திராவிட நாகரிகத்தை உறுதி செய்கிறது, ராகிகடி ஆய்வு
அரியானாவில் ராகிகடி என்ற இடத்தில் 4500 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த மிகப் பழமையான மனித எலும்புக் கூடு அறிவியல் சோதனைக்கு (டி.என்.ஏ.) உள்ளாக்கப்பட்டது. அப்பகுதியில் வாழ்ந்த சிந்துவெளி நாகரிக மக்கள் திராவிடர்களே என்றும், ஆரிய மரபணு வழி வந்தவர்கள் அல்ல என்றும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்பட்டுவிட்டது.
ஆரியர்கள் வந்தேறிகள் அல்ல; அவர்கள் பூர்வீகக் குடிகள் என்ற இந்துத்துவா வரலாற்றுப் புரட்டுக்கு சரியான அறிவியல் மறுப்பாக வெளிவந்திருக்கும் இந்த ஆய்வை கடந்த 3 ஆண்டு காலமாக வெளியிடாமலேயே ஆய்வாளர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.
‘இந்தியா டுடே’ 2018 செப்.10இல் வெளிவந்த ஆங்கிலப் பதிப்பு ‘சங்கடம் தரும் உண்மை’ “An Inconvenient Truth” என்ற தலைப்பில் விரிவான கட்டுரை வெளியிட்டுள்ளது. அதன் சுருக்கமான தமிழ் வடிவம்:
புனேவின் டெக்கான் கல்லூரியின் துணை வேந்தரான டாக்டர் வசந்த் ஷிண்டே ஒரு அகழ்வாராய்ச்சியாளர். இவரும் இவரது அணியினரும் ஹரியானாவின் ராகிகடி என்ற இடத்தில் அகழ்வாராய்ச்சியை 2015ல் மேற் கொண்டனர். அந்த ஆய்வின் முடிவுகள் பெரும் தயக்கத்திற்குப் பிறகு இப்போது வெளியாகி யிருக்கின்றன. இந்த முடிவை இந்துத்துவ வாதிகள் எப்படி எதிர்கொள்வார்களோ என்ற அச்சம்தான் தயக்கத்திற்குக் காரணம்.
ராகிகடியில் இந்த அணி அகழ்வாராய்ச்சியை மேற்கொண்டபோது, 4,500 ஆண்டுகள் பழமையான எலும்புக்கூடு ஒன்று கிடைத்தது. அந்த எலும்புக்கூட்டின் மண்டை ஓட்டில் உள்ள Petrous bone என்ற காதுகளைப் பாதுகாக்கும் பகுதியை பிரித்தெடுத்து, அதிலிருந்து அந்த எலும்புக்கூட்டின் மரபணு ஆராயப்பட்டது. அந்த ஆராய்ச்சியின் முடிவுகள் சில கேள்விகளுக்குப் பதில் அளித்திருக்கின்றன.
கேள்வி: ஹரப்பா நாகரீகத்தைச் சேர்ந்த வர்கள்தான் சமஸ்கிருத மொழியையும் வேதகால இந்து மதத்தையும் உருவாக்கினார்களா ?
பதில்: இல்லை.
கேள்வி: அவர்களது மரபணு, ஆரியர் -திராவிடர் என்ற பிரிவில் யாரோடு பொருந்துகிறது ?
பதில்: திராவிடர்கள்.
கேள்வி: தற்போதைய காலத்தில் இவை தென்னிந்தியர்களுடன் அதிகம் பொருந்துகின்றனவா, அல்லது வட இந்தியர்களுடனா?
பதில்: தென்னிந்தியர்கள்.
எல்லாமே இந்துத்துவாவாதிகளுக்கு மிகச் சிக்கலான கேள்வி, பதில்கள். இந்த ஆய்வின் முடிவுகள் விரைவில் ‘சயின்ஸ்’ இதழில் பதிப்பிக்கப்படவிருக்கின்றன.
2015லேயே ஆய்வு முடிந்துவிட்டது என்றாலும் விவகாரம் அரசியல் ரீதியாக உணர்ச்சிகளைத் தூண்டக்கூடியது என்பதால் ஷிண்டே முடிவுகளைப் பதிப்பிக்கத் தயங்கினார். ஹரப்பா தொடர்பான எந்த ஆய்வு முடிவானாலும் தற்போதை மத்திய அரசின் இந்துத்துவக் கருத்தை எதிர்க்க வேண்டி யிருக்கும். அதாவது, வேத காலமும் அப்போதைய இந்து மதமும்தான் இந்திய நாகரீகத்தின் துவக்கம் என்பதைத்தான் தற்போதைய அரசு வலியுறுத்த விரும்புகிறது.
