நம் நாட்டைப் பொறுத்தமட்டில் பல காலமாக வழக்கத்திலிருந்து வந்த ‘தேவதாசி முறை’, ‘பெண்ணடிமைத்தனம்’ - போன்றவற்றுக்கு எதிராக எழுந்த கலகக்குரல்கள் மிகவும் குறைவு. இதை நாம், நம் கடந்தகால வரலாற்றைப் - புரட்டிப் பார்த்தால் தெரிந்து கொள்ளமுடியும். எங்கெங்கு காணினும் வியாபித்துக் கிடக்கும் இந்தக் கொடு மைக்கு எதிராக நாட்டில் அங்கொன்றும் இங்கொன்றுமாக மெல்லிதாகக் கேட்ட சில கலகக் குரல்களைத் தவிர்த்தால் இவற்றுக்கு எதிராக நம் நாட்டில் பெரிய அளவில் எதுவும் நடைபெறவில்லை என்றே சொல்லலாம்!

இவற்றுக்கு மாறாக, ‘இவை நம் சமூகத்தில் நிலை நிறுத்தப்பட வேண்டும் என்றும், இந்த வழக்கம் சமூகத்தில் காலம் காலமாக இருந்து வருவது இது, மேலும் தொடர வேண்டும்’ என்ற குரல்களும் கூட ஓங்கி ஒலிப்பதைக் (சமூகத்திலும், ஏன் கலை இலக்கியங்களிலும்கூட) கேட்க முடிகிறது.

நடைமுறை வாழ்க்கையில் இன்றும் கூட இந்த வழக்கம் (பெண்களை அடிமைகளைப்) போல் நடத்துவது, பாலியல் வன்முறை, குடும்பத்திற்குள்ளே பெண்களுக்கு இரண்டாவது இடமளிப்பது, பாலியல் தொழில், உடன்கட்டை ஏறுதல், போன்றவை வெளிப்படையாகவும் நம் சமூகத்தில் காணப்படத்தான் செய்கிறது.

அன்றைய நிலவுடைமைக் காலத்தில் பெருங் கோயில்களில் ‘தேவதாசிமுறை’ இருந்துவர அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது. மன்னர்கள் தங்களுக்கு விருப்பமான இளம் பெண்களை உடனிருக்க, அந்தப்புரத்திற்கு அழைத்துச் செல்லலாம்! அந்த விஷயத்தில் இன்றும் கூட நாம் ஒன்றும் மோசம் இல்லை.

பம்பாய், கல்கத்தா போன்ற மாநகரங்களில் விபச்சாரத்தை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. இம்மாதிரி நடவடிக்கைக்கு எதிராக அரசு எந்தவித சட்ட நடவடிக்கையையும் மேற்கொள் வதில்லை. எது, எப்படியே? நம் ஆணாதிக்கச் சமூகம், பெண்ணடிமைத்தனம் - சமூகத்தில் இருப் பதை ஒழிக்க விரும்பவில்லை. அது, ஆணாதிக்கச் சமூகத்தின் நிர்ப்பந்தமும் கூட!

ஒரு காலகட்டத்தில் உயர்சாதி இந்துக்களில் கல்வியறிவு பெற்ற சமூக சீர்திருத்தவாதிகளில் சிலர் பெண்கல்வி, விதவை மறுமணம் போன்ற வற்றுக்கு ஆதரவாக எழுப்பிய கலகக் குரல்களும், இயக்கச் செயல்பாடுகளும் அவர்களுடைய மறைவுக்குப் பிறகு அடியோடு நின்று போனது. அப்படியே அவர்கள் தொடங்கி வைத்த இயக்கங்கள் இருந்தாலும் கூட அவை பெண்ணடிமைத் தனத்திற்கு எதிராகக் கலகக்குரல்களை எழுப்புவது கிடையாது.

தலித் போராளியான டாக்டர் அம்பேத்கர் இவற்றுக்கு எதிராக உரக்கக் குரல் கொடுத்த தோடு, அவற்றிலிருந்து பெண்கள் விடுதலை பெற்று (குறிப்பாக தாழ்த்தப்பட்ட பெண்கள்), எவ்வாறு வாழவேண்டும் என்றும் சுட்டிக் காட்டினார். அவர் வெறும் மேடைப் பிரசங்கத்துடன் நின்று விடாமல் நடைமுறை வாழ்க்கையில் தாழ்த்தப்பட்ட பெண்கள் வாழும் பகுதிகளுக்கு இறங்கிச் சென்று, நேருக்கு நேர் சந்தித்து, பல சிறந்த கருத்துக்களையும் அவர் வழங்கினார்.

