அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
சமூக பாதுகாப்பு அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல், மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடுகளின் பட்டியல் போல உலகில் பல்வேறு சமுதாய நிலைகள் பற்றி அவ்வப்போது விஞ்ஞானிகள் ஆராய்ந்து பட்டியல்களை வெளியிடுகின்றனர். இவ்வகையில் இயற்கையுடனான உறவு குறித்த பட்டியல் அண்மையில் வெளியிடப்பட்டுள்ளது.
கனடா, இஸ்ரேல், ஜெர்மனி, ஜப்பான், ஸ்பெயின், பிரிட்டன் , நேபாளம் உள்ளிட்ட 61 நாடுகளில் மக்கள் இயற்கையுடன் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளனர் என்பது பற்றிய ஆய்வுகள் நடந்தன. இது குறித்து உலகளவில் நடந்த முதல் ஆய்வு இது. இந்த நாடுகளைச் சேர்ந்த 57,000 பேர் இதில் பங்கேற்றனர். சமூக, பொருளாதார, புவியியல், கலாசார அம்சங்கள் இயற்கையின் மீதான மக்களின் கருத்தை எவ்வாறு உருவாக்குகிறது என்பது ஆராயப்பட்டது.
இந்த ஆய்வில் நேபாளம் முதலிடத்தைப் பெற்றுள்ளது. இரான், தென்னாப்ப்ரிக்கா, பங்களாதேஷ் மற்றும் நைஜீரியா ஆகியவை அடுத்தடுத்த இடங்களைப் பெற்றுள்ளன என்று ஆம்பியோ (Ambio) என்ற இதழில் இது குறித்து வெளிவந்த ஆய்வு கூறுகிறது. க்ரோஷியா மற்றும் பல்கேரியா ஆகியவை மட்டுமே பட்டியலில் முதல் பத்து இடங்களில் இடம் பெற்ற இரண்டு ஐரோப்பிய நாடுகள். பிரான்ஸ் 19வது இடத்தில் உள்ளது.
பிரிட்டனுக்கு அடுத்த இடங்களில் நெதர்லாந்து, கனடா, ஜெர்மனி, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் ஸ்பெயின் ஆகிய நாடுகள் உள்ளன. பட்டியலில் ஸ்பெயின் கடைசி இடத்தில் உள்ளது. இயற்கையுடனான உறவு என்பது ஒரு தனிநபர் பிற உயிரினங்களுடன் உளவியல் ரீதியாக மற்ற உயிரினங்களுடன் அவர் எந்த அளவு நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளார் என்பதை குறிக்கிறது.
இயற்கையான சூழலில் வாழும் ஒருவர் அதிகமாக மகிழ்ச்சியுடன் இருப்பதால் அவரின் உடல் மற்றும் மன நலம் மேம்படுகிறது. இதனால் அவர் சூழல் நட்புடைய செயல்களில் அதிகமாக ஈடுபடுகிறார் என்று ஆய்வுகள் கூறுகின்றன. இயற்கையுடன் குறைவாகத் தொடர்பு கொண்டுள்ள ஒருவர் உயிர்ப் பன்மய இழப்பு, பொருளாதார சமத்துவமின்மை, பொருளியல் சார்ந்த பயன்களைக் குறைவாகப் பெறுகிறார்.
பிரிட்டன் டார்பி (Derby) பல்கலைக்கழகத்தின் இயற்கைத் தொடர்புகள் குறித்த பிரிவின் பேராசிரியர் மைல்ஸ் ரிச்சர்ஸன் (Miles Richardson) அவர்களின் தலைமையில் பிரிட்டன் மற்றும் ஆஸ்திரியாவைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த ஆய்வை நடத்தினர்.
இயற்கையுடன் அதிக தொடர்பு கொண்டுள்ள சமுதாயம் ஆன்மீகம் மற்றும் கலாச்சாரத்தில் அதிக நம்பிக்கையுடன் உள்ளது. இயற்கைத் தொடர்பு குறைவாக உள்ள நாடுகளில் வணிக நட்புடைய சூழல் குறைவாக உள்ளதை இந்த ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
பிரிட்டன் உலகில் அதிகமான சூழல் பாதுகாப்பு அமைப்புகளில் உறுப்பினராக இருந்தாலும் இயற்கையுடன் உள்ள மக்கள் தொடர்பில் அது எந்த தாக்கத்தையும் செலுத்தவில்லை. நகர மயமாக்குதல், சராசரி வருமானம் மற்றும் மிதமிஞ்சிய இணைய தள பயன்பாடு போன்றவையும் இதற்குக் காரணம் என்று ஆய்வு கூறுகிறது.
இயற்கைத் தொடர்பு என்பது நாம் எதைச் செய்கிறோம் என்பதைப் பொறுத்ததில்லை. ஆனால் அது இயற்கையைப் பற்றி நாம் என்ன நினைக்கிறோம், எவ்வாறு உணர்கிறோம், சிந்திக்கிறோம், இயற்கையை நாம் எந்த அளவு மதிக்கிறோம் என்பதிலேயே உள்ளது.
