உங்களுடைய குல தெய்வம் என்ன?

எங்களுடைய குலதெய்வம் தில்லாளம்மன் அல்லது தில்லையம்மன். தில்லை யம்மன் என்பது தில்லையில் இருக்கக்கூடிய  அம்மன். சிவபெருமானுடைய மனைவி என்பதனால் தில்லைஅம்மன் என்று பெயர் வந்தது. தில்லாளம்மன் என்பது அதனுடைய மறுபெயர்தான். தில்லையம்மன், தில்லாளம்மன், பார்வதி, பகவதியம்மன், காமாட்சி அம்மன் எல்லாம் பார்வதியைக் குறிக்கக்கூடிய பெயர்கள்.

கும்பம்பட்டியில் இருக்கக்கூடிய தில்லைஅம்மன் என்பது பார்வதியைக் குறிக்கக் கூடியது. அதை நாங்கள் குலதெய்வமாக வைத்துக் கொண்டோம். காவல் தெய்வமாகிய கருப்பசாமியையும் குலதெய்வமாக வைத்துக் கொண்டோம்.

தில்லாளம்மன் கோவிலின் கதை என்ன?

பல கதை இருக்கு. எங்களுக்குத் தெரிந்ததைச் சொல்றோம். எங்களுடைய பங்காளிகள் அரியலூர் பக்கத்துல, பெரம்பலூர் பக்கத்தில் அன்றைய திருச்சி மாவட்டம் கல்பாடி என்ற ஊரில் தங்கியிருந்து சிவனை வழிபட்டவர்கள். ஒரு காலத்தில் கடல் கொந்தளிப்பு ஏற்பட்ட நேரத்தில் அந்த இடத்தை விட்டு நீரலையால் ஏற்படக்கூடிய ஆபத்திலிருந்து தப்பிப்பிழைக்க வேண்டும் என்பதால் குடி பெயர்ந்து கல்பாடி பகுதியிலிருந்து துறையூர் வந்து தங்கினார்கள்.

திருச்சி மாவட்டம் துறையூரில் இருந்த போது எங்களுடைய பங்காளியில் ஒருவர் தொட்டிய நாயக்கர் பெண்ணை தொட்டதனால் அந்த ஊரில் வாழமுடியவில்லை. ஆகையால் காவிரிக் கரையைத் தாண்டிப் புறப்பட்டார்கள். காவிரிக் கரையின் தெற்கே வந்த போது துறையூரில் இருந்து தொட்டிய நாயக்கர்கள் விரட்டி வந்து பிடித்த போது, இந்தப் பெண்ணை புதைத்து வைத்து விட்டுத் தப்பி வந்தார்கள். அந்தப் பெண்ணுடைய ஆவி தங்களைத் தொடர்ந்து வந்ததாக நினைத்து தொட்டிச்சி அம்மனுக்கு ஒரு சிலையும் வைத்து அதை தெய்வமாக வணங்குகிறார்கள்.

கல்பாடியில் இருந்த காவல் தெய்வமாகிய கருப்பசாமியை பிடிமண் பிடித்தக் கொண்டு வந்து கும்பம்பட்டியில் வைத்து, குடகனாற்றுக் கரையில் வைத்து அதைக் குலதெய்வமாக வைத்துக் கொண்டனர்.

கும்மம்பட்டியில் எத்தனை கோவில்கள் உள்ளன?

எங்களுடைய பங்காளிகள் என்று ஒரு பகுதி கல்பாடியில் இருந்து பிரிந்து வந்தவர்களின் குலதெய்வம் தில்லாளம்மன். அந்தத் தெய்வம் தவிர, அங்காள பரமேஸ்வரி, காமாட்சி அம்மன் கும்பிடுபவர்களும் இந்த ஊரில் இருக்கிறார்கள். அவர்கள் எங்களுக்கு மாமன், மச்சான் முறையில் வருவார்கள். அந்தச் சாமியைக் கும்பிடுபவர்களில் நாங்கள் பெண் கொடுத்துப் பெண் எடுப்போம்.

குலதெய்வக் கோவில் கும்பிடு நடத்தவேண்டும் என்று யார் முடிவு செய்வார்கள்?

பூசாரி, பெரியதனம், சேர்வை ஆகியோர் முடிவுசெய்து, நாலு ஊருக்கு ஆள்விட்டு இந்தக் கோவிலில் கலந்து பேசுவோம். தீத்தாம்பட்டி, அனுமந்தராயன்கோட்டை, மேட்டுப்பட்டி, வக்கம்பட்டி ஆகிய கிராமங்களில் வசிக்கும் வன்னியர்களில் எங்கள்குல பங்காளிகளுக்கு அழைப்புக் கொடுத்து, இங்க, கோயிலுக்கு வரச் சொல்வோம். அவர்களைக் கலந்துபேசி மாசி மாசத்துல ஒரு நாளைக் குறிப்போம்..

குறித்த நாளில், ஊரில் உள்ள தில்லாளம்மன் கோவிலில் தேங்காய், பழம் வைத்து பூஜை செய்து சாமிசாட்டுவோம். 1 வாரம் கழித்து, ஆத்தங்கரையில் இருக்கும் இந்தக் கருப்புச்சாமி கோயிலில் கெடா வெட்டிப் பொங்கல் வைப்போம்.

