அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- நளன்
- பிரிவு: புவி அறிவியல்
ரஷ்யாவில் கோலா தீபகற்பப் பகுதியில் ஆராய்ச்சிக்காக உலகிலேயே மிக ஆழமாக துளையிடப்பட்டுள்ளது. 1970ல் ஆரம்பித்த இந்த துளையிடும் பணி 1995ல் முடிந்தது. துளையின் ஆழம் 12,262 மீட்டர். இதன்மூலம் பூமியின் ஆழத்தில் நிகழும் தட்டுப் பிளவுகள், பூமியின் மையப்பகுதியில் உள்ள வேதியியல் பொருட்கள் பற்றி ஆராயப்பட்டது. இந்த ஆழத்தில் 270 கோடி ஆண்டுகளுக்கு முன் உருவான பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டன. இந்தத் துளையின் ஆழத்தை மேலும் 10,000 அடிகள் நீட்டிக்க ரஷ்ய விஞ்ஞானிகள் முயற்சிக்கின்றனர்.
இதற்கு அடுத்தபடியாக அமெரிக்காவின் ஓக்லஹோமா என்ற இடத்தில் இரண்டாவது பெரிய துளை (31,500 அடிகள்) உள்ளது. பூமியின் மையப்பகுதியில் உருகிய இரும்பு உள்ளது. இதன் வெப்பம் 6,000 செல்சியஸ். இது சூரியனின் வெளிப்புறப் பகுதியின் வெப்பத்துக்கு இணையானது.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பார்த்தவுடன் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும் பறவைதான் மஞ்சள் கிளி. இவற்றின் அழகும் ஸ்வரம் பிசகாமல் பாடும் இவற்றின் திறனும்தான் நம்மைக் கவர்வது. தென்னிந்தியாவில் பொதுவாக மூன்று வகையான மஞ்சள் கிளிகளைக் காணலாம். வாழைப்பழத்தின் தங்க நிறம் உள்ளதால் சில பிரதேசங்களில் இவற்றை வாழைப்பழப் பறவை என்றும் அழைக்கின்றனர். வட இந்தியாவில் பழுத்த மாம்பழத்தின் பொன்னிறத்துடன் உள்ளதால் இவை மாம்பழப் பறவை என்றும் அழைக்கப்படுகின்றன.
மாம்பழக் காலங்களில்தான் அங்கு இவை அதிகமாகக் காணப்படுகின்றன. இப்பெயர் ஏற்பட இதுவும் ஒரு காரணம். மஞ்சள் கறுப்புக் கிளி என்ற இனம் மட்டுமே தென்னிந்தியாவில் பொதுவாகக் காணப்படுகிறது. மஞ்சள் கிளிகளைப் பார்த்தால் இனிப்புப் பலகாரங்கள் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கை கிராமப்புறங்களில் முன்பு இருந்தது. இப்பறவைகள் மார்ச் முதல் ஆகஸ்ட் வரை கூடு கட்டுகின்றன. மற்ற இரண்டு இனப் பறவைகள் வலசை வந்து செல்பவை.
இதனால் இந்த வலசை இனங்கள் பள்ளி விடுமுறை நாட்களில் அதிகம் காணப்பட்டன. வேனில் காலத்தில் விடுமுறையின்போதுதான் ஊரில் பல திருவிழாக்கள் நடைபெறும். அப்போது வீடுகள்தோறும் இனிப்புப் பலகாரங்கள் செய்யப்படும். அதனால் இந்தச் சொல்வழக்கு ஏற்பட்டிருக்கலாம். மஞ்சள் கிளிகள் நிலத்தில் இறங்கிப் பார்த்தால் அவை இருக்கும் இடத்தில் புதையல் கிடைக்கும் என்ற ஒரு நம்பிக்கையும் இருந்தது. இவை பொதுவாகத் தரையில் இறங்குவதில்லை. ஒரு கிளையிலிருந்து மற்றொன்றிற்குத் தாவிப் பறப்பதே இவற்றின் இயல்பு.
இவை அரிதாகவே பூச்சிகளைப் பிடிக்கத் தரையில் இறங்கும். அதனால் இந்த நம்பிக்கை ஏற்பட்டிருக்கலாம். “வண்ணமயமான அழகுள்ள பறவைகளின் பட்டியலில் இவை உள்ளன. நன்றாகப் பழுத்த மாம்பழம், பலாப்பழம் போலப் பளபளக்கும் மஞ்சள் நிறத்தில் இவை காணப்படுகின்றன. தலையிலும் கழுத்திலும் முகமூடி அணிந்தது போலக் கறுப்பு மற்றும் மஞ்சள் நிறத்துடன், கறுப்பு நிறத்தில் சிறகும் மின்னும் சிவப்பு நிறத்தில் அலகும் காணப்படுகின்றன. ஆண், பெண் பறவைகளிடையே நிற வேறுபாடு இல்லை.
வயதிற்கு வராத பறவைகள் பளபளக்கும் மஞ்சள் நிறத்தைப் பெற்றிருப்பதில்லை. கம்பளிப் புழுக்கள் போன்ற புழு வகைகளே இவற்றின் முக்கிய உணவு. அரிதாகப் பழங்களைச் சாப்பிடும். சாதாரணமாகக் கரகரப்பான குரலில் பாடுகின்றன. சாதாரணமாக நகரங்களிலும் இவற்றைக் காணலாம். மஞ்சள் கறுப்புக் கிளிகள் ஏப்ரலில் கூடு கட்டும்போது மிக இனிமையாகப் பாடுவதுண்டு. தொட்டில் போல மிக அழகான கூடுகளைக் கட்டுகின்றன.
கூட்டில் முட்டையிட்டு அடைகாத்துக் குஞ்சு பொரிக்கின்றன. குஞ்சுகளுக்குப் புழுக்கள், பிராணிகளின் மலம் போன்றவற்றை உணவாகக் கொடுக்கின்றன. இந்தியன் ஓரியோல் (Indian Oriole) என்பது மஞ்சள் கறுப்புக் கிளியின் ஆங்கிலப் பெயர். மஞ்சள் கிளியின் ஆங்கிலப் பெயர் பிளாக் வுட்டன் ஓரியோல் (Black Hooded Oriole). இந்திய மஞ்சள் கிளிக்குப் பிரகாசிக்கும் மஞ்சள் நிறமும் கண்ணுக்கு மட்டும் கரியால் எழுதப்பட்டது போன்ற கறுப்பு நிறமும் உள்ளன.
சீன மஞ்சள் கிளி சீனா போன்ற நாடுகளிலிருந்து நம் நாட்டிற்கு அரிதாக வலசை வருகின்றது. இவற்றின் கண்ணைச் சுற்றிலும் கொள்ளைக்காரர்கள் போலக் கறுப்புப் பட்டை கட்டியது போலப் பட்டை தலையின் பின்பகுதி வரை நீண்டு செல்கிறது. இவற்றை அடையாளம் காண இது உதவுகிறது. பறவைகளை உற்றுநோக்கத் தொடங்குபவர்கள் இவ்வகைப் பறவைகளிலிருந்து ஆரம்பித்தல் நல்லது” என்று பறவை ஆய்வாளரும் எழுத்தாளருமான பி. சுஷாந்த் கூறுகிறார்.
மஞ்சள் கறுப்புக் கிளிகள் பலவிதமாகப் பாடுவதுண்டு. மழைக்காலம் தொடங்குவதற்குச் சற்று முன்பு அவை பாடும் பாடலே அதிகம் கேட்க வாய்ப்புள்ள பாடல். மழைக்காலத்தில் விடாமல் பெய்யும் சாரலின்போது நீர்நிலைகளிலிருந்து வரும் இவற்றின் பாடல்களைக் கேட்டுக் கொண்டே இருக்கலாம். மா அல்லது பலா மரத்தில் உட்கார்ந்து கொண்டு அவை மெல்லிய குரலில் பாடிக் கொண்டே இருக்கும்.
மழையின் குளிர்ச்சியும் பாடலின் இனிமையும் என்றும் நம் மனதில் மகிழ்ச்சியை ஏற்படுத்தும். அவை மகிழ்ச்சியாக இருக்கும்போது மட்டுமே இனிமையான குரல்களில் பாடுகின்றன. ஆனால் காக்கையையும் மற்ற எதிரிகளையும் கொத்தி விரட்ட வேண்டி வரும்போது அவை கடுமையான குரலில் கத்தும். மூன்று, நான்கு பறவைகள் சேர்ந்து உல்லாசமாக இருக்கும்போது அவற்றின் பாடல் ஆனந்தமயமானதாகக் கலகலவென்று ஆரவாரத்தோடு இருக்கும்.
தமக்குள் சண்டையிட்டுக் கொள்ளும்போது அவற்றின் குரல் கடுமையானதாக மாறும். மஞ்சள் கறுப்புக் கிளியின் அறிவியல் பெயர் ஓரியோலஸ் சாந்தோஃபிளவஸ் (Oriolus xanthornus). இந்திய மஞ்சள் கிளியின் ஆங்கிலப் பெயர் இந்தியன் கோல்டன் ஓரியோல் (Indian Golden Oriole). இதன் அறிவியல் பெயர் ஓரியோலஸ் ஓரியோலஸ் (Oriolus oriolus).
மஞ்சள் கறுப்புக் கிளியின் தலை, தொண்டை, தாடை, மார்புப் பகுதி, அலகு ஆகியவை கறுப்பாக இருக்கும்.
ஆண், பெண் பறவைகள் ஏறக்குறைய ஒரே மாதிரியாக இருக்கும். வயது வராத குஞ்சுகளின் தொண்டை, தாடை, மார்புப் பகுதி ஆகிய இடங்களில் வெள்ளை நிறத்தில் வரிகள் இருக்கும். இந்திய மஞ்சள் கிளியின் அலகு சிவப்பாக இருக்கும். அலகிலிருந்து ஆரம்பித்துக் கண் பகுதிகள் வழியாகச் செல்லும் பட்டை கறுப்பு நிறத்தில் காணப்படுகிறது. ஆண் பறவையின் சிறகுகளின் அடிப்பகுதியும் நல்ல கறுப்பு நிறத்தில் இருக்கும். இதற்கு நடுவில் ஒரு மஞ்சள் பொட்டு உள்ளது. வாலின் நடுப்பகுதி மஞ்சள் நிறத்துடன் இருக்கும்.
பெண் பறவை ஆண் பறவை போலச் சிவப்பாக இருப்பதில்லை. உடலில் மஞ்சள், ஆரஞ்சு நிறத்திற்குப் பதில் பசுமை கலந்த சாயம் போன்ற நிறத்தில் காணப்படும். மார்புப் பகுதியில் தவிட்டு நிறத்தில் வரிகள் உள்ளன. இறகுகள் பச்சை கலந்த தவிட்டு நிறத்துடன் உள்ளன. வயது வராத ஆண் பறவை பெண் பறவை போலவே இருக்கும். சீன மஞ்சள் கிளியின் அலகு ரோஸ் நிறமாக இருக்கும். கண் பகுதி வழியாகச் செல்லும் கறுப்புப் பட்டை நல்ல அகலமாக இருக்கும். பின்பகுதியில் நீண்டு இது உடலின் மற்றொரு கண் வரை செல்கிறது.
இந்த நிற வேறுபாடு இவற்றின் மூன்று இனங்களையும் அடையாளம் காண உதவுகிறது. மஞ்சள் கிளிகள் வசதியாக இருக்கும் இடங்கள் எல்லாவற்றிலும் கூடு கட்டும். இந்திய மஞ்சள் கிளிகள் காஷ்மீர், இமயமலைப் பகுதி, வட இந்தியாவில் சில இடங்களில் கூடு கட்டி வாழ்கின்றன. கூடு கட்டும்போது இனிய குரலில் பாடுகின்றன. சீன மஞ்சள் கிளி சைபீரியா, ஆசியாவின் வடக்கு, கிழக்குப் பகுதி நாடுகளில் கூடு கட்டி வாழ்கிறது. எல்லா இனப் பறவைகளும் சிறிய பூச்சிகளை உணவாக உண்கின்றன.
பூச்சிக் கட்டுப்பாட்டில் முக்கியப் பங்கு வகிக்கின்றன. மஞ்சள் கறுப்புக் கிளிகள் உயரமான மரங்களில் தொட்டில் போன்ற வடிவத்தில், மரப்பட்டையை நார் போலச் சீவி எடுத்து முடைந்து கூடு கட்டுகின்றன. உலர்ந்த இலைகள், உரோமங்கள் போன்றவற்றைக் கொண்டுவந்து கூட்டின் உட்புறத்தை அழகுபடுத்துகின்றன. இவற்றின் கூட்டைப் பார்த்தால் தேநீர் கோப்பை போல இருக்கும். பலசாலியான பறவைகளுக்கு அருகில் கூடு கட்டி வாழும் சுபாவம் இவற்றிற்கு உண்டு.
