inflationபணவீக்கத்தின் காரணங்கள்:

சரக்குகளின் விலைகளில் ஏற்படும் உயர்வும் பணத்தின் வாங்கும் திறனில் ஏற்படும் குறைவுமே பணவீக்கம் எனப்படுகிறது. ஒரு சரக்கின் விலையை மூன்று முக்கியக் காரணிகள் நிர்ணயிக்கின்றன.

  1. சரக்கை உற்பத்தி செய்ய ஆகும் செலவு
  2. முதலாளித்துவ சந்தையின் போட்டா போட்டி செயல்முறை
  3. சந்தையில் அப்பொருளுக்கான வேண்டல், வழங்கலில் ஏற்படும் மாறுபாடுகள்.

ஒரு சரக்கின் அடக்கவிலை என்பது அதை உற்பத்தி செய்யத் தேவையான மூலப்பொருட்கள், சாதனங்கள், உழைப்புச்சக்தி ஆகியவற்றிற்காகும் செலவுகளின் கூடுதல் ஆகும். தொழிலாளியிடமிருந்து சுரண்டிய ஊதியமற்ற உழைப்பையும் அதன் மூலம் உருவாக்கப்பட்ட மிகைமதிப்பையும்(உபரி மதிப்பு) முதலாளி இலவசமாக பெறுகிறார் என்பதால் அது இந்தக் கணக்கில் வராது. சரக்குகள் அவற்றின் அடக்கவிலையில் (cost price) விற்கப்படுவதில்லை. அவ்வாறு விற்கப்படுமானால் முதலாளிக்கு லாபம் கிடைக்காது. அடக்கவிலையுடன் சராசரி லாபமும் சேர்ந்ததே சரக்குகளின் உற்பத்தி விலை (production price) எனப்படுகிறது. சந்தையில் (Marketing price) சரக்குகளுக்கான தேவை, வழங்கலில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள் சரக்குகளின் சந்தை விலையை அதாவது விற்பனை விலையை நிர்ணயிக்கின்றன. சரக்குகளின் சந்தை விலைகள் பொதுவாக அவற்றின் உற்பத்தி விலைகளை ஒட்டி ஏற்ற இறக்கங்களுக்கு உட்படுகின்றன.

சந்தையில் பொருட்களுக்கான வழங்கலை காட்டிலும் வேண்டல் (தேவை) அதிகரிக்கும் போது பணவீக்கம் ஏற்படுகிறது. பொருட்களின் வேண்டலைக் காட்டிலும் வழங்கல் குறையும் போதும், பணவீக்கம் ஏற்படுகிறது. உற்பத்தி செலவில் ஏற்படும் அதிகரிப்பும் பணவீக்கத்தை ஏற்படுத்துகிறது.

பணவீக்கம் எதனால் தூண்டப்படுகிறது என்பதன் அடிப்படையில் இரு வகையாக வகைப்படுத்தப்படுகிறது.

  1. வேண்டலால் தூண்டப்படும் பணவீக்கம், 2. வழங்கலால் தூண்டப்படும் பணவீக்கம்.
  1. வேண்டலால் தூண்டப்படும் பணவீக்கம்:

பொருட்களுக்கான மொத்த தேவை பொருட்களின் வழங்கலை/ விநியோகத்தை விட அதிகமாக இருக்கும்போது, பொருட்களின் விலை மட்டத்தில் உயர்வு ஏற்படுகிறது. இதுவே தேவையால் தூண்டப்படும் பணவீக்கம் எனப்படுகிறது.

  1. வழங்கலால் தூண்டப்படும் பணவீக்கம்:

பொருட்களுக்கான தேவையை விட பொருட்களின் வழங்கல்/விநியோகம் குறையும் போதும் பொருட்களின் விலை அதிகரிக்கிறது. இது வழங்கலால் தூண்டப்படும் பணவீக்கம் எனப்படுகிறது. எ. கா: வறட்சி, பருவநிலை பொய்க்கும் போது விவசாய விளைச்சல் குறைவதால் விவசாய விளைபொருட்களின் விலைவாசி உயர்கிறது.

