சபரிமலையில் 10 வயது முதல் 50 வயது வரை உள்ள பெண்கள் நுழைவதற்கு இருந்த தடையை நீக்கி அனைத்து வயதினரும் செல்லலாம் என வழங்கிய தீர்ப்பு, ஓரினச்சேர்க்கை உறவைக் குற்றம் என வரையறுக்கும் சட்டப்பிரிவு 377அய் ரத்து செய்து தன்பால் ஈர்ப்பு இயற்கையானது என்ற LGBT சமூகத்திற்கு ஆதரவான தீர்ப்பு என்ற வரிசையில் கடந்த வாரம் “திருமணம் தாண்டிய உறவு கிரிமினல் குற்றமல்ல” என்றுகூறி, சட்டப்பிரிவு 497 அய் ரத்து செய்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.

இத்தீர்ப்பின்போது நீதிபதிகள் கூறிய வார்த்தைகள் ஒவ்வொன்றும் ஆணாதிக்கவாதிகள் தலையில் நறுக்கென்று கொட்டுவது போல் இருந்தது. சட்டப்பிரிவு 497அய் சுட்டிக்காட்டி நீதிபதிகள் திருமணம் தாண்டிய பாலியல் உறவை (Civil) சமூகத்தின் தனி உரிமைகள் சம்பந்தமான உரிமையியல் வழக்காகப் பதிவு செய்து விவாகரத்து கோரலாமே தவிர, கிரிமினல் குற்றமாகக் கருதக்கூடாது என்று தெரிவித்தனரே தவிர “குற்றமே இல்லை” என்று கூறவில்லை. மேலும் “மனைவி கணவனின் சொத்து அல்ல” “கணவன் மனைவிக்கு எஜமானனும் அல்ல” என்று கூறி உச்சநீதிமன்றம் இச்சட்டத்தை ரத்து செய்தது.

பொதுவாக முன்னேறிய நாட்டின் அளவுகோல் என்பது ஒரு நாடு எவ்வாறு பெண்களை நடத்துகிறது என்பதைப் பொறுத்தும், அந்நாட்டில் உள்ள பெண்களின் வளர்ச்சியைக் கொண்டும்தான் அமையும். அப்படிப் பார்த்தால் இன்னமும் இந்தியா உலகத்தோடு முன்னேற்றப் பாதையில் பயணிக்காமல் பின்தங்கி, பழமையின் கூடாரமாக ஒளி மங்கிக் காட்சி அளிக்கிறது. உதாரணத்திற்கு மேற்கண்ட 497 சட்டப்பிரிவையே எடுத்துக்கொள்ளலாம்.

“திருமணமான ஒரு பெண் தன்னுடைய கணவர் ஒப்புதல் இல்லாமல் மற்றொரு ஆணுடன் பாலியல் உறவு கொள்வது கிரிமினல் குற்றம்” என்று கூறுகிறது. இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு ஆண் தன்னுடைய மனைவி வேறொருவருடன் திருமணம் தாண்டி உறவு வைத்திருக்கிறார் என்று வழக்கு தொடுக்க முடியுமே தவிர, பெண் தன் கணவர் வேறொரு பெண்ணுடன் பாலியல் உறவு வைத்திருக்கிறார் என்று வழக்குத் தொடுக்க முடியாது” என்று கூறுகிறது.

“சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்று கூறிக்கொண்டு மனித இனத்தில் சரிபாதி உள்ள பெண்கள் இச்சட்டப்பிரிவின் கீழ் வழக்குத் தொடுக்க முடியாது என்பதில் என்ன சமத்துவம் இருக்கிறது? சமத்துவம் இல்லாத இந்தச் சட்டத்தால் எந்தப் பயனும் இல்லை” என்று கூறி உச்சநீதிமன்றம் இச்சட்டத்தை ரத்து செய்தது.

சட்டத்தீர்ப்புகளைச் சட்டை செய்யாத சாமானியர்கள் முதன்முறையாக 497 சட்டம் குறித்து உச்சநீதிமன்றம் வெளியிட்ட தீர்ப்பைப் பற்றி பட்டிதொட்டியெங்கும் விவாதித்தார்கள் என்றால் மிகையில்லை. ‘காத்திருந்தவன் பொண்டாட்டிய நேத்து வந்தவன் கூட்டிட்டுப் போனா’ கிரிமினல் குத்தம் இல்லைன்னு உச்சநீதிமன்றம் தீர்ப்பு சொல்வது தகுமா? நம்ம பண்பாடு, குடும்ப அமைப்பு எல்லாமே இந்தத் தீர்ப்புகளால் நாசமாகப் போகிறது, எதுவுமே தப்பில்லை, யாரும், யாரோடும் போகலாம் என்று தீர்ப்புக் கூறி நம்ம கலாசாரத்திற்குச் சாவுமணி அடித்துவிட்டார்கள் என்கிற பாணியிலேயே அவர்களது பேச்சு தொடர்கிறது. 

