தர்மபுரியில் தலித்துகள் மீது தாக்குதல்

சாதி ஒழிப்பில் அப்பு-பாலன் பங்களிப்பும் கம்யூனிஸ்ட்களின் உடனடிக் கடமையும் - கருத்தரங்கம்

அன்பார்ந்த உழைக்கும் மக்களே!

மீண்டும் ஒருமுறை தலித் மக்கள் மீது ஆதிக்கச் சாதி வெறியர்கள் தாக்குதலை தொடுத்துள்ளனர். இம்முறை தருமபுரியில் அதுவும் வன்னிய சாதி வெறியர்கள் தலைமையில் 260 வீடுகள் தீக்கீரை; 1200 பேர் வீடுகளை இழந்துள்ளனர். 3.5 கோடிக்கு மேல் தலித்துகளின் சொத்துக்கள் சூறையாடப்பட்டுள்ளது என அரசு நிர்வாகமே தெரிவித்துள்ளது. தலித் இளைஞர் ஒருவர் வன்னிய சாதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதல் திருமணம் செய்ததால் இந்த பதிலடி என்கிறார்கள் சாதி ஆதிக்கவாதிகள். ஆதிக்க சாதியைச் சேர்ந்த பெண்ணை தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள் காதலித்தால் அது நாடகக் காதல் எனக்கூறி தலித்துகளை இழிவுப்படுத்துகின்றனர். தமிழகம் முழுவதும் உள்ள சாதி ஆதிக்கவாதிகள் அரசியல் மற்றும் சமூக அரங்குகளில், ஆதிக்கத்தை தொடர்ந்து நீட்டிக்க தலித்துகளுக்கெதிராக தோளைத் தட்டுகின்றனர். பார்ப்பனிய மற்றும் சாதி வெறியர்களின் ஆதிக்கத்திற்கெதிரான தமிழகத்தின் போராட்ட மரபினை உரசிப் பார்க்கின்றனர்.

பார்ப்பனிய எதிர்ப்பு, சாதிய – சடங்கு சாத்திரங்களுக்கு எதிர்ப்பு, விதவை மறுமணம், சாதிமறுப்புத் திருமணம், மூடநம்பிக்கை எதிர்ப்பு என திராவிட இயக்கத்தின் தொடக்கக் கால செயல்பாட்டால், பதுங்கியிருத்த சாதி தற்போது பகிங்கமாக மிரட்டல் விடுப்பது ஏன்.? பெயர்களோடு சாதிப்பெயர்களை பகிரங்கமாக இணைத்து அழைப்பதில் அச்ச உணர்வோடு இருந்த சாதி வெறியர்கள் இன்று பகிரங்கமாக சாதி பெயரில் அரசியல் கட்சியாய் உருப்பெற்று தேர்தலில் பங்கேற்க துணிவுவந்தது எப்படி என்ற கேள்வி முன்னுக்கு வருகிறது.

திராவிட இயக்கங்கள் அரசியல் ரீதியில் காலாவதியான பின்பு அவை சாதியத்தை கட்டிக்காப்பதிலும், சாதியத்தை ஊட்டி வளர்ப்பதிலும் முழுப்பங்காற்றுகின்றன. தேர்தல் அதற்கு ஒர் அச்சாணியாய் அமைகிறது. அ.தி.மு.க.விற்கு ஒரு தேவர் கட்சி என்றால் - தி.மு.க.விற்கு இன்னொரு தேவர் கட்சி, அ.தி.மு.க.விற்கு ஒரு வன்னியர் கட்சி என்றால் –தி.மு.க.விற்கு இன்னொரு வன்னியர் கட்சி, அ.தி.மு.க.விற்கு ஒரு தாழ்த்தப்பட்ட இயக்கம் என்றால் - தி.மு.க.விற்கு இன்னொரு தாழ்த்தப்பட்ட இயக்கம். தாழ்த்தப்பட்டோரிடமிருந்து எழும் இயக்கங்கள் அ.தி.மு.க., தி.மு.க.வின் தொங்கு சதையாக இருந்து வருவதை சமகால வரலாறு நமக்கு உணர்த்தும். இதனால் ஆதிக்க சாதி வெறியர்களின் தாக்குதலுக்கு தலித்துக்கள் தொடர்ந்து ஆளாவதும், மாற்றுத்தீர்வுகள் விடைகாண முடியாமல் அவதூறுகளுக்கு ஆளாவதும் தொடர்கின்றன. இவ்வளவு நடந்த பிறகும் 'மறப்போம் மன்னிப்போம்' என்கிறார் திருமாவளவன். ராமதாசும் சாதி உணர்வு தமது உரிமை என்று பேசத் துவங்கி அனைத்து ஆதிக்க சாதிவெறியர்களையும் ஒருங்கிணைக்கிறார். வன்கொடுமைச் சட்டத்தில் அரசு திருத்தம் கொண்டுவர வேண்டும் என தொடர்ந்து பேசுகிறார். வன்கொடுமைச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தால் சாதி வெறியர்கள் தங்கள் சாதி வெறியை கைவிட்டு விடுவார்களா? அதற்கு உத்திரவாதமில்லை!