பெண்ணடிமைத்தனமும், பாலியல் தொழிலும் சமூகத்தில் ஒரே மாதிரியாக நிகழ்வதில்லை. உயர் சாதியினரில் ஒரு வகையாகவும், தாழ்த்தப்பட்டவர்களில் இன்னொரு வகையாகவும் வழக்கத்தில் இருந்து வருவதைக் காணலாம்.

சாதிய ரீதியாக இந்த இரண்டு பிரிவினரையும் தரம்பிரித்து, டாக்டர் அம்பேத்கர் ஆய்வில் ஈடுபட்டிருக்கிறார்.

ஒரு இடத்தில் டாக்டர் அம்பேத்கர் கீழ்க் கண்டவாறு குறிப்பிடுகிறார். “இந்திய சமுதா யத்தைத் தவிர வேறு எந்த நாகரீக சமுதாயத்திலும், நாகரீகமற்ற பழங்காலத்திற்குரிய மிச்ச சொச்ச சின்னங்கள் நிலவி வருவதைக் காணமுடியாது,” (பாபாசாகேப். டாக்டர். அம்பேத்கர் நூல் தொகுப்பு: தொகுதி-1, பக்கம்- 11)

ஆம்; அது நூற்றுக்கு நூறு உண்மைதான். அவருடைய இந்த வரையறையை நம் நாட்டுப் பெண்கள் விஷயத்தில் பொருத்திப் பார்த்தால் புரிந்து கொள்ள முடியும். திருமணமான ஒரு பெண்ணின் கணவன் இறந்ததும், அவளையும், அவனோடு வைத்து எரிக்கும் வழக்கம் உலகில் வேறு எங்கு காணமுடியும்? ‘சமூகத்தில் ஒரு ஆண் இறந்ததும், எண்ணிக்கையில் அதிகமாகக் காணப் படும் பெண்ணுக்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். இல்லையெனில் அவள், தன் இன ஒழுக்கத்தை மீறிக் கலப்புமணம் செய்துகொண்டு, அவளது குழுவின் அகமணப் பழக்கத்தைச் சீர்குலைத்து விடுவாள்’.

நம் நாட்டில் கணவன் இறக்கும் போது பெண் களின் எண்ணிக்கை தேவைக்கு மிகுதியாகிறது. அவர்களுக்கு இன்னும் வாழ்நாட்கள் மீதம் இருக்கின்றன. உணவைப் போன்று, மனித உயிர் களுக்கு உடல் தேவையும் இருக்கிறது. இதை நிறைவேற்றிக் கொள்ள ஆணுக்குப் பெண்ணும், பெண்ணுக்கு ஆணும் தேவை. ஆனால், கணவன் இறந்து போனான்! நல்லதோர் வீணை. அதை என்ன செய்வது? நலங்கெடப் புழுதியில் எறிய முடியுமா? உயர்சாதி இந்துக்களின் வழக்கப்படி அதை ‘நலங்கெடப் புழுதியில் எறிய வேண்டும்’, என்பதே.

‘சாதியின் அகமண வழக்கத்தைக் காப்பாற்று வதற்காக அவளுக்கு இருவேறு வழிகளில் முடிவு கட்டலாம்!’

‘முதலாவது, இறந்துபோன அவளுடைய கணவனை எரிக்கும் ஈமச்சிதையிலேயே அவளையும் சேர்த்து எரித்து, இல்லாமல் செய்து விடுவது.’

‘இரண்டாவது வழி, எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் அவளை விதவையாக்கி, வற்புறுத்தி வைப்பது. பிற விளைவுகளைக் கருதிப் பார்க்கும் போது, விதவையாக வைத்துக் கொண்டிருப்பதை விட அவளை எரித்து விடுவதே நல்ல தீர்வாக அமையும்.’

‘இந்து சமூகம், ஒரு பெண்ணிடம் ஈவு, இரக்கம் இல்லாமல் ஏன் இப்படி நடந்து கொள்கிறது?’

