ஆச்சரியப்பட வேண்டாம்! எது நடந்தாலும் அது ஏற்கனவே பழங்காலத்தில் இருந்த எங்கள் முனிபுங்கவர்களுக்குத் தெரியும் என்றும், அது எங்கள் புனித நூல்களில் உள்ளது என்றும் சனாதனவாதிகள் கூறுவது போல், புத்தர் புவி வெப்ப உயர்வைப் பற்றி அறிந்திருந்தார் என்றோ, அதற்கான தீர்வை அன்றே கூறிவிட்டார் என்றோ நிச்சயமாகச் சொல்லப் போவதில்லை. புத்தர் சமூக மாற்றத்திற்காகப் போராடியபோது இருந்த சமூகச் சூழலுக்கும் இன்றைய புவி வெப்ப உயர்வுக்கும் ஓர் ஒப்புவுவமை இருக்கிறது.
 
           "யாகங்களினால் ஒரு நரை மயிரைக் கரு மயிராக்கவும் முடியாது" என்று பெரியார் கூறி இருந்தாலும், யாகங்களினால் இந்த உலகையே மாற்ற முடியும் என்று தொடர் ஏமாற்றங்களுக்குப் பிறகும் பலர் நம்பிக் கொண்டு இருக்கிறார்கள்; நம்ப வைத்துக் கொண்டும் இருக்கிறார்கள். அப்படிப்பட்ட யாகங்களைப் பற்றி ஒரு சில உண்மைகளைப் புரிந்து கொள்ள வேண்டும்.
 
          இன்று ஒருவருக்கு நல்ல வேலை கிடைக்கிறது; அல்லது தேர்வில் சிறந்த முறையில் வெற்றி பெறுகிறார்; அல்லது மகிழ்ச்சிகரமான நிகழ்வு ஏதாவது நடக்கிறது என்று வைத்துக் கொள்வோம். நண்பர்களும் சுற்றத்தினரும் அவரிடம் விருந்து கொடுக்கும்படி கேட்கிறார்கள் அல்லவா? அவரும் விருந்து கொடுக்கிறார் அல்லவா? (சில சமயத்தில் விரும்பாவிட்டாலும் விருந்து தர வேண்டிய கட்டாயத்திற்கும் உள்ளாவதும் உண்டு) அதற்கு என்ன செய்கிறார்கள்? அவரவர் வசதிக்கு ஏற்ப வீட்டிலோ, சாதாரண தேனீர்க் கடையில் இருந்து ஐந்து நட்சத்திர ஹோட்டல் வரையிலும் எங்காவது விருந்து விழா கொண்டாடப்படுகிறது.
 
          இதே போன்ற நிகழ்வுகள் பழங்காலச் சமூகத்தில் எப்படி நடந்து இருக்கும்? அது தான் யாகம். அரசர்களோ மற்ற செல்வந்தர்களோ, விரும்பியோ விரும்பாமலோ மற்றவர்களுக்கு அளித்த விருந்து தான் இந்த யாகம். இந்த யாகங்களில் ஆடு, மாடு, குதிரை போன்ற மிருகங்களைக் காவு கொடுப்பார்கள். பின் அவற்றின் இறைச்சியை நெய்யில் தடவி, யாக நெருப்பில் சுட்டு உண்பார்கள். இன்றைய விருந்துகளில் மதுபானங்கள் இடம் பெறுவது போல அன்றைய விருந்துகளில் அதாவது யாகங்களில் சோமபானம், சுராபானம் போன்ற மதுபானங்களைப் பருகும் வழக்கம் இடம் பெற்று இருந்தது.
 
          இப்படிப்பட்ட விருந்தளித்தல் அதாவது யாகங்கள் செய்தல் என்பது அளவிற்கு அதிகமாக போனபோது, காவு கொடுக்கப்படும் கால்நடைகளின் எண்ணிக்கையும் அதிகமானது. இது எந்த அளவிற்குச் சென்றது என்றால், விவசாயத்திற்குத் தேவைப்படும் கால்நடைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டு, விவசாயமே நலிந்து போகும் அளவிற்குச் சென்றது. இதன் தொடர் விளைவாக, சமூக இயக்கம் தடைபடுவது பற்றிய கவலை அரசர்களை வாட்டிக் கொண்டு இருந்தது. அவர்கள் யாகங்கள் செய்வதைக் குறைக்க வேண்டும் என்று எண்ணத் தலைப்பட்டனர்.
 
