பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் குற்றங்கள் நீண்ட காலமாக மறைமுகமாகவும் வெளிப்படையாகவும் தொடர்கின்றன. இதன் தொடர்பாக அந்தந்த மாநிலங்களில் உள்ள சட்டங்கள் வழியாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வந்தன. பொதுவாக காவல் நிலையங்களில் விசராணைக்காக வரும் பெண்கள் மீது நடத்தப்படும் பாலியல் தாக்குதல்கள் பெருமளவில் மறைக்கப்பட்டு வந்தன. காரணம் சாதாரண ஏழை மக்கள் இதில் பெருமளவில் பாதிக்கப்பட்டனர். அரசியல் இயக்கங்கள் பெண்ணுரிமை இயக்கங்கள் போராடி குற்றவாளிகளுக்குத் தண்டனை பெற்றுத் தந்த பல நிகழ்வுகள் தமிழ்நாட்டிலும் உண்டு.
2012 திசம்பர் திங்களில் புது தில்லி நகரில் இரவு நேரத்தில் பயணம் செய்த நிர்பயா என்ற பெண் மீது ஒரு இளவர் உட்பட 6 நபர்கள் கூட்டுப் பாலியல் வன்முறையில் ஈடுபட்டனர். இச்செய்தி உலக அளவில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தலைநகர் தில்லியில் நடந்த இந்நிகழ்வால் இந்தியாவிற்கே தலைக்குனிவு என்று பலர் கருத்துத் தெரிவித்தனர். இதன் காரணமாக 2013இல் நாடாளுமன்றத்தில் இவ்விதக் குற்ற நடவடிக்கை களைத் தடுக்கும் நோக்கோடு விழிப்புணர்வை இந்தியாவின் சென்னை உட்பட எட்டு நகரங்களில் உள்ள கல்வி உயர் கல்வி நிறுவனங்களில் பெண்கள் பாதுகாப்புக்கென்று தனி அமைப்பை ஏற்படுத்த ரூ.1000 கோடி அளவில் ஒரு நிதியம் உருவாக்கப்பட்டது. பிறகு ஒன்றிய அரசின் நிதித் திட்டமாக அறிவிக்கப்பட்டு ரூ.3600 கோடியாக உயர்த்தப்பட்டது. இந்நிதியிலிருந்து 60 விழுக்காடு ஒன்றிய அரசின் பங்காகவும் மாநில அரசின் பங்கு 40 விழுக் காட்டு அளவாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது.
2019ஆம் ஆண்டு புள்ளிவிவரப்படி உத்தரப்பிரதேசத்தின் லக்னோ நகரைத் தவிர மற்ற மாநிலங்கள் இந்த நிதியைப் பயன்படுத்தாதது பெரும் அவலமாகும். நீண்ட உறக்கத்தில் உள்ள தமிழ்நாடு அரசும் இந்நிதியைப் பயன்படுத்தவில்லை. இந்நிகழ்வைத் தொடர்ந்து 2013இல் பணிபுரியும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுககும் சட்டம் (தடுத்தல் பாதுகாத்தல் குறைதீர் சட்டம்) நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றபட்டது. இச்சட்டத்தின்படி இந்தியாவில் பல மாநிலங்களில் பலர் மீது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது. இந்தியாவின் தலைசிறந்த புலனாய்வு ஏடு என்று புகழப்பட்ட தெகல்கா ஆசிரியர் தருண் தேஜ்பால் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சுற்றுச்சூழல் பிரச்சினைகளின் ஆய்வாளர் இந்திய அரசின் சார்பில் பலப் பன்னாட்டுச் சுற்றுச் சூழல் பாதுகாப்பு அமைப்புகளில் பங்கு பெற்ற 79 வயது நிரம்பிய திருவாளர் இராசேந்திர கே. பச்சோரி மீதும் 2015 வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பன்னாட்டு சுற்றுச்சூழல் அமைப்பின் தலைவர் பதவியிலிருந்து பச்சோரி விலகினார். 2007இல் அமைதிக்கான நோபல் பரிசை இருவருக்கு அளித்த போது பச்சோரியும் அமெரிக்காவின் துணை ஜனாதிபதி அல்கோருடன் பகிர்ந்து கொண்டனர். இவர் நீதிமன்றத்தில் பிணை கேட்ட போது. பச்சோரியை கைது செய்யாமலே கீழமை நீதிமன்றம் விசாரணையைத் தெடருமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் தெகல்கா முன்னாள் ஆசிரியர் தருண் தேஜ்பால் வழக்கில் கோவா உயர்நீதிமன்றம் பாலியல் குற்றச்சாட்டுகளைத் தண்டனைச் சட்டத்தின் பல பிரிவுகளின் கீழ்ப் பதிவு செய்து விசாரணையை 2013இல் தொடங்கியது. இதை எதிர்த்து தேஜ்பால் தன்னை வழக்கிலிருந்து விடுவிக்கும்படி கேட்டு உச்சநீதிமன்றத்தில் விண்ணப்பித்துள்ளார்.
