கேரளாவில் உள்ள அமைதிப் பள்ளத்தாக்கு (Silent Valley) என்ற பகுதி மேற்குத்தொடர்ச்சி மலைக் காடுகளின் கருவறை என்று குறிப்பிடலாம். பாலக்காடு பகுதியில் நீலகிரிக் குன்றுகளின் தென்மேற்குப் பிரதேசத்தில் அமைந்துள்ள பகுதி ஆகும் இது. கடல்மட்டத்தில் இருந்து 3000 முதல் 4000 அடி வரை உயரத்தில் உள்ள ஒரு பிரதேசம் ஆகும் இது. சமீபத்தில் இந்தப் பள்ளத்தாக்கு அமைந்துள்ள மேற்குத் தொடர்ச்சி மலைகளே யுனெஸ்கோ நிறுவனத்தால் “பாரம்பரியமான பாதுகாக்கப்பட வேண்டிய பிரதேசமாக” (World Heritage bio hotspot site) அறிவிக்கப்பட்டுள்ளது.

salim ali 400அமைதிப் பள்ளத்தாக்கு என்று இதற்குப் பெயர் வரக் காரணம் இங்கு சில் வண்டுகள் இல்லை என்பதால்தான்.. ஆனால், இப்போது இங்கும் சில் வண்டுகள் உள்ளதாகக் கூறப்படுகிறது. எண்ணற்ற பல்வேறுவிதமான உயிரினங்களின் வாழிடம் ஆகும் இது. மனிதரால்கூட நுழைய முடியாத கொடுங்காட்டுப் பகுதி ஆகும் இது. பாரதப்புழை என்ற நதியின் துணை ஆறான குந்திப்புழை என்ற ஆறு ஏறக்குறைய 25 கி.மீ தூரம் அமைதிப் பள்ளத்தாக்கின் வழியாக மனிதரால் தீண்டப்படாமல் பரிசுத்தத்துடன் ஓடுகிறது.

அரியவகை மீன் இனங்கள், அரியவகை நீர்வாழ் உயிரினங்கள், விலைமதிப்பிட முடியாத மருத்துவக் குணம் நிறைந்த மரங்கள், செடிகள், கொடிகள் போன்றவை இங்கு ஏராளமாகக் காணப்படுகின்றன. 50 லட்சம் வருடங்களுக்கு முன்பு தோன்றிய பிரதேசம் ஆகும் இது என்று கருதப்படுகிறது. இங்குள்ள காடுகளில் 89.54 சதுர கி.மீ கன்னி வனங்கள் ஆகும். இதில் 70 சதுர கி.மீ பகுதியும் மழைக்காடுகள் ஆகும்.

கொளுத்தும் வெயிலிலும் மழை பொழியும் அபூர்வமான ஒரு இடம் இது. 2000க்கும் அதிகமான தாவர வகைகள் இதுவரை இங்கிருந்து கண்டறியப்பட்டுள்ளன. 200 வகையான பறவைகள் உள்ளன. இவற்றில் சில பறவைகள் இங்கு மட்டுமே காணப்படுபவை (endemic) ஆகும். 25 இனங்களைச் சேர்ந்த தவளைகள் இந்தப் பள்ளத்தாக்கில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதில் 4 இனங்கள் இங்கு மட்டுமே உள்ளவை ஆகும். 225 இன வண்டுகள், 100க்கும் மேற்பட்ட வண்ணத்துப் பூச்சிகள், 55 இனப் பாம்புகள் இங்கு வாழ்கின்றன. 315 இன உயிரினங்கள் இங்கு உள்ளன. இவற்றில் 34 இனங்கள் பாலூட்டிகள் ஆகும்.

புலி, வரையாடு, கருங்குரங்கு, சிங்கவால் குரங்கு, மலை அணில், பலவிதமான பாம்புகள் போன்ற அரியவகை பல உயிரினங்கள் வாழும் சொர்க்கபூமி ஆகும் அமைதிப் பள்ளத்தாக்கு. அமெரிக்க விலங்கியலாளரான ஸ்டீபன் க்ரீன் 1971 - 1972 காலகட்டத்தில் இங்கு வாழும் சிங்கவால் குரங்குகளைப் பற்றி ஆய்வு செய்தார். இந்தப் பள்ளத்தாக்கு உட்பட்ட அபூர்வமான சில மேற்குத்தொடர்ச்சி மலைப்பிரதேசங்களில் மட்டுமே இந்த வகைக் குரங்கு வாழ்ந்து வருகிறது.

