கடந்த பத்தாண்டு கால பி.ஜே.பி ஆட்சி இந்தியாவின் வளத்தை எல்லாம் ஈவு இரக்கம் இல்லாமால் உறிஞ்சு குடித்து விட்டது. அரசுக் கருவூலத்தை களவாடியாது மட்டுமல்லாமல் மக்கள் தாய்ச்சீலையில் (கோவணம்) இருந்ததையும் உருவி விட்டார்கள். இந்த நிலையில் வரும் நாடாளும் மன்றத் தேர்தலிலும் அவர்கள் வெற்றிப் பெற்றால் இன்னொருமுறை இந்திய மக்களாகிய நமக்கு வாக்களிக்கும் உரிமை கூட இல்லாமல் போகலாம். தமிழ் நாட்டுக்குக் கூட தட்சணப் பிரதேசம் என்று பெயர் மாற்றப் படலாம். தமிழ் நாட்டில் ஒழிந்து கிடக்கும் நிலங்களில் வடமாநில மக்களைக் கொண்டு வந்து (இலங்கையில் சிங்களவர் செய்வதைப் போல) அதிகாரப் பூர்வமாக குடியமர்த்தி புதிய ஊர்களையும், ஊராட்சிகளையும் உருவாக்கலாம். நம் குழந்தைகளுக்கு தமிழில் பெயர் வைத்தால் அது தேசத் துரோகம் என்று கைது பண்ணலாம். அல்லது தண்டனையாக அபராதம் வசூலிக்கப் படலாம். குறிப்பாக தமிழ் நாடும் தமிழ் மக்களும் தமிழ் மொழியும் அழித்தொழிக்கப் படும்.
இந்தத் தேர்தல் தமிழுக்கும், தமிழர்களுக்கும் வாழ்வா, சாவா என்கிற தேர்தல். இரண்டாயிரம் ஆண்டுகளாக சனாதன சாக்கடையில் மூழ்கிக் கிடந்த தமிழர்களை கை தூக்கி விட்டதும் கழுவி சுத்தப்படுத்தி மனிதராக்கியதும் ஆங்கிலேயர் அளித்த கல்வியும் அதன் மூலம் எழுச்சிப் பெற்ற திராவிட இயக்கங்களின் போராட்டமுமே.
இன்று தமிழர்கள் துறைதோறும் கால் பதித்து முன்னேறி வருகிறார்கள். தமிழர்கள் காலூன்றி முன்னேறாத துறைகள் இல்லை என்று சொல்லலாம். ஒரு காலத்தில் ஒட்டுத் திண்ணையும் ஒட்டிய வயிறுமாக விதியைக் காரணம் காட்டி அடிமைப் பட்டுக் கிடந்தவர்கள்; கருப்பட்டியையும் சாளைக் கருவாட்டையும், கூனிக் கருவாட்டையும் இடித்து தின்று தண்ணீர்க் குடித்து குடலை நனைத் தவர்களின் வாரிசுகளும் கால் வயிறு கஞ்சியைக் குடித்து ஆண்டைகளிடம் கை கட்டி நின்றவர்களின் வாரிசுகள் இன்று மருத்துவராகவும், பொறியிலாளராகவும், மாவட்ட ஆட்சியராகவும் என உயர்வு பெற்று வாழ்வாங்கு வாழ்கிறார்கள்.ஒரு சில ஆதிக்க சாதிகளைத் தவிர தமிழகத்தின் அத்தனை சாதியை சார்ந்தவர்களும் இப்படித்தான் வாழ்ந்தார்கள். தமிழர்கள் இன்று முன்னேறியது போல் அன்று அவர்களை முன்னேற்றம் அடைய விடாமல் முடக்கிப் போட்டது யார்? அவர்களின் மூளையையும் முன்னேற்றத்தையும் கட்டிப் போட்டது யார்?
