இந்தியா விடுதலை அடைந்த உடன் ஏற்பட்ட வகுப்புக் கலவரங்களும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்ட பாகிஸ்தான் பிரிவினையும் இந்திய அரசமைப்புச் சட்டத் தின் அடிப்படைத் தன்மைகளையே மாற்றும் சூழலை ஏற்படுத்தின. 1945-இல் ‘அமைச்சரவைக் குழு’ (Cabinet Mission) அளித்த அரசமைப்புச் சட்டம் முழுமையான மாநிலங்களுக்கான சுயாட்சிக் கூறுகளை உள்ளடக்கியது. ஆனால், இந்திய அரசமைப்புச் சட்டம் ஓர் அரசமைப்புச் சட்ட அவையால் உருவாக்கப்பட்டது.
இது முழுமையான எல்லோரும் வாக்களித்துத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்ட மன்றங்களால் உருவாக்கப்பட்டதல்ல. அண்மையில் ஏராளமான ஆய்வாளர்கள் இந்திய அரசமைப்புச் சட்டத்தை வடிவமைத்ததில் பெரும் பங்காற்றியவர்கள் ஆதிக்க சமுதாயத்தினர் என்பதைச் சுட்டிக்காட்டி வரு கின்றனர். இன்றைக்கு மாநிலங்களின் உரிமைகள் ஒவ்வொன்றாகப் பறிக்கப்பட்டு வருகின்றன.
இந்திய அரசமைப்புச் சட்டம் இதற்கு முழுமையாகத் துணைபோகின்றது என்பதைப் பல தரவுகளுடன் சுட்டி வருகின்றனர். முதலமைச்சர் ஒரு மாநிலத்தின் முழு அளவிலான அதிகாரத்தைப் பெற்றவர் என்கிற கருத்துகள் சிதைக்கப்பட்டு வருகின்றன. காங்கிரசு ஆட்சிக் காலத்தில் 1967 வரை ஒன்றிய அரசிலும், மாநிலங்களிலும் காங்கிரசுக் கட்சியின் ஆட்சியே இருந்ததன் காரணமாகப் பல பிரச் சனைகள் வெளிவரவில்லை.
பிரதமர் நேரு செல்வாக்குப் பெற்ற தலைவராக இருந்ததாலும் அவர் காங்கிரசு முத லமைச்சர்களின் ஆளுமையை அடக்கி வைத்திருந்தார் என்பதற்கான தரவுகளும் வெளிவருகின்றன. சான்றாக, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தத்தின் முன்பு பல கருத்துகள் முன்வைக்கப்பட்டன. “உச்ச நீதி மன்றம் அளித்த தீர்ப்பே இறுதியானது.
அந்தத் தீர்ப்பை ஏற்று நாடாளுமன்றம் நாட்டின் அரசுரிமையைக் காப் பாற்ற வேண்டும்” எனப் பல சட்ட வல்லுநர்கள் குறிப்பிட் டிருந்தனர். சான்றாக, சென்னை மாகாணத்தின் அன்றைய முதல்வராக இருந்த குமாரசாமி ராஜா, நேருவுக்கு “இட ஒதுக்கீட்டு ஆணையை நடைமுறைப்படுத்த இந்திய அரசமைப்புச் சட்டத்தை மாற்றவேண்டும்” என ஒரு மடல் எழுதினார். நேரு, இடஒதுக்கீட்டுக்கு ஆதரவாகக் குமாரசாமி ராஜா அளித்த மடலை நிராகரித்ததோடு “இதைப் பற்றி மீண்டும் பிரச்சனை எழுப்பக்கூடாது” எனப் பதிலளித்தார்.
ஆனால், தமிழ்நாட்டில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, காங்கிரசுச் சட்டமன்ற உறுப்பினர்கள் கொடுத்த தொடர் அழுத்தத்தினால்தான் அரசமைப்புச் சட்டத்தின் முதல் திருத்தம் 1951-இல் ஏற்கப்பட்டது. அப்போதுகூட “சமுதாயத்தில் முன்னேறிய பிரிவினரையும் இணைப்பதற்கு சமூக, கல்வி நிலைகளில் பின்தங்கிய நிலைமைகளை எடுத்துக் கொள்ளாமல் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களையும் எடுத்துக் கொள்ள வேண்டும்” எனப் பலர் வாதிட்டனர்.
