கீற்றில் தேட...
அறிவியல் ஆயிரம்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கரடிகள் இன்று எதிர்கொள்ளும் முக்கிய அச்சுறுத்தல் மனிதர்கள் மூலம் நடைபெறும் வேட்டையாடலே. பெரும்பாலான கரடி வகைகளும் இன்று சர்வதேச இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் (IUCN) பட்டியலின்படி இன அழிவைச் சந்திக்கின்றன. மார்ச் 23 சர்வதேச கரடிகள் தினம் கொண்டாடப்படுகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் கரடிகளை வேட்டையாடுவது தடை செய்யப்பட்டுள்ளது என்றாலும் இன்றும் அது தொடர்கிறது.
செல்லப்பிராணிகள் வணிகத்திலும் கரடிகள் பெருமளவில் விற்பனைப் பொருளாக்கப்படுகின்றன. துருவப்பகுதிகளில் பனி உருகுவதால் இவை வேட்டையாட முடியாமல் பட்டினி கிடக்க நேரிடுகின்றன. அமெரிக்காவில் வாழிட இழப்பினால் இவை பாதிக்கப்பட்டுள்ளன. சிறிய வாலுள்ள ஊண் உண்ணிகளான இவை அமெரிக்கா, ஐரோப்பா, ஆசியாவில் காணப்படுகின்றன.
இவற்றில் மிகச்சிறிய இனம் சன் கரடிகள் (Sun bear). இவற்றின் எடை ஐம்பது கிலோவிற்கும் குறைவானது. மிகப்பெரியவை துருவக்கரடிகள் (Polar bear) மற்றும் கோடியாக் கரடிகள் (Kodiak bear). இவற்றின் உடல் எடை 720 கிலோ வரை. கரடிகள் எட்டு இனங்களில் காணப்படுகின்றன. இதில் கருங்கரடிகள் அமெரிக்கா, கனடாவில் அதிகமாக வாழ்கின்றன.பாண்டாவும் கரடியும்
பொதுவாக தாவர உண்ணிகள் என்றாலும் துருவக்கரடிகள் போன்றவை சீல்-ஐ உணவாக உட்கொள்கின்றன. ராட்சச பாண்டாக்களுக்கும் (giant panda) கரடிகளுக்கும் இடையில் பரிணாமரீதியில் சொந்தம் உண்டு என்று கருதப்படுகிறது. சீனாவில் மட்டுமே வாழும் இந்த வகை பாண்டாக்கள் மூங்கிலையே உணவாக உண்கின்றன. பார்ப்பதற்கு பருமனான உடலமைப்பைக் கொண்டிருந்தாலும் இவற்றால் வேகமாக இடம் பெயர முடியும்.
மோப்பம் பிடித்தே கரடிகள் இரை தேடுகின்றன. இரையைத் தாக்குவதில் கருங்கரடிகள் மின்னல் வேகத்தில் செயல்படுகின்றன. கரடிகள் சிறந்த நீச்சல்காரர்கள். எடுத்துக்காட்டு துருவக்கரடிகள். ஆபத்து வந்தால் முனகுவது போன்ற ஒலி எழுப்பும் என்றாலும், ஓசைகள் வழியே தகவல் பரிமாற்றம் செய்து கொள்வது இவற்றிடம் குறைவாகவே காணப்படுகிறது. இரை தேடும்போதும் இது போல ஓசைகளை எழுப்புவதுண்டு. மீன்கள், சீல்கள், பன்றிகள் போன்றவை இவற்றின் முக்கிய உணவு.
குகை உறக்கம்
சன் கரடிகள் தேனை விரும்பிக் குடிக்கும் இயல்புடையவை என்பதால் இவை தேன் கரடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன. அமெரிக்கன், ஏசியாட்டிக் (Asiotic bear) குளிர்காலத்தில் வயிறு நிறைய உணவு உண்ட பிறகு குகைகளில் நீண்ட உறக்கத்தில் ஆழ்கின்றன. ஆண் கரடிகள் இணை சேர்ந்த பின் பெண் கரடிகளை விட்டுவிட்டு சென்று விடுகின்றன.