இன அழிவை எதிர்நோக்குகின்ற இந்தக் குரங்கினம் மற்ற குரங்குகளிடம் இருந்து வித்தியாசமானது. கருப்பு நிறமும், முகத்தைச் சுற்றிலும் சிங்கத்திற்கு உள்ளதைப் போல சடைமுடியும் இதன் சிறப்பு அம்சங்கள் ஆகும். குறுகிய வாலின் முனையில் உரோமங்கள் அடர்த்தியாகக் காணப்படுகின்றன. மனித வாசமே இல்லாத அமைதிப் பள்ளத்தாக்கு போன்ற பசுமை மாறாக் காடுகளில் மட்டுமே இந்த இனத்தைச் சேர்ந்த குரங்குகள் வாழ்கின்றன. ஒரு மரத்தில் இருந்து இறங்கித்தான் இவை இன்னொரு மரத்தின் மீது ஏறுகின்றன. கருங்குரங்குகள் போல ஒரு மரத்தில் இருந்து குதித்துத் தாவி மற்றொரு மரத்திற்குச் செல்லும் பழக்கம் இவற்றிடம் இல்லை. பூக்களையும், இலைகளையும், பழங்களையும் மட்டும்தான் இவை உணவாக உட்கொள்கின்றன. கூட்டமாகவும், தனியாகவும் காணப்படுகின்றன. அமைதிப் பள்ளத்தாக்கின் பாதுகாப்பிற்காக நடந்த போராட்டத்தின் ஒரு அடையாளச் சின்னமாக சிங்கவால்குரங்கு இருந்தது.

அமெரிக்காவில் பாம்புகள் பற்றி ஆராய்வதில் நிபுணரான ரோமுலஸ் விட்டேக்கர் இந்தக் காடுகளில் வாழும் பாம்புகள் பற்றி ஆய்வை மேற்கொண்டார். இந்தக் காடுகளின் பல்லுயிர்த்தன்மைச் சிறப்புகளை வலியுறுத்தி அவர் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் சஞ்சிகையில் ஒரு ஆய்வுக் கட்டுரை எழுதினார்.

அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசம் இப்போதும் முழுமையாக அறியப்படாத ஒரு பொக்கிஷமாகவே திகழ்கிறது. அமைதிப் பள்ளத்தாக்கு என்கிற மாபெரும் கடலில் இருந்து சில சிப்பிகளை மட்டுமே பொறுக்கி எடுக்க மனிதர்களால் முடிந்துள்ளது என்று அவர் கருதினார். இதை ஒரு பசுமைமாறாக் காடாக மட்டும் கருத முடியாது என்றும், புராதனமாக இயற்கை அன்னை கொலுவிருக்கும் ஒரு கர்ப்பக்கிருகமாகக் கருத வேண்டும் என்றும் சலீம் அலி விரும்பினார். மனித நன்மைக்காக இந்தப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்று சலீம் அலி கருதினார். 1930களில் திருவிதாங்கூரிலும், கொச்சியிலும் ஆய்வுகளை நடத்திய சலீம் அலிக்கு கேரளாவில் உள்ள வனங்களைப் பற்றிய நல்ல புலமை இருந்தது.

அமைதிப் பள்ளத்தாக்கின் பாதுகாப்பு ஒரு பிரச்சினையாக உருவெடுத்தபோது கண்களை மூடிக்கொண்டு அதற்கு ஆதரவாகக் குரல் உயர்த்தினார் சலீம் அலி. அமைதிப் பள்ளத்தாக்கு வழியாக ஓடும் குந்திப்புழை ஆற்றின் குறுக்கே அணை கட்டி மின்சாரம் உற்பத்தி செய்ய வேண்டும் என்ற எண்ணம் 1921ஆம் ஆண்டு முதலே இருந்தது. 1970களில் இந்த எண்ணத்திற்கு வலு சேர்ந்தது. இந்தத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் 7 சதுர கி.மீ அளவிற்கு காடுகள் நீரில் மூழ்கிப் போய்விடும் என்ற அச்சம் ஏற்பட்டது. மாநில மின்வாரியம் மத்திய அரசின் மின்வாரியத்திடம் இருந்து திட்டத்தை நிறைவேற்றுவதற்கான அனுமதியையும் பெற்று விட்டது.

