Keetru "மறந்து கொண்டே இருப்பது
 மக்களின் இயல்பு
 நினைவுபடுத்தித் தூண்டிக் கொண்டே
 இருப்பது எம் கடமை"
KeetruDheemtharikida
Bharathi
Dheemtharikida


ஞாநி கட்டுரைகள்

1. கவலைகள் ஓய்வதில்லை!

2. பணமா? மனமா?

3. பதில்களைத் தேடும் கேள்விகள்!

4. அடுத்த ஜனாதிபதி?!

5. பாரதி 125

6. சசிகலா நிதி அமைச்சர்... கனிமொழி கல்வி அமைச்சர்?!

7. வைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்

8. கல்விப் புரட்சி

9. எது நீதி? எது நியாயம்?

10. மூன்று பெண்கள்... மூன்று பாடம்!

11. காதலிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்

***********

சிலிர்ப்பு நரம்பைத் தேடி: பாஸ்கர் சக்தி

ஏப்ரல் 06 இதழ்

மே 06 இதழ்

ஜூன் 06 இதழ்

ஜூலை 06 இதழ்

செப்டம்பர் 06 இதழ்

நவம்பர் 06 இதழ்

ஓ போடு இயக்கம்

***********

ஆசிரியர்: ஞாநி

பொறுப்பாசிரியர்: பாஸ்கர் சக்தி

தயாரிப்பு நிர்வாகி:
கா. பாலமுருகன்

நிர்வாக உதவி: கே.விஜயகுமார், க.வெங்கடேசன், கே.சித்ரா, லெனின்பாரதி

தொடர்புக்கு: ஞானபாநு பதிப்பகம்,
22, பத்திரிகையாளர்
குடியிருப்பு, சென்னை - 41.
Email: dheemtharikida@
hotmail.com




கட்டுரை
ஞாநி

வைகோ ஒரு சைகோ அனாலிசிஸ்

‘மீடியா டிலைட்’ என்று ஆங்கிலத்தில் சொல்வார்கள். அதாவது, செய்திகள் டல்லாக இருக்கக்கூடிய சூழலில்கூட, இவர்களின் பங்கேற்பு கலகலப்பை ஏற்படுத்திவிடும். அப்படிப் பட்ட மிகச் சிலரில் வைகோ என்று தன் பெயரைச் சுருக்கிக் கொண்ட வை.கோபால்சாமியும் ஒருவர்!

தமிழ்நாட்டில், கடந்த முப்பது வருடங்களில் அரசியல் மேடையில் சிறந்த பேச்சாளர் என்று பட்டியல் போட்டால், இரண்டே பேர்தான் தேறுவார்கள். ஒருவர் கருணாநிதி, இன்னொருவர் வைகோ.

இருவரும் ஒருவர் இன்னொருவரை அவுட் ஆக்க முயற்சிக்கும் அரசியல் விளையாட்டில் அடுத்த ரவுண்ட்தான் இப்போது நடந்து வருகிறது. சேம் சைட் கோல் போடக் கூடிய இரண்டு பேரை (எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன்) தன் அணியில் வைத்திருப்பதுதான் வைகோவின் பலவீனம்; கருணாநிதியின் பலம்!

வைகோ ஒரு சிறந்த உற்சவமூர்த்தி என்பதை கருணாநிதி முதல் செஞ்சியார் வரை, பிரபாகரன் முதல் நெடுமாறன் வரை எல்லாரும் அறிவார்கள். ஆனால், எப்போதுமே கோயில்களில் உற்சவமூர்த்தி வேறு; மூலவர் வேறு. மூலவர்களுக்குத்தான் பாலபிஷேகம் முதல் உண்டியல் வசூல் வரை எல்லாமே! உற்சவர்கள் கற்பூர ஆரத்திகளுடன் திருப்தி அடைய வேண்டியதுதான்!