“இன்றுள்ள தொழில்நுட்ப உலகில் இயற்கையைக் குறித்த சிந்தனைகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும். கலாசாரத்தை மாற்றுவது கடினம். ஆனால் இயற்கையின் மதிப்பை நம் நலமான வாழ்வுடன் மைய நீரோட்டத்தில் இணைத்துப் பார்க்கப் பழக வேண்டும். மனநல மற்றும் உடல் நல சிகிச்சைகளில் இயற்கை வழி முறைகளுக்கு அதிக முக்கியத்துவம் தரவேண்டும். இயற்கை பற்றிய பொது விதிகளை உருவாக்க வேண்டும். மிதமிஞ்சிய வணிக நோக்கங்கள் சூழல் முடிவுகளைப் பாதிக்கிறது. முடிவுகள் எடுப்பதில் இயற்கைக்கு உரிய இடம் அளிக்கப்பட வேண்டும்.
வெறும் வளமாக மட்டும் கருதாமல் இயற்கையை நம் செயல்களில் பங்காளியாக ஆக்க வேண்டும். நகரப் பகுதிகளில் பூங்காக்கள், பசுமையிடங்களை அதிகப்படுத்தினால் மட்டும் போதாது. அவற்றை புனிதமாகக் கருத வேண்டும்" என்று ரிச்சர்ட்ஸன் கூறுகிறார். அவ்வாறு கருதும் நாடுகளில் வாழும் மக்கள் அதனுடன் அதிகமாகத் தொடர்பு கொண்டுள்ளனர் என்று உலக மதிப்பீடுகள் கணக்கெடுப்பு (World Values Survey) அமைப்பின் ஆய்வு கூறுகிறது.
“இயற்கை உடல், மன நலம், ஆன்ம நலனிற்கு நல்லது. பைபிள் போன்ற பல புனித நூல்கள் பறவைகள், மலர்களுடன் புராண காலத்தில் மக்கள் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்ததைக் கூறுகிறது. பார்ப்பதில் நாம் நேசிப்பதை நாம் விரும்புகிறோம். அதைப் பொக்கிஷமாக நினைக்கிறோம். பாதுகாக்க முயல்கிறோம். வனப் பகுதி சூழலில் உள்ள பள்ளிக்கூடங்கள், தேவாலயங்கள் இதில் பெரும் பங்காற்றுகின்றன” என்று இங்கிலாந்து சர்ச்சுகளுக்கான கூட்டமைப்பு மற்றும் நாரிஜ் (Norwich) தேவாலயத்தின் பிஷப் கிரயெம் அஷர் (Graham Usher) கூறுகிறார். இயற்கையைப் பாதுகாக்க வேண்டும் என்ற விழிப்புணர்வை உலக மக்களிடையில் உருவாக்க இந்த ஆய்வு உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கடந்த மூன்று பத்தாண்டுகளில் வேதிப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாடு 50% அதிகரித்துள்ளது. இவற்றிற்கு மாற்றாக பசுமை வழியில், சூழலிற்கு நட்புடைய பூச்சிக்கொல்லி ஒன்றை ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். இது ஒட்டும் தன்மை தந்திரத்தின் அடிப்படையில் செயல்படுகிறது. வேதிப்பொருட்களைப் பயன்படுத்தாமல் தாவரங்களுக்கு தீங்கு ஏற்படுத்தும் பூச்சிகளை அழிக்கிறது.
தெளிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள உணவு எண்ணை துளிகள் பூச்சிகளைப் பிடித்து அழிப்பதால் செயற்கைப் பூச்சிக்கொல்லிகள் போல இவை மனிதர்களுக்கும் சூழலிற்கும் தீமை செய்வதில்லை. டி எஸ் (Ts) என்று அழைக்கப்படும் இது வேதிப் பூச்சிக்கொல்லிகளுக்கு ஒரு பசுமை வழி மாற்று என்று புதிய ஆய்வு கூறுகிறது. உணவு எண்ணைகளில் இருந்து தயாரிக்கப்படும் இந்த பசை வடிவ பூச்சிக்கொல்லி பனிப் பூண்டு (sundews) என்ற துரோசீரா போன்ற பூச்சி உண்ணும் தாவரங்கள் இரை பிடிக்கும் தந்திரத்த்தின் மூலம் கிடைத்த உள்ளுணர்வால் உருவாக்கப்பட்டது.
நச்சுத்தன்மை உள்ள பூச்சிக்கொல்லிகள் போல இல்லாமல் மிகப் பெரிய உடலமைப்பைப் பெற்றிருக்கவேண்டும் என்பதால் தீங்கிழைக்கும் பூச்சிகள் இயற்கை வழியிலான இந்த பூச்சிக்கொல்லிகளுக்கு எதிராக எதிர்ப்பாற்றலை சுலபமாகப் பெற முடிவதில்லை. நன்மை செய்யும் தேனீக்கள் போன்ற அதிகப் பயன்தரும் பூச்சிகள் இந்தத் துளிகளால் பிடிக்கப்படுவதில்லை என்பது இந்த பசுமை வழி பூச்சிக்கொல்லியின் மிகப் பெரிய பயன்.
மக்கள்தொகைப் பெருக்கத்தால் உணவுக்கான தேவை உலகளவில் அதிகரித்துவருகிறது. ஆனால் பூச்சிகள் பெருமளவிலான உணவுப் பொருட்களை அழிக்கின்றன. இயற்கை மற்றும் வன உயிரினங்களுக்கும் சில சமயங்களில் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
இதனால் சில நாடுகள் செயற்கை பூச்சிக்கொல்லிகளை அதிக அளவில் தடை செய்துள்ளன. பூச்சிகளைக் கொல்ல உதவும் வேளாண் நட்புடைய சில பூச்சிகளை விவசாயிகள் அறிமுகப்படுத்தியுள்ளனர்.