புது செவ்வியல் பொருளாதாரத்தின் (neoclassical economy) அளவுக் கோட்பாடு பணவீக்கம் என்பது அடிப்படையில் ஒரு பண நிகழ்வு என்று விளக்கம் அளிக்கிறது. பொருளாதாரத்தில் பொருட்கள், சேவைகளின் விலைகள் பண விநியோகத்தைப் பொறுத்தே அமையும் எனவும், பண வழங்கலை அதிகரிக்கும் போது பொருட்களின் விலை அதிகரிக்கும் எனவும், பண வழங்கல் குறையும் போது பொருட்களின் விலை குறையும் எனவும் குறிப்பிடுகிறது. அதாவது பொருளாதாரத்தில் பண விநியோகத்தை (money supply) அதிகரிப்பதால் பணவீக்கம் ஏற்படுகிறது என்றும் உண்மையான’ பொருளாதாரத்தில் உற்பத்தியை விட பண விநியோகம் வேகமாக உயர்ந்தால் பணவீக்கம் அதிகரிக்கிறது என்றும் விளக்கம் அளிக்கிறது.

அளவுக் கோட்பாடு என்று பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட இந்தக் கருதுகோளை முதலில் உருவாக்கியவர் போலந்தைச் சேர்ந்த நிக்கோலஸ் கோபர்னிகஸ் என்ற கணிதவியலாளர். இதை பின்னர் பிரபலப்படுத்தியவர் மில்டன் ஃப்ரீட்மேன் என்ற புது செவ்வியல் பொருளியலாளர்.

புது செவ்வியல் பொருளாதாரத்தில் பணவீக்கம் என்பது தனி நபர்களின் எதிர்பார்ப்புகளை அடிப்படையாகக் கொண்டது என்பது போன்ற அகவயமான விளக்கமும் அளிக்கப்படுகிறது.

பணவீக்கம் குறித்து பல கோட்பாடுகள், தத்துவார்த்த அணுகுமுறைகள் உள்ளன, ஆனால் அவை உண்மையான பணவீக்க செயல்பாடுகளை விளக்க முடியாமல் திணறுகின்றன. மத்திய வங்கியாளர்கள் பணவீக்கம் எவ்வாறு செயல்படுகிறது என்பதை உண்மையில் புரிந்து கொள்ளவில்லை என்கிறார் மார்க்சிய பொருளியலாளர் மைக்கேல் ராபர்ட்ஸ்.

செவ்வியல் பொருளாதாரத்தின் மதிப்புக் கோட்பாடு பொருட்களின் விலைகளே சுற்றோட்டத்தில் பணத்தின் அளவை நிர்ணயிக்கிறது என்று குறிப்பிடுகிறது. சரக்குகளின் மதிப்பு அவற்றை உற்பத்தி செய்யத் தேவையாகும் சராசரி உழைப்பு நேரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது. சரக்குகள் உள்ளார்ந்த மதிப்பைப் பெற்றுள்ளனவே தவிர பணத்திடமிருந்து மதிப்பை பெறுவதில்லை. சரக்குகளின் விலையை வெளிப்படுத்தும் ஊடகமாகவே பணம் செயல்படுகிறது.

பொருட்களின் விலைகள், பரிவர்த்தனைகள் சுற்றோட்டத்தில் பணத்தின் அளவு, திசைவேகம், ஆகியவற்றுக்கு இடையிலான தொடர்பை பின்வரும் சூத்திரம் விளக்குகிறது.

PT=MV

இதில் P=சரக்குகளின் விலைகள், T= பரிவர்த்தனைகளின் அளவு அல்லது உண்மையான உற்பத்தி செயல்பாடு, M=பணத்தின் வழங்கல், V=பணத்தின் வேகம் (பணப் பரிமாற்றங்களின் புரள்வு விகிதம்).

மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையிலான இந்த சமன்பாடு சரக்குகளின் விலைகளும், பரிவர்த்தனைகளின் அளவுமே, சுற்றோட்டத்தில் பணத்தின் அளவையும், திசைவேகத்தையும் நிர்ணயிக்கும் காரணியாக உள்ளன என்பதை விளக்குகிறது.

ஆனால் புதுசெவ்வியல் பொருளாதாரத்தின் அளவுக் கோட்பாட்டின் பணவியல் சூத்திரம் இதற்கு நேர்மாறாக MV=PT ஆக உள்ளது. இதன் மூலம் பணத்தின் அளவே பொருட்களின் விலைகளை நிர்ணயிப்பதாகக் குறிப்பிடப்படுகிறது.