          யாகங்கள் செய்வது குறைந்தால் தங்களுடைய வாழ்க்கைத் தரம் குறைந்து விடும் என்று அஞ்சிய பார்ப்பனர்கள், யாகங்களைச் செய்யாவிட்டால் தீமைகள் உண்டாகும் என்று அச்சுறுத்தினார்கள். பார்ப்பனர்களின் அச்சுறுத்தலுக்கும் விவசாயம் அழிந்து கொண்டு இருக்கும் யதார்த்தத்தின் அச்சுறுத்தலுக்கும் இடையில் அரசர்கள் மாட்டிக் கொண்டு விழித்துக் கொண்டு இருந்தார்கள். பார்ப்பனர்களின் அச்சுறுத்தலுக்கு எதிராக ஒரு வலுவான கருத்தியலின் தேவை வலுவாக உருவாகி இருந்தது.
 
          தேவை தான் கண்டுபிடிப்புகளின் தாய் (Necessity is the mother of invention) என்ற வாசகம் இயற்கை அறிவியலுக்கு மட்டும் அன்றி சமூக அறிவியலுக்கும் பொருந்தும். விவசாயம் அழிவுப் பாதையில் செல்வதன் தொடர்ச்சியாக சமூகமே அழிவுப் பாதையில் சென்று கொண்டு இருப்பதைத் தடுக்க வேண்டுமானால் முதலில் யாகங்கள் செய்வது தடுக்கப்பட வேண்டும் என்ற சூழலில் தான், சமூகப் போராட்டத்தில் புத்தர் புகுந்தார்.
 
          யாகங்கள் செய்யக் கூடாது என்று புத்தர் கூறியபோது, யாகங்கள் செய்யாவிட்டால் கடவுளின் கோபத்திற்கு ஆளாக நேரிடும் என்று பார்ப்பனர்கள் அச்சுறுத்தினார்கள். புத்தரோ கடவுளின் இருப்பையே மறுத்தார். பார்ப்பனர்கள் சுற்றி வளைத்து எப்படி எப்படி வினவினாலும், மிக உயர்ந்த ஞானம் படைத்த புத்தர் நேரடியாகவும் எளிமையாகவும் அனைவருக்கும் புரியும்படியாக விடையளித்தார். பார்ப்பனர்கள் விவாதத்தில் புத்தரை வெல்ல முடியவில்லை என்பது அல்ல; போட்டியிடக் கூட முடியாமல் திணறினார்கள்.
 
          பார்ப்பனர்களின் யாகத்திற்கு எதிரான வலுவான கருத்தை புத்தர் வைத்த உடன், மனதளவில் உடன்பட்டாலும் உடன்படாவிட்டாலும் சமூக இயக்கம் உயிர்ப்புடன் இருக்கும் பொருட்டு புத்தரின் அறிவுரையைப் பின்பற்றியே தீர வேண்டிய கட்டாயத்தில் அரசர்கள் இருந்தனர்; பின்பற்றவும் செய்தனர். யாகங்கள் செய்வது மிக மிக ....மிகப் பெருமளவு நிறுத்தப்பட்டு விட்டது. அதனால் கால்நடைகளைக் காவு கொடுப்பதும் நிறுத்தப்பட்டு விட்டது. அதன் தொடர் விளைவாக விவசாயம் நலிவுப் பாதையில் இருந்து செழுமைப் பாதைக்குத் திரும்பியது. சமூக இயக்கத்தின் உயிர்ப்புத் தன்மை தொடர்ந்தது.
 
          சரி! இப்பொழுது இன்றைய சூழலுக்கு வருவோம். இன்று புவி வெப்ப உயர்வு பற்றி அனைவரும் அறிவர். இதற்குக் காரணம் நம்முடைய செயல்பாடுகளினால் கரியமில வாயுவையும் பச்சை வீட்டு வாயுக்களையும் அளவிற்கு மீறி உமிழ்வது தான் என்பதும் தெரியும்.
 