அதற்குரிய விடையை டாக்டர் அம்பேத்கர் வழங்குகிறார்.

‘... இப்படிச் செய்வதால் (அப்பெண்) தன் சாதிக்கு உள்ளேயோ, வெளியேயோ மறுமணம் புரிந்து கொள்ளக்கூடிய பிரச்சினை தீர்ந்து போகிறது. அதனால், அவளைக் கட்டாயப்படுத்தி விதவையாக வைத்திருப்பது, எரித்துவிடுவதை விட மேலானது’.

டாக்டர். அம்பேத்கர் மேலும் தொடர்கிறார்:

‘இந்து சமூக அமைப்பின் இயக்கம் குழப்பமாகத் தோன்றினாலும் அந்தச் சமூகம் மனைவிக்கென அமைந்த மூன்று தனித்தன்மைகள் கொண்ட வழக்காறுகளை வெளிப்படுத்துகின்றன.’

1. ‘சதி அல்லது இறந்துபட்ட கணவனின் உடலோடு அவன் மனைவியையும் சேர்த்து எரித்தல்.’

2. ‘விதவை மறுமணம் புரிந்து கொள்ள முடியாதவாறு தடுத்து, கட்டாயப்படுத்தி விதவைக் கோலம் பூண வைப்பது.’

3. ‘பேதை (சிறுபெண்) மணம் - ஆக, சாதிக்குச் சாதி, குலத்துக்குக்குலம் பெண்ணடிமைத் தனம் வேறுபட்ட நிலையில் காணப்படுகிறது’ என்று டாக்டர் அம்பேத்கர் வரையறுத்துக் காட்டுகிறார்.

இனி, தாழ்த்தப்பட்ட குலத்தைச் சேர்ந்த பெண்களின் நிலையினையும், அவர்கள் வாழ்க் கையையும் கூர்ந்து கவனித்த டாக்டர் அம்பேத்கர், அவர்களை விமர்சிப்பதோடு அவர்கள் முன்னேற சில கருத்துக்களையும் முன் வைக்கிறார்.

1936, ஜுன் மாதம் 16-ஆம் தேதி இரவில், ‘தேவதைகளுக்காக அர்ப்பணிக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்த ஆண்களுக்கும் பெண்களுக்குமாகச் சேர்த்து போயா பாவாடியிலுள்ள தாமோதர் ஹாலில் வைத்து, ஒரு பொதுக்கூட்டம் நடத்தப் பட்டது.

இந்தப் பகுதியில் அதிகமாக வசித்து வந்த வர்கள் முரளிகள், ஜோக்திணிகள், தேவதாசிகள் போன்ற சபிக்கப்பட்ட வர்க்கத்தைச் சேர்ந்தவர் களாக இருந்தார்கள். அனைவரும் தாழ்த்தப் பட்ட குலத்தைச் சேர்ந்த ஏழை- எளிய மக்கள். இப்பெண்கள் வேலை இல்லாததினால் தங்கள் குடும்பத்தை நடத்திக் கொண்டுபோவதற்காகவும், வயிற்றுப் பிழைப்பிற்காகவும் வேண்டி பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள். அங்கே மஹர் சமுதாய மக்கள் நடத்திய மாநாட்டிற்குப் பிறகு, இந்தத் தொழிலில் ஈடுபட்டு வந்த மக்கள் தங்கள் நிலைமைகளைப் பற்றிச் சிந்திக்க ஆரம்பித்தார்கள். பின்னர், அவர்களும் இந்தத் தொழிலில் சம்பந்தப் பட்ட ஆண்களும் சுயமாகக் கூடிக் கலந்து பேசி, ஒரு பொதுக்கூட்டம் நடத்தவும், அதில் கலந்து கொள்வதற்காக வேண்டி டாக்டர் அம்பேத்கரை அழைத்து, தங்கள் எதிர்காலம் பற்றி உபதேசம் கேட்கவும் தீர்மானித்தார்கள். இதன் அடிப் படையில் ஜுன் மாதம் 16-ஆம் தேதி பொதுக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் ஏராளமான பெண்களும் (குறிப்பாக பாலியல் தொழிலாளிப் பெண்கள்), ஆண்களும் கலந்துகொண்டனர்.

