sabari malaiஇந்திய அரசியல் சட்டத்தின் முகவுரை "இந்தியாவை ஓர் இறையாண்மை கொண்ட சமூகத்துவ சமயசார்பற்ற ஜனநாயக குடியரசு'' என அறிவிக்கிறது. இறையாண்மை என்பது ஒரு அரசு தன்னைத் தானே ஆள்வதற்கான அதிகாரத்தை பெற்றிருப்பது.

தனது ஆளுகை உரிமையை அந்நியர்களிடம் விட்டுக்கொடுக்காமல் தன்னை ஒரு தன்னாட்சியுள்ள (சுய ஆட்சியுள்ள) அரசாக நடத்துவது. அது வெறுமனே தன்னிச்சையான அதிகாரம் சார்ந்த ஒன்றல்ல. அது அந்த நிலத்தில் வாழும் அனைத்து மக்களின் உரிமையை கவனத்தில் கொண்டு அவர்களை ஆள்வதற்கான ஒரு அதிகாரம். குடியாட்சி என்பதன் பொருள் குடிகளே அரசின் இறையாண்மையை தீர்மானிப்பவர்கள். அவர்களே உயர்ந்த அதிகாரம் கொண்டவர்கள் .

இந்தியா போன்ற பல இனங்கள், பல மொழிகள், பல மதங்கள், பல பழங்குடிகள் உள்ள சமூகத்தில் இறையாண்மை என்பது பன்மைத் துவத்தை அங்கீகரித்து, அவற்றிற்கிடையே ஒரு இணக்கத்தை உருவாக்குவதற்கான அதிகாரமே தவிர அவற்றை அவற்றின் தனித்தன்மைகளை அழித்து, அவற்றின்மீது தனது ஒற்றை அதிகாரத்தை நிறுவுவது அல்ல.

ஆனால், இந்திய அரசின் உயர்ந்த இறையாண்மை அதிகாரம் கொண்ட நாடாளுமன்றம், நீதித்துறை, தேர்தல் ஆணையம், இந்திய வைப்புநிதி வங்கி ஆகிய அனைத்தும் இன்று ஒற்றை அதிகார திசை வழிப்படுத்தலுக்கு உள்ளாகியுள்ளது. அவை மக்களின் நம்பிக்கை இழப்பை நோக்கி நகரும் அபாயத்திற்கான அறிகுறிகள் தெரிகிறது.

இந்த அறிகுறிகள் குடியுரிமை சமூகத்தை உள்நட்டு யுத்தம் நோக்கி தள்ளிவிடக் கூடியவை. சமீபத்திய பாபர் மசூதி நில உரிமைக்கான உச்சநீதிமன்ற தீர்ப்பு, ஆந்திர போலிமோதல் கொலைகள், குடியுரிமை திருத்த சட்டம், உன்னாவ் பாலியல் வன்முறையும் படுகொலையும், அமித்ஷா மீதான என்கவுண்டர் வழக்கு தீர்ப்பு, சபரிமலை தீர்ப்பு, சமீபத்தில் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் 294 தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முறைகேடு நடந்ததாக சொல்லப்படும் வழக்கு, குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து மாணவர்கள் போராடுவதை நிறுத்தினால்தான் அந்த வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும் என்ற உச்ச நீதிமன்ற அறிவிப்பு, அந்த வழக்கு விசாரணையில் உள்ளபோதே தலைமை நீதிபதி இச்சட்டத்தின் நன்மை குறித்து அரசு மக்களிடம் பிரச்சாரம் செய்ய வேண்டும் என்று அறிவிப்பது, இந்திய பொருளியல் வீழ்ச்சியை நீக்க இந்திய மக்களின் பேரிடர்கால மீட்பிற்கும், போர்க்கால பாதுகாப்பிற்கும் வைத்துள்ள இந்திய வைப்புநிதி 1.7 இலட்சம் கோடியை அரசு எடுத்து அதில் 1.5 லட்சம் கோடி பெருமுதலாளிய நிறுவனங்களின் கடன்களை தள்ளுபடி செய்ய பயன்படுத்தியது என அதிகாரமிக்க இறையாண்மைக் கொண்ட அனைத்து நிறுவனங்களும் ஒற்றை அதிகாரத்திற்கு ஏற்ப வழிமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவின் ஒரு இருண்டகாலப் பயணம் துவங்கியுள்ளது. அதன் அறிகுறிகள் மக்களின் தினவாழ்வைச் சிதைத்து, வாழமுடியாத நிலைக்குத் தள்ளும் பொருளாதாரம் ஒரு புறம், அதை மறைக்க கருத்தியலான மதம், இனம், சாதி, மொழி என்ற பல அடையாளம் சார்ந்த வெறிகளை ஊட்டுவது மறுபுறம் என இந்தியா ஒரு அமைதியற்ற வாழ்வைத்தரும், பாமர மக்களின் உளவியலில் பெரும் நெருக்கடியையும், அச்ச உணர்வையும் உருவாக்கியுள்ளது.