பொது எதிரிகளை விரட்ட இது அவற்றிற்கு உதவும். காகத்தைப் போன்ற எதிரிகள் வரும்போது அப்பகுதியில் கூடு கட்டி வாழும் எல்லாப் பறவைகளும் சேர்ந்து அவற்றை விரட்டுகின்றன. ஆனால் பலசாலியான பறவைகளுக்குக் கோபம் வந்தால் பாவம் மஞ்சள் கறுப்புக் கிளிகளின் மீது தாக்குதல் நடத்தி முட்டைகளையும் குஞ்சுகளையும் கொத்தி அழித்துவிடும். பலசாலிப் பறவையின் குஞ்சுகளுக்குக் கிளிகளின் குஞ்சுகள் உணவாகும். பறவைகளின் நடத்தையும் வாழ்க்கைமுறையும் அதிசயமானவை. பறவைகளை உற்றுநோக்கினால் பாடம் கற்கலாம்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற பறவைகள் சரணாலயம் ராஜஸ்தானில் உள்ள பரத்பூர் பறவைகள் சரணாலயம் ஆகும். ஒரு காலத்தில் இது பரத்பூர் அரசர்களின் வேட்டையாடும் களமாக இருந்தது. சதுப்புநிலப் பகுதியான இந்தப் பிரதேசத்திற்கு வலசை வரும் வெளிநாட்டுப் பறவைகளும், உள்நாட்டுப் பறவைகளுமாக ஏராளமானவை வந்துபோகும் ஓர் அரிய வகைப் பறவைகளின் சங்கம பூமி இது. பறவைகளைச் சுட்டு வீழ்த்தி அவை உயிருக்குப் போராடியபடி கீழே விழுவதைப் பார்த்து ரசிப்பதற்கும், சிறப்பு விருந்தாளிகள் நாட்டிற்கு விஜயம் செய்யும்போது அவர்களுடன் சேர்ந்து வேட்டையாடுவதற்கும் பல நூற்றாண்டுகளாக இந்தப் பிரதேசத்தை அரச குடும்பத்தினர்கள் பயன்படுத்தி வந்தனர். உலகின் பல பாகங்களில் இருந்தும் அரிய வகைப் பறவைகள் வலசை வந்துவிட்டுப் போகும் பரத்பூரில் எழில்கோலத்துடன் இயற்கை கொலுவீற்றிருந்தது.
அற்புதமான இந்தப் பிரதேசத்தை ஒரு பறவைகள் சரணாலயமாக மாற்றுவதில் சலீம் அலியின் பங்கு மகத்தானது. வலசை வரும் பறவைகளின் கால்களில் அடையாள வளையங்களை இடுவதற்கும், அவற்றின் போக்குவரவைப் பற்றி அறிந்து கொள்வதற்கும் இந்தச் சரணாலயம் மிகவும் பொருத்தமான இடமாக அமைந்திருந்தது. உண்மையில் சலீம் அலி ஜெர்மனிக்குச் சென்று பறவையியல் குறித்து படிக்கும்போது அங்கிருந்த ஒரு தீவிற்குச் சென்றபோதுதான் முதல் தடவையாக வலசை வரும் பறவைகளைப் பற்றியும், அவற்றை அடையாளப்படுத்துவதற்காக அவற்றின் கால்களில் உலோக வளையங்களைப் பொருத்துவதற்கும் கற்றுக் கொண்டார். வலசை வரும் பறவைகளின் மீது ஓர் ஆர்வம் ஏற்படவும் இதுவே காரணமாக அமைந்தது. இந்தியாவில் முதல் முறையாகப் பறவைகளுக்கு இவ்வாறு வளையங்களை இடுவதைத் தொடங்கி வைத்தவரும் அவரே ஆவார். பறவைகளைக் கொல்லாமல் உயிருடன் பிடித்து அவற்றைப் பற்றிக் கற்கும் முறையையும் சலீம் அலி நன்கு அறிந்திருந்தார். இந்தியாவில் வலசை வரும் பறவைகளின் கால்களில் வளையமிடும் முறை தொடங்கப்பட்டதும் இந்தச் சரணாலயத்தில்தான்.
பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தில் உறுப்பினராக இருந்தவரும், பிரிட்டிஷ் சிவில் சேவையில் உயர்ந்த அதிகாரியாக இருந்தவருமான சர். ரிச்சர்ட் டாட்னம் பரத்பூர் செல்வதற்கான அனுமதியைப் பெற சலீம் அலிக்கு உதவினார். அந்தக் காலத்தில் பரத்பூர் பிரதேசத்திற்குள் நுழைவதற்கு அந்தப் பகுதியை ஆண்டு வந்த அரச குடும்பத்தினரிடம் அனுமதி பெற வேண்டியது அவசியமாக இருந்தது. 1930களில் சலீம் அலி பரத்பூர் சென்று அங்கே காணப்பட்ட பறவைகளின் கால்களில் வளையமிடுவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார். அந்தப் பிரதேசத்தில் பரம்பரை பரம்பரையாகக் குடியிருந்துவந்த ஆதிவாசிக் குடும்பத்தினர் சிலரின் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்திப் பறவைகளைக் காயப்படாமல் பிடித்து ஆராய்ந்தார் சலீம் அலி. சலீம் அலியின் மூத்த சகோதரனும், பன்மொழி அறிஞருமான சிவில் சேவை அதிகாரி அமீத் அலியின் நண்பர் K. P. S. மேனன் பரத்பூர் மாகாணத்தின் நிர்வாகியாக (Administrator) அப்போது இருந்தார். இது சலீம் அலிக்கு பெரிதும் உதவியாக இருந்தது. மேனனும், அவருடைய இரண்டு இரட்டை மகள்களும் பறவைகள் ஆராய்ச்சியில் உற்சாகத்துடன் பங்கேற்றதை சலீம் அலி தன் சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார். சோவியத் யூனியனின் பாகமாக இருந்த இர்க்குட்ஸ்க், சைபீரியா ஆகிய பகுதிகளில் இருந்துதான் பறவைகள் பரத்பூர் நோக்கி வந்தன. ஆய்வுகள் மூலம் இது அறியப்பட்டிருந்தது. அவ்வாறு அந்த இடங்களில் இருந்து வலசை வந்த பறவைகளின் கால்களில் அடையாள வளையங்கள் பொருத்தப்பட்டிருந்ததில் இருந்து இந்த விவரங்கள் சலீம் அலிக்கும், அவரது குழுவினருக்கும் தெரியவந்தது.
பரத்பூர் பறவைகள் ஆய்வு நடந்துகொண்டிருக்கும்போது சில பிரச்சினைகள் எழுந்தன; விவாதங்களும் கிளம்பின. சோவியத் யூனியனில் இருந்து வரும் பறவைகளைப் பிடித்து மோசமான நோய்களை ஏற்படுத்தும் வைரஸ்களை அவற்றின் உடலுக்குள் செலுத்தி அந்த நாட்டிற்கு எதிராக அமெரிக்காவின் ஒத்துழைப்புடன் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன என்ற குற்றச்சாட்டு சில ஊடகங்களின் மூலம் பிரச்சாரம் செய்யப்பட்டது. மக்களவையில் (லோக்சபையில்) இந்த விஷயம் சூடான விவாதங்களுக்கு வழிகோலியது. இது போன்ற விவாதங்கள் கிளம்பியதைப் பற்றி சலீம் அலி மிகவும் வருத்தப்பட்டார்.
பரத்பூர் சரணாலயம் இந்தியாவில் உள்ள மற்ற சரணாலயங்களில் இருந்து வித்தியாசப்படுவது சைபீரியாவில் இருந்து அங்கு வரும் கொக்குகளால்தான். பரத்பூர் பறவைகள் சரணாலயத்திற்கு மட்டும் எல்லா வருடங்களிலும் சைபீரியன் கிரேன்கள் அல்லது கொக்குகள் வலசை வருவதற்குக் காரணம் இந்தச் சதுப்பு நிலப்பரப்பில் அவற்றுக்கு மிகவும் பிடித்தமான உணவு கிடைப்பதால்தான் என்று கருதப்படுகிறது. சிறப்பு விருந்தாளிகள் விஜயம் செய்யும்போது அவர்களைக் கொண்டு பறவைகளைச் சுட்டுவீழ்த்த, வேட்டையாட அழைப்பது என்பது பரத்பூர் அரசர்கள் விருந்தாளிகளுக்குக் கொடுக்கும் முதல் மரியாதையாகக் கருதப்பட்டது. இந்தப் பழக்கம் பாரம்பரியமாகவே அங்கு நிலவிவந்தது. இவ்வாறு நடத்தப்பட்ட ஒவ்வொரு வேட்டையின்போதும் ஆயிரக்கணக்கான பறவைகள் கண்டபடி சுட்டுக் கொல்லப்பட்டன. 1938ஆம் ஆண்டில் வைஸ்ராய் லின்லித்கோ பரத்பூர் விஜயம் செய்தபோது 4,273 பறவைகளை ஒரே நாளில் சுட்டு வீழ்த்தியதாகப் பதிவுகள் சொல்கின்றன. 1,900 ரவுண்டுகள் குண்டுமழையை லின்லித்கோ ஒருவர் மட்டுமே துப்பாக்கியால் சுட்டதாகப் பதிவுகள் உள்ளன. இது ஒருவேளை உலகச் சாதனையாகக் கூட இருக்கலாம் என்று சலீம் அலி எழுதியிருக்கிறார். சக உயிர்களிடம் எந்தக் கருணையும் காட்டாமல் மனம் போன போக்கில் திரும்பிய பக்கங்களில் எல்லாம் இயந்திரத் துப்பாக்கியைப் பயன்படுத்தித் துப்பாக்கியால் சுட்டு ரசித்தனர் வைஸ்ராயும், அவருடைய குழுவினரும். வைஸ்ராயைச் சந்தோஷப்படுத்த வேண்டியதும், அவருடைய அன்பிற்குப் பாத்திரமாக வேண்டியதும் பரத்பூர் அரசர்களுக்குத் தேவையான ஒன்றாக இருந்தது.
இந்தியாவிற்கு சுதந்திரம் கிடைத்த பிறகும் அரசருக்கும், அவருடைய குடும்பத்தினருக்கும் பறவைகளை வேட்டையாடுவதற்குரிய உரிமை வழங்கப்பட்டிருந்தது. சுதந்திரம் அடைந்தவுடன் பல நூற்றாண்டுகளாக அரச குடும்பத்தினரிடம் இருந்து பலவிதமான கொடுமைகளை அனுபவிக்க வேண்டியிருந்த பொதுமக்கள், தொடர்ந்தும் அரச குடும்பத்தினருக்குப் பரந்து விரிந்த பறவைகள் ஒன்றுகூடும் பிரதேசத்தை விட்டுக்கொடுக்கக் கூடாது என்று நினைத்தனர். அந்தப் பிரதேசத்தைப் பயிர் செய்வதற்காகப் பயன்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர். இதற்கான நடவடிக்கைகளை ஜனநாயக அரசு மேற்கொள்ள ஆரம்பித்தது. ராஜஸ்தானில் ஜெய்ப்பூரில் இருந்து ஆக்ராவிற்குச் செல்லும் தேசிய நெடுஞ்சாலை எண் 2ன் வழியாகப் பயணம் செய்யும்போது பரத்பூர் பிரதேசத்தில் காணப்படும் பரந்து விரிந்த கோதுமை வயல்கள் எல்லாம் ஒரு காலத்தில் பறவைகள் சரணாலயத்தின் பகுதியாக இருந்தவை. பறவைகள் வந்துசேர்கின்ற சதுப்புநிலப் பகுதிகள் அனைத்தையுமே பயிர் செய்யும் நிலமாக மாற்றவே முதலில் திட்டமிடப்பட்டிருந்தது.
பரத்பூரில் வலசை வரும் பறவைகளுக்குக் கூடு கட்டிக் குடியிருப்பதற்கும் ஓர் இடம் ஒதுக்கித் தரப்பட வேண்டும் என்ற கோரிக்கையுடன் சலீம் அலி வேறு சில இயற்கை ஆர்வலர்களுடன் அன்றைய பிரதமமந்திரியாக இருந்த ஜவஹர்லால் நேருவைச் சென்று சந்தித்து உரையாடினார். இயற்கையை நேசிக்கும் குணம் உடையவரான ஜவஹர்லால் நேருதான் 29 சதுர கி.மீ பரப்பளவுள்ள சதுப்புநிலப் பகுதிகளைப் பறவைகளுக்கான சரணாலயமாக அமைக்க முன்னின்று முயற்சி செய்தார். சலீம் அலி மற்றும் அவரின் நண்பர்களின் சக்திவாய்ந்த தலையீட்டால்தான் பரத்பூர் பறவைகள் சரணாலயம் உதயமாயிற்று.
