தமுஎகச தலைவருக்கு திறந்த மடல்!
எழுதும் திறன் என்பது வரம். அந்த வரம் வாய்க்கப் பெற்றவர்களில், வெகு சிலரே தங்களின் எழுத்துத் திறனை சமூக மாற்றத்துக்காக அர்ப்பணிக்கிறார்கள். அந்த வெகு சிலரில் ஒருவர் ச.தமிழ்ச்செல்வன். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர்கள், கலைஞர்கள் சங்கத்தின் மாநிலத் தலைவர் பொறுப்பு வகிக்கும், மரியாதைக்குரிய ச.தமிழ்ச்செல்வனின் எழுத்துக்கள் இளைஞர்கள், முற்போக்கு சிந்தனையாளர்கள், சமூக மாற்றத்துக்காக தங்கள் நேரத்தை ஒதுக்கி உழைப்பவர்கள், வளரும் எழுத்தாளர்கள் மத்தியில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது... ஏற்படுத்தி வருகிறது.
ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைகளுக்காகவும், பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் தொடர்ச்சியாக இயங்கி வருகிறார். சமையல் என்பதை பெண்களுக்கு மட்டுமேயான துறையாக ஒதுக்காமல் ஆண்களும் அதில் பங்கெடுத்துக் கொள்ளவேண்டும் என வலியுறுத்தி புத்தகமே எழுதியிருக்கிறார். நேரில் சந்திக்கும் போதும் வலியுறுத்த மறுப்பதில்லை. அரசியலை எவ்வாறு அணுகவேண்டும் என எளிமையாக விளக்கி அவர் எழுதிய ‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’ புத்தகம் வளரும் தலைமுறையினருக்கு மிகச்சிறந்த கையேடு.
மிகவும் மதிக்கப்படுகிற ச.தமிழ்ச்செல்வனின் நேர்காணல் ‘ஆனந்த விகடன்’ இதழில் (18.1.12) வந்திருக்கிறது என்று நண்பர்களும், தோழர்களும் கடந்த வாரத்தில் ஒரு நாள் தகவல் அனுப்பியிருந்தார்கள். மிகவும் ஆர்வமாக புத்தகத்தை வாங்கினேன். ‘திமுகவும், அதிமுகவும் திராவிட இயக்கங்கள் இல்லை!’ என்கிற தலைப்பில், சுமார் நான்கு பக்க அளவுக்கு அவரது நேர்காணல் இடம் பெற்றிருந்தது. அது தெரிந்த விஷயம்தான் என்பதால், மேற்கொண்டு அவர் என்ன சொல்லியிருக்கிறார் என்று தெரிந்து கொள்ள வார்த்தைகளையும், வரிகளையும், பக்கங்களையும் ஆழமாகக் கடந்தேன்.
ச.தமிழ்ச்செல்வனின் நேர்காணலை முழுவதுமாக முடித்தப் பிறகு, வழக்கமாக அவரது படைப்புகளை படித்த பின் கிடைக்கிற திருப்தி இல்லை. மனதுக்குள் ஏமாற்றமும், வருத்தமும், சற்றுக் கோபமுமே மேலோங்கியிருந்தது. ஈழம், முல்லைப் பெரியாறு பிரச்னைகள் குறித்த கேள்விகளுக்கு அவரது கருத்துக்கள், காயப்படுத்துவதாக உணர்கிறேன். தமிழர் பிரச்னைகள் குறித்து முன்வைக்கப்பட்ட கேள்விகளுக்கு அவர் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் அதிர்ச்சியை தரக்கூடியதாக இருக்கின்றன. இன்னமும், அவர் கடைபிடித்துக் கொண்டிருக்கிற வர்க்கக் கோட்பாட்டுக் கொள்கைகளுக்கே எதிரானதாகவும் இருக்கின்றன. விகடனில் அவரது நேர்காணல் குறித்து கொஞ்சம் அலசலாம்.