மக்கள் தேர்ந்தெடுத்த அரசைத் திரும்பப்பெற அதிகாரமற்ற நிலையில், நம்பிக்கைக்கு உகந்ததாக உள்ள சட்டவழிமுறைகள் அனைத்தும் என்னவாக மாறியுள்ளது என்பது குறித்து ஆழ்ந்து சிந்திக்க வேண்டியுள்ளது.

சட்டம் என்பது அடிப்படையில் ஒரு அரசமைப்பின் ஆளுகைக்குள் உள்ள மக்களை கண்காணிக்கவும், கட்டுப்படுத்தவும் ஆன ஒரு சிறைக்கோபுரம் போன்றது. இந்த சிறைக்கோபுரம் ஒரு படிமமே. சான்றாக, கடவுள் எப்பொழுதும் நம்மை கண்காணிப்பதைப் போல, சட்டம் என்கிற ஆணை மக்களை கண்காணிப்பதாக உள்ளது.

கடவுளின் மறுமைக்கால தண்டனைபோல, இவ்வுலக வாழ்வின் தண்டனையை தரக்கூடியதாக சட்டம் உள்ளது. சட்டங்கள் அனைத்துமே தண்டனைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு இயற்றப்படுவது அல்ல. அவை முதலில் சமூகத்தில் ஒரு கண்காணிப்புக் கருவியாகச் செயல்படுகிறது. அதன் கண்காணிப்பு அந்த சட்டம் புழங்கும் இறையாண்மை அமைப்பிற்குள் உள்ள ஒவ்வொரு உடலின் பொது மனசாட்சியை கண்காணிப்பதும், மீற முயல்பவரை தண்டனையைக் காட்டி உளவியல் அச்சத்திற்கு உட்படுத்துவதுமே.

அதையும் மீறிய நிகழ்வுகளைத் தண்டிப்பதன் வழியாகக் கட்டுப்படுத்த முனைவது. ஒரு தனித்த உடலை இறையாண்மைக்குள் குடிமகனாக இருத்தி வைப்பதே சட்டத்தின் பணி. அதனால் சட்டம் எப்போதும் ஒரு குறிப்பிட்ட விதியமைப்பிற்குள், ஒழுங்கிற்குள் இயங்கும் சமூக அமைப்பிற்கான விதியாக வரையறுக்கப்படுவது. அது விதி விலக்குகளினை ஒழுங்கமைப்பதன் வழியாக விதியை மேல் அமைப்பில் கொண்டும், விதிவிலக்குகளை உள்ளமைப்பில் கொண்டும் இயங்குவது.

விதிவிலக்குகள் அவ்வப்போது விதியை கேள்விக்கு உட்படுத்தும். விதிவிலக்கைக் கொண்டு விதியை மாற்றியமைப்பது, சமூக ஒழங்கை சீரழிப்பதாக, இறையாண்மையை சிக்கலுக்குரியதாக மாற்றிவிடும்.

சான்றாக, SC/ST சட்டம் எனப்படும் வன்கொடுமைத் தடைசட்டம், பட்டியல் சாதியினரின் பாதுகாப்பைவிட, பட்டியல் சாதியினர் அல்லாதவரின் சமூகவயத்தை, சாதிய மனோபாவத்தை கண் காணிப்பதற்கானதாக செயல்படுகிறது. பட்டியல் சாதியினரைப் பாதுகாப்பது என்பது அதன் விதிமுறை. பட்டியல் சாதியினர் அல்லாதோரை கண்காணிப்பது அதன் செயல்பாடு.

வன்கொடுமை தடைச்சட்டத்தை ஒடுக்கும் சாதிகள் சுயசாதிய மனோநிலையில் அதை அணுகக்கூடாது. அது பட்டியல் சாதியினர் அல்லாத பிறசாதியின் உளவியலுடன் உறவு கொண்ட ஒன்று. அதை உரிமை மறுப்பு, ஜனநாயகமற்றது, விசாரணையற்ற கொடும் சட்டம் என்றெல்லாம் பார்ப்பது என்பது ஒருவகை உளவியல் ஆதிக்கத்தின் வெளிப்பாடே.

அந்தச் சட்டம் பட்டியல் சாதியினர் மீதான தொடர் வன்முறையை சாதியத்தால் நிகழ்த்துவதற்கு ஒரு தடையாக, அவர்களுக்கு பாதுகாப்பதற்கான ஒரு ஏற்பாடு.வன்கொடுமைத் தடைசட்டம் குறித்த உரையாடல்களில் முன் வைக்கப்படும் வாதம், அது பட்டியல் சாதியினரால் தவறாகப் பயன் படுத்தப்படுகிறது என்பதே.

அதனால் அது காவல்துறையின் கட்டற்ற அதிகாரமாக மாறுகிறது என்பது. இதில் மட்டுமல்ல இந்திய சட்டங்கள் பெரும்பாலானவற்றில் காவல்துறையின் கட்டற்ற அதிகாரம்தான் உள்ளது. வன்கொடுமைத் தடைச் சட்டம் தவறாக பயன் படுத்தவதாகச் சொல்லப்படுவது ஒரு விதிவிலக்கான நிலை.