இந்த பணவியல் கோட்பாடு தவறு என நிரூபிக்கப்பட்டுள்ளது ஏனெனில் அது தவறான கருதுகோளிலிருந்து தொடங்குகிறது என்கிறார் மார்க்சிய பொருளியலாளர் மைக்கேல் ராபர்ட்ஸ். பணத்தின் வழங்கல்/ விநியோகமே பொருட்கள், சேவைகளின் விலைகளை இயக்குகிறது எனக் கருதப்படுகிறது. ஆனால் இதற்கு நேர்மாறானதே உண்மை: சரக்குகளின் வெளியீட்டிலும் விலையிலும் ஏற்படும் மாற்றங்கள் தான் பண விநியோகத்தை/வழங்கலைத் தூண்டுகிறது என்கிறார் மைக்கேல் ராபர்ட்ஸ்.

அளவுக் கோட்பாட்டின் பணவியல் சூத்திரமான MV = PTல் சுற்றோட்டத்தில் பணத்தின் வேகம் (V) நிலையானது என்று பணவியல் கோட்பாடு கருதுகிறது ஆனால் இது உண்மையல்ல, குறிப்பாக பொருளாதாரசரிவின் போதும், பொருளாதார மந்த நிலையின் போதும் பணத்தின் வேகம் குறைகிறது. அளவுக் கோட்பாடு சுற்றோட்டத்தில் பணத்தின் திசைவேகத்தையும்(V), உண்மையான பொருளாதார பரிவர்த்தனைகளையும்(T) புறக்கணித்துள்ளதே இத்தகைய தவறான புரிதலுக்கு வழிவகுத்துள்ளது என்கிறார்.

MV = PT என்ற பணவியல் சூத்திரத்தை MV PT = MV என திருப்பிப் போடுவதன் மூலமே மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் பணவீக்கத்தின் இயக்கத்தை புரிந்து கொள்ள முடியும். MV என்பது PTல் மாற்றத்தை ஏற்படுத்தும் மூலகாரணியாக இல்லை. மாறாக PTயே மூல காரணியாக MVல் தாக்கத்தை ஏற்படுத்துகிறது, PTல் ஏற்படும் மாற்றமே MVஐ இயக்குகிறது.

புது செவ்வியல் பொருளாதாரம் மதிப்புக் கோட்பாட்டை நிராகரித்ததால் பணவீக்கம் குறித்து சரியாக புரிந்து கொள்வதில் தோல்வியடைந்துள்ளது. இதனால் மத்திய வங்கிகளின் பணவீக்க முன் கணிப்புகள் சரிவர மதிப்பிட முடியாமல் தவறிழைக்கின்றன என்கிறார் மைக்கேல் ராபர்ட்ஸ்.

2009 பொருளாதார மந்த நிலையின் போதும், கோவிட்-19ஆல் தூண்டப்பட்ட பொருளாதாரச் சரிவின் போதும் அதற்கு முன் காணாத அளவுக்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளின் மத்திய வங்கிகள் பண விநியோகத்தை (M) அதிகரித்தன. அதனால் பணத்தின் வேகத்தில் வீழ்ச்சி ஏற்பட்டது. இதனால் பணவியல் சமன்பாட்டின் இடது புறத்தில் உள்ள MV, பெரிதாக உயரவில்லை என்று விளக்கம் அளிக்கிறார் மைக்கேல் ராபர்ட்ஸ்.

மத்திய வங்கிகள் பணத்தை அச்சடித்து தள்ளுகிறது. அது பொருளாதாரத்தை இயக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதுவோ, வங்கிகளிலும், பங்குச் சந்தைகளிலும் பதுங்குகிறதே ஒழிய எதிர்பார்த்த அளவிற்கு சரிவடைந்த பொருளாதாரத்தை மீட்க வழிவகுக்கவில்லை.

பணவீக்கத்தை சரியாக புரிந்து கொள்ள மார்க்சின் மதிப்பு கோட்பாட்டிற்கு திரும்ப வேண்டும் என்கிறார் மைக்கேல் ராபர்ட்ஸ்.

