விக்ரமன்: நல்லதொரு குடும்பம் பல்கலைக்கழகம்.

வீரப்பிரதாபன்: யாருடைய குடும்பத்தைக் குறித்துப் புகழ்கிறாய்? பாடுகிறாய்?

விக்ரமன்: எங்கள் குடும்பம்தான். தோட்டத்தில் கீழாநெல்லிச் செடி வளர்க்கிறோம். இலைகளை அரைத்துத் தேய்த்துத் தலைமுழுகி வருகிறோம். கண்பார்வை தெளிவாகிறது. தலைமுடி நன்கு வளர்கிறது. அதனால் நல்லதொரு குடும்பமாக இருக்கிறோம்.

mediginal plantsவீரப்பிரதாபன்: நன்று சொன்னீர். உங்கள் குடும்பம் மட்டுமல்ல, அந்தச் கீழாநெல்லிச் செடியின் குடும்பமும்தான். வயல்கள், வேலியோரங்களில் களையாக வளரும் கீழாநெல்லி நல்ல மூலிகையாகும். வயிற்று மாந்தம், சீதபேதி, காமாலை, கண்நோய்களுக்கு நன்மருந்து. இலையை அரைத்துச் சிரங்கு மற்றும் காயத்திற்குத் தடவுவதுண்டு. கீழாநெல்லித் தைலம் தேய்த்துத் தலைமுழுகி வந்தால் சூடு தணிந்து கண் எரிச்சல் நீங்கும் என்பது அனுபவ நாட்டு வைத்தியம். தலைமுடி வளரும் என்பதும்தான். ஆமணக்குக் குடும்பம் யூபோர்பியேசியின் (Euphorbiaceae) ஒரு கிளைக் குடும்பம் நெல்லி இனம். அந்த இனத்தின் சிறுசெடியான கீழாநெல்லியைக் கீழ்க்காய் நெல்லி, கீழ்வாய் நெல்லி எனவும் அழைப்பர். இதன் பூக்கள் பில்லாந்தஸ் என்ற வகை, அதாவது இலைப் பூக்கள்; சிறிய பசுமஞ்சள் நிறப் பூக்கள். களைச்செடி என்று ஒதுக்காமல் அறிவுக்கண் கொண்டு ஆய்ந்து மருந்தாகப் பயன்படுத்தினர். இதே குடும்பத்தின் 'மல்லோட்டஸ் பிலிப்பினென்சிஸ்' (Mallotus philippensis) என்ற சிறிய மரத்தைக் குங்கும மரம் என்பர். இதன் காயின் மேற்புறம் பிரகாசமான ஆரஞ்சு நிறத் துகள்கள் குங்குமம் போலக் காணப்படுவதால் இப்பெயர் பெற்றது. இம்மரத்தைக் கமீலா, சிந்தூரி, கபிலி என்பர். நிழலுக்காக, மழைக்காக வளர்ப்பர். காய்களைச் சமைத்துச் சாப்பிடுவதாகப் பதிவுகள் ஏதுமில்லை.

வெர்பினேசியே (Verbenaceae) என்ற அரிய குடும்பத்தின் 'ஃபைலா நோடிஃப்ளோரா' (Phyla nodiflora) எனும் பொடுதலை என்ற மூலிகைச் செடியின் எண்ணெயையும் தலைக்குத் தேய்த்துக் குளித்தால் பொடுகுத் தொல்லை இருக்காது. சிவப்பும் வெள்ளையும் கலந்த அழகான பூக்கள். இதில் லிப்பிஃப்ளூரின், ரூடின் போன்ற வேதிமங்கள் உள்ளன. பொடுதலை இலைகளை நெய்யில் வதக்கித் துவையலாகச் செய்து உண்டனர். மலச்சிக்கலுக்கு மருந்துணவு இது. இலைச்சாறு கொசுப்புழுக்களை அழிக்கும் என்று அறிந்தனர். காய்களும் மருந்தாகப் பயன்பட்டன என்றார் ஒரு கிராமத்துப் பெரியவர். ஆனால் அப்படியே அக்காய்களைச் சாப்பிடக் கூடாது என்பார்.

விக்ரமன்: எந்தக் காய்களைச் சாப்பிடலாம், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்று எப்படி அறிவது? ஏதும் குறிப்புகள் உள்ளதா?