அதை வைத்து விதியை வகுக்க முடியாது. அப்படிப் பார்த்தால் இந்தியாவில் எந்த சட்டமும் தவறாக பயன்படுத்த வாய்ப்புள்ளதே. அதை எல்லாம் விதிவிலக்காக அமைப்பின் குறையாக காணும் நாம் வன்கொடுமைத் தடைச்சட்ட விதிவிலக்கை மட்டும் ஏன் விதியாக மாற்ற முனைகிறோம்.

விதிவிலக்குகளால் தீர்மானிக்கப்படுகிறதே தவிர, ஒழுங்கமைப்பால் அல்ல. ஒழுங்கற்றதை ஒழுங்கமைக்க முனைவதே விதி. அதன் விலக்கு என்பது ஒழுங்கற்றதாகவே இருக்கும்.

வன்கொடுமைத் தடைச்சட்டம் புள்ளி விபரப்படிக்கூட, தவறாகக் குறைவாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதோடு, உண்மையில் பட்டியல் சாதியினர் மீதான வன்கொடுமையை அது குறைத்தும் விடவில்லை. குறைந்த பட்சம் வன்கொடுமை செய்யும் மனநிலையில் ஒரு தடையை இது ஏற்படுத்துகிறது என்பது பட்டியல் சாதிகளுக்குப் பாதுகாப்பானதே.

அந்தவகையில் இச்சட்டம் உருவாக்கும் உளவியல் அச்சத்திற்காகவாவது தற்போது உள்ளபடி நீடிப்பதே சரியானது. இதில் சில சட்டத்திருத்தம் அரசால் கொண்டு வரப்பட்டது. அது வழக்கம்போல சட்டத்தையும், நீதியையும் வளைப்பதற்கு வாய்ப்பை அளிப்பதால், கூடுதலாக வன்முறையை அதிகரிக்கவே செய்யும். இச்சட்டத்தை நீக்க இந்திய அளவில் பெரும் போராட்டத்தை ஒடுக்கும் சாதி அமைப்பினர் எடுத்தார்கள்.

இந்தச் சட்டம் அவர்கள் மீதான சாதியக் கண்காணிப்பாகச் செயல்படுவதால் உருவாகும் ஒரு உளவியல் அழுத்தமே காரணம். இது பட்டியல் சாதிகள் மீதான ஒரு சிறப்புரிமையாகப் பார்க்கப்படுகிறது. உண்மையில் இது சாதியவாதிகளின் வன்மத்தை, சாதிவெறியை, தீண்டாமை உணர்வை வெளிப்படுத்தும் ஒன்றாக உள்ளது.

பெண்கள் மீதான வன்பாலியல் தடை செய்யும் சட்டங்கள், சிறுமிகள் மீதான வன்பாலியலை தடை செய்யும் போக்சோ போன்ற சட்டங்கள் நடைமுறையில் இருந்தும், தொடர்ந்து பாலியல் வன்கொடுமை என்பது அதிகரித்துக் கொண்டே உள்ளது.

சமீபத்தில் வெளிவந்த ‘கடுகு', ‘அடங்க மறு' மற்றும் ‘துப்பாக்கி முனை' போன்ற தமிழ்த் திரைப்படங்கள் பணக்காரர்களும், அதிகார அமைப்பும் இணைந்து இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை அதிலும் கூட்டாகப் புரிவதும், அதை வீடியோ எடுத்து இரசிப்பதும் காட்சிகளாக, கதைகளாக வெளிவந்த படங்கள்.

இவை மெலோடி ராமாக்கள் வகை என்றாலும், பொள்ளாச்சி சம்பவம் அத்தகைய சினிமாக்களைத் தாண்டிய ஒன்றாக உள்ளது. இவை சமூகத்தின் ஆழ்தளத்தில் புரையோடிய பண்பாட்டுச் சிக்கலுக்கான நோய்க்குறிகள் மட்டுமல்ல, பணம், அதிகாரம், அரசியல், பாலியல் அனைத்தும் ஒரு புள்ளியில் இணைவதால் உருவாகும் சிக்கலும்கூட.

சட்டத்தின் கண்காணிப்பு அதிகார பலம் மிக்கவர்களுக்கு ஒரு காட்சியின்பமாக மாறுகிறது. அவர்கள் தங்களைச் சட்டத்திற்கு மேலானவர்களாகக் கருதுகிறார்கள். காரணம் இறையாண்மை அவர்களது கைகளில் உள்ள அதிகாரமாக மாறுகிறது. இதற்கான பின்னணியில் அரசியல் கட்சிகள் அதிலும் குறிப்பாக ஆளும் கட்சிகள் இருப்பதும், அது குறித்து மௌனம் சாதிப்பதும் பெரும் சீரழிவிற்கு சமூகத்தைக் கொண்டு செல்லும் செயல்போக்குகள் மட்டுமல்ல இறையாண்மை தரும் அதிகாரத்தின் விருப்புறுதியை அதிகார வர்க்கத்திடம் நிலைநிறுத்துபவை.