வைகோவை மூலவராக் கிப் பார்க்கத் திட்டமிட்ட வர்களில் ஒரு பிரிவினர்தான், இப்போது அவரால் வசூல் நடக்காது என்ற நிலையில் ‘சீச்சி, இந்தச் சாமிக்கு சக்தி இல்லை’ என்று வேறு கோயி லில் பூசாரி வேலைக்கு மனு போட்டுக்கொண்டு இருக்கிறார்கள்.

அரசியலில் ஏன் இன்னும் வைகோவால் மூலவராக முடியவில்லை? காரணம் மிக எளிது. பக்தன்தான் உணர்ச்சி வசப்படலாமே தவிர, சாமியே உணர்ச்சிவசப்பட்டால் கோயில் தாங்காது. அவருடைய உணர்ச்சிப் பிரவாகத்தை மேடைகளில் பலர் பார்த்திருக்கலாம். தனியே நான் ஒரு முறை தரிசித் தேன்.

வி.பி.சிங், 1987 ல் ராஜீவிடமிருந்து விலகியது முதல் 1990 ல் அவர் மண்டல் கமிஷன் நிறைவேற் றத்துக்காக பி.ஜே.பி யால் பிரதமர் பதவியிலிருந்து கவிழ்க்கப்பட்டது வரை, அவரைத் தீவிரமாக ஆதரித்து நான் செயல்பட்டு வந்தேன். ராஜீவ் எதிர்ப்புப் பிரசாரத்துக் கென்றே தொடங்கிய முரசொலியின் வார இணைப்பான ‘புதையல்’ இணைப்பின் தொகுப்பாசிரியனாக ஓராண்டு வேலை பார்த்தேன்.

வி.பி.சிங், தி.மு.க வுடன் இணைந்து தேசிய முன்னணியை உருவாக்கியபோதும், தி.மு.க வுக்காகத் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில் பேசியபோதும், பல மேடைகளில் நான் அவரு டைய பேச்சை மொழிபெயர்த்து வந்தேன்.

பிரதமர் பதவியில் அமர்ந்த வி.பி.சிங் மண்டல் கமிஷனால் பதவி இழந்ததும், தமிழ் நாட்டில் ஒரு சூறாவளிச் சுற்றுப்பயணத்தை தி.மு.க. ஏற்பாடு செய்தது. தன்னை முதல்முறை மத்திய அமைச்சராக்கிய வி.பி.சிங்குக்கு, தான் செலுத்தும் நன்றிக்கடனாக அவரது உரையை தானே மொழிபெயர்க்க விரும்பினார் மாறன். அவரை உணர்ச்சிவசப்பட்ட நிலையில் நான் பார்த்தது அந்த ஒரு முறைதான்.

வி.பி.சிங்குக்கு, அந்தச் சுற்றுப்பயணத்தில் சென்ற இடமெல்லாம் எழுச்சியான வரவேற்பு. மதுரை வரை எல்லாக் கூட்டங்களிலும் முரசொலி மாறனே மொழிபெயர்த்தார். மற்ற தென் மாவட்டங்களில், தான் மொழி பெயர்க்க வேண்டுமென்று வைகோ விரும்பி னார். ஆனால், மாறன் மொழிபெயர்ப்பே தொடர்ந்தது. தன் சொந்தச் சீமையான நெல்லையிலாவது தனக்கு வாய்ப்பு தரப்படு மென்று வைகோ எதிர்பார்த்தார். அங்கேயும் அதற்கான வாய்ப்பு அமையாமல் போனது. அங்கிருந்து அடுத்த ஊருக்கு வைகோவுடன் நான் ஒரே காரில் போக நேர்ந்தது. அடுத்த அரை மணி நேரம் அவர் தன் ஆதங்கத்தைக் கொட்டித் தீர்த்தார். தி.மு.க விலிருந்து தன்னை ஓரங்கட்டுவது தொடங்கிவிட்டது என்று கடும் கோபமும் வேதனையும் கொந்தளித்தது அவர் பேச்சில். Ôதனக்கு யார் நிஜமான தலைவன்Õ என்று ஒரு குமுறல் குமுறினார்! அவரை அப்போது சமாதானப்படுத்துவது மிகக் கடினமாக இருந்தது.

