நக்வெய்ன் மார்க்சியப் பள்ளியில் (12)

ஆசிரியர்: வெங்கடேஷ் ஆத்தரேயா

பொருளாதார நெருக்கடிகள், முதலாளித்துவ உற்பத்தி முறைக்கு மட்டும் பிரத்யேகமானவை அல்ல, ஆனால் முதலாளித்துவ உற்பத்தி முறையில் ஏற்படும் பொருளாதார நெருக்கடிகள் முரண்பாடான தன்மைகளை கொண்டுள்ளன. முதலாளித்துவத்தில் நெருக்கடி என்பது பற்றாக்குறை என்பதைக் காட்டிலும் அதீத உற்பத்தியாலே ஏற்படும் போக்கைக் கொண்டுள்ளது.

முதலாளித்துவத்திற்கு முந்தைய சமூக அமைப்புகளில், பொருளாதார நெருக்கடி என்பது பற்றாக்குறையினால் ஏற்படும். வறட்சி, வெள்ளம், பூகம்பங்கள் போன்ற இயற்கைச் சீற்றங்களால் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளில் ஏற்படும் கடுமையான பற்றாக்குறையால் உருவாகும்.

அச்சமூக அமைப்புகளில் உற்பத்தி சக்திகளின் வளர்ச்சி ஒப்பீட்டளவில் குறைந்த அளவில் இருந்தது. அதற்கு முற்றிலும் மாறாக, முதலாளித்துவத்தின் கீழ் பொருளாதார நெருக்கடிகள் மிகை உற்பத்தியால் ஏற்படுகின்றன. ஒருபுறம், குறைந்த விலையிலும் விற்க முடியாதபடி பொருட்கள் கடைகளில் குவிந்து கிடக்கின்றன. மறுபுறம், கோடிக் கணக்கான தொழிலாளர்கள் வேலையில்லாமல் இருப்பதால் அத்தியாவசியப் பொருட்களைக் கூட வாங்க இயலாத நிலையில் உள்ளனர்.

முதலாளித்துவ நெருக்கடியினால் பொருளாதார வாழ்வு சிதைவுறுகிறது, முதலாளித்துவ மறுவுற்பத்தி நடைமுறை தடைபடுகிறது. பொருளாதார நெருக்கடியினால் சமூக மூலதனத்தின் மறுவுற்பத்தி- இது தனிப்பட்ட மூலதன மறுவுற்பத்தி செயல்முறைகளின் கூடுதல் - செயல்முறை பாதிக்கப்படுகிறது.

முதலாளித்துவத்தின் ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் பல முரண்பாடுகளின் ஒருங்கிணைந்த செயல்பாட்டின் விளைவாக ஏற்படுகிறது.முதலாளித்துவத்தில் பொருளாதார நெருக்கடி ஏற்படுவதற்கான முதன்மையான மூன்று மூல காரணிகளாவன;

        1.முதலாளித்துவத்தின் தான்தோன்றித்தனமான உற்பத்தி முறையால் ஏற்படும் விகிதப் பொருத்தமின்மை,

  1. குறை-நுகர்வு (நுகர்வுப் பற்றாக்குறை),
  2. லாப வீதத்தின் வீழ்ச்சிப் போக்கு

விகிதப் பொருத்தமின்மை நெருக்கடிகள்:

சமூகத்தின் ஒட்டுமொத்த உற்பத்தியையும் இரண்டு பெரிய உற்பத்தித் துறைகளாக பிரிக்கலாம். i) துறை I உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்யும் துறை, ii) துறை II நுகர்வு பொருட்களை உற்பத்தி செய்யும் துறை.

சமூக மறுவுற்பத்தி அதே அளவிலோ அல்லது விரிந்த அளவிலோ நடைபெற வேண்டும் என்றால், ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி செய்யப்படும் பொருட்களுக்கிடையே சமநிலை ஏற்படும் விதமாக ஒரு குறிப்பிட்ட விகிதாசாரத்தில் இருக்குமாறு சரியான அளவில் உற்பத்தி செய்ய வேண்டும். ஆனால் முன்னரே தீர்மானிக்கப்பட்ட சமூகத் திட்டங்களின் படி முதலாளித்துவ உற்பத்தி நடைபெறுவதில்லை.

