உ.பி.யில், பா.ஜ.க., பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டைக் கூட்டியிருக்கிறது. பிற்படுத்தப்பட்டோர் உரிமைக் காவலராக தன்னை அடையாளப்படுத்த வேண்டிய கட்டாயத்துக்கு உள்ளாகியிருக்கிறது. காரணம், அங்கே வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல் - உ.பி. மாநில தேர்தல். இந்திய அரசியலை நிர்ணயிப்பதில் பெரும் பங்கு வகிப்பதால், பிற்படுத்தப்பட் டோர் வாக்கு வங்கியை பா.ஜ.க. குறி வைக்கிறது. அதே பிற்படுத்தப்பட்ட மக்களின் கல்வி, வேலை வாய்ப்பு, பொருளாதார முன்னேற்றங்களைப் பற்றிக் கவலைப்படாமல் வாக்குகளை மட்டுமே குறி வைக்கிறார்கள்.

மற்றொரு பக்கம், பகுஜன் சமாஜ் கட்சியை நடத்தும் மாயாவதி, ‘பிராமணர்’களைக் குறி வைத்து காய் நகர்த்துகிறார். ஆட்சிக்கு வந்தால் “பிராமணர்”கள் உயர்வுக்கும் பாதுகாப்புக்கும் அரணாக நிற்பேன் என்று உறதியளித்து வருகிறார். கடந்த செப்டம்பர் 7ஆம் தேதி, லக்னோவில் அவர் நடத்திய பகுஜன் சமாஜ் கட்சி மாநாட்டு மேடையில் இந்துக் கடவுள் ராமன், சிவன், விநாயகன் படங்கள் வைக்கப்பட்டு, அந்தக் கடவுள்களைப் போற்றி முழக்கங்களும் எழுப்பப்பட்டுள்ளன. வேத புரோகிதர்கள் ‘வேத சுலோகங்களை’, ‘உச்சாடனம்’ செய்து, மாநாட்டு நிகழ்ச்சிகள் தொடங்கியுள்ளன.

“இனி, பிற்படுத்தப் பட்ட. தலித் தலைவர்கள் சிலைகளை, பூங்காக்களை நான் நிறுவ மாட்டேன், மதத் தலைவர்கள், பிற்படுத்தப்பட்ட - தலித் அல்லாத தலைவர்களுக்கு பெருமை சேர்ப்பேன்” என்று மாநாட்டில் வெளிப்படையாகவே பேசியிருக்கிறார். “குறுகிய புத்தி கொண்ட, ஜாதிக்காரர்கள் தான் ‘பிராமணர்’களை எதிர்க்கிறார்கள்; அவர்கள் மீது வன் முறையை ஏவுகிறார்கள்; அவர்களை சட்டத்தின் பிடியில் கொண்டு வந்து நிறுத்துவேன்” என்றும் மாயாவதி பார்ப்பனர்களை மகிழ்வித்திருக்கிறார். பா.ஜ.க., வாக்கு வங்கிக்காக பிற்படுத்தப்பட்டோர் உரிமை பேசுகிறது என்றால், மாயாவதி, “பிராமண” ஆதிக்கத்தை வாக்கு வங்கி அரசியலுக்காக நியாயப்படுத்துகிறார்.

“இராமன், கிருஷ்ணன் போன்ற இந்து கடவுள்களை வணங்க மாட்டேன்; புரோகிதர்களை வைத்து சடங்குகளை நடத்த மாட்டேன்” என்று புத்தம் தழுவியபோது அம்பேத்கர் எடுத்த உறுதிமொழிகளை காற்றில் பறக்கவிடவும் தயாராகி விட்டார்.

தமிழ்நாட்டில் இப்படி பா.ஜ.க.வினர்கூட - பகுஜன் சமாஜ் கட்சியினர் பேசுவதைப் போல் பேச முடியாது; மக்கள் அதை ஏற்க மாட்டார்கள். காரணம், தமிழ்நாட்டில் பெரியார் - அம்பேத்கர் கொள்கைகளை வெகுமக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள் அந்த அளவு தமிழ்நாடு பக்குவப்படுத்தப் பட்டிருக்கிறது. அவ்வளவு எளிதாக ‘தலைகீழாக’ இங்கே புரட்டிப் போட்டுவிட முடியாது.

சமுதாயத்தை விழிக்கச் செய்து, அவர்களிடம் கொள்கை களை விதைப்பதில் தேர்தல் அரசியலில் ஈடுபடாத பெரியார் இயக்கங்களின் உழைப்பும் தொண்டும் எவ்வளவு முக்கியத்துவம் பெறுகின்றன என்பதற்கு இவை சான்றுகள்.