இன்று சரவணபவன் போல் எத்தனையோ புதுமையான உணவகங்கள், தேநீர் விடுதிகள், இனிப்பகங்கள், கேட்டரிங் என்று இந்தியா முழுவதும் தொழில் செய்து பெரும் சாதனை செய்து வருகிறவர்களின் முன்னோர்களின் நிலை எப்படி இருந்ததென்று தெரிந்து கொண்டால்தான் இன்றைய இந்த வெற்றிக்கும் வாழ்வுக்கும் யார் யாரெல்லாம் காரணம் என்று தெரிய வரும்.
நாடார்கள் ஒடுக்கப் பட்டவர்கள்; எனவே பிற வகுப்பினர், நாடார் சமைத்த உணவை அக்காலத்தில் சாப்பிடும் வழக்கம் இல்லை. இந்த நிலையை மாற்றி நாடார் தம் அறுசுவை உணவைப் பிற தமிழ்ச் சாதிகளுக்கும் அறிமுகப் படுத்தியவர் பெரியார்.
செங்கற்பட்டில் 1929 ஆம் ஆண்டு பிப்ரவரி 17, 18 நாட்களில் முதல் சுயமரியாதை மாநாடு நடை பெற்றது. ‘அம்மாநாட்டிற்கு உணவு சமைத்தவர்கள் யார்? விருதுநகர் நாடார் சமையற்காரர்களே. அச்சாப்பாட்டை எல்லோரோடும் சேர்ந்து உண்ண உடன்படுவோரே மாநாட்டுப் பிரதிநிதிகளாக வரலாம் என்று முன்கூட்டியே அறிவிக்கப் பட்டது. அப்படியே நடந்தது. இத்தகைய புரட்சியை அதுவரை, தமிழ்நாட்டின் பொது இடங்களில் கண்டதில்லை. எவர் சமைத்தாலும் எவர் பரிமாறினாலும் எல்லோரும் சேர்ந்து உண்பதை தன்மான இயக்கமே முதன் முதலில் தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தியது. இவையெல்லாம் பிற்படுத்தப் பட்ட நாடார் சமுதாயம் துறைதோறும் முன்னேறப் பெரியார் முயன்றதை எடுத்துக் காட்டும்.
1948 மே 8,9 நாட்களில் தூத்துக்குடி தருவையில் திருவாளர் கே.வி.ஏ.சாமி, வி. வி. தனுஷ்கோடி, பி.ஏ.பி.எஸ்.சண்முகம், நீதிமாணிக்கம் போன்றோர் உழைப்பால் நடைபெற்ற திராவிடர் கழக மாகாண மாநாட்டில் திரு. வே.வ. தனுஷ்கோடி அவர்கள் மேற்பார்வையில் இலட்சக்கணக்கில் திரண்ட மாநாட்டுப் பிரதிநிதிகளுக்கு விருதுநகர் நாடார்களே சமைத்தனர். இலட்சக்கணக்கில் திரண்டிருந்த அத்துணை பேருக்கும் தங்குத் தடையின்றி விறுவிறுப்பாகவும் அவர்கள் சுவைமிக்க உணவளித்தார்கள்.’
பிற்பட்ட சமுதாயங்களின் மொத்த நலன்களுக்காகவும் நாடார் சமுதாயத்தின் ஏற்றத்திற்காகவும் அயராது பாடுபட்ட பெரியார் ஈ.வே. இராமசாமியின் திண்ணிய வரலாறு நாடார் சமுதாயம் உள்ளளவும் அதன் நெஞ்சில் நீங்காதுறையும். (நூல்: உறவின் முறை)
பெரியாரின் தொண்டு தமிழ்ச் சாதியினர் அறிவில் உயரவும் அரசு அலுவல்களில் இடம் பெறவும் உதவிற்று. இவ்வளர்ச்சி கண்டு பொறுக்க வில்லை பிராமணர்கள். சக்ரவர்த்தி இராசகோபால் ஆச்சாரியார் சென்னை இராஜ்ய முதல் அமைச்சராக இருந்த போது ‘குலதர்மக் கல்வித் திட்டம்’ கொணர்ந்தார். இதன் உள்நோக்கம் தமிழ்ப் பிள்ளைகளைத் தற்குறிகள் ஆக்குவதே.