பிறகு குட்டிகளை வளர்க்கும் வேலையை பெண் கரடியே செய்கிறது. ஆண்டிற்கு ஒரு முறை பிரசவம் நடக்கிறது. ஆனால் பெரும்பாலான கரடி இனங்களிலும் மூன்று, நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மட்டுமே பிரசவம் நடக்கிறது. பிறக்கும் கரடிக் குட்டிகளின் உடல் எடை அரை கிலோகிராம் மட்டுமே. பெரும்பாலும் இரட்டைகளாகவே பிறக்கின்றன. என்றாலும் ஒரு பிரசவத்தில் ஐந்து குட்டிகள் வரை பிறக்கின்றன.
குட்டிக்கரடிகள் அடுத்த பிரசவம் நடக்கும்வரை தாய்க்கரடியுடன் வாழ்கின்றன. குட்டிகள் மூன்று முதல் ஆறு ஆண்டுகளில் வயதுக்கு வருகின்றன. ஆறு மாத வயதில் தனியாக நிற்கப் பழகிக் கொள்கின்றன. இயற்கையான வாழிடங்களில் 15 முதல் 30 ஆண்டுகள் வரை வாழும் இவை பாதுகாக்கப்பட்ட சூழ்நிலையில் அதிக காலம் உயிர் வாழ்கின்றன.
அதிக உணவு உண்ணும் இயல்புடைய பெரிய உடலமைப்பு கொண்ட கரடிகளுக்கு இயற்கை எதிரிகள் இல்லை. குட்டிக்கரடிகள், குள்ளநரிகள் போன்ற விலங்குகளுக்கு இரையாவதுண்டு. உணவு கிடைப்பதைப் பொறுத்தே இவற்றின் வாழிட எல்லை அமைகிறது. உணவு கிடைக்கும் இடத்தின் பரப்பு குறைவாக இருந்தால் இவற்றின் வாழிட எல்லையின் பரப்பும் அதிகரிக்கும். சிறிய வயதில் பிடித்து வரப்படும் கரடிகளை பழக்கப்படுத்துவது எளிது. ஒரு காலத்தில் இவற்றை சர்க்கஸ்களில் தாராளமாகக் காண முடிந்தது.
ஐரோப்பிய பழுப்பு கரடிகள் (Eurasian brown bear) மற்றும் அமெரிக்கன் கருங்கரடிகள் போன்றவை மனிதர்களைத் தாக்கியுள்ளன. ஏசியாட்டிக் கரடிகள், அமெரிக்கன் கருங்கரடிகள் போன்றவை வயல்களை நாசப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. துணிவகைகளைத் தயாரிக்க இவற்றின் தோல் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது.
பெண் கரடிகளை விட ஆண் கரடிகள் அளவில் பெரியவை. பனிப்பாறைகளில் காலூன்றி நடக்க வசதியாக துருவக்கரடிகளின் பாதத்தின் அடிப்பகுதியில் உரோமங்கள் உள்ளன. இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்தின் பட்டியல்படி அமெரிக்கன் கருங்கரடிகள் மற்றும் பழுப்பு கரடிகள் அழியும் ஆபத்தைக் குறைவாக எதிர்கொள்கின்றன.
இந்தியாவில் கரடிகளின் நிலை
இந்தியாவில் ஏசியாட்டிக் கருங்கரடிகள் (Asiotic Black), சோம்பல் கரடிகள் (Sloth bear), சன் கரடிகள் மற்றும் இமாலயப் பழுப்பு கரடிகள் என்று நான்கு வகைகள் காணப்படுகின்றன. இவை 1972 வன விலங்குகள் பாதுகாப்புச் சட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் பித்தநீர் (bear bile) மருந்து போன்றவற்றின் உற்பத்திக்குப் பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவில் உள்ள நான்கு கரடி வகைகளும் இன அழிவை எதிர்கொள்கின்றன. 2011 முதல் சர்வதேச துருவக்கரடிகள் பாதுகாப்பு தினம் கொண்டாடப்படுகிறது. வன உயிரி பாதுகாப்பு அமைப்பு (wild life S O S) இயற்கை வளப் பாதுகாப்பு சங்கத்துடன் இணைந்து 2022ல் இந்தியாவில் சோம்பல் கரடிகள் பாதுகாப்பு தினத்தைக் கொண்டாடியது. அக்டோபர் 12 சர்வதேச சோம்பல் கரடிகள் பாதுகாப்பு தினம். சோம்பல் கரடிகள் இந்தியக் கரடிகள் என்றும் அழைக்கப்படுகின்றன.