கியோலாடியோ தேசியப் பூங்கா (Keoladeo National Park) என்றும் இந்தச் சரணாலயம் அழைக்கப்படுகிறது. கியோலாடியோ என்றால் சிவன் என்று பொருள். சிவபெருமான் குடியிருக்கும் அடர்ந்த கானகம் என்று இதன் பொருள். 1981ஆம் ஆண்டு பரத்பூர் தேசியப் பூங்காவாக அறிவிக்கப்பட்டது. இப்போது இது உலகப் பாரம்பரியமிக்க இடங்களில் (World Heritage Site) ஒன்றாகும். வருடத்திற்கு ஆறு மாதம் வலசை வரும் பறவைகள் கூட்டம் கூட்டமாக இங்கே வந்து குடியேறி, கூடு கட்டி வாழ்ந்துவிட்டுச் செல்லும். இந்தச் சரணாலயம் பறவை ஆர்வலர்களின் புனித இடமாகக் கருதப்படுவதற்கு இதுவே ஒரு முக்கிய காரணம். மழைக்காலம் முடிந்தால் நீர்க்காகங்களும், வெவ்வேறு வகையான வெண்ணிறக் கொக்குகளும், வண்ணமயமான பறவைகளும் கூடு கட்ட ஆரம்பிக்கும். இவை எல்லாம் நாட்டின் பல பாகங்களில் இருந்து இங்கு வந்து கூடு கட்டி குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்வதற்காக வந்துசேருபவை ஆகும். ஆகஸ்ட் மாதம் முதல் சதுப்புநிலங்களில் அவற்றின் கூடுகள் நிறைந்து காணப்படும். ஏறக்குறைய நவம்பர் மாதத்தில் பறவைகள் அவற்றின் குஞ்சுகளுடன் கூடுகளை விட்டுவிட்டுச் சென்றுவிடும். நவம்பர் முதல் மார்ச் மாதம் வரை வலசை வரும் பறவைகளின் காலம் ஆகும். விதவிதமான வாத்துகளும், சைபீரியன் கொக்குகளும் பூங்கா முழுவதும் நிறைந்து காணப்படும். பறவைகளைப் பற்றி ஆராய்வதற்கும், அவற்றை நேரில் பார்த்து ரசிப்பதற்கும் உலகின் பல பாகங்களில் இருந்தும் இயற்கை ஆர்வலர்கள் பரத்பூர் பறவைகள் சரணாலயத்திற்கு வந்து சேருவார்கள். எப்போது வந்தாலும் நூற்றுக்கணக்கான பறவைகளை இங்கே பார்க்க முடியும் என்பது இந்தச் சரணாலயத்தின் சிறப்பு அம்சமாகும்.
அரிய வகைப் பறவைகளைப் பின்தொடர்ந்து செல்வதற்குத்தான் சாதாரணமாக எல்லா இயற்கை ஆர்வலர்களும் செல்வார்கள். ஆனால், சலீம் அலி எங்கேயும் எப்போதும் காணக்கூடிய காகம் அல்லது புல்புல் அல்லது புறாவின் பின்னால் செல்வார். அவற்றின் நடத்தையைப் பற்றி ஆராய நேரத்தைச் செலவிடுவார். பறவைகளை ஆழமாக அறிந்து கொள்வதுதான் முக்கியம் என்று நம்பினார் அவர். 370 இனப் பறவைகள் பரத்பூர் தேசியப் பூங்காவில் வாழ்வதாக ஒரு புள்ளிவிவரம் கூறுகிறது. இங்கே வருகை புரிபவர்களுக்குச் சைக்கிளும், சைக்கிள் ரிக்ஷாவும் வாடகைக்குக் கிடைக்கும். சைக்கிளில் சுதந்திரமாகச் சுற்றி வந்து சரணாலயத்தைச் சுற்றிப் பார்த்துப் பறவைகளைக் கண்டு ரசித்து வரலாம். வழிகாட்டிகள் தேவை என்றால் அதற்கும் ஏற்பாடு செய்துதரப்படும்.
சலீம் அலியால் அதிகமாக நேசிக்கப்பட்ட இந்தச் சரணாலயத்தின் இன்றைய நிலைமை கவலையளிக்கும் நிலையில் உள்ளதாகப் பறவையியல் நிபுணர்கள் கருதுகிறார்கள். காலநிலை மாற்றத்தால் நீர்ப்பற்றாக்குறை ஏற்பட்டு பல இனப் பறவைகளும் இங்கு வருவது இப்போது குறைந்து போய்விட்டதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன. வயல்களை அழிப்பதும், சுற்றுச்சூழலை மாசுபடுத்துவதுமே இதற்கெல்லாம் காரணம் என்று சொல்லப்படுகிறது. இங்கு இருக்கும் சதுப்புநிலங்களில் நீர் அளவு குறைவதற்கு இவையே காரணம் என்றும் சொல்லப்படுகிறது. சலீம் அலியின் தலையீட்டால் அரச சொத்தாக இருந்த இந்தப் பிரதேசம் பறவைகள் சரணாலயமாக மாற்றப்பட்டது. அத்துடன் விவசாயிகளின் கோரிக்கையின்படி வயல்வெளிகளாக இவை மாறாமல் சலீம் அலியின் குறுக்கீட்டால் இந்தப் பிரதேசம் பறவைகள் சரணாலயமாகவும், பூங்காவாகவும் நிலைநிறுத்தப்பட்டு அழியாமல் காப்பாற்றப்பட்டுள்ளது. பறவையியல் ஆய்வாளர்களின் சொர்க்கலோகமாக இப்போது இந்தத் தேசியப் பூங்கா திகழ்கிறது. சலீம் அலி 1930கள் முதல் தொடங்கி வைத்த பறவைகள் குறித்த ஆய்வுகள் இப்போதும் இங்கே தொடர்கின்றன. சைபீரியன் கொக்குகள் ஒவ்வொரு வருடமும் இந்தியாவிற்கு வரும்போது தங்களுக்காக ஓர் இடத்தை இந்தியாவில் ஒதுக்கித் தந்த சலீம் அலியை நன்றியுடன் நினைக்காமல் அவை திரும்பிப் போகாது. ஆயிரக்கணக்கான வலசை வரும் பறவைகளின் அடைக்கல பூமியாக இன்று பரத்பூர் சரணாலயம் விளங்கிவருகிறது. சலீம் அலியின் உயிர்த்துடிப்புள்ள சாகாவரம் பெற்ற நினைவாலயம் என்று இந்தப் பூங்காவை வர்ணிக்கலாம்.
பரத்பூர் என்று மட்டும் இல்லை; எங்கே இயற்கைக்கு எதிராக அநீதி ஏற்படுகிறதோ அங்கேயெல்லாம் சலீம் அலி ஓடோடி வந்தார். அமைதிப் பள்ளத்தாக்கு விஷயத்திலும் கேரளாவில் இதுதான் நிகழ்ந்தது. 1976ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் கோடியக்கரையில் அரசாங்கம் கடல்சார் வேதிப்பொருள்களின் வளாகம் (Marine Chemicals Complex) ஒன்றை நிறுவ முயற்சி செய்தது. அப்போது கடும் எதிர்ப்புடன் சலீம் அலி அங்கே வந்தார். திட்டம் நிறைவேற்றப்பட்டால் பல்லாயிரக்கணக்கான வலசை வரும் பறவைகளின் அடைக்கலமாக இருக்கும் இடம் அழிக்கப்பட்டுவிடும் என்று கடும் எதிர்ப்புக் குரல் கொடுத்தார் சலீம் அலி. பம்பாய் இயற்கை வரலாற்றுச் சங்கத்தின் பரிந்துரையின் பேரில் கேரளாவின் பறவை மனிதன் என்று போற்றப்படும் K. K. நீலகண்டன் (இந்துசூடன்) அவர்கள் நடத்திய ஆய்வின் பலனாகப் பறவைகளின் சரணாலயப்பகுதி அழிக்கப்படாமல் பாதுகாக்கப்பட்டது. இது நடந்ததும் சலீம் அலி அங்கு சென்று பறவைகளைப் பற்றி ஆராய்ந்ததும் அவருடைய 85வது வயதில் ஆகும்.
ஒரு சமயம் சலீம் அலி தன் நண்பர் ஒருவரிடம் கேட்டார்: “என்னுடைய இளமையின் ரகசியம் என்ன என்று உங்களுக்குத் தெரியுமா?”. நண்பர் தனக்குத் தெரியவில்லை என்பதை ஜாடையாகச் சொன்னார். “தெரியவில்லை என்றால் கேட்டுக் கொள்ளுங்கள்... நான் ஒருபோதும் என்னுடைய வேலையில் இருந்து ஓய்வு பெறவே இல்லை. என்னுடைய பல நண்பர்களும் அவரவர்கள் பார்த்துக் கொண்டிருந்த வேலைகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டார்கள்; அத்துடன் அவர்கள் எல்லோரும் மரணமடைந்தும் போய்விட்டார்கள்”. சலீம் அலி கூறியது நூற்றுக்கு நூறு சரியானதே. சலீம் அலி தன் இறுதி மூச்சு வரை செயல்வீரராகவே திகழ்ந்தார். லடாக்கில் உறைய வைக்கும் பனியிலும், ராஜஸ்தானில் கொளுத்தும் வெயிலிலும், அந்தமான் நிக்கோபார் தீவுக்கூட்டங்களில் யாராலும் செல்லவே முடியாத அடர்ந்த உள்வனங்களிலும், வங்காளத்தில் சுந்தரவனக் கண்டல் காடுகளிலும், இமயமலையின் உச்சிகளிலும், மேற்குத் தொடர்ச்சி மலைகளிலும் சலீம் அலியின் கால் படாத இடம் என்று ஒன்றும் இந்தியாவில் இல்லை. சலீம் அலி என்ற அந்த மகானின் பாதங்கள் பட்ட இடங்கள் எல்லாம் புண்ணிய பூமியாக மாறிப் புனிதம் பெற்றன. அவையெல்லாம் இன்று பாதுகாக்கப்பட்ட பிரதேசங்களாக உள்ளன.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- புழல் தி.பாலகுமார்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
பெரியமனுஷன்: இந்தச் செய்தியைப் பாருங்கள். அந்த நாட்டில் ஒரு கடையில் பெரிய உடும்பு ஒன்று புகுந்து விட்டதாமே... ஏதும் ஆபத்து இல்லையே?
மலர்விழி: பெரிய பிரச்சினை ஆகவில்லை. இது போலக் கிராமத்தில், வயலில், பண்ணையில் சிறுத்தைகள் புகுந்து விட்டதாகச் செய்திகள் படித்ததில்லையா?
பெரியமனுஷன்: படித்திருக்கிறேன். அவை நாய், ஆடு, மாடுகளையும் ஏன் மனிதர்களையும் தாக்கி இழுத்துச் சென்றதாகவும் பார்த்தேன், படித்தேன்.
மலர்விழி: அடிக்கடி இப்படிப் பல இடங்களில் நடக்கிறதே...
பெரியமனுஷன்: காட்டில் உணவு, நீர் பற்றாக்குறையால் ஊருக்குள் வருமா?
மலர்விழி: புலியும் கூட அப்படி ஊருக்குள் புகுந்து மனிதரைத் தாக்குவதாக ஒரு காணொளி பார்த்தேன்; அதிர்ந்தேன்.
பெரியமனுஷன்: அவை பெரும்பாலும் இரவு நேரத்தில் எல்லாரும் தூங்கும்போது வருவதால் தடுக்க முடியவில்லை.
மலர்விழி: புலி, சிறுத்தைகள் ஏன் மனிதனைத் தின்கின்றன?
வீரப்பிரதாபன்: இல்லை, மனிதரைத் தின்பதற்காக அப்படிச் செய்யவில்லை. சிறுத்தை பற்றி நீங்கள் அறிந்தது என்ன?
விக்கிரமன்: சிறுத்தையும் புலியும் பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. அவற்றின் உடல் வேட்டைக்கு வசதியாக உருவானது; தனியாக உலாவக் கூடியவை; இரவில் வேட்டையாடும்; வேட்டையாடிய விலங்கை மரங்களுக்கு மேலே கொண்டு சென்று வைத்திருந்து உண்ணும்.
பெரியமனுஷன்: விலங்குகளைத்தானே உண்ண வேண்டும்? மனிதரை ஏன் தாக்க வேண்டும், கொல்ல வேண்டும்?
மலர்விழி: சிறுத்தைகள் பார்ப்பதற்குப் புலிகள் போலவே இருக்கின்றனவே?
வீரப்பிரதாபன்: சிறுத்தைகள் வழுவழுப்பான தங்க நிற மயிர்ப் போர்வையும் அதன் மீது கறுப்புத் திட்டுகளும் கொண்டவை. ஒல்லியான உடல்வாகும் திறனும் கொண்டவை. ஒரு மணி நேரத்திற்கு 57 கிலோமீட்டர் வேகத்தில் ஓடும். நீந்தும் திறன் உண்டு. மலைகள், மரங்களில் அநாயாசமாக ஏறக்கூடிய திறன் படைத்தவை. நீண்ட தூரத்திற்குத் தாவும் இயல்புடையவை. சிறுத்தையின் உடல் நீளத்திற்கு ஏற்றவாறு அதன் வாலின் நீளமும் அமைந்திருக்கும். வேகமாக ஓடும்போது சட்டென்று திரும்புவதற்கு ஏற்ற சமநிலையை வால் தருகிறது. வளர்ந்த சிறுத்தைகள் தனியாக வாழக்கூடியவை. ஒவ்வொரு சிறுத்தையும் காட்டின் ஒரு பகுதியைக் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும். இன்னொரு சிறுத்தை அந்த இடத்திற்குள் வருவதை விரும்பாது. இது நாயின் குணம்; பூனையின் இனம்.
மலர்விழி: ஆனால் பூனை போல் 'மியாவ்' என்று கத்தாது.