ஆனால், ஹரப்பா நாகரீகம் தொடர்பான ஆய்வில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு இது சிக்க லானது. 1924ல் சிந்துச் சமவெளி நாகரீகத்தின் சிதைவுகளை காலனீய அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்தபோதே, அது வேத காலத்திற்கு முந்தைய நாகரீகம் என்பது தெளிவாகி விட்டது. அந்த நாகரீகம் வடமேற்குப் பகுதியிலிருந்து வந்த ஆரியர்களால் அழிக்கப் பட்டது என்ற கருதுகோளை அவர்கள் முன் வைத்தனர். பின் வந்த ஆராய்ச்சியாளர்கள் ஆரியர்களின் ஆக்கிரமிப்பு என்ற கருத்தை ஏற்கவில்லை. ஆனால், சிந்துச் சமவெளி நாகரீகம் வேதகாலத்திற்கு முந்தையது என்ற கருத்தை ஏற்றனர்.
இந்துத்துவ தேசியவாதிகளைப் பொறுத்த வரை இந்த ஆரிய ஆக்கிரமிப்பு கருத்தாக்கம் பெரும் எரிச்சலையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியது. ஆனால், தென்னிந்தியர்களைப் பொறுத்தவரை சிந்துச் சமவெளி நாகரீகம் திராவிட நாகரீகம் எனக் கருதினர்.
உண்மையில் சிந்துச் சமவெளி யில் வசித்தவர்கள் யார் என்பது மர்மமாகவே இருந்தது. ராக்கிகடியில் கிடைத்திருக்கும் 4500 ஆண்டு பழமையான இந்த எலும்புக்கூடு இதில் சில கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது. இந்த எலும்புக்கூட்டுக்கு ஐ4411 எனப் பெயரிடப்பட் டிருக்கிறது. ராகிகடிதான் இந்தியாவின் மிகப் பெரிய ஹரப்பா-சிந்துச்சமவெளி நாகரீக பகுதி என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் சிந்து பகுதியில் 1920களில் அகழ்வாய்வு செய்யப்பட்ட மொஹெஞ்ஜோ - தாரோவைவிட மிகப் பெரிய ஆகழ்வாய்வுத் தளம் இது.
1960களில் இருந்தே இங்கே ஆய்வு மேற் கொள்ளப்பட்டுவருகிறது. கிறிஸ்து பிறப்பதற்கு 7000 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே இங்கு ஒரு நகர்ப்புற நாகரீகம் இருந்திருக்கிறது என்பது பல முறை நிரூபிக்கப்பட்டுவிட்டது.
இன்றைக்கு 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே இந்தப் பகுதியில் உயர்வான ஒரு ஹரப்பா நாகரீகம் இருந்திருக்கிறது என்பதற்குப் போதுமான சான்றுகள் கிடைத்திருக்கின்றன. 4 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக மிகப் பெரிய நகரமாக இருந்து, பிறகு மர்மமான முறையில் வீழ்ந்த இந்த நகரம்தான் இந்தியாவின் முதல் நகர்ப்புற நாகரீகமாக இருக்கக்கூடும்.
இந்துத்துவவாதிகள் இந்திய வரலாற்றை மாற்றி எழுதுவதில் மிகத் தீவிரமாக இருக்கும் இந்தக் காலத்தில், அறிவியல் அதற்கு எதிர்த் திசையில் சென்றுகொண்டிருக்கிறது. அதாவது, ராகிகடி எலும்புக்கூட்டின் மரபணுவில் மரபணுக் குறியீடு R1a1 இல்லை. இந்த R1a1 குறியீடுதான் ஆரிய மரபணுக் குறியீடு என குறிக்கப்படுகிறது. இந்த மரபணுவானது 4000 ஆண்டுகளுக்கு முன்பாக கருங்கடலுக்கும் காஸ்பியன் கடலுக்கும் இடைப்பட்ட ஸ்டெப்பி புல்வெளி பகுதியிலிருந்து இந்தியாவுக்கு வந்த மக்களிடம் இருக்கும் மரபணுக் குறியீடு இதுதான். இந்த மரபணுக் குறியீடு வட இந்தியர் களிடமும் வடக்கு ஐரோப்பியர்களிடமும் வலுவாகக் காணப்படுகிறது.