ஆனால், அன்றைக்குச் சட்ட அமைச்சராக இருந்த அண்ணல் அம்பேத்கர், “கல்வி, சமூக நிலைகளில் பின்தங்கியவர் களைத்தான் அளவீடாக எடுத்துக்கொள்ள வேண்டும்” என வலியுறுத்தினார். இதன் காரணமாகத்தான் ‘பொருளா தாரத்தில் பின்தங்கியோர்’ என்ற நிலை - சொற்றொடர் இடம் பெறவில்லை.
2019-இல் பாஜக ஆட்சியில் நடந்தது என்ன?
இப்போது 2019-இல் மீண்டும் பொருளாதாரத்தில் பின் தங்கிய நிலையின் அடிப்படையில் முற்பட்ட சமூகத்தின ருக்கு 10 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்கும் சட்டத் திருத்தம் நிறைவேறியது. “இந்தத் திருத்தம் 1951ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட முதல் சட்டத் திருத்தத்திற்கு எதிரானது” என வழக்குத் தொடர்ந்தும் உச்சநீதிமன்றம் இதற்குத் தடையாணையை இன்றுவரை வழங்கவில்லை.
இதற்குக் காரணம் பாஜக ஆட்சியின் அமைச்சரவையில் 90 விழுக்காடு பார்ப்பனராகவும் உச்சநீதிமன்றத்தில் 95 விழுக்காட்டிற்குமேல் நீதிபதிகளாகப் பாரப்பன உயர்சாதியினரே இருப்பதாலும் ஓர் அரசமைப்புச் சட்டத்தின் விதியை மதிக்காமல் சட்டம் இயற்றப்பட்டது. நேரு காலத்திலும் காங்கிரசிலிருந்த உயர் சாதித் தலைவர்கள் இதே நிலையை வலியுறுத்தினர்.
ஆனால், தந்தை பெரியார் பேரறிஞர் அண்ணா, தலைவர் காமராசர், குமாரசாமி ராஜா உட்பட காங்கிரசுச் சட்டமன்ற உறுப்பினர்கள் வலியுறுத்தி யதன் காரணமாகத்தான் இந்த உயர் சாதியினரின் சதி அன்று முறியடிக்கப்பட்டது.
அண்மையில் மைக்கேல் ஜே.சேன்டல் என்ற ஆய் வாளர் ‘தகுதி ஒரு கொடுங்கோன்மை’ (The Tyranny of Merit, 2020) என்ற நூலில், கல்வியில் வருமானம் செல்வ ஏற்றத்தாழ்வில் இன்றைய அமெரிக்காவில் காணப்படுகிற கொடுமைகளைச் சுட்டிக்காட்டி “தகுதி எனப் பேசுவது ஒரு கொடுங்கோன்மை” எனக் கூறுகிறார்.
இந்தக் கருத்தின் அடிப்படையில்தான் நீதிக்கட்சித் தலைவர்களும் திரா விடர் இயக்கத் தலைவர்களும் “சாதிகளால் பிளவுபட்டு ஏற்றத் தாழ்வுகள் நிறைந்த சமூகத்தில், கல்வியை அனை வருக்கும் வழங்கவேண்டும்” என வாதிட்டனர்.
இதன் அடிப்படையில்தான் நீதிக் கட்சியின் ஆட்சியில் 1921-இல் கொண்டுவரப்பட்ட வகுப்புவாரி இடஒதுக்கீடு அரசாணை 1927-இல் நடைமுறைக்கு வந்தது.
1951-இல் குமாரசாமி ராஜா சென்னை மாகாணத்தில் நிலவிய சமூகச் சூழலைக் கருத்தில் கொண்டுதான் நேருவுக்கு இடஒதுக்கீட்டை மீண்டும் கொண்டுவர மடல் எழுதினார்.
