அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
மரங்கள் பேசிக் கொள்கின்றன! ஆம், மரங்களுக்கு இடையில் நிகழும் தகவல் தொடர்புகளைப் பற்றியதுதான் இந்தக் கட்டுரை. அவை எவ்வாறு சமிக்ஞைகளைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன? இதற்கு உதவுவது யார்? பிற மற்றவற்றுடன் மரங்களுக்குச் சக ஜீவி என்ற நிலையில் உள்ள சொந்தம்தான் இதற்குக் காரணம்.
சமீபத்தில் வெளிவந்த ஜேம்ஸ் கேமரூனின் 'அவதார்' என்ற திரைப்படம் பற்றித் தெரியும் அல்லவா? 'ஐவா' (Eywa) என்ற தெய்விகக் கற்பனை கதாபாத்திரம் நினைவிருக்கிறதா? அது வெறும் கற்பனை அல்ல. மாறாக, அறிவியல் பூர்வமாக விவரிக்கக்கூடிய சாத்தியமுள்ள ஓர் ஆய்வு விஷயம்தான் அந்தப் பாத்திரம். கனடாவின் சூழலியல் அறிஞரான சூசன் சிமார்டின் (Suzanne Simard) ஏறக்குறைய 30 ஆண்டு ஆய்வுகளின் பலனால் இது உருவானது. பூமிக்கடியில் இரகசியமாக மரங்களுக்கு இடையில் நடக்கும் தகவல் பகிர்வுகளை இந்த ஆய்வுகள் ஆதாரங்களுடன் விளக்குகின்றன.
அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு மரம் வெட்டும் நிறுவனத்தில் அலுவலராகப் பணிபுரிந்தார். பைன் தோட்டங்களில் களைகளை அழிக்க முற்பட்டபோது, அவை மேலும் அதிகமாக நோய்வாய்ப்பட்டு அழிவது கண்டறியப்பட்டது. இதன் மூலம் சத்துகளுக்காக மட்டுமே மரங்கள் போட்டி போடுகின்றன என்ற அறிவியல்பூர்வமற்ற நம்பிக்கை தவறு என்று அறியப்பட்டது. அவர் 1997-இல் தன் முனைவர் பட்ட ஆய்விற்காக இந்த விஷயத்தைத் தேர்ந்தெடுத்தார்.
கார்பன்-14, கார்பன்-13 ஆகிய கதிரியக்க ஐசோடோப்புகளைப் பயன்படுத்திப் பெரிய பைகளில் 'பேப்பர் பிர்ச்', 'டக்லஸ் ஃபர்' செடிகளை ஒன்றாக நட்டு வளர்த்தார். பிறகு அவற்றில் இருந்து வெளிவரும் கதிரியக்கத்தைக் கெய்கர் முல்லர் கவுண்டர் (Geiger-Muller Counter) கருவியைப் பயன்படுத்திப் பதிவு செய்தார். கோடையில் இலை உதிரும் 'பேப்பர் பிர்ச்' செடிகளில் இருந்து சில தகவல் பரிமாற்றங்கள் பூமிக்கடியில் செல்லும் பாதைகள் வழியாகச் செல்கின்றன என்று தெரியவந்தது.
ஆனால், இலையுதிர் காலத்தில் பிர்ச் இலைகள் உதிர்ந்துவிட்டதால், பசுமை மாறா ஃபர் மரத்தில் இருந்து பூமிக்கடியில் கார்பன், பிர்ச் மரத்திற்கு வளங்களாக வந்து சேர்ந்தது. கெவின் மற்றும் அவரது ஆய்வுக் குழுவினரின் ஆய்வுகள் மூலம், வயது முதிர்ந்த டக்லஸ் ஃபர் மரங்களுக்கு இடையில் தகவல் தொடர்புகள் டி.என்.ஏ (DNA) வரைபட ஆய்வுகள் மூலம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டது. நிலத்தடிப் பாதைகள், பூஞ்சைகளின் வலைப்பின்னல்கள் ஆகியவை பரஸ்பரம் தொடர்புடைய வலைகள் போலக் காணப்படுகின்றன என்று கண்டறியப்பட்டது.
இந்தப் பூஞ்சைகள் வேறுபட்ட மரங்களின் வேர்களை இணைக்கின்றன. நீர், நைட்ரஜன், கார்பன் போன்றவற்றைப் பகிர்ந்துகொள்ள மரங்களை இவை தயார்படுத்துகின்றன. பூஞ்சைகளின் இலை வலையமைப்பிற்கு 'Wood-Wide Web' என்று பெயரிடப்பட்டது. பூஞ்சைகளின் மைக்கோரைஸா (Mycorrhiza) என்ற பகுதிகளே இந்தப் பகிர்வுகளை மேற்கொள்கின்றன. 1881-இல் போலந்தின் பூஞ்சையியலாளரான பிரான்சிஸ் கானியன்ஸ்கி என்பவர்தான் இதை முதன்முதலில் கண்டுபிடித்தார்.
வேர்களைப் பற்றிப்பிடித்திருக்கும் வெளிப்புற மைக்கோரைஸா, வேர்களின் செல்களுக்குள் நுழையும் ஆற்றல் உள்ள உட்புற மைக்கோரைஸா என இரண்டு வகைகள் உள்ளன. இவை இரண்டும் சேர்ந்த பொதுவான ஒரு வலையமைப்பே 'Wood-Wide Web' என்று அழைக்கப்படுகிறது. இவை மெல்லிய நார்களால் உருவாக்கப்பட்டவை. இவை கிளை கிளையாக மாறி மரங்களின் வேர்களில் தொடர்பை ஏற்படுத்திக்கொள்கின்றன.
தொடர்புகள் ஒரே ஒரு மரத்துடன் மட்டும் ஏற்படுத்திக்கொள்ளப்படவில்லை. ஏக்கர் கணக்கில் பரந்து விரிந்திருக்கும் இந்த வலையமைப்புகள் ஒரே நேரத்தில் எண்ணற்ற மரங்களின் வேர்களுடன் தொடர்புகொண்டுள்ளன. சிறியதும் பெரியதுமாக ஏராளமான மரங்கள் இருக்கும் ஒரு காட்டில் பெரிய மரங்கள் 'தாய் மரங்கள்' என்று அழைக்கப்படுகின்றன. இவை மர வலையமைப்பின் (Wood-Wide Web) தொடர்புபடுத்தும் மையங்களாக இயங்குகின்றன.
வனப்பகுதியின் நோய் எதிர்ப்புத் தன்மையின் திறவுகோலாகச் செயல்படும் இவை, இளம் கன்றுகளை உருவாக்குவதிலும், வளர்ப்பதிலும், வளங்களைப் பகிர்ந்து கொள்வதிலும், சுற்றியுள்ள மரங்களுக்குச் சூழல் அச்சுறுத்தல்களைப் பற்றி முன்னெச்சரிக்கை செய்வதிலும் மைக்கோரைஸா வலைகளைப் பயன்படுத்துகின்றன.
மரங்கள் எவ்வாறு தங்களுக்குள் பேசிக்கொள்கின்றன? ஒரு மரம் ஆக்கிரமிக்கப்படும்போது முன்னறிவிப்புகள், அழுத்தத்தைப் பகிர்ந்து கொள்ள உதவும் ஜாஸ்மோனிக் அமிலம், சாலிசிலிக் அமிலம் போன்ற வேதியியல் சமிக்ஞைகள் மூலம் அருகில் இருக்கும் மரங்களுக்கு அது குறித்த தகவல்கள் அனுப்பப்படுகின்றன. வேதியியல் சமிக்ஞைகளை ஏற்கும் ஏற்பி மரங்கள் அவற்றைங்கள் வேர்த்தொகுப்புகள் மூலம் கண்டறிகின்றன; நோய் எதிர்ப்பு ஏற்பாடுகளைத் துரிதப்படுத்துகின்றன.
ஒருவேளை மரங்கள் ஆக்கிரமிக்கப்பட்டால், உடனே அவை நோய் எதிர்ப்பு நொதிகளை வேகமாக உற்பத்தி செய்கின்றன. இந்த சமிக்ஞைகளின் செயல்முறை விலங்குகளில் நாடி நரம்புகள் வழியாக நடைபெறும் செயல்களுக்குச் சமமானது என்று ஆய்வுகள் கூறுகின்றன. ஒரு மரம் வறட்சி, நைட்ரஜன் போன்ற வளங்களின் பற்றாக்குறையால் பாதிக்கப்படும்போது, அது பற்றிய விவரங்களை மைக்கோரைஸா பின்னல்கள் மூலம் மற்றவற்றிற்குத் தெரிவிக்கிறது.
இதன் மூலம் தாய் மரங்கள் அதிக கார்பன் அல்லது சத்துகளை இளம் கன்றுகளுக்கும், அழுத்தத்திற்குள்ளான அக்கம்பக்கத்து மரங்களுக்கும் அனுப்புகின்றன. கார்பன், நைட்ரஜன், நீர், பாஸ்பரஸ் போன்ற வளங்களைப் பகிர்ந்துகொள்ள மரங்கள் இந்த வலையமைப்புகளைப் பயன்படுத்துகின்றன. ஒரே இனத்தைச் சேர்ந்தவற்றிற்குத் தகவல் பரிமாற்றங்களில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.
சூழல் அழுத்தங்களால் ஒரு காட்டில் வாழும் உயிரினங்கள் கஷ்டப்படும்போது, அவற்றை ஒன்றுடன் ஒன்று இணைக்கும் அமைப்புகளாகப் பூஞ்சைகளின் மைக்கோரைஸாக்கள் மாறுகின்றன. ஒட்டுமொத்த வனத்தையும் ஒன்றுசேர்த்து அழிவில் இருந்து மீட்கும் தன்மையுடையவையாக, 'சூப்பர் உயிரினமாக' மைக்கோரைஸாக்கள் செயல்படுகின்றன. ஊசியிலை மரங்கள், இலையுதிர் மரங்கள் போன்ற வேறுபட்ட மரங்கள் தங்களுக்கு இடையில் வளங்களைப் பகிர்ந்துகொள்ளவும், குறிப்பிட்ட பருவங்களில் தேவையான சத்துகளின் சமநிலையைப் பேணவும் இந்த வலையமைப்புகள் உதவுகின்றன.
