இன்று தமிழகத்தில் மட்டுமல்ல; இந்தியாவில் மட்டுமல்ல; உலகெங்கிலும் பெண்கள் மற்றும் சிறுமிகள் மீதான பாலியல் வன் கொடுமைகள் பெருகி வருகின்றன.
உலக முதலாளித்துவத்தின் அதாவது, ஏகாதிபத்தியத்தின் அராஜக உற்பத்தி சமூகமயமாகி உள்ளது. அதாவது, சோவியத் தகர்வுக்கு முன் “சரி-தவறு” என்ற நெறிகள் இருந்தன. ஆனால், இப்பொழுது “எதையும் செய்” “செய்வதெல்லாம் சரியானதுதான்” என்ற கருத்தாக்கங்கள் பலமாக விதைக்கப்பட்டுள்ளது.
ஹாலிவுட்டிலிருந்து உள்ளுர் திரைப்படங்கள் வரை இக்கருத்துக்களையே போதிக்கின்றன. புதிதாக வந்துள்ள சமூக ஊடகங்களும் இவற்றை சிந்தனையில் புகுத்துகின்றன. இவற்றிற்கு அதிகமாக பலியாவது ஆண்கள்தான். இதனால் இவர்கள் எல்லாவிதமான குற்றங்களுக்கும் தயாராகின்றனர். இதனால்தான் தனிநபர் குற்றங்களும் கும்பல் குற்றங்களும் பெருகுகின்றன.
இதில் சமூகத்தில் பின்தங்கிய பலவீனமான பிரிவான பெண்கள் மீது தாக்குதல் தொடுக்கப்படுகின்றது. திரைப்படங்கள், விளம்பரங்கள், ஊடகங்கள், ஆபாச வலைத்தளங்கள் பெண்களை போகப் பொருளாக்குகின்றன. இதனால் ஆண்களின் தாக்குதல் வக்கிரம் நிறைந்ததாகவும் கொடூரமானதாகவும் மாறுகின்றது.
இன்றைய நவீன பார்ப்பனீய - இந்துத்துவா பாசிசக் கும்பலின் வளர்ச்சிக் கட்டம் என்பது இந்தியாவில் பெண்களின் மீதான வன்முறைகள் பெருக முக்கிய காரணமாகிறது. அரசியல் கட்சிகளில் சங்பரிவார் கும்பலே வன்கொடுமைகளில் முதன்மையாக இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
குடும்பங்களில் ஆண் குழந்தைகளுக்கு சிறுவயதிலிருந்தே பெண்கள் பற்றிய சமத்துவ அறிவு ஊட்டப்பட வேண்டும். பள்ளிக் கூடங்கள் இருபாலர் பள்ளிகளாக்கப்பட வேண்டும். இதனால் இன கவர்ச்சி “பிரமை” யாக்கப்படுவது தவிர்க்கப்படும். பள்ளிகளில் பாலியல் கல்வி போதிக்கப்பட வேண்டும்.
பெண்கள் தங்களின் உடலை புனிதமாக பார்ப்பதிலிருந்து விடுபட வேண்டும். இதுவே இவர்களின் உடல் மீதான தொடர் வேட்டைக்கு காரணமாகும். அவர்களுக்குத் தமது உடல் மனித இன உற்பத்திக்காக உயிர் வாழும் ஒரு கருவி என்ற உயிரியல் அறிவு புகட்டப்பட வேண்டும்.
உழைக்கும் மக்களே! ஒடுக்கப்பட்ட மக்களே! பெண்கள் மீதான வன் கொடுமைகளுக்கு எதிராகப் போராடுவோம்!
- துரை.சிங்கவேல்