வீரப்பிரதாபன்: இரவில்தான் பெரும்பாலும் இரை தேடும். வேட்டையாடிய விலங்கைச் சிறுத்தை உயரமான மரத்தில் இழுத்துக் கொண்டு ஏறும். மற்ற விலங்குகள் அதனோடு போட்டியிடாமல் இருக்க இந்த ஏற்பாடு. இரண்டு மூன்று நாள் வைத்திருந்து உண்ணும். தீர்ந்த பிறகு மரத்திலிருந்து இறங்கும். சிறுத்தையின் ரோமமும் எலும்புகளும் மருத்துவக் குணம் கொண்டவை அல்ல. அதற்கு அறிவியல் ஆதாரம் இல்லை. அந்த மூடநம்பிக்கையால் அவற்றின் ரோமம் மற்றும் உடல் பாகங்களுக்காக ஆண்டுதோறும் நிறைய சிறுத்தைகள் உலகெங்கும் கொல்லப்படுகின்றன. அருகி வரும் விலங்குகளில் சிறுத்தையும் ஒன்று.
பெரியமனுஷன்: அவை கூட்டமாக வாழாதா? கூட்டமாக இருந்தால் ஆபத்திலிருந்து தப்பிக்கலாம் அல்லவா?
விக்கிரமன்: 'பெரிய பூனைகள்' என்று சொல்லப்படும் சிங்கம், புலி ஆகியவற்றுக்கு அடுத்து நம் நாட்டில் தென்படும் முக்கியமான ஓர் உயிரினம் சிறுத்தை. ஆசிய, ஆப்பிரிக்கக் கண்டங்களில் இது தென்படுகிறது. இந்தியாவில் கபினி, முதுமலை போன்ற பகுதிகளில் இவை உலா வருகின்றன... அல்ல... அல்ல... உலா வந்தன. மரங்கள் அடர்ந்த காடுகளில்தான் சிறுத்தை அதிகமாக இருக்கும். புலியைப் போன்றே சிறுத்தையும் தனிமை விரும்பி. ஒரு மணி நேரத்திற்கு நாற்பது கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய சிறுத்தை, ஒரு குதி குதித்தால் பத்தடி உயரம் வரை பாயும்.
பெரியமனுஷன்: சிறுத்தைக்கும் புலிக்கும் வேறு வித்தியாசம்...?
வீரப்பிரதாபன்: சிங்கம், புலி போன்றவை வேட்டையாடிய இரையை நிலத்தில் சாப்பிடும். சிறுத்தை நிலத்தில் கிடத்திச் சாப்பிடாது; மரத்தின் மேலே இழுத்துச் சென்று சாப்பிடும். தன்னை விடப் பலசாலி விலங்கு ஏதும் வந்து இரையைப் பிடுங்கிச் செல்லும் என்ற பயம். இந்தியச் சிறுத்தைகளுக்கு மான்கள் அதிகமாக உள்ள இடத்தில் இரை கிடைக்கும். ஆப்பிரிக்கச் சிறுத்தைக்கு மான் தவிர எழுபது வகை உயிரினங்கள் உணவுத் தேவையை நிறைவு செய்கின்றன. சிறுத்தைக் குட்டிகளுக்கு முயல், பன்றிக் குட்டி போன்ற சிறிய அளவிலான இரைகளைத் தாய் சிறுத்தை வேட்டையாடி கவ்விச் சென்று தரும். காடுகள் அழிந்து வருவதாலும், தோலுக்காகக் கள்ள வேட்டைக்கு உள்ளாவதாலும் சிறுத்தைகளின் எண்ணிக்கை குறைந்து விட்டது.
மலர்விழி: கருஞ்சிறுத்தை என்பார்களே, அதுவும் சிறுத்தைதானா?
வீரப்பிரதாபன்: கருஞ்சிறுத்தைகள் அரிதினும் அரிதானவை. பொதுவாக மஞ்சள் கலந்த பொன்னிற மயிர்ப்போர்வையில் கருவளையங்கள் கொண்டவை சிறுத்தைகள். கருஞ்சிறுத்தைகளின் உடல் முழுதும் கறுப்பு மயிர்ப்போர்வையால் போர்த்தப்பட்டிருப்பது போல் இருக்கும். அதில் ஆங்காங்கே கருவளையங்கள் தென்படும். மயிர்ப்போர்வையில் மஞ்சளுக்குப் பதிலாகக் கறுப்பு நிறமிகள் அதிகரிப்பதால் வழக்கமான நிறத்திலிருந்து மாறி கருஞ்சிறுத்தைகளாக ஆகிவிடுகின்றன. அடர்ந்த மழைக்காடுகளில் சூரிய ஒளி குறைந்த உட்பகுதிகளில் வசிக்கும். இயற்கைச் சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக் கொள்ளக் கறுப்பு மயிர்ப்போர்வை அமைந்துள்ளது. தங்கம் போன்று தகிக்கும் கண்கள். புள்ளிமான், முயல், சில குரங்குகள் இதன் உணவு. ஆனால் காட்டில் கருஞ்சிறுத்தையைப் பார்ப்பதற்கு அதிர்ஷ்டம் தேவை.
பெரியமனுஷன்: சிங்கத்தை விடச் சிறுத்தை பலசாலியா?
விக்கிரமன்: சிறுத்தை இருக்கும் பகுதிகளுக்குள் சிங்கங்கள் அதிரடியாக நுழைந்து ஆளுமை செய்து, அவை வேட்டையாடிய இரையைப் பறித்துக் கொள்கின்றன. அவற்றின் குட்டிகளையும் தாக்குவதுண்டு. சிறுத்தைகள் தங்கள் வேட்டையில் பாதியைச் சிங்கங்களிடம் இழக்கின்றன. இதைத் தவிர்க்கச் சிறுத்தைகள் பகல் பொழுதில் வித்தியாசமான நேரத்தில் வேட்டையாடும். தங்கள் குட்டிகளை அடர்ந்த மரங்கள் செறிந்த புதர்களில் மறைத்து வைக்கும். சிறுத்தைகள் (Leopards) மரமேறுவதில் மிகவும் வல்லமை படைத்தவை; வேட்டையாடிய இரையை மரத்தின் மீது இழுத்துச் செல்லும். மாறாக, சீட்டா (Cheetah) எனப்படும் வேட்டைச் சிறுத்தைகளுக்கே மரமேறும் திறன் மிகக் குறைவு.
குரங்குகள் உணவை உண்ணும்போதும் நீர் குடிக்கும்போதும் இரையாகும். மரத்திலேயே தங்கியிருந்தால் தப்பிவிடும். பயத்தில் மரத்தில் இருந்து குதித்துத் தப்ப முயலும்போது சிறுத்தையிடம் பிடிபடும். ஊருக்குள் புகுந்து நாய்களை இழுத்துச் செல்லும். புலியைப் போன்று சிறுத்தைகளும் பலம் மிக்கவை. ஒரு மானை வாயில் கவ்விக்கொண்டு மரக்கிளை மீது தாவும். பிற விலங்குகள் சென்ற பாதையைத் தொடர்ந்து சென்று இரைக்காக மறைந்து காத்துக் கொண்டிருக்கும். பெரும்பாலும் தரையில் இருந்து வேட்டையாடும். அவசியம் ஏற்பட்டால் தாழ்ந்த மரக்கிளையில் இருந்து தாவித் தாக்கும்.
பெரியமனுஷன்: மனிதரை ஏன் தாக்குகிறது என்று கேட்டேன்.
விக்கிரமன்: பொதுவாக மனிதரைத் தாக்குவதில்லை. ஆனால் ஒருமுறை மனிதனைத் தாக்கிக் கொல்லப் பழகிவிட்டால், பிறகு மனிதனைத் தேடி அலையும். அதனால் மனிதனைச் சாப்பிடும் விலங்கு என்று அழைக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் புலியை விடக் கொடிய ஆபத்தான விலங்கு சிறுத்தை. இரவில் ஊருக்குள் நுழைந்து குடிசைகளில் புகுந்து மனிதரைத் தாக்குவதும் உண்டு. வயல்களில், பரண்களில் தங்கியிருக்கும் மனிதரைத் தாக்க முயன்றதாகத் தகவல் உண்டு. தாக்கும்போது சத்தமாக உறுமியது என்றனர்.
மலர்விழி: வேகத்திற்குப் புகழ்பெற்றதை எப்படி வேட்டையாடினார்கள்?
விக்கிரமன்: மிக விரைவாக ஓடுவதற்கென்றே உடலமைப்புடன் கூடிய ஒரே விலங்கினம் வேட்டைச் சிறுத்தை (Cheetah). இருசக்கர வாகனம் போன்ற உடல். ஆனால் நீண்ட தூரம் ஓடுவதற்கான உடல் வலிமை இல்லை. சரியா?
வீரப்பிரதாபன்: மணிக்கு 72 கிலோமீட்டர் வேகத்தில் ஓடத் தொடங்கி, இரண்டு நொடிக்குள் 112 கி.மீ வேகத்தை எட்டி ஓடும். இதே வேகத்தில் தொடர்ந்து நீண்ட தூரம் இதனால் ஓட முடியாது. பழுப்பு மஞ்சள் நிற உடலின் ஆங்காங்கே கறுப்புப் புள்ளிகள் இருக்கும். உடல் நீளத்தில் பாதி வால். வேகமாக ஓடும்போது உடலைச் சமநிலையில் வைக்கும். நீண்ட கால்கள், மழுங்கிய நகங்கள். நகங்களை உள்ளே இழுத்துக் கொள்ள முடியாது; நன்கு பற்றிப் பிடித்துக் கொள்ளும். தோலுக்காகப் பெருமளவு வேட்டையாடப்பட்டன.
பெரியமனுஷன்: தீப்பெட்டியில் 'சீட்டா' என்று உள்ளதே, அதுதானே சிறுத்தை? 'வேங்கை' என்கிறார்களே, அது வேறு விலங்கா?
வீரப்பிரதாபன்: ஊனுண்ணி வரிசையில் ஃபெலிடே (Felidae) குடும்பத்தில் ஃபெலிஸ் பெங்காலென்சிஸ் (Felis bengalensis) எனும் சிறுத்தைப் பூனை, பார்ப்பதற்குச் சிறுத்தை போன்று தோற்றம் தருவதால் சிறுத்தைப் பூனை எனப்படுகிறது. இதுவும் தோலுக்காகப் பெருமளவு வேட்டையாடப்பட்டது. இந்தியாவின் வடக்குப் பகுதிகளில் வேட்டைச் சிறுத்தை எனும் சீட்டா (Cheetah) உடலின் அளவிலும் வாலின் நீளத்திலும் சிறுத்தையைப் போலவே இருக்கும். ஆனால் உடல்கட்டு சற்று குறைவு. தலையில் வட்ட வடிவக் காதுகள் சிறியதாக, குட்டையாக உள்ளன. கால்கள் நீளமாக, மெலிந்து, சிறிய உள்ளங்கால்களுடன் விரைந்து ஓடுவதற்கு ஏற்ப அமைந்துள்ளன. பனிக்காலத்தில் நீளமான ரோமங்கள் வளர்ந்து தலைப்பகுதியிலிருந்து பிடரியாகத் தோள்களின் உச்சி வரை பரந்து காணப்படும். உடலின் மேல் பக்கம் பழுப்பு மஞ்சள் நிறம் முதல் வெளுத்த சாம்பல் நிறம் வரை மாறுபட்டு இருந்தாலும், வாலின் நுனியின் மேல் பக்கம் வெள்ளையாக இருக்கும். கண்களுக்கு அருகில், நாசிக்குக் கீழும் சிறிது வெள்ளை நிறம் இருக்கும். உதடு முதல் வாலின் நுனி வரை உடலின் கீழ்ப்பகுதி முழுதும் வெள்ளை நிறத்தில் இருக்கும். வேட்டைச் சிறுத்தையின் முகத்தில் கண்ணிலிருந்து வாய் வரை எடுப்பான கறுப்புக் கோடு அமைந்திருப்பது அழகு; ஆபத்தான அழகு.
மலர்விழி: சிறுத்தை, வேங்கை, சிறுத்தைப்புலி... குழப்பமாக இருக்கிறதே. எல்லாம் ஒன்றுதானே? அல்லது வேறு வேறா?
விக்கிரமன்: பாந்தர் (Panther) என்பது பொதுவான சிறுத்தை இனத்தின் பெயர். அதில் 'லெப்பர்ட்' (Leopard) என்பது சிறுத்தை. 'சீட்டா' (Cheetah) என்பது வேட்டைச் சிறுத்தை. 'ஜாகுவார்' (Jaguar) அமெரிக்கச் சிறுத்தை. 'ஆசிலும்' (Ocelot) என்பது சிறுத்தைப் பூனை. வகைக்கொரு பெயர்.