1973ஆம் ஆண்டில் இந்த அனுமதி பெறப்பட்டது. நிதிக் கமிஷனும் பச்சைக் கொடி காட்டிவிட்டது. ரூ.24.88 கோடி அணைகட்டு கட்டுவதற்காக ஆகும் செலவு என்று திட்டமிடப்பட்டிருந்தது. 60 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்வதற்கான திட்டம் ஆகும் இது. மாநில அரசிடம் தேவையான தொகை இல்லாததால் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது காலதாமதமாகிக் கொண்டிருந்தது.

1976ஆம் ஆண்டில் தேசிய சுற்றுச்சூழல் திட்டமிடல் கமிட்டியின் (National Committee on Environmental Planning) உறுப்பினர்கள் அடங்கிய ஒரு குழு ஜாபர் ஃபதேஹல்லியின் தலைமையில் மேற்குத்தொடர்ச்சி மலைத்தொடரில் உள்ள சூழல் பிரச்சினைகளைப் பற்றி ஆராய வந்தது. ஜாபர் ஃபதேஹல்லி சலீம் அலியின் குடும்ப உறவினரும் ஆவார். இந்தக் கமிட்டி அமைதிப் பள்ளத்தாக்கில் ஆய்வுகள் செய்தபிறகு நீர்மின் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சிபாரிசு செய்தது. அமைதிப் பள்ளத்தாக்கில் உள்ள வனங்கள் பல்லுயிர்த்தன்மையின் முக்கிய மையம் ஆகும் என்றும் அந்தக் கமிட்டி வலியுறுத்தியது.

அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தை ஒரு பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்க வேண்டும் என்றும் அந்தக் குழுவினர் பரிந்துரை செய்தனர். இந்நிலையில் திட்டத்தை நிறைவேற்றியே தீர வேண்டும் என்று எல்லா அரசியல் கட்சிகளும் வீறு கொண்டு எழுந்தன. கேரள சட்டசபை அரசியல் வேறுபாடு இல்லாமல் ஒருமனதாக அமைதிப் பள்ளத்தாக்கு நீர்மின் திட்டத்திற்கு ஆதரவாகத் தீர்மானம் நிறைவேற்றியது. சர்வகட்சிக் குழு டெல்லிக்குச் சென்று அன்றைய பிரதமர் மொரார்ஜி தேசாயை நேரில் சந்தித்து நீர்மின் திட்டத்தைக் கட்டாயமாக நிறைவேற்ற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்கான உத்தரவாதத்தையும் அவரிடம் இருந்து பெற்றுக்கொண்டு திரும்பியது. இடது, வலது கட்சிகள் திட்டத்திற்கு ஆதரவாக ஒன்றிணைந்து கைகோர்த்தன. ஒரு சக்தியாலும் திட்டம் நிறைவேற்றப்படுவதைத் தடுக்க முடியாது என்ற நிலைமை ஏற்பட்டது.

அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் போராட்டத்தில் குதித்தவர்கள் எல்லோரும் அரசியல் சார்பற்ற எழுத்தாளர்களும், விஞ்ஞானிகளும்தான். பிரபலமான ஊடகங்களின் ஆதரவு ஆரம்பத்தில் இல்லை. மலபார் பிரதேசத்திற்கு மின்சாரம் கொண்டு செல்வதற்கான ஒரு அரிய வாய்ப்பாகவே அமைதிப் பள்ளத்தாக்கு நீர்மின் திட்டத்தைப் பலரும் நினைத்தனர். ஆனால், அப்போது மற்ற மாநிலங்களுக்கு மின்சாரத்தை விற்றுக்கொண்டிருந்த கேரள மின்வாரியம், மலபாரில் மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்கு வேறு வழிகளில் முயல தடை எதுவும் அப்போது இல்லாமல்தான் இருந்தது. இந்த நிலையில் திட்டத்திற்கு ஆதரவாகவும், எதிராகவும் பிரச்சாரங்கள் சூடுபிடித்தன.

திட்டத்திற்கு எதிராகப் போராட்டம் நடத்தியவர்களில் பலரும்கூட திட்டம் ஒருபோதும் கைவிடப்படும் என்பதற்கான ஒரு அறிகுறியையும் காணவில்லை.