பெரியவை முதல் சிறியவை வரை பலவித தகவல் பரிமாற்றங்கள் மூலம், சத்துகளைப் பகிர்ந்து கொள்வதில் மைக்கோரைஸா வலைகளின் பங்கு மகத்தானது. வனப் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு எதிரான போராட்டத்தில் மரங்கள் தங்களுக்குள் பேசிக் கொள்கின்றன. இது பற்றிய ஆய்வுகள் மேலும் விரிவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஆய்வாளர்கள் வலியுறுத்துகின்றனர். வாகை அல்லது பிற மரங்கள் அடர்ந்துள்ள ஒரு தோப்பை நாம் பார்க்கும்போது இதை நினைவில் கொள்வோம். மரங்கள் அழியாமல் காப்போம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- புழல் தி.பாலகுமார்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சித்திரக்குள்ளர் பெரியமனுஷன்: என்ன ஒரு அற்புதமான விலங்கு அந்த காண்டாமிருகம்! எவ்வளவு கம்பீரம்! என்ன அழகு! எத்தனை அழகு!
மலர்விழி: அந்த மானைப் பாருங்கள், அழகு! அதன் சுருள் வடிவத்தில் முறுக்கிய கொம்புகளைக் கவனித்தீர்களா! அது ஒரு "கருப்பு அழகி"? அல்லது கருப்பு அழகனா?
விக்ரமன்: அது மான் அல்ல. அது ஒரு கலைமான். அதன் பெயர் கருப்பு மான் (Black Buck).
வீரபிரதாபன்: ஆம். கருப்பு மான் என்பது இந்தியாவில் காணப்படும் கம்பீரமான கலைமான்களில் ஒன்று. ஆண் மானுக்குத்தான் சுருள் வடிவத்தில் முறுக்கிய கொம்புகள் இருக்கும். ஒரு காலத்தில் இந்தியாவின் பல பகுதிகளில் அதிகமாக இருந்தது. ஆனால், இப்போது அது குறைந்து விட்டது.
மலர்விழி: வட இந்தியாவில் உள்ள ஒரு உயிரியல் பூங்காவிற்குச் சென்று வந்தோம். அங்கே அழகான விலங்குகளைப் பார்த்தோம்; ரசித்தோம். காட்டு விலங்குகள் எனினும், அவற்றின் செயல்களைக் கவனிப்பது அற்புதமாக, மனதுக்கு மகிழ்ச்சியாக இருந்தது.
பெரியமனுஷன்: வேலிக்கு உள்ளே பாதுகாப்பான தூரத்தில் இருந்து அவற்றுக்குத் தொந்தரவு கொடுக்காமல் பார்த்தோம். பரந்த உயிரியல் பூங்காவிற்குள், அதாவது ஒரு சிறிய காட்டிற்குள், தங்கள் காட்டு வாழ்க்கையை வாழ்கின்றன. என்ன ஒரு முரண்பாடு!
வீரபிரதாபன்: "காட்டுயிர்" என்ற சொல், அதன் இயற்கையான வாழ்விடத்தில் வாழும் எந்த ஒரு உயிரினத்தையும் குறிக்கும். பயிரிடப்படும் தாவரங்கள் மற்றும் வளர்க்கப்படும் விலங்குகளைத் தவிர மற்ற தாவரங்கள், விலங்குகள் மற்றும் நுண்ணுயிரிகளையும் இது உள்ளடக்கியது. இது பொதுவாகக் காட்டில் வாழும் பெரிய கொடூரமான விலங்குகள் என்ற தவறான எண்ணத்தை ஏற்படுத்துகிறது.
மலர்விழி: நீங்கள் புலி, சிங்கம், ஓநாய், யானை, காண்டாமிருகம், சிறுத்தை பற்றிச் சொல்கிறீர்களா? முதலைகள், சுறாக்கள் பற்றி என்ன சொல்கிறீர்கள்?
விக்ரமன்: முதலைகள், சுறாக்கள் மற்றும் திமிங்கலங்கள் கடலில் வாழ்ந்தாலும் அவற்றையும் காட்டு விலங்குகள் என்று சொல்லலாம்.
பெரியமனுஷன்: "இப்போது அது குறைந்துவிட்டது" என்று சொன்னீர்களே, அதன் அர்த்தம் என்ன?
விக்ரமன்: அவை அரிதாகிவிட்டன. அவற்றின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. இப்போது இருப்பவற்றின் வாழ்க்கை ஆபத்தில் உள்ளது என்று அர்த்தம்.
மலர்விழி: என்ன நடந்தது? ஏன், எப்படி அவற்றின் எண்ணிக்கை குறைந்து விட்டது?
வீரபிரதாபன்: அரிய வகை தாவரங்கள், விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் ஊர்வன ஆகியவை பாதுகாப்பு நோக்கங்களுக்காக வகைப்படுத்தப்பட்டுள்ளன...
பெரியமனுஷன்: யார் வகைப்படுத்தியது? விஞ்ஞானிகளா? உயிரியலாளர்களா? அவர்கள் எப்படி வகைப்படுத்தினார்கள்? ஏதேனும் அறிவியல் அணுகுமுறையா?
வீரபிரதாபன்: பொறுங்கள்... பொறுங்கள்... நிதானமாக இருங்கள். நான் சொல்கிறேன். பன்னாட்டு இயற்கை மற்றும் இயற்கை வளங்கள் பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) இதைச் செய்துள்ளது. இந்த வகைப்பாடு சில அறிவியல் அளவுகோல்களின் அடிப்படையில் அமைந்துள்ளது. தற்போதைய மற்றும் கடந்தகாலப் பரவல், காலப்போக்கில் எண்ணிக்கையில் ஏற்படும் சரிவு, இயற்கை வாழ்விடங்களின் செழுமை, தரம் மற்றும் உயிரியல் மதிப்பு – இவைதான் அந்த அளவுகோல்கள். அவர்கள் அவற்றை அறிவியல் பூர்வமாக நான்கு வகைகளாகப் பிரித்துள்ளனர் --- E, V, R, T.
மலர்விழி: நல்ல வேலையைச் செய்திருக்கிறார்கள். அந்த வகைகள் என்ன?
வீரபிரதாபன்: சில இனங்களின் எண்ணிக்கை அபாயகரமான நிலைக்குக் குறைந்துவிட்டது. சில விலங்குகள், தாவரங்கள் மற்றும் நிச்சயமாகப் பறவைகளின் வாழ்விடங்கள் கடுமையாகக் குறைக்கப்பட்டுவிட்டன. அவை உடனடியாக அழிந்துவிடும் அபாயத்தில் இருப்பதாகக் கருதப்படுகின்றன. அவை அழிந்துபோகும் அபாயத்தில் உள்ள இனங்கள். மேலும் காரணிகள் தொடர்ந்து செயல்பட்டால் அவற்றின் உயிர்வாழ்வு சாத்தியமில்லை. அவைதான் ஆபத்தான நிலையில் உள்ள இனங்கள் (ENDANGERED species - E). ஆசியக் காட்டுக்கழுதை கட்ச் ரான் மற்றும் பாகிஸ்தானில் காணப்படுகிறது. இந்த விலங்குகளின் எண்ணிக்கை இப்போது கடுமையாகக் குறைந்து எழுநூறுக்கும் குறைவாகிவிட்டது—ஆபத்தான நிலையில் உள்ள கழுதைகள்! பரிதாபம்!
விக்ரமன்: நிஜமாகவே வருத்தமாக இருக்கிறது! அவை ஆபத்தானவை அல்ல, அப்பாவிகள். ஆனால் ஆபத்தான நிலையில் உள்ளன! அடுத்து...?
வீரபிரதாபன்: காரணிகள் தொடர்ந்து செயல்பட்டால், சில இனங்கள் எதிர்காலத்தில் ஆபத்தான நிலைக்குச் செல்ல வாய்ப்புள்ளது. அந்த இனங்களின் எண்ணிக்கை கடுமையாகக் குறைந்துவிட்டது; அவற்றின் இறுதிப் பாதுகாப்பு உறுதி செய்யப்படவில்லை. சில இனங்களின் எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருந்தாலும், அவை பரவியுள்ள பகுதி முழுவதும் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளன. அவை பாதிக்கப்படக்கூடிய இனங்கள் (VULNERABLE species - V). நம் நாட்டில், பெரிய இந்தியப் பருந்து நீண்ட கழுத்து மற்றும் நீண்ட வெற்றுக் கால்களைக் கொண்ட ஒரு பெரிய தரைப் பறவை. ராஜஸ்தான், மகாராஷ்டிரா மற்றும் குஜராத்தின் அரை வறண்ட பகுதிகளில் வாழ்கிறது. அவற்றை இறைச்சிக்காக வேட்டையாடியதால் அதன் எண்ணிக்கை 500-க்கும் குறைந்துவிட்டது. கிட்டத்தட்ட அழிந்துபோகும் நிலையில் உள்ளது. பறவையியல் வல்லுநர்களும் உயிரியல் அறிஞர்களும் அவற்றின் நிலை குறித்து மிகவும் கவலைப்படுகிறார்கள்.
மலர்விழி: கொடுமை! சதைக்காக, நாக்கு ருசிக்காக சில அப்பாவி உயிர்கள் பலி!
பெரியமனுஷன்: பரிதாபம். சரி, மூன்றாவது வகை உயிரினங்கள் யாவை?
வீரபிரதாபன்: சற்று முன்பு குறிப்பிட்ட கருப்பு மான்கள், உலகில் குறைந்த எண்ணிக்கையில் காணப்படும் இனங்களாகும். இவை பொதுவாக வரையறுக்கப்பட்ட புவியியல் பகுதிகளுக்குள் மட்டுமே காணப்படுகின்றன. பரந்த நிலப்பரப்பில் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. அவை அழிவின் விளிம்பில் உள்ளன. இவை அரிதான இனங்கள் (RARE - R).