வீரப்பிரதாபன்: வேட்டையாடும் வேங்கைப்புலி/சிறுத்தை ஒரு காலத்தில் இந்தியாவின் வடக்குப் பகுதியில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இப்போது இந்தியாவிலிருந்து அவை முற்றிலும் மறைந்து விட்டன. சிறுத்தைகளிடமிருந்து சற்று மாறுபட்ட தோற்றம்; மெலிந்த உடல்; பிடரி மயிர் இன்றி காணப்பட்டது. பிடரியற்ற வேட்டையாடும் சிறுத்தை எனப்பட்டது. மேல் தோற்றம், செயல்கள் நாயைப் போல் இருந்தாலும் பூனைக் குடும்பம். தொலைவில் இருந்தே வேகமாக இரையை விரட்டிப் பிடிக்கும். இரையை அதிக தூரம் விரட்டிப் பிடிக்க முடியும். புதர்களில் மறைந்திருந்தாலும் தலை வெளியே தெரியாதபடி இரையைப் பின்தொடர்ந்து செல்லும். இந்திய வனவிலங்குகளின் பட்டியலில் இருந்து முற்றிலும் மறைந்து விட்டது. இரவிலும் பகலிலும் உலவியதால், அடிக்கடி திறந்த வெளிப்பகுதியில் காணப்பட்டதால், பாதுகாப்பின்றி இருந்ததால் மக்களால் எளிதில் காணப்பட்டு வேட்டையாடப்பட்டது. சீட்டாக்களால் (Cheetahs) மரங்களின் தாழ்வான கிளைகளில் ஏற முடியுமே தவிர, சாதாரண சிறுத்தைகளைப் போல மரங்களின் உச்சிக்கு ஏறவோ, இரையை மரத்திற்கு மேல் இழுத்துச் செல்லவோ முடியாது; ஏனெனில் அவற்றின் நகங்கள் உள்ளே இழுக்க முடியாதவை.
பெரியமனுஷன்: பாவம்! அவற்றை எப்படிப் பிடித்து வேட்டையாடப் பழக்கினார்கள்? பாழாக்கினார்கள்?
விக்கிரமன்: நல்ல சொல் விளையாட்டு! நன்கு வளர்ந்தவை, முதிர்ந்தவை பிடிக்கப்பட்டு மான் வேட்டையாடப் பழக்கப்படுத்தப்பட்டன. மரங்களில் தம் நகங்களைத் தேய்த்துக் கூராக்கிக் கொள்ளும். மரங்களின் அருகில் வலை அமைத்துப் பிடித்து, பழக்கப்படுத்தி, கழுத்தில் கயிறு கட்டி, முகமூடி இட்டு, மாட்டு வண்டியில் ஏற்றிச் சென்று, மான்கள் இருக்கும் இடம் சென்று வேட்டையாடச் செய்து, மீண்டும் முகமூடி இட்டு அழைத்து வந்ததாகப் பழைய வேட்டைக்காரர் தெரிவித்தார். ஆடு, முயல், பறவைகளையும் வேட்டையாடக் கூடியவை. வேங்கை மனிதனிடம் அச்சம் கொண்டது. பூனை போன்று, பறவை போன்று ஒலி எழுப்பும். மிமிக்ரி கலைஞர்கள் அந்த வேங்கைகள்!
பெரியமனுஷன்: சிறுத்தையில் வேறு வகை எதுவும் உள்ளதா?
வீரப்பிரதாபன்: ஊனுண்ணி வரிசையில் மிகவும் துடிப்புள்ள, மூர்க்கமான விலங்கினம் சிறுத்தை. தோற்றத்தில் சிங்கம், புலியை விடச் சற்று சிறியது; பெரிய வால். உடலின் மேல் நான்கைந்து கரும்புள்ளிகள் ஒழுங்கற்ற வளையங்களாக இடைவெளி விட்டிருக்கும். இந்தியச் சிறுத்தைகளின் தோல் மென்மையாக, வழவழப்பாக இருக்கும். குகைகளில், மலைப் பிளவுகளில் வசிக்கும். 'பெரிய புள்ளிச் சிறுத்தை' என்ற இனம் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள காடுகளில் இருந்தது. சாதாரண சிறுத்தையை விட உருவத்தில் சிறியது. தலையில் புள்ளிகள், முகத்தில் பட்டைகள் இருந்தன. பார்க்க அழகாக இருக்கும்.
மலர்விழி: மலையில் கூடச் சிறுத்தைகள் வாழ்ந்தனவா?
வீரப்பிரதாபன்: மத்திய ஆசியாவில் உயர்ந்த மலைத்தொடர்களில் பனிச்சிறுத்தை காணப்பட்டது. இதுவும் உருவத்தில் சிறுத்தையை விடச் சற்று சிறியது. நீளமான முடிகள் அடர்ந்து காணப்படும். உடலில் கம்பளி முடிகளுக்கு மேல் நீண்ட முடி போர்த்தி இருக்கும். உடல் எங்கும் இடைவெளி விட்டு கறுப்பு நிற வளையங்கள் துண்டு துண்டாக இருக்கும். இமயமலைத் தொடரில் உயரமான பகுதியில் வசித்திருந்தது. குளிர்காலத்தில் மலையிலிருந்து சமவெளிக்கு இறங்கி வந்து கால்நடைகளைப் பிடித்துத் தின்னும். பனிச்சிறுத்தை அழகாக இருந்தது. சிறுத்தை வசீகரமானது. இயற்கைச் சூழலில் சிறுத்தையைப் பார்க்க அனைவரும் விரும்புவர். அவை உண்மையில் கூச்ச சுபாவம் உள்ளவை; மனிதரை விட்டு விலகியே இருப்பவை.
பெரியமனுஷன்: அழகாக இருந்தால், விலகியிருந்தாலும் ஆபத்துதானா?
விக்கிரமன்: மனிதர் உள்ள பகுதிகளில் உலவுவதை அவை பெரும்பாலும் தவிர்க்கின்றன. அவை ஊறு விளைவிப்பவை என்று மனிதரே கருதிக் கொண்டு பொறி வைத்துப் பிடித்து வேறு இடங்களில் விடுவிப்பதால் பிரச்சினை தீராது. ஓரிடத்திலிருந்து சிறுத்தையைப் பிடித்தால், அது உலவி வந்த இடத்தை வேறொரு சிறுத்தை ஆக்கிரமித்துக் கொள்ளும்.
மலர்விழி: சிறுத்தைக் குட்டிகளுக்குப் பாதுகாப்பு எப்படி?
விக்கிரமன்: ஒரு தாய் சிறுத்தை தன் குட்டிகளுக்குக் குறைந்தது இரண்டு ஆண்டுகள் கூடவே இருந்து இரையை வேட்டையாடவும் மனிதரிடமிருந்து விலகிச் செல்லவும் கற்றுக் கொடுக்கும். தாய் சிறுத்தையைப் பிடித்து விட்டால், அதன் குட்டிகள் சுதந்திரமாகச் சுற்றித் திரிந்து மனிதருக்குத் தொல்லை தரலாம். சிறுத்தை நடமாட்டம் ஓரிடத்தில் இருந்தால் அதை அப்படியே விட்டுவிடுவது நல்லது. மனிதர் அவற்றைத் தொல்லை செய்தால் தவிர, அவை தாமாக மனிதரைத் தாக்க வருவதில்லை.
பெரியமனுஷன்: அவற்றைப் பாதுகாக்க ஏதும் நடவடிக்கைகள், ஆய்வுகள், அறிவியல்பூர்வமான முயற்சிகள் ஏதும் உள்ளனவா?
வீரப்பிரதாபன்: இந்தியாவில் கடைசி சீட்டா (Cheetah) 1947-48 வாக்கில் வேட்டையாடப்பட்டது. இந்திய அரசு 1952-இல் சீட்டா இந்தியாவில் முற்றிலும் அழிந்துவிட்டதாக (Extinct) அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. சீட்டா எனும் வேட்டைச் சிறுத்தையை மீண்டும் நாட்டில் அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வு ஒன்றுக்கு இந்திய அரசு அனுமதி அளித்தது. ராஜஸ்தான், குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் சத்தீஸ்கர் மாநிலங்களில் ஏழு இடங்களை வனப் பாதுகாப்புக் குழுக்கள் தேர்ந்தெடுத்தன. அந்த இடங்களில் தேசியப் பூங்காக்கள், புகலிடங்கள் மற்றும் திறந்தவெளிகளும் அடங்கும்.
விக்கிரமன்: சீனாவில் அப்படிப்பட்டதொரு ஆய்வில் (Survey) 'ஜின்ஜியாங் சூழல் மற்றும் புவியியல் நிறுவன' ஆய்வாளர்கள் வடமேற்கு சீனாவின் மலைப் பகுதியில் அரிய வகை பனிச்சிறுத்தை ஒன்றை படமெடுத்தனர். 'தோமுர்' மலைப் பள்ளத்தாக்கில் மூன்று மாதங்களில் ஐந்து வெவ்வேறு சிறுத்தைகளின் 32 படங்கள் எடுக்கப்பட்டன. ஆய்வுகள் தொடர்கின்றன.
வீரப்பிரதாபன்: இந்தியா, நேபாளம், சீனா மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளின் மலை மற்றும் பீடபூமிகளில் காணப்பட்ட பனிச்சிறுத்தைகள், சந்தையில் 1200 டாலர்கள் வரை விலையாகும் பளபளப்பான, உறுதியான தோலுக்காக வேட்டையாடப்பட்டன. தற்போது அவற்றின் எண்ணிக்கை ஏழாயிரம் வரை இருக்கலாம் என்று கூறப்படுகிறது. உண்மையா என்று தெரியவில்லை.
மலர்விழி: 'அமெரிக்க ஜாகுவார்' என்று ஒரு வகை பற்றிக் கூறினாயே...
விக்கிரமன்: அமெரிக்க ஜாகுவார் பாந்தரா (Panthera) இன விலங்கு. முதலில் அதை அமெரிக்கப் புலி வகை என்று கருதினர். பூனை இனத்தில் சிங்கம், புலிக்கு அடுத்து மூன்றாவது பெரிய விலங்கு. உடல் முழுதும் புள்ளிகள் கொண்டு பார்ப்பதற்குச் சிறுத்தை போல் இருக்கும். உருவத்தில் பெரியது; முரட்டுத்தனமானது; புலியின் இயல்புகள் கொண்டது. புலியையும் சிறுத்தையும் ஒன்றாகப் பார்ப்பது போன்ற உணர்வு இருக்கும். தமிழில் அதுவும் சிறுத்தைப்புலிதான்.
வீரப்பிரதாபன்: பெரும்பாலும் தனித்தே வசிக்கும். நீச்சலை விரும்பும். புலி, சிறுத்தையை விடச் சிறுத்தைப்புலி சிறப்பாகவும் வேகமாகவும் வேட்டையாடும். கோரைப் பற்கள் எஃகு போன்று வலிமையும் கூர்மையும் கொண்டவை. எந்த விலங்கானாலும் அதன் மேல் வேகமாகப் பாய்ந்து, காதுகளுக்கு இடையே உள்ள மண்டையோட்டைக் கடித்து மூளையைத் திறந்துவிடும். கூரிய பற்களால் துளையிட்டு குருதியை உறிஞ்சும்.
பெரியமனுஷன்: ஜாகுவாரின் உணவு என்ன? மான்தானா?
விக்கிரமன்: இதன் மிக விருப்பமான இரை முதலை. அது நீருக்குள் இருந்தாலும் நிலத்தில் இருந்தாலும் அதன் மீது பாய்ந்து கழுத்தைக் கவ்வி, தலையைத் துண்டித்துவிடும். அதன் முரட்டுத் தோலைத் தன் நகங்களால் கீறிச் சதையை உண்டுவிடும். இந்தச் சிறுத்தைப்புலி ஜாகுவாரின் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிட்டது. அந்த இனமே அழிந்து கொண்டு வருகிறது. அமெரிக்காவில் காடுகளில் பல நாள் திரிந்து தேடிப் பார்த்தால் தென்படலாம்.
மலர்விழி: அழகு, வேட்டை, வேகம்... ஏன் இவற்றையெல்லாம் சரணாலயம், புகலிடம் என்று அமைத்துப் பாதுகாக்கவில்லை?
வீரப்பிரதாபன்: இலங்கையின் மரகதத் தீவின் யலா தேசியப் பூங்கா உலகப் புகழ்பெற்ற சிறுத்தை வாழ்விடங்களில் ஒன்றாகும். ஆசியச் சிறுத்தை வட ஆப்பிரிக்காவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகள் வழியாக ஈராக், இந்தியா வரை பரந்த நிலப்பகுதியில் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பரவி உலவி வந்தது. தாவரங்கள் அடர்ந்த திறந்த பரந்த நிலம் அதன் வேட்டை முறைக்கு உகந்ததாக இருந்தது. அவை தம் இரையைச் சுற்றி வளைத்து, அருகில் சென்றதும் மின்னல் வேகத்தில் இரை மீது பாய்ந்துவிடும். மெலிந்த நீளமான தேகமும் நீளமான வாலும் அதன் வேகத்திற்குத் துணைபுரிந்தன. மூன்று எட்டில் எண்பது கிலோமீட்டர் வேகத்தை எட்டும். சில நொடிகளில் அது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தை எட்டிவிடும். அவற்றின் கம்பீரமான, சிறப்பான, பெருமையான அழகுத் தோற்றமும் தேர்ந்த வேட்டைத் திறன்களும் அவற்றின் அழிவுக்குக் காரணமாகிவிட்டன. கடந்த அறுநூறு வருடங்களாக அவை முகலாய அரசர்களால் கண்ணிவலை விரித்துப் பிடிக்கப்பட்டு வளர்ப்பு மிருகமாக மாற்றப்பட்டன; பல கொல்லப்பட்டன. கட்டுப்பாடின்றித் தொடர்ந்த வேட்டை, யாரும் உணர்வதற்கு முன் நாட்டில் ஒரே ஒரு சிறுத்தை கூட இல்லாத நிலையை ஏற்படுத்திவிட்டது. சிறுத்தை மட்டுமல்ல, எந்த ஒரு உயிரினத்திற்கும் இதுபோன்ற நிலை வரக்கூடாது.