சுற்றோட்ட ஊடகத்தின் அளவே விலைகளை நிர்ணயிக்கிறது என்பது தவறான கருத்தாகும். பணத்தின் ஓட்டம் என்பது சரக்குகளின் சுற்றோட்டமே. சரக்குகளின் உருமாற்றங்களின் பிரதிபலிப்பே. பணத்தின் திசைவேகம் என்பது சரக்குகள் தங்கள் வடிவங்களை மாற்றிக் கொள்கிற வேகத்தின் பிரதிபலிப்பே என்று மார்கஸ் கூறுகிறார். பணத்தின் ஓட்டத்தில் தளர்ச்சி என்பது சமூக பரிமாற்றத்தில் தேக்கத்தையே பிரதிபலிக்கிறது. சுற்றோட்டம் இந்தத் தேக்கம் எப்படி ஏற்பட்டது என்பது பற்றி எந்தக் குறிப்பையும் தெரிவிப்பதில்லை. அதன் புலப்பாட்டைக் காட்டுவதோடு நின்றுவிடுகிறது. ஆதலால் பண ஓட்டத் தளர்ச்சிக்கு சுற்றோட்ட ஊடகத்தின் அளவு பற்றாக்குறையே காரணம் எனக் கருதுவது இயல்பு என்கிறார் மார்க்ஸ்.

பணத்தின் வேகம் வீழ்ச்சியடைந்து, உண்மையான பொருளாதார பரிவர்த்தனைகள் குறைந்துவிட்டால், அது பண விநியோகத்தில் செய்யப்படும் எந்த அதிகரிப்பையும் எதிர்க்கும் பணவாட்ட நிலையே நீடிக்கும். பொருளாதாரம் கடுமையாக வீழ்ச்சியடையும் போது, பொருளாதார மந்தநிலையில் அத்தகைய நிலையே ஏற்படும். எனவே உண்மையான பொருளாதாரப் பரிவர்த்தனைகளில் ஏற்படும் சரிவு பண விநியோகத்தில் ஏற்படும் எந்த உயர்வையும் குறைக்கலாம் அல்லது மாற்றியமைக்கலாம். அத்தகைய நிலையே தற்போது ஏற்பட்டுள்ளதாக மைக்கேல் ராபர்ட்ஸ் குறிப்பிடுகிறார்.

இதன் மூலம் மத்திய வங்கிகள் எவ்வளவு தான் பணத்தை அச்சடித்தாலும் உற்பத்தி செய்யப்பட்ட பொருள்களின் பரிவர்த்தனைக்கு தேவையான பணத்தை மட்டுமே சுற்றோட்டத்தால் உட்கிரகிக்க முடியும் என்பதை அறியமுடியும்.

மார்க்சிய பொருளியலாளர்கள் ஜி கார்செடி-யும், மைக்கேல் ராபர்ட்ஸும் பணவீக்கம் குறித்து மதிப்பு விகித பணவீக்கம் என்ற ஒரு புதிய கோட்பாட்டை அளித்துள்ளனர்.

மதிப்புக் கோட்பாட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்செடியின் மதிப்பு விகித பணவீக்கம் (VRI) பொருளாதாரத்தில் உருவாக்கப்படும் புதிய மதிப்பு (கூலி+ இலாபம்=V+S) மற்றும் பண வழங்கல் (வங்கிகளில் பண வைப்புகளாக அளவிடப்படுகிறது (M2)) ஆகியவற்றின் வாங்கும் சக்தியின் மாற்றங்களின் தாக்கத்தை ஒருங்கே கணக்கில் கொள்கிறது. இதில் புதிய மதிப்பு பணவீக்கத்தை நிர்ணயிப்பதில் தீர்மானகரமான பங்கு வகிக்கிறது. பண வழங்கல் பணவீக்கத்தை உயர்த்தும் எதிர் காரணியாக செயல்படுகிறது.

மதிப்பு விகித பணவீக்கம் (VRI) = % ஊதியங்கள் மற்றும் இலாபங்களில் மாற்ற விகிதம் (மொத்த வாங்கும் திறன்=CPP-combined purchasing power) + பண விநியோகத்திலான மாற்ற விகிதம் (M2).

அவர்களின் கோட்பாட்டின் சாராம்சம் என்னவென்றால், நவீன முதலாளித்துவ பொருளாதாரங்களில் பணவீக்கம் வீழ்ச்சியடையும் போக்கு காணப்படுகிறது. ஏனெனில் மொத்த மதிப்பு கூட்டலில் ஊதியங்களின் பங்குகள் குறைந்துள்ளன; மூலதனத்தின் அங்கக மதிப்பு (C/V)உயர்ந்துள்ளது. அதாவது மாறா மூலதனம் எனப்படும் இயந்திரங்கள், ஆலை, மூலப்பொருட்கள் ஆகியவற்றுக்கான முதலீடுகள்(C), மாறும் மூலதனமான கூலியின்(V) அளவை விட (கணிசமாக உயர்ந்துள்ளன.