இயற்கையின் அதிசய படைப்புகளில் ஒன்றான கரடிகளை அழியாமல் பாதுகாப்போம்.
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
உலகில் மிக விலையுயர்ந்த, தேவை அதிகம் உள்ள, உணவுடன் சேர்க்கப்படும் பொருட்களில் ஒன்றே வெள்ளை டிரஃபிள் (White truffle) எனப்படும் இந்தப் பூஞ்சை. இந்த அதிசயப் பூஞ்சை தெற்கு ஐரோப்பாவில் காணப்படுகிறது. இது மிக அதிக நறுமணம் மற்றும் தீவிர ருசிக்குப் புகழ் பெற்றது. டுயூபரேசி என்ற பூஞ்சைக் குடும்பத்தில் டியூபர் மக்னாட்டம் (Tuber magnatum) என்ற அறிவியல் பெயருடைய இது வெள்ளை டிரஃபிள் என்று பொதுவாக அழைக்கப்படுகிறது.
ஐந்து அங்குலம் வரை வளரும் இவை அரை கிலோ வரை எடை உடையவை. 2009ல் ஒரு கிலோ பூஞ்சை பத்து இலட்சத்திற்கும் மேல் விலை விற்றது. 1.9 கிலோ வரை எடையுள்ள பூஞ்சை 2021ல் நியூயார்க்கில் 50.68 இலட்சம் ரூபாய்க்கு ஏலம் போனது. மண்ணில் ஒருசில அங்குலம் முதல் அரை மீட்டர் வரை ஆழத்தில் வளரும் இதை கண்டுபிடிப்பது மிகக் கடினம்.
அக்டோபர் முதல் டிசம்பர் மாதம் வரை மட்டுமே இவற்றை காடுகளில் இருந்து சேகரிக்க முடியும். ஓக், அசல் நட், ஓக்லர் போன்ற மரங்களின் அடியில் வேர்களில் இருந்து சத்துகளை எடுத்துக் கொண்டு பூமிக்கடியில் வளரும். இவை வளரும் மரத்தைப் பொறுத்து இவற்றின் வாசனை வேறுபடும். சிறப்புப் பயிற்சி கொடுக்கப்பட்ட நாய்களைக் கொண்டே இப்பூஞ்சை கண்டுபிடிக்கப்படுகிறது.
நாய்களுக்கு சிறு வயது முதலே பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இதற்காக நாய்க்குட்டி பால் குடிக்க ஆரம்பிக்கும்போது தாய் நாயின் முளைக்காம்பில் டிரஃபிள் தடவி குட்டிக்கு அதன் வாசனை கற்றுத் தரப்படுகிறது. முன்பு பூஞ்சையைத் தேட பன்றிகளும் பயன்படுத்தப்பட்டன. பூஞ்சை கிடைத்தால் பன்றி அதைத் தின்னாமல் இருக்க அதன் மூக்கைச் சுற்றி ஒரு வளையம் பொருத்தப்படும். பூஞ்சை கிடைக்குமிடத்தை ஒவ்வொருவரும் பரம இரகசியமாகப் பாதுகாக்கின்றனர்.ஏன் விலைமதிப்புமிக்கது?
இது அபூர்வமானது, கிடைப்பதற்கரியது. சில மாதங்கள் மட்டுமே கிடைக்கும். தேவை மிக அதிகம். இதனால் இது விலை மதிப்புமிக்கது. இத்தாலியில் அவாலக்ன என்ற இடத்தில் ஆண்டுதோறும் மூன்று முறை இதற்காக திருவிழாக்கள் நடக்கின்றன. நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பூஞ்சையில் மூன்றில் இரண்டு பங்கு இங்கு கிடைக்கிறது. இங்கிருந்து ஜெர்மனி, பெல்ஜியம், ஹாலந்து, பிரான்ஸ், அமெரிக்கா, கனடாவிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
ஆண்டுதோறும் நடக்கும் இதற்கான தேசீய கண்காட்சியில் (National truffle fair) இதைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் ஏராளமான பொருட்கள் கிடைக்கும். இத்தாலியின் பிரபல சமையல் நிபுணர்கள் இங்கு வந்து நேரடியாக சமையல் காட்சிகளை (cooking shows) நடத்துகின்றனர். இது இத்தாலியில் நடைபெறும் ஒரு முக்கிய விவசாயத் திருவிழா.