அந்தப் பொதுக்கூட்டத்தில் டாக்டர் அம் பேத்கர் ஆற்றிய அந்த உரையை, அவர் மேடை களில் ஆற்றிய உரைகளிலேயே மிகச்சிறந்த உரை என்றுகூடக் குறிப்பிடலாம். அதன் உள்ளடக்கம் பின்வருமாறு:

“நான் உங்களிடம் சொல்கிறேன், நீங்கள் பழைய மாதிரியே மஹர் சாதியினரைக் கேவலப் படுத்தும்படியான கீழ்த்தரமான தொழிலை விட்டுவிடவில்லையென்றால், நாங்கள் ஆயிரம் ‘சுயம் சேவகர்’ (டாக்டர். அம்பேத்கரின் ஆதர வாளர்கள்) காமாடிப்புரைப் பகுதிக்கு வந்து, உங்களைத் துரத்தித் துரத்தி அடிப்போம்.

பெண்கள் என்று சொன்னால், அவர்கள் சமூகத்தில் அலங்காரம் என்று நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு சமுதாயத்தினரும் பெண்களின் கற்புக்கு மிகப் பெரிய அளவில் மதிப்பளித்து வருகிறார்கள். தான், திருமணம் பண்ணிக் கொள்ளப் போகும் பெண், நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவளாக இருக்க வேண்டும் என்று நம் நாட்டிலுள்ள ஒவ்வொரு ஆணும் விரும்புகிறான். அந்தமாதிரிப் பெண் கிடைப்பதற்காக வேண்டி, அவன் படாதபாடு படுகிறான். காரணம் அவர்களுக்குத் தெரியும், அவர்களுடைய குழந்தைகள், குடும்பம், குலம்- கோத்திரம் போன்றவைகளின் பெருமை சமூகத்தில் பெண்களின் நடத்தையை அடிப்படையாகக் கொண்டே கட்டமைக்கப் பட்டிருக்கிறது என்று. பெண்களைப் பொறுத்த வரை இவ்வளவு பெருமைகள் உள்ளன.

ஆனால், காமாடிப்புரையிலுள்ள வாழ்க்கை யானது, தாழ்த்தப் பட்ட சாதி மக் களுக்கும், பெண் குலத்திற்கும் களங்கம் ஏற் படுத்துவதாக உள்ளன. ஆகை யினால் உங்களுடைய பெண்களுக்கு சமூகத்தில் என்ன மதிப்பு இருக்கிறது? இதைப் புரிந்து கொண்டு இந்த நாற்றமடிக்கும் வாழ்க்கையை நீங்கள் ஒழித்துக் கட்டவேண்டும். அதன் மூலம் அவனவனுடைய சாதியின் அந்தஸ்தையும், புகழையும் மீட்டுருவாக்கம் செய்ய வேண்டும்.

ஒருவேளை நீங்கள் இவ்வாறு சிந்திக்கலாம்! ‘இது, நம்முடைய நிரந்தரமான வருமான மார்க்கம் அல்லவா, என்று. அது மட்டுமல்ல; இதனால் எவருடைய உதவியையும் எதிர்பார்க்காமல் வாழ்க்கையை சுகமாக முன்னோக்கி நடத்திக் கொண்டு போகவும் முடியும். நமக்கு வேலை செய்பவர்கள் உண்டு; சுகபோகங்கள் உண்டு. இந்த சுகபோகங்கள் இருக்க, நாம் என்ன செய்ய வேண்டும், - இவ்வாறெல்லாம் நீங்கள் நினைக்கலாம்.

நான், உங்களிடம் இந்த வெட்கங்கெட்டத் தொழிலை கைவிடச் சொல்லும் அதே வேளையில், இன்னொரு விஷயத்தையும் சுட்டிக் காட்ட விரும்புகிறேன்.