"ஈழ ஆதரவுப் போராட்டங்கள், முல்லைப்பெரியாறு பிரச்னை, அண்ணா ஹஜாரேயின் ஊழல் எதிர்ப்பு, கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு என இது போராட்டங்களின் காலம். ஆனால், ‘மகிழ்ச்சி என்பது போராட்டம்’ என்ற மார்க்சியத்தைக் கடைபிடிக்கும் இடதுசாரிகள், இந்தப் போராட்டங்களில் பங்கெடுக்கவில்லையே?" என்பது விகடனின் கேள்வி.
ச.தமிழ்ச்செல்வனின் பதில், "ஈழப்பிரச்னையைப் பொருத்தவரை, 30 ஆண்டுகளாக மாறாத, உறுதியான நிலைப்பாட்டில் இருக்கிறோம். அரசியல் அற்ற, ராணுவப் பாதையில் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்காது என்பது எங்களது நிலைப்பாடு. சர்வதேச அரசியல் சூழலை கணக்கில் எடுக்காத விடுதலைப்போராட்டக் குழுக்களால்தான் ஈழத்தில் இவ்வளவு பெரிய அழிவு ஏற்பட்டது. தமிழகத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உணர்ச்சி வயப்பட்ட போராட்டங்கள். ஏன் இப்போது போருக்குப் பின் அத்தகைய எழுச்சி இல்லை? ‘தனி ஈழம் சாத்தியம் இல்லை’ என்று நாங்கள் மட்டும் சொல்லவில்லை.... தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் தனி ஈழம் கேட்கிறார்கள். இது ஈழ மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்," என்பதாக நீளுகிறது.
அரசியல் அற்ற ராணுவப்பாதையில் ஈழ மக்களுக்கு தீர்வு கிடைக்காது, தனி ஈழம் சாத்தியம் இல்லை என்பன அவர்களது நிலைப்பாடாக இருந்து விட்டுப் போகட்டும். ஆனால், ‘தமிழகத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள், உணர்ச்சி வயப்பட்ட போராட்டங்கள்; ஏன் இப்போது போருக்குப் பின் அத்தகைய எழுச்சி இல்லை?’ என்கிற கருத்து, அவரது நிகழ்கால அரசியல் அறிவு குறித்த ஐயத்தையே நமக்கு ஏற்படுத்துகிறது. முள்ளிவாய்க்கால் நிகழ்வுக்குப் பின் தமிழகத்தில் இளைஞர்கள் மத்தியிலும், வெகுஜனங்களின் ஊடாகவும் ஏற்பட்டிருக்கிற மாற்றத்தை நிஜமாகவே தமிழ்ச்செல்வன் உணர்ந்து கொள்ளவில்லையா அல்லது உணர்ந்து கொள்ள விரும்பவில்லையா?
ராஜிவ் காந்தி கொலை விவகாரத்தில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூன்று பேருக்கு ஆதரவாக சில மாதங்கள் முன் தமிழக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிகழ்வை தமிழ்ச்செல்வன் மறந்திருக்கலாம். அதை நினைவூட்டவேண்டியது நமது கடமை. பேரறிவாளன், சாந்தன், முருகன் மூவரையும் காப்பாற்றவேண்டும் என உணர்வாளர்கள் நெக்குருகக் கெஞ்சிக் கேட்டபோது, "தூக்குத்தண்டனையை ரத்துச் செய்யக் கோரி தீர்மானம் நிறைவேற்ற அதிகாரம் இல்லையே..." என பதிலளித்தார் முதல்வர். ஆனால், அடுத்தநாளே தனது நிலைமை மாற்றிக் கொண்டு, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றினார்.
தமிழக முதல்வர் திடீரென மனம் மாறி இப்படி ஒரு தீர்மானம் நிறைவேற்ற என்ன காரணம்...? மாநிலம் முழுக்க இருக்கிற கோடானுகோடி தமிழ் மக்களின் கொந்தளிப்பான உணர்ச்சித் ததும்பல்கள் கோட்டையை எட்டியதுதானே காரணம்? யாரோ ஒரு மூன்று பேரின் தூக்குத்தண்டனைக்கு எதிராக ஒரு மாநிலத்தின் பெரும்பான்மை மக்கள் குரல் எழுப்பியது ஏன்? தமிழகத்தின் மக்களிடம் பீறிட்டுக் கிளம்பிய அந்த உணர்வு, ஈழப் போராட்டத்தின் நீட்சி என்பது தமிழ்ச்செல்வனுக்கு தெரிந்திருந்தாலோ அல்லது புரிந்திருந்தாலோ, "தமிழகத்தில் நடைபெற்ற ஈழ ஆதரவுப் போராட்டங்கள் உணர்ச்சிவயப்பட்ட போராட்டங்கள். போருக்குப் பின் ஏன் இப்போது அத்தகைய எழுச்சி இல்லை?" என்று படு அபத்தமான பதில் கேள்வி எழுப்பியிருக்க மாட்டார்.