பெரியமனுஷன்: அந்த ஜாகுவார் சிறுத்தைப்புலி பற்றி இன்னும் சற்று விளக்கமாகச் சூழியல் நோக்கில் கூறலாமே.
வீரப்பிரதாபன்: ஜாகுவார் புதிய உலகத்தின் ஒரே பெரிய பூனை இனம். சிறுத்தை போலத் தோற்றம் தரும். உடலில் வளைவுப் புள்ளிகள் நடுவில் கறுப்பு நிறத்துடன் காணப்படும். சற்று பருத்த பலமுள்ள பெரிய தலையுடன் இருக்கும். தென் அமெரிக்காவின் மத்திய மற்றும் வடக்குப் பகுதிகளின் சதுப்பு நிலம், வெள்ளப்பெருக்கு ஏற்படும் காடுகள் போன்ற ஈரமான இருப்பிடங்களில் காணப்படும். பூனை இனத்திலேயே வலுவான தாடை கொண்டவை ஜாகுவார்கள். கடினமான ஆமை ஓடுகளைக் கூட எளிதாக உடைத்துத் திறக்கும் அளவுக்கு உறுதியான பலமான தாடைகள். ஃபெலிடே குடும்பத்தின் பெரிய உறுப்பினர்களில் ஒன்றான அச்சிறுத்தை சிறந்த தொழில்முறை வேட்டைக்காரர். நிலத்திலும் மரங்களிலும் இருக்கும் சிறிய மற்றும் பெரிய முதுகெலும்பிகளைத் திறமையாக வேட்டையாடும். பெரும்பாலான ஜாகுவார்கள் பழுப்பு மஞ்சள் நிறத் தோலில் கருவளையப் புள்ளிகள் பெற்றுள்ளன. உடலின் கீழ்ப்பகுதி மங்கலான வெள்ளை நிறத்தில் கறுப்புப் புள்ளிகளுடன் இருக்கும். சில ஜாகுவார்கள் அடர்கறுப்பாகவும் உள்ளன. ஜாகுவார்கள் சிறப்பாக நீந்தும். எளிதாக வேகமாகக் மரமேறும். தனியாக மரத்திலிருந்து தபிர்கள், மான்கள், காட்டுக் கழுதை, பெக்காரிகள் மீது தாவி இரையாக்கும். மீன், முதலை, முயல், ஆடு, மாடு, பன்றி போன்ற வளர்ப்புச் கால்நடைகளைக் கூட உணவாக்கிக் கொள்ளும். பெரும்பாலும் தனித்தே வாழும். பெண் ஜாகுவார் நூறு நாட்களுக்குப் பின் இரண்டிலிருந்து நான்கு வரை குட்டி போடும். தாய் விலங்கு மிக ஆக்ரோஷமாக இருக்கும்; தந்தையைக் கூட அண்டவிடாது. குட்டிகள் இரண்டு வயது வரை தாயுடன் இருந்து வேட்டைத் திறன்களைக் கற்கும். வேட்டை விளையாட்டு, வன அழிப்பு, வாழிட இழப்பு ஆகிய காரணங்களால் இந்த இனம் அழிந்து வருகிறது (அல்லது அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளது).
மலர்விழி: அவை அழியாமல் தடுக்க முடியவில்லையா?
விக்கிரமன்: ஜாகுவார் மட்டுமல்ல, எந்த உயிரினமும் உலகில் அழியாமல் பாதுகாக்க முதலில் நம் பூமியைப் பத்திரமாகப் பாதுகாப்பாகக் கையாள வேண்டும். "அது உங்கள் பெற்றோர்களால் உங்களுக்குப் பரிசாக வழங்கப்பட்டதல்ல; உங்கள் பிள்ளைகளால் உங்களுக்கு இரவலாகத் தரப்பட்டுள்ளது" ("Treat the earth well; it was not given to you by your parents, it was loaned to you by your children") என்று ஒரு சூழியல் அறிஞர் கூறுகிறார். மத்திய மற்றும் தென் அமெரிக்காவின் மழைக்காடுகளில் வாழ்ந்த ஜாகுவார்களும் அவற்றின் வாழிடங்களும் கவலைப்படத்தக்க அளவில் மறைந்து வருகின்றன. தொழில்நுட்ப வளர்ச்சியாலும் அதைத் தடுக்க ஏதும் செய்ய முடியவில்லை. அறிவியலின் உதவியுடன் முயற்சிகள் ஏதோ செய்கிறார்கள்.
வீரப்பிரதாபன்: மனிதரைப் போல அவை எதையும் அளவுக்கு அதிகமாக நுகர்வதில்லை. அவற்றுக்குத் தேவையான அளவு மட்டும் எடுத்துக் கொள்ளும். குரங்குகள் போன்றவற்றை இரையாக்கும் அவை, ஒரு குரங்கைக்கூட அதிகமாக வேட்டையாடாது. அடுத்த வேளைக்குச் சேமிக்கும் பழக்கம் இல்லை.
பெரியமனுஷன்: அவற்றின் சத்தம் எப்படி? எதிரியைப் பயமுறுத்துமா? சிங்கம், புலி போலக் கம்பீரமாகவா? அல்லது பூனை போல 'மியாவ்'தானா?
வீரப்பிரதாபன்: புள்ளிச்சிறுத்தைகள் ஜாகுவார்களை விட உருவத்தில் சற்று சிறியவை. புலி, சிங்கம், சிறுத்தை, ஜாகுவார் அனைத்தும் பாந்தரினே (Pantherinae) என்ற உறுமும் பெரும்பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவை. ஜாகுவார்கள் தொடர்ச்சியான கரகரப்பான, கமறலான இருமல் போன்ற சத்தம் எழுப்பும். கொடூரமான கொலையாளிகள் என்று புகழ்பெற்றவை. இரையின் மண்டையோட்டை நொறுங்கும்படி கடித்துக் கொன்றுவிடும்.
விக்கிரமன்: 'ஜாகுவார்' என்ற பெயரே அப்படி வந்ததுதான். உள்ளூர் மொழிச் சொல்லின் பொருள் "ஒரு கடியில் கொல்லும் மிருகம்" ("a beast that kills with one bite"). தடிமனான பருத்த உடலில் சில சதுரப் புள்ளிகள் இருக்கும். ஆனால் கால்கள் சற்று சிறியவை; பலமானவை.
பெரியமனுஷன்: அதாவது 'ஒரு கடி மிருகம்'. ஆனால் கால் சிறியது.
மலர்விழி: எனக்குப் பனிச்சிறுத்தைகள் பற்றி மேலும் விவரமாகக் கூற வேண்டும். அறிவியல் நோக்கில் விளக்கலாமே.
வீரப்பிரதாபன்: அழகான பெரிய பூனைகள். மென்மையான அடர்ந்த சாம்பல் நிற ரோமமும் வெள்ளையான வயிற்றுப்பகுதியும் கொண்டவை. கறுப்பு மற்றும் பழுப்புப் புள்ளிகள் கொண்டவை. நான்கைந்து அடி வரை நீளமும் 120 பவுண்டு வரை எடையும் கொண்டவை. மத்திய ஆசியாவின் ஊசியிலைக்காடுகள், பனிமலைகள், ஆல்ப்ஸின் புல்வெளிகளில் 6000 முதல் 18000 அடி வரை உயரத்தில் வாழ்கின்றன. இவையும் தனிமை விரும்பிகள். சற்று வளர்ந்த பெரிய பூனை போல் தோன்றும்; கண்ணை நம்பாதே.
மலர்விழி: வேறு ஏதும் சிறப்பாக இல்லையா அவற்றிடம்?
வீரப்பிரதாபன்: பனிச்சிறுத்தைகள் பல சிறப்பம்சங்கள் கொண்டவை. அடர்ந்த சாம்பல் நிறத் தோல், அதை பனியின் குளிரிலிருந்து கதகதப்பு தந்து பாதுகாக்கும். பரந்த மலைப்பகுதியில் எளிதாகக் கலந்துவிடும். குட்டையான கால்கள், சக்திவாய்ந்த பாதங்கள் அவற்றுக்குச் சிறப்பாக வேட்டையாட உதவுகின்றன. நீளமான வாலை மூக்கை வெதுவெதுப்பாக வைக்கவும், சாய்வான பகுதியில் ஏறும்போது உடலைச் சமன்படுத்தவும் பயன்படுத்துகிறது. உடலில் பாதி அளவுக்கு, ஒரு மீட்டர் நீளத்திற்கு அதன் வால் உள்ளது. தன் வாழிடச் சூழலுக்கு மிகன்றாகத் தன்னைத் தகவமைத்துக் கொண்டது. ஆயினும் அதன் வாழிடங்கள் அழிக்கப்பட்டன. அழகான ரோமம் அடர்ந்த தோலுக்காக அவை வேட்டையாடப்பட்டன. கால்நடை மேய்ப்பவர்கள் தங்கள் கால்நடைகளை அவற்றிடம் இழந்ததால் அவற்றைத் தொடர்ந்து கொன்றழித்தனர். உலகில் ஏழாயிரம் வரையும், இந்தியாவில் ஐநூறு வரையும் அவை உள்ளதாக ஒரு கணக்கு. இந்தியாவில் காஷ்மீர், இமாச்சலம், உத்தராகண்ட், சிக்கிம் மற்றும் அருணாச்சலம் என ஐந்து மாநிலங்களில் காணப்படுவதாக ஆய்வு கூறுகிறது. அதன் நடத்தை மற்றும் ஏற்படக்கூடிய அபாயங்கள் பற்றி ஆய்வுப் பணிகள் நடக்கின்றன. உள்ளூர் சமூகத்தைப் பனிச்சிறுத்தைப் பாதுகாப்பு முயற்சிகளில் ஈடுபடுத்த, சூழல் கல்வி மூலமும் சூழல் சுற்றுலா மூலமும் கால்நடை இழப்பைக் குறைக்கும் வழிமுறைகளை விளக்கியும் முயற்சிகள் நடக்கின்றன.
விக்கிரமன்: இல்லையேல் கம்பீரமாக நடைபோடும் அந்தச் 'சாம்பல் பிசாசு' நினைவச்சின்னமாக, கற்பனை உருவமாக மாறியிருக்கும். 'பனிச்சிறுத்தை திட்டம்' (Project Snow Leopard) நடைமுறைப்படுத்திய பின் ஒரு நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
வீரப்பிரதாபன்: இமயத்தின் உயரமான, கடினமான பகுதிகளில் ஆபத்தான சூழலைச் சமாளித்து வாழக்கூடிய விலங்குகளில் சிறந்தது அழகான பனிச்சிறுத்தைதான். 'மலைகளின் சாம்பல் பிசாசு' (Grey ghost of the mountains) என்ற அந்தப் பனிச்சிறுத்தை உட்பட, 'லிங்க்ஸ்' (Lynx) எனும் சிறுத்தைப் பூனை வரை பூனைக் குடும்பத்தினர் நல்ல பார்வைத் திறனும் கூரிய பற்களும் பருத்த பலமான உடலும் கொண்டவை. ஆயினும் பலனில்லை.
பெரியமனுஷன்: பருத்த உடலைக் கொண்டு அவை எப்படி வேகமாக ஓட முடியும்? எப்படி இரையைத் துரத்தும்?
விக்கிரமன்: சிறிய பூனைகள் வகையில் சீட்டா (Cheetah), பூமா (Puma), லிங்க்ஸ் (Lynx) மற்றும் வீட்டுப் பூனைகள் வரும். பெரும்பூனைகள் என்ற பாந்தரா வகையில் புலி, ஜாகுவார், சிங்கம் வரும். அதிக வலிமையோடுள்ள சிறுத்தை எவ்வளவு ஓடினாலும் களைப்படையாது. வேகத்துடன் விவேகம் இருக்கும்.
வீரப்பிரதாபன்: துரத்தும் இரையின் பின்னங்காலில் ஒரு சிறு காயத்தை உண்டாக்கிவிட்டால் அதன் வேகத்தைக் குறைத்துப் பிடித்துவிடலாம் என்று புத்திசாலித்தனத்துடன் துரத்தும். ஓடும்போது முன் கால்கள் பின்னோக்கிப் போகும்; பின் கால்கள் முன்னோக்கிப் பாயும். வித்தியாசமான பாய்ச்சல் ஓட்டம். சீட்டாவும் லெப்பர்டும் பார்க்க ஒரே மாதிரி இருப்பினும் வித்தியாசம் உண்டு. சிறுத்தை, சிறுத்தைப்புலி (ஜாகுவார்), பனிச்சிறுத்தை, வேங்கை, கருஞ்சிறுத்தை அனைத்தும் வேறு வேறு; ஆனால் எல்லாமே பூனைக் குடும்பத்தைச் சேர்ந்தவைதான். விலங்கியல் அறிஞர்கள் ஆய்வு செய்து, அதன் காலநோக்கறிவு (Timing sense) பற்றி வியக்கின்றனர். பகலில் எந்த விலங்கு எந்த இடத்தில் வரும், இரவில் எவை எங்கு வெளிவரும் என்ற தகவல் தொகுப்பு (Data) அதன் மூளைப் பகுதியில் பதிந்திருக்கும். இரையைப் பார்த்தவுடன் துரத்துவதில்லை. புதரிடையே சத்தமின்றி நடந்து பதுங்கி, இரையின் அருகில் அணுகி, பொறுமையுடன் காத்திருந்து தகுந்த நேரம் வந்தவுடன் பாய்ந்து தாக்கும். பெரும்பாலும் வெற்றிதான். "காலம் இடமறிந்து செயல்பட்டால் வெற்றி" என்று நம் வள்ளுவர் தாத்தா கூறினார் அல்லவா? அரிதாக அந்தத் தாக்குதல் வெற்றிபெறாவிடில், துரத்தல் ஆரம்பம். கால்கள் சிறியவை; மண்டையோடு பெரியது; உடல் உருவி விட்டது போல நீளமாக, மோட்டார்பைக் போல இருக்கும். மெலிந்த கால்கள் மரத்தின் அடிப்பாகத்தைப் பற்றி மேலேறுவதற்கு வசதி.