மாறாக, உற்பத்தி மற்றும் முதலீடு தொடர்பான முடிவுகள் சமூகத் தேவையின் அடிப்படையில் செய்யப்படாமல், ஒவ்வொரு முதலாளியின் முடிவுகளும் தன்னிச்சையாக மற்ற முதலாளிகளின் முடிவுகளைச் சாராமல் செய்யப்படுகிறது. ஆகையால், பல்வேறு கிளைகளில் உற்பத்தி செய்யப்படும் பொருள்களுக்கிடையேயான ‘சரியான’ விகிதாசாரங்கள் - குறிப்பாக உற்பத்தி சாதனங்களுக்கும் நுகர்வு பொருட்களுக்கும் இடையில் – உறுதி செய்யப்படும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

இத்தகைய விகிதப் பொருத்தமின்மையே நெருக்கடி உருவாவதற்கான முக்கியக் காரணமாக அமைகிறது. நுகர்வுப் பொருட்கள் மற்றும் உற்பத்தி சாதனங்கள் ஆகியவை சரியான விகிதாசாரத்தில் உற்பத்தி செய்யப்படாததால், மறுவுற்பத்தியை உறுதிசெய்யும் விதமாக உற்பத்திப் பொருட்களை எதிர்பார்த்த விலைகளில் விற்பது சாத்தியமில்லாமல் போகிறது. முதலாளித்துவத்தின் தான்தோன்றித்தனமான உற்பத்தி முறையால் விகிதப் பொருத்தமின்மையும் அதன் விளைவாகப் பொருளாதார நெருக்கடியும் ஏற்படுகின்றன.

ஒவ்வொரு சரக்கையும் போலவே முதலாளித்துவ பொருளாதாரத்தின் மொத்த உற்பத்தி மதிப்பும் மூன்று பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, மொத்த உற்பத்திக்குத் தேவையான மாறாமூலதனம் உள்ளது. இரண்டாவதாக உற்பத்தி வேலையில் ஈடுபடுத்தத் தேவையான மாறுமூலதனமும், இறுதியாக, தொழிலாளி வர்க்கத்தால் உற்பத்தி செய்யப்படும் உபரி மதிப்பும் உள்ளது.

உபரி மதிப்பு முதலாளி வர்க்கத்தால் முழுமையாக நுகரப்படும் போது எளிய மறுவுற்பத்தி நடைபெறுகிறது. முதலாளர்கள் உபரி மதிப்பின் ஒரு பகுதியை மூலதனமாக மாற்றும் போது விரிவாக்கப்பட்ட மறுவுற்பத்தி நடைபெறுகிறது. அப்போது, உற்பத்தியை விரிவுபடுத்தும் நோக்கில் உபரி மதிப்பிலிருந்து உற்பத்தி மூலதனத்தின் கூறுகளான , உழைப்பு சக்தி மற்றும் உற்பத்தி சாதனங்கள் வாங்கப்படுகின்றன

பொருளாதாரத்தை சமூக உற்பத்தியின் இரண்டு பெரிய துறைகளாகப் பிரிக்கலாம். துறை I உற்பத்தி சாதனங்களை உற்பத்தி செய்கிறது. அதன் தயாரிப்புகள் பல்வேறு உற்பத்திச் செயல்முறைகளில் ஈடுபடுத்தப்பட்ட போதிலும், தனிநபர் நுகர்வுக்கு நேரடியாகப் பயன்படுத்தப்படுவதில்லை. துறை II நுகர்வுப் பொருட்களை உற்பத்தி செய்கிறது. அதன் தயாரிப்புகள் நேரடியாகத் தனிநபரால் நுகரப்படுகின்றன. ஒவ்வொரு துறையிலும் உற்பத்தி செய்யப்படும் மதிப்புகளைக் கீழ்வருமாறு பிரிக்கலாம்.

 துறை I:

மொத்த மதிப்பு (VI)

VI = cI+vI+sI

துறை II:

மொத்த மதிப்பு (VII)

VII = cII +vII +sII

இங்கே cI, cII ஆகியவை முறையே துறை I, துறை IIஇல் ஈடுபடுத்தப்படும் மாறாமூலதனங்கள் ஆகும். vI, vII ஆகியவை முறையே துறை I, துறை IIஇல் ஈடுபடுத்தப்படும் மாறுமூலதனங்கள் ஆகும். sI, sII ஆகியவை முறையே துறை I, துறை IIஇல் ஈடுபடுத்தப்படும் உபரி மதிப்புகள் ஆகும்.

