சில நாள்களுக்கு முன்பு ஹெச். ராஜா திடீரென்று ஒரு புது அவதாரம் எடுத்துள்ளார். நானும் திராவிடன்தான், மோடியும் திராவிடன்தான் என்று பேசியிருக்கிறார்.

இத்தனை காலம் திருட்டுத் திராவிடம் என்று சொன்னவர்கள், திராவிடத்தை அழிப்பதே எங்கள் நோக்கம் என்றவர்கள், இப்போது திடீரென்று நாங்களும் திராவிடர்கள்தான் என்று சொல்கின்றனர் என்றால், அது ஏன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

ambedkar 269இதற்குள் ஒரு நுட்பமான சதி இருக்கிறது!

எதிர்த்து அழிக்க முடியாதவர்களை, உள்வாங்கிச் செரிப்பது என்பது எப்போதும் அவாளின் பழக்கம் என்பதை நாம் அறிவோம்! அதனைத் ‘திரிதராஷ்ட்ர ஆலிங்கனம்’ என்று அவர்கள் குறிப்பிடுவது வழக்கம்.

ஹெச். ராஜா இப்படிச் சொன்னவுடன், தமிழ்த் தேசியக் குஞ்சு, குளுவான்கள் எல்லாம் துள்ளிக் குதிக்கின்றனர். திராவிடர் என்றால் பார்ப்பனர்கள் உள்ளே வர மாட்டார்கள் என்றாரே பெரியார், இப்போது வந்து விட்டார்களே. என்ன செய்யப் போகிறீர்கள் என்பது போல் ஒரே கூச்சல்!

இரண்டு பேரும் பேசிவைத்துக் கொண்டு நடிக்கும் நாடகம் இது என்பது கூடவா எங்களுக்குப் புரியாது?

இந்தப் ‘பஞ்ச திராவிடன்’, ‘ராகுல் திராவிட்’ போன்ற கதைகளையெல்லாம் முதலில் அவிழ்த்து விட்டதே உங்கள் ‘தமிழ் இந்து’ தானே! இப்போது அதனையே ஹெச். ராஜா சொல்கிறார், அவ்வளவுதான்!

தங்களைத் திராவிடன் என்று சொல்லிக்கொள்ள வேண்டிய தேவை அல்லது வஞ்சகம் ஏன் அவர்களுக்கு இப்போது ஏற்பட்டுள்ளது? வேறொன்றுமில்லை. திராவிடம் என்பது பாப்பன எதிர்ப்பு என்னும் உண்மையை உடைத்து விட்டால், திராவிடத்தின் மீதுள்ள நம்பிக்கை குறைந்துவிடும் என்று கருதுகின்றனர்.  அதனால்தான் இந்தப் பாசாங்கு!

சரி, நாமும் அதனை ஏற்றுக் கொள்வோம். அவர்கள் திராவிடர்களாகவே இருக்கட்டும். அப்படியானால். ஒரு பொது இடத்தில் அவாள் தங்கள் பூணூலை அறுத்து எறிந்துவிட்டுத் தங்களைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்ளட்டும்.   தங்கள் வீடுகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு இனிமேல் திராவிடச் செல்வன், திராவிட மங்கை, திராவிட மணி என்ற பெயர்களைச்  சூட்டட்டும்! (என் பேச்சின் பின்னூட்டத்தில் ஒரு பேராசிரியர் சொல்கிறார், பிள்ளைகள்  பிறக்கும் வரை ஏன் காத்திருக்க வேண்டும், இப்போதே ஹெச். ராஜா தன் பெயரைத் திராவிட ராஜா என்று மாற்றிக் கொள்ளட்டும் என்கிறார். அதுவும் சரியாகத்தான் இருக்கிறது!)

ஒரு நேர்காணலில், ஒருவர்,  ‘ஹெச். ராஜா இப்படிச் சொல்லிவிட்டாரே, என்ன செய்யப் போகிறீர்கள்  என்று வீரமணியிடமும், ஸ்டாலினிடமும் போய்க் கேளுங்கள்’ என்கிறார். இதிலிருந்தே இவர்களின் கூட்டணி அம்பலப்படுகிறது!

எங்கள் தலைவர்களிடம் ஏன் கேட்க வேண்டும்? திராவிடத்தின் மீது ஏன் திடீர்ப் பற்று என்று ஹெச். ராஜாவைக்  கேளுங்கள்! ஆரியம் - திராவிடம் என்பதெல்லாம் குப்பைக் கூடைக்கு உரியது என்று அம்பேத்கர் சொல்லிவிட்டார் என்று ஒவ்வொரு மேடையிலும் பேசினீர்களே, இப்போது ஏன் அந்தக் குப்பைக் கூடைக்குள் போய் ஏன் ஒளிந்து கொள்கின்றீர்கள் என்று அவரையே கேளுங்கள்.

சரி, அம்பேத்கார் திராவிடம் பற்றி அப்படிச் சொன்னாரா? அதுவாவது உண்மையா?  இதோ... அம்பேத்காரின் எழுத்துகளும், பேச்சுகளும் - தொகுதி  14 - பக்கம் 87 இல் அண்ணல் என்ன சொல்லியிருக்கிறார் என்பதை அப்படியே கீழே தருகிறேன்:-

“திராவிடர்கள், நாகர்கள் என்பது ஒரே மக்களின் வேறு வேறு  பெயர்களே என்பதை ஒப்புக்கொள்ள வெகு சிலரே தயாராக இருப்பர் என்பதை மறுக்க முடியாது.  அதே போன்று திராவிடர்கள், நாகர்களாகத் தென் இந்தியாவில் மட்டுமின்றி, இந்தியா முழுவதிலும், தென் இந்தியாவிலும், வட  இந்தியாவிலும் பரவியிருந்தனர்  என்பதையும் சிலரே ஒப்புக்கொள்வர். ஆயினும் இவை வரலாற்று உண்மைகள் என்பதில் ஐயமில்லை”

இப்போது சொல்லுங்கள், கேள்விக்கு உள்ளாக்கப்பட வேண்டியவர்கள் யார்? போலித்  தமிழ்தேசியர்கள், தங்களின் எஜமானர்களிடம் கேள்வி கேட்க மாட்டார்கள். எனவே நாம் கேட்போம் -

“நேற்று வரையில் திருட்டுத் திராவிடம் என்று பேசிய நீங்கள்,  இன்று நானும்   திராவிடன் என்று பேசுகின்றீர்களே, உங்களுக்கு வெட்கம், மானம் என்பதே கிடையாதா?

- சுப.வீரபாண்டியன்

Pin It