சிந்துச்சமவெளிப் பகுதியில் கிடைத்த ஒரே எலும்புக்கூட்டில் செய்யப்பட்ட இந்த ஆய்வில், R1a1 என்ற ஆரிய மரபணு குறியீடு இல்லை என்பதை வைத்து சில முடிவுகளை எட்டலாம். அதாவது சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேத கால நாகரீகத்திற்கு முந்தையது. தொடக்கக் கால சமஸ்கிருதத்தைப் பேசியவர் களின் மரபணுவிலிருந்து மாறுபட்டது. இந்த தொடக்கக் கால சமஸ்கிருதத்தைப் பேசியவர் களின் மரபணு குறியீடுகள் தற்போதைய வட இந்தியர் களிடம் பொதுவாகக் காணப்படுகின்றன.
அந்த காலகட்டத்தில், மத்திய ஆசியாவி லிருந்து பெரும் எண்ணிக்கையில் வந்தவர்கள், தெற்காசியாவின் மரபணு சித்திரத்தை மாற்றி அமைத்தார்கள் என்றாலும் பழங்கால ராகிகடி யில் வசித்தவர்கள், இந்த மத்திய ஆசியாவைச் சேர்ந்தவர்களோடு எந்தத் தொடர்பும் இன்றி இருந்திருக்கிறார்கள். அதாவது சிந்துவெளி மக்களின் மூதாதையர்களுக்கும் இந்த மத்திய ஆசிய (ஆரிய மரபணு கொண்ட) மனிதர் களுக்கும் எந்த தொடர்பும் இல்லை.
இஸ்லாமிய, ஐரோப்பிய நாட்டவர்கள் இங்கே வந்து ஆதிக்கம் செலுத்தினார்கள், நம் கலாச்சாரத்தை அழித்தார்கள் என்று அரசியல் முழக்கங்களை எழுப்புகிறவர்கள் இங்கே உண்டு. ஆனால், அவர்களது மரபணுப் பதிவுகளைவிட, ஸ்டெப்பி புல்வெளிக்காரர்களின் மரபணுப் பதிவு நம்மிடம் அதிகம் உள்ளது.
சரி, இந்த 4500 ஆண்டு பழமையான I 4411 என்பவர் யார்? “இந்த மனிதருக்கும் தென்னிந்தி யாவின் பழங்குடியின மக்களுக்கும் கூடுதல் தொடர்பிருக்கிறது” என்கிறார் மரபணு ஆராய்ச்சியாளர் ராய். அதாவது, தற்போதைய நீலகிரி மாவட்டத்தில் வசிக்கும் இருளர்களின் மரபணுவோடு இது கூடுதலாக ஒத்துப் போகிறது. இந்த மனிதர்கள் ஆரம்பகால திராவிட மொழியைப் பேசியிருக்கக்கூடும்!!
இந்த ஆய்வு முடிவுகள் வேறு சில அதிர வைக்கும் உண்மைகளையும் சொல்கின்றன. அவை என்ன?
சிந்துச் சமவெளி வரலாற்றை மாற்றி எழுத இந்துத்துவ சக்திகள் செய்த முயற்சி - இந்த ஆய்வுகளில் இன்னொரு விஷயமும் தெரிய வந்திருக்கிறது. அதாவது, இந்தியாவில் ஏற்கனவே வசித்தவர்களின் மரபணுக்களுடன் இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியில் இருந்து வந்தவர்களின் மரபணுக்களின் கலப்பும் ஏற்பட்டிருக்கிறது. வெளியிலிருந்து வந்த இவர்கள் இரானிய விவசாயிகள் என்று அழைக்கப்படுகிறார்கள்.
இதற்கு முன்பாக பழங்கால மரபணுக்கள் பரிசோதனை செய்யப்பட்டபோதும் இது உறுதிப்படுத்தப்பட்டது. இந்த காலகட்டத்தில் விவசாயத்தில் புதிய யுத்திகள் அறிமுகப் படுத்தப்பட்டன. அவை மேற்காசியாவுடன் ஏற்பட்ட தொடர்பாலேயே சாத்தியமாயின என்ற முந்தைய கருத்தாக்கத்திற்கும் இது வலுச் சேர்க்கிறது.