விக்ரமன்: மனிதர்கள் முயற்சித்தால், அவற்றைக் காப்பாற்ற முடியும், அப்படித்தானே?
வீரபிரதாபன்: மூன்று வகைகளில் ஏதேனும் ஒன்றில் உள்ள உயிரினங்களைப் பாதுகாத்து, காப்பாற்ற முடிந்தால் அவை அச்சுறுத்தலுக்கு உள்ளான இனங்கள் (THREATENED - T) என்று அழைக்கப்படுகின்றன. நேபாளம், வங்காளம், அசாமின் சதுப்பு நிலத்தில் காணப்படும் ஒற்றைக் கொம்பு காண்டாமிருகத்தை நம்மால் பாதுகாக்க முடியும்; பாதுகாப்போம். கசிரங்கா சரணாலயத்தில் அவற்றில் சிலவற்றைக் காணலாம். அந்த வனக் காப்பகத்தில் அவற்றைக் காப்பாற்ற தீவிர முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. தற்போது அவற்றின் எண்ணிக்கை சற்று அதிகரித்து வருகிறது.
மலர்விழி: கடவுளுக்கு நன்றி! ஒரு நல்ல செய்தியாவது சொன்னீர்கள்.
விக்ரமன்: நீங்கள் 'அச்சுறுத்தல்', 'எண்ணிக்கைக் குறைவு' என்றீர்கள். அவற்றின் எண்ணிக்கை எப்படிக் குறைந்தது? யார் குறைத்தது? வனவிலங்குகளுக்கு என்னென்ன அச்சுறுத்தல்கள் உள்ளன?
பெரியமனுஷன்: நல்ல கேள்விகள். எனக்கும் இதே ஐயங்கள் உள்ளன. விளக்க முடியுமா?
மலர்விழி: சமீபத்தில் இந்தியாவிலிருந்து சிறுத்தைகள் (சிவிங்கிப்புலிகள்) மறைந்து போனதாகச் செய்தி படித்தேன்.
வீரபிரதாபன்: விளக்குகிறேன். உணவு, பாதுகாப்பு மற்றும் இன்பம் ஆகிய மூன்றுமே அவற்றின் அழிவிற்கான அடிப்படைக் காரணங்களாகும். வனவிலங்குகளுக்கு ஏற்படும் மிகத் தீவிரமான முதல் அச்சுறுத்தல், அவற்றின் வாழ்விட அழிவிலிருந்தே வருகிறது. காடுகள், ஆறுகள், ஏரிகள், குன்றுகள் என வனவிலங்குகளைப் பாதுகாக்கும் எவ்வகை வாழ்விடமாயினும், அவையனைத்தும் மனிதக் குடியிருப்புகளாக, தொழில் வணிகத் தலங்களாக மாற்றப்பட்டு வருகின்றன...
பெரியமனுஷன்: அப்படியானால் நாங்கள் எங்கே வசிப்பது? எங்கே வீடுகளைக் கட்டுவது? நகரங்களிலும் கிராமங்களிலும் வசிப்பதற்குப் போதுமான இடமில்லை. நாம் வாழ்வதற்கு இன்னும் அதிகமான வீடுகள், இடங்கள் தேவைப்படுகின்றனவே!
வீரபிரதாபன்: சரிதான். ஆனால் அது மட்டுமே ஒரே காரணமல்ல. அந்த இடங்கள் துறைமுகங்கள், அணைகள், நீர்த்தேக்கங்கள், விளைநிலங்கள், பயிர்த்தோட்டங்கள் மற்றும் சுரங்கப் பகுதிகளாகவும் மாற்றப்படுகின்றன. இவை தவிர சுற்றுச்சூழல் மாசுபாடு மற்றும் காடழிப்பு ஆகியவையும் முக்கியமான பாரம்பரிய வாழ்விடங்களின் சீரழிவிற்கு வழிவகுத்துள்ளன. காரணங்கள் ஆயிரம்.
மலர்விழி: வாழ்விடங்கள் அழிக்கப்பட்டால் என்ன நடக்கும்? மீன்கள், பறவைகள் மற்றும் பிற விலங்குகளின் வாழ்க்கையில் ஏதேனும் மோசமான மாற்றங்கள் ஏற்படுமா?
வீரபிரதாபன்: ஆம். குறிப்பாக, வலசை செல்லும் விலங்குகள், பறவைகள் வாழ்விட அழிவால் பெரிதும் பாதிக்கப்படுகின்றன; ஏனெனில், அவற்றின் வலசைப் பாதையில் எந்தவொரு புள்ளியில் இடையூறு ஏற்பட்டாலும், அது அவற்றின் உணவுப் பழக்கம், வாழ்க்கை முறை, குடிநீர் வசதி, இனப்பெருக்கம் அனைத்தையும் பாதிக்கிறது. நாட்டின் நலனுக்காகவே கட்டப்பட்டிருந்தாலும், சில அணைகள் வாழ்விடங்களை நீரால் மூழ்கடித்துவிடுவதன் மூலம், மீன்களின் இனப்பெருக்கம் மற்றும் வலசைப் பயணத்தைத் தடுத்துவிடுகின்றன. நம்மில் பலர் அதை உணர்வதில்லை; நினைப்பதில்லை.
பெரியமனுஷன்: அப்படியானால், வானத்தில் பறக்கும் பறவைகளின் நிலை என்ன? அந்த அழிவுகளிலிருந்து அவற்றால் தப்பித்துக்கொள்ள முடியுமா?
வீரபிரதாபன்: அவையும் ஆபத்தில்தான் இருக்கின்றன. ஒவ்வொரு பறவைக்கும் அதற்கே உரிய உணவு உண்டு; அது ஒருபோதும் மற்றொரு பறவையின் உணவைப் போல் இருப்பதில்லை. சிட்டுக்குருவிகள் விதைகளை உண்பவை. வாத்துகள் பாசி, தானியங்கள் மற்றும் சில நீர்வாழ் பூச்சிகளை உண்கின்றன. புறாக்கள் தானியங்களை உண்பவை. தாய் புறாக்கள் தங்கள் தொண்டையிலிருந்து ஒரு பால் போன்ற திரவத்தை உற்பத்தி செய்கின்றன. இளம் புறாக்கள் தானியங்களை உண்ணத் தொடங்கும் வரை, அவற்றுக்கு இது உணவாக அளிக்கப்படுகிறது. பல பறவைகள் பூச்சிகளை உண்கின்றன. வெவ்வேறு வகை பறவைகள் வெவ்வேறு வகை பூச்சிகளை விரும்புகின்றன. சில பறவைகள் ஈக்கள் மற்றும் வெட்டுக்கிளிகளை உண்கின்றன. தவிட்டுக்குருவிகளும் சிட்டுக்குருவிகளும் காற்றில் பறக்கும் பூச்சிகளைப் பிடிக்கின்றன. மரங்கொத்திகள் மரப்பட்டைக்கு அடியில் வாழும் புழுக்களுக்காக மரத்தண்டுகளைத் தோண்டுகின்றன. இவை பாதிக்கப்பட்டால், இந்தப் பறவைகளின் வாழ்க்கை சிதைந்துவிடும். அது உயிரிழப்பை ஏற்படுத்தும்.
கலிஃபோர்னியா காண்டோர் பறவைதான் பறக்கும் பறவைகளிலேயே மிகப்பெரியது, தெரியுமா? அது ஒரு கூச்ச சுபாவமுள்ள பிணந்தின்னி. அது காட்டைச் சுத்தம் செய்து, அதன் மூலம் வனச்சூழலைச் சுகாதாரமாகப் பராமரிக்கிறது. அது பல மனித நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறது. மனிதர்களின் தூய்மையால் அதன் வாழ்விடம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. கால்நடைகளின் பிணங்களே அதன் உணவாக அமைகின்றன. முற்காலத்தில் திறந்த வெளியில் விடப்பட்ட கால்நடைகள் ప్రస్తుతం நிலத்தின் வளத்திற்காக விவசாய சமூகத்தால் புதைக்கப்படுகின்றன; சில சமயங்களில் எரிக்கப்படுகின்றன. அவற்றுக்கு உணவு கிடைப்பதில்லை.
கழுகுகள் இறந்த விலங்குகளை உண்பதன் மூலம் காகங்களைப் போல சுத்தம் செய்யும் வேலையைச் செய்கின்றன. கொக்குகள், கடற்பறவைகள், மீன்கொத்திகள் மற்றும் கூழைக்கடாக்கள் மீன்களை உணவாகக் கொள்கின்றன. கடற்பறவைகள் மற்றும் வாத்துகள் கடற்கரைகள் மற்றும் ஆறுகளின் ஓரமாக வாழ்கின்றன. அவை புழுக்கள், நண்டுகள் மற்றும் மீன்களை உணவாகக் கொள்கின்றன. அவற்றின் உணவில் ஏற்படும் ஒரு சிறிய பிரச்சினை கூட அவற்றின் வாழ்க்கையைப் பாதிக்கக்கூடும்.
குளிர்காலத்தில் வானிலை மிகவும் குளிராகும்போது, குளிர்பிரதேசங்களில் உள்ள பறவைகள் வெப்பமான பகுதிகளுக்குப் பறந்து செல்கின்றன. குளிர்காலத்தில் தரையில் பனி தடிமனாகப் படிந்திருக்கும், மேலும் உணவு கிடைப்பது எளிதல்ல. இதனை 'வலசை' என்பர்.
மலர்விழி: கோழி, சேவல், வாத்து பாதுகாப்பாக இருப்பதாக நினைக்கிறேன். நான் சொல்வது சரியா?