வீரப்பிரதாபன்: எந்தக் காய்களைச் சாப்பிட வேண்டும், எவற்றைச் சாப்பிடக் கூடாது என்ற அனுபவ அறிவு நம் மக்களிடையே நிறைய உள்ளது. மரபுவழி அனுபவ அறிவியல் அறிவு. எது மருந்து, எது உணவு, எது விஷம் என்று பாகுபடுத்தி அறியும் அறிவுக்கண் இயல்பாகவே உண்டு. பயனுள்ளதை அதிகம் பயன்படுத்துவர். அதிகம் பயனாகும் வேறொரு சிறந்த குடும்பம் பூசணிக் குடும்பம். குக்கர்பிட்டேசியே (Cucurbitaceae) எனும் பூசணிக் குடும்பத்தின் பல உறுப்பினர்கள் பிரபலம்.

  • குக்கர்பிட்டா மஸ்க்கேட்டா (Cucurbita moschata) எனும் அறிவியல் பெயர் கொண்ட பூசணி,
  • குக்குமிஸ் மேலோ (Cucumis melo) எனும் முலாம்பழம்,
  • குக்குமிஸ் சட்டைவஸ் (Cucumis sativus) எனும் வெள்ளரி,
  • சிட்ருலஸ் வல்காரிஸ் (Citrullus vulgaris) எனும் தர்பூசணி எனும் கும்மட்டிப்பழம்,
  • குக்கர்பிட்டா சிற்றினமான பறங்கிக்காய்,
  • ட்ரிக்கோசாந்திஸ் பேரினத்தின் ஆங்குவினா (Trichosanthes anguina) எனும் புடலங்காய்,
  • லுஃபா (Luffa) எனும் பீர்க்கங்காய்,
  • லாகினேரியா (Lagenaria) எனும் சுரைக்காய்,
  • பெனிங்காசா (Benincasa) எனும் சாம்பல் பூசணி,
  • மோமார்டிக்கா (Momordica) எனும் பாகற்காய்,
  • காக்சீனியா (Coccinia) எனும் கோவைக்காய்,
  • குக்குமிஸ் பியூபெசென்ஸ் (Cucumis pubescens) எனும் சுக்கங்காய்,
  • செக்கியம் எடூலி (Sechium edule) எனும் சௌசௌ அல்லது சீமைக் கத்தரி

என்று சமையலுக்கு உதவும் பல கொடிக்காய்கள் இக்குடும்பத்தில் உள்ளன. பெரிய குடும்பம்.

விக்ரமன்: ஆஹா! ஆஹா! அருமையான காய்கனிகள். எனக்குப் பிடித்தவை.

வீரப்பிரதாபன்: ஆம். சுவையும் சத்தும் கொண்ட காய் மற்றும் பழச்செடிகளும் உள்ள நல்ல அரிய குடும்பம். 'மீலோத்ரியா' எனும் முசுமுசுக்கைக் கொடியின் வேரும் இலையும் காயும் கூட மருந்தாகின்றன. ஐவிரலிப் பழச்செடி, சவரிக் கொடி, பேய்ப்புடல், ஆகாசகருடன், காட்டுத்தும்மட்டிச் செடிகளும் இக்குடும்பப் பிள்ளைகள். பூசணிக் குடும்பச் செடியின் தண்டுகள் சாறுள்ளவை; நீளமான காம்புள்ள இலைகள். பற்றுக்கொம்பில் ஏறுகொடியாகப் பற்றுக்கம்பிகள் சிறப்பு. தடித்த தோல் கொண்ட, பல நாள் கெடாத கனிகளும் இக்குடும்பத்தின் சிறப்பு.

விக்ரமன்: அதிலும் அந்த பீர்க்கங்காயின் தோலைச் சீவிவிட்டுச் சதைப்பற்றைப் புளி, மிளகாய் சேர்த்துத் துவையல் அரைத்துச் சாப்பிட்டால் சுவையோ சுவை!