முதலில், எளிய மறுவுற்பத்தியைக் கருத்தில் கொள்வோமானால் துறை-I உற்பத்திச் சாதனங்களைத் தயாரிப்பதால், அவற்றை நேரடியாகத் தனிப்பட்ட முறையில் நுகர முடியாது. ஆகவே, துறை Iஐச் சேர்ந்த முதலாளிகளும், தொழிலாளர்களும் தங்களுக்கான நுகர்வுப் பொருட்களைப் பெறுவதற்கு, துறை Iக்கும் துறை IIக்கும் இடையில் பரிமாற்றம் நடைபெற வேண்டும்.

அதேபோல், துறை IIஇல் உற்பத்தி பழைய அளவில் தொடர வேண்டுமானால், அதன் முதலாளிகள் துறை Iஇலிருந்து நுகரப்பட்டதை பதிலீடு செய்யத் தேவையான மாறாமூலதனத்தைப் பெற வேண்டும். இவை சுமுகமாக நடைபெற vIக்கும் vIIக்கும் இடையே திட்டவட்டமான விகிதாசார உறவு கீழ்கண்டவாறு இருக்க வேண்டும். (i) உற்பத்தி செய்யப்படும் மொத்த உற்பத்திச் சாதனங்களின் மதிப்பு, துறை I மற்றும் துறை IIஇல் பயன்படுத்தப்பட்டவற்றுக்குச் சமமாக இருக்க வேண்டும்.

அதாவது,

VI = cI+vI+sI=cI+cII

அல்லது

        (ii)  cII = vI+sI

(ii) நுகர்வுப் பொருட்களின் மொத்த உற்பத்தி மதிப்பு இரு துறைகளின் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களால் முழுமையாக நுகரப்பட வேண்டும். அதாவது,

VII = cII+vII+sII = vI+vII+sI+sII

அல்லது

cII = vI+sII

மறுவுற்பத்தியை உறுதி செய்ய, துறைகள் I மற்றும் IIக்கு இடையில் மேற்குறிப்பிட்டவாறு ஒரு திட்டவட்டமான விகித உறவை (மதிப்பு அடிப்படையில்) பராமரிக்க வேண்டியது அவசியம்.

முக்கியமாக துறை IIஇல் நுகரப்பட்டவற்றை மாற்றீடு செய்யத் தேவைப்படும் மாறாமூலதனத்தின் அளவு துறை Iஇன் முதலாளிகள் மற்றும் தொழிலாளர்களுக்குத் தேவைப்படும் நுகர்வு பொருட்களின் மதிப்புக்குச் சமமாக இருக்க வேண்டும். எளிதாகச் சொன்னால், துறை  ஒன்று, துறை இரண்டிடம் வாங்கியவற்றின் மதிப்பு, துறை இரண்டு, துறை ஒன்றிடம் வாங்கியவற்றின் மதிப்புக்குச் சமமாக இருக்க வேண்டும்.

ஒரு முதலாளித்துவப் பொருளாதாரத்தில், உற்பத்தி மற்றும் முதலீடு பற்றிய முடிவுகள் பல லட்சக் கணக்கான முதலாளிகள் மற்றும் நிறுவனங்களால் தன்னிச்சையாக எடுக்கப்படுவதால், எளிமையான மறுவுற்பத்தியே நடைபெறுவதாக கொண்டாலும் கூட, இந்த விகிதாசாரச் சமநிலை தானாகவே நிறுவப்படும் என்று எதிர்பார்க்க வாய்ப்பு இல்லை.

விரிவாக்கப்பட்ட மறுவுற்பத்தி சீராகத் தொடர வேண்டுமானால் இதையொத்த மேலும் சிக்கலான நிலைமைகள் நிறைவு செய்யப்பட வேண்டும். எனவே, இந்நிலைமைகள் பூர்த்தி செய்யப்படும் என்று எதிர்பார்க்கவும் வாய்ப்பு இல்லை. உற்பத்தியின் பல்வேறு முக்கியக் கிளைகளின் விளைபொருட்களுக்கிடையே சரியான விகிதாசார உறவுகளை - நுகர்வுப் பொருட்கள் மற்றும் மூலதனப் பொருட்களுக்கு இடையில் - பெறத் தவறும் போது விகிதப் பொருத்தமின்மை நெருக்கடிகள் ஏற்படுகின்றன.

குறை நுகர்வு:

முதலாளித்துவத்தில் காணப்படும் ஒரு முக்கியமான ஏற்றத்தாழ்வு முதலாளித்துவத்தின் உற்பத்திச் சக்திக்கும், அதன் நுகர்வுச் சக்திக்கும் இடையிலான முரண்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது உற்பத்திச் சாதனங்கள், நுகர்வுப் பொருட்களின் உற்பத்திக்கு இடையிலான விகிதச் சமமின்மையால் உருவாகிறது.