வெகுமக்களின் உளவியலில் அவர்களை தனியர்களாக, அதிகாரமற்றவர்களாக உணரவைக்கும் ஒரு செயல்போக்காக வெளிப்படுபவை. இத்தகைய நிகழ்வுகளுக்கான உளவியல் பலத்தை தரக்கூடியதாக அரசும் அதன் சட்டங்களும் அமைந்துள்ளன.

சமூகத்தின் பொது உளவியலில் உள்ள அச்சம் நீக்கப்பட்டு பாதுகாப்பு உணர்வை தரவேண்டிய அரசுகள் மேலும் மேலும் மக்களை அச்சத்திற்குள்ளும், பதற்றத்திற்குள்ளும் தள்ளிச் செல்வதாக அவை அமைந்துள்ளன. இச்சட்டங்களின் இயலாமை வெளிப்பாடே ஆந்திராவில் சமீபத்தில் நடந்த போலி  மோதல் (என்கவுண்டர்) கொலைகள்.

ஆந்திர கால்நடை மருத்துவர் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட கொலைகாரர்கள் என நான்குபேர் சட்டத்திற்கும், நீதிமன்றத்திற்கும் புறம்பாக கொல்லப் படுகிறார்கள். குற்றவாளிகள் என்றால், நேரடியாக நீதிமன்றம் கொண்டு போகாமல் சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து சென்று ஒரு போலியான மோதல் கதையை கட்டி கொல்லப் படுகிறார்கள்.

ஆக, அங்கேயும் உயர்சாதி, பணக்கார, அதிகார வர்க்க பொள்ளாச்சி வகை ‘மைனர் குஞ்சுகள்' அரசியல், அதிகார பின்புலத்துடன், வெளியே தெரியாமல் திரைக்கதையின் உச்சக் காட்சியை முடித்து விட்டனரோ என்கிற சந்தேகத்தையே தருகிறது.

உலகத்தையே உலுக்கச் செய்த நிருபயா பாலியல் வன்புணர்வு வழக்கில் என்ன நடந்தது? எந்த மோதல் கொலையும் இல்லை. அங்கு சட்டம் தன் கடமையைச் செய்தது. இங்கு காவல்துறை சட்டத்தின் கடமையைச் செய்துள்ளது. நேற்றுவரை அந்த நால்வர்தான் குற்றவாளி என்ற நமது எண்ணத்தை இந்த போலிமோதல் கொலை, அவர்கள் பலிகடாக்களோ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

பொள்ளாச்சி வகை ‘மைனர் குஞ்சு' கொலைகாரர்களைக் காக்க இப்படி நாலுபேர் அன்று கிடைக்காமல், இங்கே விஷயம் அம்பலமாகிவிட்டதால் கொங்கு அண்ணாச்சிகள் நீதிமன்றம் சென்று பிணை வாங்கி, அடுத்த ஆட்சிவரை இழுத்து மறந்து போனபின், யாருக்கும் தெரியாமல் வழக்கை இழுத்து மூடுவார்கள்.

ஆக, அதிகார, அரசியல், பணக்காரர்கள் பிரச்சனை வெளியே தெரிந்தால் சட்டம், நீதி தெரியாவிட்டால், இப்படி நாலு பேரைப் பிடித்துச் சுடுவது அல்லது சுட்டுப் பிடிப்பது இதுதான் அதிகாரத்தின் ஆளுகைத்திறன்.

உலகிலேயே போலிமோதல் (என்கவுண்டர்) ஸ்பெஷலிஸ்டுகள் என்றால் அது ஆந்திர போலிஸ்தான். நக்சலைட்டுகள், போராளிகள், செம்மரம் வெட்டிய தமிழர்கள் என அவர்கள் சுட்டுத் தள்ளாத ஆட்களே இல்லை. காரணம் தெலுங்கு போலிஸ் தெலுங்கு திரைப்படங்களைப் போலத்தான். அதீத ஹீரோயிசம் உள்ளவர்கள் போலத் தெரிகிறது.

அந்த மக்களும் அப்படித்தான் போலிருக்கிறது. பொதுவாக இந்திய போலிஸின் என்கவுண்டர் என்பது வழக்கை முடிக்க, ஆகாதவன், அரசியல் பழிவாங்கல், திட்டமிட்டு கொல்லப்பட வேண்டியவன், நீதிமன்றம் போனால் உண்மை வெளியாகிவிடும் என்று பயம் கொள்பவர்களுக்கு சாதகமாக, இப்படி பல காரணங்களால் நிகழ்ந்துள்ளதே தவிர, உண்மையான குற்றவாளிக்கு நிகழ்ந்ததாக வரலாறு உண்டா?