முதலாளித்துவ உற்பத்தியில் லாபமானது பின்வரும் சூத்திரத்தால் நிர்ணயிக்கப்படுகிறது.

லாபம்=S/C+V

இதில் S= மிகை மதிப்பு (உபரி மதிப்பு), C=மாறா மூலதனம், V=மாறு மூலதனம்.

முதலாளித்துவத்தில் மூலதனத்தின் உயரும் அங்கக மதிப்பால்(c/v) (அதாவது ஊழியர்களுக்கான கூலியுடன் ஒப்பிடும்போது இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட்பத்தில் அதிக முதலீடுகளை செய்தல்) நீண்டகால அளவில் இலாபவீதம் குறையும் போக்கு ஏற்படுகிறது மேலும் பொருளாதாரத்தில் உற்பத்தி செய்யப்படும் புதிய மதிப்பின் (S+V) அளவும் குறையும் போக்கு ஏற்படுகிறது என்கிறது இக்கோட்பாடு.

முதலாளித்துவ உற்பத்தி தொடர்ந்து உழைப்பின் உற்பத்தித்திறனை(ஒரு தொழிலாளிக்கு அதிக அலகுகளை உற்பத்தி செய்யும் விதத்தில்) அதிகரிக்க முயற்சிக்கிறது. இதனால் நீண்டகால அளவில் பொருட்களின் மதிப்பு, அதில் அடங்கியுள்ள உழைப்பு நேரம் குறையும் போக்கு ஏற்பட்டுள்ளது. உழைப்பு மட்டுமே மதிப்பை உருவாக்குகிறது. இதனால் பொருட்களையும், சேவைகளையும் அதிக அளவில் வழங்குவதற்கான பொதுவான போக்கு காணப்பட்டாலும், நீண்ட கால அளவில் பொருட்களின் மதிப்பு வீழ்ச்சியடையும் ஒரு பொதுவான போக்கு உள்ளது. ஏனென்றால், முதலாளித்துவ மூலதனத் திரட்டல் என்பது ஒரு தொழிலாளர் சிக்கன செயல்முறையாகும், எனவே உழைப்பின் உற்பத்தித்திறன் அதிகரிப்பதால் பொருட்களின் மதிப்பு குறையும். பயன் மதிப்புகள் அவற்றில் உள்ள மதிப்பை விட அதிக அளவில் உற்பத்தி செய்யப்படுகின்றன. எனவே, உற்பத்தியின் விலைகள் மதிப்பைப் பொறுத்து இருந்தால், பொருட்களின் விலை உயராமல் வீழ்ச்சியடையும் இயல்பான போக்கு உள்ளது. மொத்த மதிப்பு காலப்போக்கில் மொத்த உற்பத்தியுடன் ஒப்பிடும் போது வீழ்ச்சியடையும் (மைக்கேல் ராபர்ட்ஸ்).

பயன்மதிப்போடு ஒப்பிடும் போது மொத்த மதிப்பு ஒப்பீட்டளவில் குறையும் மற்றும் மொத்த மதிப்புக்கு ஒப்பீட்டளவில் புதிய மதிப்பு குறையும். எனவே நீண்ட கால அளவில் பொருட்களின் விலைகள் வீழ்ச்சியடையும் போக்கும், பணவாட்டமும் காணப்படுகிறது. பொருட்கள், சேவைகளின் விலை வீழ்ச்சியடையும் போக்கு இருந்தாலும், இந்த போக்கை தணித்து பண விநியோகத்தை அதிகரிப்பதன் மூலம் பொருட்கள் மற்றும் சேவைகளின் பண விலையை உயர்த்த வங்கியாளர்கள் முயற்சிக்கிறார்கள்(மைக்கேல் ராபர்ட்ஸ்).