நான்கு ஊர் கூடி சாமிகும்பிட வேண்டும் என்ற முடிவு செய்கிறீர்கள். இந்த முடிவு எடுக்கும் கூட்டத்தில், பெண்கள் அதாவது, பிறந்த மக்களோ அல்லது திருமணம் மூலமா உங்க குடும்பங்களுக்கு வந்த பெண்களோ அதில் கலந்துகொள்வார்களா?

இல்ல. பெண்கள் யாரும் அதில் கலந்துகொள்ள மாட்டார்கள். ஆம்பளைக மட்டும் தான் முடிவு செய்வோம்.

இதற்கு யார் யாரிடம் தலைக்கட்டுவரி வாங்குவீர்கள்?

தில்லாளம்மன் கும்பிடுபவர்களிடம் மட்டும் வரி வாங்குவோம். வன்னியர்களிலேயே மற்ற குலத்தவர்களிடம் வரி வாங்குவதில்லை. நன்கொடை மட்டும் வாங்குவோம். சேரி மக்களிடம் வரியோ, நன்கொடையோ வாங்குவதே இல்லை. எங்கள் குலத்தில் மட்டுமே வாங்குவோம். எங்கள் குடும்பத்தில் பிறந்த பெண்களிடம் தலைக்கட்டு வரி பாதியாக வாங்குவோம். ஆண்களுக்கு முழு வரி வாங்குவோம்.

விழா எப்படி நடக்கும் என்று விளக்கமாகக் கூறுங்கள்

ஊரில் உள்ள தில்லாளம்மன் கோவிலில் இருந்து, ஆற்றங்கரையில் இருக்கும் கருப்புச்சாமி கோவில் வரை ( 1 கி.மீ) தூரத்திற்கு முழுவதும் லைட்டுகள் கட்டப்படும். மைக் செட் வைப்போம்.

மாலை 6 மணிக்கு ஊரில் இருந்து கெடா, பொங்கப் பானையோடு ஊர்வலம் புறப்படும். இரவு 10 மணிக்குத்தான் கருப்புச்சாமி கோவிலுக்கு வருவோம். இரவு 12 மணியைப்போல பொங்கல் வைத்து முடிப்போம்.

நைட் 2 மணிக்குக் கெடா வெட்டு நடக்கும். படைக்கும் பூசாரியாக இருப்பவர், பொங்கலையும், கெடாயின் இரத்தத்தையும் கலந்து தாம்பாளத் தட்டில் என்னிடம் (ஆடும் பூசாரியிடம்) கொடுப்பார். நான் கருப்புச்சாமிக்கு அதைக் கொண்டு போவேன். நைட் 2 மணிக்கு எல்லா லைட்டுகளையும் நிறுத்திவிடுவார்கள். லைட்ட பூரா ஆஃப் பண்ணிப்புட்டு, கோயிலச் சுத்தி வந்து, தனியா நடந்து போவேன். இரத்தம் கலந்த அந்தப் பொங்கல், அந்தத் தாம்பாளத் தட்டோட அப்படியே காணாமப் போயிரும். கருப்பச்சாமி எடுத்துக்கும். அந்தத் தட்டக்கூட யாரும் பாக்க முடியாது. காலைல வந்து வெளிச்சத்துல பாத்தாலும் அந்தத் தட்டு யார் கண்ணுக்கும் சிக்காது.

இந்தக் கோவிலுக்குப் பூசாரிகளாக யார் வருவார்கள்? அதை எப்படி முடிவு செய்வீர்கள்?

பரம்பரை பரம்பரையாக எங்கள் குலத்தில், எங்கள் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் தான் பூசாரியாக வருவார்கள்.

உங்க குடும்பத்தில் ஆண்வாரிசு இல்லாவிட்டால் என்ன செய்வீர்கள்? பெண்களைப் பூசாரியாகத் தேர்ந்தெடுப்பீர்களா?

எங்கள் குடும்பத்தில் ஆண்வாரிசு இல்லாவிட்டால் பங்காளிகளின் குடும்பத் திலிருந்து பூசாரியைத் தேர்ந்தெடுப்போம். பெண்கள் பூசாரியாக வரவே முடியாது.

உங்க வாழ்க்கையில் குலசாமிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுப்பீங்க?

நேத்திக்கடன் வைத்தவர்களும், குழந்தைகளுக்கு முதல்முடி எடுக்கவும், காது குத்தவும் இந்தக் கோவிலுக்குத்தான் வருவாங்க. கல்யாணம்னா முதல் பத்திரிக்கை ஊரில் உள்ள தில்லாளம்மன் கோவிலில் தான் வைப்பார்கள். குலசாமி என்ன என்பதை வைத்துத்தான் கல்யாணமே நிச்சயம் பண்ணுவாங்க.

இந்தக் கோவில் கும்பிடும் போது தாழ்த்தப்பட்ட மக்கள் கும்பிட வருவார்களா?

இந்தக் குலதெய்வம் சாமி சாட்டும் நாள்ல இருந்து சாமிகும்பிடு முடியுற வரைக்கும் காலனில இருக்க சேரிச்சனங்க, ஊருக்குள்ளயே வரமாட்டாங்க.

கும்பாபிஷேகம் நடக்கும் போது யார் வருவார்கள்?

கும்பாபிஷேகம் நடத்துவதற்கு திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் இருந்து ஐயர்கள் வருவார்கள். நாங்கள் கும்பாபிஷேகம் பண்ணினால் அது நிறைவு இல்லை என்று ஐயர்கள் சொல்கிறார்கள். 

Pin It