வீரப்பிரதாபன்: பீர்க்கங்காய் நெற்றை வீணாக்க மாட்டார்கள் நம் புத்திசாலி முன்னோர்கள். அந்த நெற்றைக் காயவைத்து அதிலிருந்து பீர்க்கநார் எடுப்பர். அந்த நாரைக் கடற்பஞ்சு போலத் தேய்த்துக் கழுவப் பயன்படுத்துவர். நன்கு முற்றிய சுரைக்குடுக்கையைச் சுரண்டிப் பக்குவப்படுத்திச் சுரைக்குடுக்கை செய்து, நீர் மிதப்பானாகவும் பொருட்களை வைக்கும் கலயமாகவும் பயன்படுத்தினர். உருண்டை வடிவ சுரைப்பிருடையை வீணை, தம்புரா போன்ற இசைக்கருவிகளுக்கு அனுநாத உறுப்பாகப் பயன்படுத்தினர். சுரைக்குடுக்கை இயற்கையான லைஃப் போட் (Lifeboat) எனப்படும் வாழ்க்கைப்படகு.

விக்ரமன்: சுரைக்குடுக்கை நீச்சல் உபகரணம் என்று அறிவேன். ஆனால், அது தம்புரா இசைக்கருவியானது என்பதை அறியும்போது வியப்பாக உள்ளது.

வீரப்பிரதாபன்: 'கார்தமஸ் டிங்டோரியஸ்' (Carthamus tinctorius) எனும் சாஃபிளவர் (Safflower) செடியைக் குசும்பாச் செடி என்பர். ஒரு காலத்தில் இச்செடியில் இருந்து உணவுக்குப் பயன்படும் விதமான எண்ணெய் பிரித்தெடுத்தனர். சற்றுத் தரம் குறைவானது எனினும் அதிகம் பயன்பட்டது. மற்றவை பரவிய பின் அது மறக்கப்பட்டது. பலருக்கு அந்தச் செடியைப் பற்றித் தெரியாது. கம்போசிட்டே (Compositae) குடும்பப் பிள்ளை குசும்பாச் செடி. இதன் காயின் நிறம் வெளுப்பு; உள்பருப்பு மஞ்சள் நிறம். விதைகளில் முப்பது சதவீதம் எண்ணெய் உண்டு. அந்த விதைகளைச் செக்கிலிட்டு ஆட்டி எடுத்த எண்ணெயைச் சமையலுக்குப் பயன்படுத்தியதோடு, மெழுகுத்துணி தயாரிக்கவும் கண்ணாடித்துண்டுகளை ஒட்டவைக்கவும் பயன்படுத்தினர். விதையை வறுத்துச் சிற்றுண்டியாகத் தின்றதாகவும் தகவல் உண்டு. அவற்றைக் கிராமங்களில் கோழித் தீவனமாகக் கொடுத்தனர். அதன் பிண்ணாக்கும் நல்ல கால்நடை உணவாக இருந்தது. சிற்றுண்டி, தீவனம் எனப் பல பயன்பாடுகள்!

விக்ரமன்: குசும்பா எண்ணெயா? இதுவரை கேள்விப்பட்டதே இல்லையே?

வீரப்பிரதாபன்: தற்போது பயன்பாட்டில் இல்லை, அதனால் தெரியவில்லை. குதிரைமசால் கீரை எனும் அல்ஃபால்ஃபா (Alfalfa) அல்லது 'மெடிக்காகோ சட்டைவா' (Medicago sativa) எனும் செடியைப் பற்றியும் அதிகம் அறியவில்லை. இந்த லெகுமினேசி (Leguminosae) குடும்பச் செடியின் வேர்கள் பத்தடிக்கு மேல் இறங்கி ஆழமாகப் போய் அங்குள்ள நீரை உறிஞ்சும். இச்செடியின் இலைகள், தண்டுகள் எல்லாம் குதிரை, மாடுகளுக்குத் தீவனம். இதே குடும்பத்தின் 'எக்கினோக்ளோவா கலோனா' (Echinochloa colona) எனும் குதிரைவாலி சிறுதானியங்களில் கடைசி இடம் பெற்றாலும், பண்ணைத் தினை என அழைக்கப்பட்டுச் சத்தான உணவாகிறது. இதன் கதிர்கள் பார்ப்பதற்கு குதிரைவால் போன்று இருப்பதால் அப்படி அழைத்தனர். காரீய நிறத்தில் இருக்கும் உமியை நீக்கி அரிசி போல் சமைத்துச் சாப்பிடலாம். செடி அதிக உயரம் வளராவிட்டாலும் புகழில் உயர்ந்த இடம் பெற்றது. எதையும் குப்பையில் போட்டு வீணாக்குவதில்லை; எல்லாம் பயன்மயம்.