என்றாலும் இந்த புதிய ஒட்டும் தன்மையுடைய துளிகள் உயிரி வழியில் மக்கக் கூடிய பூச்சிக்கொல்லிகளுக்கு முதல் எடுத்துக்காட்டு. இந்த துளிகள் காய்கறிகள், பழங்கள், அலங்கார செடிகள் உட்பட ஐநூறிற்கும் மேற்பட்ட இனங்களை தாக்கும் மேற்கித்திய மலர் த்ரிப் (western flower thrip) என்ற பூச்சியில் பரிசோதிக்கப்பட்டன. விவசாயத்தை பாதிக்கும் ஒரு முக்கிய பூச்சியான இது வட அமெரிக்கா மற்றும் மேற்கித்திய ஐரோப்பாவில் இருந்து வந்தது.
ஆனால் இது இப்போது உலகம் முழுவதும் பரவியுள்ளது. சோதனை நடைபெற்ற இரண்டு நாட்களுக்குள் இந்த பூச்சிக்கொல்லி 60 சதவிகிதத்திற்கும் அதிகமான த்ரிப் பூச்சிகளை அழித்தது. ஆனால் துளிகள் பல வாரங்கள் ஒட்டும் தன்மையுடன் இருந்தன. இந்த பூச்சிக்கொல்லி த்ரிப் பூச்சிகளை அசையவிடாமல் பிடித்துக்கொண்டது. “இந்த பூச்சிக்கொல்லி பற்றி ஆய்வுகள் மேலும் தொடர்ந்து நடைபெறுகின்றன.
தாவர எண்ணையில் இருந்து உருவான பூச்சிக்கொல்லி
“இந்த பூச்சிக்கொல்லி உள்ளூர் சூழலை பேரழிவு ஏற்படுத்தும் வகையில் பாதிப்பதில்லை. மனிதர்களுக்கு தற்செயலான நச்சுத் தன்மையை ஏற்படுத்துவதில்லை” என்று நம்புவதாக” நெதர்லாந்து வேஜன்இன்ஜன் பல்கலைக்கழக மற்றும் ஆராய்ச்சி (Wageningen University & Research) பிரிவின் சுய பாதுகாப்பு திட்டம் என்ற பெயரில் இது பற்றி ஆராய்யும் டாக்டர் தாமஸ் கோட்ஜெர் (Dr Thomas Kodger) கூறுகிறார். வேதியியல் பூச்சிக்கொல்லிகளின் மிதமிஞ்சிய பயன்பாட்டால் உணவு உற்பத்தி குறைகிறது. பசுமை மாற்று பூச்சிக்கொல்லிகளும் குறைவாகவே உள்லன.
இந்த புதிய பூச்சிக்கொல்லி பற்றிய கண்டுபிடிப்பு தேசீய அகாடமியின் அறிவியல் முன்னேற்றங்கள் (Proceedings of the National Academy of Sciences) என்ற ஆய்ழிதழில் வெளிவந்துள்ளது. விஞ்ஞானிகள் ஒரு தாவர எண்ணையை ஒட்டும் தன்மையுடையதாக்க அதை ஆக்சிஜனேற்றம் அடையச் செய்தனர். அதை ஒரு பசை நாடா போல ஆக்கினர். இந்த செயல்முறை தீவிரமான வறுத்தலுக்கு ஒப்பானது. பிறகு அதை நீர் மற்றும் சிறிதளவு சோப்புடன் கலந்து துளிகள் ஒன்றுசேர்ந்து ஒட்டிக்கொள்ளும் இயல்புடையதாக மாற்றினர்.
இந்தத் துளிகள் பின்னர் செவ்வந்தி தாவரங்களின் இலைகள் மீது தெளிக்கப்பட்டன. நெதர்லாந்தின் மிகப் பெரிய வணிகப்பயிரான இந்த தாவரம் த்ரிப் பூச்சிகளின் முக்கிய உணவு. ஸ்ட்ரா பெர்ரி இலைகளிலும் இந்தத் துளிகள் தெளிக்கப்பட்டு பரிசோதிக்கப்பட்டது. சோதனைக்கான தெளிப்பு கருவிகள் விவசாயிகள் முன்பு வயல்களில் பயன்படுத்தியவை போலவே வடிவமைக்கப்பட்டவை. ப்ளை பேப்பர் (Fly paper) எனப்படும் காகிதங்கள் இந்த வகை பூச்சிகளை அழிக்க பயன்படுவதில்லை.
பொறிகள் பூச்சிகளைப் பிடிக்க சிறந்த முறையில் உதவுகின்றன. ஆனால் அவை மகரந்த சேர்க்கை செய்யும் உயிரினங்களையும் பிடித்து அழித்துவிடுகின்றன. இந்த மில்லி மீட்டர் அளவே உள்ள துளிகள் மீது அதை விட பெரிய உடலைக் கொண்ட தேனீக்கள் ஒட்டிக்கொள்வதில்லை. இந்தத் துளிகளுடன் நறுமணப் பொருட்களை சேர்ப்பது பற்றி ஆய்வுக் குழுவினர் பரிசீலித்து வருகின்றனர்.