நீங்கள் பிழைப்பதற்கான வேறொரு தொழிலுக் குரிய உத்தரவாதத்தை நான் ஏற்றெடுக்கப் போவ தில்லை. இன்று ஆயிரக்கணக்கான பெண்கள் தரித்திரத்தில் வாழும் ஆண்களைக் கட்டிக்கொண்டு சொல்லொணாத வகையில் வறுமையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். பசியைப் போக்க அவர்கள் பல கஷ்டங்களை சந்திக்க வேண்டியிருக்கும். ஆயிரக்கணக்கான பெண்கள் தொழிற்சாலைகளிலும், மில்களிலும் எல்லாக் கஷ்டங்களையும் பொறுத்துக் கொண்டு வேலை செய்து தங்கள் பிள்ளைகளின் அரைவயிற்றுப் பாட்டுடன் தங்கள் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறார்கள். ஆனால், அப்பெண் களெல்லாம் உங்களைப் போன்று பாலியல் தொழிலில் இறங்குவது கிடையாது. அவர்களெல்லாம் ஏன், அந்தத் தொழிலில் இறங்குவதில்லை? பிற தொழிலாளிப் பெண்கள் அப்படிக் கஷ்டப்பட்டு உழைக்கக் காரணம் என்ன?

நீங்கள் சிந்தித்துப் பாருங்கள். மகாபாரதத்தி லுள்ள ஒரு கதையை நீங்கள் கேட்டிருக்கலாம். சூது விளையாட்டில் தோற்றுப்போன பாண்ட வர்கள் மரவுரியும், மான் தோலும் அணிந்து கொண்டு வனவாசம் போனார்கள். அவர்களோடு அதே உடையில் திரௌபதியும் இருந்தார்கள். இதைக்கண்ட கௌரவத் தலைவனான துரியோதனன் அவளிடம் சொன்னான்.

‘நீ, ஏன் இந்த முட்டாள்தனமான கணவர் களுடன் சேர்ந்து உன் வாழ்க்கையைப் பாழாக்கப் போகிறாய்? உனது அழகான மேனியை நீ, ஏன் நோகடிக்கப் போகிறாய்? நீ, என்னோடு வா? நான், உன்னை மகிழ்ச்சியாக வைத்திருக்கிறேன். உனக்கு ஒருபோதும் கவலை ஏற்படாது’ என.

அந்த வேளையில் திரௌபதி துரியோதனனுக்கு அளித்த மறுபதிலை நீங்கள் கேட்க வேண்டும். அவள் சொன்னாள்: ‘எனக்கு நேர்மையான வழியில் வாழ்ந்து கிடைக்கும் மகிழ்ச்சி போதும். சீர்கெட்ட முறையில் வாழ்ந்து கிடைக்கும் சுகம் எனக்குத் தேவையில்லை. அரண்மனை வாழ்வை விட என் கணவர்களுடன் சேர்ந்து வாழும் வனவாச வாழ்வே மேலானது’ என்று.

- இதே லட்சியத்தை நீங்களும் உங்கள் வாழ்க்கையில் கடைப்பிடிக்க வேண்டும். நீங்கள் ஏன், கஷ்டப்படுவதற்குப் பயப்படுகிறீர்கள்? கிராமங்களுக்குச் சென்றோ, அல்லது வேலைவாய்ப்புள்ள வேறு பல இடங்களுக்குச் சென்றோ வேலை செய்து பிழைத்துவரும் ஆயிரக்கணக்கான பெண்களைப் போல் உங்களால் உழைத்து வாழ முடியாதா? நீங்கள் ஏன், இப்படிப்பட்ட கேவலமான தொழில் செய்து சாதிக்கு களங்கம் ஏற்படுத்துகிறீர்கள்? இந்தத் தொழிலில் ஈடுபட்டு மஹர் சாதி மக்களுக்கு எவ்வளவு இழிவான கண்ணோட்டத்தை ஏற் படுத்தி வைத்திருக்கிறீர்கள் என்று ஒரு வேளை உங்களுக்குத் தெரியாமல் இருக்கலாம். ஆனால், உங்களால் நாங்கள் ஒவ்வொரு நிமிடமும் தலை குனிந்து நடக்க நேரிடுகிறது.

கொஞ்ச வருடத்திற்கு முன்னால் காமாடிப் புரைக்கு ஒரு கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக வேண்டி போயிருந்தேன். அங்கே கல்வியறிவைப் பற்றிப் பேசும் போது குறிப்பிட்டுச் சொன்னேன். அரசு கல்வி விஷயத்தில் இசுலாமியர்களுக்கு அளித்துவரும் உதவியை நமக்குச் செய்வதில்லை என்று. அது, உண்மையுங்கூட!

