பா.ஜ.க. ஆளும் பல்வேறு மாநிலங்களில் தொடர்ந்து மதக் கலவரங்கள் உருவாக்கப்படுவது பற்றி தங்கள் கருத்து?

இந்து மதத்தின் அடிப்படையில் வாக்குகளை அணி திரட்டுவது என்பது பாஜக தொடர்ச்சியாக செய்து கொண்டுவரும் நடைமுறைதான். ஆனால் அண்மைக் காலங்களில் நாட்டின் பொருளாதாரப்  பிரச்சனைகள்  மக்களுக்குப் பெரிய அளவில் நெருக்கடியைத் தந்து கொண்டிருக்கின்றன. குறிப்பாக, பெட்ரோல் - டீசல் - சமையல் எரிவாயு விலை உயர்வு, விலைவாசி உயர்வு, வேலை வாய்ப்பின்மை போன்ற பிரச்சனைகள் அதிகமாகிக் கொண்டிருக்கும் வேளையில் பாஜக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க வேண்டி இருக்கிறது. இந்தப் பிரச்சனைகளால் மிகுந்த நெருக்கடியைப் பாஜக சந்தித்துக் கொண்டிருப்பதால், மதத்தின் அடிப்படையில் இந்துக்களை அணிதிரட்டி இஸ்லாமியர்களைத் தனிமைப்படுத்தி, இந்துக்களுக்கு எதிரி இஸ்லாமியர்கள் என்கிற அணிதிரட்டலை உருவாக்கலாம் என்று திட்டமிட்டு முயற்சித்து வருகிறார்கள்.

viduthalai rajendran 216ராமநவமி ஒவ்வொரு ஆண்டும் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த ஆண்டு ராம நவமியில் இவ்வளவு பெரிய கலவரத்தை நடத்துவது, தமிழகத்தின் எல்லையில் அனுமாருக்குச் சிலை வைப்பது, இவற்றை எல்லாம் பார்க்கும்போது மதத்தின் அடிப்படையில் மக்களை அணிதிரட்டும் நிகழ்ச்சியாகத்தான் இருக்கிறது.

மத்தியப் பிரதேசத்தில் ராமநவமி ஊர்வலத்தில் ஏற்பட்ட கலவரத்திற்குப் பின்னர் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்து கைது செய்வது என்பது இயல்பானதுதான். ஆனால் புல்டோசரை ஆயுதமாகக் கொண்டு, கூட்டுத் தண்டனை (Collective Punishment) என்று சொல்லி ஒரு சமூகத்துக் குடியிருப்பை இடித்துத் தரைமட்டமாக்கியது, அடிப்படையாக அரசியல் சட்டத்திற்கு எதிரானது. அனைவருக்கும் வீட்டு வசதி ஏற்படுத்தித் தர வேண்டும் என்று அரசியல் சட்டம் அடிப்படை  உரிமையாகச் சொல்கிறது. சர்வதேச மனித உரிமை ஆணையம், உலகின் அனைத்து மக்களுக்கும் வீட்டு வசதியை உறுதிப்படுத்த வேண்டும் என்று சொல்கிறது. அரசியல் சட்டம் சொல்வதையும், சர்வதேச மனித உரிமை ஆணையம் சொல்வதையும், நீதிமன்றத் தடையையும் மீறி புல்டோசரை வைத்து வீடுகளை இடித்துத் தள்ளுவது என்ற அளவிற்கு அவர்கள் போகிறார்கள் என்றால், மதவறியை மேலும் தீவிரமாகக் கூர்மைப்படுத்துகிறார்கள்.

இந்துக்களுக்கான அணிதிரட்டல் என்பதைப் பாஜக செய்கிறது. மோடி ஆட்சிக்கு வந்த காலத்திலிருந்து எந்த இந்துக்களுக்கான உரிமைகளுக்காக இவர்கள் குரல் கொடுத்திருக்கிறார்கள். ஏழை எளிய விளிம்பு நிலை இந்துக்கள்தான் இந்த நாட்டில் அதிகமாக இருக்கிறார்கள். இந்த ஏழைகளின் மீது பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலையை ஏற்றுகிறார்கள். சாதாரண ஏழை இந்துக்களைப் பற்றி இவர்கள் கவலைப்படவில்லை. அதே நேரத்தில் அதானி, அம்பானி போன்ற பணக்கார, பெரு முதலாளிகளுக்குப் பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்கிறார்கள். பாரத ஸ்டேட் வங்கியில் 73 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்கிய கௌதம் அதானி, உலகத்தின் பத்து பணக்காரர்களில் ஒருவராக இருக்கிறார்.