இந்தச் சூழ்நிலையில்தான் உலகப்புகழ்பெற்ற இயற்கை ஆர்வலரான சலீம் அலியின் வலிமை வாய்ந்த குறுக்கீடு அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதற்காக ஏற்பட்டது. திட்டத்திற்கு எதிராக அவரின் குரல் ஓங்கி ஒலித்தது. எவ்வாறேனும் எந்த விலை கொடுத்தாவது அமைதிப் பள்ளத்தாக்கு என்ற அந்த இயற்கையின் ஆலயம் ஒரு பாதிப்பும் ஏற்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று திடமாக நினைத்தார் சலீம் அலி. நீலகிரி உயிர்க்கோளப் பிரதேசத்திற்கு (Nilgiri Biosphere Reserve) உட்பட்ட அமைதிப் பள்ளத்தாக்கு பாதுகாக்கப்பட வேண்டும் என்பது வேறு எவரைக் காட்டிலும் சலீம் அலிக்கு நன்றாகத் தெரிந்திருந்தது. அங்கே ஒரு நீர்மின்நிலையத்தை எழுப்பி அழகு நிறைந்த அந்தப் பள்ளத்தாக்கை மூழ்கச்செய்து கொல்வதற்கான எல்லா ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கும்போது ஒரு முடியிழையில் அந்தப் பள்ளத்தாக்குக் காப்பாற்றப்பட்டதற்காக நாம் அனைவருமே சலீம் அலிக்கு நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்.

அதற்காகத் தானே அமைதிப் பள்ளத்தாக்குப் பாதுகாப்புப் போராட்டங்களின் தலைவர் ஆனார் சலீம் அலி. அவருடைய தலைமையில் நடந்த போராட்டங்கள் தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் கவனிக்கப்பட ஆரம்பித்தன. சர்வகட்சிச் சங்கம் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பதற்காக மத்திய அரசாங்கத்தின் மீது அழுத்தம் செலுத்திக் கொண்டிருந்தது. “அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றுவதற்கான தோற்கப்போகின்ற போராட்டத்தில் என்னையும் சேர்த்துக் கொள்ளுங்கள்” என்று பிரபல மலையாள எழுத்தாளர் வைக்கம் முகமது பஷீர் கூறினார். அவர் கூறியது போலவே யாரும் அந்தத் திட்டம் கைவிடப்படும் என்று எதிர்பார்க்கவே இல்லை.

ஆனால், எல்லோரையும் ஆச்சரியத்தில் மூழ்கச்செய்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தி நீர்மின் திட்டத்தைக் கைவிடத் தீர்மானித்தார். இந்திய நாட்டின் வரலாற்றில் இதற்கு முன்பும், இதற்குப் பின்பும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது கிடையாது.

இந்திரா காந்தியிடம் அதிகமான செல்வாக்கு பெற்றிருந்த சலீம் அலியே இதற்குக் காரணம். சலீம் அலியின் வற்புறுத்தலால்தான் திட்டத்தை இந்திரா காந்தி கைவிட்டார். சூழலியலாளர்களுக்கும், வளர்ச்சி வேண்டும் என்று வாதிப்பவர்களுக்கும் இடையில் ஏற்பட்ட ஒரு மோதலாக அமைதிப் பள்ளத்தாக்குப் பிரச்சினை மாறிவிட்டது. சர்வதேச அளவில் கூட இது ஒரு சூடான விவாதத்தைக் கிளப்பிவிட்டது.

எல்லா ஏற்பாடுகளும் முன்னேறிக் கொண்டிருந்த அன்றைய அந்தச் சூழலில் திட்டத்தைக் கைவிடுவது என்பது இந்திரா காந்திக்கு அரசியல்ரீதியாக நன்மையைக் காட்டிலும் தீமையையே ஏற்படுத்துவதாக அமைந்திருந்தது. குறிப்பாக அவசரகால நிலையைப் பிரகடனப்படுத்தி இருந்த சூழ்நிலையில், இந்திய மக்கள் இந்திரா காந்தியையும், காங்கிரஸ் கட்சியையும் தண்டனை கொடுத்து மூலையில் முடங்கச்செய்த அனுபவத்தின் பின்னணியில் அப்படி ஒரு தீர்மானத்தை இந்திரா காந்தி துணிச்சலுடனேயே எடுத்தார்.