இதனைக் கூர்ந்து கவனித்துக் கொண்டிருந்த பெரியார் சிலிர்த்தெழுந்தார். சங்கு முழங்கிற்று; நாடெங்கும் போர் முரசொலித்தது. பெரியார் அன்று ‘குல தர்மக்’ கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு கொடுத்திருக்கா விட்டால் – அவர் பிள்ளைகள் நாடெங்கும் போராட்டத்தை நடத்தியிரா விட்டால் -இப்போராட்டத்தின் இன்றியமையாமையை உணர்ந்து காமராசர் இத்திட்டத்தை நீக்காமல் இருந்திருந்தால் விளைவு என்ன ஆகியிருக்கும்? சக்ரவர்த்தி இராசகோபால ஆச்சாரியார் தமிழரின் ஒரு தலைமுறையை முட்டாள் தலைமுறையாக இந்த முப்பதாண்டுகளில் உருவாக்கியிருப்பார். இதில் பிராமணர்கள் தோற்றுப் போனார்கள். தோற்றுப் போன பிராமணர்கள் எப்படியாவது வகுப்புவாரி உரிமையை ஒழிக்க வேண்டும் என ஆழ்ந்து செயல்பட்டு வருகிறார்கள். (நூல்: உறவின் முறை’)
பு.இராசதுரை அவர்கள் தன் ‘உறவின் முறை’ நூலில் எழுதியதைப் போல பார்ப்பனர்கள் தலைமையில் நடக்கும் ஒன்றிய அரசு வகுப்புவாரி உரிமையை எல்லா துறைகளிலும் நடைமுறைப் படுத்துவதில்லை. அன்று பெரியாரும் காமராசரும் முறியடித்த குலக்கல்வித்திட்டம் இன்று ‘விஸ்வகர்மா யோஜனா’ என்று புதிய வடிவத்தில் வந்து நிற்கிறது. நம் மாணவர்களின் மருத்துவப் படிப்பிற்குத் தடை போட நீட்டைக் கொண்டுவந்து விட்டார்கள். அவை நம் குழந்தைகளின் மூளையை முடமாக்கும். பனித்துளிக்குள் எரிமலை ஆழ்ந்து கிடப்பதைப் போன்றது பார்ப்பனிய சூழ்ச்சி. முதல்வர் ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான இன்றைய தி.மு.க. அரசு அதை எதிர்த்து போராடி வருகிறது.
பார்ப்பனர்களை ஏதுமறியா பிள்ளைப் பூச்சி, என்று எண்ணும் நம் தமிழர்கள் குறிப்பாக தங்களை ஆண்ட பரம்பரை என்று சொல்லிக் கொள்ளுபவர்கள் நமக்கு கல்விக்கண் கொடுத்த பெருந்தலைவர் காமராஜரை தில்லியில் கொலை செய்ய நடந்த சதியை கொஞ்சம் எண்ணிப் பார்க்க வேண்டும்.
அப்பொழுது காமராசர் அகில இந்தியக் காங்கிரஸ் கட்சியின் தலைவராயிருந்தார். அவரின் சோசலிச் சமத்துவம் நோக்கிய பேச்சுகள் சனாதனிகளுக்கு ஆத்திரத்தைத் தூண்டிக் கொண்டேயிருந்தன. ஏற்றத்தாழ்வை உருவாக்கும் சாதியப்படிநிலையை நிலைநிறுத்தும் இந்து ராச்சியம் அமைக்கும் எண்ணத்திற்கு பாரதூரமான விளைவுகளை உருவாக்கக் கூடும் என்பதால் அவசரமான ஒரு வன்முறை அவர்களுக்குத் தேவைப்பட்டது. அது மட்டுமில்லாமல் பசுவதைத் தடுப்புச் சட்டம் குறித்து காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் விவாதம் நடந்த போது அதையும் எதிர்த்தார் காமராசர். கட்சிக்குள் அதற்கு ஆதரவாகத் தீர்மானம் கொண்டு வந்தாலும் ஏற்கப் போவதில்லை என அவர் காட்டமாகக் கூறியதும் இந்துத்துவக் கும்பலின் செவிகளில் விழுந்தது. அன்றே காமராசரைக் கொலை செய்யத் திட்டம் தீட்டியது இந்துத்துவக் கும்பல்.