அந்த இடத்திலிருந்த இசுலாமியர் ஒருவர் என்னிடம் கேட்டார்: ‘மஹர் சாதியினராகிய நீங்கள் ஏன், எங்கள் மீது இவ்வளவு கோபப்படு கிறீர்கள்? நாங்கள் ஒன்றோ, இரண்டோ மஹர் பெண்களை வைத்திருக்கிறோம் இது போதாதா, உங்களுக்கு?’ என்று.

அந்த குத்தல் மொழிக்கு நான் மறுபதில் சொல்லவில்லை. ஆனால், அந்த வார்த்தைகளைக் கேட்டு நான், எந்த அளவுக்கு மனவேதனை அடைந்திருப்பேன் என்று கற்பனை பண்ணிப் பாருங்கள். உச்சி முதல் உள்ளங்கால் வரைக்கும் வேதனை படர்வதற்கான காரணம், உங்கள் காமாடிப்புரை வாழ்வுதான்!

அதனால் நான், உங்களிடம் மீண்டும் மீண்டும் கேட்டுக் கொள்கிறேன், நீங்கள் நல்ல மஹர் சாதி மக்களாக சமூகத்தில் வாழ வேண்டு மானால், நீங்கள் செய்து வரும் இந்த வெட்கங் கெட்டத் தொழிலை இப்போதே அடியோடு தூக்கி எறியுங்கள். இந்தத் தொழிலில் ஈடுபட்டீர்கள் ஆனால் நீங்கள், எங்களோடு வரவேண்டாம்! நாங்கள் உங்களை அனுமதிக்கவும் மாட்டோம்!

இவ்வளவு சொன்னதுக்குப் பிறகும் கூட, நீங்கள் இந்தத் தொழிலை கைவிடவில்லை யென்றால், நான் உங்களை இங்கேயிருந்து துரத்தி யடிக்காமல் விடமாட்டேன்.

எனவே நீங்கள் உடனே, ‘இந்த வாழ்வை விட்டுத் தொலையுங்கள்.’

- டாக்டர் அம்பேத்கர் தன் உரையை முடித்ததும் அங்கே கூடியிருந்த பெண்கள் அனை வரும் அதைக் கேட்டு பூரித்துப் போனார்கள். அவரது உரையானது, அப்பெண்களுக்கிடையே ஆவேச உணர்வை கிளப்பிவிட்டிருந்தது. ஸ‘ஜனதா’ நாளிதழ், ஜுலை, 1936].

ஆக, மேற்கண்ட விஷயங்களிலிருந்து சில கருத்துக்களைப் பெற முடிகிறது.

1. ஏற்றத்தாழ்வை தக்க வைத்துக் கொண்டிருக்கும் சாதியமைப்பையும், இந்து மதத்தையும் மிகக் கடுமையாக விமர்சித்த டாக்டர் அம்பேத்கர் சாதி பேதம் பார்க்காமல் பெண் விடுதலைக்காகவும் குரல் கொடுத்திருக்கிறார்.

2. பெண் விடுதலைக்கு முட்டுக்கட்டையாக இருப்பதில் இந்திய சாதியமைப்பும், இந்து மதமும், முக்கிய பங்கு வகிக்கின்றன.

3. இனவிருத்திக்குக் காரணமாக இருக்கும் பெண்ணுக்குக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டதற்கான முக்கிய காரணம், நாகரீகமற்ற பழங்காலத்திற்குரிய பண்பாடு மிச்ச சொச்சங்களைப் பாதுகாத்து வரும் குலம் - கோத்திரங்கள் அழிந்து விடாமல் இருக்கவும், அவற்றின் ஒழுக்கம் சீர்குலைந்து சாதிக்கலப்பு ஏற்படாமல் இருக்கவே!

4. ஒவ்வொரு பெண்ணும் (பாலியல் தொழி லாளிப் பெண்கள் உட்பட) உழைப்பில் ஈடுபட்டு வாழ்வில் முன்னேற வேண்டும்.

5. ஆண்களும் பெண்களும் சமத்துவமாக வாழ வேண்டும்.

இன்று பரவலாகப் பேசப்படும் அம்பேத் கரியத்தியலில் இவற்றையும் சேர்த்துக் கொள்ளலாம்!

Pin It