1920-களில் சென்னை மாகாணத்தில் காங்கிரசு இயக்கத்தில் பார்ப்பனர்கள் நிறைந்திருந்ததனால்தான் நீதிக்கட்சி ஆணையை அவர்கள் எதிர்த்தார்கள். இதன் காரணமாகத்தான் தந்தை பெரியார் காங்கிரசை விட்டு 1925-இல் வெளியேறும் நிலை ஏற்பட்டது. இன்று தனிப் பெரும்பான்மையோடு ஒன்றிய அரசை ஆளுகின்ற பாஜக ஆட்சியில் பார்ப்பனர்கள் தங்களின் மேலாதிக்கத் தன்மையை மீண்டும் வலியுறுத்தி இடஒதுக்கீடு ஆணை யைச் சிதைக்கும் வேலையை நடத்தி வருகின்றனர்.
இதரப் பிற்பட்ட சமூகத்தினருக்கு அகில இந்திய அளவில் வேலை வாய்ப்பு மற்றும் உயர் கல்வியில் வழங்கப்பட்ட - சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்கால் கொண்டு வரப்பட்ட 27 விழுக்காடு இடஒதுக்கீடு ஆணையை முழு அளவில் எல்லாத் தளங்களிலும் கடந்த 6 ஆண்டுகளாகச் சிதைத்து வருகின்றது, ஆதிக்கச் சாதியினர் கட்டுப்பாட்டில் இயங்கும் பாஜக ஆட்சி.
ஆய்வாளர் மைக்கே லின் ‘தகுதி ஒரு கொடுங் கோன்மை’ என்ற நூலில் குறிப்பிடுகின்ற ஏற்றத் தாழ் வுகள் சந்தைப் பொருளா தாரத்தினால் ஏற்பட்டு விட் டது எனக் குறிப்பிடுகிறார்.
இந்தியாவில் சந்தைப் பொருளாதாரமும் அதை ஆட்டிப்படைக்கின்ற முத லாளித்துவ உயர் பிரிவின ரும் சமூகத்தில் ஆதிக்கம் செலுத்துகிற உயர்சாதிக் கும்பல்களும் இணைந்து வருணாசிரம முறையை மீண்டும் புகுத்துவதற்குப் பெருமளவில் முயற்சி களைச் செய்து வருகின்றனர்.
சந்தைப் பொருளாதாரத்தின் ஒரு கூறாகத்தான் தனியார் மருத்துவப் பல்கலைக்கழகங்களும் கல்லூரி களும் வளர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது தமிழ்நாட்டு அரசுப் பள்ளிகளில் படித்து நீட் நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு 7.5 விழுக்காடு தனி இடஒதுக்கீடு அளிக்கப்பட்டது. இதன் காரணமாக மருத்துவக் கல்லூரிகளின் 405 இடங்களில் தகுதி பெற்ற மாணவர்கள் (313 பொது மருத்துவம்; 92 பல் மருத்துவம்) இடம்பெறுகின்றனர்.
இந்த மாணவர்கள் பட்டியலில் 82 மாணவர்களுக்குச் சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் ஒதுக்கீடு அளிக்கப்பட்டுள்ளது. இவர்கள் ரூ.6 லட்சம் முதல் 7 இலட்சம் வரை ஆண்டுக் கட்டணம் செலுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டார்கள். தி.மு.க தலைவர் ஸ்டாலின் அம் மாணவர்களின் கல்விக் கட்டணத்தை தி.மு.கழகமே முழுமையாகச் செலுத்தும் என அறிவித்தார்.
இந்த அறிவிப்பு வந்த 6 மணி நேரம் கழித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி கல்விக் கட்டணத்தை அரசே ஏற்றுக் கொள்ளும் என அறிவித்தார். இந்த 82 அரசுப் பள்ளி மாணவர்களின் ஏழ்மை நிலை ஏற்றத்தாழ்வைச் சுட்டு கிறது. ஏழையாக இருந்தும் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மருத்துவக்கல்லூரிகளில் இடம்பெற அதிக அளவு கல்விக் கட்டணம் செலுத்தமுடியாத நிலையை உருவாக்கியது. இது நீட் தேர்வு முறையில் உள்ள மற்றொரு முரண்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது.
கல்வித் தகுதி இருந்தும் நீட் தேர்வில் வெற்றி பெற்றும் அரசுப் பள்ளிகளில் பயின்ற பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப் பட்ட சமூகத்தைச் சார்ந்த மாணவர்கள் இடம்பெற முடியாத சூழல் இருப்பதனால் நீட் தேர்வை முழுமையாக நீக்குவதுதான் உண்மையான சமூகநீதியை உயர்த்திப் பிடிக்கும் என்ற உண்மையையும் வெளிப்படுத்தி விட்டது.