இதனால் சிறிய கடற்கொள்ளையன் பூச்சி எனப்படும் ஓரியஸ் லீவிகாட்டஸ் (Orius laevigatus) போன்றவை திரிப்கள் அல்லது தீங்கிழைக்கும் மற்ற பூச்சிகளை அதிகமாகக் கவர முடியும். சிறிய கடற்கொள்ளையன் பூச்சி வேட்டையாடுவதன் மூலம் பயிர்களை பாதுகாக்க உதவுகிறது. இது டிரிப்ஸ், சிலந்தி பூச்சிகள், வெள்ளை ஈக்கள் போன்ற சிரிய பூச்சிகளையும் அவற்றின் முட்டைகளையும் லார்வாக்களையும் உணவாக உண்கிறது.
நீடித்த நிலையான வளர்ச்சிக்கு உதவும் இயற்கை வழி பூச்சிக்கொல்லிகள்
பருத்திப் பூச்சிகள் அல்லது மலர்ப் பூச்சிகள் எனப்படும் பைரட் ஃபக் (pirate bug) திரிப் மற்றும் சிறிய பூச்சிகளைக் கட்டுப்படுத்த முன்பிருந்தே பயன்படுகின்றன. இந்த புதிய பொருளின் மக்கும் தன்மை மற்றும் ஒட்டும் தன்மை நீடிக்கும் காலம் பற்றி விஞ்ஞானிகள் ஆராய்ந்துவருகின்றனர். ஆனால் பல தோட்டப் பயிர்கள் பயிர் செய்யப்படும் பசுமை வீடுகளில் இதன் ஒட்டும் பண்பு நீடிக்கும் காலம் முக்கியப் பிரச்சனையாக இல்லை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
விலை மலிவான கழிவு எண்ணையில் இருந்தே இந்த சூழல் நட்புடைய பூச்சிக்கொல்லி தயாரிக்கப்படுகிறது. இது பாதுகாக்கப்படவேண்டிய தாவரங்களில் எந்த அளவிற்கு எவ்வளவு கால இடைவேளைகளில் பயன்படுத்தப்படவேண்டும் என்பது பற்றி ஆராயப்பட்டுவருகிறது. இந்தப் பொருளை வணிகரீதியில் உற்பத்தி செய்ய ஆய்வுக் குழுவினர் காப்புரிமை கோரியுள்ளனர். “செயற்கைப் பூச்சிக்கொல்லிகளின் பயன்பாட்டை குறைக்க இந்த கண்டுபிடிப்பு பெரிதும் உதவும்.
இயற்கை எண்ணைகள் மூலம் நோய் பரப்பும் பூச்சிகளை கட்டுப்படுத்துவதால் நீடித்த நிலையான வளர்ச்சி ஏற்படும். இந்த பூச்சிக்கொல்லி சூழல் மீதும் இலக்காகக் கொண்டிராத நச்சுத்தன்மையற்ற பூச்சிகள் மீதும் ஏற்படுத்தும் தாக்கம் பற்றி மேலும் ஆராயப்படவேண்டும். இந்தப் புதிய பொருள் நம்பிக்கயளிப்பதாக உள்ளது” என்று யு கே பூச்சிக்கொல்லி செயல்பாடு (Pesticide Action Network UK) அமைப்பின் நிக் மோல் (Nick Mole) கூறுகிறார்.
“நச்சுத் தன்மையுடைய பூச்சிக்கொல்லிகளுக்கு மாற்றான புதிய பொருட்களைக் கண்டுபிடிக்க உதவும் புதிய ஆய்வு அணுகுமுறைகள் வரவேற்கத்தக்கவை. நச்சுப் பூச்சிக்கொல்லிகளால் நம் நாட்டுப் புறங்கள் நீண்ட காலமாக நஞ்சாகிவருகிறது. இவை மகரந்த சேர்க்கை செய்யும் மற்றும் நீர் வாழ் முதுகெலும்பற்ற உயிரினங்களின் அழிவிற்குக் காரணமாகிறது.
இருந்தாலும் புதிய மாற்றுப் பொருட்கள் மற்ற இலக்காகக் கொண்டில்லாத உயிரினங்களும் முறையாக பாதுகாக்கப்படுகின்றனவா என்பதை தீவிரமாக மதிப்பீடு செயல்முறைகளுக்குப் பிறகே பதிலீடு செய்யப்படவேண்டும்” என்று முதுகெலும்பற்ற பூச்சிகளுக்கான அறக்கட்டளையின் கிரேக் மகாடம் (Craig Macadam) கூறுகிறார். “புதிய பொருட்கள் அனைத்தும் அனுமதி வழங்கும் நபர்களால் மறுக்கப்படுகின்றன என்று பயிர் வளர்ப்போர் கருதுகின்றனர். சூழலிற்கு உகந்த இவற்றிற்கு அனுமதி கோரி போராடவேண்டியுள்ளது.