‘நுகர்வு’ என்பது இரண்டு வகைப்படும்: 1. தொழிலாளர்கள், முதலாளிகள் ஆகியோரின் தனிநபர் நுகர்வு (உணவு, உடை) 2. உற்பத்திச் சாதனங்களையும், உழைப்புச் சக்தியையும் பல்வேறு உற்பத்திச் செயல்முறைகளில் ஈடுபடுத்தும் உற்பத்தித் திறனுள்ள நுகர்வு.

முதலாளித்துவத்தில் உபரி மதிப்பைப் பெறுவதே உற்பத்தியின் நோக்கம் ஆகும். முதலாளிகளிடையே ஏற்படும் போட்டி மேலும் மேலும் உபரி மதிப்பைப் பெறும் பொருட்டு மூலதனத்தை குவிக்க அவர்களை நிர்ப்பந்திக்கிறது. மூலதனக் குவிப்பு என்பது உற்பத்தித் திறனுள்ள நுகர்வை மேலும் மேலும் அதிகரிப்பதற்காகவே செய்யப்படுகிறது. முதலாளித்துவப் பொருளாதாரத்தில் ‘நுகர்வுச் சக்தியின்’ ஒரு அங்கமாக உற்பத்தித் திறனுள்ள நுகர்வின் இந்த வளர்ச்சி உள்ளது. முதலாளித்துவத்தில் போட்டியால் ஏற்படும் நிர்ப்பந்தங்களே தனிநபர் நுகர்வு வளர்ச்சியை ஒப்பீட்டளவில் சாராமல் உற்பத்தித் திறனுள்ள நுகர்வு வளரக் காரணமாகிறது.

முதலாளித்துவ உற்பத்தியில் அறுதி உபரி மதிப்பு, ஒப்பீட்டு உபரி மதிப்பு ஆகியவற்றை அதிகரிப்பத்தற்காக மூலதனம் திரட்டப்படுகிறது. உழைப்புச் சக்தியின் மதிப்பைக் குறைக்கும் விதமாகச் சேம உழைப்புப் பட்டாளத்தை பெருக்குவது முதலாளித்துவத்தின் பொது விதிகளில் ஒன்று. ஆனால் முதலாளிகளுக்கு உபரி மதிப்பை உற்பத்தி செய்தால் மட்டும் போதாது, தொழிலாளர் வர்க்கத்தின் உபரி உழைப்பு பொதிந்துள்ள சரக்குகளை உகந்த விலையில் விற்றுப் பணமாக ஈடேற்றம் செய்யவும் வேண்டும். உபரி மதிப்பு ஈடேற்றம் பெறுவது சமூகத்தின் நுகர்வுச் சக்தியை பொறுத்துள்ளது.

ஆகவே உபரி மதிப்பை உற்பத்தி செய்வதற்கான நிபந்தனைகளும், நுகர்வைத் தீர்மானிக்கும் நிபந்தனைகளும் – உபரி மதிப்பின் ஈடேற்றம் - ஒத்தவை அல்ல. இவை இரண்டுமே முரண்பாடான தொடர்புடையவை. நேரடிச் சுரண்டலுக்கான நிபந்தனைகளும் அதை ஈடேற்றம் செய்வதற்கான நிபந்தனைகளும் ஒத்தவை அல்ல. அவை இடத்தால், காலத்தால் மட்டுமல்லாது, தர்க்கரீதியாகவும் வேறுபடுகின்றன.

சுரண்டலானது சமூகத்தின் உற்பத்திச் சக்தியால் மட்டுமே வரம்பிடப்படுகிறது, சுரண்டலின் ஈடேற்றத்தைப் பல்வேறு வகையான உற்பத்திகளுக்கிடையேயான விகிதாசார உறவுகளும், சமூகத்தின் நுகர்வு சக்தியும் நிர்ணயிக்கிறது. சமூகத்தின் நுகர்வு சக்தியானது  உற்பத்தி சக்தி அல்லது நுகர்வு சக்தியால் மட்டுமே தீர்மானிக்கப்படுவதில்லை. முரண்பாடான விநியோக நிலைமைகளின் கீழ் அமையும் நுகர்வு சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது, இதுவே சமுதாயத்தின் பெரும்பகுதியினரின் நுகர்வைக் குறைக்கக் காரணமாகிறது.

