உலகம் தழுவிய அளவில் முதன்முறையாகப் பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகளை ஒரு முக்கிய விவாதமாக மாற்றியது மீடூ இயக்கம். 2006 ஆம் ஆண்டில் ‘தரானா புர்க்’ என்ற மனித உரிமை ஆர்வலர் அமெரிக்காவில் ‘மீ டூ’வைத் தொடங்கினார். 2017 ல் ஹாலிவுட்டுக்குள் நடக்கும் பாலியல் வன்கொடு மைகள் வெளிவரத் தொடங்கின. அதன்பிறகு ‘மீ டூ’ உலகெங்கம் தீயாகப் பரவியது.

feminism 342இந்தியாவில் ஏற்கனவே ஆதிக்கம் செலுத்திவரும் இந்து மத ஆணாதிக்கப் பொதுப்புத்திகள் பெண்களது எழுச்சியை விரும்பவில்லை. சராசரி இந்து ஆண்கள் ‘மீ டூ’ பெண்களின் வாக்குமூலங்களை அதிர்ச்சியாகப் பார்த்ததும், அவற்றை எள்ளிநகையாடுவதும் நாம் எதிர்பார்த்தது தான். நாம் எதிர்பார்க்காத அதிர்ச்சி என்னவென்றால், சமுதாய மாற்றத்திற்காக உழைப்பதாகச் சொல்லிக் கொள்ளும் பல ஆண்கள் தாங்களாகவே முன்வந்து தங்களது உண்மை முகத்தை வெளிப்படுத்தியதுதான்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் சிறந்த சிந்தனையாளர்கள், களப்போராளிகள் என நாம் நம்பிக் கொண்டிருந்த பலரது அறிக்கைகள், நேர்காணல்கள், சமூக வலைத்தளப் பதிவுகளைப் பார்த்த பிறகு, பெரும் சோர்வும், சலிப்பும் தான் உண்டானது.

தோழர்களின் ஆணாதிக்கக் கேள்விகள்

தமிழ்நாட்டில் ‘மீ டூ’ குற்றச்சாட்டுக்களைப் பாடகி சின்மயி தொடங்கி வைத்தார். தாம்ப்ராஸ் என்ற பார்ப்பன சங்கத்தின் தலைவர் நாராயணன் உட்பட ஏராளமான பார்ப்பனக் கலைஞர்களைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றினார். தனக்கு நேரடியாகத் தொல்லை கொடுத்ததாக கவிஞர் வைரமுத்து மீதும் குற்றம்சாட்டினார். பிறரை ஆடவைத்துப் பார்த்த பார்ப்பன சபாக்கள் ஆத்திரத்தில் ஆடத் தொடங்கின. சின்மயி ஒரு “அய்யங்கார் தேவடியாள்” என்று சின்மயி யின் இனத்தலைவனே விமர்சித்தார். நமது தோழர்களும் தாம்ப்ராஸ் தலைவன் நாராயணனுக்கு இணையாக, சின்மயிக்கு எதிராகப் பல கேள்விகளையும், பல ஆணாதிக்கக் கருத்துக்களையும் வெளியிட்டனர்.

  1. நாட்டில் பெட்ரோல் - டீசல் விலை உயர்வு, ரஃபேல் போர் விமான ஊழல், இலவச மின்சார ரத்து போன்றவற்றைத் திசை திருப்பவே சின்மயி, வைரமுத்து மீது குற்றச்சாட்டைக் கிளப்பினார்.
  2. ‘மீ டூ’ இயக்கம் சரியானதுதான், அதைக் கையிலெடுக்கச் சின்மயிக்குத் தகுதி இல்லை. ஒரு சரியான இயக்கத்தைச் சின்மயி தவறாகப் பயன்படுத்திவிட்டார்.
  3. சின்மயியின் பின்னணியில் இந்து மத அமைப்புகள் இருக்கின்றன. அதனால் அவரை எதிர்க்க வேண்டும்.
  4. குற்றச்சாட்டுக்கு ஆதாரம் இருந்தால் நீதிமன்றத்திற்கோ, காவல்நிலையத்திற்கோ செல்ல வேண்டியது தானே?
  5. இத்தனை காலமாக, 14 ஆண்டுகளாக ஏன் இதைக்கூறவில்லை?

என்பது போன்ற வாதங்களை வைக்காத தோழர்கள் குறைவு. ஒவ்வொன்றாகப் பார்ப்போம்.

புரட்சியைச் சின்மயி திசைதிருப்பினாரா?

  1. ரஃபேல் ஊழல் பற்றி பல மாதங்களாக இந்தியாவில் பேச்சு அடிபடுகிறது. இராகுல் காந்தி கடுமையாகப் பேசி வருகிறார். வழக்கு நடத்தி வருகிறார். சட்டப் போராட்டங்களை நடத்துகிறார். ‘மீ டூ’ மற்றும் சின்மயிக்கள் வருவதற்குச் சில மாதங்களுக்கு முன்பே இந்தச் செய்தி சில ஏடுகளில் வெளிவரத் தொடங்கின. ஆனால், அவை பரபரப்பான விவாதங்களாக மாறவில்லை. வெகு மக்களிடம் அவை போய்ச்சேரவே இல்லை.