விக்ரமன்: ஆமாம். குதிரைவாலி பிஸ்கட் மிகப்பிரபலம், சுவையாக இருந்தது. அறிவியல் அறிவும் தெளிவும் மிக்கவர்கள் எதையும் வீணாக்க மாட்டார்கள். ஆனால், குப்பையில் வளரும் செடிகளையும் கோபுர உயரத்துக்குப் பயன்படுத்திப் புகழ் தருகின்றனர். குப்பை என்றதும் குப்பைமேனி என்ற பெயர் நினைவில் எழுகிறது. அது என்ன செடி? ஏதும் களைச்செடியா?

வீரப்பிரதாபன்: நாட்டு மருத்துவம் எனும் மூலிகை வைத்தியத்தில் பயன்படும் சிறந்த மூலிகைச் செடி குப்பைமேனி. பொடுதலையைப் போலவே இதுவும் களைச்செடி என்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டு அலட்சியம் செய்யப்பட்டது. கிராமப்புறங்களில் சில பாட்டிகள் தம் வீட்டுச் சிறு குழந்தைகளுக்கு மலச்சிக்கல் இருப்பின், ஒரு இலையை அரைத்து உருண்டையாக்கிச் சிறு குழந்தையின் மலவாயிலில் இளக்கியாக இட்டு வைப்பர். நீண்ட நாள் நோய்ப்படுக்கையில் இருப்பவருக்கு ஏற்படும் படுக்கைப் புண்ணுக்கு உலர்ந்த இலைகளைப் பொடி செய்து பூசி நிவாரணம் காண்பர். எலுமிச்சைச் சாற்றில் இலைகளை அரைத்துப் படர்தாமரை போன்ற தோல் பிரச்சினைகளுக்குப் பற்று போட்டுக் குணம் காண்பர். சொறி, சிரங்குக்கும் இலைகளை உப்பு, சுண்ணாம்பு சேர்த்து அரைத்துப் போடுவதுண்டு. இலைகளை நீரில் கொதிக்க வைத்து வடிகட்டிக் கஷாயமாகச் செய்து பேதி நிற்பதற்குத் தருவர். பச்சை இலைச்சாறு குமட்டல் உண்டாக்கி வாந்தி ஏற்படுத்தும். இலைச்சாற்றை வேப்பெண்ணெய் சிறிதளவு கலந்து சிறு குழந்தைகளின் நாக்கில் தடவிக் குடலைச் சுத்தமாக்குவர்; கோழையும் வெளியேறும். காதில் அழுக்கு சேர்ந்து காது வலித்தால் கஷாயம் கொடுப்பர். தலைவலி மற்றும் மூக்கில் இரத்தம் வடிதல் போன்ற பிரச்சினைகளுக்கு இலைச்சாற்றைப் பஞ்சில் நனைத்து மூக்குத் துளையில் திரி போல வைப்பர்; நிவாரணம் தரும். காசநோய்க்கும் நிவாரணம் தந்ததாகப் பெரியவர்கள் கூறுவதுண்டு. அனுபவவாக்கு சத்தியவாக்கு.

விக்ரமன்: குப்பைமேனி எந்த அரிய குடும்பத்தின் செல்லப்பிள்ளை?

வீரப்பிரதாபன்: ஆமணக்குக் குடும்பம். குப்பைமேனியின் அறிவியல் பெயர் 'அகாலிபா இன்டிகா' (Acalypha indica). தோட்டங்களில், சாலையோரம் மற்றும் வேலியோரங்களில் சாதாரணமாக வளரும் களைச்செடியான இந்தக் குப்பைமேனியில் அக்கலிபின் எனும் ஆல்கலாய்டும் டிரைஅசிடோன் எனும் அமீனும் உள்ளதை விஞ்ஞானம் அறிந்து வணிகப்படுத்திய பின் நாம் அதை மறந்துவிட்டோம். இன்று பலருக்கு இப்படி ஒரு செடி இருப்பதே தெரிவதில்லை. இதே இனத்தின் சின்னிச்செடியைத் தோட்டத்தில் அழகுக்காக வளர்க்கின்றனர். பல நிறங்களில் பெரிய இலைகளும் கதிர்களும் அழகானவை; ஆனால் பயன் அதிகமில்லை.

விக்ரமன்: குப்பைமேனி அழகாக இருக்காது, பயன்கள் அதிகம், அரிய மூலிகை; நவீன மனிதர் மறந்தனர், பலர் அறியவில்லை. சின்னி அழகு, அதிக பயன்களில்லை, ஆனால் பிரபலம். என்ன உலகம் இது?