கோவா நீதிமன்றம் தேஜ்பாலுக்கு முன்பிணை வழங்காமல் கைது செய்த பின் பிணை 2014இல் வழங்கியது. இவ்வாறு அவரவர் துறைகளில் புகழப் பெற்ற இருவர் மீது தொடர்ந்து வழக்குகள் நடைபெற்று வரும் நிலையில், உச்ச நீதி மன்றத்தின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் மீது பாலியல் குற்றப் புகாரை, உச்ச நீதிமன்ற முன்னாள் பெண் பணியாளர் உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நீதிபதிகளுக்கும் 2019 ஏப்ரல் திங்களில் அனுப்பினார். இதற்கு முன்பு 2014இல் உச்ச நீதிமன்ற நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று மேற்கு வங்கத்தின் மனித உரிமை ஆணையத் தலைவராகப் பணியாற்றிய அசோக் குமார் கங்குலி மீது, பெண் சட்டப் பயிற்சியாளர் தனக்குப் பாலியல் தொல்லைகள் கொடுத்ததாக கங்குலி மீது புகார் அளித்தார்.
2012இல் தன்னை உணவு விடுதி அறைக்கு அழைத்துச் சென்று அங்குதான் தவறாக நடக்க முயன்றார் என்ற கடுமைன புகாரையும் அந்தப் பெண் பயிற்சியாளர் குற்றம் சாட்டினார். மற்றொரு உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியும் பஞ்சாப் அரியானா மாநிலங்களின் சுற்றுச்சூழல் ஆணையத்தின் தலைவருமான சுவதன்தர் குமார் மீது பெண் சட்டப் பயிற்சியாளர் 2014இல் பாலியல் குற்றம் சாட்டினார். இந்த நீதிபதிகள் இருவரும் எப்படியோ ஒரு விதத்தில் வழக்குகள் பதியாமல் பாதுகாக்கப்பட்டனர்.
இச்சூழலில் ரபேல் விமான ஒப்பந்த விவாகாரத்தை மீண்டும் கோகாய் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு விசார ணைக்கு எடுத்துக் கொண்ட போது கோகாய் மீது பாலியல் குற்றச்சாட்டு ஒரு பெரும் விவாதத்தைச் சட்ட வல்லுநர்கள் மத்தி யிலும் முன்னாள் நீதிபதிகள் ஊடகக் கட்டுரையாளர்கள் மத்தியிலும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 2019 நவம்பர் திங்களில் கோகாய் ஓய்வு பெறுகிறார். இவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டில் பல வினாக்கள் எழுப்பப்படுகின்றன. இந்த வழக்கை விசாரித்த அமர்வில் இவர் தலைமை தாங்கலாமா? உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளுக்குத் தார்மீக பொறுப்பு ஒன்றும் இல்லையா? சட்ட அடிப்படையில் தலைமை நீதிபதி தன் மீது உள்ள வழக்கையே விசாரிப்பது முறையா? பிறகு மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு அவசர அவசரமாக வழக்கை விசாரித்த முறையும், அந்த அமர்வு முன் பாதிக்கப்பட்ட பெண்ணிடம் வழக்கறிஞர் உதவியில்லாமல் விசாரணை நடத்தப்பட்டது சரியா? இவ்வித வினாக்களுக்கு ஒரு முடிவான விடைகள் காண்பது அரிதானதாகும்.
2013ஆம் ஆண்டு பணி புரியும் இடங்களில் பெண்கள் மீதான பாலியல் குற்றங்களைத் தடுக்கும் சட்டம் வருவதற்கு முன்பு 1972இல் மதுரா பாலியல் வழக்கை விசாரித்து உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு காவல் நிலையத்தில் இரண்டு காவலர்கள் இளம் வயது பழங்குடியின பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போதிய ஆதாரங்கள் இல்லை என்று விடுதலை செய்தது. இதற்கு நாடெங்கும் பெண்கள் அமைப்புகளும் மனித உரிமை அமைப்புகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்தன. 1992ஆம் ஆண்டு இராஜஸ்தான் மாநிலத்தின் பெண்கள் முன்னேற்ற நிறுவனத்தில் சமூகப் பெண் ஊழியர் பன்வாரி தேவி பணியாற்றினார்.
