குலதெய்வத்தின் கதை வரலாறு என்ன?

சுமார் 500 வருடங்களுக்கு முன்பு இக்கோயில் உண்டானதாக எங்கள் மூதாயையர் சொல்லியிருக்கிறார்கள். தற்செயலாக உருவான இத்தெய்வம் எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த 40 பங்காளிகளிடம், இங்கு பள்ளி கொண்டு இருப்பதாகவும் தன்னை அழைத்துக் கொண்டு போகுமாறும் கட்டளையிட்டிருக்கிறது. அப்பொழுது கனவில் குறிப்பிட்ட இடத்தில் ஒரு பிடி கல், குத்துக்கல் வடிவில் வெட்டவெளியில் அமைந்து இருந்ததாகக் கூறினார்கள். தானாக உருவானதால் தன்னாசியப்பன் என்ற பெயர் இதற்கு உண்டாம். பெரிய கருப்பசாமி சிலை வடிப்பதற்கு முன்பு தாங்கள் வழிபட்ட குத்துக்கல்லையே  “தன்னாசியப்பன்” என்கிற பெயரில் வணங்குகிறார்கள். இந்த தன்னாசியப்பன் சிறுகோயில் சுதந்திரம் பெறுவதற்கு முன் 1943 ஆம் வருடம் கட்டியிருக்கிறார்கள். அதே கால கட்டத்திலேயே பெரிய கருப்பசாமி கோயிலின் மேற்கூரையும் மாற்றி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.

பெரிய கருப்பசாமி கதை

ஆங்கிலேயர் ஆட்சி நடைபெற்றுக் கொண்டிருந்த காலகட்டத்தில் அலங்கியத்திற்கு நேர் எதிரே உத்தமபாளையம் என்று ஊர் இருந்தது. கருப்பசாமி வேட்டைக்குப் போகும் சமயத்தில் வெள்ளக்கார துரை ஒருவர், குதிரை மேல் சவாரி செய்தபடி எதிரில் வந்த காரணத்தால் துரைக்குக் கண்பார்வை பறிபோய்விட்டது. எத்தனையோ வைத்தியம் பார்த்தும் கண்பார்வை கிடைக்கவில்லை. அந்தக் காலகட்டத்தில் கருப்பசாமி பூசாரியாக இருந்த எங்கள் பங்காளி ஆங்கிலேயரிடம் சென்று கருப்பசாமி வேட்டைக்குப் போகும்போது வழிமறித்ததால்தான் உங்களுக்குக் கண்பார்வை போயிற்று. ஆகவே நீங்கள் கோயிலுக்கு வந்தால் பார்வை கிடைத்துவிடும் வாருங்கள் என்று அழைத்திருக்கிறார்.

பூசாரிக்கு இசைவு தெரிவித்து ஆங்கிலேயரும் கோயிலுக்கு வந்திருக்கிறார். கருப்பசாமி பாதத்தில் தீர்த்தம் வைத்து ஆங்கிலேயர் கண் மற்றும் முகத்தில் தெளித்தவுடன் அவருக்கு பார்வை வந்துவிட்டது. மகிழ்ச்சியுற்ற ஆங்கிலேயர் எனக்குக் கண்பார்வை கொடுத்த கருப்பசாமியின் காட்சி விளங்க என்ன வேண்டும் என்று கேட்டிருக்கிறார். அலங்கியம் ஒத்த மாமரத்தில் இருந்து  மேற்கே பனந்திட்டு வரை இருக்கும் அனைத்து வயல்களையும் கோயிலுக்கு எழுதித்தருவதாக அந்த ஆங்கிலேயர் கூறியிருக்கிறார். சுமார் 50, 60 ஏக்கர் தேரும் நிலத்தைத் தருகிறேன் என்று ஆங்கிலேயர் கூறியும், எங்கள் பங்காளிகள் தங்களால் அவ்வளவு குத்தகை பணம் செலுத்தமுடியாது.அதனால் மேட்டுப்பாங்கான ஒன்னரை ஏக்கர் நிலம் போதும் என்று கூறியிருக்கிறார்கள்.