வைகோவின் உணர்ச்சிவசப்படும் இந்த இயல்புதான் தி.மு.க விலிருந்து பின்னர் அவர் வெளியேற்றப்பட்டபோது, அவருக்குப் பல மாகவும் இருந்தது; பலவீனமாகவும் இருந்தது. அவரோடு தி.மு.க விலிருந்து வெளியேறிய தலைவர்களுக்கும் அவருக்கும் இருந்த ஒரே கொள்கை ஒற்றுமை, கருணாநிதி மீது ஏற்பட்டிருந்த வெறுப்பு மட்டும்தான்.

உண்மையில், வைகோவை தி.மு.க விலிருந்து கருணாநிதி வெளியேற்றாமல் இருந்திருந் தால், இப்போது பத்தோடு பதினொன்றாக இன்னுமொரு மாநில அமைச்சராக இருந்து கொண்டு, தயாநிதி மாறனின் சிறப்பியல்புகளை உணர்ச்சி பொங்கத் தமிழக மக்களுக்கு அவர் எடுத்துச் சொல்லிக் கொண்டு இருக்கக்கூடும்.

வைகோவின் உணர்ச்சிகரமான அரசியலில் அவருடைய உழைப்பும் அதிகம்; பட்ட துயரங்களும் அதிகம். அடைந்த லாபங்கள் மிக மிகக் குறைவு. தி.மு.க விலிருந்து வெளியேறி ம.தி.முக வை ஒரு கட்சியாக நிலைநிறுத்த பல தொண்டர் கள் செய்த தியாகத்தையும், தன் சுயமரியாதையையும் ஒதுக்கிவிட்டு, மீண்டும் தி.மு.க. அணியில் சேர்ந்தபோதே அவருடைய அரசியல் நம்ப கத்தன்மை அடிவாங்கிவிட் டது. அதிலிருந்து மீண்டு வரும் வேளையில் ஜெயலலிதா வுடன் திரும்பவும் கூட்டணி சேர்ந்தது மீண்டும் அவருடைய நம்பகத்தன்மையைக் குலைத்தது. பொடா சிறைவாசம், பாத யாத்திரை கள் எல்லாமே விழலுக்கு இறைத்த நீர்தான்!

ஆனால், தற்போது தி.மு.க வை எதிர்ப்பதைத் தவிர, வைகோவுக்குச் செய்வதற்கு வேறு அரசியல் ஏதும் இல்லை என்பதுதான் இத்தனைக் குழப்பத்துக்கும் காரணம். கருணா நிதிக்குப் பிறகு தி.மு.க. உடைந்தோ உடையாமலோ தன் வசம் வந்துவிடும் என்று அவர் போட்ட கணக்குகள், தயாநிதி மாறனின் வருகைக்குப் பிறகு தவிடுபொடியாகிவிட்டன.

தி.மு.க வும் அ.தி.மு.க வும் ஒன்றுக் கொன்று மாற்றாக தங்களை அறி வித்து வருகிற வரையில், மற்றவர்கள் இதில் ஏதேனும் ஓரணியுடன் இணைந்து சிங்கம் சாப்பிட்டது போகச் சிதறியதைச் சாப்பிடும் நரி களாக மட்டுமே இருப்பார்கள். இரு கழகங்களுக்கும் தானே மாற்று என்று தன்னை மூன்றாவது சக்தியாக அறி வித்துக்கொண்டு, அதற்கான தலைமை யாகத் தன்னைக் காட்டிக்கொண்ட வரையில் வைகோவுக்கு நம்பகத் தன்மை இருந்தது. இரண்டில் ஒன்று டன் சேரத் தொடங்கியதும் அவர் கட்சியின் நிலை இடதுசாரிகளின் நிலைக்குச் சமமாகிவிட்டது.

