கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் நூறு ஆண்டுகளாக, உழைக்கும் வர்க்கத்திற்காகவும் பட்டியலினத்தவர், பழங்குடியினர், விளிம்பு நிலை மக்களுக்காகவும் இன்று வரை தொடர்ந்து களத்தில் போராடி வருகிறது.
பிஜேபி - ஆர்எஸ்எஸ் போன்ற இந்துத்துவ சக்திகளால் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு, தலித்மக்களுக்கு, சிறுபான்மை மக்களுக்கு தேசிய அளவிலும், மாநில அளவிலும் நடைபெற்ற மற்றும் நடைபெற்று கொண்டிருக்கின்ற சித்தாந்த தாக்குதல்களில் முன்கள போராளிகளாக போராடுவதோடு தங்கள் உயிரையும் தியாகம் செய்துக் கொண்டிருப்பவர்கள் கம்யூனிஸ்டுகள் தான் என்பதை பா.ரஞ்சித் வகையறாக்கள் தெரிந்துக் கொள்ள வேண்டும்.
மதுரையில் தலித் ஒடுக்குமுறை விடுதலை முன்னணியின் சார்பில் அகில இந்திய மாநாடு 3 நாட்கள் நடைபெற்றது. நிறைவு நாளில் பழங்காநத்தத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி விஜயன் உடன் மேடையில் நீங்களும் இருந்தீர்கள் என்பதை நீங்கள் மறக்கலாம் ஆனால் நாங்கள் மறக்கவில்லை அந்த கூட்டத்தில் கேரள முதல்வர் தோழர் பினராயி அவர்கள் பேசியதை நினைவு கூர்கிறோம்.
பாரதிய ஜனதா ஆட்சியில் தலித்துகள் மீதான தாக்குதல் அதிகரித்துவிட்டது. இந்தியாவில் 18 நிமிடங்களுக்கு ஒருமுறை சாதிய ஒடுக்குமுறை நடக்கிறது. ஒவ்வொரு நாளும் 3 தலித்துகள் பாலியல் தொந்தரவுக்கு ஆளாக்கப்படுகிறார்கள். 2 பேர் கொல்லப்படுகிறார்கள்.
தேசிய குற்ற ஆவணங்கள் அடிப்படையில் கடந்த 2012-ல் 33 ஆயிரம் பேர் மீதும், 2015-ல் 45 ஆயிரம் பேர் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டு இருக்கிறது. தொடர்ந்து இந்த எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
பொருளாதாரம், வேலை வாய்ப்பிலும் தலித்துகள் பின்தங்கி உள்ளனர். அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கவில்லை. மத்தியில் பாரதிய ஜனதா ஆட்சி அமைந்த பிறகு மத்திய பட்ஜெட்டில் தலித்துகளுக்கான வளர்ச்சி நிதி குறைக்கப் பட்டுள்ளது. தலித் பெண்கள் வளர்ச்சிக்கு ஒரு சதவீத நிதி கூட ஒதுக்கப்படவில்லை.
மேலும் தலித்துகளுக்கு எதிரான தாக்குதல் தொடர்பான வழக்குகளில் விதிக்கப்படும் தண்டனையும் குறைந்து வருகிறது. சாதிய அமைப்பு முறையை ஒழிப்பதே கம்யூனிஸ்டு கட்சியின் முக்கிய நோக்கமாகும்.
முற்போக்குவாதிகள் சாதி ஒடுக்குமுறையை எதிர்க்கின்றனர். ஆர்.எஸ்.எஸ். சாதி அமைப்புகளை வலுப்படுத்தி வருகிறது. சாதிய ஒடுக்குமுறைகளை ஒழித்து மனித நேயத்தை வளர்க்க முன் வரவேண்டும்.
இவ்வாறாக தோழர் பினராய் உரை நிகழ்த்திய போது ஒரே மேடையில் வீற்றிருந்து கைதட்டி வரவேற்றதை மறந்தது வரலாற்று பிழை என்பதை பா.ரஞ்சித் உணர வேண்டும். வரலாறு நெடுக ஆளும் வர்க்கங்களின் அடக்குமுறைகளை எதிர்கொண்டே கம்யூனிஸ்ட் கட்சி வளர்ந்திருக்கிறது.
கீழ் வெண்மணி, வாச்சாத்தி, உத்தபுரம் உள்பட தமிழகத்தில் இன்று வரை தலித் மக்கள் மீது நிகழ்த்தப்படும் வன் கொடுமைகளுக்கு எதிராகவும், தலித் மக்களுக்கு, மற்ற சாதியினரைப் போல உரிமையோடு வாழ்வதற்கு களப் போராட்டம், சட்டப் போராட்டம் நடத்தி உறுதியுடன் களமாடி வருவதும் கம்யூனிஸ்ட் கட்சி தான்.