ஒவ்வொரு பங்காளிக்கும் சுமார் இரண்டரை செண்ட வீதம் வயலைக் கொடுத்து செம்பு பட்டயமும் கொடுத்திருக்கிறார்கள். இக்கோயிலுக்கு மேற்கே அவ்வயல் இருக்கிறது. அவ்வயலில் வரும் வருமானத்தின் ஒரு பகுதியை கோவிலுக்கு தற்போது வரை செலவழித்து வருவதாகவும் கூறினார்கள். மேலும் இக்கோயில் வளாகத்திலேயே மகாமுனி, முன்னடிக்கருப்பு, வம்படிக் கருப்பு, சேலை செல்லாத்தா, வைத்தீஸ்வரர் மற்றும் பஞ்சபாண்டவர்களுக்கு சிலைகள் (5 கற்களை நேர் வரிசையில் அடுக்கிய மாதிரி) வைத்திருந்தார்கள்.

குலதெய்வமான பெரியகருப்பசாமி கோயிலில் வைத்தீஸ்வரர் மற்றும் பஞ்ச பாண்டவர்களுக்கு சிலை வைத்திருப்பதற்கான காரணம் என்ன? இந்த தெய்வத்திற்கும், பெருந்தெய்வத்திற்கும் கதைப்படி என்ன தொடர்பு?

வைத்தியம் பார்க்கக்கூடிய ஈஸ்வரன் “வைத்தீஸ்வரர்” என்றும் தீராத நோய்களைத் தீர்க்கக்கூடியவர் என்றும் கூறினர். பஞ்சபாண்டவர்கள் இங்கு தங்கியிருந்த சமயத்தில் கீரனூரைச் சேர்ந்த கீசகராஜா திரெளபதியின் மேல் ஆசைப்பட்டு அவரை வினவியிருக்கிறார். அதற்கு திரெளபதி பெரியகருப்பசாமி கோயிலுக்குச் சற்றே தள்ளியுள்ள இடத்திற்கு வந்தால் தங்களை மகிழ்விக்கிறேன் என்று அழைத்திருக்கிறார். அவ்விடத்தை விட்டுக் கிளம்பிய திரெளபதி நேராக தன் கணவர்களிடம் சென்று நடந்ததைக்கூறி கீசகராஜனை வதம் செய்யுமாறு பணிந்திருக்கிறார்.

திரெளபதியின் அழைப்பை ஏற்று அலங்கியம் வந்த கீரனூர் கீசகராஜாவை பீமன் வதம் செய்துவிட்டார். பிறகு இவர்கள் அனைவரும் விராடபுரம் (தற்போது தாராபுரம்) சென்று விட்டார்கள். அவர்கள் இங்கு வந்து தங்கியிருந்ததற்கான அடையாளமாக பஞ்ச பாண்டவர்களுக்குச் சிலை வைத்திருக்கிறார்கள்.

அனைத்துப் பெருந்தெய்வங்களுக்கும், பெரிய கருப்பண்ணசாமிதான் காவல் தெய்வம். சபரிமலை ஐயப்பன் கோயிலிலும், பழனியில் 18 ஆம் படிக்கட்டிலும் முதலில் வழிபடும் காவல் தெய்வமாக வைத்திருப்பார்கள். சிவன் கோயிலில் மட்டும் பெரியகருப்பசாமி சிலை பெரும்பாலும் இருக்காது. அத்திப்பூத்தாற்போல் ஏதோ ஒன்றிரண்டு சிவன்கோயிலில் பெரியகருப்பசாமி சிலை வைத்திருக்கலாம்.

பெரிய கருப்பச்சாமிக்குக் கும்பாபிஷேகம் நடந்துள்ளதா? நடத்தியவர்கள் பார்ப்பனர்களா அல்லது வன்னியர் ஜாதியைச் சேர்ந்தவர்களா? எத்தனை வருடத்திற்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடத்துவீர்கள்?

கும்பாபிஷேகம் நடந்துள்ளது. சுமார் 600 வருடங்கள் இருக்கும். பார்ப்பனர்கள்தான் கும்பாபிஷேகம் நடத்தினர். வன்னியர் ஜாதி பூசாரிக் கூட்டத்துக்குச் சொந்தமான கோயிலாக இருந்தாலும், ஆங்கிலேயர்கள் கோயிலுக்கு கொடுத்த செம்புப்பட்டயம் தங்கள் வசம் இருந்தாலும், கும்பாபிஷேகம் பண்ணுவதற்கு என்று ஒரு ஐதீகம் இருக்கிறது.