மேலும், பொருளாதாரச் சரிவின் காரணமாகக் கடந்த 6 மாதங்களாகப் பள்ளிகளில் சத்துணவு நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஏழை எளிய குடும்பத்து மாணவர் களுக்குச் சத்துணவில் வழங்கப்பட்ட முட்டைகளும் வழங்கப்படவில்லை. அண்மையில் வெளிவந்த ஆய்வு புள்ளிவிவரத்தின்படி “முட்டையோடு சத்துணவு வழங்கப் படாத காரணத்தினால் குழந்தைகளுக்குப் புரதச்சத்து குறைபாடுகளும் மூளை வளர்ச்சியைப் பாதிக்கின்ற போக்கும் பெருகிவருகிறது” என்ற அதிர்ச்சித் தகவலும் வெளிவந்துள்ளது.
தமிழக அரசு இந்தப் புள்ளிவிவரங்களை எல்லாம் மூடி மறைத்துவிட்டு ஊழல்களை உச்ச அளவில் செய்வதால் அமித்ஷாவிற்கு அஞ்சி நடுங்கி ஒடுங்கி அரசு கடைப் பிடிக்கவேண்டிய மரபுகளைப் புறந்தள்ளி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் விமான நிலையத்தில் அமித் ஷாவை வரவேற்கக் காத்துக்கிடந்தனர்; தமிழகத்தின் மானத்தையும் அடகு வைத்துவிட்டனர்; எம்ஜிஆர் ஜெயலலிதா ஆகியோருக்கும் துரோகம் செய்துவிட்டனர்.
கட்சிப் பெயரில் அண்ணா இருக்கிறார். கொடியில் அண்ணா இருக்கிறார். இந்த அண்ணாதான் ‘ஆரிய மாயை’ என்ற நூலை எழுதி அதற்காகச் சிறைத்தண்டனை பெற்றார். ஆனால் நடப்பது ‘ஆரிய ஆட்சி’. அதனால் தான் சமற்கிருத மொழிக்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப் படுகிறது. இந்தி மொழி திணிக்கப்படுகிறது.
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சில விளக்கங்கள் கேட்டு மடல் எழுது கிறார். அவருக்குப் பதில் முழுமையாக இந்தியில் வரு கிறது. அதேபோன்று திமுகவின் நாடாளுமன்ற மேலவை உறுப்பினர் வழக்கறிஞர் வில்சன் ஒன்றிய அரசிற்கு ஒரு மடல் எழுதுகிறார்.
அதற்குப் பதில் இந்தியில் வருகிறது. இந் நிலையில் 2011-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின்படி இந்தி தெரியாத நாடாளுமன்ற உறுப்பினர், அரசின் திட்டம் தொடர்பாக விளக்கம் கேட்டு மடல் எழுதினால் அதற்கான பதிலை ஆங்கிலத்திலும் அளிக்க வேண்டும் என்ற விதி உள்ளது.
ஆனால், இவற்றை யெல்லாம் தூக்கி எறிந்துவிட்டு ஆணவத்தோடு மீண்டும் இந்தியைத் திணிப்பது தமிழ்நாட்டு மக்களின் மொழி உரிமையைப் பறிக்கும் செயலை ஒன்றிய பாஜக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. இன்னொரு சம்பவம் இதைவிடக் கொடுமையானது. முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் அன்னையார் அண்மையில் மறைந்து விட்டார். அதற்கு இரங்கல் செய்தி மடலை இந்தியில் எழுதி அனுப்புகிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.
அரசமைப்புச் சட்ட விதிகளை மீறி 370ஆவது பிரிவின்படி காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சட்டத்தை ஒன்றிய அரசு சர்வாதிகாரமாக நீக்கியது. “370ஆவது சட்டப்பிரிவை நீக்கினால் இதற்கு காஷ்மீர் சட்ட மன்றத்தின் ஒப்புதல் தீர்மானம் தேவை” என்ற விதி அரசமைப்புச் சட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. ஆனால் நடந்தது என்ன? காஷ்மீர் மாநிலத்தின் அனைத்துக் கட்சித் தலைவர்களும் வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
உச்சநீதிமன்றத்தில் இந்தச் சட்டத்திருத்தம் செல்லாது என ஒரு வழக்கு நிலுவையில் உள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் அந்த வழக்கை இதுவரை எடுக்கவில்லை. அண்மைக்கால உச்சநீதிமன்ற நடவடிக்கைகளைப் பல முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதிகளும் முன்னாள் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகளும் விமர்சனம் செய்து வருகின்றனர்.
