கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

(25.01.2024 இதழில் வெளியான உரையின் தொடர்ச்சி)

இந்தியா விடுதலை அடையும் நேரத்தில் காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஸ்வாமிகள் மனுஸ்மிருதியை அரசியல் சட்டமாக்க வேண்டும் என்று கேட்டார். சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்ட மிகப் பெரிய தலைவர்களில் ஒருவராக போற்றப்படுகிற பாலகங்காதர திலகர் அடிப்படையில் மகாராஷ்டிராவைச் சேர்ந்த சித்பவன் பார்ப்பனர் பிரிவைச் சேர்ந்தவர். மராட்டியத்தில் சிவாஜி மற்றும் அவரது வகையறாக்கள் சத்ரபதிகள். பிரதமருக்கு பேஷ்வாக்கள் என்று பெயர். மன்னர்கள் குடித்துவிட்டு நடனமாடிக் கொண்டிருப்பார்கள். ஆனால் ஆட்சியதிகாரத்தை சித்பவன் பார்ப்பனர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். அவர்களுக்கு கீழே தான் கெய்க்வாட், பான்சிலேவ், சிந்தியா, கோல்கார் உள்ளிட்ட மராட்டியப் பகுதித் தலைவர்கள் இருப்பார்கள். பின்னர் ஆங்கிலேயர்களுடன் போர் புரிந்து அந்த மராட்டிய பேஷ்வாக்களை தோற்கடித்துதான் மராட்டியப் பகுதிகளை ஆங்கிலேயர்கள் கைப்பற்றினர்.

ஆங்கிலேயர்கள் இந்த நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என்று கேட்ட சித்பவன் பார்ப்பனர்கள், வெளியேறும்போது இந்த நாட்டை எங்களிடம் (சித்பவன் பார்ப்பனர்களிடம்) தந்துவிட்டு செல்லுங்கள் என்றனர். சித்பவன் பார்ப்பனர்கள்தான் இந்த நாட்டை ஆள வேண்டும் என்று கூறி பார்ப்பன ராஜ்ஜியம், ராம ராஜ்ஜியம், இந்து ராஷ்டிரம் ஆகியவற்றை உருவாக்கி, சனாதன தர்மத்தை நிலைநிறுத்துவோம் என்ற குறிக்கோளை வைத்து ஒரு அமைப்பைத் தொடங்கினார்கள். அந்த அமைப்பிற்கு ராஷ்டிரிய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்) என்று பெயர். அந்த அமைப்பை உருவாக்குவதில் முக்கிய பங்காற்றிய அனைவரும் சித்பவன் பார்ப்பனர்கள்.

ஆர்.எஸ்.எஸ்-இன் மிக முக்கிய தலைவரும் காந்தியும் கொலை செய்ய திட்டம் வகுத்துக் கொடுத்தவருமான சாவர்க்கர் ஒரு சித்பவன் பார்ப்பனர். காந்தியாரை கொலை செய்த நாதுராம் கோட்சே சித்பவன் பார்ப்பனர். ஆர்.எஸ்.எஸ்.ஸின் குரு ஜீ கோல்வாக்கர் ஒரு சித்பவன் பார்ப்பனர். இன்றைக்கு ஆர்.எஸ்.எஸ் தலைவராக இருக்கக்கூடிய மோகன் பகவத் ஒரு சித்பவன் பார்ப்பனர். இந்த நாட்டில் என்ன என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நிகழலாம். ஆனால் இங்கு சனாதனத்தை நிலைநிறுத்தி இந்து ராஷ்டிரத்தை படைத்துவிட வேண்டும் என்ற அவர்களது கொள்கையில் மட்டும் ஒரு போதும் மாற்றமில்லாமல் இருக்கிறார்கள்.

சில பேர் இந்துராஷ்டிரம் என்றவுடனே அது நமக்கானது தானே என்று நினைத்துக் கொண்டிருக்கலாம். இந்து ராஷ்டிரத்தில் இந்துக்கள் சூத்திரர்களாகத்தான் வாழ வேண்டும். காந்தி கூட இந்துதான். அவரை கொலை செய்த கோட்சேவும் இந்துதான். காந்தி தன்னை சனாதனவாதி என்று சொல்லிக்கொண்டவர். பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் அவரவர் வேலைகளை செய்வது சரிதான் என்று சொன்னவர் காந்தி. ஆனால் சனாதன காந்திக்கு, காந்திக்கு என்ற இந்துவுக்கு இந்துராஷ்டிரத்தில் வாழத் தகுதி கிடையாது என்று கொல்லப்பட்டார்.