1967 ஆம் ஆண்டு நவம்பர் 7-ம் நாள் பசுவதைத் தடுப்புப் போராட்டம் என்ற பெயரில் ஆர்.எஸ்.எஸ்.-ன் பசுமாட்டு பாதுகாப்புப் பிரிவாக தொடங்கப்பட்ட சர்வதலியா கோ ரக்ஷா மகா அபியான் சமிதி சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. சுமார் 2 லட்சம் எண்ணிக்கையிலான ஆர்.எஸ்.எஸ், சங்பரிபவார், பாரதிய ஜன சங்கம் இந்துத்துவ மதவெறிக் கும்பல் “கோமாதா கி ஜே” என்கிற காட்டுக் கூச்சலுடன் நாடாளுமன்றத்தை முற்றுகையிட்டன. திரிசூலங்கள், ஈட்டிகள், தடிகள், கம்புகளுடன் வந்தவர்கள் சாதுக்கள் என்னும் நிர்வாண சாமியார்கள். அவர்களின் வெறியாட்டத்தில் தலைநகரே அலங்கோலமானது. கலவரத்தை உருவாக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் நுழைந்த அந்த வெறிக் கும்பல் தலைநகரின் முக்கியப் பகுதிகளான அகில இந்திய வானொலி நிலையம், பத்திரிக்கையாளர் மன்றம், இர்வின் மருத்துவமனை, பொதுக் கட்டடங்கள், திரையரங்குகள், வாகனங்கள் ஆகியவற்றை அடித்து நொறுக்கியதோடு அருகிலிருந்த குடியிருப்புப் பகுதிகளுக்குள்ளும் புகுந்து தீ வைத்தன. அதே கலவரச் சூட்டுடன் டில்லியில் ஜந்தர் மந்தரில் உள்ள வீட்டினில் தங்கியிருந்த காமராசரைக் கொலை செய்யவும் கிளம்பின.
காமராசர் வீடென நினைத்து ஒரு அமைச்சரின் வீட்டைத் தாக்கிய கும்பல் பின்பு காமராசரின் வீட்டை அறிந்து அங்கு சென்றது. கதவினை உடைத்து வீட்டிலுள்ள அனைத்துப் பொருட்களையும் நொறுக்கியது. காமராசரின் பாதுகாவலர், உதவியாளர் தடுத்தும் அவர்களை அடித்து முன்னேறிய கும்பல் பணியாளையும் தாக்கித் தீ வைக்க முனைந்தது. வீட்டின் அறைகளையும் கொளுத்தியது. கொலை வெறியுடன் காமராசர் தங்கியிருந்த அறையை நோக்கியும் சென்றது. அதற்குள் வீட்டிலிருந்து எழுந்த புகை பின்னாலிருந்த அடுக்குமாடி குடியிருப்பாளர்களுக்கு தெரிய வர அவர்கள் காவலர்களுக்கு தகவல் தந்தனர். காவலர்கள் விரைந்து வந்திருக்காவிடில் பெரும் தலைவரின் உயிர் ஆபத்தில் முடிந்திருக்கும்.
காமராஜரை கொலை செய்ய முயற்சித்தவர்களின் தொடர்ச்சிதான் இன்றைய ஆர்.எஸ்.எஸ். பி.ஜே.பி., சனாதன இந்துத்துவா கும்பல் என்பதை தமிழர்களாகிய நாம் நன்கு நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.
காமராஜர் பிறந்த நாடார் சமுகம் இன்று வயிற்றுப் பாட்டுக்கு குறையில்லாமலும் நாகரீகமாக வாழவும் வளம் பெற்று விட்டது. ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு முன்னால் அவர்களின் முன்னோர்கள் எப்படி வாழ்ந்தார்கள் என்று வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால்தான் தெரியும். தூத்துக்குடி, திருநெல்வேலி, திருச்செந்தூர், நாகர்கோவில், அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தானம் போன்ற இடங்களில் நாடார்கள் வாழ்ந்த வாழ்வை கருத்துற்றால் கண்களில் இரத்தத்தோடு உயிரும் ஒழுகும்.