வரலாற்றுச் சிறப்புகள்
நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக இத்தாலி, பிரான்சில் சமையலிற்குப் பயன்படுத்தப்பட்டு வரும் இப்பூஞ்சை ரோமாபுரி காலத்திலேயே பிரமுகர்களுக்கு மிகப் பிடித்த ஒன்று என்று நேச்சராலிஸ் ஹிஸ்ட்டாரிகா என்ற நூல் கூறுகிறது. இது விருதாகவும் வழங்கப்பட்டது. மத்திய காலகட்டத்தில் போப் மற்றும் உயர் அதிகாரிகளிடம் இருந்து சலுகைகளைப் பெற முனிசிபாலிட்டிகள் அவர்களுக்கு இதைப் பரிசாகக் கொடுத்தனர்.
சமையல் சிறப்புகளும் மருத்துவ குணங்களும்
பாஸ்தா, ரிஸோட்டோ, முட்டை, இறைச்சி போன்ற உணவு வகைகளில் சுவையூட்ட இது சிறிய அளவில் சேர்க்கப்படுகிறது. சமையல் பயன் தவிர, மருத்துவ குணங்களிலும் இது சிறந்து விளங்குகிறது. வீக்கத்திற்கு நிவாரணியாக, செரிமானத்தை மேம்படுத்த, நோய் எதிர்ப்பாற்றல் பெற உதவுகிறது. இதில் அதிக அளவு நீர்ச்சத்து, தாதுக்கள், மாவுச்சத்து, நார்ச்சத்து உள்ளது. ஆண்டி ஆக்சிடெண்ட் குணமுடையது. சமைத்து முடித்த பிறகு சுரண்டி எடுக்கப்படும் இதை மறுபடியும் வேக வைக்க வேண்டியதில்லை.
அதிக காலத்துக்கு இதைப் பாதுகாத்து வைக்க முடியாது. சேகரித்தவுடன் விற்பனை செய்ய வேண்டும். முன்பு இது எவ்வாறு உருவாகிறது என்பது பற்றி உறுதியான கருத்துகள் இல்லை. புராதன கிரேக்கர்கள், கிரேக்கக் கடவுள் சியூஸ் தேவன் மிக சக்தி வாய்ந்த மின்னல்களை பூமிக்கடியில் அனுப்பும்போதே இது உருவானது என்று நம்பினர். சமீபத்தில் போஸ்னியா ஹெக்ஸோகொவினா பிரதேசத்தில் இது பெருமளவில் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. இதற்கான தேடல் ஜனரஞ்சகமான ஒரு நிகழ்வாக மாறியது.
பயிர் செய்ய முடியுமா?
இதற்கிடையில் பிரான்ஸில் 2022ல் இதை பயிர் செய்ய எடுக்கப்பட்ட முயற்சிகள் வெற்றி பெற்றன என்று செய்திகள் கூறின. தங்கத்தின் பாதி விலையுள்ள, நாய்களால் மட்டுமே கண்டு பிடிக்கப்படக் கூடிய இந்த அதிஅற்புதமான பூஞ்சை பலவகையான அக்கிரமங்களுக்கும் கொள்ளைகளுக்கும் காரணமாவதுண்டு.