விக்ரமன்: கோழி, வாத்து மற்றும் வான்கோழி போன்றவை வீட்டுப் பறவைகள். இறைச்சி மற்றும் முட்டைக்காக வீடுகளில் வளர்க்கப்படுகின்றன. அவற்றின் எண்ணிக்கையும் குறைந்து வருகிறது.
பெரியமனுஷன்: பறவைகளுக்கு உணவு மட்டுமே ஆபத்துக் காரணியா?
வீரபிரதாபன்: ஒவ்வொரு பறவை வகைக்கும் கூடு கட்டுவதற்கு அதற்கே உரிய வழி உண்டு. கழுகு, கொக்கு மற்றும் வல்லூறு போன்ற பெரிய பறவைகள் சிறு கிளைகளால் கூடு கட்டுகின்றன; அதேசமயம் சிறிய பறவைகள் புல் மற்றும் நார்களைக் கொண்டு கூடுகளைப் பின்னுகின்றன. சில தரையில் கூடு கட்டுகின்றன. பல திறந்த சமவெளிகளிலும் புல்வெளிகளிலும் வாழ்கின்றன. அவற்றின் வாழ்விடங்களில் உள்ள பிரச்சினைகள் அவற்றைச் சங்கடமானதாக, அச்சுறுத்தலாக ஆக்குகின்றன. சுற்றுச்சூழல் ஆர்வலர்களால் இந்த பலவீனமான கிரகத்தைக் காப்பாற்ற முடியும்; முடியாதா என்ன?
விக்ரமன்: வருத்தமாக இருக்கிறது. “அமேசான் தீ” பற்றி என்ன சொல்கிறீர்கள்?
வீரபிரதாபன்: பரிதாபம், பயங்கரம்! ஒரு காலத்தில், வேட்டைக்காரர்கள் வேட்டையாடுவதற்கான ஒரு வழியாக நெருப்பைப் பயன்படுத்தினர். மனிதனால் உருவாக்கப்பட்ட காட்டுத்தீயே கடந்த காலத்தில் பல உயிரினங்களின் அழிவுக்குக் காரணம் என்று நம்பப்படுகிறது. உணவு, பாதுகாப்பு மற்றும் இன்பத்திற்காக வனவிலங்குகளைப் பெருமளவில் அழிப்பது அந்த ‘வரம்பற்ற’ வேட்டையிலிருந்து தொடங்கியது. பின்னர், துப்பாக்கிகள் அறிமுகமாகி, வேட்டையாடுதல் விளையாட்டாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. வன விலங்குகளையும் பறவைகளையும் தேவையில்லாமல் கொல்வது அபாயகரமான நிலையை அடைந்துள்ளது. நீங்கள் சொன்னதுபோல், இந்தியச் சிறுத்தைகள் அழிந்து போனது இதுபோன்ற விளையாட்டுகளின் எதிர்மறை விளைவுதான். விளையாட்டு வினையானது.
பெரியமனுஷன்: ஐயோ! அழகான ஒரு விலங்கு வேட்டையாடுதலால் அழிந்துவிட்டது. இப்படிப்பட்ட விஷயங்களைக் கேட்பதற்கு மிகவும் வேதனையாக இருக்கிறது.
விக்ரமன்: நம்பவே முடியவில்லை! என்னால் ஜீரணிக்க முடியவில்லை. முயல்கள் போன்ற சாதுவான விலங்குகள் அழிவிலிருந்து தப்பித்துவிட்டன. இது எப்படி சாத்தியம்?
மலர்விழி: இது பரிணாமக் கொள்கை. தகுதியானவை மற்றும் வலிமையானவை உயிர்வாழும். பலவீனமானவை அழியும். திறமையாகத் தப்பித்துக்கொண்டன முயல்கள்.
வீரபிரதாபன்: சில காரணங்களுக்காக, சில அயல் இனங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன. அவை உணவு மற்றும் இடத்திற்கான போட்டி, வேட்டையாடுதல், வாழ்விட அழிவு மற்றும் சீரழிவு, நோய்கள், ஒட்டுண்ணிகளின் பரவல் போன்ற புதிய காரணிகளால் பல உள்ளூர் இனங்களைப் பாதித்துள்ளன. சில பத்தாண்டுகளுக்கு முன்பு, பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடல் தீவுகளில், சில காரணங்களுக்காக ஆடுகளும் முயல்களும் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனால் அவை பல உள்ளூர் தாவரங்கள், பறவைகள், ஊர்வனவற்றின் வாழ்விடங்களை அழித்தன. அமெரிக்க செஸ்ட்நட் மரங்கள் ஒரு காலத்தில் அமெரிக்காவின் கடலோரப் பகுதிகளில் காணப்பட்டன. பின்னர், தொழில்துறை நோக்கத்திற்காக சீனாவிலிருந்து ஒரு பூஞ்சை அறிமுகப்படுத்தப்பட்டது. அவை அந்த மரங்களை அழித்துவிட்டன. அங்கு அயல்நாட்டு டிரவுட் மற்றும் பாஸ் மீன்கள் பல உள்ளூர் மீனினங்களுக்கு அச்சுறுத்தலாயின.
பெரியமனுஷன்: இவ்வுலகில் எல்லாவற்றிற்கும் ஒரு பக்கவிளைவு உண்டு. இயற்கை ஒரு இருமுனைக் கத்தி. நாம் இன்னும் ‘இயற்கையை’ப் புரிந்து கொள்ளவில்லை.
வீரபிரதாபன்: அதீத சுரண்டல் வனவிலங்குகளுக்குக் கடுமையான அச்சுறுத்தலாகும். அதீத மீன்பிடித்தல் கடல்வாழ் உயிரின வளங்களைக் கடுமையாகக் குறைத்து, நன்னீர் வளங்களையும் கணிசமாகப் பாதிக்கிறது. கடல் உணவுத் தொழிலுக்காக இயந்திரக் கருவிகளால் பிடிக்கப்படுவதால், பல வகை மீன்கள், மெல்லுடலிகள், திமிங்கலங்கள், கடற்பசுக்கள் மற்றும் கடல் ஆமைகள் முற்றிலுமாக அழிந்து வரும் நிலையில் உள்ளன. குறுகிய காலத்தில் அதிகம் சம்பாதிக்க நாம் முயற்சித்தோம்.
மலர்விழி: இதை நாம் “பேராசை” எனலாம். சிலர் “வளர்ச்சி, முன்னேற்றம்” என்பார்கள்.
வீரபிரதாபன்: ஆடம்பரத்திற்காகத் தோல்கள், தொழில்துறையில் உரோமம் மற்றும் தோல்பொருட்கள், சிறப்பு உணவுகளுக்காக அரிய வகை இறைச்சி மற்றும் மீன்கள் ஆகியவற்றின் பயன்பாடு, உயிரினங்கள் குறைவதற்கு வழிவகுக்கும். வாசனைத் திரவியங்கள், மருந்துகள், அழகுசாதனப் பொருட்கள், அலங்கார நினைவுப் பொருட்கள், அருங்காட்சியக சேகரிப்புக்கான மாதிரிகள் மற்றும் உயிருள்ள தாவரங்கள், விலங்குகளின் வர்த்தகம் ஆகியவற்றிற்காக பரந்த அளவிலான விலங்கு மற்றும் தாவரப் பொருட்களின் பயன்பாடு ஆகியன வேறு சில ஆபத்துகள்.
விக்ரமன்: அப்படியானால், அவற்றில் பல இறந்துவிட்டன. சிறப்புப் பராமரிப்பு இல்லாமல், அவை ஒரு நாள் பூமியிலிருந்து மறைந்துவிடக்கூடும், அப்படித்தானே? ஒருமுறை அழிந்துபோன ஓர் இனத்தை மீண்டும் பெற முடியாது. நாம் ஓர் இனத்தின் அழிவுக்குப் பொறுப்பாவது அறமற்ற செயல். நமக்கு இந்தப் பூமியில் சில பொறுப்புகள் இருக்கின்றன.
மலர்விழி: நமது சந்ததியினருக்காக உயிரியல் பன்மையைப் பாதுகாக்கும் கட்டாயப் பொறுப்பு அது. இல்லையென்றால் எதிர்காலத்தில் மிகவும் துன்பப்படுவார்கள்.
வீரபிரதாபன்: சுமார் 25,000 தாவர இனங்களும் 1,000 முதுகெலும்புள்ள உயிரினங்களும் அழிவின் விளிம்பில் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. வாழும் உயிரினங்களில் பத்து சதவீதம் ஆபத்தில் உள்ளன.
பெரியமனுஷன்: விலங்குகளை, பறவைகளைக் கவனித்துக் கொள்வது ஏன் முக்கியம்? அனுதாபமா?
விக்ரமன்: அது ஒரு காரணம், பூமியில் உள்ள உயிர்களின் சமநிலையைப் பாதுகாப்பது மற்றொன்று. ஒவ்வொரு விலங்கு இனமும் தனித்துவமானது. இந்தத் தாவரங்கள், விலங்குகள், மீன்கள், பூச்சிகள், ஊர்வன மற்றும் பறவைகள் அனைத்தும் நம்முடன் பூமியைப் பகிர்ந்து கொள்கின்றன. வேறு ஏதேனும் அழிந்துவரும் இனங்கள் பற்றி நவீன ஆய்வுகள் உண்டா?
வீரபிரதாபன்: பல வேட்டைக்காரர்கள் காண்டாமிருகங்களை அவற்றின் மதிப்புமிக்க கொம்புகளுக்காகக் கொல்கிறார்கள். இதனால் கருப்புக் காண்டாமிருகம் அழிந்துவரும் உயிரினங்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. யானைக்கு ஒரு காலத்தில் எதிரிகளே இல்லை, ஆனால் இப்போது அதன் தந்தங்களால் அது அழிவின் விளிம்பில் உள்ளது. கிரிஸ்லி கரடியின் வாழ்விடம் சுருங்கி வருவதால், அது அழிந்துவரும் மற்ற செந்நாய் மற்றும் அமெரிக்க முதலைகளுடன் இணைகிறது. அசாதாரண பாலூட்டிகளான மூன்கால் சோம்பேறி (Three-toed sloth) எனும் தேவதாரும், ஊளையிடும் குரங்கும் அழிவின் விளிம்பில் உள்ளன. அழகான பறவைகளான பெரிய பச்சை மாகோ கிளியும், தங்கக் கிளியும் அழிந்து வருகின்றன.