காலம்காலமாக பார்ப்பனர்களை வைத்துக் கும்பாபிஷேகம் பண்ணுவது நடைமுறையில் இருக்கும்போது தற்போது அவ்வழக்கத்தை மாற்றமுடியாது. மாற்ற நினைத்தால் பார்ப்பனர்கள் இருப்பதற்கு அர்த்தமில்லாமல் போய்விடும். கோயில் புனரமைப்பது, கும்பாபிஷேகம் பண்ணுவது போன்றவைகளில் பார்ப்பனர்களைக் கலந்து ஆலோசிக்காமல் தாங்கள் எந்த ஒரு முடிவும் எடுக்க மாட்டோம். தற்போது கூட இக்கோயிலை புனரமைக்கலாம் என்று யோசித்து கீரனூரைச் சேர்ந்த பார்ப்பனரிடம் சென்று கோயிலைப் பார்த்துவிட்டு ஆலோசனை கூறுமாறு கேட்டோம்.

அவர் கர்ப்பகிரகத்தில் இருந்து முன்மண்டபம் அரை அடி இறங்கியிருக்கிறது அதனால் கோயிலை இடித்து புதிதாக சிலை வடித்து கோபுரத்துடன் கட்டினால்தான் கருப்பசாமியின் சக்தி குறையாமல் வலுவடையும் என்று கூறினார். அதனால் புதிதாகச் சிலை செய்து கோயிலைக் கட்டியிருக்கிறோம். ஏற்கனவே இருக்கும் சிலையை பாடாலாயம் பண்ணி ஓரமாக வைத்துவிடுவோம். புதிதாகச் செய்யும் சிலையை கும்பாபிஷேகம் செய்து பார்ப்பனர்கள் உயிர் கொடுப்பார்கள். அதற்குப் பிறகுதான் நாங்களே பூசை செய்வோம். பார்ப்பனர்கள் இல்லாமல் கும்பாபிஷேகம் செய்ய முடியாது. பார்ப்பனர்களை அடுத்துச் செய்யும் மண்டலபூஜை(48 நாட்கள்) முடியும் வரை கோயிலில் கிடாய் கூட வெட்டமாட்டோம்.

தெய்வத்தை வழிபடும் மக்கள்தொகை எவ்வளவு? அதில் என்னென்ன ஜாதிகள் இருக்கிறார்கள் அல்லது ஒரே ஜாதியினரா?

தெய்வத்தை வழிபடும் மக்கள்தொகை சுமார் பத்தாயிரம் பேர் இருப்பார்கள். இப்பொழுது அனைத்து ஜாதியினருக்கும் தங்களுக்கும் இதுதான் தெய்வம் என்று வழிபடுகிறார்கள். இந்த சாமியை இஸ்லாமியர்கள் கூட வழிபடுகிறார்கள்.

பெரிய கருப்பசாமியைக் கும்பிடும் ஜாதிக்குள் எத்தனை உட்பிரிவுகள் இருக்கிறது? மற்ற உட்பிரிவுக்கும் மற்ற ஜாதியினருக்கும் இந்த கோயிலில் எந்த அளவு உரிமைகள் உள்ளது?

படையாச்சிக் கவுண்டர் (வன்னியர்) எனப்படும் எங்கள் ஜாதியில் ஏழு வம்சம் இருக்கிறோம். அறியான்கூட்டம், மணியார்கூட்டம், பூசாரிக்கூட்டம், கவுண்டர்கூட்டம், சேவியார் கூட்டம், வஞ்சியார் கூட்டம் மற்றும் கருமாண்டகூட்டம் ஆவர். கோயிலுக்கு உரிமைபட்டவர்கள் பூசாரிக் கூட்டத்தைச் சேர்ந்த 40 வீட்டுப் பங்காளிகள் தான். மற்ற உட்பிரிவினருக்கு மாமன், மச்சான் என்ற உரிமை தான் இருக்கு. கோயிலில் எந்த உரிமையும் இல்லை. மற்ற ஜாதியினருக்கும் இக்கோயிலில் உரிமை கிடையாது. சாமி கும்பிட்டுவிட்டுச் செல்லலாம் என்கிற அளவு அனுமதிதான் உண்டு.