பயிற்சி பெற்ற நாய்களை கடத்திக் கொண்டு போய் அவற்றை நஞ்சு வைத்துக் கொல்ல வாய்ப்பு உள்ளதால், அவற்றிற்கு அதி உயர் பாதுகாப்பு வழங்கப்படுகிறது. இதைத் தேடிக் கண்டுபிடிக்க அதிக பயிற்சி தேவை. இதனால் இதற்குரிய திறமைகள் தலைமுறைகள் கடந்து இரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது. சிறிய வயது முதலே குழந்தைகளுக்கு இதற்கான பயிற்சிகள் கொடுக்கப்படுகின்றன. இந்த பூஞ்சையைக் கண்டுபிடிப்பதற்குள்ள சாத்தியக்கூறில் மூன்றில் ஒரு பகுதி நாயுடையது. மற்றொரு பகுதி தேடும் மனிதருடையது. இன்னுமொரு பகுதி அந்தப் பிரதேசத்தின் இயல்பைப் பொறுத்தது.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
15 டிகிரி செல்சியஸில் நுண் பிளாஸ்டிக்குகளை உண்ணும் பாக்டீரியா மற்றும் பூஞ்சை நுண்ணுயிரிகளை ஆல்ப்ஸ் மற்றும் ஆர்க்டிக்கில் இருந்து விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். பிளாஸ்டிக் பொருட்களின் மறுசுழற்சியில் இது திருப்புமுனையாக அமையும் என்று நம்பப்படுகிறது. இது போன்ற பல நுண்ணுயிரிகள் முன்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளன என்றாலும் அவை 30 டிகிரி செல்சியஸிற்கும் கூடுதலான வெப்பநிலையில் மட்டுமே இயங்குபவை.
இந்த நுண்ணுயிரிகள் தொழிற்சாலைகளில் இவற்றைப் பயன்படுத்த அதிக வெப்பநிலை தேவைப்படுகிறது. இது அதிக செலவு பிடிக்கக் கூடியது. தொழிற்சாலை நடைமுறையில் இது கார்பன் நடுநிலைத் தன்மையற்றது. ஆனால் இப்போடு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது பிளாஸ்டிக் மறுசுழற்சியில் புதிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகிறது.பாக்டீரியாக்களும் பூஞ்சைகளும்
சுவிஸ் பெடரல் கழகத்தின் (WSL) விஞ்ஞானிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இது பற்றிய ஆய்வுக் கட்டுரை, Frontiers in microbiology என்ற ஆய்விதழில் சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. சுவிஸ் கழகத்தின் டாக்டர் ஜோல் ரூத்தை (Dr Joel Ruthi) மற்றும் அவரது குழுவினர் 19 பாக்டீரியா, 15 பூஞ்சை மாதிரிகளை க்ரீன்லாந்து, ஸ்வால்பார்டு (Svalbard) மற்றும் சுவிட்சர்லாந்தில் ஓராண்டு காலம் மண்ணில் புதைந்திருந்த பிளாஸ்டிக் பொருட்களில் வளர்த்து ஆராய்ந்தனர்.
திசு வளர்ப்புத் தொழில்நுட்பத்தின் மூலம் நுண்ணுயிரிகள் உட்கொள்ளும் பல்வேறு வகை நுண் பிளாஸ்டிக்குகள் ஆராயப்பட்டன. இந்த நுண்ணுயிரிகள் 13 ஜெனரா (13 genera) வகையைச் சேர்ந்த பைலோ ஆக்டினோ பாக்டீரியா (Phyla actinobacteria), ப்ரோட்டோ பாக்டீரியா (Proteobacteria) ஆகிய பாக்டீரியா வகைகளைச் சேர்ந்தவை.
10 ஜெனரா வகையைச் சேர்ந்த பைலோ அஸ்காமிகோடா (Phyla ascomycota), மியூக்கோராமிகோடா (Mucoromycota) பூஞ்சையினங்களும் ஆய்விற்குப் பயன்படுத்தப்பட்டன.
பிளாஸ்டிக் வகைகள்
மக்கும் தன்மையற்ற பாலி எத்திலீன் (PE), மக்கும் தன்மையுடைய பாலியெஸ்ட்டர், பாலி யூரித்தேன் (Poly Urethane PUR) மற்றும் வணிகரீதியாகக் கிடைக்கும் பாலி ப்யூட்டிலின் அடிபேட் தெரிஃப்ப்தேலேட் (Polybutylene adipate terephthalate PBAT) பாலி லேக்டிக் அமிலம் (PLA) ஆகியவை கலந்த கலவை பயன்படுத்தப்பட்டன.