ஆசியாவின் ஒரு கவர்ச்சிகரமான மற்றும் தனித்துவமான விலங்கான ராட்சத பாண்டாவின் உணவு முக்கியமாக மூங்கில் செடியைக் கொண்டது. மூங்கில் காடுகள் அழியும்போது, பாண்டாவும் அழிந்துவிடுகிறது. காடுகளில் இன்னும் சுமார் 1,000 மட்டுமே வாழ்கின்றன. ஆசியாவின் பெரிய பூனைகளும் சிக்கலில் உள்ளன. பனிச்சிறுத்தையும் புலியும் உரோமத்திற்காகவும் வேட்டைக்காகவும் அழிகின்றன. உலகின் மிகப்பெரிய விலங்கான நீலத்திமிங்கலம் அழிவின் விளிம்பில் உள்ளது. திமிங்கல வேட்டையும் கடல் மாசுபாடும் அவற்றின் மிகப்பெரிய எதிரிகள்.
மலர்விழி: துரதிர்ஷ்டவசமாக, அவற்றின் பிரச்சினைகளுக்கு நாமே முக்கிய காரணம். நாம் அவற்றின் வாழ்விடங்களை மாற்றி மாசுபடுத்துகிறோம், வேட்டையாடுகிறோம். விவசாயத்திற்கோ அல்லது கட்டிடத்திற்கோ இடையூறாக இருப்பவற்றை அழிக்கிறோம்.
பெரியமனுஷன்: சரி சரி, அழிவின் விளிம்பில் உள்ள விலங்குகளுக்கு உதவ நாம் என்ன செய்ய முடியும்? நேர்மறையாகப் பேசுங்கள்.
வீரபிரதாபன்: அவற்றைப் பற்றி உங்களால் முடிந்தவரை கற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் எவ்வளவு அதிகமாகத் தெரிந்து கொள்கிறீர்களோ, அவ்வளவு அதிகமாக உங்களால் உதவ முடியும். மிருகக்காட்சிசாலைகள் அழிந்துவரும் உயிரினங்களை இனப்பெருக்கம் செய்கின்றன. தேசிய வனவிலங்கு கூட்டமைப்பு அவற்றைப் பாதுகாக்கக் கடுமையாக உழைக்கிறது. ஒருபோதும் செல்லப்பிராணியாக வனவிலங்குகளை வாங்காதீர்கள். தோல் மற்றும் தந்த வியாபாரத்தை ஒருபோதும் ஆதரிக்காதீர்கள். அவற்றை துப்பாக்கியால் சுடாதீர்கள்; மாறாகக் கேமராவால் சுடுங்கள் (Shoot by camera, not by gun).
விக்ரமன்: உலகம் பல உயிரினங்களால் ஆனது. ஒவ்வொன்றும் மற்றொன்றைச் சார்ந்து உள்ளது. பூமியில் ஒன்று அழிந்தால், அது மற்றவற்றையும் பாதிக்கும்; நம்மையும்தான்.
- புழல் தி.பாலகுமார்
- விவரங்கள்
- புழல் தி.பாலகுமார்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
விக்கிரமன்: சமீபத்தில் ஒரு நண்பரைச் சந்தித்தேன். அவர் தாவரவியல் நிபுணர். தாவரங்கள் பற்றிப் பல கேள்விகள் கேட்டார். சில புதிர்கள் போட்டார். பலூன்களுக்கும் தாவரத்துக்கும் என்ன தொடர்பு என்று வினவினார். விடை கூறாமல் சென்றார்.
வீரப்பிரதாபன்: தொடர்பு உள்ளது. அது இரப்பர் எனும் பாலி. இருபதுக்கு மேற்பட்ட தாவர இனங்களில் இருந்து இரப்பர் எனும் வேதிப் பொருளைப் பால் வடிவத்தில் எடுத்தாலும் அவற்றில் மிகச் சிலவே வணிகப் பயன் உள்ளவை. அந்த வேதிப்பாலை வேறு சில வேதிமங்களின் துணையோடு, சில எந்திரங்களின் உதவியோடு பலூன்கள், பொம்மைகள், மிதியடிகள் உள்ளிட்ட இரப்பர் பொருட்களைத் தொழிலகங்களில் தயாரிக்கின்றனர். ஆக பலூனும்…
விக்கிரமன்: ஒரு தாவரப்பொருள் தானா?
வீரப்பிரதாபன்: செருப்பு, டயர் எனும் கார் சக்கரம், குக்கர் கேஸ்கட் வளையம் என்று இரப்பர் கொண்டு தயாரிக்கப்படும் எல்லாம் தாவரப் பொருட்களே. அதை லாடெக்ஸ் திரவம் என்று விஞ்ஞானம் கூறுகிறது. கால்நடைகள் அந்த இரப்பர் மரத்துக்கு அருகில் செல்வதில்லை.
விக்கிரமன்: கால்நடைகளுக்குப் பிடிக்காத தாவரம் வேறு எதுவும்?
வீரப்பிரதாபன்: கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்றவப்பயிர்களைச் செய்யத் தொடங்கி வெகுகாலம் கழித்துத்தான் 'ரை' என்ற தானியத்தைப் பயிர் செய்தனர். ஐரோப்பாவின் வடபகுதியில் அதிகமாகப் பயிராகிறது ரை. அது தானியம் மற்றும் வைக்கோலுக்காக மட்டும் பயிரிடப்படுகிறது. மண்ணரிப்பைத் தடுக்கவும் தொழுவுரமாகப் பயன்படுத்தவும் தற்போது இந்த ரை பயிரிடப்படுகிறது. இந்த ரை செடி பல நிறங்களில் காணப்படுகிறது. ரை தானியமும் சிவப்பு, கறுப்பு, பழுப்பு நிறங்களில் உள்ளது. ரை தானியத்திலிருந்து பெரும்பாலும் ஐரோப்பாவில் ரொட்டி செய்கின்றனர். ஆனால் ரை தானியத்தை எடுத்த பிறகு அதன் புல்லை உலர வைத்துவிடுவர். அது நார்ப்பற்றுடன் முரடாக இருப்பதால் அந்தப் புல்லைக் கால்நடைகள் விரும்பித் தின்பதில்லை; அருகில் செல்லாது. அந்த ரை புல் காகிதக்கூழ் அரைத்துக் காகிதம் செய்ய உதவுகிறது. புல்லைப் பதப்படுத்தி கூடை, தொப்பி, தட்டு, சிறுபாய் செய்யப் பயன்படுத்தப்படுகிறது. அது நம்மூரிலும் பயிராகிறது.
விக்கிரமன்: என்ன, ஐரோப்பியப் புல் ரை நம்மூரிலா? கால்நடைகூட விரும்பாத ரை எதற்கு நம்மூரில்?
வீரப்பிரதாபன்: 'எர்காட்' என்ற பூஞ்சைப் பூசணம் மருந்தாகப் பயன்படுகிறது. அந்தப் பூசணத்தை வளர்த்தெடுக்கும் ஊடகமாகப் பயன்படுத்த ரை செடி நீலகிரியில் பயிரிடப்படுகிறது. மற்றபடி ரை பற்றி நம்மூர் மக்களுக்கு அதிகம் தெரியாது.
விக்கிரமன்: உண்மைதான். ரை என்றொரு தானியம் இருப்பதையே இப்போதுதான் அறிகிறேன். நமக்குப்பல தானியங்கள், செடிகள், மூலிகைகள் பற்றிய போதிய அடிப்படைத் தகவல்கள் கிடைக்கவில்லை. அறிவுக்கண், அறிவியல் ஒளி, அறிக அறிவியல், துளிர் என்று ஒரு சில அறிவியல் இதழ்கள் மூலம் ஓரளவு இவற்றைப் பற்றிய அறிவு வளர்ந்து கொண்டு வருகிறது. இதுபோல அதிகம் அறியப்படாத மூலிகை வேறு?
வீரப்பிரதாபன்: அலரிக் குடும்பத்தின், அதாவது அப்போசைனேசியீ குடும்பத்தின் சிறு செடி ராவோல்பியா சர்ப்பென்டினா. தமிழில் சர்ப்பகந்தி என்றும் நாககந்தி என்றும் கூறுவர். இந்தச் செடியின் கிளையை, இலையை முறித்தால் பால் போன்ற திரவம் வடியும். கணுக்களில் மூன்று இலைகள் வட்டவடிவத்தில் இருக்கும். மிகச்சிறிய பூக்களில் காம்பும் புற இதழ்களும் சிவப்பாக இருக்கும். அக இதழ்கள் வெண்மையாக இருக்கும். சர்ப்பகந்தி காய் சிவப்பு, கனி கருஞ்சிவப்பு. சர்ப்பகந்தி வேரை எடுத்துப் பக்குவம் செய்து தூளாக்கிக் கஷாயம் காய்ச்சி, காய்ச்சலுக்கும் வயிற்றுவலிக்கும் மருந்தாகத் தருவார்கள் ஆயுர்வேத, சித்த மருத்துவர்கள். இரத்தக்கொதிப்புக்கும் இந்தச் செடியிலிருந்து மருந்து தயாரிக்கின்றனர். அரிய, சிறந்த ஆயுர்வேத, சித்த மருத்துவ மூலிகை இந்தச் சர்ப்பகந்தி. சிலருக்கு மட்டுமே தெரியும்.
