்குப் பக்கத்தில் மண்ணப் போட்டு கோயில் எழுப்பி சாமி கும்பிடுவாங்க. அவுங்ககிட்ட கூட நாங்கள் தலக்கட்டுவரி வாங்க மாட்டோம். எங்க மண்ணுக்கு வந்து எங்க கோயில் சாமிய கும்பிடுகிற பங்காளிககிட்ட மட்டும் தான் நாங்க வரி வாங்குவோம்.

உங்க குலசாமி கோயிலுக்கு எப்பல்லாம் போவீங்க, உங்க வாழ்க்கைக்கும் உங்க சாமிக்கும் எப்படியெல்லாம் தொடர்பிருக்கு?

        குழந்தைக்குப் பிறந்த முடிஎடுக்க, காதுகுத்த, குலதெய்வக்கோயிலுக்குப் போவோம். திருமணம் என்றால் முதல் பத்திரிக்கை எடுத்து சாமிக்குத்தான் வைப்போம். எந்த விசேசமானாலும் முதலில் குலதெயவத்தை வழிபட்டுத்தான் தொடங்குவோம். வீட்டில் முதலில் குழந்தை பிறந்தால் ஒச்சாத்தேவர் என்றும், பெண் குழந்தை முதலில் பிறந்தால் ஒச்சாண்டம்மா என்றும் இரண்டாவது பையனுக்கு காசிமாயன், சங்கிலிக்கருப்பு என்றும் பெயர்வைப்போம். எல்லோரும் அழைப்பதற்கு வேறு பெயரைப் பயன்படுத்துவோம். அப்பத் தான் பெயர்க்குழப்பம் ஏற்படாது.

குலதெய்வ வழிபாட்டுக்கு உங்கள் பங்காளிகள் எல்லோரும் வருவார்களா?

       90 சதவீதம் வந்துவிடுவார்கள். தவிர்க்க முடியாமல் குடும்பத்தில் ஏதாவது இறப்பு ஏற்பட்டால் மட்டும் வரமாட்டார்கள். வரவேண்டும் என்று சொல்வோம். வராவிட்டாலும் வரியை வசூலித்துவிடுவோம்.

வேறு ஜாதிகளுக்கு உங்கள் குலதெய்வ கோயிலில் ஏதேனும் தொடர்புண்டா?

       கண்டிப்பாக இல்லை, வழிபடமட்டும் தான் அனுமதிப்போம், பக்கத்தில் உள்ள பதினெட்டாம்படிக் கருப்பசாமி கோயிலுக்கு தாழ்த்தப்பட்ட மக்கள் உள்பட அனைவரும் வழிபட வருகிறார்கள். கோயிலில் நாங்கள் மட்டும்தான் முடிவெடுப்போம். மற்றவர்களுக்கு வழிபட மட்டும்தான். உரிமை.

உங்கள் கோயிலில் உங்களின் குலதெய்வ சாமியைத் தவிர வேறு சாமிகள் உண்டா? அப்படிருந்தால் அந்தச் சாமிக்கும், உங்கள் குலதெய்வத்துக்கும் என்ன தொடர்பு?

       சிவன், பார்வதி, இரண்டு தெய்வங்கள் உண்டு, எங்கள் மூதாதையர்கள் தஞ்சைப் பகுதியிலிருக்கும் போதே அவர்கள் வணங்கிய தெய்வங்கள் இவர்கள். எங்கள் முன்னோர்கள் இங்கே வந்தபிறகு அவர்களை (சிவன், பார்வதி)  வணங்கிவந்துள்ளார்கள். அதன் பிறகு எங்கள் முன்னோரையும், முன்னோரின் தெய்வத்தையும் நாங்கள் வழிபடுகிறோம். சிவனை அய்யன் என்றும், பார்வதியை பூமாங்கினி, கங்காவை, தேமாங்கினி என்றழைத்து வழிபடுகிறோம். எங்களின் முதல் மரியாதை எப்போதும் எங்கள் குலதெய்வத்துக்கே.

உங்கள் குலதெய்வ வழிபாட்டில் பார்பனர்களின் யோசனையைக் கேட்பதுண்டா?

       பங்காளிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து எங்கள் மூதாதையருக்குக் கோயில் கட்டும்போதும் மட்டும் அவர்களைக் கலந்து நல்லநாள் குறித்தோம். பின்னர் கும்பாபிசேகம் அவர்களை வைத்து நடத்தினோம். வேறு எதற்க்கும் அவர்களை தொடர்பு கொள்ள மாட்டோம்.

இறுதியாக ஒரு கேள்வி? குலதெய்வ வழ்பாடு எதற்காக?

எங்கள் மூதாதையர்கள் இந்த இடத்திற்கு வந்து வாழ்க்கையை நடத்தி ஒரு பெரும் தலைமுறையை உருவாக்கி வைத்துள்ளார்கள். நாங்கள் மட்டுமல்ல எங்களைப் போன்ற எத்தனையோ கூட்டங்கள் தங்களின் தலைமுறையின் காரணகர்த்தர்களுக்குக் குலதெய்வ வழிபாட்டின் மூலம் தான் நன்றி சொல்லிக்கொண்டிருக்கிறோம்.

அதுமட்டும்தானா?

       அதுமட்டுமல்ல, உலகத்தின் எந்த மூலையிருந்தாலும் எங்கள் சாதியாட்களை அடையாளம் காண்பதற்கு இந்த குலதெய்வ வழிபாடுதான் பயன்படுகிறது. ஒருவரை நீ என்ன சாதி என்று கேட்பதற்கு பதிலாக, எந்தக் கோயில் கும்பிடுறீங்க?... ஓ…அப்படியா?... அட நம்ம பங்காளி….இல்லையென்றால் ஏய் நம்மெல்லாம் மாமன், மச்சானப்பா? என்று குலதெய்வ வழிபாட்டின் மூலம் அடையாளம் காண்கிறோம்.

Pin It