எந்த நுண்ணுயிரி வகையும் 126 நாட்கள் வைக்கப்பட்டிருந்த பிறகும் பாலி எத்திலீனை மக்கச் செய்யவில்லை. ஆனால் ஆராயப்பட்டதில் 56% நுண்ணுயிரிகள் அதாவது 11 பாக்டீரியாக்கள் மற்றும் 9 பூஞ்சையினங்கள் 15 டிகிரி செல்சியஸில் பாலி யூரித்தேன் பிளாஸ்டிக்குகளை உண்டன. 14 பூஞ்சைகள், 3 பாக்டீரியாக்கள் பாலி ப்யூட்டிலீன் அடிபேட் தெராஃப்ப்தலேட் மற்றும் பாலி லேக்டிக் அமிலம் கலந்த பிளாஸ்டிக் கலவையை உட்கொண்டன.
குறைந்த செலவில் மறுசுழற்சி
இதன் மூலம் நொதித்தலால் நடைபெறும் பிளாஸ்டிக் மறுசுழற்சிக்கு ஆகும் செலவு மற்றும் சூழல் பாதிப்பைக் குறைக்க முடியும் என்று கருதப்படுகிறது. ஆராயப்பட்ட மாதிரிகளில் பெரும்பாலானவை ஏதேனும் ஒரு வகை நுண் பிளாஸ்டிக்கை உட்கொண்டன. மேலும் விஞ்ஞானிகள் Nneodevriesia, Lachnellula ஆகிய பூஞ்சையினங்கள் பாலி எத்திலீனை தவிர மற்ற எல்லா வகை நுண் பிளாஸ்டிக்குகளையும் உட்கொள்கின்றன என்று கண்டறிந்தனர்.
1950களில் இருந்தே பிளாஸ்டிக்குகள் அதிகம் பயன்படுத்தப்படுகின்றன. தாவர செல்களில் இருக்கும் சில அமைப்புகளை நுண்ணுயிரிகள் ஒத்திருப்பதால் அவை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்கின்றன. தாவர செல் சுவர்களை உடைக்கும் செயலின்போது நுண்ணுயிரிகள் பாலிமர்களை மக்கச் செய்யும் நொதிகளை உற்பத்தி செய்கின்றன என்று ஆய்வுக்கட்டுரையின் இணை ஆசிரியர்களில் ஒருவரான டாக்டர் பீட் ஃப்ரே (Dr Beat Frey) கூறுகிறார்.
பாலிஸ்ட்டர்களை மக்க வைக்கும் பூஞ்சைகள்
தாவரங்களில் கிருமிகளை உண்டாக்கும் பூஞ்சைகள் பாலிஸ்ட்டர்களை மக்க வைக்கின்றன. இப்பூஞ்சைகள் க்யூட்டினேசிஸ் (Cutinases) என்னும் பொருளை உற்பத்தி செய்யும் திறண் பெற்றுள்ளன. இது தாவரங்களில் இருக்கும் க்யூட்டின் போன்ற பாலிமரை ஒத்திருப்பதால் இவை பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்கின்றன. இந்த நுண்ணுயிரிகள் 4 முதல் 20 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை வரை நன்கு வேலை செய்கின்றன.
பிளாஸ்டிக்குகளை மக்கச் செய்யும் நொதிகளை அதிக அளவில் உற்பத்தி செய்யும் நுண்ணுயிரி வகைகளை கண்டுபிடிக்கும் தீவிர முயற்சியில் விஞ்ஞானிகள் இப்போது ஈடுபட்டுள்ளனர். சூழலிற்கு பாதிப்பை ஏற்படுத்தாத இது போன்ற கண்டுபிடிப்புகள் வருங்காலத்தில் ப்ளாஸ்டிக் மாசைப் பெருமளவில் குறைக்க உதவும் என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
மேற்கோள்: https://www.theguardian.com/science/2023/may/10/microbes-digest-plastics-low-temperatures-recycling?