சமூகத் தீமையான சிறுமிகள் திருமணத்தை ஊர்ப்புறங்களில் தடைசெய்ய வேண்டும் என்பதற்குப் பரப்புரை மேற்கொள்ளவதே இந்த அமைப்பின் நோக்கமாகும். இப்பணியின் காரணமாக சிறுமிகள் திருமணத்தை ஒரு நிகழ்வில் தடுத்து நிறுத்தினார். இதற்குப் பழிதீர்க்கும் நோக்கோடுதான் உயர் சாதியினர் 1992ஆம் ஆண்டு செப்டம்பர் திங்களில் 5 நபர்கள் பன்வாரி தேவியின் கணவரின் முன்னிலையிலேயே அவர் பணி செய்யும் இடத்தில் கூட்டுப் பாலியல் பலாத்காரத்தைச் செய்தனர். உயர் சாதியினர் அழுத்தத்தால் பன்வாரிதேவியின் வழக்கு காவல் நிலையத்தில் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. அரசு மருத்துவரும் மருத்துவப் பரிசோதனை செய்யவும் மறுத்து விட்டார். இதன் காரணமாகத் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் பெண்கள் கல்வி மற்றும் ஆய்வு நிறுவனமும் இணைந்து உச்ச நீதிமன்றத்தில் 1997இல் வழக்குத் தொடர்ந்தனர். இதை “விஸாகா வழக்கு” என்று கூறுவர். இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் மனித உரிமை மீறலாக இவ்வழக்கு இருப்பதால் ஒரு விரிவான வழிகாட்டும் நெறிகளைத் தீர்ப்பில் அன்றைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி வர்மா தலைமையிலான நான்கு நீதிபதிகள் கொண்ட அமர்வு வழங்கியது.
அதில் பின்வரும் நெறிமுறைகளை அரசமைப்புச் சட்டம் 141ஆம் பிரிவின்படி அமைக்கும்படி வலியுறுத்தியது. அரசமைப்புச் சட்டம் 141ஆம் பிரிவின்படி அளிக்கும் தீர்ப்புகள் இந்தியாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் பின்பற்ற வேண்டிய கடமையும் கட்டாயமும் உள்ளது. விஸகா வழிகாட்டுதல் நெறி: 1.பணியாற்றும் இடங்களில் உள்ள பணியமர்த்துவர் பணியாற்று பவர் அனைவருக்கும் பொருந்தும். 2.பணியாற்றும் இடங்களில் பணியமர்த்துபவர் எவ்விதப் பாலியல் தொல்லைகளையும் தடுக்கும் பொறுப்பு உள்ளது. 3.இந்தப் பாலியல் தொல்லைகளை விசாரிக்க ஒரு புகார் கூறும் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். 4.பாலியல் புகார்களை இந்த அமைப்பின் விசாரணைக்கு உட்படுத்தி உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். 5.1993ஆம் ஆண்டின் மனித உரிமைப் பாதுகாப்புச் சட்டத்தின் படி எவ்விதத் தடையையும் வழக்கு விசாரணையின் போது ஏற்படுத்தக்கூடாது. 6.தொழிலாளர்கள் கூட்டத்தில் பாலியல் குற்றச்சாட்டுகளைக் கூறுவதற்குப் பணியமர்த்துபவர்கள் இடமளிக்க வேண்டும். 7.பணியிடங்களில் பெண்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் நோக்கோடு இவ்வித உயர் நெறிகளை அறிந்து கொள்வதற்கு விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இந்த நெறிமுறைகளில் பலவற்றை 2013ஆம் ஆண்டின் பெண்கள் பாதுகாப்புச் சட்டம் முழுமையாகப் பின்பற்றவில்லை என்று பல சட்ட வல்லுநர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.
1997ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றம் அளித்த நெறிமுறைகளை உடனடியாகப் பின்பற்றாத காரணத்தினால் தான் பல மாநிலங்களிலும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பெருகின. உச்ச நீதிமன்றம் அளித்த வழிகாட்டு நெறிகளை உச்ச நீதிமன்றமே தற்போது ஏன் பின்பற்றவில்லை? என்ற வினாவும் எழுகிறது. தமிழ்நாட்டில் ஓய்வு பெற்ற நீதிபதிகள் திரு.சந்துரு, திரு.அரி பரந்தாமன் போன்றவர்கள்தான் உச்ச நீதிமன்றம் தனக்குத்தானே வழங்கிய தீர்ப்பை நடுநிலையோடு அணுகினர்; கண்டனங்களை எழுப்பினர். பெண் வழக்கறிஞர் களான அருள்மொழி; அஜிதா போன்றவர்கள் கடும் கண்டனங்களைத் தெரிவித்துள்ளனர்.