அதேபோல, பெட்ரோல், டீசல் விலை என்பது மோடி ஆட்சி தொடங்கியதிலிருந்தே ஏறுமுகத்தில் மட்டுமே உள்ளது. 5 ஆண்டுகளாக நடந்துவரும் எரிபொருள் விலை உயர்வை எதிர்த்து இந்தியாவில் எந்த இடத்திலும் போராட்டமோ, எழுச்சியோ, புரட்சியோ வந்துவிடவில்லை. தொலைக் காட்சிகளில் அதிகமாக விவாதிக்கப்படக்கூட இல்லை.

எரிபொருள் விலை உயர்வு, ரஃபேல் ஊழல் எல்லாம் ஏதோ சின்மயி குற்றச்சாட்டைக் கூறுவதற்கு முதல்நாள் தான் நடந்தது போலவும், விலைஉயர்வு, ஊழல் இவற்றை எதிர்த்து மக்கள் உடனடியாகக் கிளர்ந்து எழுந்து இந்த அரசாங்கத்தைத் தூக்கி எறிந்துவிட்டு, புதிய ஆட்சியை அல்லது புரட்சியை நடத்தத் தயாராக இருந்தது போலவும், அதை இந்தச் சின்மயி திசை திருப்பிவிட்டார் என்பது போலவும் பேசுவது தோழர் சீமான் அவர்களின் ஆமைக்கறி, ஏ.கே.74 பேச்சுக்களைப் போலத்தான் உள்ளது. இனிமேல் அவரை எவரும் விமர்சிக்கக்கூடாது. அவரையும், பாரிசாலனையும் மிஞ்சிய நகைச்சுவையை பெரும்பாலான முற்போக்குத் தோழர்கள் கொடுத்து வருகின்றனர்.

வைரமுத்து பார்ப்பன அடிமையே

தோழர்கள் பேசுவது உண்மையாகவே இருக்கட்டும். ரஃபேல் ஊழலையோ, எரிபொருள் விலை உயர்வையோ, இலவச மின்சார ரத்தையோ திசை திருப்பும் அளவுக்குச் சின்மயியோ, வைரமுத்துவோ அகில இந்தியப் பிரபலங்களா? தமிழ்நாட்டிலாவது பெரும் மக்கள் சக்தி உடையவர்களா? ஆண்டாள் விவகாரத்தில் வைரமுத்து சிக்கியபோது, அவருக்காக ஒரே ஒரு சுவரொட்டி போடக்கூட ஒரு ஆள்கூட இல்லையே? ஜாதிப் பாசத்தில்கூட பாரதிராஜா மட்டுமே அவருக்கு ஆதரவாக வந்தார்.

வைரமுத்து அவர்கள் திராவிடர் கருத்தியலுக்கு எதிரான நிலையில் இருப்பவர். தனது வெற்றித் தமிழர் பேரவை என்ற அமைப்பின் சார்பில் 2014 ஆம் ஆண்டு நவம்பர் 11 ஆம் நாள் ஆர்.எஸ்.எஸ்.ஸின் அதிகாரப்பூர்வ இந்தி வார இதழான “பாஞ்சஜன்ய”வின் இதழாசிரியராக 25 ஆண்டுகள் பணியாற்றிய வரும், பாஜகவைச் சேர்ந்த மாநிலங்களவை உறுப்பினருமான தருண் விஜய்க்குத் தமிழ்நாட்டில் பாராட்டுவிழா நடத்தினார்.

பிரதமர் மோடி எழுதிய குஜராத் மொழிக் கவிதைகளைத் தமிழில் மொழிபெயர்த்து வெளியான நூலின் வெளியீட்டு விழா 2017 நம்பர் 18 இல் சென்னையில் நடைபெற்றது. அதில் பா.ஜ.க வின் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனோடு வைரமுத்துவும் பங்கேற்றார். தஞ்சையில் அரசு நிலத்தை அராஜகமாகக் கைப்பற்றியுள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழக நிர்வாகிகளும் அதில் பங்கேற்றனர். அங்கு தான் “நட்டு வைத்த வேலுக்குப் பொட்டு வைத்துப் பார்த்தார்” வைரமுத்து.

பகுத்தறிவாளராக வாழ்ந்து, பகுத்தறி வாளராகவே இறப்பிலும் சாதித்த தி.மு.க தலைவர் கலைஞரின் நினைவிடத்தில், இந்து மதச் சடங்குகளைச் செய்து, கலைஞரைக் கொச்சைப் படுத்தினார். தி.மு.க வைப் பீடித்துள்ள பெரும் ஆபத்து வைரமுத்து. அப்படிப்பட்டவருக்காக நாம் ஏன் துடிக்க வேண்டும் எனப் புரியவில்லை. ஒருவேளை அவர் மிகச்சிறந்த பெரியாரியக் கொள்கைவாதியாக இருந்தாலும்கூட, அவர் மீது குற்றச்சாட்டு கூறியதற்காகச் சின்மயியைக் கொச்சைப்படுத்துவது எந்த விதத்திலும் பெரியாரியல் ஆகாது.