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- விவரங்கள்
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- பிரிவு: இயற்கை & காட்டுயிர்கள்
கோஸ்ட்டரிக்காவில் 16 ஆண்டுகள் ஆண் துணையில்லாமல் வாழும் கன்னி முதலை முட்டையிட்டிருப்பதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இந்த முட்டை 99.9% தாயின் மரபியல் அம்சங்களுடன் கூடிய முழு வளர்ச்சி அடைந்த கருவுடன் உள்ளது. விஞ்ஞானிகளுக்கு வியப்பை ஏற்படுத்தியுள்ள இது பற்றிய ஆய்வுக்கட்டுரை உயிரியல் கடிதங்கள் (Journal Biology letters) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
டைனசோர் முட்டை
முதலைகளின் பொதுவான மூதாதையர்களான டைனசோர்களும் ஒரு காலத்தில் இவ்வாறே ஆணின் துணையில்லாமல் முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்திருக்கலாம் என்று ஆய்வாளர்கள் நம்புகின்றனர். இவ்வாறு சுயமாக இனப்பெருக்கம் செய்வது Facultative parthenogenesis என்று அழைக்கப்படுகிறது. பறவைகள், மீன்கள், பல்லிகள், பாம்புகளின் சில இனங்களில் கன்னித் தன்மையுடன் புதிய வாரிசுகள் உருவாகியுள்ளது பற்றி முன்பே அறியப்பட்டுள்ளது. ஆனால் முதலையினத்தில் இது நிகழ்வது இதுவே முதல்முறை.ஆண் இனத்தின் விந்தணு உதவியில்லாமல் முட்டை கருவுறுவதையே இந்த நிகழ்வு குறிக்கிறது. க்ராக்கடிலஸ் அக்யூக்கஸ் (Croccodylus Acucus) என்ற இந்த முதலை இரண்டு வயதாக இருக்கும்போது பிடிக்கப்பட்டு கோஸ்ட்டரிக்கா விலங்கு காட்சி சாலைக்கு கொண்டு வரப்பட்டது. கடந்த 16 ஆண்டுகளாக இது தனிமையில் வாழ்கிறது.
பதினான்கில் ஒன்று
2018 ஜனவரியில் காட்சி சாலை ஊழியர்கள் முதலை வாழும் இடத்தில் 14 முட்டைகளைக் கண்டுபிடித்தனர். இவை எவையும் பொரியவில்லை. ஆனால் ஒரு முட்டை முழு வளர்ச்சியடைந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.
கருவில் இருந்த உயிரியின் இதயத்திசுக்கள் தாயின் ஓட்டில் உள்ள செல்களுடன் ஒப்பிட்டு மரபியல் ரீதியாக ஆராயப்பட்டது. கருவில் இருந்த சிசு தாயைப் போலவே 99.9% ஒத்திருந்தது. இதன் மூலம் ஆண் துணையில்லாமலேயே இந்த கரு முட்டை உருவாகியிருப்பது உறுதி செய்யப்பட்டது. ஆய்வாளர்களுக்கு இது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
இவ்வகை சுய இனப்பெருக்கம் மிக அரிதாகவே நடக்கிறது என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். ஒரு உயிரினம் சாதகமற்ற சவால்கள் நிறைந்த சூழ்நிலையில் வாழும்போது இணையில்லாத நிலை மற்றும் சுற்றுச்சூழல் அழுத்தத்திற்கு ஆளாகின்றன. அப்போது இந்த அரிய நிகழ்வு நிகழ்கிறது என்று விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.
- சிதம்பரம் இரவிச்சந்திரன்
- சிங்க வேட்டை
- தவளைகள் பலவிதம்
- பூமியின் வரைபடத்தில் இல்லாத இடங்கள் தேடி...
- ஆதிவாசி மக்களுக்காக விறகொடிக்கும் யானைகள்
- அழிவில் இருந்து மீண்டு வந்த அரேபியாவின் மான்
- மீன்களுக்கும் உணர்வுகள் உண்டு
- வேட்டையாடும் நாடுகள்
- சிவப்புப் பட்டியல்
- மகரந்த சேர்க்கை குறைபாடும், மனித உயிரிழப்புகளும்
- வலசை என்னும் அதிசயம்
- மகாவா என்ற மகத்தான எலி
- ஜப்பானில் புதிய மலர்
- வனவிலங்குகளும், பயிர் பாதுகாப்பும்
- காளான்கள்
- வண்ணத்துப் பூச்சிகளுடன் ஒரு பயணம்
- முதலில் பீதியை ஏற்படுத்தியவன் பிறகு ஹீரோவான கதை
- ஏழைகளின் மரம்
- ஆகாய வயலில் இருந்து ஓர் அற்புத அறுவடை
- ஆண்டீஸ் மலையில் ஒரு புதிய பல்லி இனம் கண்டுபிடிப்பு
- அண்டார்க்டிகாவில் அழியும் எம்பரெர் பெங்குயின்கள்