நாம் வாழும் காலத்திலேயே இந்த புதிய கண்டுபிடிப்புகள் உலகை மாற்ற உதவுவது பெருமைக்குரியது” என்று கோட்ஜெர் கூறுகிறார். வருங்காலத்தில் இத்தகைய புதிய மாற்றுப் பொருட்கள் சூழலையும் மனித குலத்திற்கு உணவூட்டும் விவசாயத்தையும் ஆரோக்கியமாக வைத்திருக்க பெரிதும் உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உயிரினங்கள் சில குறிப்பிட்ட செடிகள் அல்லது அவற்றின் சாற்றைப் பிழிந்து பயன்படுத்துகின்றன. இது அவை தங்கள் ஆரோக்கியத்தை திரும்பப் பெறவே. அவை பயன்படுத்தும் வழிமுறைகள் பற்றி நமக்குத் தெரிவதில்லை. சில சமயங்களில் நாய்கள் புல் தின்பது வளர்ப்பவர்களுக்கு தெரியும். உட்கொண்ட உணவு பிடிக்காததால் அதை வாந்தி எடுத்து வெளியேற்றவே அவை இவ்வாறு செய்கின்றன.
கதி கெட்டு புலி புல் தின்கிறது என்று சொல்லப்படுவதுண்டு. கேரளாவில் இது ஒரு பழமொழி. ஒருவேளை அவை சுய டாக்டராக மாறி சிகிச்சை செய்து கொள்ளலாம். வண்ணத்துப் பூச்சிகள், அவற்றின் புழுக்கள், முதல் மனிதக் குரங்குகள் வரை இவ்வாறு சுயமாக சிகிச்சை செய்து கொள்ள பல்வேறு வழிகளை ஆராய்ந்து பின்பற்றுகின்றன.
பெரும்பாலான விலங்குகள் பச்சை இலைகளையும் தண்டுகளையும் மருந்திற்காகப் பயன்படுத்துகின்றன. 2024ல் ஒரு ஒரங்கோட்டான் தன் முகத்தில் ஏற்பட்ட காயத்திற்கு மருந்தாக ஒரு செடியின் பச்சிலை சாற்றைப் பிழிந்து தடவியது விலங்குலகின் பிரபல செய்தியாகப் பேசப்பட்டது. இந்தோனேஷியாவில் மக்கள் பயன்படுத்தும் இந்த பொருள் காயங்களைக் குணப்படுத்த, வீக்கத்தைத் தடுக்க உதவுகிறது.
கொசுக் கடியில் இருந்து தப்ப பூனைகள் மிண்ட் குடும்பத்தைச் சேர்ந்த காட்னிப் (catnip) செடியின் இலைகள் மேல் விழுந்து புரள்வதுண்டு. சிம்பன்சிகள் பச்சிலைகளை பல சமயங்களிலும் செடியில் இருந்து பறித்து அப்படியே உண்பதாக அவை பற்றி ஏராளமான உற்றுநோக்கல்களையும் பல்வேறு ஆய்வுகளையும் செய்த ஜெயின் குடோல் (jane goodall) கூறியுள்ளார்.
இந்த இலைகள் அவற்றின் கழிவுகளில் அப்படியே வெளித்தள்ளப்படுகின்றன. வயிற்றுப் பூச்சிகளை குறைக்கவே அவை இவ்வாறு செய்கின்றன என்று கண்டறியப்பட்டது. பூச்சிகளால் சகிக்க முடியாத சில வேதிப்பொருட்கள் இந்த இலைகளில் உள்ளன. இலையோடு இவற்றையும் வெளியேற்றுவது சுலபம். இதில் சில இலைகள் கரடுமுரடானவை. நுண்ணிய பூச்சிகள் அதில் ஒட்டிக் கொண்டிருக்கலாம். இந்த இலைகள் சிறிய அளவில் குடலைத் தூண்டி விடுகிறது. அதனால் இவ்வாறு நிகழ்கிறது.
பூச்சிகளும் வெளியில் தள்ளப்படுகின்றன. அட்லாண்டா எமரி (Emari) பல்கலைக்கழக ஆய்வாளர் ஜாப் டெ ரூட் (Jaap de Roode) இது பற்றி பல ஆய்வுகளை நடத்தியுள்ளார். டன்ஜானியாவில் சிம்பன்சிகள் வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்த ஒரு குறிப்பிட்ட செடியின் தண்டை சாறு பிழிந்து குடிப்பதை ஜெயின் குடோல் முதல்முதலில் கண்டறிந்தார். இது மக்களால் இதே வயிற்றுக் கோளாறுக்குப் பயன்படுத்தப்படும் மருந்து.
மோனார்க் வண்ணத்துப்பூச்சிகளும் பிஞ்ச் பறவைகளும்
மனிதக் குரங்குகள் மட்டும் இல்லாமல் பூச்சிகள், மற்ற பிராணிகள் இது போன்ற சிகிச்சை முறைகளைப் பின்பற்றுகின்றன. வண்ணத்துப் பூச்சிகளின் அரசன் என்று அழைக்கப்படும் மோனார்க் வண்ணத்துப் பூச்சிகள் எதிரிகளிடம் இருந்து பாதுகாத்துக் கொள்ள புத்திசாலித்தனத்துடன் ஒரு குறிப்பிட்ட வகை எருக்கு செடியைப் பயன்படுத்துகின்றன. இதன் இலைகளில் நச்சுத்தன்மை உள்ளது.