#MeToo வைத் திசைதிருப்பியவர்கள் நாமே

இப்படிப்பட்ட வைரமுத்து மீது சின்மயி குற்றம்சாட்டிவிட்டார் என்ற உடனேயே தி.மு.க மற்றும் திராவிடர் இயக்கங்களின் பல தோழர்கள், பல ஆதரவாளர்கள்தான் அவசர அவசரமாக சின்மயியைத் தனிப்பட்ட முறையில் வசைபாடத் தொடங்கினர். சமூகப்பொறுப்புள்ள தோழர்களே இந்த ‘மீ டூ’ வைத் தனிநபர் சிக்கலாக அணுகினால், ஊடகங்கள் இதை எந்த அளவுக்குத் திசைதிருப்பும்? அதுதான் நடந்தது. இந்தத் திசைதிருப்பலில் சின்மயியும் வைரமுத்துவும் சிக்கினர்.

சின்மயி, வைரமுத்து மீது மட்டும் பாலியல் குற்றச்சாட்டைக் கூறவில்லை. அவரது இனத்துக் கான சங்கமான தாம்ப்ராஸ் ஸின் தலைவர் மீதே குற்றம் சாட்டினார். கர்நாடக இசை, நடனக் குருக்களாக இருந்த பார்ப்பனர்களைப் பற்றி எழுப்பிய குற்றச் சாட்டுக்களைத் தொடர்ந்து, மியூசிக் அகாடமி ஏழு பார்ப்பனர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளது. சித்ரவீணா என். ரவிக்கிரண், பாடகர் ஓ.எஸ். தியாகராஜன், வயலின் கலைஞர் நாகை ஸ்ரீராம், மிருதங்க கலைஞர்கள் மன்னார்குடி ஏ. ஈஸ்வரன், ஸ்ரீமுசானம் வி. ராஜாராவ், ஆர். ரமேஷ், திருவாரூர் வைத்தியநாதன் ஆகியோரை மியூசிக் அகாடமியில் நிகழ்ச்சிகள் நடத்தத் தடை விதித்திருக்கிறது.

ஆனால், கவிஞர் வைரமுத்து மீது எழுப்பப்பட்ட குற்றச்சாட்டுக்கு, வைரமுத்துவை முந்திக் கொண்டு நமது தோழர்கள், ஆதரவாளர்கள் கருத்துத் தெரிவிக்கத் தொடங்கினர். அதில் அய்யா சுப.வீ அவர்கள் மட்டும் தனது கருத்தை உடனடியாகத் திரும்பப் பெற்றுக்கொண்டார். மற்ற அனைவரும் இன்றுவரை தங்களது நிலைப்பாட்டை நியாயப்படுத்தி வருகின்றனர்.

பல நூற்றாண்டுகளாக அடக்கப்பட்டு, பாலியல் ரீதியாகவும் சுரண்டப்பட்ட பெண் இனம் இப்போதுதான் பேசத் தொடங்கியுள்ளது. தொடங்கிய நிலையிலேயே - கரு உருவான நிலையிலேயே அதை பிடுங்கி எரித்து விட்டோம். ‘மீ டூ’ இயக்கம் தமிழ்நாட்டில் பல மாற்றங்களை உருவாக்குவதற்கு அடித்தளம் இட்டிருக்கலாம். சிறு பொறியையாவது கிளப்பிருக்கலாம். ஆனால் அப்படி நடந்து விடாமல், அதை “சின்மயி - வைரமுத்து” எனத் திசைதிருப்பி அழித்தவர்கள் முற்போக்குப் போராளிகளும், சமூகப் பொறுப்பற்ற ஊடகங்களும்தானே தவிர சின்மயியோ, வைரமுத்துவோ அல்ல.

சரி, இப்போது ‘மீ டூ’ பிரச்சனைகள் முடிவுக்கு வந்து ஒரு வாரத்திற்கு மேல் ஆகிவிட்டது. ரஃபேல், பெட்ரோல், டீசல் விலை எதிர்ப்புப் புரட்சிகள் என்ன ஆனது? ஏன் உருவாகவே இல்லை. பெட்ரோல் விலை குறைந்து விட்டதா? ரஃபேல் பேரத்தில் ஊழல் நடக்கவில்லை என்று அறிவிக்கப்பட்டுவிட்டதா?

சின்மயிக்குத் தகுதி இல்லை - பின்னணியில் இந்து மத அமைப்புகள்

சின்மயிக்குத் தகுதி இல்லை. அவர் ஏற்கனவே பொய்யாகப் பலரைக் குற்றவாளி ஆக்கி யுள்ளார் என்றும் கூறுகின்றனர். சரி, சின்மயி குற்றச்சாட்டை விட்டுவிடுவோம். இயக்குநர் சுசி கணேசன் மீது குற்றம் சாட்டிய நடிகை அமலா பால், இயக்குநர் தோழர் லீனா மணிமேகலை - நடிகர் ஜான் விஜய் மீது குற்றம் சுமத்திய பாடகி ஸ்ரீரஞ்சனி - பார்ப்பன, கன்னட நடிகர் அர்ஜூன் மீது காவல் நிலையத்தில் வழக்கே பதிவு செய்துள்ள கன்னட நடிகை ஸ்ருதி - நடிகர் தியாகராஜன் மீது குற்றம் சாட்டியுள்ள ப்ரித்திகா மேனன் - ஏ.ஆர்.முருகதாஸ், மற்றும் பல தெலுங்குத் திரைத்துறையினர் மீது குற்றம் சாட்டிய நடிகை ஸ்ரீரெட்டி - இசை அமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானின் சகோதரி ரெஹெனா மற்றும் இவர்களைப் போன்ற யாருக்குமே நமது போராளிகள் எதிர்பார்க்கும் தகுதி - திறமை இல்லையா? ஏன் எந்தப் பெண்ணுக்காகவும் எவரும் குரல் எழுப்பவில்லை?