மலர்விழி: இதுதான் அறிவியல் பார்வை; அறிவுக்கீற்று! அறிவியல் ஆய்வுக்கு வானமே எல்லை. தொடர்க நண்பரே.
வீரப்பிரதாபன்: இரையைச் சாய்த்த பிறகு எடை பார்க்கும். அதன் எடைக்குச் சமமாக இருந்தால், தன் வாயில் கவ்வி இழுத்து, மற்ற விலங்குகளுக்குத் தெரியாமல் தின்பதற்காக மரத்தின் மேல் எடுத்துச் சென்று வசதியாக அமர்ந்து நிதானமாகச் சாப்பிடும். மணிக்கு அறுபது கிலோமீட்டர் வேகத்தில் ஓடக்கூடிய சிறுத்தை, ஆற்றில் வெள்ளம் ஓடினாலும் பாய்ந்து நீந்தி மறுகரை அடையும் – தேவைப்பட்டால். இருபது மீட்டர் தூரத்தை ஒரே தாவலில் தாண்டும். ஓடும்போது திடீரென்று திரும்ப வேண்டி இருப்பின் வாலைத் திருப்பி உடலின் எடையைச் சமநிலைப்படுத்தி வேகமாகத் திரும்பிவிடும்.
விக்கிரமன்: தாய் சிறுத்தைகள் தன் குட்டிகளிடம் மட்டுமன்றி, பிற விலங்குகளின் குட்டிகளிடமும் பாசமுள்ளவை என்று பதிவு உள்ளது. கழுதைப் புலிகளிடமிருந்து ஒரு குரங்குக் குட்டியைக் காப்பாற்றி, தேடிவந்த தாய்க் குரங்கிடம் ஒப்படைக்கும் காணொளிப் பதிவு உண்டு.
பெரியமனுஷன்: நானும் பார்த்து வியந்தேன். கருஞ்சிறுத்தைகள் பற்றியும் இன்னும் சற்று விளக்கமாக...
வீரப்பிரதாபன்: சிறுத்தையின் இன்னொரு இனம் கருஞ்சிறுத்தை. எல்லா உயிரினங்களின் உடலிலும் உள்ள 'மெலனின்' நிறமி, தோல், முடி, கண்களுக்குக் கறுப்பு நிறத்தைத் தரும். சீரான நிறமி அணுக்கள் அதன் உடலின் தோல் பரப்பு முழுதும் பரவி இருப்பதால், அட்டைக் கரி, தார் நிறத்தில் இருக்கும். இந்த பிளாக் பேந்தர் (Black Panther) ஆசிய, ஆப்பிரிக்க, அமெரிக்கக் காட்டுப் பகுதிகளில் முன்பு பெருமளவில் காணப்பட்டன. இப்போது எண்ணிக்கை மிகவும் குறைந்து, எங்கோ ஒன்று தொடர்ந்து தேடினால் கண்ணுக்குத் தென்படுவதாக ஆய்வுக் குழுக்கள் கூறுகின்றன.
மலர்விழி: இளஞ்சிவப்பு நிறத்திலும் ஒரு இனம் உள்ளதா? 'பிங்க் பேந்தர்' என்று ஒரு வகை உள்ளதாகக் கேள்விப்பட்டேன்.
விக்கிரமன்: 'பிங்க் பேந்தர்' என்பது கார்ட்டூன் கற்பனை.
வீரப்பிரதாபன்: கருஞ்சிறுத்தையின் தோல்பகுதி கருநிறம் கொண்ட பட்டுத் துணி போன்றது. கண்கள் மட்டுமே கறுப்பின் தாக்கம் சற்று குறைவு. இரவில் இதன் கண்கள் வைரம் போன்று மின்னும். புதர் பிரதேசங்களிலோ சமவெளிகளிலோ வாழ்வதில்லை. அடர்ந்த மழைக்காட்டுப் பகுதியில் சூரிய ஒளி அதிகம் படாத நிழல் மண்டிய காடுகளில் மட்டுமே வாழும். மற்ற சிறுத்தை இனங்களாவது மனிதர்களைக் கொல்வதுண்டு; கருஞ்சிறுத்தைகள் மனிதர்களைத் தாக்குவதில்லை; ஒதுங்கிப் போய்விடும்.
விக்கிரமன்: ருட்யார்டு கிப்ளிங்கின் 'தி ஜங்கிள் புக்' கதையில் வரும் 'பகீரா' கரும்சிறுத்தையைக் கவனித்தால் புரியவரும். அவை புத்திசாலிகள்.
மலர்விழி: ஆமாம், மோக்லி சிறுவனைப் பாதுகாக்கும். மனிதரைப் பற்றி எப்போதும் எச்சரிக்கும். பனிச்சிறுத்தைகள் பற்றிக் கூறினாயே, அவை பற்றி அதிகம் ஏதும் கேள்விப்பட்டதில்லையே. உடல் அமைப்பு எப்படி?
வீரப்பிரதாபன்: பாந்தரா அன்சியா (Panthera uncia) எனும் பனிச்சிறுத்தைகள் உயரமான மலைப்பாறைத் தொடர்களில், உயரமான இடங்களில் மனிதர்களின் பார்வைக்குத் தட்டுப்படாமல் வாழ்வதால், இதுவரை இதன் எண்ணிக்கையே தெரியவில்லை. பல பேருக்குப் பனிச்சிறுத்தை என்றொரு இனம் இருப்பதே தெரியாது. மற்ற சிறுத்தைகளை விட இவை உயரத்திலும் நீளத்திலும் சிறியவை; எடையும் குறைவுதான்; ஐம்பது கிலோ இருக்கும். வெண்மை கலந்த சாம்பல் புகை நிறம். சிலவற்றின் நிறம் மஞ்சள் கலந்து பழுப்பாகவும் இருக்கும். தலையில் கரும் பழுப்போடு கூடிய சிறிய புள்ளிகளும், கால்கள் மற்றும் வாலில் பெரிய புள்ளிகளும் காண்பது இதன் அடையாளம்.
பெரியமனுஷன்: உயரமான மலைப்பகுதியில் அதிகம் குளிருமே...
வீரப்பிரதாபன்: தோலின் அடியில் கொழுப்புப் படலம் ஒரு போர்வை போல் பதிந்து இருக்கும். ரோமங்கள் அடர்த்தியாக இருக்கும். காதுகள் சிறுத்துச் சுருண்டு காணப்படும்; இதனால் வெப்ப இழப்பைக் குறைக்க முடியும். பனிமலையில் வாழ்வதற்கு ஏற்ற உடல் தகவமைப்புகளை உடலில் கொண்டு சிறப்பாகச் சூழலைச் சமாளிக்கிறது. பாதங்கள் அகலமாக இருப்பதால் பனியில் நடக்க வசதியாக இருப்பதோடு, உடலின் எடையைத் தாங்கிக் கொள்ளும் வகையிலும் உள்ளது. வால் ரோமங்களுடன் நீளமாக இருப்பதால் அதை ஒரு போர்வை போல் பயன்படுத்திப் பகலில் தூங்கும். இரவில்தான் இரை தேடக் கிளம்பும். உடலமைப்பு கழித்தல் (-) 40 டிகிரி செல்சியஸ் வரை தாக்குப் பிடிப்பதால், அதிக பனிப்பொழிவையும் சமாளிக்கும். ஆண்டுக்கு இரண்டு குட்டிகள் ஈன்று, இரண்டு ஆண்டு வரை தாய் தன் அரவணைப்பில் வளர்க்கும். ஆணும் உடனிருந்து கவனிக்கும். மான், எருது, முயல் இரை... முக்கிய வேட்டை உணவு பனிமலை ஆடுகள்தாம்.
விக்கிரமன்: 2003-இல் ஒரு சர்வதேச நிறுவனம் ஆறாயிரம் பனிச்சிறுத்தைகள் இருந்ததாகக் கணக்கிட்டது. மனிதரின் வேட்டையால் எண்ணிக்கை குறைந்துள்ளதாக எச்சரிக்கிறது. மலையரசன் பனிச்சிறுத்தையைக் காப்போம்; அது நமது கடமை, உரிமை.
மலர்விழி: பாதுகாப்பான பெரிய அடர்ந்த காட்டை உணவு மற்றும் தண்ணீர் வசதியுடன் உருவாக்கினால், பாதுகாத்தால் அது சாத்தியமாகும்.
விக்கிரமன்: நாம் காட்டை உருவாக்குவதில்லை; விதைத்து, உரமிட்டு, தண்ணீர் ஊற்றுவதில்லை. பறவைகள் விதைக்கின்றன; பூச்சிகள் மகரந்தச் சேர்க்கை செய்கின்றன; விலங்குகள் உயிர்ச்சமநிலையைப் பேணுகின்றன. ஒவ்வொரு உயிரினமும் காட்டுக்கு ஆற்றும் பங்களிப்பு மகத்தானது. நாம் அவற்றைச் சீண்டாமல், கொல்லாமல் இருந்தால் போதும்.
பெரியமனுஷன்: இப்போது நம் காடுகளில் எந்த வகை சிறுத்தை உள்ளது?
வீரப்பிரதாபன்: பெரிய பூனைக் குடும்பத்தைச் சேர்ந்த சிங்கம், புலி, சிறுத்தை, பனிச்சிறுத்தை, மேகச்சிறுத்தை ஆகிய ஐந்து வகைகளையும் கொண்டிருந்த நாடு இந்தியா. இந்தியக் காடுகளில் 1950 வரை சீட்டா எனும் சிவிங்கிப்புலி வாழ்ந்திருந்தது. பிறகு முற்றிலும் அழிந்துவிட்டது; இப்போது இல்லை.
விக்கிரமன்: இப்போது நம் காடுகளில் சிறுத்தைதான் உள்ளது.
பெரியமனுஷன்: சிவிங்கியின் சிறப்புக்குணங்கள் என்ன?
வீரப்பிரதாபன்: சிறுத்தைக்கும் சிவிங்கிப்புலிக்கும் வித்தியாசம் உள்ளது. சிறுத்தை 'லெப்பர்ட்' (Leopard). சிவிங்கிப்புலி 'சீட்டா' (Cheetah). சிறுத்தையானது பத்து கிலோமீட்டர் வரை கூட இரை தேடி நடந்தே செல்லக்கூடியது. காட்டிலிருந்து வயல், ஏரி, வறண்ட நிலம் என அனைத்தையும் நடந்தே கடக்கும். இருபதாம் நூற்றாண்டில் இவற்றின் எண்ணிக்கை பெருமளவு குறைந்துவிட்டது. ஐம்பது சதுர கிலோமீட்டர் வரை இதன் எல்லை. தேடும் இரை ஐந்து கிலோமீட்டருக்குள் கிடைத்தால் திரும்பிவிடும்; இல்லையேல் தொடர்ந்து பயணிக்கும்.
விக்கிரமன்: சிறுத்தை வேட்டையாடும் விலங்கை அப்படியே முடிற்றை, நகம் போன்றவற்றுடன் சாப்பிடும்; சுத்தம் குறைவு. சிவிங்கிப்புலி அவற்றை நீக்கிவிட்டு இறைச்சியை மட்டும் உண்ணும்; சுத்தம் பார்க்கும். சிறுத்தை மரத்தின் மேல் ஏறி அமர்ந்து இரையை உண்ணும். தண்ணீரை நாக்கில் நக்கித்தான் குடிக்கும். எல்லா வகைக் காடுகளிலும் வாழ்வதற்குத் தன்னைத் தயார்படுத்திக் கொண்ட சிறுத்தை, ஏதோ தன் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறது.
பெரியமனுஷன்: அதாவது காடு 'போ போ' என்கிறது; மரணம் 'வா வா' என்கிறது அல்லவா? பரிதாபம்தான்.
மலர்விழி: சாப்பிடும் விஷயத்தில் இரண்டிற்கும் இவ்வளவு வேறுபாடுகள் உள்ளனவா? சிறுத்தைக்கும் புலிக்கும் ஒற்றுமைகள் உள்ளனவா?