இந்த வண்ணத்துப்பூச்சிகள் முட்டையிடுவதும் அவற்றின் புழுக்கள் வளர்வதும் இந்த இலைகளில்தான். இதனால் மற்ற இரை பிடி உயிரினங்கள் இந்தப் புழுக்களை ஆக்ரமிப்பதில்லை. இதே பிரிவைச் சேர்ந்த வேறு எருக்கு செடி இலைகளில் இவை முட்டையிடுவதில்லை என்பது வியப்புக்குரியது.
கரடிப் புழுக்கள் (woolly bear caterpillar) ஆல்கலாய்டு போன்ற சில குறிப்பிட்ட வேதிப்பொருட்கள் அடங்கிய இலைகளை உண்டு கொசுக்களில் இருந்து தப்புகின்றன.
மர எறும்புகள் (wood ants) அல்லது தச்சர் எறும்புகள் (carpenter ants) சில குறிப்பிட்ட செடிகளில் உள்ள டானின் (tannin) என்ற சாயப் பொருளில் அடங்கியுள்ள பிசின் போன்ற பொருளை பூசி தங்கள் புற்றுகளை தொற்றுகளில் இருந்து பாதுகாக்கின்றன. செடிகள், பழங்கள், விதைகள், கொட்டைகள், காய்களில் காணப்படும் டானினில் இது அதிக அளவில் உள்ளது.
ஆடுகளில் வயிற்றுப்பூச்சித் தொல்லை அதிகமாகும்போது அவற்றுக்கு பொதுவாக விருப்பமில்லை என்றாலும் சில இலைகளை அவை உண்கின்றன.
நகர்ப்புற விரிவாக்கத்தால் பறவைகளுக்கு ஏற்படும் பாதிப்பு பற்றி ஆராய்ந்த விஞ்ஞானிகளுக்கு ஆச்சரியமூட்டும் உண்மை தெரியவந்தது. மெக்சிகோ நகரில் பிஞ்ச் (Pinch) பறவைகளின் கூடுகளில் வெளுத்த, மிருதுவான பொருட்கள் அதிக அளவில் காணப்பட்டன. இது ஆய்வாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. ஆனால் ஒரு மழை பெய்த பின் உண்மை வெளிப்பட்டது. சிகரெட்டுகளை உடைத்து தூவப்பட்டபோது கிடைத்த புகையிலைப் பொருட்களே அவை.
வாசனையில் இருந்து அது சிகரெட்டிற்குள் இருக்கும் புகையிலை என்பது உறுதியானது. தீங்கு செய்யும் உயிரினங்களை விரட்டவே பறவைகள் இவ்வாறு செய்கின்றன என்று கண்டுபிடிக்கப்பட்டது. தீங்குயிரிகளை கூடுகளுக்குள் அதிக அளவில் விட்டபோது பறவைகள் கூடுதல் சிகரெட்களை உடைத்து அதிக அளவில் புகையிலையை பரப்பிவிட்டன. பல பறவைகள் இது போல புகையிலைச் செடிகளைப் பயன்படுத்தி கூடுகளை பூச்சிகளில் இருந்து பாதுகாக்கின்றன.
உயிரினங்களுக்கு நோய்கள், தொற்றுகள், எதிரிகளின் தாக்குதல் போன்றவை பற்றி எப்படித் தெரியும்? புழு பூச்சிகள் பிராணிகள் எல்லாம் மனிதனை விட நுண்ணறிவில் தாழ்ந்த நிலையில் இருப்பதாக நாம் நினைக்கிறோம். சில குறிப்பிட்ட செடிகள், இலைகளை இந்த உயிரினங்கள் நலமுடன் வாழ பயன்படுத்துகின்றன என்று மனிதர்களாகிய நமக்குத் தெரிவதில்லை. அவை சிகிச்சை செய்து கொள்ளும் முறைகள் பற்றியும் தெரியாது.
நான்கு வகை வாசனைகளை வேறுபடுத்தி கரடிப் புழுக்களால் நுகர்ந்து அறியமுடியும். இதற்காக உள்ள உணர்வு நீட்சிகள் அவற்றுக்கு உதவுகின்றன. இதில் ஒன்றே இலைகளில் உள்ள ஆல்கலாய்டுகளை அறிய உதவுகிறது. நறுமணம் பற்றிய விவரங்கள் சமிஞ்ஞைகளின் மூலம் புழுக்களின் மூளைக்கு கொண்டு செல்லப்படுகின்றன. மூளை கட்டளையிடுவதால் அவற்றிற்கு விருப்பமில்லாத இலைகளையும் அவை உண்கின்றன.
பல உயிரினங்களும் செடிகளின் வாசனையை நுகர்தலின் மூலம் அறிகின்றன, கற்கின்றன, பரிசோதனை செய்கின்றன. செடிகளுக்கும் நோய்களுக்கும் இடையில் இருக்கும் தொடர்பைத் தெரிந்து கொள்கின்றன. சிம்பன்சிகள் போன்ற பல விலங்குகள் இத்தகைய அறிவைத் தங்களுக்குள் பகிர்ந்து கொள்கின்றன. அவை ஒரு குறிப்பிட்ட சிறப்பு முறையில் இலைகளை விழுங்குகின்றன. அவை இலைகளை ஒரு தனி ரீதியில் மடித்து எடுத்து உண்கின்றன. இதை அவை வயது முதிர்ந்தவர்களிடம் இருந்து பார்த்துத் தெரிந்து கொள்கின்றன என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
புழு பூச்சிகள் முதல் புலிகள் யானைகள் வரை இயற்கை படைத்த அணைத்து உயிரினங்களும் சிந்தித்து செயல்படும் திறனில் நம்மை விட எந்த விதத்திலும் தாழ்ந்தவை இல்லை என்பதை இந்த ஆய்வு முடிவுகள் உணர்த்துகின்றன.