ஒருவேளை என்கவுண்டரில் இறந்தவர்கள் நிரபராதி என்றால்? “அட அதெல்லம் இப்பப் பேசாதீங்க. சுட்டுத்தள்ளிய வீரமகன் அந்த காவல் நாயகனுக்கு மாலை போட்டு மரியாதை செய்யுங்க, இந்தியாவே பாராட்டுதுல. நீ இப்பத்தான் நீதி அது, இதுன்னு மனநோயாளி மாதிரி பேசிகிட்டு” என்று போலி மோதல் கொலைகளை எதிர்ப்பவர்களைப் பார்த்து பொதுபுத்தி சார்ந்த உளவியல் முகஞ்சுளிக்கிறது.

தெலுங்கானாவில் நிகழ்த்தப்பட்ட அரசு பயங்கரவாதமான போலிமோதல் கொலைகள் குறித்து நிலைப்பாடு இதுதான். மலர்தூவி, இனிப்பு வழங்கிக் கொண்டாடும் தெலுங்கானா மற்றும் இந்திய மக்கள் முழு பாசிசத்திற்கான உளவியலை பெற்றுவிட்டார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது.

  1. கொல்லப்பட்டவர்கள் குற்றவாளிகளாக இல்லாவிட்டால், இவர்களை இந்த தண்டனையிலிருந்து மீட்டுவிட முடியுமா? அல்லது பாதிக்கப்பட்ட அவர்கள் குடும்பத்தின் நிலை என்ன?
  2. குற்றவாளிகளாக இருந்தால் நீதிமன்றம் நிச்சயமாக தண்டனை தரும். காரணம் நாயைப்போல சுட்டுக் கேட்க நாதியற்ற இவர்கள் எப்படி அரசியல் தலையீடு உள்ளவர்களாக, செல்வாக்கு உள்ளவர்களாக இருக்க முடியும்? தேவை காவல்துறை குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அதற்கு வழியில்லாதபோதே இதுபோன்ற குறுக்கு வழிகளை அது நாடுகிறது.
  3. காவல்துறை நிரூபித்து நீதிமன்றம் தீர்ப்பு அளிக்காவிட்டால் பொதுமக்கள் இப்போது ஆடிப்பாடிக் கொண்டாடுவதைப் போல, நீதிமன்றத்திற்கு எதிராகப் போராட வேண்டும். அப்படி போராடத் தயாரற்ற கும்பலே இதை நீதி, தீர்ப்பு என்றெல்லாம் குதூகலிக்கிறது.
  4. அரசியல் தலையீடுகள், பணக்காரர்களின் இடையீடு போன்றவை இருந்து இந்த குற்றவாளிகள் விடுதலை ஆகிவிடும் வாய்ப்பு இருப்பதாகக் கருதினால். இந்த என்கவுண்டரே நடந்திருக்காது. இவர்கள் பஞ்சபராரிகள், கேட்க நாதியற்றவர்கள் என்ற நிலையில்தான் இந்த சட்டவிரோத செயல் நிகழ்த்தப்பட்டுள்ளது.
  5. அந்தப் பெண்ணை அரசியல்வாதிகள், அதிகாரிகளைச் சார்ந்தவர்கள் வன்புணர்வு செய்துவிட்டு இந்த அப்பாவிகளை (ஒருவேளை) பலியிட்டிருந்தால் இந்தக் கொண்டாட்டக் கும்பல் அப்பொழுது காவல் துறைக்கு மாலைக்குப் பதிலாக எதிர்த்துப் போராடுமா? ஏதோ பெரிய புரட்சிகர ஆதரவு போன்ற ஒரு நிலை எடுப்பது இதில் தவறானது. பொதுவாகக் காவல்துறை குற்றவாளிகளை, குறிப்பாகச் செல்வாக்கும் பணபலமும் உள்ள குற்றவாளிகளை, எந்தச் சூழலிலும் கொல்வதோ தண்டிப்பதோ இல்லை. அதன் வரலாறு சொல்வது இப்படியான அப்பிராணிகளைக் கொல்வதும், வழக்கை முடிப்பதும்தான்.

இறுதியாக கொன்றபின் நிரூபிக்கப்படும் ஆதாரங்கள் ஜோடிக்கப்பட்டவை என்கிற சந்தேகத்திற்கு உரியவை என்பதால், அதை ஏற்க முடியுமா என்கிற கேள்விகள் உள்ளது. என்கவுண்டர்களை (போலி மோதல் கொலைகள்) ஆதரிப்பவர்கள் பொதுபுத்தி மனநிலையில் உள்ளவர்கள். எதிர்ப்பவர்கள் விமர்சன சிந்தனையுடன் அதை பார்ப்பவர்கள்.

இருவருமே நீதி வேண்டும் என்பவர்கள்தான். இருவருமே சமூகத்தின்மீது அக்கறைக் கொண்டவர்கள்தான். இங்குதான் சட்டத்தின் நுட்பமான விளையாட்டை புரிந்துகொள்ள வேண்டும். ஒரே நேரத்தில் இந்திய அரசமைப்பை விமர்சிப்பவர்களை அது சட்டம், நீதித்துறையை ஆதரிக்கும் சட்டவாதத்திற்குள் தள்ளுகிறது.

