சில தினங்களுக்கு முன்னால், உச்சநீதிமன்றம் வயது வந்த, சுய ஒப்புதலோடு பாலியல் தொழிலில் ஈடுபடுவோர் விஷயத்தில் போலீஸ் தலையிடவோ, அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவோ கூடாது என்றும் அவர்கள் கண்ணியத்தோடு நடத்தப்பட வேண்டும் என்றும் குற்றவாளிகளைப் போல நடத்தப்படக்கூடாது என்றும் உத்தரவு பிறப்பித்துள்ளது.

2011 ஆம் ஆண்டு பாலியல் தொழிலாளி ஒருவர் மீது வழக்குத் தொடரப்பட்டதை தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்ட உச்ச நீதிமன்றம் முழு பிரச்னையையும் ஆராய ஒரு குழுவை அமைத்தது. அந்தக் குழு அளித்த பரிந்துரைகளை முழுமையாக ஆராய்ந்த பின்னர், மே 19, 2022 அன்று இந்த ஆணையைப் பிறப்பித்துள்ளது.

supreme court 600அந்தக் குழு உச்ச நீதிமன்றத்தில் அளித்த பரிந்துரையில் (1) கடத்தல் தடுப்பு, (2) பாலியல் தொழிலை விட்டு வெளியேற விரும்பும் பாலியல் தொழிலாளர்களுக்கு மறுவாழ்வு அளித்தல், மற்றும் (3) பாலியல் தொழிலைத் தொடர விரும்பும் பாலியல் தொழிலாளிகள் அதைக் கண்ணியத்துடன் தொடரும் சூழ்நிலை வேண்டும் போன்ற பரிந்துரைகளை அந்தக் குழு அளித்தது.

இதன் அடிப்படையில் சுய விருப்பத்தின் பேரில் பாலியல் தொழிலில் ஈடுபடுவோரை போலீஸ் கைது செய்யக்கூடாது, சட்டத்தின்கீழ் பாதுகாப்பு பெறுவதில் பாலியல் தொழிலாளிகளுக்கும் சம உரிமை உண்டு. வயது, சம்மதம் ஆகியவற்றைக் கணக்கில் கொண்டு குற்றவியல் சட்டம் எல்லோர் விஷயத்திலும் சமமாக செயல்பட வேண்டும், பாலியல் தொழிலாளியின் குழந்தைகள் அவர்கள் செய்யும் தொழில் காரணமாக அவர்களிடம் இருந்து பிரிக்கப்படக் கூடாது. மனித கண்ணியத்தின் அடிப்படைப் பாதுகாப்பு பாலியல் தொழிலாளிகளுக்கும், அவர்களது குழந்தைகளுக்கும் உரியது, வயது முதிராத, மைனரான ஒருவர் பாலியல் தொழில் விடுதியில் காணப்பட்டால், அந்த குழந்தை கடத்தப்பட்டதாகவே எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும், பாதிக்கப்பட்டவர்களோ, குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களோ யாராக இருந்தாலும், பாலியல் தொழிலாளிகள் கைது, மீட்பு, ரெய்டு நடவடிக்கைக்கு உள்ளாகும்போது அவர்களின் அடையாளத்தை வெளியிடாமல் தவிர்க்க ஊடகங்கள் கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும் என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.

உச்ச நீதிமன்றத்தின் இந்த உத்திரவுக்கு இடதுசாரிகள் தவிர மற்ற யாரும் பெரிய அளவில் எதிர்வினையாற்றியதாகத் தெரியவில்லை.

குறிப்பாக பண்பாட்டுக் காவலர்களான வலதுசாரிகளிடம் இருந்து எந்த எதிர்வினையும் வரவில்லை. காதலர்களைத் தாக்கி திருமணம் செய்து கொள்ள கட்டாயப்படுத்துபவர்களும், சாதி ஆணவக் கொலைகள் செய்பவர்களும் கள்ள மெளனத்தோடு இருக்கின்றார்கள். அதற்குக் காரணம் இல்லாமல் இல்லை. பல நூறு ஆண்டுகளாக பெண்களை விபச்சாரத் தொழிலில் தள்ளி அவர்களின் வாழ்க்கையை நாசமாக்கிய வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் இவர்கள்.

பொட்டுக்கட்டுதல் என்பது சமயம் சார்ந்த கோவில் சடங்காகவே இந்த சமூகத்தில் செய்யப்பட்டது. இச்சடங்கின் வாயிலாக ஒரு சிறுமி அல்லது இளம்பெண் அக்கோயிலில் தேவரடியராக மாற்றப்பட்டார். அவர்களுக்கு 'பதியிலார்', 'நித்திய சுமங்கலி', 'தேவடிமை' என பல பெயர்களை சூட்டி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தினர்.