இன்னும் சொல்வதானால், ‘ஏன் இப்போது ஈழ எழுச்சி இல்லை’ என்கிற அவரது கருத்துக்கு நேர்முரணான ஒரு பதிலை, அதற்கு முந்தைய கேள்வியில் அவரே தெரிவித்திருக்கறார். ‘இன்றைய தலைமுறைக்கு அரசியல் பிடித்திருக்கிறதா?’ என்ற முந்தைய கேள்விக்கான பதிலில், "இப்போது நடந்த ஈழ ஆதரவுப் போராட்டங்களில் பெருவாரியான இளைஞர்கள் பங்கெடுத்தது வரவேற்கத்தக்க மாற்றம்," என்கிறார். அப்புறம் எப்படி ‘இப்போது ஈழ எழுச்சியே இல்லை’ என்று அடுத்த கேள்வியிலேயே தோழரால் துணிச்சலாக பதிலளிக்க முடிகிறது.
‘தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் தனி ஈழம் கேட்கிறார்கள். இது ஈழ மக்களுக்கு தீங்கு விளைவிக்கும் செயல்’ என்கிறார். யாரை ஏமாற்றுவதற்காக...? அவரது பேட்டி வந்திருக்கிற பக்கங்களுக்கு முந்தைய சில பக்கங்களில் ‘எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்’ என்றொரு நேர்காணல் வந்திருக்கிறது. ச.தமிழ்ச்செல்வனும் படித்திருப்பார். அப்படிச் சொல்லியிருப்பவர், ஈழத்தில் இருந்து வந்திருந்த தமிழ்க்கவி என்கிற பெண். அவர் மட்டுமல்ல... உலகெங்கிலும் விரவியிருக்கிற ஈழ மக்கள், ‘எங்கள் தேசத்தை நாங்களே கட்டமைப்போம்’ என்று சூளுரைத்து செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். அவர்களது முயற்சியால் பிரான்ஸ் தேசத்திலும், கனடாவிலும் அஞ்சல் முத்திரைகள் கூட வெளியிடப்பட்டிருக்கின்றன. அவ்வளவு ஏன்...? ‘ஆனந்த விகடன்’ இதழிலேயே ஈழ மண்ணைச் சேர்ந்த எத்தனையோ பேர், தங்கள் உணர்வுகளைக் கொட்டிக் கொண்டிருக்கையால், ‘தமிழகத்தில் உள்ளவர்கள் மட்டும்தான் தனி ஈழம் கேட்கிறார்கள்’ என்று அப்பட்டமாக பொய் சொல்ல, எப்படி மனம் வருகிறது தோழருக்கு?
விஷயம் முடிந்து விடவில்லை. ‘தமிழ் தேசிய இனம் இந்தியாவில் முற்றிலுமாக புறக்கணிக்கப்படவில்லை’ என்று அடுத்த கேள்வியொன்றில் அழுத்தம், திருத்தமாக தனது கருத்தை பதிவு செய்திருக்கிறார். ஆனால், விகடன் நிருபர் விடவில்லை. "ஈழத்தில் லட்சக்கணக்கான தமிழர்கள் படுகொலையையும், தமிழக மீனவர்கள் படுகொலைகளையும் இந்திய அரசு கண்டுகொள்ளாதது புறக்கணிப்புகள் இல்லையா?" என அடுத்த கேள்வி பாய்கிறது விகடனிடம் இருந்து. அதற்கு தோழரின் பதில்... முள்ளிவாய்க்கால் கொடூரத்தை விடவும் உச்சம். "அதையெல்லாம் நூறு சதவிகித புறக்கணிப்பு என்று சொல்லமுடியாது. இந்திய அரசின் வர்க்கநலன் சார்ந்ததுதான் இலங்கை பிரச்னையில் அதன் நிலைப்பாடு. பொருளாதார ரீதியில் தமிழினம் முற்றிலுமாக புறக்கணிப்படவில்லையே?" என்கிறார்.