சின்மயியின் பின்னணியில் இந்து மத அமைப்புகளும், ஆண்டாள் பக்தர்களும் இருக்கின்றனர். என்று ஒரு கருத்து வந்தது. அதே இந்து அமைப்புகள் வைரமுத்து வுக்கும் ஆதரவாகத் தான் இருக்கின்றன என்பதை ஏற்கனவே பார்த்தோம். ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் அதிகாரப்பூர்வ ஏட்டின் 25 ஆண்டுகால ஆசிரியர் தருண்விஜய், பிரதமர் மோடி, நிர்மலா சீதாராமன் இவர்களை மிஞ்சிய இந்து மத அமைப்புகள் இந்தியாவில் இருக்கிறதா?

நீதிமன்றம் செல்லலாமே?

எவை எவையெல்லாம் பாலியல் குற்றங்கள் என்பவை குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாதவர்களால் மட்டுமே, காவல் நிலையம் செல்லவேண்டியது தானே? நீதிமன்றம் போக வேண்டியதுதானே என்றெல்லாம் கேட்க முடியும். குற்றம் சாட்டும் அனைத்துப் பெண்களும் வன்புணரப்பட்டவர்கள் (Rape) என்ற எண்ணத் திலேயே பெரும்பாலும் இந்தக் கேள்விகள் கேட்கப்படுகின்றன.

ஒரு பெண்ணை ஒரு ஆண் ஒரு நொடி பார்க்கிறான் என்றால்கூட அவன் எந்த இடத்தைப் பார்க்கிறான் என்பதிலிருந்து, கண்ணைப் பார்த்துப் பேசினால்கூட அவன் எப்படிப் பார்க்கிறான் என்பதிலிருந்து பாலியல் சீண்டல்கள் தொடங்குகின்றன. அந்த ஒருநொடிப் பார்வைகூடப் பாலியல் சீண்டல்தான். பார்வையிலிருந்து படுக்கை வரை பலநூறு விதங்களில் சீண்டல்கள் நடக்கின்றன. எதற்கும் ஆதாரம் இருக்காது. இருக்கவே முடியாது. பிறகு எப்படி காவல் நிலையத்திற்கோ, நீதிமன்றத்திற்கோ போக முடியும்?

காவல்நிலைய, நீதிமன்றச் சட்ட திட்டங்கள் செல்லாத கிராமங்களில் நடக்கும் ஊர்க் கூட்டங்களில்கூட கிராமத்து ஆண்கள் நடத்தும் பாலியல் அட்டூழியங்களைப் பொதுவில் கூறிவிட முடியாது. அப்படிப்பட்ட காட்சிகளை சினிமாக்களில்தான் பார்க்கமுடியும். ஊர்த்தலைவர் களிடம் தனிப்பட்ட முறையில் நேரடியாகக் கூறுவது என்ற அளவில் சில கிராமங்களில் நடக்கும். அப்போதும், “அவனிடம் படுத்தவதானே நீ..... என்னிடமும் வா...” என்று கேட்கும் பெரிய மனிதர்கள்தான் பல ஊர்களில் தலைவர்களாக இருக்கிறார்கள்.

ஊர்க்கூட்டம் என்பது அடுத்தநிலை. முதலில், ஒரு பெண் ஒரு ஆணால் வன்புணர்வுக்கு ஆளாக்கப் பட்டாள் என்று கேள்விப் பட்டால்கூடப் போதும், அந்தச் செய்தியை அறிந்த அனைவராலும் அந்தப்பெண் வன்புணர்வுக்கு ஆளாக்கப்படுவாள் அல்லது பாலியல் கொடுமை முயற்சிகளுக்கு ஆளாவாள் என்பதுதான் ஏராளமான கிராமங்களின் இயல்புநிலை. கிராமங்களில் மட்டுமல்ல; உயர்கல்வி நிறுவனங்கள், மத நிறுவனங்கள், அரசியல் கட்சிகள், இயக்கங்கள், அரசு மற்றும், தனியார் அலுவலகங்கள், தொழிற்துறைகள், ஊடகங்கள் என அனைத்து இடங்களிலும் ஆண்கள் ஒரே மாதிரியாகத்தான் இருக்கிறார்கள்.

ஒரு பெண் யாரிடமாவது பாலியல் புகாரைத்தெரிவித்தால், புகாரை விசாரிக்க வேண்டியவர்களே, தாங்களும் அந்தப் பெண்ணிடம் பாலியல் சீண்டல்களைத் தொடங்காமல் இருந்தால் அது மிகப்பெரும் வியப்பான நிலை. இப்படிப்பட்ட சமுதாயத்திலிருந்து உருவான காவல்துறை அதிகாரிகளிடமும், நீதிபதிகளிடமும் என்ன நீதியைப் பெற்றுவிடமுடியும்?

சின்மயி, லீனாமணிமேகலை, மாலினி, இலட்சுமி போன்றோர் இணைந்து கடந்த 20.10.2018 இல் சென்னையில் நடத்திய பத்திரிக்கையாளர் சந்திப்பில், அவர்களைக் கேள்வி கேட்பது என்ற பெயரில் செய்தியாளர்கள் சிலர் நடந்து கொண்ட விதம், அவர்கள் கேள்வி எழுப்பிய விதம், அந்தச் சந்திப்பு குறித்து ஒவ்வொரு தொலைக்காட்சியும் செய்தி வெளியிட்ட விதம், அதற்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் இவற்றையெல்லாம் அனைவரும் பாருங்கள்.