சிந்துச் சமவெளி நாகரீகம் முடிவுக்கு வரும் காலகட்டத்தில், யுரேசிய ஸ்டெப்பி புல்வெளிப் பகுதிகளிலிருந்து பெரும் தொகையான மக்கள் திரள் இந்தியாவில் குடியேறியது என்ற முந்தைய ஆய்வு முடிவை அஸ்திவாரமாக வைத்தே ராகிகடி ஆய்வு கட்டியெழுப்பப்பட்டிருக்கிறது. ஸ்டெப்பி புல்வெளிகளிலிருந்து தெற்காசியாவுக்கு மட்டுமல்ல வட ஐரோப்பாவுக்கும் மக்கள் புலம் பெயர்ந்திருக்கிறார்கள். இவ்வகையான மக்கள் தொகை கலப்பே ஐரோப்பிய மொழிகளுக்கும் வட இந்திய மொழிகளுக்கும் இடையிலான உறவை விளக்கப் போதுமானது.
ஹரப்பாவில் நிலவிவந்த திராவிட நாகரீகம் முடிவை எட்டிய காலத்தில் ஸ்டெப்பி புல்வெளியிலிருந்து வேதகால மக்கள் குதிரை களில் வந்தேறினர் என பள்ளிக்கூடங்களில் படித்தவர்களுக்கு சமீபத்திய ஆய்வு முடிவு ஆச்சரியமளிக்காது.
ராகிகடி ஆய்வுகள் முடிந்த பிறகு, அந்த ஆய்வில் என்ன கிடைத்திருக்கிறது என்பதை அறிந்துகொள்ள பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. இதையொட்டி வழக்கம்போல பொய்க் கதைகளும் பரப்பப்பட்டன. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் இந்த ஆய்வின் மரபணு ஆராய்ச்சியில் பங்கேற்ற ராய் என்பவரைப் பேட்டியெடுத்ததாகவும் அவர், ராகிகடி மரபணுவுக்கும் வடஇந்திய பிராமணர்களின் மரபணுவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறியதாகவும் ஒரு இந்தி நாளிதழ் பொய்யாக திரித்து செய்தி வெளியிட்டது. ஆக, இந்தோ - யுரேப்பியன் மொழிக் குடும்பம் என்பது இந்தியாவிலிருந்து தோன்றியது என்றது அந்த நாளிதழ். ஆனால், அப்படி ஆய்வில் ஏதும் இல்லை. அது ஒரு பொய்ச் செய்தி.
ராகிகடியிலிருந்து கிடைத்த ஜீன்களில் R1a1 - அதாவது ஆரிய மரபணு இல்லை என்பதுதான் இந்த ஒட்டுமொத்த ஆய்வும் சுட்டிக்காட்டும் ஒரு விஷயம். ஆனால், இந்துத்துவ வரலாற்றைப் பொறுத்தவரை, ஆரிய ஆக்கிரமிப்பு என்பது இல்லவேயில்லை, அதாவது ஆரியர்கள் வெளியிலிருந்து வர வில்லை என்று கூறப்படும் நிலையில் இந்த முடிவு அவர்களுக்கு மிகுந்த அதிர்ச்சியளிக்கக் கூடியது.
இந்துத்துவவாதிகள் சமீப காலமாக, சிந்துச் சமவெளி நாகரீகம் என்பது வேதகால நாகரீகம் என்று நிறுவும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். 2014ல் பா.ஜ.க. அரசு பெரும்பான்மையுடன் பதவியேற்ற பிறகு, இந்த இந்துத்துவ வரலாற்று முயற்சிகளுக்கு ஆதரவும் பணமும் தாராளமாக வாரி வழங்கப்படுகிறது.
மத்திய கலாச்சாரத் துறை அமைச்சரான மகேஷ் சர்மா இந்திய வரலாற்றைத் திருத்தி எழுதும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார். 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வரலாற்றுக் கமிட்டிக் கூட்டம் ஒன்றை ஆர்க்கியாலஜிகல் சர்வே ஆஃப் இந்தியாவின் இயக்குனர் ஜெனரல் அலுவலகத்தில் கூட்டினார். இந்தக் கமிட்டியின் தலைவர் கே.என். தீக்ஷித். அன்று நடத்தப்பட்ட கூட்டத்தின் நோக்கம், இந்தியாவின் பழங்கால வரலாற்றின் சில பகுதிகளைத் திருத்தி எழுதுவதற்கு ஏதுவாக ஒரு அறிக்கையை அளிக்கச் சொல்வது தான்.
அந்தக் கூட்டத்தின் குறிப்புகளில் பின்வரும் வாக்கியங்கள் இடம் பெற்றிருக் கின்றன: “அகழாய்வு முடிவுகள், மரபணு ஆய்வுகள் போன்றவற்றைப் பயன்படுத்தி தற்கால இந்துக்கள் என்பவர்கள், பல
ஆயிரம் வருடங் களுக்கு முன்பாக இந்தியாவில் வாழ்ந்தவர் களிலிருந்து வந்தவர்கள் என்று நிரூபிக்க வேண்டும். பழங்கால இந்து கதைகள் உண்மை யானவை, அவை வெறும் தொன்மங்கள் அல்ல என்று கூற வேண்டும்”.