ராமேஸ்வரம் மீனவர்கள் சுட்டுக் கொல்லப்படுகிறபோதும், இலங்கை கடற்படையினரால் சிறை பிடித்துச் செல்லப்படுகிறபோதும், பிரதமரும், வெளியுறவு அமைச்சரும் ஒப்புக்கு ஒரு கண்டனம் தெரிவிப்பார்கள். அவர்கள் கண்டனம் தெரிவித்த பத்தாவது நிமிடம் மேலும் நான்கு மீனவர்களை இலங்கை கடற்படை சுட்டுக் கொன்றிருக்கும். அல்லது சிறை பிடித்துச் சென்றிருக்கும். இதுதான், தமிழக மீனவர்கள், தமிழக மக்கள் மீது இந்திய அரசு காட்டும் அக்கறை. ஆனால், இதையெல்லாம் நூறு சதவிகித புறக்கணிப்பு என்று சொல்லி விடக்கூடாதாம். இதை சொல்லாமல், வேறு எதைச் சொல்லவேண்டும்? தோழருக்கே வெளிச்சம்.
சரி. இலங்கை தமிழர்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்ட சம்பவத்தில் இந்திய அரசின் நிலைப்பாடு குறித்து கேட்கிறபோது, ‘அது இந்திய அரசின் வர்க்க நலன் சார்ந்த விஷயம்’ என்கிறாரே... இந்திய அரசின் வர்க்க நலன் சார்ந்த விஷயம் தமிழர்களை பாதிக்கிறபோது குறைந்தப்பட்ச எதிர்ப்பையாவது எழுப்பவேண்டும் என்று இவருக்கும், இவர் சார்ந்த இயக்கத்துக்கும் தோன்றாதது எப்படி? பேசித் தீர்க்கவேண்டும், பேசித் தீர்க்கவேண்டும் என்று இவர்கள் குரலெழுப்பிக் கொண்டிருந்தபோது, அவர்கள் பேசாமல் தீர்த்துக் கொண்டிருந்தார்கள். இந்திய அரசின் வர்க்க நலன் சார்ந்த விஷயங்களில் மலையாளியோ மற்ற மாநிலத்தவரோ பாதிக்கப்பட்டிருந்தால்... அந்த மாநிலங்களில் உள்ள இடதுசாரி கட்சியினர் இப்படித்தான் பேட்டி கொடுத்திருப்பார்களா...? பேட்டி கொடுத்திருந்தால் மக்களைச் சந்திக்கத்தான் சென்றிருக்க முடியுமா?
இந்திய அரசின் வர்க்க நலன் சார்ந்த விஷயம் என்று சொல்லி இலங்கை பிரச்னையை திசைதிருப்பும் தோழர், அமெரிக்காவின் வர்க்க நலன் சார்ந்த, மேற்கத்திய நாடுகளின் வர்க்க நலன் சார்ந்த விஷயங்களில் இனி வீண் போராட்டம் நடத்துவதை நிறுத்திக் கொள்ள குரல் கொடுப்பாரா? அமெரிக்கா தனது வர்க்க நலன் சார்ந்து உலகின் ஏதோ ஒரு மூலையில் தனது மூக்கை நுழைக்கிறபோது, அதற்காக, நம்மூர் தெருமுனையில் ஆர்ப்பாட்டம் நடத்துகிற போக்கை கைவிடுமாறு தனது தலைமையிடம் தோழர் வலியுறுத்துவாரா?