ஜவஹர்லால் நேருவிடம் இருந்ததைப் போல இந்திரா காந்தியிடமும் சலீம் அலி அதிக செல்வாக்குடன் விளங்கினார். சலீம் அலி எழுதிய புத்தகத்தையே சிறிய வயதில் இந்திரா காந்திக்கு பிறந்தநாள் பரிசாக அவரின் தந்தை நேரு முன்பு வழங்கி இருந்தார் என்றால் அந்த இரு பிரதமர்களுடன் சலீம் அலிக்கு இருந்த நெருக்கத்தை நம்மால் புரிந்துகொள்ள முடியும். இரண்டு பிரதமர்களுக்குமே சலீம் அலியின் மீது ஒரு தனிப்பட்ட பாசம் இருந்தது. நாட்டின் பொதுவான நன்மைக்காக மட்டுமே சலீம் அலி எதையும் சொல்லுவார், செய்வார் என்ற அசைக்கமுடியாத நம்பிக்கை அவர் மீது அவர்கள் இருவருக்குமே இருந்தது.

அதனால் சலீம் அலியின் தேவையான ‘அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற கோரிக்கையை இந்திரா காந்தியால் நிராகரிக்க முடியவில்லை. தற்காலிகமாக ஏற்படும் அரசியல் மேன்மையைக் காட்டிலும் நீடித்த நிலையான நாட்டின் நன்மையே முக்கியம் என்ற எண்ணத்துடன்தான் சலீம் அலி செயல்படுகிறார் என்று இந்திரா காந்தி முழுமையாக நம்பினார்.

ஆனால், தன் நிலைப்பாட்டில் உறுதியாக இருந்து தன் நண்பரான இந்திரா காந்தியைச் சங்கடத்தில் ஆழ்த்த சலீம் அலி விரும்பவில்லை. திட்டத்தைக் கைவிட வேண்டும் என்ற சலீம் அலியின் கோரிக்கையை நிராகரிக்கவும் முடியாமல் ஏற்றுக்கொள்ளவும் முடியாமல் இந்திரா காந்தி தவித்துப் போவாரோ என்று சலீம் அலி கவலைப்பட்டார். ஆனால், தான் இவ்வாறு செய்யவில்லை என்றால் பழம்பெருமை வாய்ந்த ஒரு உயிர்க்கோளம் ஒட்டுமொத்தமாக தண்ணீருக்குள் மூழ்கிப் போய்விடும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும்.

சவால் நிறைந்த அந்தச் சூழ்நிலையில் சலீம் அலியின் மீது அழுத்தம் செலுத்தக்கூடிய ஒரு சக்தியாகச் செயல்பட்டது அவருக்குப் மிகவும் பிரியமான அவருடைய மாணவி தில் நவாஸ் என்பவரே ஆவார். அவர் பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

சலீம் அலியின் தலைமையின் கீழ் ஒரு அமைதிப் பள்ளத்தாக்குப் பாதுகாப்புச் சங்கத்தை ஏற்படுத்தி தேசிய அளவிலும், சர்வதேச அளவிலும் இயற்கையைப் பாதுகாப்பதில் ஒரு பிரச்சாரத் தூதுவராகச் செயல்பட்டது தில் நவாஸ்தான். அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்ற வேண்டியதன் தேவையை சுட்டிக்காட்டி சலீம் அலி இந்திரா காந்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுவிடும் என்ற உறுதியான ஒரு சூழ்நிலையில் இன்னும் ஒரு கடிதத்தையும் பிரதமருக்கு எழுத வேண்டும் என்று தில் நவாஸ் சலீம் அலியிடம் கோரினார்.

அப்போது சலீம் அலி, “திட்டத்தை வேண்டாம் என்று ஒதுக்கித் தள்ளுவதற்கான நேரமும் காலமும் கடந்து போய்விட்டது.. இன்று உள்ள சூழ்நிலையில் அவ்வாறு செய்வது அசாத்தியமானது ஆகும்.. பாறங்கல்லில் தலையை மோதிக்கொள்ளும் இந்த முயற்சியில் இருந்து பின்வாங்கிவிடக் கூடாதா?” என்றார்.

ஆனால், தில் நவாஸ் விட்டுக்கொடுப்பதாக இல்லை. “நாம் இந்தத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று சொல்வது அமைதிப் பள்ளத்தாக்குப் பகுதிகள் முழுவதும் தண்ணீருக்குள் மூழ்கியதற்குப் பிறகா?” என்று வேதனையுடன் அவர் கேட்டார்.