நாம் நினைப்பதைப் போன்று இந்து ராஷ்டிரம் என்பது சாதாரணமானது அல்ல, அது எவ்வளவு கொடூரமானது என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். அவர்கள் பழைய சாம்ராஜ்ஜியத்தை கட்டமைக்க நினைக்கிறார்கள். இந்த நிலையில்தான் அவர்கள் இன்றைக்கு இந்தியாவை “பாரத்” என்று அழைப்போம், சனாதனத்தை மீண்டும் நிறுவுவோம் என்கிறார்கள். 1984-இல் பாஜகவின் தலைவராக அடல் பிகாரி வாஜ்பாய் இருந்தார். அவரை நல்லவர் என்று கூறிக்கொள்வார்கள். அன்றைக்கு பாஜகவுக்கு இரண்டு எம்.பி.க்கள் மட்டும்தான் இருந்தனர். அந்த சமயத்தில் வெளிநாட்டில் பேசிய வாஜ்பாய், எங்களுக்கு மட்டும் சாதகமான சூழ்நிலை அமைந்தால் நாங்கள் விரும்பும் “கனவு இந்தியா”வை கட்டமைத்தே தீருவோம், பாரத்தை அமைத்தே தீருவோம் என்றார்.

அந்த நேரத்தில் இரண்டு எம்.பி.க்கள் மட்டும் இருந்ததால் அவர்கள் அடக்கி வாசித்தனர். இன்றைக்கு 303 எம்பிக்கள் பாஜகவுக்கு மட்டும் உள்ளனர். பின்னர் ஆதரவு கட்சிகள் உள்ளனர். ஜனநாயக முறையில் நாடாளுமன்றத்தில் இந்தியாவை ஒரு சர்வாதிகார நாடாக, இந்து ராஷ்டிர நாடாக அறிவிக்க முடியும். ஆனால் அவர்கள் அமைதிகாப்பது எதை உணர்த்துகிறது என்றால், வருகிற 2024 தேர்தலில் வெற்றிபெற்றால், பேண்ட், சட்டை அணிந்துகொண்டு, காரில், பைக்கில் செல்வதற்கெல்லாம் முடிவுகட்டுவார்கள்.

புதியக் கல்விக் கொள்கையை பாஜக திட்டமிட்டே கொண்டுவருகிறது. இதுவரைக்கும் இருந்த கல்விக் கொள்கை வேறு நோக்கம் கொண்டது. இப்போது தேசியக் கல்வியை புத்துருவாக்கம் செய்யக்கூடிய கல்விக் கொள்கை என்று அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இந்த கல்விக் கொள்கையில் 3,5,8வது படிக்கும் குழந்தைகளுக்கு பொதுத் தேர்வு. இந்த கல்விக் கொள்கையை வடிவமைத்த கஸ்தூரி ரங்கன். எட்டாவது படிக்கும் குழந்தைகளுக்கு மூன்று வாய்ப்புகள் தரப்படும். அந்த மூன்று வாய்ப்புகளையும் அந்த குழந்தை தவறவிட்டால் திருப்புளி, ஸ்பேனர் எடுத்துக் கொண்டு கூலி வேலைக்கு செல்ல வேண்டும் என்று கூறுகிறார். எட்டாவதுக்கு மேல் கற்பதைத் தடுப்பதும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும், முதலாளிகளுக்கும் குறை கூலி தொழிலாளர்களை உருவாக்குவதும்தான் புதியக் கல்விக் கொள்கையின் நோக்கம். இதற்கு பார்ப்பனிய பனியா சாம்ராஜ்ஜியம் என்று பெயர்.

3வது வகுப்பில் இருந்தே இந்தி, சமஸ்கிருதத்தை திணித்து விருப்பப்பட்ட மொழியாக வைத்துக்கொள் என்கிறார்கள். இங்கு ஒரு காலம் வரைக்கும்தான் இந்தி மொழி, பின்னர் சமஸ்கிருதம்தான் இங்கு ஆட்சி மொழி. அதற்காகவே இப்போது புதிய நாடாளுமன்றத்தைக் கட்டியுள்ளனர். உள்ளே நுழைந்தால், ராமாயண, மகாபாரத காட்சிகளைக் கலைப் பொக்கிசமாக வடிவமைத்துள்ளனர். 888 உறுப்பினர்கள் அமர்வது போன்று அந்த கட்டடத்தை உருவாக்கியுள்ளனர். இப்போது 543 மக்களவை உறுப்பினர்கள்தான்.

தமிழ்நாடு மூன்றாக பிரிக்கப்பட்டு, தமிழ்நாடு என்ற ஒரு மாநிலமே இங்கு இருக்காது என்கிறார்கள். ஒவ்வொரு மாநிலத்தையும் பிரித்து அதற்கு ஜனபதங்கள் என்று பெயர்சூட்டி பெரிய மாவட்டங்களாக மாற்றுவோம் என்கிறார்கள். அப்படியானால் மாநிலங்கள் இருக்காது, நிர்வாக பிரிவுகள் மட்டும்தான். இதைச் செய்தே தீருவோம் என்பதில் உறுதியாக உள்ளனர். இவ்வாறு அவர்கள் இந்து ராஷ்டிரம் என்ற சனாதன் சாம்ராஜ்ஜியத்தை மீண்டும் நிறுவுவதற்கான வேலைகளை செய்து கொண்டே இருக்கிறார்கள்.