முதலாளித்துவ உற்பத்தி முறையால் உற்பத்தி சக்திகளில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்படுகிறது. முதலாளிகளிடையிலான போட்டியும், உபரி மதிப்புக்கான வேட்கையும், மூலதனத்தைத் திரட்டவும், குறிப்பாக உழைப்பின் உற்பத்தித்திறனை உயர்த்துவதற்கும் கட்டாயப்படுத்துகிறது. இயந்திரங்கள் மற்றும் நவீன தொழிற்துறையின் வளர்ச்சியால் உற்பத்தி செய்யப்படும்  ஒப்பீட்டு உபரி மதிப்பு, ஒரே நேரத்தில் சமூகத்தின் உற்பத்தி சக்தியையும் சேமப் பட்டாளத்தையும் பெரிதும் அதிகரிக்கிறது.

சேமப் பட்டாளத்தின் வளர்ச்சியும், அதனால் வரம்பிடப்படும் கூலி உயர்வும், இவை இரண்டுமே நுகர்வுக்கான தளத்தை குறுகச் செய்கின்றன. இவ்வாறு உற்பத்தி சக்திகளின் வளர்ச்சிக்கும், முதலாளித்துவ உற்பத்தி உறவுகளுக்கும் இடையிலான முரண்பாடு சமூகத்தின் உற்பத்தி மற்றும் நுகர்வு சக்திகளுக்கு இடையிலான முரண்பாடாக வெளிப்படுகிறது.

முதலாளித்துவத்தில் உற்பத்திக்கும் நுகர்வுக்கும் இடையில் உள்ள அடிப்படை முரண்பாட்டை மார்க்சிய பொருளாதாரம் அறிந்தேற்கிறது. முதலாளித்துவம் உற்பத்தி சக்திகளை வளர்க்கிறது, எனவே சமூகத்தின் உற்பத்தி ஆற்றலை விரைவாக அதிகரிக்கிறது. ஆனால் அதன் உற்பத்தி உறவுகளும் (விநியோகமும்) சமூகத்தின் நுகர்வு சக்தியின் வளர்ச்சியை கட்டுப்படுத்துகின்றன.

இந்த முரண்பாடானது முதலாளித்துவத்தின் சாத்தியமற்ற தன்மையையோ அல்லது முதலாளித்துவம் தானே வீழும் என்பது போன்ற எந்த குறுகிய பொருளாதார கண்ணோட்டத்தையோ குறிப்பிடவில்லை, மாறாக, இந்த முரண்பாடு குறை நுகர்வு போக்கையே குறிக்கிறது. ‘குறை நுகர்வு ’ என்ற சொல் நிச்சயமாக ஒரு ஒப்பீட்டளவிலான பொருளிலே கூறப்படுகிறது, அதாவது சமூகத்தில் உள்ள உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியுடன் ஒப்பிடும் போது நுகர்வு சக்தி குறைவாக உள்ளது என்பதையே குறிக்கிறதே தவிர குறை-நுகர்வுவாதிகள் குறிப்பிடுவது போல் அறுதியான பொருளில் கூறப்படவில்லை.

முதலாளித்துவத்தில் நுகர்வுப் பற்றாக்குறையின் காரணமாக வெளிப்புற சந்தைகள் இல்லாமல் உபரி மதிப்பை ஈடேற்றம் செய்ய முடியாது, ஆகையால் விரிவான மறுவுற்பத்திக்கு வாய்ப்பு இல்லை என்பதே ரோசா லக்சம்பர்க் முன்வைக்கும் வாதம். உபரி மதிப்பை கூடுதல் உற்பத்தி மூலதனமாக மாற்றுவதன் மூலமும், முதலாளி வர்க்கத்தின் நுகர்வை மேலும் அதிகரிப்பதன் மூலமும் ஈடேற்றம் செய்து விரிவான மறுவுற்பத்தியை சாத்தியப்படுத்த முடியும் என்பதால் ரோசா லக்ஸம்பர்கின் வாதம் பிழையுடையது,

 லாபவீத வீழ்ச்சிப் போக்கு விதி :

முதலாளித்துவ நெருக்கடிகளில் ஒரு முக்கிய அங்கமாக குறை- நுகர்வை மார்க்ஸ் அங்கீகரித்தார். இந்த போக்கினால் உற்பத்தியான உபரி மதிப்பை ஈடேற்றம் செய்வதில் அவ்வப்போது  நேரிடும் சிரமங்களினால்- முதலாளிகள் தங்களது சரக்குகளை அதன் உற்பத்தி விலையில் விற்க முடிவதில்லை-  பொருளாதார நெருக்கடி ஏற்படுகிறது.