….’ஆங்காங்கிருந்த நாடார்கள் சிலர் துயர் தாங்க இயலாதவர்களாய் திரிசிரபுரம், கோயம்புத்தூர், சேலம் முதலிய இடங்களை அடைந்து செட்டி, முதலி, என்னும் பெயர்களுடன் இன்றளவும் வாழ்ந்து வருகின்றனர். பலர் முகமதியர்களாகி உயிர் பிழைத்தனர். பலர் இலங்கையை அடைந்தனர்…. நாடார்கள் தாழ்த்தப்பட்ட சாதியைச் சார்ந்தவர்கள் என்ற முறையில் குடை எடுத்துச் செல்லுதல், காலணிகள் அணிதல், தங்க ஆபரணம் அணிதல் ஆகியவற்றிற்குத் தடை விதிக்கப் பட்டிருந்தனர். அவர்களின் வீடுகள் ஒர் அடுக்குக்கு மேல் இருக்கக் கூடாது. பசுக்களில் பால் கறப்பதற்கும் அனுமதிக்க பட வில்லை. உயர்ந்த சாதியிலுள்ளப் பெண்களைப் போன்று நாடார் பெண்மணிகள் தண்ணீர் குடங்களை இடுப்பில் வைத்துச் செல்லக் கூடாது. மேலாடைப் போர்த்திக்கொள்ள கூட அவர்கள் அனுமதிக்கப்பட வில்லை’ (நூல் : உறவின் முறை)
வரலாற்றில் ஏன் இந்த மாதிரியான இன்னல்களை நாடார்கள் அனுபவித்தனர் என்று தேடினால், இந்திய நிலப்பரப்பு முழுக்க இருந்த இந்த மண்ணின் பழங்குடியினருக்கு அழிம்பு செய்து அழித்தொழித்து அவர்களின் வாழ்வாதாரத்தை பறித்த அதே ஆரியப் பார்ப்பனர்கள்தான் நாடார்களையும் சிற்றூர்களிலிருந்தும் பெரும் நகரங்களிலிருந்தும் காட்டுக்குத் துரத்தினர்.
நாடார்களின் சாதியில் உட்பிரிவில் ஒன்று கருக்குப் பட்டையர். அவர்கள் தொழில் பனையேறுதல். அவர்களிடம் பனை எப்படி உருவானது என்று தொன்மக்கதை ஒன்று உண்டு. அந்தக் கதை நாடார்களுக்கும் பார்ப்பனர்களுக்கும் இருந்த உறவு எப்படிப்பட்டது என்று அறிந்து கொள்ள உதவும். நாடார்களுக்கு பார்ப்பனர்கள் எப்படி எல்லாம் கொடுமை செய்திருப்பார்கள், என்னென்ன தீங்கு செய்திருபார்கள் என்று புரிந்து கொள்ள உதவும்.
நாடார்கள் காடுகளில் வாழ்ந்த காலங்களில் வறுமை மிகவும் வாட்டியது. பிழைப்பதற்கு வழியில்லை. அவர்களின் மனைவி மக்கள் என அனைவரும் உண்ண உணவின்றியும், உடுக்க உடையின்றியும், இருக்க வீடின்றியும் வாடி வதங்கிக் காடுகளில் கிடக்கையில் பார்ப்பனரும், பார்ப்பனத்தியும் ஒருநாள் இவர்கள் எதிரே பார்ப்பனர் வெள்ளை வேட்டியும், பார்ப்பனத்தி பச்சை வண்ணப் புடவையும் கட்டி வந்தார்கள். அவர்கள் இரண்டு பேர்களையும் பார்த்த நாடார் மக்கள் அனைவரும் சினம் கொண்டு எழுந்தார்கள். இந்த பார்ப்பனர்கள்தானே நம்மை ஊருக்குள் இருக்கக் கூடாது என்று அடிமைகளைக் கொண்டு துரத்தி அடித்தார்கள். இவர்களால்தானே காடுகளில் கிடந்து சாகிறோம். இவர்களால்தானே நம்மினத்திற்கு இந்த இழிநிலை வந்தது என்று அந்த பார்ப்பனரையும் பார்ப்பாத்தியையும் பிடித்து மண்ணில் குழி தோண்டி தலை கீழாக நட்டு விட்டார்கள். அப்படி நடப்பட்ட பார்ப்பனர் ஆண் பனையாகவும் நடப்பட்ட பார்ப்பனாத்தி பெண் பனையாகவும் மாறினார்கள் என்கிறது அந்தத் தொன்மக்கதை.