பெண்கள் பாதுகாப்பு, அதற்குரிய சட்டங்கள் இன்றைக்குக் கேள்விக்குறியாக மாறியுள்ளன போன்ற ஐயங்கள் ஏற்பட்டு வருகின்றன. சனாதன தர்மம்தான் உச்ச நீதிமன்றத்தில் கோலேச்சுகின்றதா என்ற ஐயத்தையும் எழுப்பு கிறது. தலைமை நீதிபதி கோகாய், ஏ.கே.கங்குலி, சுவதன்தர் குமார் ஆகியோர் சனாதனத்தின் உச்சத்தில் அமர்ந்திருக்கின்ற சாதியைச் சார்ந்தவர்கள் என்பதற்காக இந்த விதிவிலக்கா? எல்லாப் பாலியல் வழக்குகளிலும் பாதிக்கப்பட்டவர்கள் சனாதனத் தின் கீழ்நிலைச் சாதி அமைப்பைச் சார்ந்தவர்கள் என்பதால் பாதிக்கப்பட்டாலும் அவர்களுக்கு நீதி கிடைக்கவில்லை என்ற கருத்தை மறுக்க இயலாது. இதற்காக அண்மையில் இந்து ஆங்கில நாளிதழில் (மே 24) முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்சு, ஆதித்ய மனுபர்வாலா இணைந்து எழுதிய கட்டுரையில் உச்சநீதிமன்றம் மேற்கத்திய நாடுகளில் பின்பற்றப்படும் சமூக இயல் சார்ந்த சட்ட இயலைப் பின்பற்றுவதைக் குறைத்துக் கொண்டு ஆக்கபூர்வமான சட்ட இயல் கோட்பாட்டைத் தனது தீர்ப்புகளில் பின்பற்ற வேண்டும் என்று கருத்துரை வழங்கியுள்ளனர். இந்த ஆக்கபூர்வமான சட்ட இயலில் நீதிபதிகள் தங்களை வரையறுத்துக் கொண்டு சமூகச் செயற்பாட்டாளர்கள் போல செயல்படாமல் இருக்க வேண்டும் என்று ஒரு கருத்தைத் தெரிவித்துள்ளனர். அரசு நிர்வாகத்தின் மற்ற துறைகளையும் மதிக்க வேண்டும். சட்டம் இயற்றும் அதிகாரம் நீதிபதிகளுக்குக் கிடையாது என்றும் இக்கட்டுரையில் வலியுறுத்தியுள்ளனர்.
மேற்கூறிய இரு சட்ட இயல் கோட்பாடுகளும் மேற்கத்திய சட்ட வல்லுநர்களால் முன்மொழியப்பட்ட கருத்துகளாகும். சாதியக் கட்டமைப்பைக் கொண்ட இந்தியச் சமூகத்தில் இன்றும் ஆதிக்கச் சாதியினர் நீதித் துறையில் 80 விழுக்காட்டிற்கு மேல் இருந்து கொண்டு தங்களின் பாதுகாப்பிற்காகவே நீதித் துறையைப் பயன்படுத்துகின்றனர் என்ற குற்றச்சாட்டையும் மறுத்துவிட முடியாது. சான்றாக, நீதி சட்ட வரையறைகளை மீறிவிட்டார் என்ற காரணத்திற்காக கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியான கர்ணன் அவர் பதவியில் இருக்கும் போதே தண்டிக்கப்பட்டு சிறை சென்றார்.
பாலியல் தொடர்பாக பல சட்டங்களும் தீர்ப்பு களும் இருக்கின்ற நிலையில் பாலியல் குற்றச்சாட்டுத் தொடர்பான இன்றைய உச்ச நீதிமன்றத்தின் நிலைப்பாடு பெரும் ஐயத்தையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. சாதிக்கொரு நீதி என்ற கோட்பாடு உயர் நீதிமன்ற முறைகளிலும் செயல்களிலும் இருக்கவே கூடாது என்பதை வலியுறுத்திய தந்தை பெரியார் அண்ணல் அம்பேத்கரின் சமூக இயல் சார்ந்த படைப்புகளை நீதிபதிகள் படித்துத் தெளிந்திருந்தால் சனாதன சாதியக் கோட்பாடுகளைத் தகர்க்கும் எண்ணம் வந்திருக்கும். இந்திய சமூகக் கட்டமைப்பில் இந்த இரு பெரும் சமூக சீர்த்திருத்தச் செம்மல்களும் வழங்கிய கருத்துகள் குறிப்பாக நீதிமன்ற வழிகாட்டுதல் நெறிகளாக அமைந்தால்தான் உண்மையான அனைத்துத் தரப்பினருக்குமான நீதி கிட்டும்.