விக்கிரமன்: புலி, உருவத்தில் சிறுத்தையைப் போன்ற சாயலில் இருப்பினும் குணங்களில் மிக வேறுபட்டது. புலிகள் தனித்து வாழும் குணமுடையவை. 'புலிக்குடும்பம்' என்ற ஒன்றை எங்கும் காண முடியாது. எப்படிப்பட்ட வாழ்விடங்களிலும் சமாளித்து வாழ்ந்துவிடும். சைபீரியா, சீனா, காஸ்பியன், சுமத்ரா, இந்தோசீனா, ஜாவா, இந்தியா, பாலி என எட்டு துணையினங்கள் புலியில் இருந்தாலும், சைபீரிய இனம்தான் மிகப் பெரியது. 13 அடி நீள உடலுடன் சிறுத்தை போலவே இருக்கும் புலிகள் நன்றாக நீந்தும். வெப்பம் அதிகமாக இருக்கும்போது அதிகம் நீரில் இருக்க விரும்பும். புலி உடலில் உள்ள வரிகள் உடல் பகுதியில் மேலிருந்து கீழாகவும், கால்களில் குறுக்காகவும், கழுத்துப் பகுதியில் மேலிருந்து கீழாகவும், வால்களில் வட்டமாகவும் அமைந்திருக்கும். வயிற்றுப்பகுதி வெள்ளையாக இருக்கும். முகத்தில் கறுப்புப் புள்ளிகள் இருக்கும். ஒரு புலி புதருக்குள் மறைந்திருந்தால் கண்டுபிடிக்கவே முடியாது; வேறுபாடு தெரியாது; புதர் போலவே தோற்றம் தரும்.
பெரியமனுஷன்: உடல் அமைப்பு எப்படி? திறமைகள் உண்டா?
வீரப்பிரதாபன்: பொதுவான எடை 230 முதல் 270 கிலோ வரை. பொதுவான நீளம் இரண்டரை முதல் நான்கு மீட்டர் வரை. சில புலிகள் வெளிர் மஞ்சள் நிறத்திலும் பழுப்பு வெள்ளை நிறத்திலும் இருக்கின்றன. இரவில் இரை தேடி நீண்ட தூரம் பயணம் செய்யும். நன்றாக நீந்தும். ஊனுண்ணிகளில் மிக வலிமையானது புலிதான். சிங்கத்தை விட மிக ஆவேசமானது; சிறுத்தையை விடச் சீற்றமானது; எதற்கும் யாருக்கும் பயப்படாது.
மலர்விழி: வேட்டைப் பழக்கம் எப்படி? சிறுத்தை போலவேவா?
பெரியமனுஷன்: உணவுப் பழக்கம் சுத்தமாக இருக்குமா?
விக்கிரமன்: தன் தேவைக்கு அதிகமாகவே இரை வேட்டையாடும். ஒரு வேளைக்கு நூறு கிலோ வரை உண்ணும். பெரிய விலங்குகள் கிடைக்காவிடில் தவளை, மீன், எலி, ஏன் பூச்சி வகைகளைக் கூட விட்டு வைக்காது. புலி வேட்டையாடிய இரையை மீதம் வைத்துச் சிறிது நேரம் கழித்து மீண்டும் உண்ணத் தேடிவரும். சிறுத்தை, சிங்கம், செந்நாய் அப்படி வருவதில்லை. புலிகளின் காதுகள் மிகவும் கூர்மையானவை; சற்று தூரத்தில் வருபவரின் மூச்சுச் சத்தைக் கூடக் கேட்டுவிடும். பாதங்கள் மிகவும் மென்மையானவை. குட்டி யானைகளையும் காண்டாமிருகக் குட்டிகளையும் கூடக் கொன்றுவிடும். சுத்தமாகச் சாப்பிடும் பழக்கமுள்ள புலிகள் முதலில் இரையின் சிறுநீரகம், இதயம், நுரையீரல், ஈரல் போன்ற மென்மையான பகுதிகளை உண்டுவிடுவதாக ஆய்வாளர்கள் கண்டனர். அதன் வயிறு நிரம்ப ஒரு முறைக்கு 20 முதல் 30 கிலோ வரை சாப்பிடும்.
பெரியமனுஷன்: தாய் புலையும் தாய் சிறுத்தை போலத்தானா?
மலர்விழி: புலி பற்றிய சூழியல் ஆய்வு ஏதும் புதிதாக உள்ளதா?
வீரப்பிரதாபன்: தேவையின்றி எந்த உயிரையும் கொல்லாது. இரையைத் துரத்திக் கொண்டு ஓடி, பாயும் தூரம் வந்தவுடன் ஒரே பாய்ச்சலாகப் பாய்ந்து இரையின் கழுத்து அல்லது தொண்டைப் பகுதியைக் கவ்விப் பிடித்துக் குதறிவிடும். நாலரை மீட்டர் தூரம் வரை தாவும். வேறு மிருகங்கள் கொன்ற இரையைத் தின்னாது. ஆண்டுக்கு ஒரு புலிக்கு 70 கிலோ எடைப் புள்ளிமான்கள் எழுபது தேவை என்றும், ஒரு காட்டில் 30 புலிகள் வாழ அங்கு ஆயிரம் மான்கள் குறைந்தபட்சம் இருக்க வேண்டும் என்றும் ஒரு ஆய்வுப் புள்ளிவிவரம் உள்ளது. பெண் புலி மனிதத் தாய் போன்று அர்ப்பணிப்புப் பண்பு உள்ளது. குட்டிகளுக்கு ஏதும் ஆபத்து என்று சிறிது சந்தேகம் தோன்றினாலும், அந்த இடத்தை விட்டு அவற்றை இடமாற்றம் செய்து வேறிடத்திற்கு மாற்றிவிடும். அந்த இடத்தை விட்டு அகலாமல், அந்த ஆபத்து இல்லை என்று நம்பும் வரை தூங்காது; மிகக் கவனமுடன் இருக்கும் தாய் புலி. இரையைக் கொண்டுவந்து தன் குட்டிகளுக்குக் கொடுத்துவிட்டுத்தான் தாய் புலி உண்ணும். இரண்டு ஆண்டுகள் முடியும் வரை குட்டிகளைத் தன்னுடனே வைத்திருக்கும்.
விக்கிரமன்: சிறுத்தைப் போல் அல்லாமல், புலிகள் தம் வாழ்விடத்தைச் சிறுத்தை, செந்நாய், கரடி, முதலை, பாம்பு, கீரி, பூனையினங்கள், கழுதைப் புலிகள், நரிகள், கழுகுகளோடு பங்கு போட்டுக் கொண்டு சமூக இணக்கத்துடன் வாழக்கூடியவை. கம்பீரமான களையான புலி பார்த்தாலே பரவசம், பயம்.
மலர்விழி: புலிகளிலும் வகைகள் உள்ளனவா? எத்தனை வகை?
பெரியமனுஷன்: நம்மூர் புலிகள் எந்த வகை?
வீரப்பிரதாபன்: புலி இனங்களில் மிகப்பெரியது மஞ்சூரியக் கொரிய வகை. நமது நாட்டில் காணும் புலிகள் வங்கப் புலிகள் (Bengal Tigers) எனப்படும். இறைவனுக்கு வாகனமாக இருப்பினும், ஒரு இறைவன் அதன் தோலை அரைக்கணிந்தார் என்பதால் யோகிகளும் ஞானிகளும் புலித்தோலின் மீது அமர்ந்து தியானம் செய்தார்கள் என்பதால், அதன் தோல் விரும்பப்பட்டு வேட்டையாடப்பட்டு எண்ணிக்கை குறைந்தது. அது ஒரு தோல், அவ்வளவுதான்.
பெரியமனுஷன்: வேட்டையாடுபவர்கள் அதையெல்லாம் யோசிக்கிறார்களா? வியாபாரம், பணம்தான் அவர்களுக்குப் பிரதானமாகத் தெரியும். திரைப்படங்கள் சிலவற்றிற்குச் 'சிறுத்தை', 'புலி', 'சிங்கம்', 'வேங்கை' என்றெல்லாம் பெயர் வைத்து மகிழ்கிறோம். அது போதுமா?
மலர்விழி: சிறுத்தை, சிங்கத்தை விடப் புலிகள்தாம் அதிகம் புகழ்பெற்றவை; சரித்திரத்திலும் இலக்கியத்திலும் அதிகம் இடம்பெற்றவை. "புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது", "கணக்கில் புலி", "புலிப்பாய்ச்சல்", "காட்டில் புலியும் வீட்டில் புளியும் ஆளைக் கொல்லும்", "புலி பதுங்குவது பாய்வதற்கு"...
விக்கிரமன்: 2010 காமன்வெல்த் போட்டிகளின் சின்னம் புலி (ஷேரா). சோழ மன்னரின் கொடியும் சின்னமும் புலி. அவர்களை 'வேங்கையின் மைந்தர்கள்', 'புலிகளின் புதல்வர்கள்' என்று வரலாறு புகழ்வதுண்டு. நூற்றாண்டுக்கு முன் லட்சம் இருந்தவை, இப்போது ஐயாயிரம்தான். பூனையை அதிகளவில் உருவத்திலும் குணத்திலும் ஒத்திருப்பது புலிதான். காட்டில் ஒரு புலியைக் கண்டுகொள்வது கடினம். பக்கத்திலேயே இருந்தாலும் கண்ணில் எளிதாகப் படாது; சூழலோடு உருவக் கரத்தல் (Camouflage) செய்து பொருந்திவிடும்.
மலர்விழி: எனில் வேட்டை அதற்கு மிக எளிதாக இருக்குமல்லவா?
வீரப்பிரதாபன்: மான் போன்றவற்றை வெகுதூரம் துரத்திச் சென்று வேட்டையாடுவது புலிகளால் முடியாது. மிக வேகமாக ஓட முடியாது. தம் இரையை மறைந்திருந்துதான் தாக்கும். தோல் நிறம் பெரிதும் துணைசெய்கிறது. புலிக்குட்டியின் எடை பிறக்கும்போது ஒன்றரை கிலோதான். அடிக்கடி குட்டிகளை இடம் மாற்றி ஒளித்து வைத்துக்காப்பாற்றும். ஆறு குட்டிகள் வரை ஈன்றாலும் இரண்டை மட்டும்தான் முழுமையாக வளர்த்திட முடிகிறது; அது அறிவியல் விதி; இயற்கைச் சமநிலை விதி. இனப்பெருக்கமும் சற்று கடினம்தான்.
மலர்விழி: எப்படி அவற்றைக் காக்கிறார்கள்? புகலிடம் தவிர...
விக்கிரமன்: நிறைய சரணாலயங்கள், புகலிடங்கள், 'புலிகள் பாதுகாப்புத் திட்டம்' (Project Tiger) போன்ற பாதுகாப்புத் திட்டங்கள் எல்லாம் உள்ளன. வனவிலங்குப் பாதுகாப்புச் சட்டங்கள், வேட்டைத் தடுப்புச் சட்டங்கள் உள்ளன. உயிரியல் பூங்காக்கள் உள்ளன. அவற்றைப் பார்வையிடுவதற்குத் தனியாக வழிகாட்டு நெறிமுறைகள் உள்ளன. பராமரிப்புத் திட்டங்கள், நிதிகள் உள்ளன. புலிப்பல் மோகம் குறைந்துவிட்டது; புலித்தோல் விருப்பம் மறைந்துள்ளது; சிறுத்தை வேட்டை ஆசை ஒழிந்துவிட்டது. ஆனால் காலம் கடந்துவிட்டது.
வீரப்பிரதாபன்: உயிரியல் விஞ்ஞானிகளை விடச் சூழியல் ஆர்வலர்கள் அரசுடன் இணைந்து, மக்கள் ஒத்துழைப்புடன் நாடு முழுதும் பல ஆக்கபூர்வ நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். ஆய்வுகள் செய்கிறார்கள்.
பெரியமனுஷன்: முயற்சிகள் நல்ல பலன் தரட்டும்.
மலர்விழி: ஆய்வுகள் நிறைய பலன்கள் தரட்டும். சிறுத்தைகள், சிங்கங்கள், வேங்கைகள், புலிகள் எல்லாம் எண்ணிக்கை பெருகட்டும். சுற்றுச்சூழல் மண்டலம் சிறந்து விளங்கட்டும்.
பெரியமனுஷன்: வாருங்கள், ஏதாவது சிறுத்தைகள் கண்ணில் தென்படுகிறதா என்று காடுகளைச் சுற்றிப் பார்க்கலாம். கேமரா இருக்கட்டும், துப்பாக்கி (Gun) வேண்டாம்.
- புழல் தி.பாலகுமார்
- வாகை மரத் தோப்பில் பேசிக் கொண்டிருப்பது யார்?
- காட்டுயிர் பாதுகாப்பு: அச்சுறுத்தல்களும் தீர்வுகளும்
- நல்ல சில குடும்பங்கள்
- கரை நோக்கி விரட்டப்படும் ஆழ்கடல் உயிரினம்
- அமைதிப் பள்ளத்தாக்கைக் காப்பாற்றிய அற்புத மனிதர்
- அறியப்படாத அரிய குடும்பங்கள்
- நாட்டின் கரையோரம் நச்சுயிரிக் கூட்டங்கள்
- திமிங்கலச் சிறைச்சாலை
- ஆண்கள் இல்லையா...? கவலையில்லை!
- நிறங்களை இழக்கும் இயற்கையின் உலகம்
- பூமிக்கடியில் வாழும் வேர்ப்பூஞ்சைகள்
- இந்த குரலுக்கு வயது நூறு!
- இயற்கையுடன் உறவு அதிகமுள்ள நாடுகளின் பட்டியல்
- சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி
- புல் தின்னும் புலிகள்!
- நம்மைப் போலவே இவர்களும்… அழியாமல் காப்போம்!
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.