இந்தக் கதையின் உட்கருத்து மிகத் தெளிவாக நாடார்களின் பொருளாதாரப் பின்னடைவுக்கும் சாதி இழிவுக்கும் காரணம் யார் என்பதையும் தங்களின் பிறவி எதிரி யார் என்பதையும் மேகமற்ற வானில் கதிரோன் போல விளக்குகிறது.
தொடக்கக் காலத்தில் சாதியத் தலைவர்கள் சங்கங்களைத் துவங்கும் போது தங்கள் சாதி இழிவைப் போக்கவும் பிற சாதியினரோடு இணைந்து வாழ்ந்து பொது எதிரியை வீழ்த்தவும் பாடு பட்டார்கள். ஆதி நாள்களில் நாடார் மகாசன சங்கம் மாநாடுகளை தந்தை பெரியார் தலைமையில் நடத்தி இருக்கிறார்கள்.
பெரியார் வழிவந்த திராவிட அமைப்புபான தி.மு.க. பெரியார் சிந்தித்ததை எல்லாம் செயலாக்கி வருகிறது. இந்த நேரத்தில்தான் நாம் அவர்களுக்குத் தோள் கொடுத்து துணை நிற்க வேண்டும். தமிழகத்தில் எந்த பட்டியல் வகுப்பைச் சார்ந்தவர்களுக்கும் என்ன குறை இருந்தாலும் நாம் அதையெல்லம் கழற்றி ஓரமாக வைத்து விட்டு முதலில் இந்தியாவைக் காப்பாற்ற வேண்டும். அதற்கு இந்தியா கூட்டணியை வெற்றிப் பெற செய்ய வேண்டும்.
நாளை தமிழ்நாடு மாநிலம் இருந்தால்தான் அதில் ஒவ்வொரு சமூகமும் தங்கள் உரிமையை, ஒதுக்கீட்டை எதையுமே கோரிப் பெற முடியும். பி. ஜே.பி ஒன்றியத்தில் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால் … அதை நினைத்துப் பார்க்கவே அச்சம் ஆளை விழுங்குகிறது.
இப்பொழுது நம் முன்னே நிற்பது இரண்டு தேர்வுகள். ஒன்று நம் முன்னோர்கள் கல்வி மறுக்கப் பட்டு கொத்தடிமையாக கிடந்ததைப் போல நம் எதிர் கால தலைமுறையினரும் அடிமைப் பட்டுக் கிடப்பதற்கு வழிவகை செய்யப் போகிறோமா? அல்லது தற்காலத்தில் உருவாகிவரும் தடைகளை அகற்றி இன்னும் கூடுதலான உரிமைகளைப் பெற்று எதிர்கால தலைமுறைக்கு கையளிக்கப் போகிறோமா? என்பதுதான்.
நீதிக் கட்சியும் அதன் தொடர்ச்சியாக தந்தை பெரியார், பெருந்தலைவர் காமராஜர், அறிஞர் அண்ணா, கலைஞர் அவர்களைப் போலவே இன்றைய தமிழ் நாட்டின் முதலமைச்சர் தளபதி அவர்களும் சமூக நீதி பாதையில் நடத்திடும் இன்றைய ஆட்சியே தமிழகத்தின் அனைத்து வளர்சிக்கும் ஆணிவேர் என்பதை நினைவில் கொண்டு ஆட்சியாளர்களை தேர்ந்தெடுப்போம்.
- இறை. ச.இராசேந்திரன், மும்பை