ஆனால், உண்மையான அறிவியல் ஆராய்ச்சி இதற்கு எதிரான திசையிலேயே ஆய்வுகளை எடுத்துச் சென்றது.
இந்த ஆய்வு முடிவுகளை வெளியிடுவது என்பது, அவ்வளவு எளிதான காரியமாக இல்லை.
ஹார்வர்டில் மக்கள் தொகை மரபணு ஆய்வாளரான டேவிட் ரெய்க் Who We Are and How We Got Here என்ற புத்தகத்தை எழுதியிருக் கிறார். அதில் இந்தியாவின் வட மேற்குப் பகுதியிலிருந்து யுரேசியர்கள் குடியேறி னார்கள் என்பதைச் சொல்வதே எவ்வளவு சிக்கலான காரியமாக இருந்தது என்று வியக்கிறார்.
பிறகு ஒரு வழியாக, ‘மூடு மந்திரமாக’ சில வார்த்தைகளைப் பயன்படுத்தி இந்தப் பிரச்சனை தீர்க்கப்பட்டதாம். அதாவது தென்னிந்தியர் களைக் குறிக்க ‘Ancestral South Indian’ (ASI) என்ற வார்த்தையும் வட இந்தியர்களைக் குறிக்க ‘Ancestral North Indian’ (ANI) வார்த்தையும் பயன் படுத்தப்பட்டது. பிறகு ஏஎன்ஐயிடம், இந்தியத் துணைக் கண்டத்திற்கு வெளியிலிருந்து வந்தவர்களின் மரபணுக்கள் இடம் பெற்றிருக்கின்றன என்று குறிப்பிடப்பட்டது. ஏஎன்ஐ என்பதற்குப் பதிலாக பழங்கால வட இந்தியர்கள் என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தால் அவ்வளவுதான். நிலைமை மோசமாக இருந்திருக்கும்.
இதே பிரச்சனை தற்போதைய ஆய்வுக்கும் வந்தது. ரெய்க், அவரது அணியினர், ராகிகடியில் ஆய்வுசெய்தவர்கள் இணைந்து The Genomic Formation of South and Central Asia இதழில் ஒரு ஆய்வுக் கட்டுரையை பதிப்பித்தனர். இந்தக் கட்டுரையில் தெற்காசியாவிற்கு வெளியிலிருந்து புலம் பெயர்ந்து மக்கள் வந்தார்கள் என்ற வாக்கியம் வரக்கூடாது என ராகிகடியின் ஆய்வாளர் களில் ஒருவரான ஷிண்டே ரெய்க்கிடம் கூறினார். அதற்கு பதிலாக, இந்த இரு மக்கள் தொகைக்கும் (வட இந்தியர் - யுரேசியர்) இடையில் கலப்பு இருந்தது என்று வேண்டுமானால் கூறலாம் என்றார்.
ஆனால், இந்த ஆய்வு முடிவு ஏன் இவ்வளவு தாமதமாக வெளியிடப்பட்டது என்பது மர்மமாகவே இருக்கிறது. தாங்கள் சேகரித்த ஒரு மாதிரி மாசுபட்டதால் இந்தத் தாமதம் என அதிகாரபூர்வமாக காரணம் சொல்லப்படுகிறது. ஆனால், அரசியல் ரீதியாக அசௌகர்யமான உண்மைகளை இந்த ஆய்வு முடிவு சொல்லும் என்பதாலேயே தாமதம் ஆனதாக ஆய்வுத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், ஹார்வர்ட் அணியினர் பொறுமையிழந்து தங்கள் முன்னோட்ட அறிக்கையை வெளியிட்டு விட்டனர். இதற்குப் பிறகு, ஷிண்டே தன் ஆய்வின் முடிவுகளை சற்று அடக்கிவாசிக்க ஆரம்பித்தார். ராகிகடியில் இருந்தவர்கள் உள்ளூர் காரர்களைப் போலத் தான் இருந்திருப் பார்கள். தென்னிந்திய பழங்குடியின மக்களோடு சற்று தொடர்பிருந் திருக்கும் என்று அடக்கிப் பேச ஆரம்பித்தார்.
ஆனால், ஷிண்டே மட்டுமே இந்த முடிவுக்கு வர முடியுமா?