ஏழை எளிய விளிம்புநிலை மக்களை முற்றிலும் ஒழித்து விட்டுப் பெரு முதலாளிகளுக்கும், பனியா இந்துக்களுக்கும், பார்ப்பன இந்துக்களுக்கும்தான் இவர்கள் ஆட்சி செய்கிறார்கள். இதை நாம் மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும். இந்துத்துவாவை முன்னெடுப்பவர்கள் பணக்காரர்களுக்காகவும் பார்ப்பனர்களுக்காகவும் பேசுகிறார்கள். இந்துத்துவாவை எதிர்ப்பவர்கள்தான் ஏழை எளிய விளிம்புநிலை இந்துக்களுக்குக்காகக் குரல் கொடுக்கிறார்கள்  என்ற விழிப்புணர்வை நாம் மக்களிடம் ஏற்படுத்த வேண்டும்.

மற்ற மாநிலங்களில் மதக்கலவரங்களை பாஜக நடத்திக் கொண்டிருக்கும் வேளையில், தமிழகத்தில் அண்மையில் இசைஞானி இளையராஜா, இயக்குநர் பாக்கியராஜ் போன்றோர் மோடியைப் புகழ்ந்து கருத்துத் தெரிவித்திருப்பதை எப்படிப் பார்க்கிறீர்கள்?

கடந்த காலங்களில் தமிழ்நாட்டில் காலூன்றுவதற்கு ஒவ்வொரு முயற்சியாகச் செய்து பார்த்தார்கள். ஆரம்பத்தில் ‘கழகங்கள் இல்லாத தமிழகத்தை’ உருவாக்குவோம் என்று சொன்னார்கள். அது முற்றிலுமாகத் தோற்றுப்போனது. இரண்டாவது அதிமுகவை இரண்டாக உடைத்து அதில் ஒரு அணியைத் தன்னுடைய கைவசம் வைத்துக்கொண்டு வளர நினைத்தார்கள். அதன்பிறகு சில பிரச்சனைகள் வந்தபின் இரண்டு அணியையும் இணைத்து வைக்க வேண்டிய ஒரு கட்டாயம் வந்து, இரண்டு அணியையும் இணைத்து, தங்கள் விருப்பப்படி அவர்கள் மூலம் ஆட்சி நடத்திக் கொண்டிருந்தார்கள். அதற்குப் பிறகு ரஜினிகாந்தைக் கொண்டு வந்து அதன் மூலம் தாங்கள் வளர நினைத்தார்கள். ஆனால் அவர் வரமுடியாது என்று இறுதியில் சொல்லிவிட்டார். இந்த முயற்சிகள் தொடர்ந்து தோல்வி அடைந்து வருவதைப் பார்த்து, இந்த முயற்சிகளை மேற்கொண்டவர்களே தமிழ்நாட்டில் இது போன்ற முயற்சிகள் வெற்றி பெறாது என்று புரிந்துகொண்டார்கள். மக்களிடம் இந்த நிலைப்பாடுகளுக்கு ஆதரவில்லை.

இப்போது அதிமுக மிகவும் பலவீனமாகிவிட்டது என்பதால் அதிமுகவைத் தனக்குக் கீழ் வைத்துக்கொண்டு, தமிழகத்தில் அதிமுக இடத்தைப் பிடித்து அரசியல் செய்யலாம் என்று தொடர்ந்து திமுகவை எதிர்த்துக் கொண்டிருக்கின்றார்கள்.

பாஜகவின் தமிழகத் தலைவர் அண்ணாமலை, எச்.ராஜா போன்று மதவாதம் பேசுவதில்லை. அது தமிழ்நாட்டில் எடுபடாது என்று புரிந்துகொண்டார்கள். திமுகவை எதிர்த்து அரசியல் செய்வதால் மட்டுமே நமக்கு விளம்பரம் கிடைக்கும், மக்கள் நம்மைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள். மக்கள் மத்தியில் நம்முடைய கட்சியைப் பதிய வைக்கலாம் என்று, முழுக்க முழுக்க திமுக எதிர்ப்பு என்பதை மட்டும் குறிவைத்து அவர்கள் பயணிக்கிறார்கள். அப்படிப் பயணம் செய்யும்போது மோடிக்கு ஒரு பிம்பம் வேண்டும் என்பதால் கலைத்துறையில் இருந்து 4-5 பேரை அழைத்து வந்து மோடியினுடைய பெருமையைப் பேச வைத்தால் மக்கள் மனதில் மாற்றம் வருமா என்று நினைக்கிறார்கள்.

இளையராஜாவின் இசையைத்தான் தமிழக மக்கள் ரசிக்கிறார்களே தவிர அவருடைய ஆன்மீகக் கருத்துகளையோ, அரசியல் கருத்துகளையோ தமிழக மக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது இப்போது நன்கு தெளிவாகி விட்டது. அதே போல் பாக்கியராஜ் அவர்களும் காலையில் மோடியைப் புகழ்ந்து பேசிவிட்டு, மாலையில் பெரியார், அண்ணா, கலைஞர், எம்.ஜீ.ஆர் என்று மாற்றிப் பேசி விட்டார். அதனால் இந்த முயற்சிகளும் தோல்வி அடைந்து விட்டன.

- தோழர் விடுதலை இராசேந்திரன், பொதுச் செயலாளர், திராவிடர் விடுதலைக் கழகம்

நேர்கண்டவர்: மா.உதயகுமார்

Pin It