அதனால்தான், வைகோவுக்கு நிகரான பேச்சாற்றலோ, நாடாளு மன்றத் திறமையோ, கட்சி நடத்தும் முன் அனுபவமோ எதுவும் இல்லாத விஜயகாந்த்துக்கு எட்டு சதவிகித ஓட்டுகள் விழுந்தன. வைகோவின் ம.தி.மு.க வுக்கு அதை நெருங்கும் வாய்ப்புக்கூட இல்லை.

தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடம் ஒன்றே ஒன்றுதான். தி.மு.க வுக்கு மாற்று அ.தி.மு.க; அதற்கு மாற்று தி.மு.க. இரண்டுக் கும் மாற்று யார்?

இதை நிரப்பும் அரசியல் பார்வை, இதற்கான வியூகம் அமைக்கும் ஆற்றல் அனைத்திந்தியக் கட்சி களான காங்கிரஸுக்கும் இல்லை, பி.ஜே.பி க்கும் இல்லை. யாருக்கு உள்ளது என்ற கேள்வியுடன் சுமார் 15 ஆண்டுகளாகக் காத்திருக்கிறார் கள் மக்கள். வைகோ, ராமதாஸ், விஜய காந்த் என்று வரிசையாக வந்து செல்லும் ஒவ்வொரு தலைமையும் இன்னும் தடுமாறிக்கொண்டேதான் இருக்கிறது.

இந்தத் தடுமாற்றத்தில் முதலிடம் வைகோவுக்கு! ‘எமோஷனல் பாலிட் டிக்ஸ் என்பது மேடைக்கு மட்டுமே சரி’ என்பதைத் தன் முன்னாள் தலைவரிடம் அவர் கற்கவே இல்லை!


இந்த வாரப் பூச்செண்டு!

குஷ்புவுக்கு! ‘இன்னா செய்தாரை ஒறுத்தல் அவர் நாண, நன்னயம் செய்துவிடல்’ என்னும் திருக்குறள் படிக்காமலே, ‘‘தங்கர்பச்சான் சிறந்த கேமராமேன். ‘பெரியார்’ படத்தில் தன்னை தங்கர்பச்சான் ஒளிப்பதிவு செய்ய மறுத்ததில் தனக்கு வருத்தம்’’ என்று அவரும் இருந்த மேடை யில் பேசியதற்காக இ.வா. பூச்செண்டு!



இந்த வாரக் குட்டு!

ஒரு புத்தக விழாக் கூட்டத்தில் பேசிய உச்ச நீதிமன்ற நீதியரசர் ஏ.ஆர்.லட்சுமணன், முதல மைச்சர் கருணாநிதியை “தலைவர் கலைஞர்” என்று வர்ணித்திருக்கிறார். வருங்காலத்தில் கருணாநிதிக்கு எதிரான வழக்கு ஏதேனும் நீதியரசர் முன் வந்தால், அவரிடமிருந்து வழக்கை மாற்றவேண்டுமென்ற கோரிக்கை எழுவதற்கு இது இடம் கொடுத்ததாக ஆகாதா?


ஆனந்த விகடன் 3.1.2007




Tamil Magazines
on keetru.com


www.puthuvisai.com

www.dalithumurasu.com

www.vizhippunarvu.keetru.com

www.puratchiperiyarmuzhakkam.com

http://maatrukaruthu.keetru.com

www.kavithaasaran.keetru.com

www.anangu.keetru.com

www.ani.keetru.com

www.penniyam.keetru.com

www.dyfi.keetru.com

www.thamizharonline.com

www.puthakam.keetru.com

www.kanavu.keetru.com

www.sancharam.keetru.com

http://semmalar.keetru.com/

Manmozhi

www.neythal.keetru.com

http://thakkai.keetru.com/

http://thamizhdesam.keetru.com/

மேலும்...

About Us | Site Map | Terms & Conditions | Donate us | Advertise Us | Feedback | Contact Us
All Rights Reserved. Copyrights Keetru.com