விக்கிரமன்: பெயர் சற்று பயமாக இருந்தாலும் பயன்கள் சிறப்பானவைதான். சில செடிகள் அதிகம் பயன்பட்டாலும் மக்கள் நாகரிக மோகத்தில், அன்னியப் பொருள் ஆசையில் அவற்றை மறந்து ஒதுக்கிவிடுகிறோம். பிரச்சினை வரும்போது, தீர்வு தேவைப்படும்போது மீண்டும் அவற்றை நாடி ஓடுகிறோம். டெங்கு வந்தால்தான் நிலவேம்பை நாடுகிறோம். கொரோனா பரவினால் கபசுரக் குடிநீரை அறிகிறோம்.
வீரப்பிரதாபன்: நாவல் பழமும் இலவங்கம் என்கிற கிராம்பும் அந்த ரகம்தான். மிர்ட்டேசியீ என்ற நாவல் குடும்பமும் நல்லதொரு குடும்பம். அக்குடும்பத்தின் செடிகள்தாம் கொய்யா, நாவல் செடிகள். யூகலிப்டஸ் மரமும் பிரபலம்தான். இவற்றின் இலைகளில் ஒரு சிறப்பு உள்ளது; அது விளிம்பக நரம்பு எனும் சிறப்பு அமைப்பு.
விக்கிரமன்: கொய்யா இலைகள் டெங்கு காய்ச்சலுக்கு மருந்தாகும். யூகலிப்டஸ் இலைகள் சளிக்கு நிவாரணம்.
வீரப்பிரதாபன்: ஆம், அறிவுக்கண் திறந்துள்ளது உனக்கு. நாவல் குடும்பத்தின் பல மரங்களில் இருந்து மரவேலைக்கு வெட்டுமரம் கிடைக்கிறது. சிடியம் குவா எனும் கொய்யாப்பழத்தை விடக் காய் சிறப்பானது. சைசிகியம் சிற்றினமான நாவல் பழம் தற்போது நீரிழிவு நோய்க்கு மருந்தாகப் புகழ்பெற்றது. கருநாவல், குறுநாவல் என்று எல்லாரும் விரும்பும் ஊதாப்பழம். ஆரோமாடிகா எனும் கிராம்பு நுரையீரலுக்குப் பலம் தரும். இக்குடும்பத்தின் ஆர்போரியா மரமும் அழகானது. பாரிங்டோனியா எனும் வெண்கடம்பு மரம் ஆற்றோரம் நீரில் மிதக்கும்படி வளரும்; கரையை வலுப்படுத்தும். சிவப்பு நிறத்தில் சரம்சரமாகப் பூக்கள் தொங்கும்.
விக்கிரமன்: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம் என்று இத்தாவரக் குடும்பத்துக்கும் பாடலாம் அல்லவா? வேறு நமக்கேற்ற நல்ல தாவரக் குடும்பம் பற்றி…
வீரப்பிரதாபன்: கிச்சிலிக் குடும்பம் ரூட்டேசியீ நமக்கேற்ற எளிய நல்ல குடும்பம். அக்குடும்பப் பிள்ளைகள் எலுமிச்சை, வில்வம், விளா மரங்கள் மணமுள்ளவை. இலை குறுமுட்கள் போல வளரும். பல மருந்தாகப் பயன்படுகின்றன. அவற்றில் நாம் அதிகம் அறிந்திராத சதாப்புச் செடியின் அறிவியல் பெயர் ரூட்டா சிராவிபெபிலென்ஸ். இச்செடியின் இலைகள் சாம்பல் பூத்த நிறத்தில் காரமான மணத்துடன் இருக்கும். அதில் ஒருவித எண்ணெய் உள்ளது. அதன் பல்வேறு ரகங்கள்தாம் கிச்சிலி, நாரத்தை, கடாரங்காய் ஆகிய சிட்ரஸ் இனப் பழச்செடிகள். புகழ்பெற்றவை. கறிவேப்பிலையும் இந்த குடும்பம்தான். வில்வம், விளா, கறிவேப்பிலை ஆகியன மூலிகைகள்; மருந்தாகும் உணவுகள். குளோரேக்சைலான் என்ற ஒரு உறுப்பினர் மட்டும் நல்ல வெட்டுமரமாக மரவேலைகளுக்கு உதவுகிறது.
விக்கிரமன்: என்னைப் போன்ற இன்றைய தலைமுறையினருக்கு வில்வம், விளா பற்றி எல்லாம் தெரியாது. எலுமிச்சை பற்றித் தெரியும். காபி, டீ போல எலுமிச்சை சாறு புகழ்பெற்றது. விளம்பரம் செய்யப்பட்டால்தான் எதுவும் புகழ்பெறுகிறது.
வீரப்பிரதாபன்: காப்பிக் குடும்பம் என்று கூறப்படும் வெட்சிக் குடும்பம் ரூபியேசியீ மிகப்பெரியது, பயனுள்ளது. அதில் காலியம் என்ற பேரினத்தின் சில தாவரங்கள் ஆர்க்டிக் குளிர் பிரதேசத்திலும் வளர்கின்றன. பல செடிகள் வணிக முக்கியத்துவம் உள்ளவை. கொய்னா எனும் மருந்து பெறப்படும் சின்கோனா, இப்பிகாக்குவானா மருந்து பெறப்படும் யூரகோகா, உற்சாகபானம் வடிக்கப்படும் காப்பிக்கொட்டைச் செடி அனைத்தும் இந்தக் குடும்பம்தாம். தற்போது பரவலாகப் புகழ் பெறும் நோனி அல்லது நுணா எனும் மொரிண்டா செடி, பன்னீர் பூச்செடி, காரைமுள் செடி, ஆற்று வஞ்சிச்செடி, கடம்பு மரம், குரா மரம், சரித்திரப் புகழ் வாய்ந்த வெட்சி ஆகியனவும் பிரபலமானவை. இக்சோரா எனும் காக்சினியா, சுளுந்து எனும் செடி, மஞ்சிட்டி, நத்தைச்சூரி எனும் விசித்திரச் செடிகளும் இக்குடும்பத்தினர்தாம்.
விக்கிரமன்: இக்சோரா பூ பார்ப்பதற்கு ரோஜாப்பூ போல அழகாக இருக்கும். ஆனால் மணம் இருக்காது அல்லவா?
வீரப்பிரதாபன்: ரோஜா குடும்பம் ரோசேசியீ குடும்பம் எனப்படும். உலகம் முழுதும் பரவியுள்ளது. அதில் ரூபஸ் இனம்தான் நாவல் இனம். ராஸ்பெரி, பிளாக்பெரி, டியூபெரி ஆகிய பழங்கள் தரும் மேற்கத்திய இனம். ஃப்ரகேரியா இனத்தில் ஸ்ட்ராபெரி பழம் உள்ளது. ரோசா இனத்தின் ஒரு சிற்றினம்தான் ரோஜாப்பூச்செடி. பல வகைகள் உள்ளன. சிலவற்றில் பூக்காம்புகளில் முட்கள் இருக்கும். மேலும் பல புகழ்பெற்ற அயல்நாட்டுத் தாவரங்கள்: ஆப்பிள் - பைரஸ் மாலஸ்; பைரஸ் கம்யூனிஸ் எனும் பேரிக்காய்; ப்ரூனஸ் ஆர்மீனியாக்கா எனும் அக்ரூட் பருப்பு; ப்ரூனஸ் டொமஸ்டிகா எனும் ப்ளம் அல்லது ஆல்பகடா பழம்; ப்ரூனஸ் அமிக்டாலஸ் எனும் வாதுமை அல்லது பாதாம் பருப்பு; பெர்சிக்கா எனும் பீச் பழம் ஆகியன இந்தக் குடும்பம்தான்.
விக்கிரமன்: எல்லாம் விலையுயர்ந்த, அரிதான, எளிதில் கிடைக்காத பொருட்களாக உள்ளதே! காஸ்ட்லி குடும்பம் போலிருக்கிறது. நாம் சில தாவரங்களை மறந்துவிட்டோம்; சிலவற்றை ஒதுக்கிவிட்டோம். நாம் மறந்து கவனிக்கவில்லை என்பதால் அவற்றுக்கு ஏதும் பிரச்சினை, பாதகம் இல்லைதானே?
வீரப்பிரதாபன்: அப்படிக் கூற முடியாது. நமக்கும் பிற பறவைகள், விலங்குகளுக்கும் அவை இல்லை எனில் பிரச்சினை. நாம் ஒதுக்குவதால் சில தாவரங்களுக்கும் பிரச்சினைதான். தாவரங்களுக்குப் பூச்சிகள், விலங்குகளும் நாமும் அவசியம் தேவைதான். வெங்காயக் குடும்பம் லில்லியேசியின் யுக்கா இனச்செடிகள் விசித்திரமானவை. அவற்றின் தண்டு நார்ப்பொருள் நிரம்பி குட்டையாக இருக்கும். உச்சியில் இரண்டு இரண்டாகக் கிளைகள் வளரும். இலைகள் குச்சம் போன்று அடர்ந்து விறைப்பாக வாள் போலக் கூர்நுனியில் முடியும். பூக்கள் பெரிய வெண்ணிற மணிவடிவத்தில் கவிழ்ந்து தொங்கும். அழகான இந்தப் பூக்கொத்துகளை யுக்காவிட்டில் எனும் ஒருவகை விட்டில் பூச்சிகள் நாடிவந்து மகரந்தச் சேர்க்கை செய்யும். ஒவ்வொரு யுக்கா சிற்றினத்துக்கும் ஒவ்வொரு தனி விட்டில் இனப் பூச்சி வரும். இரவில் மலரும் இந்த யுக்கா பூ பலமான நல்ல மணம் வீசும். இந்த மணத்தைக் கொண்டு அந்தப் பூச்சிகள் வரும். அவற்றுக்கு அந்தப் பூவின் மகரந்தம்தான் உணவு. அந்தப் பூவுக்கு அந்த விட்டில் பூச்சி இல்லாமல் இனப்பெருக்கம் செய்ய இயலாது.
விக்கிரமன்: அதாவது பூவுக்குப் பூச்சி வேண்டும்; பூச்சிக்குப் பூ வேண்டும். அந்த யுக்கா பூவின் பயன் என்ன?