வழக்கமாகச் சட்டவாதம் பேசும் பொதுமக்களை, சட்டம், நீதித்துறையை எதிர்க்கும்படி செய்கிறது. இந்த விதமான விளையாட்டே சட்டத்தின் கண்காணிப்பு எல்லை உருவாக்கும் விளையாட்டு. அதன் எல்லைக்குள் அனைவரையும் விளையாட அது அனுமதிக்கிறது.

சரி, என்கவுண்டர் வழி சட்டத்தை காத்த காவலர்கள் உன்னாவ் பாலியல் வன்கொலையில் என்ன செய்தார்கள்? சொல்லவோ கேட்கவோ மனதை பதறவைக்கும் நிகழ்வு அது. போலிமோதல் கொலைகளை ஆதரிப்பவர்கள் இதற்கு என்ன சொல்வார்கள்?

அவர்கள் குற்றம் செய்தவர்கள் என்று தெரிந்தும், அங்குள்ள காவல்துறை ஏதும் செய்யவில்லை. அவர்களுக்கு பாதுகாப்புதான் தந்தது. கூறவருவது, இக் குற்றவாளிகளைக்கூட என்கவுண்டர் செய்யக்கூடாது, மாறாக, நீதியடிப்படையில் கடுமையான அதிகபட்ச தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்பதே.

தொடர்ந்து தரப்பட்ட அழுத்தத்தால் தற்போது தண்டனை வழங்கப்பட்டுள்ளது. அதுவும் கீழ் கோர்ட்டில். இன்னும் மேலே மேலே போக வாய்ப்புகள் உள்ளது. ஆனாலும், பார்ப்பனர்கள் இதன் வழி நாடெங்கிலும் அம்பலப்பட வேண்டும்.

தீண்டாமை என்பது பெண் உடலை வன்புணர்வதில் இல்லை அவர்களுக்கும், அவர்களது ‘தர்மா’விற்கும் என்பதை அனைவரும் அறிய வேண்டும். இத்தகைய குற்றவாளிகள் தப்ப வாய்ப்புள்ளது என்பதால், என்கவுண்டர்கள் நியாயப்படுத்தப்படுகிறது.

இந்த நியாயங்கள் அப்பாவிகளை, எதிரப்பவர்களை, புரட்சியாளர்களை என்கவுண்டரில் போட அரசிற்கு வாய்ப்பாக அமைகிறது.

ஒருபுறம் சட்டம், நீதிமன்றம் ஆகியவை உள்ளன. அதன்முன் நிறுத்ததான் காவல்துறை உள்ளது. என்கவுண்டர் என்பது நீதித்துறையை அவமதிக்கும் ஒரு செயல். நீதிமன்றம் தன்னை அவமதித்ததாகக் கருதி என்கவுண்டர் செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால் செய்வார்களா? சிறுமி ஆசிபாவை நாள் கணக்கில் வைத்து வன்பாலுறவு செய்த காவிக் கயவர்களை ஒன்றும் செய்யாத காவல்துறை, ஹைதராபாத்தில் எந்த விசாரணையும், ஆதாரமுமின்றி போலிமோதல்கொலை செய்கிறது என்றால் என்ன பொருள்? பணத்திற்கும், செல்வாக்கிற்கும், அதிகாரம் கூன் விழுந்து கும்பிடும். அரசும், சட்டமும், நீதியும் மக்களுக்கானது இல்லை.

மக்கள் அந்த பணக்கார வர்க்கத்தை எதிர்க்காமல் இருப்பதற்காக உருவான காவல்படைகளே அவை. இறையாண்மை, சட்டம், நீதி என்பதன் உள்ளிருப்பது அதற்கான வர்க்க நிலைபாடுகளே.

பாபர் மசூதி நில வழக்கில் நீதிமன்ற தீர்ப்பு பல உள்முரண்பாடுகளுடன் வெளிப்பட்டது. இந்திய இறையாண்மையின் அடிப்படையிலும், சர்வதேச சட்டவாத நடைமுறைகளிலும் பின்பற்றப்படும் பகுத்தறிவுசார்ந்த, தர்க்கமுறைப்படியான தீர்ப்பிற்கு பதிலாக, ஒரு குறிப்பிட்ட மதப்பிரிவினரின் நம்பிக்கை அடிப்படையில் தீர்ப்பு வழங்கியது.

ஆனால், சபரிமலை பெண்கள் நுழைவு குறித்த தீர்ப்பில், அவர்களின் மதநம்பிக்கையை குறித்து அக்கறை செலுத்தவில்லை. இது மற்றொரு சட்டவாத கண்காணிப்பு விளையாட்டு. அடிப்படையில் தீர்ப்பும் (Judgement), நீதியும் (Justice) ஒன்றல்ல.