மேல் சாதி ஆணாதிக்கப் பொறுக்கிகள் தன் மேலாண்மையை நிலைநாட்டவும், ஒடுக்கப்பட்ட மக்கள் எதிர்ப்பின்றித் தம் மேலாண்மையை ஏற்றுக் கொள்ளச் செய்யவும் இது போன்ற சடங்குகளை வைத்திருந்தார்கள். பாலியல், சாதி, பொருளியல் என்ற தன்மைகளால் அடித்தளத்திலிருக்கும் பெண்ணைப் பொதுமகளாக மாற்றும் புனிதச் சடங்கே பொட்டுக் கட்டுதல் ஆகும்.

சமய முத்திரையின் வாயிலாக வரைமுறையற்ற பாலுறவு புனிதமாக்கப்பட்டது. வாழ்வியல் தேவைகளான உணவு, இருப்பிடம் ஆகியன கோவிலால் உறுதி செய்யப்பட்டுவிட, மேல்சாதி ஆணாதிக்கப் பொறுக்கிகள் குறிப்பாக புரோகித, நிலவுடமையாளர்களின் பாலியல் தேவைகளை நிறைவடையச் செய்வது அவர்களது பணியாக இருந்தது.

அதனால் பெண்களை பாலியல் தொழிலில் சட்டப்படியே ஈடுபடுத்துவது அல்லது ஈடுபடுவது ஆணாதிக்கப் பொறுக்கிகளுக்கு உவப்பானதே ஆகும்.

நீதிமன்றம் கூட விபச்சாரத் தொழிலின் பின்னுள்ள சமூக, அரசியல் காரணங்களை ஆராயாமல் பாலியல் தொழிலுக்கு ஏதோ பெண்கள் விருப்பட்டு வருவது போலக் கூறுவது நீதிபதிகளின் மூளையில் உறைந்து போய் இருக்கும் சனாதனத்தைத்தான் காட்டுகின்றது.

இந்தியாவில் பெண்களின் பொருளாதார நிலையைப் பற்றி நாம் ஒரளவிற்கு தெரிந்து கொண்டால் பிரச்சினையின் வேரைப் புரிந்து கொள்ள முடியும்.

இந்திய சமூகம் தனது ஆணாதிக்கப் பிடியில் இருந்து பெண்களை விடுவித்து இருக்கின்றதா என்று பார்த்தோம் என்றால், அது மேலும், மேலும் அதிகமாகவே பெண்களை தனது ஆணாதிக்கத்தின் கோரப் பிடியில் வைத்திருக்க முயன்று கொண்டு இருக்கின்றது. பெண்களுக்கான தொழிற்வாய்ப்புகள் , வேலைக்குச் செல்லும் பெண்களின் பணிப் பாதுகாப்பு, அரசியலில் பெண்களின் பங்களிப்பு, வளங்களின் பங்கீடு போன்ற அனைத்திலும் இந்தியா மற்ற நாடுகளைக் காட்டிலும் மிகப் பின்தங்கியே இருக்கின்றது.

நாட்டின் மொத்த வருமானத்தில் பெண்களின் பங்களிப்பு என்பது வெறும் 17 சதவீதம் மட்டுமே ஆகும். சீனாவில் இது 41 சதவீதமாக உள்ளது. உலகத் தொழிலாளர் 'நிரோணம்' சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 20 விழுக்காட்டுக்குக் குறைவான பெண்கள் மட்டுமே மாத வருமானம் பெரும் பணியில் ஈடுபட்டுள்ளார்கள்.

50 விழுக்காடு பெண்கள் சுய தொழில் செய்பவர்களாகவும், கிட்டத்தட்ட 30 விழுக்காடு பெண்கள் ஐ.எல்.ஒ அளிக்கும் விளக்கத்தின்படி, 'குடும்பப் பணிகளில் உழைப்பைச் செலுத்துவோர்' என்ற பிரிவின் கீழ் வருபவர்களாகவும் இருக்கின்றனர்.

மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில், வட அமெரிக்க நாடுகளில் மாத வருமானம் ஈட்டுவோர் 89.4 விழுக்காடாகவும், ஐரோப்பிய நாடுகளில் 88.4 விழுக்காடாகவும், அரபு நாடுகளில் 75 விழுக்காடாகவும், லத்தின் அமெரிக்க நாடுகளில் 66.6 விழுக்காடாகவும், மத்திய மற்றும் மேற்கு ஆசிய நாடுகளில் 63.2 விழுக்காடாகவும், கிழக்கு ஆசிய நாடுகளில் 55.3 விழுக்காடும், ஆப்ரிக்க நாடுகளில் 21.4 விழுக்காடாகவும், அதுவே இந்தியாவில் 20 விழுக்காடாகவும் உள்ளது என்பதிலிருந்து, நமது பெண்கள் உழைப்பு சந்தையில் எந்த இடத்தில் உள்ளனர் என்பதை அறிந்து கொள்ள முடியும். (ஆதாரம் ஐ.எல்.ஒ அறிக்கை)

பெண்கள் மீதான உழைப்புச் சுரண்டல் என்பது இந்திய சமூகத்தில் அனைத்து மட்டங்களிலும் நீக்கமற நிறைந்துள்ளது. சமவேலைக்கு சம ஊதியம் என்பதெல்லாம் வெறும் 8 சதவீதமே உள்ள அமைப்பு சார்ந்த தொழில்களைத் தவிர 92 சதவீதம் உள்ள அமைப்புசார தொழில்களில் சாத்தியமில்லாமலேயே இருக்கின்றது.

துணிக்கடைகளிலும், கார்மென்ட்ஸ்களிலும், தனியார் மருத்துவமனைகளில், செவிலியர்களும், தனியார் பள்ளிகளில் ஆசிரியர்களும், வீட்டுவேலை செய்யும் பெண்களும் மிகச் சொற்ப கூலிக்கு கடுமையான உழைப்புச் சுரண்டலுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள்.

கல்வியை எடுத்துக் கொண்டால் இந்தியாவில் 65.5 விழுக்காடு ஆண்கள் படிப்பறிவு பெறும் நிலையில் 50 விழுக்காடு பெண்கள் மட்டுமே கல்வியறிவு பெறுகின்றனர். பெரும்பாலான பெண்களின் படிப்பறிவு பள்ளியோடு முடிந்து விடுகின்றது.

மேலும் ஆண் குழந்தையை விட பெண் குழந்தைக்கு சத்துணவு குறைவாகவே கிடைக்கிறது. பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் பலவீனமாகவும், நோய் எதிர்ப்பு சக்தி அற்றவர்களாகவும் உள்ளனர். குடும்பத்தில் அனைவரும் சாப்பிட்ட பின்னர் கடைசியாகவும் மீதமிருப்பதையும் உண்ணும் நிலையில் பல பெண்கள் உள்ளனர்.

சட்டம் என்னதான் பெண்களின் சொத்துரிமை பற்றி பேசினாலும் இந்திய ஆணாதிக்க சமூகம் அதை ஒருபோதும் ஏற்றுக் கொள்ளும் மன நிலையில் இல்லை. பெண்களுக்கு என எந்த சொத்தும் இருப்பதில்லை. அதே போல பெற்றோரது சொத்தில் எந்தப் பங்கும் அவர்களுக்கு அளிக்கப்படுவதுமில்லை.

அடுத்து பெண்கள் மீதான வன்முறையில் உலகிலேயே மிக மோசமான நாடாக இந்தியா உள்ளது. இந்தியாவில் ஒவ்வொரு நிமிடத்திற்கும் 26 பெண்கள் வன்முறைத் தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். ஒவ்வொரு 34 நிமிடத்திற்கும் ஒரு பெண் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப் படுகின்றார். ஒவ்வொரு 42 நிமிடத்திற்கும் ஒரு பெண் உடல் ரீதியான வன்முறைக்கு உள்ளாகிறார், ஒவ்வொரு 43 நிமிடத்திற்கும் ஒரு பெண் கடத்தப்படுகிறார், ஒவ்வொரு 93 நிமிடத்திற்கும் ஒரு பெண் கொல்லப்படுகிறார்.

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட அறிக்கையின்படி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் 2018ல் 3.78 லட்சமாக இருந்தது. அதுவே 2019இல் 4.05 லட்சமாக அதிகரித்துள்ளது. 2019 ல் இந்தியாவில் ஒவ்வொரு நாளும் 87 பாலியல் வன்புணர்வு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாகத் தேசிய குற்ற ஆவணக் காப்பக அறிக்கை தெரிவிக்கிறது.

2001 முதல் இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் தற்கொலை செய்து கொள்ளும் திருமணமான பெண்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்தைத் தாண்டுகிறது. உலக அளவில் தற்கொலை செய்து கொள்ளும் பெண்களில் 40% பேர் இந்தியப் பெண்களே. சர்வதேச தற்கொலை சராசரி விகிதத்தைவிட இந்தியப் பெண்களின் தற்கொலை விகிதம் இருமடங்கு அதிகமாகும்.