சலீம் அலி ஒரு நிமிட நேரம் சிந்தித்தார். “இந்திரா காந்தி சங்கடப்பட்டாலும் பரவாயில்லை.. திட்டத்தைக் கைவிட்டே ஆக வேண்டும் என்று உறுதியுடன் கூறுவோம்..”, என்று பதில் சொன்னார் சலீம் அலி. சொல்லிவிட்டு அவர் ஒரு பெருமூச்சு விட்டார். அது ஒரு சுபசகுணமாக தில் நவாஸிற்குத் தோன்றியது. அதன்பின் திட்டத்தைக் கைவிட்டே ஆக வேண்டும் என்று வற்புறுத்தி எழுதப்பட்டிருந்த கடிதத்தில் சலீம் அலி கையெழுத்திட்டார்.

“அமைதிப் பள்ளத்தாக்கு காப்பாற்றப்பட வேண்டியதன் அவசியம் பற்றி காங்கிரஸ்காரர்களிடம் சொல்லி அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும்” என்று சலீம் அலி எழுதிய கடிதத்தில் இந்திரா காந்தியிடம் அவர் கேட்டுக்கொண்டிருந்தார். கேரளாவில் உள்ள காங்கிரஸ்காரர்கள் திட்டத்தைச் செயல்படுத்த வேண்டும் என்று இந்திரா காந்தியின் மீது வலுவான அழுத்தம் செலுத்திக் கொண்டிருந்தார்கள். இதை சலீம் அலியும் புரிந்துகொண்டிருந்தார்.

கடிதம் கிடைத்தவுடன் இந்திரா காந்தி சலீம் அலியை டெல்லிக்கு வருமாறு அழைத்தார். திட்டத்தைக் கைவிடுவது பற்றிப் பேசுவதற்கு அரசியல் காரணங்களால் இந்திரா காந்தியால் முடியவில்லை. அந்த அளவிற்கு வேலைகள் முன்னேறிவிட்டிருந்தன. “பார்க்கலாம்” என்று சலீம் அலிக்கு பிரதமர் வாக்குறுதி கொடுத்தார்.

கேரளாவில் “கேரளாவின் பறவைமனிதன்” என்று போற்றப்படும் இந்துசூடன் அவர்களின் தலைமையில் கேரள இயற்கை வரலாற்றுச் சங்கத்தினரும் (Kerala Natural History Society – KNHS), கவிஞர் சுகதகுமாரி அவர்களின் கீழ் செயல்பட்டு வந்த “இயற்கைப் பாதுகாப்புச் சமிதி”, பேராசிரியர் K.M. பிரசாத் அவர்களின் கீழ் செயல்பட்டு வந்த “கேரள சாஸ்திர சாகித்ய பரிஷத்” போன்ற அமைப்புகளும் திட்டத்திற்கு எதிராகத் தீவிரமான பிரச்சாரத்தில் ஈடுபட்டு வந்தன.

இயற்கை ஆர்வலர்களைப் பலரும் கடுமையாக விமர்சிக்க ஆரம்பித்தனர். அமைதிப் பள்ளத்தாக்கு வனங்களில் உள்ள சிங்கவால்குரங்குகளுக்காக வளர்ச்சியைத் தடுப்பவர்களே போராட்டம் செய்கிறார்கள் என்று கடுமையான குற்றச்சாட்டு போராட்டக்காரர்கள் மீது சுமத்தப்பட்டது. திட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசத்துரோகிகள் என்றும், நாட்டை வெளிநாட்டுச் சக்திகளுக்குக் காட்டிக்கொடுக்கும் துரோகிகள் என்றும், உளவாளிகள் என்றும் எல்லாம் கடுமையாக விமர்சிக்கப்பட்டனர்.

அந்தச் சமயத்தில் திட்டத்திற்கு ஆதரவாகவே பெரும்பாலான ஊடகங்களும் நிலைப்பாடு எடுத்திருந்தன. சில தேசியப் பத்திரிகைகளும், அரிதாக சில பிராந்தியப் பத்திரிகைகளும் இயற்கை ஆர்வலர்களின் அச்சங்களுக்கு ஆதரவு தெரிவித்தன. என்றாலும் விஷயங்கள் மொத்தத்தில் திட்டத்திற்கு ஆதரவாகவே சென்றுகொண்டிருந்தன.