அர்னாப் கோசுவாமி வழக்கை ஒரே நாளில் விசாரித்து உச்சநீதிமன்றம் பிணை வழங்கியது. இந்த வழக்கில் இருதரப்பிலும் 32 வழக்கறிஞர்கள் வாதாடி யுள்ளனர். மராட்டிய மாநில அரசு தரப்பில் வாதிட்ட மூத்த வழக்கறிஞர்கள் 8 பேரும் அர்னாப் கோசுவாமி சார்பில் 24 வழக்கறிஞர்களும் ஒன்றிய அரசின் சார்பில் உதவித் தலைமை வழக்கறிஞரும் வாதிட்டது பலரை அச்சப் படுத்தியுள்ளது.
நாட்டின் முதன்மையான பிரச்சனைகளைச் சுட்டிக்காட்டி அரசை விமர்சித்த 80 வயதான வரவரராவ் உட்பட பல ஊடகத்துறையினர் சமூகச் செயற் பாட்டாளர்களுக்குப் பல மாதங்களாகப் பிணை வழங் காமல், வழக்கை விசாரணைக்கே எடுத்துக்கொள்ளாமல் உள்ளது உச்சநீதிமன்றம். இவை “சட்டத்தின் முன் அனைவரும் சமம்” என்ற அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை உரிமைகளை மீறும் செயல் எனப் பல சட்ட வல்லுநர்கள் சுட்டிக்காட்டி வருகின்றனர்.
சரிந்து வருகின்ற பொருளாதாரத்தைச் சரிக்கட்டும் நடவடிக்கைகளை ஒன்றிய அரசு எடுக்காமல் முழுத் தோல்வியைத் தழுவி வருகிறது. அதே நிலையில், அயல் நாட்டுப் பிரச்சனைகளில் ஒரு தொலைநோக்குப் பார்வை இல்லாமல் பொருளாதாரச் சரிவை மேலும் பாதகத்திற்கு உள்ளாக்கி வருகிறது.
பேரறிவாளன் விடுதலை உட்படப் பல பிரச்சனை களில் மோடி அரசு தமிழ்நாட்டையும் தமிழர்களையும் தொடர்ந்து அவமதித்து வருகிறது. தமிழக மக்கள் ஏமாளிகள் என்ற நினைப்பில் திருக்குறளை உயர்த்திப் பிடிப்பதாகவும் தமிழ்ப் பண்பாட்டையும் மதிப்பதாகவும் கூறிக்கொண்டே கீழடி அகழ்வாராய்ச்சி உட்படப் பல அகழ்வாராய்ச்சிகளின் முடிவுகளை வெளியிடாமல் தடுத்து வருகிறது.
இவ்வாறாக எல்லா நிலைகளிலும் எல்லா அமைப்பு களிலும் தோல்வியைச் சந்தித்து பன்முகத் தன்மைகளை அழித்துக் கொண்டிருக்கும் பாசிச ஆட்சி “ஒரே நாடு; ஒரே மொழி; ஒரே மதம்” என்று நாட்டைப் பிளவுப்படுத்தும் சங் பரிவாரங்களின் ஆட்சியை மக்கள் அடையாளம் கண்டு வருகின்றனர்.
இன்றைய தமிழ்நாட்டின் ஆட்சியாளர்கள் ‘அண்ணா திமுக’வை ‘அமித்ஷா திமுக’வாக மாற்றித் தமிழ்நாட்டைக் காவிகளுக்குக் குத்தகைக்கு விடலாம் என முயற்சிக்கின்றனர். சங் பரிவாரங்களின் முகத்திரையைக் கிழிப்பதற்கு இளைஞர்கள் ஒன்றுபட்டுத் தமிழ்நாட்டைக் காப்போம். விழிப்போடு செயல்படுவோம்.
- குட்டுவன்