சாமானியர்கள் மனதில் இத்தீர்ப்பு குறித்த தவறான கருத்தோட்டத்தை உருவாக்கியதில் பெரும்பங்கு சனாதனத்தை உயர்த்திப் பிடிக்கும் பார்ப்பனிய ஊடகங்களையே சேரும். செய்திகளை கொச்சைப்படுத்தி, திரித்து வெளியிட்டதால் அவற்றைக் கவனிக்கும் சாமானியர்கள் மனதிலும் தவறான ஒரு படிவம் படிந்துவிட்டது என்றே கூறலாம்.

கொழுந்தியாளைக் கொறைப் பொண்டாட்டின்னு சொல்ற நம்ம ஆளுகளுக்குக் கேட்கவா வேண்டும். “அடுத்தவர் மனைவியை கரெக்ட் பண்றது தப்பில்லை என்று உச்சநீதிமன்றமே சொல்லிருச்சு” என்கிறார்கள். இத்தனைக்கும் இந்த சட்டப்பிரிவின் கீழ் இதுவரை யாரும் புகார் அளித்ததாகவோ, தண்டனை பெற்றதாகவோ தகவல் இல்லை.

“இழிநடத்தை, பரத்தையர் நட்பு, நற்குணமின்மை இவற்றையுடைய வனாயினும், கற்பினளான பெண் தன் கணவனைத் தெய்வமாகப் பேணுக” - (மனுஸ்மிருதி அத்தியாயம் 10.சு.154)

“அன்றாட வேள்விகள் அய்ந்தும், உண்ணாமை, நோன்பு முதலியனவும் மாதர்க்குத் தனிப்பட யாதுமிலது, கணவனைப் பேணுதலே அவர்க்கு மறுமையின்பிற்குரிய நல்லாறு” - (9:14)

மேற்சொன்ன மனுஸ்மிருதி சுலோகம் பெண்ணுக்குக் கூறும் அறிவுரையைப் பார்த்தீர்களா? பெண்ணே, உன் புருசன் உன்னிடம் கேவலமாக நடந்து கொண்டாலும்சரி, பொம்பளை விசயத்தில் அப்படி இப்படி இருந்தாலும் சரி, அட்ஜஸ்ட் பண்ணிட்டு அவனைத் தெய்வமாகக் கும்பிடுவது தான் கற்புடைய பெண்ணிற்கு அழகு.

நோன்பு, விரதம் என எதையும் கடைபிடிக்க வேண்டாம். புருசனைத் தெய்வமாகக் கும்பிட்டால் இந்தப் பிறவியில் மட்டுமல்ல மறுஜென்மத்திற்கும் நன்மை கிடைக்கும் என்று கூறுகிறது. இப்படிப்பட்ட மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்டே தீர்ப்புகளை வெளியிட்டு வந்த உச்சநீதிமன்றம் முதன்முறையாக பெண்களின் மனதைக் கருத்தில் கொண்டு தீர்ப்பு கூறியிருக்கிறார்கள்.

தீர்ப்பைச் சாதகமாக்கும் ஆண்கள்

“நாட்டுக்கு நல்லதுரை வந்தாலும் தோட்டிக்குப் புல் சுமக்கும் வேலை போகாது” என்பதுபோல, பெண் இனத்திற்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் என்னதான் சட்டம் போட்டாலும், சமுதாயத்தில் ஆதிக்கமாக உள்ள இந்து மனுசாத்திரச் சட்டங்கள், அவற்றை வளைத்துத் தங்களுக்குச் சாதகமாக்கி விடும் என்பதை இந்த 497 தடையும் உறுதிப்படுத்திவிடுமோ என்ற பயமும் உருவாகியுள்ளது.

திருவள்ளுவர் காலத்திலிருந்தே, அடுத்தவன் மனைவியை ஆள நினைக்கும் பண்பாடு சமுதாயத்தில் இருந்திருக்கிறது. நமது தாத்தாக்கள் காலத்தில்கூட இரண்டு பெண்டாட்டிகள் என்பது சாதாரணமான விசயமாகத்தான் இருந்தது. இந்தச் சட்டத்தின்படியும், பெரியாரின் பெண்விடுதலைக் கருத்துக்களின் அடிப்படையிலும், திருமணம் என்ற உறவைத் தாண்டி, ஆண் - பெண் இருவரும் விரும்பி இணைவதைப் பற்றிக் கவலைஇல்லை.

ஆனால் சராசரி ஆண், உயர் ஜாதி ஆண், உயர் அதிகாரி ஆண், கட்சியில் அதிகாரம் பெற்ற ஆண், பணக்கார ஆண், சாமியார் ஆண், மதத்துறவி ஆண், பெரியார், அம்பேத்கர், மார்க்ஸ் கொள்கைகளைப் பேசும் ஆண், ஆணாதிக்க ஆண், பெண்விடுதலை பேசும் ஆண் என்ற அனைத்துவகை ஆண்களிலும்- மனைவியைத் தாண்டி இன்னொரு பெண்ணை வளைக்க வேண்டும் என்ற வெறியில் அலையும் ஆண்களும் இருக்கிறார்கள். அவர்கள் இந்தச் சட்டத்தைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்ளும் ஆபத்தும் உள்ளது.