அவை வெவ்வேறு அறிவுத்துறை சார்ந்த செல்லாடல்கள். தீர்ப்பு சட்டத்தின் அடிப்படையில், விசாரணைகள், சாட்சிகள், தர்க்கங்கள் அடிப்படையில் வழங்கப்படுவது. நீதி அறம் சார்ந்து, இயற்கை சார்ந்த மனித குலத்தின் வாழ்வியல் சார்ந்து வழங்கப்படுவது.

நீதிமன்றங்கள் தீர்ப்பாயங்கள் மட்டுமே. தீர்ப்பு நீதி அடிப்படையில் கிடைப்பதும், பிரச்சினைக்கான தீர்வு அடிப்படையில் அமைவதும் அரசியல், அரசு, அதிகாரம் சார்ந்த ஒன்று. நீதிமன்றங்கள் வழங்கும் தீர்ப்புகள் நீதியானவையாக அமைவது அதன் தன்னிச்சையான இறையாண்மை தந்த அதிகாரத்தின் அடிப்படையில் நிகழ்வது.

இதன்பொருள் நீதிமன்றங்கள் நீதிக்குப் புறம்பானவை என்பதல்ல. அவை அரசமைப்பின் ஒரு அங்கம் என்ற வகையில் அதற்கான அரசியலை கொண்டதொரு நிறுவனமாகவே அமைகிறது.

ஆர்.எஸ்.எஸ். தாக்கல் செய்த சபரிமலை வழக்கை எடுத்துக் கொள்வோம். அதை நிறைவேற்ற முற்போக்காளர்களை பாடுபட வைத்துள்ளார்கள். மற்றொருபுறம் வலதுசாரிகளை ஒருங்கிணைத்து உள்ளார்கள். சபரிமலைப் பிரச்சினையைப் பக்தர்களுக்கான பிரச்சினை என்று அமைதி காத்திருந்தால் அவர்கள் நோக்கம் புஸ்வானமாகியிருக்கும்.

அப்போது, அவர்களே பெண்களை அனுப்பி, கேரள அரசை மிரட்டி கலைக்க முயல்வார்கள், அதைதான் அவர்கள் முதலில் ஒரு இஸ்லாமிய மதம்மாறியப் பெண், கிறித்துவ சமூகசேவகி என உள்நுழைக்க ஆரம்பித்தார்கள். அந்த சதிவிளையாட்டை முறியடிக்காமல் ஊடகங்கள் வழியாக முற்போக்காளர்கள் தொடர்ந்தார்கள்.

அவர்களது நோக்கம் ஆணையை நிறைவேற்றாவிட்டால், சுப்ரீம் கோர்ட் ஆணையை நிறைவேற்றவில்லை எனக் கேரள அரசை கலைப்பது. இல்லாவிட்டால் பக்தர்கள் என்ற போர்வையில் ரௌடியிசம் செய்து, கலவரமாக்குவது. ஆக, அவர்களின் இரட்டை விளையாட்டு இது.

பெரும்பாலும், சங் பரிவார் அமைப்பு இப்படியான ஒரு கள்ள விளையாட்டைத்தான் விளையாடுவார்கள். இனி நாடெங்கும் இதை நடைமுறைப் படுத்துவார்கள். நமக்கு எதிர்கொள்வதற்கான போர்த் தந்திரம் இல்லை. காரணம் என்.ஜி.ஓ. அரசியலின் அவசரக்கோல போராளி "மோடு'ம், அதனால் சுயபலன் அடையும் தன்முனைப்புமே காரணம்.

இந்திய இடதுசாரிகள் பார்ப்பனியஇந்துத்துவபாசிசத்தை எதிர்ப்பதுடன் இந்த திடீர்ப்போராளி என்.ஜி.ஓ. அரசியலில் கவனமாக இருக்க வேண்டும். உலகப் பேரரசில் இந்த என்.ஜி.ஓ. அமைப்புகளே, அரசுக் கருத்தியலின் முகவர்களாக உள்ளனர் என்ற எச்சரிக்கை அவசியம்.

சபரிமலைப் பிரச்சினை ஆரம்பம் முதல் ஒரு சிக்கலான அரசியல் விளையாட்டாகவே இந்துத்துவ காவி அரசியலால் நடத்தப்படுகிறது. அதுகுறித்த ஒரு சரியான போர்தந்திர அணுகுமுறை இடதுசாரிகள், ஜனநாயகவாதிகளிடம் இல்லை. ஆனால், என்.ஜி.ஓஅமைப்புகள், வழக்கம்போல தன்னுணர்வற்ற நிலையில், காவி அரசியலுக்கே பலியாகிவிடுகிறார்கள்.

இந்திய என்.ஜி.ஓ. அரசியல் என்பது உலக கார்ப்பரேட் சார்பான, காவிகளுக்கு சாதகமான அரசியலாகவே உள்ளது. சபரிமலைக்கு பெண்கள் சென்றால் ஆர்.எஸ்.எஸ். வெற்றி, போகாவிட்டால் பிஜேபி வெற்றி. இரண்டுமே காவி சங்பரிவார் பார்ப்பனியத்தின் வெற்றிதான்.