வீரப்பிரதாபன்: நாம் தானே உலகம். நமக்கு வானமே எல்லை, உலகம் சிறக்கும். கொய்யா அறிவாய், சிறிய கொய்யா எனும் குரா அறிவாயா?

விக்ரமன்: என்ன, குராவா? சிறிய கொய்யாவா? ஒன்றும் புரியவில்லையே?

வீரப்பிரதாபன்: குப்பைமேனி மட்டுமல்ல, குராவையும் அதிகம் பேருக்குத் தெரியாது. வெட்சிக் குடும்பம் (Rubiaceae) ரூபியேசியின் 'கொமிலியா ஏஷியாடிகா' (Chomelia asiatica) எனும் குரவ மரத்தைக் குரா மரம் என்பர். சிறிய மரம்; பட்டை வழவழப்பானது, செம்பழுப்பு நிறம். இதன் கிளைகளில் ரெசின் பால் வடிந்து படிந்திருக்கும். வெண்மை நிறப் பூக்கள் நறுமணம் கமழும். சங்க காலம் முதல் பல இலக்கியங்களில் பாடப்பெற்ற குராவின் கனிகள் சிறிய கொய்யா போன்று இருப்பினும் உண்பதில்லை; மரத்தையும் மரவேலைக்குப் பயன்படுத்துவதில்லை. அதிகம் அறியப்படாத மற்றொரு மரம். இலக்கியத்தில் புலவர்கள் குரா மரத்தின் அரும்புகள் பாம்பின் பற்கள் போலவும், மலர்கள் சிறு பதுமைகள் போலவும் தோன்றுவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், நொச்சிக் குடும்பம் எனும் வெர்பெனேசியே (Verbenaceae) குடும்பத்தில் 'மீலைனா ஆர்போரியா' (Gmelina arborea) எனும் பெயருள்ள உமித்தேக்கு அல்லது பெருங்குமிழ் செடியில்… செடி என்பதை விட மரம் எனலாம்; நடுத்தர உயரம். மரப்பட்டை வழவழப்பாக வெண்சாம்பல் நிறமாக இருக்கும்; வளையாது, சுருங்காது. மரப்பலகை, மரச்சாமான் செய்ய உதவும். இன்னொரு வகை குமிழ்க் கொடி எனும் நிலக்குமிழ் மரத்தில் முட்கள் இருக்கும். இதில் மிக அழகான மஞ்சள் நிறப் பூக்கள் தொங்கும். இந்த மரத்தின் பலகை உதவாது; விறகாகவும் வேலையாக அடைக்கவும் உதவும். அழகான மரம்.

விக்ரமன்: அழகானது ஆபத்தானது என்பார்களே?

வீரப்பிரதாபன்: அழகாய் இருப்பதெல்லாம் ஆபத்து என்று அப்படிப் பொதுவாகக் குற்றம் சாட்ட முடியாது. எனினும் சில அழகான செடிகள் ஆபத்தானவை. அவற்றைப் பற்றி அறிந்து தவிர்ப்பது நல்லது. 'ஐகார்னியா' எனும் குளவாழை அல்லது பிசாசுத்தாமரை குளம், ஆறு என அனைத்து நன்னீர்ப் பகுதிகளிலும் வளர்ந்து, விரைந்து காடு போலப் பெருகி, நீர்ப்பரப்பை மூடிப் பெருந்தொல்லை தரும். பார்ப்பதற்கு மிக அழகாக இருக்கும். குளமும் ஆறும் இவற்றின் வளர்ச்சியால் தூர்ந்துபோகும்; படகுப் போக்குவரத்தைச் சிக்கலாக்கும். இலைகள் அதில் விழுந்து அழுகி, நீரைக் குடிக்கத் தகுதியில்லாத அழுக்கு நீராக்கிவிடும். மீன்களும் குறைந்து, அழிந்து இல்லாமல் போகும். அழகான பூக்கள்! இவற்றில் கொசுக்கள் மிகுதியாகச் சேர்ந்து விரைவில் பெருகிச் சூழலைக் கெடுக்கும்; நோய்கள் பரப்பும். உண்மையில் இது பிரேசில் நாட்டுச் செடி. அழகான பூவையும் பசுமையான பளபளப்பான இலைகளையும் கண்டு ஏமாந்து, தோட்டங்களில் பொய்கைகளில் வளர்க்கலாம் என ஆராயாமல், விளைவுகளை உணராமல் யாரோ கொண்டு வந்து வளர்த்துவிட்டனர். இன்று பல நாடுகளிலும் நம் இந்தியாவிலும் மண்டிக்கிடக்கிறது. நீரில் மிதக்கும், சேற்றில் வேரூன்றும், பெருங்கூட்டமாக வளரும்; நன்னீரில்தான் வளரும். பான்டிடீரியேசியே (Pontederiaceae) குடும்பத்தின் இந்த ஆகாயத்தாமரையின் அறிவியல் பெயர் 'ஐகார்னியா கிராசிப்பஸ்' (Eichhornia crassipes). நீர்நிலைகளில் இவற்றை வளரவிடாமல் தடுத்து, நீர் ஆதாரங்களைக் காக்க வேண்டியது நமது கடமை. பல கிராமங்களில் அறிவு சிறந்த அறிஞர்கள் அக்கடமையைச் சிறப்பாகச் செய்து வருகின்றனர் என்பது ஆறுதலான தகவல். குறிஞ்சி மலர் போன்றவர்கள் அவர்கள்.