தமிழ்நாட்டில் இப்படி நேரடியாக மக்களை மடைமாற்றிட முடியாது என்ற காரணத்தால் ‘ஆரிய இந்து வேறு; தமிழ் இந்து வேறு’ பெரியார் ஒட்டு மொத்த இந்துவையும் கடவுளையும் வறட்டுத்தனமாக எதிர்த்து, தமிழர் பண்பாட்டை சிதைத்து விட்டார் என்ற திசை திருப்பக்கூடிய சூழ்ச்சியான கருத்து களோடு சிலர் களமிறங்கியிருக்கிறார்கள். ‘திராவிட எதிர்ப்பு’ என்ற போர்வையோடு தமிழ்மொழிக் காவலர்களாக அடையாளப்படுத்தி நவீன பார்ப்பனியத்தின் தூதுவர்களாக மாறி நிற்கிறார்கள். தமிழ் பேசும் ‘பிராமணர்கள்’ தமிழர்களே; பிறமொழி பரம்பரையில் வந்தவர்கள், தமிழ்நாட்டில் வாழ்ந்தாலும் தமிழர்கள் அல்ல என்று ‘தமிழர்’ அடையாளத்துக்கு பார்ப்பனிய முலாம் பூசுகிறார்கள்!

‘திராவிட ஆட்சி’ தமிழகத்துக்கு எதிரி என்று இதுவரை பேசியும் எழுதியும் வந்தவர்கள், தி.மு.க. ஆட்சிக்கு வந்த பிறகு நவீனத் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கான கருத்தியல்களையும் செயல் திட்டங்களையும் தொடர்ந்து அறிவிக்கத் தொடங்கி யிருப்பதை இவர்களால் சகித்துக் கொள்ள முடியவில்லை. ‘இந்திய அரசு - மத்திய அரசு அல்ல; அது ஒன்றிய அரசு”. தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு தனி இடஒதுக்கீடு; கோயில் களில் தமிழ் வழிபாட்டு உரிமையைப் பரப்புவதற்கான திட்டம்; தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை வளர்த்தெடுக்கும் உலகப் பொருளாதார நிபுணர்களைக் கொண்ட ஆய்வுக் குழு; அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகராகும் உரிமை; பெண்களுக்கு வேலை வாய்ப்புகளில் 40 சதவீத ஒதுக்கீடு; ஒன்றிய ஆட்சியின் வேளாண் சட்டம், குடியுரிமைச் சட்டம், ‘நீட்’ சட்டங்களுக்கு எதிராக சட்டமன்றத்தில் தீர்மானம்; தேசியக் கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு; தமிழ்நாட்டுக்கான புதிய கல்விக் கொள்கையை உருவாக்க, கல்வியாளர் குழு; ஆதி திராவிடர் பட்டியலினப் பிரிவினருக்கு தனி வாரியம் என்ற அடுக்கடுக்கான அறிவிப்புகள்.

தொழில் வளர்ச்சித் திட்டங்களால் மவுனமாகிப் போனவர்கள் இப்போது ‘திராவிடர் எதிர்ப்பு’ என்ற முனை மழுங்கிய கருத்தாக்கத்தை மீண்டும் எடுக்கத் தொடங்கி யிருக்கிறார்கள். ஒரு திராவிட இயக்கம், ‘பொருநை நதி’ நாகரிகத்தை அடையாளப்படுத்தும்போது, இந்திய துணைக் கண்ட வரலாறு - தமிழ்நாட்டிலிருந்து தான் எழுப்பப்பட வேண்டுமென்று திராவிட ஆட்சியின் முதல்வர் பேசும்போது திராவிடம் தமிழருக்கு எதிரானது என்ற தங்கள் வாதம் சுக்குநூறாக நொறுங்குவதை இவர்களால் சீரணிக்க முடியவில்லை.

எனவே தமிழ்நாட்டு மக்களைக் குழப்பும் ‘ஆரிய - இந்து; தமிழர் இந்து’ என்ற வாதங்களை இறக்குமதி செய்கிறார்கள். உ.பி.யில் பா.ஜ.க.வும் மாயாவதியும் அங்கே உள்ள மக்களைக் குழப்பி, வெற்றி பெற்று விடலாம்; ஆனால் தமிழ்நாட்டில் நவீனப் பார்ப்பனியத்தின் திசை திருப்பல்களால் ஒரு போதும் வெற்றி பெறப் போவது இல்லை.

- விடுதலை இராசேந்திரன்