தமிழ்நாட்டில் வாழும் ஒவ்வொரு பெரியாரியல்வாதியும், தலைகுனிய வேண்டிய அளவுக்கு மோசமான அணுகுமுறையைச் செய்தி யாளர்கள் கையாண்டனர். அந்தச் செய்தி யாளர்களின் ஆணாதிக்க வெறியை நாமும் இயல்பாகக் கடந்து வந்து விட்டோம். இனிமேலும் அந்தத் தொலைக்காட்சிகளில் பெண்கள் பணிபுரிகிறார்கள் என்றால், அவர்களின் நிலையை எண்ணிப்பார்க்க முடியவில்லை. இப்படிப்பட்ட சமுதாயத்தில்-காவல்துறையிலோ, நீதிமன்றத்திலோ இதேபோன்ற ஆண்களின் நகல்கள் ஆதிக்கம் செலுத்தும் இடங்களில் எப்படி நீதி கிடைக்கும்?

பாலியல் வன்புணர்வு (Rape) என்ற நிலையில் வேண்டுமானால் ஒருவேளை ஆதாரங்கள் கிடைக்கலாம். ஆனால், அந்த ஆதாரங்களை வைத்து, குடும்பச் சூழலைத் தாண்டி, காவல்நிலைய ஆண்களிடம் இதைப் புரிய வைத்து, நீதிமன்ற ஆண்களிடம் நீதி பெறுவதற்குள் அந்தப் பெண் அந்த நீதியே வேண்டாம் என்று ஓடிவிடும் சூழலில்தான் இன்றைய காவல் நிலையங்களும், நீதிமன்றங்களும் உள்ளன. இந்தச் சமுதாயச் சூழல் மாறாமல் நீதி, சட்ட நிறுவனங்களால் எந்தப் பயனும் இல்லை.

திருமுருகன் காந்தி மட்டுமல்ல

அண்மையில், சிறையிலிருந்தும், மருத்துவக் கண்காணிப்பிலிருந்தும் வீடுதிரும்பிய மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், இண்டியா க்ளிட்ஷ் என்ற ஒரு யூ ட்யூப் சேனலில், மீ டூ வை பற்றி ஒரு நேர்காணலை அளித்திருக்கிறார். . (https://www.youtube.com/watch?v=h5S27BydzAo)

‘மீ டூ’ வை விளம்பரத்துக்காகப் பயன்படுத்து கிறார்கள்... ஒரு சிலரின் தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்காக ‘மீ டூ’ பயன்படுத்தப்படுகிறது.... இவங்க யார் கையப்பிடிச்சு இழுத்தா எங்களுக்கென்ன? இதுக்கெல்லாம் எங்களுக்கு நேரமில்லை. மக்கள் பிரச்சனை பற்றிப் பேசுவோம்... இலவச மின்சாரம் பறிபோகப் போகிறது... மக்களுக்கு எந்த விதத்திலும் பலனில்லாத விசயங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கப் போவதில்லை... பெண்ணுரிமை பேசுவாங்க, சபரிமலைக்குக் குரல்கொடுக்க மாட்டாங்க...

என்றெல்லாம் பேசியுள்ளார்.

தமிழ்நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாகப் பல பார்ப்பன, தமிழ் ஊடகங்களும், திராவிடர் இயக்கங்களின் தோழர்களும் கருதிக் கொண்டிருக்கும் தோழரிடம் இப்படிப்பட்ட சொற்கள் வந்து விழுவது வருத்தமாக இருக்கிறது. பார்ப்பன சங்க நாராயணனும், மே 17 திருமுருகனும் ஒரே குரலில் பேசுவதை ஏற்க முடியவில்லை.

“இவங்க யார் கையப் பிடிச்சு இழுத்தா என்ன? எங்களுக்கு இலவச மின்சாரம் ரத்தாகப் போகுது...அதுபற்றிப் பேச வேண்டும். அதுதான் முக்கியம்”

என்கிறார் திருமுருகன்.

ஒரு பெண்ணின் விருப்பமில்லாமல், ஒருவன் அவளைப் பார்ப்பதுகூடக் குற்றம், சுயமரியாதைக் கேடு. கையைப் பிடித்து இழுப்பது மிகப்பெரும் காட்டுமிராண்டித் தனம். அந்தக் குற்றம், சுயமரியாதைக்கேடு, காட்டுமிராண்டித் தனங்களை ஒழிப்பதைவிட -அதற் காகப் பாடுபடுவதைவிட இந்த நாட்டுக்கு மின்சாரமோ, குடி நீரோ, சோறோ முக்கியமானது இல்லை. பெரியார் தமிழர்களுக்கு மின்சாரம் வேண்டுமென்றோ, குடிநீர் வேண்டுமென்றோ, சோறு வேண்டுமென்றோ பாடுபட்டவர் அல்ல. மானமும், அறிவும் வேண்டுமென்று போராடியவர்.