சாணிப் பால் சாட்டையடிக்கு எதிராகவும், மற்றும் பல வடிவங்களிலான தீண்டாமைக் கொடுமைகளுக்கு எதிராகவும் தமிழகம் முழுவதும் தலித் மக்களை கிளர்ந்தெழ செய்ததோடு நிலச்சுவான்தாரர்கள், குண்டர்கள் உங்களை சாட்டையால் அடித்தால், நீங்கள் திருப்பி அடியுங்கள்’ என்று தலித் மக்கள் மத்தியில் தோழர் பி.சீனிவாசராவ் முழக்கமிட்ட போராட்ட வரலாற்றை இன்றும் தஞ்சை மாவட்டத்தில் அறிய முடியும் ஆனால் நீலம் பண்பாட்டு மையம் அறியாதது அவர்களின் அரசியல் அறியாமை.
இந்தியா முழுவதும் உள்ள பிற்படுத்தப்பட்ட மக்களில் 70 சதவிகிதம் பேர் உழைப்பாளிகள். கிராமப்புறத்தில் வாழ்ந்து வரும் தாழ்த்தப்பட்ட மக்களில் 88 சதவிகிதம் பேர் விவசாயத் தொழிலாளர்களாகவும் கிராமப்புற உழைப்பாளிகளாகவும் உள்ளனர்.
இவர்கள் நகர்ப்புறங்களிலும் உழைப்பாளிகளாக இருந்து வருகிறார்கள். தொழிலாளர்களாக தன் உழைப்பை விற்று கொண்டிருக்கும் இவர்களில் பிற்படுத்தப்பட்ட மக்களும் தாழ்த்தப்பட்ட மக்களும் இணைந்து தான் உள்ளனர் என்பதை ஆளும் வர்க்கங்கள் புரிந்து கொண்டு பிரித்தாளும் சூழ்ச்சியை ஒரு கொள்கை திட்டமாக செயல்படுத்தி வருகிறார்கள்.
தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை சீர்குலைக்க பலவழிகளில் முயன்று வரும் இந்திய முதலாளித்துவ ஆளும் வர்க்கங்கள் தங்களுக்கு ஆதரவான அடையாள அரசியலை வளர்த்தெடுப்பதோடு தொழிலாளர்களை ஒன்றிணையாமலும் பார்த்துக் கொள்கிறார்கள்.
பாசிஸத்தின் கொடுங்கோல் ஆட்சியில் ஜனநாயகம் கேள்விகுறியாகும் காலத்தில் சாதி ஒழிப்பு பற்றியும் அம்பேத்கரியம் பற்றியும் பேசுகிற, பா.ரஞ்சித் போன்ற வகையறாக்கள் பாசிஸத்திற்கு ஆதரவாகவும் முதலாளித்துவத்திற்கு பலம் சேர்க்கும் வகையிலும் மார்க்ஸ், அம்பேத்கர், பெரியார் இயக்கங்கள் இணைந்து நடத்தும் சமூக மாற்ற போராட்ட களத்தில் விரிசல்களை ஏற்படுத்தும்
நோக்கத்தோடும் தெரிந்தே நீலம் பண்பாட்டு மையம் கம்யூனிஸ்டுகளை விமர்சனம் செய்திருப்பது என்பது யாரை திருப்திபடுத்துவதற்காக என்பதை காலம் உணர்த்தும்.
ஜனநாயக நாட்டில் விமர்சனம் செய்ய அனைவருக்கும் உரிமை உண்டு. அதேசமயம் பா. ரஞ்சித் வகையறாக்கள் கம்யூனிஸ்டுகளின் போராட்டங்களையும் கடந்த கால வரலாறுகளையும் நினைவில் நிலை நிறுத்திக் கொள்வது மிக அவசியம்.
தொழிலாளி வர்க்கத்தில் புரையோடி கொண்டிருக்கும் சாதிப் பிரிவுகளை களைந்து அனைவரையும் தொழிலாளர்களாக அணிதிரட்டி அடையாள அரசியலின் சூட்சமத்தை தொழிலாளி வர்க்கத்திற்கு அறிய செய்வது காலத்தின் கட்டாயம்.
முதலாளித்துவத்திற்கு எதிராக தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமையை உருவாக்க வேண்டியது இன்றைய நமது பிரதான கடமை என்பதை இனியாவது பா.ரஞ்சித் வகையறாக்கள் புரிந்துக் கொண்டு நீலம் காவியாக உருமாறாமல் சமூக மாற்றத்திற்காக,வர்க்க விடுதலைக்காக களமாட அறைகூவல் விடுக்கிறோம்.
- ப.மீனாட்சி சுந்தரம்