வீரப்பிரதாபன்: யுக்கா இலைகளில் இருந்து நார் எடுத்துக்கயிறு திரிப்பர். மெக்சிகோவில் யுக்காகனியைச் சமைத்து உண்பர். பல நாடுகளில் யுக்கா செடியை அழகுக்காக வீடுகளில் வைத்து வளர்ப்பர். இயற்கையின் விசித்திரச் சமநிலை இந்த யுக்காவில் மட்டுமன்றி உலகம் முழுதும் எல்லா தாவர, விலங்கின இனங்களிலும் உள்ளது. யானைவாய் எச்சில் பட்டால்தான் சில மரங்கள் தழைக்கும். மாடு கடித்தால்தான் சில புல் வகைகள் வளரும். அந்த நண்பர்கள் இல்லை என்றால் தாவரங்களுக்குப் பிரச்சினை; நமக்கும்தான்.
விக்கிரமன்: யுக்கா… விசித்திரமான பெயர். உயர்ந்த வாழ்வியல் உண்மை. இதுபோல வேறு ஏதும் விசித்திரக் குடும்பம்…
வீரப்பிரதாபன்: நாட்டு வாதுமை டெர்மினேலியா கட்டப்பா எனும் அமிந்தி மரமும் விசித்திரம்தான்…
விக்கிரமன்: என்ன… கட்டப்பா என்றா கூறினாய்?
வீரப்பிரதாபன்: ஆம், கட்டப்பாதான் அது. நீ நினைப்பது போல பாகுபலி கட்டப்பா அல்ல அது; அமிந்தி மரத்தின் அறிவியல் பெயர். தான்றி எனும் பெலெரிக்க செடி, கடுக்காய் எனும் செபுலா, மருது எனும் அர்ஜுனா, வெள்ளை நாகம், வெட்காலி அல்லது நமை, உலுவைக்கொடி, கொத்துக் கொத்தான அழகிய பூக்கள் உள்ள ரங்கூன் மல்லிக்கொடி எனப் பல விசித்திரப் பெயருடன் பயனுள்ள தாவரங்கள் காம்பிரிட்டேசி குடும்பத்தில் உள்ளன. விசித்திரக் குடும்பம் இது.
விக்கிரமன்: குடும்பப் பெயரே விநோதம். இதில் கடுக்காய் பற்றி அறிவேன். மிகச்சிறந்த தேவ மூலிகை, சர்வரோக நிவாரணி. "காலை இஞ்சி, கடும்பகல் சுக்கு, மாலை கடுக்காய்" என்று பாடல் உண்டு. ரங்கூன் மல்லி பற்றியும் கேள்விப்பட்டேன். ஆனால் மற்றவை புதுமை. பல விசித்திரங்கள் தாவரக் குடும்பங்களில் உள்ளனவோ?
வீரப்பிரதாபன்: தோற்ற அழகுக்காகத் தோட்டங்களில் வளர்க்கப்படும் வான்டரிங் ஜூவ் - 'அலையும் யூதன்' என்ற விசித்திரமான செடி பற்றிக் கூறுகிறேன். அதன் இலையின் பின்புறம் ஊதா கலந்த சிவப்பு நிறம்; மேற்புறம் பச்சை மற்றும் வெளிர் பசுமைப் பட்டைகள். இது தரைமேல் படர்ந்து வளரும் செடி. காம்மிலைனேசீ குடும்பம். இதன் பல இனங்கள் வயல்வரப்பு, புல்வெளிகளில் களைகளாக வளரும். ஆக்சிலாரிஸ் எனும் நாயினிப்பூண்டு, நீர்ப்புல், கானாங்கோழை, கானாங்கீரை, கானாவாழை என்று பல பெயர்கள் உள்ள காம்மிலைனா பெங்கலன்சிஸ் எல்லாம் இந்தக் குடும்பத்தின் வயல்களைகள்.
விக்கிரமன்: களைகளா? அவற்றால் என்ன பயன்?
வீரப்பிரதாபன்: இந்தக் களைகள் இயற்கை அடியுரமாகும்; கால்நடை உணவாகும். மற்றொரு புகழ்பெற்ற தோட்டச்செடி கார்னேஷன் மற்றும் காம்பியன் போன்ற சில செடிகள் கார்யோபில்லேசீ குடும்பம். இதில் அகன்ற பூக்கள், குழாய்ப்பூக்கள் என்று இருவகை. பலநிறப் பூக்கள் உள்ளவை. இரவிலும் மலரும், மணம் வீசும் அழகிய பூக்கள். ஆனால் பூக்களைப் பறிக்காதீர்கள்; அவை உயிர்கள்.
விக்கிரமன்: பூக்கள் பறிப்பதற்கல்ல; கண்டு மகிழவே. கேட்கும்போது அவற்றைப் பார்க்கவேண்டும் என்ற ஆர்வத்தைத் தூண்டுகிறது. ஆனால் இவற்றில் எதுவும் உணவுக்குப் பயன்படுவதாக இல்லையே! அழகுக்கு மட்டும் அவசியமா?
வீரப்பிரதாபன்: அப்படி எதையும் அலட்சியப்படுத்த முடியாது. தாவரங்களில் எதுவும் வீணல்ல. அழகு மற்றும் ஆரோக்கியம் இரண்டையும் ஒருசேரத் தருபவை பல உள்ளன. நாம் சுவைத்து மகிழும் புரதச் சத்துணவு காராமணியும், கல்வாழைச் செடியும் விரைவில் அதிகத் தழையுடன் வளர்வதால் கால்நடை உணவாக, தழையுரமாகப் பயிரிடப்படுகிறது. உணவுக்காக மட்டும் பயிரிடுவது குறைவு. வெப்பநாடுகளில் வளரும் இரண்டடி உயரக்கொடி புதர்போல் வளரும். இக்குடும்பச் செடிகள் மண்ணை நைட்ரஜன் நிலைநிறுத்தி வளமாக்கும். பலவகை உண்டு. சிலவற்றின் காய்கள் இரண்டடி நீளம்கூட வளரும். கல்வாழை, பூவாழை, கொட்டைவாழை என்று கூறினாலும் கானா இன்டிகா எனும் கானேசீ குடும்பச்செடி வாழையல்ல. இஞ்சி, மஞ்சள் போன்ற அமைப்பும் தோற்றமும் இருந்தாலும் இஞ்சிக் குடும்பமல்ல. பெரிய பலநிறப் பூக்களும் அழகான இலைகளும் உள்ளதால் தோட்டங்களில் அழகுக்காக வளர்ப்பர். இதன் மட்டத்தண்டுக் கிழங்கில் ஸ்டார்ச் மாவுச்சத்து உள்ளது. கானா எடுலிஸ் என்ற செடியின் கிழங்கை உண்பதுண்டு. கரிய உருண்டையான பளபள விதைகளை மணிகள் போலக் கோர்த்து ஜபமாலை, கழுத்துச்சரம் செய்வர். ஒரு அழகிய ஊதாநிறச் சாயப்பொருள் எடுப்பர். இப்போது நீ கூறிய அந்த களைச்செடி காராமணி அதிகளவில் சத்துணவாக விருப்பத்துடன் உண்ணப்படுகிறது.
விக்கிரமன்: உண்மை. உதவாதென்று நினைத்த லேடக்ஸ் திரவம் பந்து, பலூன் செய்ய உதவும் இரப்பரானது அல்லவா? கிரிக்கெட் மட்டை வில்லோ மரப்பொருள்; கேரம்போர்டும் ஒரு மரப்பொருள். இதுபோல் வேறு ஏதும் விளையாட்டுப் பொருளாகத் தாவரங்கள் உள்ளனவா?
வீரப்பிரதாபன்: கிங்கோ பைலோபா எனும் கன்னிக் கூந்தல் மரம் அழகில் சிறப்பானது, விஞ்ஞானச் சிறப்புள்ளது. புத்த மதத்தவரால் புனிதமானதாகக் கருதப்படுகிறது. ஜிம்னோஸ்பெர்ம் பிரிவைச் சேர்ந்த இதன் விதையைச் சீனர், ஜப்பானியர் உண்பதுண்டு. சதுரங்கப் பலகை, காய்கள் செய்ய கிங்கோ மரத்தைச் சீனர் பயன்படுத்துவர். மனிதன், பாலூட்டி, மரஞ்செடிகள் உண்டாகுமுன்பே உண்டாகி, பலகோடி ஆண்டுகளாக மாறாமல் இன்றுவரை நின்றுவரும் தாவரவியல் அதிசயம்.
விக்கிரமன்: கிங்கோ மரம் 'மன்னா உலகத்து மன்னும் உயிருக்கு' ஓர் அடையாளம் என்கிறாய். உதவாதென்று நினைப்பது விளையாட்டுப் பொருளாகிறது; களையும் புரதமாகிறது. உண்மையில் தாவரங்கள் அதிசயம்தான், புனிதம்தான். நல்ல குடும்பங்கள் தழைக்கட்டும்.
- புழல் தி.பாலகுமார்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
ஆழ்கடலில் சர்வசாதாரணமாகக் காணப்படும் சுறா குடும்பத்தைச் சேர்ந்த, பல்வேறு சிறப்புப் பண்புகள் உள்ள அபூர்வ உயிரினங்களான திமிங்கலச் சுறாக்கள் (Whale sharks) வாழ்கின்றன. இவை அபூர்வமாகவே கரைக்கு வரும் இயல்புடையவை. கடந்த ஐம்பதாண்டுகளில் 20 முறை மட்டுமே இவை கரையொதுங்கிய சம்பவங்கள் நிகழ்ந்தன. ஆனால் அதற்கு எதிர்மாறாகச் சமீபநாட்களில் கேரளா, தமிழ்நாடு கடற்கரையோரப் பகுதிகளில் இவை அதிக அளவில் கரையொதுங்குவது சர்வசாதாரணமாகி வருகிறது.