உண்மையில், தனது இந்தக் கருத்துக்கு அடுத்த பதிலில் மீண்டும் அவரே முரண்பட்டிருக்கிறார். "இரண்டு வகையான அரசியல்கள் இருக்கின்றன. தேர்தல் அரசியல், வர்க்கப் போராட்டங்களுக்காக மக்களை அணி திரட்டும் அரசியல்.... தேர்தல் அரசியலில் கம்யூனிஸ்ட்டுகள் தோல்வி அடைந்திருக்கலாம்," என்று வர்க்கப் போராட்டங்களுக்கான தனது குரலை அழுந்தப் பதிவு செய்யும் தோழர், தமிழர் பிரச்னை என்று வருகிறபோது, ‘அது இந்திய அரசின் வர்க்க நலன் சார்ந்த விஷயம்’ என்று ஒதுங்கிக் கொள்வது ஏன்? ஒருவேளை, இலங்கையில் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருந்திருந்தால்... அவரது குரலில் நியாயம் ஒலித்திருக்கக் கூடுமோ, என்னமோ!
‘முல்லைப் பெரியாறு பிரச்னையை அறிவியல்பூர்வமாக அணுகவேண்டும்’ என்கிறார். கூடங்குளம் பிரச்னையையும் அறிவியல்பூர்வமாக அணுகவேண்டும் என்றுதானே மனித உரிமை ஆர்வலர்கள் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அறிவியல்பூர்வமாக அணுகவேண்டிய பிரச்னைகள் குறித்த தோழரின் பட்டியலில் கூடங்குளம் விடுபட்டுப் போனது ஏனாம்?
முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்து கேட்கிறபோது, "அணையை அரசியல் ஆக்குவது அச்சுதானந்தன் செய்தாலும் தவறுதான்..." என்கிற அளவில் நிறுத்திக் கொள்கிறார். அதென்ன, அச்சுதானந்தன் செய்தாலும் தவறுதான்? அச்சுதானந்தன் செய்வது தவறு என்று அழுத்தம் திருத்தமாக கூறுவதில் என்ன தயக்கம்? ஒருவேளை சரியாகவும் இருக்கலாம் என்ற சந்தேகம் தோழர் தமிழ்ச்செல்வனிடம் இருக்கிறதா? உலக சகோதரத்துவம் பேசுகிற ஒரு கட்சியின் மிக மூத்த தலைவர், அணைப் பிரச்னையை கையில் எடுத்துக் கொண்டு ஒரு தேசத்தின், இரு மாநில மக்களிடையே ரத்தப்பகையை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார். அவரை ஆணித்தரமாக கண்டிக்காமல், செய்திருந்தாலும் தவறுதான் என்று பூசி மெழுகுவது ஏன்? குடைக்கம்பியால் குத்திப் பார்த்து அணையின் பலத்தை பரிசோதிக்க நினைக்கும் 'அதிமேதாவி' அரசியல்வாதிகளை அப்பட்டமாக விமர்சிக்க தோழர்கள் தயங்குவதன் பின்னணி நிஜமாகவே புரியவில்லை.
இந்த நேர்காணலில், ஒடுக்கப்பட்டவர்கள், தலித்துகள், சாதி, மதவாதம், பெண்ணுரிமை பிரச்னைகள் குறித்தும் நிறையப் பேசியிருக்கிறார் தோழர் ச.தமிழ்ச்செல்வன். துளியளவும் தயக்கமின்றி, அவரது அந்தக் கருத்துக்களை ஏற்றுக் கொள்ள முடிகிறபோது, தமிழர் நலன் சார்ந்த விஷயங்களில் மட்டும் அவரது குரல் ஏன் மாறுபட்டு ஒலிக்கிறது என்று புரியவில்லை. நாம் மிகவும் மதிக்கிற ஒரு மனிதரின் குரல் முன்னுக்குப்பின் முரணாக இருப்பது வேதனையான விஷயமே. அவர் எழுதிய ‘அரசியல் எனக்குப் பிடிக்கும்’ புத்தகத்தை பலமுறை படித்து தெளிவு பெற்றவர்கள் பலர். ஆனால், தமிழர் நலன்கள் குறித்தான விஷயத்தில்.... அவரது அரசியல் நமக்குப் பிடிக்கவில்லை!
- திருமங்கலம் எஸ்.கிருஷ்ணகுமார் (