தமிழ்நாட்டில் ‘மீ டூ’ வில் பாலியல் குற்றச்சாட்டுக்களைக் கூறியவர் சின்மயி மட்டுமா? குற்றஞ்சாட்டப்பட்டவர் வைரமுத்து மட்டுமா? நூற்றுக்கணக்கான பெண்கள் துணிச்சலுடன் தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளை பொதுவெளிக்குக் கொண்டு வந்துள்ளனர்.

திருமுருகன் காந்திக்கு நன்கு அறிமுகமான பெண் தோழர்கள், பெரியாரிய - அம்பேத்கரிய - தமிழ்த்தேசிய இயக்கங்களின் குடும்பங்களைச் சேர்ந்த பெண் தோழர்கள், காட்டாறு குழுவில் உள்ள பெண் தோழர்கள் எனப் பலரும், தாங்கள் கடந்த காலங்களில் சந்தித்த பாலியல் சீண்டல்களைப் பொது வெளியில் வைத்துள்ளனர். இவர்கள் எல்லோருமே தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளுக்காக ‘மீ டூ’ வைப் பயன்படுத்தியுள்ளார்களா? தனிப்பட்ட வன்மத்துக்காக ‘மீ டூ’ வைத் திசை திருப்பிவிட்டார்களா? இலவச மின்சாரம் தடைபடுவதைத் திசை திருப்புகிறார்களா?

பெரியாரியப் பெண்ணியம் பேசும் அமைப்புகளில் இயங்கும் பெண் தோழர்கள்கூட இப்போதுதான் தங்களது மனக்குமுறல்களைக் கொட்டத் தொடங்கியுள்ளார்கள் என்றால், இதுதான் ‘மீ டூ’ இயக்கத்தின் மிகப்பெரும் வெற்றி. அந்த வெற்றிக்கு ஒரு தொடக்கமாக இருந்தது சின்மயிக்களும் தான். 

பல கிராமங்களில் தலித் பெண்கள் மூன்று வகை அடக்கு முறைகளை எதிர்கொள்கின்றனர். இடைநிலை ஜாதியினரின் அடக்குமுறை, தலித்துகளிலேயே முன்னேறும் ஜாதியினரின் அடக்குமுறை, வீட்டில் ஆண்களின் அடக்குமுறை என மூன்று அடுக்கு வகை அடக்குமுறையில் வாழும் பெண்கள், ‘மீடூ’க் கள் பற்றிக் கேள்விப் பட்டிருக்கக் கூட மாட்டார்கள். அவர்கள் வரை ‘மீ டூ’ க்கள் எட்டிவிடாமல் தடுத்து, திசை திருப்பியது நாம்தான். நமது தோழர்களும் பணியாற்றும் ஊடகங்கள்தான். சின்மயிக்கள் அல்ல.

“சமுதாயம் முழுக்க அனைத்துத் தளங்களிலும் பாலியல் சீண்டல்கள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவற்றை எதிர்க்கிறோம். சின்மயிக் களை ஆதரிக்க மாட்டோம்” என்கிறார்.

2009-ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை தமிழ்நாட்டில் பாலியல் வன்கொடுமைகள், சீண்டல்களுக்கு எதிராக மே 17 இயக்கம் எத்தனைமுறை மெழுகுவர்த்தி ஏந்தி யுள்ளது? வழக்காகவோ, ஆதாரப் பூர்வமான செய்தியாகவோ வெளிவராத பாலியல் சீண்டல்கள், கொடுமைகளுக்கு எதிராக மே 17 என்ன திட்டம் வைத்துள்ளது? அதை 2009-லிருந்து எந்த அளவிற்கு நடைமுறைப்படுத்தி யுள்ளது? ‘மீ டூ’ இயக்கத்தைச் சின்மயிக்கள் முன்னெடுப்பதற்கு முன்பு மே-17 முன்னெடுத் திருக்கலாமே? சமுதாயத்தின் அனைத்துத்தரப்புப் பெண்களையும் பேச வைத்திருக்கலாமே? ஏன் சின்மயிக்களுக்கு வாய்ப்புக் கொடுத்தீர்கள்?

சின்மயிக்கள் ‘மீ டூ’ பற்றிப் பேசுவார்கள். பெண்ணுரிமை என்பார்கள், ஆனால் சபரி மலைக்குக் குரல் கொடுக்க மாட்டார்கள்” என்றார்.

எல்லாவற்றிற்கும் எல்லோரும் போராட மாட்டார்கள். அப்படி எல்லாச் சிக்கல்களுக்காகவும் போராடிய இயக்கமோ, போராடிய தலைவரோ உலகில் எங்குமே இல்லை. தலைவர்கள், இயக்கங்களது நிலையே இப்படி என்றால், சின்மயி போன்ற தனிநபர்களிடம் சபரிமலை பற்றிப் பேசினாயா? என்று கேட்பது ஒரு இயக்கவாதிக்கு அழகல்ல.

நேர்காணலில் பேசியது திருமுருகன் காந்தி தான் என்றாலும், அவர் தமிழ்நாட்டில் வாழும் கோடிக்கணக்கான ஆண்களின் மனநிலையைத்தான் வெளிப்படுத்தினார். அதனால் இந்தப் பதில்கள் திருமுருகன் காந்திக்கு மட்டுமல்ல. அனைவருக்கும் தான்.