பார்ப்பனர்கள் சூதுவாதில் வல்லமை உள்ளவர்கள். பெரியார் தீவிரமாக இந்த எச்சரிக்கையை தொடர்ந்து முன்வைத்தார். ஆனால், இன்று பெரும்பாலான இடதுசாரிவாதம் அடிப்படையில் என்.ஜி.ஓ. அரசியலாக மாறியுள்ளது. இந்த ஆபத்தை இடதுசாரி ஜனநாயக அரசியல் இன்னும் உணர்ந்ததாகத் தெரியவில்லை.

என்.ஜி.ஓ. என்பது அரசுக்கும் மக்களுக்கும் இடையில் ஒரு சட்டபூர்வமான தொடர்பை உறவை உருவாக்க விரும்பும் அமைப்பு. அது அரசின் ஆளுகை தொழில் நுட்பத்தின் மற்றொரு உத்தியடிப்படையில் அமைவது.

அரசியல் நிகழ்வாக சபரிமலை நிகழ்வை வைத்துத் தனது ஆற்றலை ஒருங்கிணைக்கவும், பொதுவாக மக்கள் ஆற்றலை மதவாதமாக மாற்றவும் பிஜேபி முயன்றது. அதற்கு அதை சட்டவாத நடைமுறைக்குள் கொண்டுவர ஆர்.எஸ்.எஸ். முயன்றது. அது முடியவில்லை.

அதனால் அதுவே அதை சிக்கலாக்கிப் பிரச்சினையை பெருக்க நினைத்தது. அதற்கும் முடியாதநிலையில் மற்ற அமைப்புகள் நடத்தும் இத்தகைய நுழைவுகள் அவற்றின் சக்தியைக் கூட்டவே செய்யும். அவர்களது நோக்கம், சபரிமலைக்குப் பெண்களை வரவழைப்பதுதான். அது நடந்தாலும் அவர்களுக்கு நல்லதுதானே.

மதவாத அரசியல் முன்வைக்கப்படும் இச்சமூகத்தில், இதுபோன்ற போராட்டங்கள் மத உரிமையைக் கோருவதன் வழியாக, மதவாதமாக மாறுவதே நிகழும். அதில் இத்தகைய போராட்டங்கள் அந்த சக்திகளையே வலுப்படுத்தும். உண்மையில் இடதுசாரிகள் போராட வேண்டியது பிஜேபியின் இந்த இரட்டை நிலைகளை அம்பலப்படுத்தியே.

பிஜேபி இந்துமதத்தை காக்கும் நிறுவனம் என்பதே இந்த ஆட்டத்தில் ஒரு உறுதிப்படுத்தப்பட்ட கருத்தியலாக மாறும். உண்மையில் கோவிலுக்குச் செல்ல முனையும் பெண்களை பாதுகாப்பது மட்டுமே மக்கள் பணி. பெண்களே போக விரும்பாத மனத்தடையை யார் நீக்குவது? அது முற்போக்காளர் வேலையா? இதைத்தான் பிஜேபி விளையாட்டு என்கிறேன். முற்போக்காளர்களை அவர்கள் ஆட்டத்தில் இழுக்கிறார்கள்.

இதே ஆட்டத்தைதான் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தில் ஈழத் தமிழர்களை புறக்கணிப்பதன் வழியாக ஆடுகிறார்கள். தமிழனா? இந்துவா? என்கிற விளையாட்டை நுட்பமாக உருவாக்குகிறார்கள். பாபர் மசூதியில் அவர்களது இரட்டை விளையாட்டு ஒரு புறம் இஸ்லாமியரை வென்றதாகக் காட்டுவது, மறுபுறம் எதிர்க்கும் அமைப்புகளை இந்து விரோதியாகக் காட்டுவது.

பாலியல் வன் கொடுமைகளில் மக்களை திசைதிருப்ப என்கவுண்டரைச் செய்வது, அதே பாலியல் வன்கொடுமையில் ஈடுபட்ட பாஜக மற்றும் பார்ப்பன உயர் சாதியினரை சட்டவாதத்திற்குள் வைத்து தீர்ப்பு என்ற பெயரில் காப்பது. மக்களை உளவியல் ரீதியாக கொலை வெறிகொண்ட போலிமோதல் கொலைகளை ரசிக்கும் பாசிச மனம் கொண்டவர்களாக மாற்றுவது.

உடனடித் தீர்வு என்ற மனநிலையை வளர்த்து, காஷ்மீர் சிறப்புச் சட்டம் 370ஐ நீக்கி பல ஆண்டுகள் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு என்று படம் காட்டுவது. ஆக, இந்திய இறையாண்மையும், சட்டம் என்கிற கண்காணிப்பு கோபுரமும் இணைந்து, ஒரு புதியதொரு மதவாத இந்துத்துவ இறையாண்மையை நிலைநாட்டும் வடிவத்தை நோக்கி மொத்த இந்திய சமூகத்தை இழுத்து செல்வதே தற்போதைய இறையாண்மை நிறுவனங்களின் நடவடிக்கையாக உள்ளது.

- ஜமாலன்

Pin It