இவை உட்கடற்பகுதியில் வாழும், பாதுகாக்கப்பட வேண்டிய பட்டியலில் இடம்பெற்றுள்ள உயிரினங்கள். சாதாரண சுறாக்களுடன் ஒப்பிடும்போது இவை மெதுவாக இடம்பெயரும் இயல்புடையவை. சமீபத்தில் திருவனந்தபுரம் அருகில் தும்பா கடற்கரைப்பகுதியில் ஒதுங்கிய ஒரு திமிங்கலச் சுறாவின் எடை 10 டன்.
உணவுப்பற்றாக்குறை, காலநிலை மாற்றம், மிதமிஞ்சிய மீன்பிடித்தல் தொடங்கி இவை அவசரமாகக் கரையொதுங்க பல்வேறு காரணங்கள் உள்ளன.
பொதுவாக உட்கடலில் வாழும் இந்த உயிரினங்கள், சிறிய மீன்கள் இருக்கும் பகுதிகளைத் தங்கள் பாதையாகத் தேர்ந்தெடுக்கின்றன. கரைக்கு அருகில் இருக்கும் பிரதேசங்களுக்கு இவை வர உணவுப்பற்றாக்குறை ஒரு முக்கியக் காரணம் என்று கேரளா நீர்வாழ் மற்றும் மீன்வளத்துறையின் உயிரியல் பிரிவு (Aquatic Biology & Fisheries) துறைத் தலைவர் டாக்டர் ஏ. பிஜுகுமார் கூறுகிறார்.
ஆழ்கடலில் மீன்களின் எண்ணிக்கை குறைவதால் இவை மீன் வளம் அதிகமாக இருக்கும் பகுதிகளை நம்பி வாழ வேண்டியுள்ளது. இதனால் சிறிய மீன் கூட்டங்களைப் பின்தொடர்ந்து இவை கரைக்குச் சமீபத்தில் உள்ள பிரதேசங்களுக்கு வருகின்றன. சமீபத்தில் தும்பா கடற்பகுதிக்கு அருகில் ஒரு திமிங்கலச் சுறா கரையொதுங்க இதுவே காரணமாக இருக்கலாம் என்று நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஆனால் இவை கப்பல்கள் அல்லது பெரிய விசைப்படகுகளின் சுழலி (Propeller) அல்லது வேறு பகுதிகள் மோதுவதால் ஏற்படும் காயங்களினாலும் கரையொதுங்குவது உண்டு. காயம்படும் திமிங்கலச் சுறாக்களுக்கு அதிக தூரம் நீந்த முடிவதில்லை. அப்போது அருகில் இருக்கும் பகுதிகளைத் தஞ்சமடைகின்றன.
நச்சுத்தன்மையுள்ள மிதவை உயிரினங்களை (Toxic planktons) உணவாக உட்கொள்ளும் சுறாக்களுக்குச் சில சமயங்களில் உடல்நலமின்மை உண்டாகிறது. இது அவற்றின் பயணப்பாதையில் மாற்றங்களை ஏற்படுத்துகிறது. இவை கரையொதுங்க இதுவும் ஒரு காரணமாகக் கருதப்படுகிறது.
இவை நல்ல பார்வைத்திறன் உள்ள கடல்வாழ் உயிரினங்கள். இருட்டில் கூட முன்னால் இருக்கும் பொருட்களை இவற்றால் அடையாளம் காண முடியும். ஆனால் மற்ற கடல்வாழ் உயிரினங்களிடம் இருந்து வேறுபட்ட முறையில் அவற்றின் கண்கள் பக்கவாட்டில்/முன்னோக்கி அமைந்துள்ளன. இதனால் பார்வைப்புலத்தின் பரப்பு குறைகிறது. இது காயம்படுவதற்கான வாய்ப்பை அதிகரிக்கிறது.
கடல் மாசுபடுதல் இந்த உயிரினங்களுக்கு மற்றொரு பெரும் அச்சுறுத்தலாக அமைந்துள்ளது. காலநிலை மாற்றம் சூழலையும் வனவிலங்குகளையும் பாதிப்பது போல இவற்றையும் பாதிக்கிறது. காலநிலையில் ஏற்படும் மாற்றங்களை உணர உதவும் எலக்ட்ரோரிசெப்டார் (Electroreceptor) அமைப்புகள் எல்லா சுறாக்களிலும் அமைந்துள்ளன. கடல்நீரில் கலந்திருக்கும் ரசாயனப் பொருட்களைக் கண்டுபிடிக்க இந்த உறுப்புகள் இவற்றிற்கு உதவுகின்றன.
என்றாலும் காலநிலையில் உருவாகும் மாறுதல்களை இவை எவ்வாறு கண்டறிகின்றன என்பது இன்னமும் ஆராயப்படாமல் உள்ளது என்று டாக்டர் பிஜுகுமார் கூறுகிறார். காலநிலை மாற்றத்தினால் கடல் சூடாகிறது. இது திமிங்கலச் சுறாக்கள் உணவாக உட்கொள்ளும் விலங்கு மிதவை உயிரினங்களின் எண்ணிக்கையைக் குறைக்கிறது. இதனால் உணவு தேடி இவை கரைக்கு அருகில் இருக்கும் பகுதிகளுக்கு வருகின்றன.
இவை வடிவத்தில் பெரியதாக இருப்பதால் மீன்பிடி வலைகளில் இருந்து நழுவித் தப்பிக்க முடிவதில்லை. கரைக்கு வந்து சேரும் சுறாவிற்குக் காயம் படவில்லை என்றால் கடலிற்கே இவற்றை மீண்டும் அனுப்ப முடியும். ஆனால் காயம் இருந்தால் அதை எதிர்த்துப் போராடி உயிர் பிழைப்பது என்பது கடினம். இவை கரை நோக்கி வர இதுவும் ஒரு காரணமாகிறது.
ஒரு காலத்தில் இவை குஜராத்தில் பெருமளவில் வேட்டையாடப்பட்டன. இவற்றில் பெரும்பாலானவை வலையில் சிக்கியே உயிரிழக்கின்றன. இதனால் குஜராத்தில் கரையொதுங்கும் சுறாக்களைக் கடலிற்குத் திரும்ப அனுப்பிவைத்தால் மாநில வனத்துறை ₹25,000 சன்மானம் வழங்குகிறது.
இன அழிவைச் சந்திக்கும் இவற்றின் படங்களை மீனவர்களுக்குக் காட்டிக் கருத்தரங்குகள் நடத்தப்படுகின்றன. இவை வலையில் சிக்கிக் கொண்டால் என்ன செய்ய வேண்டும் என்பது பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய கடல்சார் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் (CMFRI) வகுப்புகளை நடத்துகிறது. இத்தகைய வகுப்புகள் ஒரு அளவு வரை பலனளிக்கின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஒரு காலத்தில் இவை நூறாண்டு காலம் வாழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. வலையில் சிக்கிய இவற்றைக்கரைக்கு இழுத்து வருவது சட்டவிரோதமானது. அதனால் அத்தகைய சந்தர்ப்பங்களில் இவற்றை மீண்டும் கடலில் விடுவதே வழக்கம். சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்புச் சங்கத்தின் (IUCN) அழிந்துவரும் கடல்வாழ் உயிரினங்களின் பட்டியலில் இவை இடம்பெற்றுள்ளன என்று விழிஞம் கடல்சார் மீன்வள ஆராய்ச்சி மைய (CMFRI) விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
வலையில் சிக்கியவுடன் மீண்டும் கடலில் விட முடிந்தால் இவற்றைக் காப்பாற்ற முடியும். சில சமயங்களில் காயம்பட்டு கரைக்கு வரும் சுறாவுடன் சேர்ந்து மற்றவையும் கூட்டமாகக் கரைக்கு வருவதுண்டு. கேரளா, தமிழ்நாடு கரைப்பகுதியில் 20 திமிங்கலச் சுறா இனங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. சுறாக்களின் உலகில் இவை மிகப்பெரிய மீன்கள்.
12 மீட்டர் வரை நீளம் உள்ள இவை கடலில் 2,000 அடி ஆழத்தில் வாழ்கின்றன. சில பெரிய மீன்களை உணவாக உட்கொள்வது உண்டு என்றாலும், இவை பெரும்பாலும் சிறிய மீன்களையே உணவாகக் கொள்கின்றன. இவை வயதிற்கு வருவதற்கு நீண்ட காலம் பிடிக்கிறது. இணை சேருவதற்குரிய பக்குவத்தை மெதுவாகவே அடைகின்றன. குறைவான குட்டிகளையே ஈனுகின்றன.
இதனால் இவற்றின் எண்ணிக்கை உயர வாய்ப்பு குறைவு. இவற்றின் துடுப்புகளுக்கு அதிக கிராக்கி உள்ளது. முன்பு இந்தியாவில் இருந்து இது வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதனால் இவை அதிகமாக வேட்டையாடப்பட்டன. இப்போது இது தடை செய்யப்பட்டுள்ளது.
2010-இல் எண்ணிக்கை பெருமளவில் குறைந்ததால் இவை பாதுகாக்கப்பட வேண்டிய வனவிலங்குகளின் பட்டியலில் முதல் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளன. அழியும் கடற்சூழல் மண்டலத்தைக் காக்க உதவும் இந்த உயிரினங்கள் அழியாமல் காப்பாற்றப்பட வேண்டும்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றிய அற்புத மனிதர்
- அறியப்படாத அரிய குடும்பங்கள்
- நாட்டின் கரையோரம் நச்சுயிரிக் கூட்டங்கள்
- திமிங்கலச் சிறைச்சாலை
- ஆண்கள் இல்லையா...? கவலையில்லை!
- நிறங்களை இழக்கும் இயற்கையின் உலகம்
- பூமிக்கடியில் வாழும் வேர்ப்பூஞ்சைகள்
- இந்த குரலுக்கு வயது நூறு!
- இயற்கையுடன் உறவு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்
- சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி
- புல் தின்னும் புலிகள்!
- நம்மைப் போலவே இவர்களும்… அழியாமல் காப்போம்!
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.