"தற்கொலைகளில் குறைந்தது 50 சதவிகிதம் வரதட்சணை சம்பந்தப்பட்டதாக இருக்கலாம். ஆனால் அவை குறைவாக மதிப்பிடப்படுகின்றன" என்கிறது பெண்களுக்கான 'விமோச்சனா' அமைப்பு. காஸ் அடுப்பு வெடித்தல், குளியலறையில் விழுதல் போன்ற 'தற்செயலாக' நடந்த மரணங்களுக்கும் இதில் இடமுண்டு.

மக்கள் தொகையில் பாதி அளவுள்ள பெண்கள், நாடாளுமன்றப் பிரதிநிதிகள் என்று வரும்போது, வெறும் 11 விழுக்காடு பேர் மட்டுமே உள்ளார்கள்.

இப்படி ஒட்டுமொத்தமாக பெண்களின் சமூக, அரசியல், பொருளாதார நடவடிக்கைகள் அனைத்தையும் முடக்கிவிட்டு அதை சரி செய்வதற்குரிய எந்த நடவடிக்கையையும் எடுக்க வக்கற்று, தொடர்ந்து அவர்களை அடிமைகளைப் போல வாழ சமூகம் நிர்பந்திக்கும் சூழலில் நீதிமன்றம் விபச்சாரத்துக்கு சட்ட அங்கீகாரம் வழங்கி அவர்களை ஆண்களின் பாலியல் வெறியை தீர்த்து வைத்து வயிறு கழுவச் சொல்வது எவ்வளவு மோசமான முன்னுதாரணம்?.

மார்க்ஸ் தனது கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் சொல்வார் "… நமது பூர்ஷ்வாக்கள், சட்டப்பூர்வமான விபச்சாரத்தை நாடுவதைப் பற்றிச் சொல்லவே வேண்டாம், அவர்கள் தங்கள் கட்டுப்பாட்டிலுள்ள பாட்டாளிகளின் மனைவியர், பெண் மக்கள் ஆகியோரை வைத்துக் கொள்வதுடன் நிற்காமல், தமக்குள் ஒருவர் மனைவியை இன்னொருவர் வசப்படுத்தி அனுபவிப்பதில் பேரின்பம் காண்கின்றார்கள். பூர்ஷ்வாத் திருமணம் என்பது உண்மையில் மனைவியரைப் பொதுவாக அனுபவிக்கும் ஒரு முறைதான். போலித்தனமாக மூடி மறைக்கப்பட்டுள்ள முறையில் பெண்களைப் பொதுவாக அனுபவிக்கும் முறைக்குப் பதிலாக கம்யூனிஸ்டுகள் சட்டப்பூர்வமாகவும் ஒளிவுமறைவின்றியும் அதைச் செய்ய விரும்புகிறார்கள் என்றுதான் அவர்கள் மீது அதிகபட்சக் குற்றம் சாட்டலாம். மேலும், இன்றைய பொருளுற்பத்தி உறவுகள் ஒழிக்கப்படும்போது, இந்த உறவுகளிலிருந்து எழும் பெண்களைப் பொதுவாக அனுபவிக்கும் முறையும், அதாவது சட்டப்பூர்வமான, சட்டப்பூர்வமற்ற விபச்சாரமும் மறையும் என்பது சொல்லாமலே விளங்கும்” என்று.

தனிச்சொத்துடமை ஒழிக்கப்படாதவரை நிச்சயம் விபச்சாரத்தையும் ஒழிக்க முடியாது. இந்திய சமூகத்தில் தனிச்சொத்துடமை பார்ப்பனியத்துடனும் அது உருவாக்கி வைத்திருக்கும் அருவருப்பான ஆணாதிக்கத்துடனும் இணைக்கப்பட்டுள்ளது. அது பெண்களின் உடலை நுகர்வுப் பொருளாக, பெண்ணை ஒரு போகப் பொருளாக முன்னிறுத்துகின்றது.

அந்தப்புரங்கள் முதலாளித்துவ சமூகத்தில் காசுள்ள அனைவருக்குமானதாக மாற்றப்பட்டிருக்கின்றதே ஒழிய அந்தப்புரங்கள் உருவாவதற்கான சமூக காரணங்கள் அப்படியேதான் நீடிக்கின்றன. அதுதான் பெண்களை சமூக, அரசியல், பொருளாதார தளத்தில் இருந்து விலக்கி அவர்களை உடலை விற்று பிழைத்துக் கொள்ள சொல்லும் ஆணாதிக்க தனியுடமை முறை. உச்சநீதி மன்றம் அதைத்தான் தற்போது உறுதி செய்து விபச்சாரத்தை சட்டபூர்வமாக்கி இருக்கின்றது.

- செ.கார்கி

Pin It