விக்ரமன்: குறிஞ்சி மலர்! அது பன்னிரண்டு ஆண்டுக்கு ஒருமுறை நீலகிரியில் பூக்கும் அபூர்வ மலர் அல்லவா?

வீரப்பிரதாபன்: அறியவேண்டிய அரிய குடும்ப வாரிசுதான். அகாந்தேசியே (Acanthaceae) என்ற குறிஞ்சிக் குடும்பத்தின் 'ஸ்ட்ரோபிலாந்தஸ் குந்தியானஸ்' (Strobilanthes kunthiana) எனும் குறிஞ்சி மலர். ஏழிலிருந்து பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கக்கூடிய வகைகள் உள்ளன. இரண்டடி உயரச் செடி; தண்டு செந்நிறம். இருநூறு இனங்கள் வரை உள்ளன. பெரும்பாலும் பெரிய ஊதா நிறப் பூக்கள்; சில வெண்நிறக் குறிஞ்சி மலர்களும் உண்டு. அரிதாகச் சில மஞ்சள் மலர்களும் காணப்படும். பெரும்பாலும் ஊதாப் பூ கண்சிமிட்டும். தென்னிந்தியாவில் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வளர்பவை. நீலகிரியின் நீலமலர் குறிஞ்சி உலகப் பிரசித்தி பெற்றது. சில ஆண்டுகளுக்கு ஒருமுறை நீலமலையெல்லாம் குறிஞ்சி மலர்களே நீலநிறத்தில் பரவியிருக்கும். இடைப்பட்ட நாட்களில் ஒரு பூவைக் கூடக் காண முடியாது. சென்ற 2024 ஆம் ஆண்டில் நீலகிரியில் பூத்தது; பலர் கண்டு மகிழ்ந்தனர். 'மோனோகார்பிக்' (Monocarpic) என்ற வகையைச் சேர்ந்த தாவரமான குறிஞ்சி வளரும் உயரத்தை அடிப்படையாகக் கொண்டு குறிஞ்சி வகைகளுக்குப் பெயரிட்டனர். ஒரே குடும்பம்தான், எனினும் பெயர்கள் வேறு.

  • இரண்டடி வளர்பவை கொடிக்குறிஞ்சி,
  • ஆறடி கணுக்குறிஞ்சி,
  • எட்டடி வெள்ளைக் குறிஞ்சி,
  • பன்னிரண்டடி சோலைக்குறிஞ்சி,
  • பதினைந்து அடி கருங்குறிஞ்சி.

மலைவாழ் பழங்குடி மக்கள் குறிஞ்சித்தழையைக் கால்நடை, குதிரைகளுக்குத் தீவனமாகத் தருவர். பூத்துக் காய்ந்ததும் செடிகளை விறகாகப் பயன்படுத்தினர். குறிஞ்சி மலரைத் தேடிப் பறவைகள், தேனீக்கள் கூட்டம் அலைமோதும்; காரணம் தேன். குறிஞ்சித்தேன் மிகவும் சுவையானது, மருத்துவக் குணம் கொண்டது. பொருளாதார மருந்துப் பயன்கள் என்று குறிப்பிடும்படி எதுவும் இல்லை எனினும், மனதுக்கும் சுற்றுச்சூழலுக்கும் மகிழ்ச்சியூட்டும் உயிர்ப்பன்மய நண்பர் குறிஞ்சி மலைமலர். பன்னிரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பூக்கும் குறிஞ்சி மலர் அதிகம் அறியப்படாதது, அழகானது, அரியது, அபூர்வமானது — அறிஞர், சான்றோர் போல.