சாதி வெறியர்கள் சங்கமாய் இருக்கிறார்கள்; அரசியல் அதிகாரத்தை சுவைக்கிறார்கள். இவர்கள் வெறும் சாதி வெறியர்களாக இருப்பது மட்டுமல்லாமல் உள்ளூரில் கான்டிராக்டர்களாகவும், மணல், செம்மண், கிரானைட் குவாரிகளை ஏலம் எடுப்பது, கந்துவட்டி, கட்டப்பஞ்சாயத்து, ரியல் எஸ்டேட் எனத் தங்களது எல்லையை விரிவுபடுத்திக் கொள்வதுடன், உள்ளுரில் தனியார் கல்லூரி முதலாளிகளாகவும், தனியார் மருத்துவமனை உரிமையாளர்களாவும் மாறி உள்ளுரில் அனைத்தையும் தீர்மானிக்கும் அதிகாரமையங்களாக மாறியிருக்கின்றனர். ஆளும் வர்க்கத்தின் கடைசி ஒட்டுண்ணிகளாகவும், பன்னாட்டு மற்றும் தரகு முதலாளிகளின் விருப்பத்தை நிறைவேற்றும் நம்பகமான அடியாட்களாகவும் இவர்கள் இருக்கிறார்கள். அரசை எதிர்த்த மக்கள் போராட்டங்களில், மக்களின் முதன்மை எதிரியாக களத்தில் இருப்பதும் இவர்கள் தான்! இவர்கள் திருந்துவார்கள் என நாம் எண்ண முடியுமா?

மயிலே மயிலே என்றால் இறகு போடுமா?... போடாது. சாதி வெறியர்களின் கொட்டங்களை மனு போட்டு அடக்க முடியுமா ?....முடியாது.

மன்றாடி மனு போட்டு மாற்ற முடியாத சாதி வெறியர்களை, சாதி இழிவுகளை மகத்தான போராட்டங்கள் மூலம் தருமபுரியில் மக்களை திரட்டி வீழ்த்தியிருக்கிறார்கள் மார்க்சிய – லெனிய புராட்சியாளர்கள், நக்சல்பாரிகள். இதை நாம் செயற்கையாகக் கூறவில்லை. தர்மபுரியில் நேரடியாக மக்களை பேட்டி கண்டு வெளியிட்டிருக்கிறது தினமலர் ஏடு. கடைந்தெடுத்த பிற்போக்குப் பத்திரிக்கைகள் கூட தவிர்க்க இயலாமல் உண்மையைப் பேசுகின்றன! நக்சல்பாரிகள் இருந்தவரையில் சாதி வெறியர்கள் அடங்கிக் கிடந்தார்கள். இரட்டை டம்ளர் முறை ஒழிக்கப்பட்டிருந்தது. கந்துவட்டி வியாபாரிகள் காணாமல் போயிருந்தனர். நக்சல்பாரிகள் இருந்தவரை, பாலன் இருந்தவரை வன்னியர் தாழ்த்தப்பட்டோரிடையே அமைதி நிலவியது. இருபிரிவிலும் இருந்த உழைக்கும் மக்கள் ஒற்றுமையாய் வாழ்ந்தார்கள் என்பது உண்மை என நாளிதழ்கள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்திருக்கின்றன.

புரட்சியாளர்கள் இருந்திருந்தால் நாங்கள் வேறு இயக்கங்களுக்கு சென்று இருக்கமாட்டோம் என்று கூறுகின்றனர் தர்மபுரி மக்கள். இது சாதி வெறியர்களையூம் சாதியத்தையும் யார் வீழ்த்த முடியும் என்ற செய்தியை உலகிற்கு உணர்த்துகிறது. நக்சல்பாரிகளால் நாட்டுக்குப் பேராபத்து என்கிறார் பிரதமர் மன்மோகன்சிங். புரட்சிகர கம்யூனிஸ்ட்களால் சாதி வெறியர்களுக்கும் சாதியத்திற்கும் தான் ஆபத்து என்கிறார்கள் தர்மபுரி மக்கள்.

சம்பவம் நடந்து இவ்வளவு நாள் ஆகியும் தர்மபுரிக்கு சென்று மக்களைப் பார்க்காமல் இந்து பயங்கரவாதி மோடிக்கு வாழ்த்து சொல்ல குஜராத்திற்கு சென்று வருகிறார் தமிழக முதல்வர் ஜெயலலிதா. அரசால் பயங்கரவாதிகளாக சித்தரிக்கப்படும் நக்சல்பாரிகள் இருந்திருந்தால் எங்களுக்கு இந்த கதியே ஏற்பட்டிருக்காது என்கிறார்கள் தாமபுரி மக்கள். இப்போது சொல்லுங்கள், சாதி வெறியர்களையும் சாதியத்தையும் வீழ்த்த கம்யூனிஸமே மாற்று… கம்யூனிஸ்ட் புரட்சியாளர்களே மாற்று என்பதை இனியும் சொல்லத்தான் வேண்டுமா!.

நாள்: 26-01-2013, சனிக்கிழமை. மாலை 5.30.

இடம்: இக்சா அரங்கம், 107, பாந்தியன் சாலை, மியூசியம் எதிரில், எழும்பூர், சென்னை-8

சிறப்புரை:

தோழர் கோவை ஈஸ்வரன்

தோழர் சித்தானந்தன் ( மக்கள் ஜனநாயக இளைஞர் அணி)

டி.எஸ்.எஸ். மணி

வழக்கறிஞர் சங்கரசுப்பு

வழக்கறிஞர் அஜிதா

எழுத்தாளர் ருத்ரன் (கிருஷ்ணகிரி)

தியாகிகள் அப்பு - பாலனின் புகைப்பட திறப்பு நிகழ்ச்சி

புரட்சிகர கலை நிகழ்ச்சி:

தோழர். மாரியப்பன் குழவினர் (மக்கள் கலை மன்றம்)

அனைவரும் வாரீர்!                             ஆதரவு தாரீர்!!

இவண்

தொழிலாளர் குடியரசு முன்னணி
எண்:8, முனுசாமி தெரு, பாரதிபிளாக், ஜாபர்கான்பேட்டை, சென்னை-83
செல்: 9952418944, 9941094339

Pin It