மூலம்: https://www.mathrubhumi.com/technology/science/animal-self-medication-1.10504937
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
வட கொலம்பியாவில் இருக்கும் வறண்ட வெப்பமண்டல மழைக்காடுகளில் ஆய்வாளர்கள் காட்டன் டாப் டாமரிண்டு (cotton-top tamarind) என்னும் உலகின் அரிய வகை குரங்கினங்களில் ஒன்றின் வாழிடத்தை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். பல ஆண்டுகள் காட்டில் வாழ்பவரான லூயிஸ் எண்ட்ரிகே செண்டினா (Luis Enrique Centena ) இப்போது வெள்ளை மற்றும் சிவப்பு நிற உரோமங்களுடன் உள்ள காட்டன் டாப் குரங்குகளின் பாதுகாப்பிற்காக செயல்படுகிறார்.
முன்பு காட்டின் எதிரியாக இருந்த லூயிஸ் இப்போது அதன் பாதுகாவலராக உள்ளார். சுமார் ஒரு பவுண்டு அல்லது அரை கிலோகிராம் வரை மட்டுமே எடையுள்ள உலகின் மிக ஆபத்தான நிலையில் உள்ள இந்த குரங்குகள் மருத்துவ ஆய்வுகள், வன அழிவு, சட்ட விரோத வணிகத்தால் அழிவின் விளிம்பிற்கே தள்ளப்பட்டுள்ளன. 7,500 குரங்குகள் மட்டுமே இப்போது காடுகளில் உயிர் வாழ்கின்றன.
வட கொலம்பியாவில் மட்டுமே காணப்படும் இந்த இன குரங்குகளின் வாழிடப் பரப்பு 8% குறைந்துவிட்டது. மேய்ச்சல் மற்றும் மரம் வெட்டுதலே இதற்கு முக்கியக் காரணம். சான் ஹுவான் நெப்பொ மியூசினோ (San Juan Nepomuceno) குன்றில் ஒரு சிறிய பரப்பு மட்டுமே இந்த உயிரினங்களின் வாழிடமாக இப்போது உள்ளது.
முன்பு மரம் வெட்டியவர்கள், விவசாயிகள், சூழலியலாளர்கள், உயிரியலாளர்கள் இணைந்து மேனியழகிற்காக புகழ்பெற்ற இந்த குரங்குகளின் வாழிடத்தை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். “இவை குறித்து ஒருவருக்கும் தெரியவில்லை.
எந்த ஒரு நிறுவனப் பாதுகாப்பு திட்டத்திலும் இவை பற்றி பேசப்படுவதில்லை.
இது கவலையளிப்பது. இந்த இனத்தையும் இவற்றின் வாழிடத்தையும் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு இப்பணியில் பல பத்தாண்டுகளாக செயல்பட்டு வரும் சூழல் பாதுகாப்பு அமைப்பான ஃபன்டஸியான் ஓ டிட்டி திட்டத்தின் (Fundación Proyect Tití) தலைவர் ரோஸமிரா கிலன் (Rosamira Guillen) கூறுகிறார்.
“இந்த குரங்குகள் மனிதர்கள் போன்றவை. ஐந்து அல்லது ஏழு உறுப்பினர்கள் அடங்கிய நெருக்கமான குழுக்களில் வாழும் இவை சிக்கலான அழைப்புகள் மூலம் தகவல் தொடர்பு கொள்கின்றன.
வாழிட எல்லைகளை கடுமையாக பாதுகாக்கின்றன. விதைப் பரவல், மலர்களின் மகரந்த சேர்க்கை, பூச்சிக் கட்டுப்பாட்டு போன்றவற்றின் மூலம் சூழல் பாதுகாப்பில் முக்கிய பங்காற்றுகின்றன.
“இவை நம்மைப் போன்றவையே. மனிதர்களுக்குக் கற்றுத் தருகின்றன. தங்கள் இளம் வாரிசுகளை அன்புடன் கவனித்துக்கொள்கின்றன. நாம் பேசும் மொழியில் பேசுவதில்லை. இது மட்டுமே நமக்கும் இவற்றிற்கும் இடையில் உள்ள வேறுபாடு” என்று காடு மீட்பு மற்றும் ஆய்வு அறக்கட்டளையின் (foundation’s forest restoration and research team) உறுப்பினருமான லூயிஸ் கூறுகிறார். இந்த குரங்குகள் கவர்ச்சியான செல்லப் பிராணிகளாக விற்கப்படுகின்றன. முதலில் மருத்துவ ஆய்வுகளுக்காக இவை 1960 மற்றும் 70களில் யு எஸ்ஸிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டபோது இவற்றின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.
பிறகு பாரம்பரிய மேய்ச்சல், விவசாயத்திற்காக காடுகள் அழிக்கப்பட்டபோது இவற்றின் வாழிடப் பரப்பு 720,000 ஹெக்டேர்/1.8 மில்லியன் ஏக்கர்களாக சுருங்கியது. “கடத்தல்காரர்கள் குரங்குகளைப் பிடித்துத் தருபவர்களுக்கு 12 15 பவுண்ட் வரை தருகின்றனர்” என்று பத்தாண்டுகளாக கடத்தலைத் தடுக்கப் போராடுபவரும், இதுவரை 200 குரங்குகளை காப்பாற்றிய சூழல்ல் பாதுகாவலருமான ஃப்ராங்லின் காஸ்ட்ரோ (Franklin Castro) கூறுகிறார்.