முதலாளித்துவ பொருளாதாரத்தில் மொத்த வேண்டலை எது நிர்ணயிக்கிறது, கூலி, லாபத்தின் மொத்த மதிப்பே பொருட்கள், சேவைகளுக்கான வேண்டலை (demand) நிர்ணயிக்கிறது. கூலியிலிருந்து நுகர்வுப் பொருட்கள் பெறப்படுகிறது, லாபத்திலிருந்து நுகர்வுப் பொருட்கள் வாங்கப்படுவதுடன் முக்கியமாக முதலீடுகள் செய்யப்படுகிறது. கூலி லாபத்தின் மொத்த மதிப்பே பொருளாதாரத்தில் உருவாக்கப்பட்ட புதிய மதிப்பாகும். புதிய மதிப்பு வர்க்கப் போராட்டத்தால் ஊதியங்கள் மற்றும் இலாபங்களாகப் பிரிக்கப்படுகிறது. கூலி நுகர்வோர் பொருட்களை வாங்குகிறது. லாபம் மூலதனம் அல்லது முதலீட்டு பொருட்களை வாங்குகிறது. ஆகவே சரக்குகளுக்கான தேவை என்பது உற்பத்தியில் உருவாக்கப்பட்ட புதிய மதிப்பைப் பொறுத்தது. பொருட்களின் விநியோகத்தின் மீதான தேவை அல்லது வாங்கும் சக்தியை புதிய மதிப்பே தீர்மானிக்கிறது.

1960 முதல் அமெரிக்காவின் தரவைப் பயன்படுத்தி, பணவீக்கத்தின் மதிப்பு விகிதத்தை ஆய்வு செய்ததில் நீண்ட கால அளவில் பணவீக்கம் வீழ்ச்சியடைந்திருப்பதை இவர்கள் கண்டறிந்துள்ளனர். கூலிகள் மற்றும் இலாபங்களின் (புதிய மதிப்பு) ஒருங்கிணைந்த வாங்கும் சக்தி (CPP) மிகவும் மெதுவாக வளர்கிறது. மதிப்பு விகித பணவீக்கத்தின் வீழ்ச்சியை தடுக்க பண விநியோகத்தில் (M2) செய்யப்படும் எந்த மாற்றமும் போதுமானதாக இல்லை என்று குறிப்பிடுகின்றனர் (மைக்கேல் ராபர்ட்ஸ்).

ஆனால் மதிப்பு விகித பணவீக்கத்திற்கும், நுகர்வோர் விலை பணவீக்கத்திற்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? நெருங்கிய தொடர்பு உள்ளது என்கிறார் மைக்கேல் ராபர்ட்ஸ். 1960-1979 க்கும் இடைப்பட்ட காலத்தில், மதிப்பு விகித பணவீக்கமும் உயர்ந்துள்ளது, அமெரிக்க நுகர்வோர் விலை பணவீக்கமும் அதிகரித்துள்ளது; 1980-2019 க்கும் இடைப்பட்ட காலத்தில், மதிப்பு விகித பணவீக்கம் குறைந்துள்ளது, நுகர்வோர் விலை பணவீக்கமும் குறைந்துள்ளது.

பெரும் மந்தநிலை முடிவடைந்ததில் இருந்து பணத்தின் வேகம் கூர்மையாக குறைந்துவிட்டது. பொருளாதாரத்தில் நீண்ட காலத்திற்கு, Tன் வளர்ச்சி அதாவது உண்மையான உற்பத்தி செயல்பாடு அல்லது பரிவர்த்தனைகளின் அளவு மெதுவாக இருக்கும். ஏனென்றால் T என்பது லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவ உற்பத்தியை அடிப்படையாகக் கொண்டிருப்பதாலும், முதலாளித்துவத்தில் இயந்திரமயமாக்கத்தின் மூலம் உழைப்பாளர்களை மாற்றீடு செய்து லாபத்தை உயர்த்த முயற்சி செய்யப்படுவதாலும், உற்பத்தி செய்யப்படும் புதிய மதிப்பில் ஒப்பீட்டளவில் சரிவு ஏற்படுகிறது (ஏனென்றால் உழைப்பால் மட்டுமே மதிப்பை உருவாக்க முடியும், இயந்திரங்களால் அல்ல). T இன் வளர்ச்சி குறைவதால், விலையும், பணவீக்கமும் குறையும் போக்கு உள்ளது. இது தரவுகளின் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. 1990 களின் பிற்பகுதியில் பெரும்பாலான தேசங்களின் பொருளாதாரங்களில் இலாப விகிதம் வீழ்ச்சியடையத் தொடங்கியதால், புதிய மதிப்பின் வளர்ச்சி குறைந்தது, குறிப்பாக கடந்த பத்தாண்டுகளில், விலை உயர்வு குறைந்துவிட்டது (மைக்கேல் ராபர்ட்ஸ்).