பெரிய கருப்பசாமியை கும்பிடும் நீங்கள் எந்த உட்பிரிவுடன் மணஉறவு வைக்கிறீர்கள்? அவர்கள் எந்த சாமியை கும்பிடுவார்கள்?

பூசாரிக் கூட்டத்தைச் சேர்ந்த நாங்கள் மாமன், மச்சான் உறவுமுறையில் உள்ள வஞ்சியர் கூட்டம், கருமாண்டகூட்டம், மணியார் கூட்டம் மற்றும் அறியான் கூட்டத்துடன் மணஉறவு வைத்துக்கொள்வொம். வஞ்சியார் கூட்டம் வஞ்சிஅம்மனையும், கருமாண்டகூட்டம் மதுரை வீரனையும், மணியார்கூட்டம் காமாட்சிஅம்மனையும், அறியான் கூட்டம் பெருமாள் சாமியையும் கும்பிடுவோம். வேட்டைக்காரனைக் கும்பிடும்  சேவியார் கூட்டமும், பெரிய தெய்வத்தை கும்பிடும் கவுண்டர் கூட்டமும் எங்களுக்கு பங்காளிகள் ஆவதால் மணமுடிக்க மாட்டோம்.

குலதெய்வத்திற்கும்,பூசாரிக்கும் எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்?

பூசாரிக்கு என்று தனிமரியாதை எப்போதும் உண்டு. தொழில் தொடங்குவதிலிருந்து அனைத்துச் செயல்களையுமே குலதெய்வத்தை கும்பிட்டுவிட்டு தொடங்குவோம்.

பூசாரியை எப்படி நியமிக்கிறீர்கள்? ஒரே குடும்பத்தினர்தான் பூசாரிகளாக பரம்பரை, பரம்பரையாக வந்துள்ளீர்களா அல்லது வேறு பிரிவிலிருந்தும் பூசாரியை நியமிப்பீர்களா?

எங்கள் தாத்தா காலத்திற்கு முன்பு 40 குடும்பங்களும் சேர்ந்து குடும்பத்திலுள்ள வரை பூசாரியாகத் தேர்ந்தெடுத்தார்கள். அதற்குப் பிறகு எங்கள் தாத்தா, அப்பா தற்போது நான் என பரம்பரை, பரம்பரையாகப் பூசாரியாக தொடர்ந்து வருகிறோம். எங்களால் முடியாத சூழ்நிலையில் பூசாரிக்கூட்டத்தைச் சேர்ந்த ஆண்கள் வேண்டுமானால் பூசாரியாகலாம் மற்ற பிரிவிலிருந்து நியமிக்கமாட்டோம்.

குலதெய்வ கோயில் உள்ள ஊர் அல்லது இடம் எது? கோயிலின் அமைப்பு எப்படியுள்ளது? பஸ் வசதி இருக்கிறதா?

திருப்பூர் மாவட்டம், தாராபுரம் வட்டம் அலங்கியம் கிராமத்தில் சற்றே உள்ளடங்கி வயல்களுக்கு நடுவே சுற்றுச்சுவருடன் ச்ற்றே பெரிய அளவில் இக்கோவில் காட்சியளிக்கிறது. பெரிய கருப்பசாமி சிலை இருக்கும் இடம் மட்டும் டெரஸ் பேட்டு, தரையில் காரை போடப்பட்டிருக்கிறது. கோபுரம் கிடையாது. மற்றபடி முன்னடிக்கருப்பு (முன்னடியான்), வம்படிக் கருப்பு மற்றும் மகாமுனி சிலைகள் வெட்டவெளியில் காட்சியளிக்கிறது.