ஆனால் உற்பத்தியின் கிளைகளுக்கிடையே காணப்படும் விகிதபொறுத்தமின்மை, குறை-நுகர்வு ஆகியவை மட்டுமே முதலாளித்துவ பொருளாதார நெருக்கடிகளுக்கான மூல காரணங்களாக மார்க்ஸ் கருதவில்லை. முதலாளித்துவத்தின் ஒரு அடிப்படையான போக்கை ஆராய்வதில் அவர் கணிசமான கவனம் செலுத்தினார், அதை லாபவீத வீழ்ச்சி நோக்கிய போக்கு குறித்த விதியாக விவரித்தார். முதலாளித்துவ மூலதனத்திரட்டல் செயல்முறையிலிருந்து இந்த விதியை எளிதாக வருவிக்கலாம்.

சமூகத்தின் உபரி மதிப்பு முழுவதும் முதலாளி வர்க்கத்தால் தனதாக்கப்படுகிறது. சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த சமூக மூலதனத்தை மாறா மூலதனம்(c) மற்றும் மாறு மூலதனம் (v) என இரண்டு பகுதிகளாகப் பிரிக்கலாம். சமூக உபரி மதிப்பை (s) மொத்த மாறும் மூலதனத்தால்(v) வகுப்பதன் மூலம் (sI = s/v) சுரண்டல் வீதத்தை (உபரிமதிப்பு வீதத்தை) பெறலாம். ஆனால் முதலாளித்துவம் விரும்புவது  உபரி மதிப்பு வீதத்தை அப்படியே அல்ல, அவர்களின் அக்கறை எல்லாம் இலாப வீதத்தில் தான் உள்ளது.

இலாப விகிதம் ஒரு சமூக சராசரியாக வருவிக்கப்படுகிறது.

p= s/c+v

p = இலாப வீதம், s = சமூகத்தின் மொத்த உபரி மதிப்பு, v = சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த மாறு மூலதனம், c = சமூக உற்பத்தியில் பயன்படுத்தப்படும் மொத்த மாறா மூலதனம்.

தொழிலாளி வர்க்கத்திற்கும், முதலாளி வர்க்கத்துக்கும் இடையிலான வர்க்கப் போராட்டம் மற்றும் போட்டி ஆகியவற்றின் விளைவாக மாறாமூலதனத்தின் பயன்பாட்டை அதிகரிப்பது முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படையான போக்காக உள்ளது. எனவே முதலாளித்துவத்தில் மூலதனத் திரட்டல் தொடரும் போது, மூலதனத்தின் அங்கக மதிப்பு (c/v) தொடர்ந்து அதிகரிக்கும். அதே நேரத்தில், உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சியால் ஒப்பீட்டு உபரி மதிப்பின் உற்பத்தியும் அதிகரிக்கும். ஆகையால் சுரண்டல் வீதமும் (s/v) மேலும் அதிகரிக்கும்,  அதுவே c/v அதிகரிப்புக்கும் வழிவகுக்கும்.

இலாப வீதத்தில் ஒன்றுக்கொன்று எதிரான சக்திகள் செயல்படுகின்றன. மாறுமூலதனத்தை விட மாறாமூலதனத்தை ஒப்பீட்டளவில் அதிகமாகப் பயன்படுத்துவது லாபவீதத்தைக் குறைக்கும். ஆனால் உற்பத்தித்திறனில் ஏற்படும் அதிகரிப்பும் அதனால் உயரும் சுரண்டல் வீதமும் (s/v) லாபவீதத்தை அதிகரிக்கும். மூலதனத் திரட்டல் தொடரும் போது லாப வீதம் வீழ்ச்சியடையும் போக்கு ஏற்படும் என்று மார்க்ஸ் குறிப்பிடுகிறார்.

முதலாளித்துவ உற்பத்தி முறையில், தொழில்நுட்ப வளர்ச்சியால், அதிக இறந்த உழைப்பை பயன்படுத்தும் போக்கு உருவாகிறது. மாறாமூலதனத்துடன் ஒப்பிடும் போது மாறுமூலதனத்தின் அளவு ஒப்பீட்டளவில் குறைக்கப்படுகிறது. இதன் விளைவாக மொத்த மூலதனத்தின் அங்கக மதிப்பு தொடர்ச்சியாக அதிகரிப்பதால் பொது இலாப வீதம் வீழும் போக்கு ஏற்படுகிறது.