களப்பணியாளர்களைத் திசை திருப்பிய மீடியாக்கள் & சோசியல் மீடியாக்கள்

பொதுவாக, ஒரு தீண்டாமை வன்கொடுமை நடந்தாலோ, பாலியல் வன்கொடுமை நடந்தாலோ உடனடியாகஅந்தக்குறிப்பிட்ட வன்கொடுமையைப் பற்றி மிகவும் விரிவாக அலசுகிறோம். காவல் துறைக்கும், நீதிமன்றங்களுக்கும், உளவுத்துறை களுக்கும்கூடத் தெரியாத பல நுணுக்கமான தகவல்களைத் தனியார் தொலைக் காட்சிகளும், புலனாய்வு வார இதழ்களும் நமக்குத் தருகின்றன.

அந்தப் பரபரப்பான நேரங்களில் அனைத்து இயக்கங்களிலும் பணியாற்றும் தோழர்களின் சமூக வலைத்தளப் பக்கங்களில் பல ஆக்கப்பூர்வமான ஆலோசனைகள், தகவல்கள் பரப்பப் படுகின்றன. அதோடு முடிந்தது நமது வேலை. அடுத்து இதே போல ஒரு பரபரப்புச் செய்தி வரும்வரை நாம் “குட் மார்னிங், குட் நைட்”, நமது தனிப்பட்ட செய்திகள், குடும்பச் செய்திகளைச் சமூகவலைகளில் போட்டுக் கொண்டு இருப்போம்.

தருமபுரி இளவரசன் படுகொலை செய்யப் பட்டார். பதட்டமானோம். ஏதேதோ செய்தோம். சில வாரங்கள் ஓடின. நாம் அமைதியானோம். இளவரசனைக் கொன்ற பார்ப்பனியத்தை மறந்து விட்டோம். அடுத்த சில மாதங்களில் கோகுல்ராஜ், உடுமலை சங்கர் என வரிசையாகப் பறி கொடுத்தோம். அவற்றுக்கு எதிராகவும் இயங்கினோம். பிறகு மறந்துவிட்டோம். அடுத்த பரபரப்புக்குத் தயாராகிக் களமாடுகிறோம்.

நாம் களமிறங்கிச் செயல்பட்ட காலங்களைக் கொஞ்சம் திரும்பிப் பாருங்கள். ஏதாவது இரத்தக்களறி நடக்க வேண்டும். ராம் கோபால் வர்மா, பாலா படங்களை மிஞ்சிய கொடூரக் காட்சிகள் நேரடியாக நடக்க வேண்டும். ஒரு ஊரே பற்றி எரிய வேண்டும். ஒரு பெண் அதிகாலையில் பொது வெளியில் கழுத்தறுக்கப்பட்டு சாக வேண்டும். பேருந்துகளிலும், அலுவலகங்களிலும், வயல்வெளிகளிலும் கூட்டு வன்புணர்வால் கோரமாகச் சாகவேண்டும். அவள் எரிக்கப்பட வேண்டும். குறைந்தபட்சம் ஒரு கண்ணீர்க் காட்சியாவது வேண்டும்.

அப்படிப்பட்ட காலங்களில் மட்டுமே நாம் இயங்குகிறோம். அந்தக் கொடூரங்களுக்கு ஜாதி காரணம் என்றால், நாம் ஒரு வாரத்திற்கு ஜாதி ஒழிப்புப் போராளி அவதாரம் எடுப்போம். ஆணாதிக்கம் காரணம் என்றால் பெண்ணியவாதி அவதாரம் எடுப்போம். காரணத்தின் அடிப் படையில் நாமும் அவதாரங்களை அவ்வப்போது மாற்றி மாற்றி எடுப்போம்.

சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதற்கு முன்பு மீடியாக்கள் இதைத்தான் செய்து வந்தன. இப்போதும் அதைத்தான் செய்கின்றன. இந்த அணுகுமுறையானது மீடியாக்களைப் பொறுத்த வரை அதுதான் அந்தத் தொழிலின் தன்மை. ஆனால், சமூக வலைத்தளங்கள் பிரபலமான பிறகு முற்போக்கு இயக்கங்களின் தோழர்களுக்கும் இந்த “மீடியாக்கள் பாணி அணுகுமுறை” என்ற நோய் கடுமையாகத் தொற்றிக் கொண்டுள்ளது.

மனநோயாளிகளை உருவாக்கும் இந்துமதம்

ஜாதிய வன்கொடுமைகளோ, பாலியல் வன்கொடுமைகளோ எது நடந்தாலும், அவை யெல்லாம் இலட்சத்தில் ஒன்று, கோடியில் ஒன்று என்ற அளவில் மட்டுமே பொதுவெளிக்கு வருகின்றன. அந்த அளவுக்கு மட்டுமே செய்தி யாகின்றன. இந்தக் கோடியில் ஒன்றாக வெளிவரும் செய்திகளில் ஒன்றுதான் ‘மீ டூ’ வும். நாம் சின்மயியைப் பற்றிக் கேவலமாகப் பேசிக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் அல்லது சின்மயியை ஆதரித்துக் கொண்டிருக்கும் ஒவ்வொரு நொடியிலும் இந்தியாவில் ஏராளமான பாலியல் சீண்டல்கள், பாலியல் சுரண்டல்கள், வன் புணர்வுகள் நடந்துகொண்டுதான் இருக்கின்றன.

