அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் தேசியக் குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. தேசியக் குழு கூட்டத்தில் இலங்கையின் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தின் மாணவர் தலைவர்கள், இலங்கை ராணுவத்தால் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தியும் தீர்மானம் ஒன்று ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் வருமாறு:

2012 நவம்பர் இறுதி வாரத்தில் யாழ்ப்பாண பல்கலைக் கழகத்தில் பயிலும் 12 தமிழ் மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். யாழ்ப்பாணம் பல்கலைக் கழக வளாகத்தில் நவம்பர் 27 அன்று இவர்கள் தியாகிகள் நினைவாக தீபம் ஏற்றியதாக அவர்கள் மீது குற்றச்சாட்டு கூறப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, அவர்களில் 8 பேர் விடுதலை செய்யப்பட்டனர். யாழ்.பல்கலைக் கழக மாணவர் பேரவைத் தலைவர் வி.பவானந்தன், பேரவையின் செயலாளர் பி.தர்சானந்த், கலைத் துறையைச் சார்ந்த மாணவர் தலைவர் கே.ஜெயமோஜெயந்த், அறிவியல் துறையைச் சார்ந்த மாணவர் தலைவர் கே.சாலமன் ஆகியோர் தொடர்ந்து காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்து கடவுளான சிவனை வழிபடுவதற்காக கார்த்திகை தீபம் ஏற்றியதாக மாணவர்கள் கூறுகின்றனர். ஆனால் ராணுவமோ, போரில் மரணமடைந்த விடுதலைப் புலிகளுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக தீபம் ஏற்றியதாகக் குற்றம் சாட்டுகிறது.

மாணவர் தலைவர்கள் கைது செய்யப்பட்டு, சிறைப்படுத்தப்பட்டுள்ளதை யாழ்ப்பாண பல்கலைக் கழக நிர்வாகம், கண்டி பல்கலைக் கழகம், கிழக்கு பல்கலைக் கழகங்கள் ஆகியவை கண்டித்துள்ளன. மாணவர் தலைவர்களை விடுவிக்கக் கோரி யாழ் பல்கலைக் கழக மாணவர்கள் கடந்த ஒருமாத காலமாக வகுப்புக்களைப் புறக்கணித்து வருகின்றனர்.

இலங்கை பாதுகாப்பு துறை செயலாளர் கோத்தபய ராஜபக்சே மாணவர்களை விடுதலை செய்ய தொடர்ந்து மறுத்து வருகின்றார். இலங்கையில் மனித உரிமை மீறல்களும், நபர்கள் காணாமல் போவதும் தொடர்ந்து நடைபெறுகிறது. ஜனவரி 2009 முதல் மே- 2009 வரை ஈழப் போரின் இறுதிக் கட்டத்தில் நடைபெற்ற மனித உரிமை மீறல்கள் குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பே கண்டித்துள்ளது. யாழ் பல்கலைக்கழக மாணவர்களை இலங்கைராணுவம் கைது செய்து சிறையில் அடைத்து வைத்துள்ளதை அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் கண்டிப்பதோடு, அவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்துகிறது.

மாணவர்களை விடுதலை செய்ய இந்திய அரசு, இலங்கை அரசை வலியுறுத்த வேண்டும். இலங்கை ராணுவம் யாழ்.பல்கலைக் கழக வளாகத்தை ஆக்கிரமித்து அதனை தனது படை வீடாக மாற்றியுள்ளது. விசாரணை என்ற பெயரில் இலங்கை ராணுவம் தொடர்ந்து தமிழ் மாணவர்களுக்கு தொல்லை தந்து வருகிறது. மாணவர்கள் அதிக அளவில் துன்புறுத்தப்படுகின்றனர். நுண்கலைத் துறையில் பயிலும் ஒரு மாணவி, இத்தகைய விசாரணைக்குப் பின் தற்கொலை செய்து கொண்டுள்ளார். அந்த மாணவியின் பெற்றோர்கள் இது கொலை எனக் குற்றம் சாட்டுகின்றனர். ஆனால், இது குறித்து எந்த விசாரணையும் நடத்தப்படவில்லை.

தமிழர்கள் அதிகமாக வாழும் வடக்குப் பகுதியில் ஏற்கெனவே 6 தமிழர்களுக்கு ஒரு ராணுவத்தினர் என்ற அடிப்படையில் ராணுவ வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இலங்கை அரசு, அனைத்து பள்ளிகள், இதர கல்வி நிறுவனங்கள் ஆகியவற்றிலிருந்து, குறிப்பாகத் தமிழ் மக்கள் அதிகம் வாழும் வடக்கு கிழக்கு மாகாணங்களிலிருந்து தனது ஆயுதப் படைகளை வாபஸ் பெற்று, கல்வி நிலையங்கள் செயல்பட அனுமதிக்குமாறு அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இலங்கை அரசை கோருகிறது. இலங்கை அரசு தனது ஆயுதப்படைகளை பள்ளிகள், இதர கல்வி நிறுவனங்களிலிருந்து திரும்பப் பெற இந்திய அரசு வலியுறுத்த வேண்டும் என அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் இந்திய அரசை வலியுறுத்துகிறது.

Pin It