ஒரு நிலையில் கேரள அரசாங்கம் சலீம் அலியை அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்திற்கு வரவழைத்து அங்கு பாதுகாக்கப்படுவதற்கு உரியதாக எதுவுமே இல்லை என்று நிரூபிக்க முயன்றது. ஆனால், அமைதிப் பள்ளத்தாக்கிற்கு வருகை புரிந்த சலீம் அலி அதைப் பாதுகாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தைப் பற்றி மேலும் வலியுறுத்திப் பேசினார். “இந்தக் கன்னி வனங்களைப் பாதுகாக்க முடியவில்லை என்றால் போய்த் தூக்கு போட்டுக்கொண்டு சாகலாம்” என்று அவர் தன்னுடன் இருந்த இயற்கை ஆர்வலர்களிடம் கூறியதாகச் சொல்லப்படுகிறது.

சலீம் அலியின் வருகையால் எதிர்மறையான விளைவே ஏற்பட்டது என்று புரிந்துகொண்ட கேரள மின்வாரியமும், கேரள அரசும் முன்பை விடவும் கூடுதலான வைராக்கியத்துடன் அதன் பின் செயல்பட ஆரம்பித்தன. அமைதிப் பள்ளத்தாக்கு வருகை தொடர்பாக 1979 அக்டோபர் 21ஆம் தேதி திருவனந்தபுரம் V.J.T. ஹாலில் அழைக்கப்பட்டிருந்த கூட்டத்தில் சலீம் அலி பங்கேற்பதாக இருந்தது. ஆனால், மின்வாரியம் திருவனந்தபுரம் முன்சீப் நீதிமன்றத்தை அணுகி சலீம் அலி அந்தக் கூட்டத்தில் பங்கேற்பதைத் தடை விதிக்கும் விதத்தில் ஆணை பெற்றது.

இது இயற்கை ஆர்வலர்களின் சினத்தைத் தூண்டும் விதமாக மாறியது. சலீம் அலி போன்ற உலகப் புகழ் பெற்ற ஒரு பறவையியல் அறிஞரை கூட்டத்தில் பங்கேற்க விடுவதில்லை என்று அன்றைய மின்வாரியமும், கேரள அரசாங்கமும் முடிவு செய்தது திட்டம் தொடர்பான சந்தேகங்களைப் பொதுமக்களிடம் ஏற்படுத்தியது.

பேராசிரியர் M.S. சுவாமிநாதன் மற்றும் பேராசிரியர் M.G.K. மேனன் ஆகியோரின் தலைமையில் அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகளும் அந்தப் பிரதேசம் பாதுகாக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துவதாக அமைந்தன.. என்றாலும் திட்டத்தைக் கைவிடுவது பற்றிய தீர்மானம் பிரதமரிடமிருந்தே வரவேண்டி இருந்தது.

அமைதிப் பள்ளத்தாக்கு குறித்த எல்லாவிதமான பிரச்சினைகளையும் பரிசீலனை செய்து திட்டத்தைக் கைவிடுவதுதான் நாட்டிற்கு நல்லது என்பதைப் புரிந்துகொண்டு பிரதமர் இந்திரா காந்தி 1983 நவம்பரில் “அமைதிப் பள்ளத்தாக்குத் திட்டத்தைக் கைவிட வேண்டும்” என்று மாநில அரசிற்கு ஆலோசனை வழங்கினார். பிரதமரின் மனதை அறிந்த அன்றைய கேரள முதல்வர் K. கருணாகரன் தீர்மானத்தை அனுசரித்து நடந்துகொண்டார்.

இத்துடன் இந்தியச் சூழல் பாதுகாப்பு வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் எழுதப்பட்டது. ஆரம்பித்து வைக்கப்பட்ட ஒரு அணைகட்டு இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்பதற்காக முதன்முதலாகக் கைவிடப்பட்டது.

1984 அக்டோபர் 31ஆம் நாள் இந்திரா காந்தி அவருடைய பாதுகாவலர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். 1984 நவம்பர் 23ஆம் நாள் அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தைத் தேசியப் பூங்காவாக அறிவித்து ஆணை வெளியிடப்பட்டது. 1985 செப்டம்பர் 7ஆம் நாள் அமைதிப் பள்ளத்தாக்குப் பிரதேசத்தை ஒரு தேசியப் பூங்காவாக அன்றைய பிரதமர் ராஜீவ் காந்தி நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகிற்கே ஒரு மகத்தான நன்மை செய்த மாமனிதராக சலீம் அலி இதன் மூலம் என்றும் போற்றப்படுவார்.. நினைவுகூரப்படுவார்.

- சிதம்பரம் இரவிச்சந்திரன்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.