பொது இலாப வீதத்தின் வீழும் போக்கு குறித்த விதியின் மூலம் மார்கஸ் முதலாளித்துவத்தின் அடிப்படை முரண்பாட்டை வெளிப்படுத்தினர். இலாப வீதம் வீழ்ச்சியடையும் போக்கை எதிர்க்கும் சக்திகளும் செயல்படுவதாக மார்க்ஸ் குறிப்பிடுகிறார். லாப வீத வீழ்ச்சியை எதிர்கொள்ளும் போது, முதலாளிகள் உழைப்புச் சுரண்டலைத் தீவிரப்படுத்த முயற்சிக்கின்றனர். உழைப்புச் சக்தியின் மதிப்பிற்குக் குறைவாக கூலி அளிக்கின்றனர். (இதில் சேம உழைப்புப் பட்டாளத்தின் இருப்பு அவர்களுக்கு உதவுகிறது).

மூலதனத்  திரட்டலின் மூலம் உழைப்பின் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவதால் வேலையற்றோரின் எண்ணிக்கை (சேம உழைப்புப் பட்டாளம்) அதிகரிக்கிறது. இதனால் அதிக மாறுமூலதனத்தையும், குறைந்த மாறாமூலதனத்தையும் கொண்டு உற்பத்தி செய்யும் முறைகள் பயன்படுத்தப்பட்டு அங்கக மதிப்பின் உயர்வும், லாப வீதத்தின் வீழ்ச்சியும் தடுக்கப்படுகிறது.

கூடுதலாக இரண்டு எதிர்ச் சக்திகள் செயல்படுகின்றன. முதலாளித்துவ மூலதனத் திரட்டலின் உள்ளார்ந்த இயந்திரமயம் மாறா மூலதனத்தின் அதிகரிப்பைக் குறிக்கிறது. ஆனால் உற்பத்தி சாதனங்களின் உற்பத்தியிலும் உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதால், மாறாமூலதனத்தின் மதிப்பு மலிவாக்கப்படுகிறது. எனவே ஓரலகு மாறுமூலதனத்துக்கு அதிக அளவில் மாறா மூலதனம் பயன்படுத்தப்பட்டாலும், அங்கக மதிப்பு அதிகரிக்காமல் தடுக்கப்படுகிறது. வெளிநாட்டு வர்த்தகத்தின் மூலம் பெறப்படும் மலிவான மூலப் பொருட்களாலும், இயந்திரங்களாலும் அங்கக மதிப்பின் அதிகரிப்பும் லாப வீழ்ச்சியும் தடுக்கப்படுகின்றன.

முதலாளித்துவத்தில் நெருக்கடி தொடங்கியவுடன், பல்வேறு நிகழ்முறைகளின் மூலம் இயல்புநிலை  மீட்டெடுக்கப்படுகிறது.  பல நிறுவனங்கள் மூடப்படுகின்றன, இதனால் சமூக மூலதனத்தில் ஒரு குறிப்பிட்ட பகுதி செயல்படாமல் தடுக்கப்படுகிறது. செயலின்மையாலும், தேய்மானத்தாலும் மூலதனம் அதன் மதிப்பை இழக்கிறது.

இலாப வீதம் வீழ்கிறது. சரக்குகளின் விலைகள் வீழ்ச்சியடைகின்றன. சரக்குகளின் விலைகள் குறைவதால், மாறாமூலதனம் மற்றும் சுற்றோட்ட மூலதனத்தின் மதிப்பில் வீழ்ச்சி ஏற்படுகிறது. நெருக்கடியால் ஏற்பட்ட விலைவீழ்ச்சியால் மூலதன மறுவுற்பத்தி பாதிக்கப்படுகிறது. மூலதனத்தை மீட்டெடுக்க முடியாத முதலாளிகளால், மறுவுற்பத்தியை அதே அளவில் தொடர முடியாமல் போகிறது.

கடன்களைத் திருப்பிச் செலுத்த முடியாததால் பலர் கடன் நெருக்கடியால் பாதிக்கப்படுகின்றனர். மூலதன மதிப்பிழப்பும், கடன் நெருக்கடியும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்களைப் பணிநீக்கம் செய்வதற்கும் கூலியை மேலும் குறைக்கவும் வழிவகுக்கும். இவை அனைத்தின் ஒட்டுமொத்த விளைவாக மூலதனம் மலிவாக்கப்படுவதால் உற்பத்திசாதனங்கள் மாற்றீடு செய்யப்படுவதாலும், குறைந்த கூலியில் உழைப்புச் சக்தி வாங்கப்படுவதாலும், இலாப வீதம் உயர்ந்து பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து மீட்கப்படும். இலாப விகிதம் வீழ்ச்சியடையும் போக்கே முதலாளித்துவப் பொருளாதார நெருக்கடிகளுக்கான மூல காரணம் என்பதையும், நெருக்கடிகளின் மூலமே இலாப வீதம் மீட்கப்பட்டு முதலாளித்துவ விரிவாக்கம் புதுப்பிக்கப்படுகிறது என்பதையும் மார்க்ஸ் கண்டறிந்தார்.