கிண்டி ஆளுநர் மாளிகைக்கு எதிரே சாலையில் ஒருவர் பெட்ரோல் குண்டு வீசினார். அது தரையில்தான் விழுந்தது. உடனே ஆபத்து என்று கூறி அமளி செய்தனர். ஆனால் நாடாளுமன்றத்தின் பார்வையாளர் பகுதியில் இருந்து குதித்து கண்ணீர் புகைக் குண்டுகளை வீசினான். அவன் பாஜக நாடாளுமன்ற உறுப்பினரின் அனுமதிக் கடிதத்துடன்தான் நாடாளுமன்றத்திற்குள் நுழைந்தான். இதற்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் சொல்ல வேண்டும் என்று எதிர்க்கட்சி எம்.பி.க்கள் கேள்வி எழுப்பினார்கள். சொல்ல முடியாது என்பதோடு, கேள்வி எழுப்பிய 154 எம்.பி.க்களையும் இடைநீக்கம் செய்தது ஒன்றிய பாஜக அரசு. இவர்கள் இதற்குமேலும் செய்யத்துணிவு கொண்டவர்கள். கேட்க நாதி கிடையாது, இந்து ராஷ்டிரம், சனாதனம் மீண்டும் நிறுவப்படும் என்பதில் அவர்கள் மிகவும் தீர்மானமாக உள்ளனர்.

பாலகங்காதார திலகர் குறித்து முன்பு சொன்னேன், அவரும் சித்பவன் பார்ப்பனர்தான். சோலாப்பூரில் பேசும்போது அவர் சொல்கிறார். “செக்கு ஓட்டுபவனும், தராசு பிடிப்பவனும், மளிகைக் கடையில் வேலை செய்பவனும், விறகு உடைப்பவனும் எதற்காக சட்டமன்றத்திற்குச் செல்ல வேண்டும்? அவரவர் தொழில்களைப் பாருங்கள், சட்டமன்றத்தை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். பிராமணர்கள் செல்ல வேண்டிய இடம் அது. நீ என்ன உனது வருண, ஜாதித் தொழில்களை விட்டுவிட்டு வருகிறாய்?” என்று கேட்டவர் பாலகங்காதர திலகர்.

1952-இல் சென்னை மாகாணத்தில் இராஜாஜி முதலமைச்சராக இருந்தார். அப்போது குலக்கல்வித் திட்டத்தை கொண்டுவந்தார் இராஜாஜி. அதை கடுமையாக எதிர்த்து விரட்டி அடித்தவர் தந்தை பெரியார். காமராஜரை முதல்வராக்க வேண்டும் என்று சொன்னவர் பெரியார். நானா முதலமைச்சர் என்று கேட்ட போது உங்களைத்தான் சொல்கிறேன் என்று கூறி காமராஜர் முதல்வராவதை ஊக்குவித்தவர் பெரியார். 1920இல் இருந்து 1937 வரை இடையில் ஒருசில ஆண்டுகளை தவிர இங்கு நீதிக்கட்சி ஆட்சி இருந்தது. அப்பொழுதும் நீதிக்கட்சியின் மிக முக்கியமான சாதனைகளுக்கு பின்னால் தந்தை பெரியார் இருந்தார். இந்திய விடுதலைக்கு பின்னால் நடந்த பல முக்கியமான போராட்டங்களுக்கு பின்னால் தந்தை பெரியார் தான் இருந்தார். 1950இல் அரசியல் சட்டம் நடைமுறைக்கு வந்த போது ‘எல்லோரும் சமம்’ என்று சொல்லிவிட்டோம். சமம் என்று சொன்ன பிறகும் எதற்கு இட ஒதுக்கீடு என்று கூறி பார்ப்பனர்கள் வழக்காடி இடஒதுக்கீட்டை காலி செய்தனர். பின்னர் 1951இல் அரசியல் சட்டம் முதல்முறையாக திருத்தப்பட்டு இட ஒதுக்கீடு பாதுகாக்கப்பட்டதற்கு பெரியார்தான் காரணம்.

கட்சிகளெல்லாம் வேன் வைத்து, பிரியாணி பணம் கொடுத்து ஆட்களை திரட்டி வருவார்கள். ஆனால் தந்தை பெரியார் அழைத்தால் ஒரு இலட்சம் பேர் திரள்வார்கள். ஆங்கிலேயர்கள் இரண்டுமுறை பெரியாரை ஆட்சியமைக்க கேட்டுக் கொண்டனர். ஆனால் அதை மறுத்து விட்டார் பெரியார். அவர் ஒரு இயக்கத்தை நடத்தினார், அதனால் ஆட்சியமைக்க அழைத்தனர் என்று சாதாரணமாகக் கருதிவிடக் கூடாது. பெரியார் கூட்டம் ஒன்றை அறிவித்தால் நடத்துவதற்கு திடல் ஏது? அந்த அளவுக்கு அதிகமாக மக்கள் திரண்டனர்.

(தொடரும்)

- பேராசிரியர் த.செயராமன்

தொகுப்பு: விஷ்ணு