முக்கிய முதலாளித்துவ பொருளாதாரங்களில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகளில் பணவீக்க விகிதம் 1980 களில் இருந்து ஒரு வீழ்ச்சியடைந்து வரும் போக்கு காணப்படுகிறது. தேவையைத் தூண்டுவதற்கும் 2 விழுக்காடு பணவீக்க இலக்கை அடைவதற்கும் பண விநியோகத்தை அதிகரிக்க மத்திய வங்கிகளின் முயற்சிகள் இருந்தபோதிலும் இந்தப் போக்கு தொடர்கிறது. கடந்த 20 ஆண்டுகளாக, மத்திய வங்கிகளின் வட்டி விகிதங்கள் மற்றும் பணக் கட்டுப்பாடுகளால் 2 விழுக்காடு பணவீக்க இலக்கை அடைய முடியவில்லை என்பதே உண்மை.

கடந்த 30 ஆண்டுகளில் அமெரிக்கா, வளர்ந்த நாடுகளின் நுகர்வோர் விலை குறியீட்டை உற்று நோக்கும் போது பணவீக்க விகிதம் கீழ்நோக்கிச் செல்வதையும், ஆனால் பண வழங்கலின் வளர்ச்சி நிலையானதாகவோ அல்லது உயர்ந்திருப்பதையோ காணமுடியும். 1993க்கும் 2019 க்கும் இடையில், (M2) பண வழங்கல் ஆண்டுக்கு சராசரியாக 6. 7 விழுக்காடு அதிகரித்துள்ளது, ஆனால் பணவீக்கம்(CPI) 2. 3 விழுக்காடு மட்டுமே உயர்ந்துள்ளது. 2008 இல் ஏற்பட்ட பெரும் மந்தநிலையிலிருந்து, மத்திய வங்கிகளின் பணவிரிவாக்கக் கொள்கையால், பண வழங்கல் வளர்ச்சி ஆண்டுக்கு 9. 6 விழுக்காடாக அதிகரித்தது, ஆனபோதும் பணவீக்கம் (CPI) 1. 8 விழுக்காடாகக் குறைந்தது(மைக்கேல் ராபர்ட்ஸ்).

கோவிட் தொற்றுநோய் தாக்கம் ஏற்படுவதற்கு சற்று முன்பு, பணவீக்க விகிதங்கள் மத்திய வங்கிகளால் இலக்கிடப்பட்ட 2 விழுக்காடு இலக்கு விகிதத்தை விட குறைவாகவே இருந்தது. கோவிட் தாக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சரிவின் போது 2020ல் வங்கிகள் பண விநியோகத்தை 40 விழுக்காட்டிற்கும் மேல் உயர்த்தியது, ஆன போதும் நுகர்வோர் விலை பணவீக்கம் பெரிதும் மாறவில்லை. பொருளாதாரத்தில் ஒரு மிதமான பணவீக்கத்தை தக்கவைக்கும் வகையில் செயல்படுத்த இயலவில்லை; அதற்கு பதிலாக பணம்/கடன் ஆனது நிதி சொத்துக்கள் மற்றும் ஊக முதலீடுகளை நோக்கியே பாய்கிறது, அந்த சொத்துகளின் விலைகளை புதிய உச்சத்திற்கு உயரச்செய்கிறது (மைக்கேல் ராபர்ட்ஸ்).

2021ல் உலகளவில் சரக்குகளின் வழங்கலில் காணப்படும் தட்டுப்பாடுகளால், பணவீக்கம் உயர்ந்துள்ளதே தவிர பொருளாதாரம் மீண்டெழவில்லை.

முதலாளித்துவ பொருளாத உற்பத்தியின் மதிப்பில் ஏற்படும் மாற்றங்களை பகுப்பாய்வு செய்வதன் மூலமே பணவீக்கத்தின் பாதையை நாம் சரியாக புரிந்து கொள்ள முடியும் என்பதையே கார்செடியின் மதிப்பு விகித பணவீக்கக் கோட்பாடு விளக்குகிறது.

சமந்தா