          இன்றைய கால கட்டத்தில் நமது செயல்பாடுகளை வழி நடத்துவதும் கட்டுப்படுத்துவதும் எது? அது நமது முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறை தான். இம்முறையில் என்னென்ன பொருட்களை உற்பத்தி செய்தால் சந்தையில் விற்று இலாபம் சம்பாதிக்க முடியுமோ அப்பொருட்களை உற்பத்தி செய்வதில் தான் ஊக்கம் இருக்கும். ஊக்கம் இருக்கும் என்பதை விட அப்பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்று கடுமையான வற்புறுத்தலும் இருக்கும். ஆயுதங்கள், வாகனங்கள், குளிர் சாதனங்கள் போன்ற பொருட்களை உற்பத்தி செய்வதில் அதிக இலாபம் கிடைப்பதால் அவற்றின் உற்பத்தி நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டு இருக்கிறது. இவற்றின் பயன்பாடு கரியமில வாயுவையும்  பச்சை வீட்டு வாயுக்களையம் மேலும் மேலும் உமிழ்வதிலும், அதன் விளைவாக புவி வெப்பம் மேலும் மேலும் உயர்வதிலும் இட்டுச் செல்கிறது.
 
          புத்தர் காலத்தில் சமூக இயக்கம் தொடர்வதற்கு யாகங்கள் செய்வது நிறுத்தப்பட வேண்டும் என்று இருந்தது போல், இன்று புவி வெப்பம் உயராமல் தடுப்பதற்கு சந்தைப் பொருளாதார முறையிலான உற்பத்தி முறை உடனடியாக நிறுத்தப்பட வேண்டி இருக்கிறது. அதோடு மட்டுமின்றி சந்தைப் பொருளாதார முறையின்படி நஷ்டம் வரும் என்பதால் ஆர்வம் காட்டப்படாத விவசாயத்தையும் மரம் வளர்த்தலையும் பெரும் அளவில் முன்னெடுப்பது ஏற்கனவே உயர்ந்து இருக்கும் புவி வெப்பததைக் குறைக்கும் பொருட்டு அவசியமாகிறது. இப்பணிகளை முதலாளித்துவப் பொருளாதார முறையில் நினைத்துப் பார்க்கவும் முடியாது. சோஷலிச முறையில் தான் முடியும். ஆகவே முதலாளித்துவப் பொருளாதார முறையை உடனடியாக ஒழித்துக் கட்டுவது அரசியல்வாதிகளின் முதன்மையான கடமையாகிறது.
 
          புத்தர் காலத்திலும் கேளிக்கைகளின் மீது ஆர்வம் கொண்டிருந்த சில அரசர்கள் யாகங்கள் செய்வதைத் தொடர விரும்பினாலும், விவசாயத்தை அழிவுப் பாதையில் இருந்த மீடக வேண்டிய கட்டாயத்தினால் புத்தரின் வழியைப் பின்பற்ற வேண்டி இருந்தது. அது போலவே உழைக்கும் வர்க்கத்தை அடிமை கொள்ளும் ஆசை இருந்தாலும் இப்புவியை அழிவில் இருந்து காப்பாற்ற வேண்டும் என்றால் முதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறையைக் காவு கொடுத்தே தீர வேண்டும். சோஷலிச முறையில் குறைபாடுகள் இருப்பதாக நினைப்பவர்களும் அக்குறைபாடுகளைக் களைந்து செயல்பட வேண்டி இருக்குமே ஒழிய முதலாளித்துவப் பொருளாதார முறையைத் தொடர முடியாது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். புத்தர் காலத்தில் யாகங்கள் ஒழிக்கப்பட்டதால் ஆதிக்க வர்க்கத்தினரின் சுகங்கள் காவு வாங்கப்பட்டது போல இப்பொழுது உழைக்கும் வர்க்கத்தை அடிமை கொள்ளும் சுகங்களைக் காவு கொடுத்தே ஆகவேண்டும். இதற்கு முன் வராத அரசியல்வாதிகளை அரசியல் களத்தை விட்டே மக்கள் விரட்ட வேண்டும்.
 
- இராமியா

Pin It