தன்னாசியப்பன் கையடக்கமான சிறிய கோவில் போன்ற அமைப்பில் இருக்கிறது. இக்கோயிலின் முன்னே ஒரு ஓரமாக வைத்தீஸ்வரர் சிலை வெட்டவெளியில் இருக்கிறது. தன்னாசியப்பன் 1943 ஆம் வருடமும், முன்னடிக்கருப்பு மற்றும் குதிரைசிலை 1960 ஆம் வருடமும், மகாமுனிசிலை 1974 ஆம் ஆண்டும், 2001ஆம் ஆண்டிலும் வண்ணம் பூசி புதுப்பிக்கப்பட்டிருக்கிறது. பேருந்தில் வந்து ஒத்த மாமரத்து நிறுத்தத்தில் இறங்கி ஒரு ஙூ கிலோ மீட்டர் உள்ளே வரவேண்டும். விவசாயம் இல்லாத காலத்தில் வாகனங்களிலும், விவசாயம் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது நடந்தும் வரவேண்டும்.

கோவிலுக்கு என்னென்ன காணிக்கைகள் செலுத்துகிறார்கள்? திருவிழாவுக்கு எவ்வளவு செலவு ஆகும்? அந்தச் செலவை எப்படி திரட்டுவீர்கள்?

காணிக்கையாக காசு, பணம் கொடுப்பார்கள். சாமிக்குக் கிடா வெட்டுகிறேன், கோயில் கட்டமைப்பதற்கு மணல், செங்கல் தருகிறேன் என்று வேண்டிக் கொள்வார்கள். அருவா அடித்துத் தருவது, வேல் அடித்துத் தருவது போன்ற காணிக்கைகளும் உண்டு.

ஒவ்வொரு வருடமும் நிகழ்வுக்கு தகுந்தாற்போல் செலவு ஆகும். சென்ற வருடம் செலவான தொகை 30,000 ரூபாய் .பொதுமக்கள் அன்பளிப்பாகக் கொடுக்கும் பணம் மற்றும் கோயிலுக்குச் சொந்தமான வயலில் இருந்து கிடைக்கும் பணம். இவற்றோடு 40 பங்காளி வீடும் இணைந்து செலவு செய்வோம். நன்கொடை புத்தகம் அச்சடித்து விருப்பப்பட்டு கொடுப்பவர்களிடம் பணம் வசூலிப்போம்.

இந்தச் சாமி கும்பிடும் மக்களின் கல்வித்தகுதி என்ன? வேலைவாய்ப்பு எப்படி இருக்கிறது? முதலில் இருந்ததற்கும் தற்போதைக்கும் என்ன விதமான மாறுபாடு இருக்கிறது?

தற்போது அனைவருமே படிக்கிறார்கள். மருத்துவர், பொறியாளர், ஆசிரியர் என அனைத்துத் துறைகளுக்கும் செல்கிறார்கள். அனைத்து வகையான தொழில்களிலும் ஈடுபடுகிறார்கள். இரும்பு சம்பந்தமான எல்லா வேலைகளையும் செய்கிறார்கள். விவசாயிகளாகவும், விவசாயக் கூலிகளாவும் உள்ளனர். நெசவுத் தொழிலிலும் ஈடுபடுகிறார்கள். ஆரம்பத்தில் ஒருவேளை சாப்பாட்டுக்கே மிகவும் சிரமமாக இருக்கும். தற்போது அந்தநிலை இல்லை. கல்வி, வேலைவாய்ப்பு, பொருளாதாரம் என அனைத்திலும் முன்னேற்றம் காணப்படுகிறது.

கோயில்களில் பெண்களின் உரிமைகள் என்ன? பங்கு என்ன? பெண்கள் பூசாரிகளாக இருக்கிறார்களா? குறைந்தபடசம் பெண் கடவுள்களுக்காவது பெண் பூசாரிகள் உண்டா?

பூசாரிக் கூட்டத்தைச் சேர்ந்த பங்காளிப் பெண்ணாக இருந்தாலும் மாமன், மச்சான்கிற உறவில் கோயிலுக்கு வரலாமே ஒழிய எந்த விதமான உரிமையும் கிடையாது. பங்கு கிடையாது. வயதுக்கு வராத எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த சிறுபெண்ணைத்தான் கருப்பசாமியிருக்கும் முன்மண்டபத்தில் அனுமதிப்போம். வயது வந்த பெண்களை எங்கள் கூட்டத்தைச் சேர்ந்த பெண்ணாக இருந்தாலும் முன் மண்டபத்தில் அனுமதிக்கமாட்டோம். பெண்கள் பூசாரி என்ற பட்டம் கிடையாது. பெண் தெய்வங்களுக்கும் ஆண் தான் பூசாரியாக இருக்கிறார்.