ஃபண்டஸியான் அமைப்பிற்கு கிடைத்த நிதியுதவியின் மூலம் துண்டாடப்பட்ட காட்டின் ஒரு பகுதியை விலைக்கு வாங்கி மரங்களை வளர்க்கத் தொடங்கியது. “இந்த இடம் முன்பு தரிசாக இருந்தது. இப்போது ஆனால் மரங்கள் வளரத் தொடங்கியவுடன் குரங்குகள் இப்பகுதிக்கு மீண்டும் திரும்பி வந்தன. இது பரவசமூட்டுவது” என்று காடு மீட்பு அறக்கட்டளையின் மரம் வளர்ப்புத் திட்ட தலைவர் மார்சிலோ ஆர்டெகா (Marcelo Ortega) கூறுகிறார்.
இப்பகுதியில் இப்போது 120,000 மரங்கள், குத்துச்செடிகள் வளர்க்கப்பட்டுள்ளன. ஆய்வாளர்கள் குழுவில் ஆதிக்கம் செலுத்தும் ஆண் குரங்கின் முதுகில் டிரான்ஸ்மிட்டர்களைப் பொருத்துகின்றனர். களப் பணியாளர்கள் சமிஞ்ஞைகள் மூலம் காட்டில் குரங்குகளைப் பிந்தொடர்ந்து செல்கின்றனர். “நான் ஒரு உயிரியலாளர் இல்லை என்றாலும் இந்த காட்டிலிருந்தும் குரங்குகளிடம் இருந்தும் நான் நிறைய கற்றுள்ளேன். 2018 முதல் இங்கு பணிபுரிகிறேன்.
நான் செய்த தவறுகளை சரி செய்ய இன்னும் பத்தாண்டுகள் ஆகும்” என்று லூயிஸ் கூறுகிறார். 2012-2013க்குப் பிறகு இந்த உயிரினங்களின் கணக்கெடுப்பு விரைவில் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த குரங்குகளை காப்பது இங்கு வாழும் அரிய வகை ஆமைகள், கறுப்பு சிலந்திக் குரங்குகள், டூக்கன்கள் (toucans) என்ன்று அழைக்கப்படும் ஒரு வகைப் பழம் தின்னும் பறவைகள் மற்றும் டமான்யுயஸ் (tamanduas) என்று அழைக்கப்படும் ஒரு வகை எறும்புத் தின்னி பிராணிகளை பாதுகாப்பதற்கு உதவும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். காடுகள் மீட்கப்பட்டால் நாமும் பேரழிவுகளில் இருந்து மீட்கப்படுவோம் என்பதற்கு இந்த முயற்சிகள் ஒரு தலைசிறந்த எடுத்துக்காட்டு.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- மியாவ்… மியாவ்… பூனைகள் பாவப்பட்ட உயிரினங்கள் இல்லை
- வன உயிரினங்களின் தியேட்டர்
- மெல்ல வளரும் மரங்கள்
- நிறம் மாறும் பூச்சிகளின் இறக்கைகள்
- என்று மாறும் இவற்றின் தலைவிதி?
- கண்டுபிடிக்கப்படும் முன்பே காணாமல் போய்விடுமா?
- வாட் ஈஸ் திஸ்!? திஸ் ஒரு ஈ!
- இரத்தக் கண்ணீர் வடிக்கும் அதிசய உயிரினம்
- உயிருள்ளவை காகித உறைகளில்... உயிரற்றவை பனிக்கட்டிப் பெட்டியில்...
- இந்த கடல் வாழ் ஜெண்டில்மேன்களை யார் காப்பாற்றுவார்!?
- ஒரு துப்பறியும் கதை போல அழியும் பறவைகளைத் தேடி
- இளம் மரங்களை காக்கும் பனித் துளிகள்
- இரும்புப் பூச்சு பற்களுடன் கமோடோ டிராகன்
- விலங்குகளின் வாழ்க்கையைப் பாதிக்கும் மருந்துப் பொருட்கள் மாசு
- அத்தி மரத்தின் அதிசய மகரந்தச் சேர்க்கை
- உயிர்ப் பன்மயத் தன்மையை அழிக்கும் ஆக்கிரமிப்பு உயிரினங்கள்
- மரம் நட்டால் உயிர்ப் பன்மயத் தன்மை அழிந்து போகுமா?
- தாவர, விலங்குகள் போல பூஞ்சைகளுக்கும் உரிய மரியாதை
- ஒளிரும் பாலூட்டிகள்
- ஆஹா ஹா
✍️ எழுத்தாளர்களின் கவனத்திற்கு
கீற்றில் தங்களது படைப்புகளை / இதழ்களை வெளியிட விரும்பினால், அவற்றை யுனிகோட் எழுத்துருவில் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பவும்.
வேறு எந்த இணையதளத்திலும் வெளிவராத படைப்புகள் மட்டுமே பதிவேற்றத்திற்குப் பரிசீலிக்கப்படும்.