நெருக்கடியும் சுழற்சியும்:

அவ்வப்போது பொருளாதார நெருக்கடிகள் ஏற்படுவது முதலாளித்துவத்தின் பண்புகளில் ஒன்றாக உள்ளது. முதலாளிகள் எதிர்பார்த்த அளவிற்கு லாபத்தை ஈட்ட இயலாமல் இழப்போ அல்லது லாபக் குறைவோ ஏற்படுகிறது. பொருட்களை விற்க இயலாத சூழல் ஏற்படுகிறது. அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படுகிறார்கள்.

நெருக்கடிகள் முதலாளித்துவத்தின் சில அடிப்படை உள் முரண்பாடுகளின் விளைவாக ஏற்படுகின்றன. அதன் திட்டமிடப்படாத தன்மை (விகிதப் பொருத்தமின்மை); உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி நிகழ்முறையின் உள்ளார்ந்த முரண்பாடுகள் (இலாப விகிதம் வீழ்ச்சியடையும் போக்கு); மற்றும் முதலாளித்துவ சமூக உற்பத்திச் சக்திகளின் விரைவான வளர்ச்சிக்கும், சமூக நுகர்வுச் சக்தியின் மட்டுப்படுத்தப்பட்ட வளர்ச்சிக்கும் இடையிலான முரண்பாடு (குறை-நுகர்வுப் போக்கு) ஆகிய காரணங்களால்.

நெருக்கடிகளின் மூலம்தான் முதலாளித்துவ விரிவாக்கம் மீண்டும் நிகழக் கூடிய நிலைமைகள் மீட்டெடுக்கப்படுகின்றன. நெருக்கடிகளே (i) தேய்மானத்தாலும், செயலின்மையாலும் மாறாமூலதனம் மற்றும் சுற்றோட்ட மூலதனத்தின் கூறுகள் விரைவாக மதிப்பிழக்க அனுமதிப்பதன் மூலமாகவும், உற்பத்திச் சாதனங்களின் விலைச் சரிவினாலும், (ii) சேம உழைப்புப் பட்டாளத்தின் அளவை அதிகரித்து கூலியைக் குறைத்தும் இந்த பணியைச் செய்கின்றன.

பொருளாதார நெருக்கடிகள், முதலாளித்துவ உற்பத்தி முறையின் அடிப்படை பொருளாதார முரண்பாடுகளின் வெளிப்பாடாகவும், அதற்கான முதலாளித்துவ ‘தீர்வு’ ஆகவும் உள்ளன. இந்தத் தீர்வு, முதலாளித்துவ கோட்பாடுகள் கூறுவது போல் நிச்சயமாக, முதலாளித்துவ வர்க்கத்தின் பிரதிநிதிகளால் விழிப்புணர்வுடன் தீர்மானிக்கப்படுகிற ஒன்றல்ல. தனிநபர்களின் விருப்பத்திற்கு மாறாக புறவயமான நெறிகளால் இவை முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மீது திணிக்கப்படுகின்றன.

முதலாளித்துவப் பொருளாதாரத்தின் வளர்ச்சிப் பாதையில் அடுத்தடுத்து வரும் முதலாளித்துவ விரிவாக்கமும், பொருளாதார நெருக்கடிகளும் இடம்பெறுதையும், அத்தகைய வடிவமே முதலாளித்துவத்தின் இயக்கத்தின் அடிப்படை நியதியாக இருப்பதையும் மார்க்சியப் பகுப்பாய்வு அறிந்தேற்கிறது.

இது முதலாளித்துவப் பொருளாதாரத்தில் சமநிலையையும் ஒத்திசைவையும் காண்பதாகப் பாசாங்கு செய்யும் சமகால முதலாளித்துவப் பொருளாதாரக் கோட்பாட்டிற்கும், முதலாளித்துவப் பொருளாதாரத்தின் முரண்பாடான தன்மையிலிருந்து அதன் சாத்தியமற்ற தன்மையை ஊகிக்கும் குட்டி - முதலாளித்துவ கற்பனாவாதப் போக்குகளுக்கும் முற்றிலும் மாறுபட்டது.

(தொடரும்)

- சமந்தா

Pin It