கல்யாணத்திற்குப் பின் பெண்கள் தந்தையின் குலதெய்வத்தை வணங்குவார்களா? அல்லது கனவரின் குலதெய்வத்தை வணங்குவார்களா? தலக்கட்டு வரி எந்த குடும்பம் சார்பில் வசூலிக்கப்படுகிறது?

கல்யாணத்திற்குப் பிறகு பெண்கள் கணவரின் குலதெய்வத்தைத்தான் கும்பிடுவார்கள். வேறொருவருக்கு மணம் முடித்த பெண் மாமன், மச்சான் உறவுமுறை ஆவதால் தலக்கட்டு வரி வாங்க மாட்டோம். தலக்கட்டு வரி (ஆணுக்கு) கணவருக்குத்தான் போடுவார்கள். பிறந்த வீட்டில் இல்லை தலக்கட்டுவரி. பூசாரிக் கூட்டத்தைச் சேர்ந்த 40 பங்காளிகள் வீட்டு ஆண்களிடம் தான் வாங்குவோம். பெண்கள் விருப்பப்பட்டுக் கொடுத்தால் வாங்கிக்கொள்வோம்.

வன்னியர்களைத் தவிர பிற பிற்படுத்தப்பட்ட அல்லது தாழ்த்தப்பட்ட மக்களிடம் வரி வாங்கப்படுகிறதா?

நன்கொடை மட்டும் விருப்பப்பட்டுக் கொடுத்தால் வாங்கிக்கொள்வோம். தாழ்த்தப்பட்டவர்கள் என்ற பாகுபாடு காட்டமாட்டோம். கோயிலுக்குள் கருப்பசாமி இருக்கும் இடம் நீங்கலாக அனுமதிப்போம்.

குலதெய்வக்கோயில் விழா பற்றிக் கூறுங்கள்?

வருடாவருடம் பெரிய கார்த்திகை (ஜோதி) மாதம் திருவிழா கொண்டாடுவோம். பங்காளிகள் அனைவரும் மாவிளக்கு எடுத்துக்கொண்டு வருவோம். சொக்கப்பானை கொழுத்தி விழாவைக் கொண்டாடுவோம். இவ்வாறே மாசி சிவன்ராத்திரி அமாவாசைக்கும் விழா எடுப்போம். மைக் செட்டு கட்டுவோம், மேள தாளத்தோடு மாவிளக்கு எடுத்துட்டு வருவோம். அன்னதானம் போடுவோம்.

கும்பிட வேண்டும் என்று முடிவு செய்பவர்கள் யார்?

பூசாரிக் கூட்டத்தைச் சேர்ந்த 40 பங்காளிகள் வீட்டைச் சார்ந்தவர்கள் தான் முடிவு செய்வோம். திருவிழாவுக்கு ஆகும் மொத்த செலவைக் கணக்கிட்டு, ஒரு குடும்பத்திற்கு இவ்வளவு என நிர்ணயிப்போம். பங்காளி வீட்டில் உள்ள வயதில் மூத்தவர்கள் (பெரிய பெருந்தலைகள்) தான் திருவிழா இந்த தேதியில் நடக்கிறது என்றும், ஒரு குடும்பத்திற்கு இவ்வளவி வரி என்று அறிவிப்பார்கள். கோயில் பூசாரிக்கு இந்த நிகழ்வில் முன்னுரிமை அளிக்கப்படும். அடுத்தது பங்காளிகளில் யார் பெரியவரோ அவரை வைத்து அறிவிப்பார்கள்.

எந்தெந்த காரியங்களுக்குக் குலதெய்வக் கோயிலுக்கு வருகிறார்கள்?

குழந்தைகளுக்கு முதல்முடி இறக்குறது மற்றும் காதுகுத்து போன்ற நிகழ்வு இல்லாமல் குடும்பத்தில் கஷ்டம், தொழில் நலிவடைந்து கொண்டு செல்வது என்று இருந்தாலும் குலதெய்வக் கோயிலுக்கு வருவார்கள்.

Pin It