திருமணம், குடும்பம், சொந்தம், ஜாதி ஆகிய நிறுவனங்களில் தினந்தோறும், தினந்தோறும் கோடிக்கணக்கான பெண்கள் பாலியல் ரீதியாகச் சீண்டப்படுகிறார்கள், சுரண்டப்படுகிறார்கள், வன்புணரப்படுகிறார்கள். அப்படிப் பெண்களை ஒடுக்குபவர் களுக்குக் கணவன், காதலன், தகப்பன், சொந்தக்காரன், ஜாதிக்காரன் எனப் பல முகங்கள் உள்ளன.

நமது வீட்டில், நமது தாயாரிடமோ, சகோதரியிடமோ, மனைவியிடமோ, காதலி யிடமோ ஒரே ஒருநாள் அவர்களது மனதைத் திறந்து பேச வையுங்கள். எதைப் பற்றியும் கவலைப்படாமல், பயப்படாமல் ஒரே ஒருநாள் மட்டும் பேச வையுங்கள். அந்தப் பேச்சுக்களை விருப்பு, வெறுப்பு இன்றி, இந்து மதப் பொதுப்புத்தியைக் கழட்டி வைத்துவிட்டு ஆராய்ந்து பார்த்தால், பாலின மற்றும் பாலியல் குறித்த அடிப்படை அறிவுகூட இல்லாத - மனிதநேயம் துளியும் இல்லாத - உலக அறிவு எதுவும் இல்லாத ஒரு சைக்கோ நமக்குள் ஒளிந்திருப்பதைக் காணலாம்.

நாமும் பாலின -பாலியல் புரிதலற்ற மனநோயாளிதான் என்பதை உணர்ந்து விட்டால், நம்மோடு வாழும் கோடிக்கணக்கான சக ஆண் மனநோயாளிகளையும் அடையாளம் கண்டு விடலாம். தாம்ப்ராஸ் நாராயணனைவிட, காஞ்சிபுரம் கோவில் அர்ச்சகர் தேவநாதனைவிட, சபாக்கச்சேரி மாமாக்களைவிட, சங்கராச் சாரியைவிட, வைரமுத்துவைவிடக் கொடூரமான பாலியல் வெறிகொண்ட மிருகங்களையும் எளிதாகக் கண்டுபிடித்துவிடலாம்.

இந்தச் சோதனையை நாம் செய்து பார்த்திருந்தோமானால், அதன்பிறகு ‘மீ டூ’ வை யார் முன்னெடுத்தாலும் ஆதரித்திருப்போம். யாருமே கவனம் செலுத்தாத ஒரு சிக்கலில் யாரோ ஒருவர் கவனம் செலுத்தியுள்ளார் என்ற அளவில் அதை வரவேற்றிருப்போம். தோழர்களும், சராசரி ஆண்களும் ஒரே புள்ளியில் இணைந்து சின்மயிக்களை நோக்கி எழுப்பிய எந்தக் கேள்விகளையும் எழுப்பியிருக்க மாட்டோம்.

நம்மைப் போன்ற மனித நேயமற்ற, உலக மக்களைப் பற்றிய அறிவற்ற, பாலின - பாலியல் அறிவற்ற மனநோயாளிகளை உருவாக்குவது இந்து மதம். இந்த நாட்டின் இயக்கும் சக்தியாக, ஆப்பரேட்டிங் சிஸ்டமாக உள்ள இந்து மதமும், அதன் சாஸ்திர, சம்பிரதாயங்களும், பண்பாடுகளும் சத்தமில்லாமல் ஒவ்வொரு நாளும் இலட்சக்கணக்கான மனநோயாளிகளை உருவாக்கிக் கொண்டும் – உருவானவர் களைப் பாதுகாத்துக் கொண்டும் இருக்கின்றன.

இந்த “இந்து சிஸ்டம்” தான் இந்தியாவின் சமுதாய ஒழுங்காகவும் இருக்கிறது. இந்தச் சமுதாய ஒழுங்கை உடைத்தெறியாமல், அதற்காகப் பணியாற்றாமல், பாலியல் வன்கொடுமைகளுக்குத் தீர்வு உருவாகாது. ஜாதிய வன்கொடுமைகளும் நிற்காது.

‘மீ டூ’, தலித் சிறுமி இராஜலெட்சுமி கொலை, நிர்பயா கொலை, ஸ்வாதி கொலை - ஆசிட் வீச்சால் கொலை செய்யப்பட்ட ஆதம்பாக்கம் வித்யா, காரைக்கால் வினோதினி - ஜாதிக் கொடுமையால் நடந்த இளவரசன், கோகுல்ராஜ், சங்கர் கொலை இதுபோன்ற பரபரப்பாகும் செய்திகள், வழக்குகள் போன்றவற்றில் பாதிக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதும், துணை நிற்பதும் மிக மிக அவசியமான பணிதான்.

அதேசமயம், இந்தக்கொடுமைகள் நடக்காத ஒரு சமுதாயமாக நமது சமுதாயம் மாற வேண்டும் என்றால், இந்தக் கொடுமைகளுக்கு அடிப்படைக் காரணமாக இருக்கின்ற இந்து மதச் சட்டங்கள், ஒழுங்குகள், பண்பாடுகள் ஒழிய வேண்டும். இந்து மதம் அழிய வேண்டும். அதற்குரிய தொலைநோக்குத் திட்டங்களுக்கும், பணிகளுக்கும் நாம் உழைப்பைக் கொடுக்க வேண்டும்.

Pin It