விக்ரமன்: குறிஞ்சி மலர் மிக அபூர்வமானது. மனிதர்களிலும் இதுபோல அபூர்வமான குறிஞ்சி மலர்கள் உள்ளனர். இதை அறிஞர் நா. பார்த்தசாரதி 'குறிஞ்சி மலர்' என்று நூலாக எழுதினார்.

வீரப்பிரதாபன்: 'சைகஸ் செர்சினாலிஸ்' (Cycas circinalis) தாவரத்திலிருந்து சாகோ (Sago) என்ற பொருள் பெறப்படுகிறது. அது ஒரு ஸ்டார்ச் பொருள். போடோகார்ப்பஸ் (Podocarpus) செடி பிளைவுட் ஒட்டுப்பலகைகள் தயாரிக்க உதவுகிறது. 'பைனிட்டிஸ் சக்ஸினிபெரா'விலிருந்து (Pinites succinifer) ஆம்பர் பெறப்படும். 'ஏபிஸ்' (Abies), 'பைனஸ்' (Pinus) ஆகியன காகிதம் தயாரிக்க உதவுகின்றன. இவை கூம்புகனி எனும் கோனிஃபர் (Conifer) குடும்பச் செடிகள். இவை ஜிம்னோஸ்பெர்ம்கள் (Gymnosperms) எனப்படுகின்றன. உலகில் குறைந்த எண்ணிக்கையில் இருந்தாலும் நிறைய பயன்கள் தருகின்றன.

விக்ரமன்: எனக்குச் சில தாவரங்களின் அறிவியல் பெயர்களைக் கூறுக. வாழை, தாமரை, காபி... இவற்றின் பயன்களைப் பற்றியும் சுருக்கமாக...

வீரப்பிரதாபன்: வாழைமரத்துக்கு 'மியூசா பாரடைசிகா' (Musa paradisiaca); பயன்கள் நீ அறியாததல்ல. பாக்குக்கு 'அரிகா கேடச்சு' (Areca catechu); உணவு செரிமானம் தரும். பாக்கு மரம் பனை குடும்பத்தைச் சேர்ந்தது, உணவுக்கலயம். தாமரைக்கு 'நிலம்பியம் ஸ்பீசியோசம்' (Nelumbium speciosum); தேசிய மலர், மூலிகை. கல்யாண முருங்கைக்கு 'எரித்ரைனா இன்டிகா' (Erythrina indica); மூலிகை. 'காஃபியா அராபிக்கா' (Coffea arabica) என்பது காபி; காஃபின் என்ற ஆல்கலாய்டு அதிலிருந்து பெறப்பட்டுப் பயன்படுகிறது. 'சிக்கோரியம் இன்டிபஸ்' (Cichorium intybus) தாவரத்திலிருந்து கிடைக்கும் வாசனைப்பொருள் சிக்கரி; காபிக்கு மணம் சேர்க்கும், உற்சாக பானம், உலக பானம்!

பாமேசியே (Palmaceae) எனும் பனைக் குடும்பத்தின் 'பொராசஸ் ஃபிளாபெல்லிஃபர்' (Borassus flabellifer) எனும் பனைமரத்தின் பயன்கள் சொல்லில் அடங்காதவை. பூலோக கற்பகத்தரு பனை நம் மாநில மரம். பாக்கும் பனையும் ஒரே குடும்பம்தான். இன்னும் நிறைய தாவரங்கள் உள்ளன. அவற்றின் அறிவியல் பெயர்கள், பயன்கள், கட்டுப்பாடுகள் அறிந்து முறைப்படி பயன்படுத்தி வாழ்வில் சிறக்கலாம்.

- புழல் தி. பாலகுமார்

More articles by புழல் தி.பாலகுமார்

Comments

0 comments

0

Leave a comment

Fields marked with * are required.

✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு

கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.

வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.