பெண்ணைப் பாலியல் பொருளாக மட்டுமே பார்க்கும் ஆண்கள் எல்லா வேசமும் போடுவார்கள் என்பதைப் பெண்கள் புரிந்து கொண்டு சமுதாயத்தைச் சந்திக்க வேண்டும். பெண் விரும்பி யாருடனும் இணைவது தவறல்ல என்றாலும், இங்கே “பெண்ணுக்குரிய விருப்பங்கள்” ஆண்களாலேயே திணிக்கப் படுகின்றன என்பதையும் மறுக்க முடியாது.

தீர்ப்பு பற்றி

ஐந்து நீதிபதிகள் கொண்ட அமர்வு சட்டப்பிரிவு 497 (Adultery) தனி மனித உரிமை மற்றும் பெண் சமத்துவத்திற்கும் எதிரானது, இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் 14-வது பிரிவுக்கு (சமமாக வாழ்வதற்கான அடிப்படை உரிமை) விரோதமானது என்றும் கூறி சட்டப் பிரிவு 497ஐ ரத்து செய்து தீர்ப்பளித்தார்கள்.

முதலாவதாக சட்டப்பிரிவு 497 “திருமணமான ஒரு ஆண், மனைவி அல்லாத வேறொரு திருமணமான பெண்ணுடன் அந்தக் கணவர் சம்மதம் இல்லாமல் உடலுறவு வைத்துக்கொள்வது ‘பாலியல் பலாத்காரம்’ ஆகாது. ஆனால் தண்டனைக்குரிய குற்றம் என்று கூறுகிறது. இதன்படி சம்பந்தப்பட்ட ஆணுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் கூடுதலாக அபராதம் விதித்தோ அல்லது அபராதம் இல்லாமலோ தண்டனை வழங்கலாம் என்று அறிவுறுத்தியது. (அதே சமயம் ஒரு பெண்ணின் கணவர் இன்னொரு திருமணமான பெண்ணுடன் பாலியல் உறவு வைத்திருப்பதை அறிந்தும் இந்தச் சட்டப்பிரிவின் கீழ் பெண் வழக்குத் தொடுக்க முடியாது)

சட்டப்பிரிவு 497க்கு எதிராகக் கேரளாவைச் சேர்ந்த ஜோசப் என்பவர் வழக்கு தொடுத்திருந்தார். அந்த மனுவில் அவர் கூறியிருந்ததாவது, “சட்டப்பிரிவு 497 பாலியல் சமத்துவம் அற்றது இந்தச் சட்டப்பிரிவின் கீழ் சம்பந்தப்பட்ட ஆணைத் தண்டிக்க வழிஉள்ளது. ஆனால் பெண்ணுக்குத் தண்டனை கிடையாது. அதோடு அந்தப்பெண் குற்றத்திற்குத் துணை (Abettor) போனவராகக் கூடக் கருதாமல் பாதிக்கப்பட்டவராகக் கருதப்படுகிறார். ஆனால் வழக்கில் சம்பந்தப் பட்ட பெண்ணுக்குத் தண்டனை வழங்க வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் கூறிய தீர்ப்பானது,

• ஆணுக்குச் சமமாகப் பெண்ணை நடத்த வேண்டும்.

• பெண்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டக்கூடாது.

• சமுதாயம் நினைப்பதைத்தான் பெண்கள் செய்ய வேண்டும்என்று சொல்லக்கூடாது.

• பெண்ணுக்குப் பாலியல் உறவைத் தேர்வு செய்ய உரிமை உள்ளது.

• சமுதாயப் பாரம்பரியம் எல்லாம் பிறகு தான்.

• பெண்ணின் உரிமையை நாடு கருத்தில் கொள்ள வேண்டும்.

• திருமணத்திற்கு அப்பால் உள்ள ஆண், பெண் உறவைக் கிரிமனல் குற்றமாகக் கருத முடியாது. உரிமையியல் (ஊஎைடை) வழக்காகப் பதிவு செய்து விவாகரத்து கோரலாமே தவிர, சம்பந்தப்பட்ட ஆண், பெண் இருவருக்கும் சிறைத்தண்டனை கொடுக்க முடியாது.

• இந்தச் சட்டமானது பெண்களை, மனிதர்களாக மதிக்காமல் ஒரு பொருளாகப் பாவிக்கிறது. பெண்ணின் ஒப்புதல் கேட்கப்படவில்லை. கணவர் அனுமதித்தால் இந்தச் செயல் குற்றமில்லை என்றும் கணவர் அனுமதி இல்லையெனில் பெண்ணுக்கே விருப்பம் இருப்பினும் குற்றமாகக் கருதப் படுவதால் இது பெண்களுக்கு எதிரான சட்டம்.

• திருமணமாகாத பெண் மற்றும் திருமணமான ஆணுக்கு இடையே இருக்கும் உறவுமுறை குறித்து எங்கும் தெரிவிக்கப்படவில்லை.

• பாலியல் உறவு என்பது இருவரின் தேர்வு, வயது வந்த இரண்டு நபர்களிடையே ஏற்படும் பாலியல் உறவை எப்படி தண்டனைக் குற்றமாக கருத முடியும்? தொன்மையான 497 சட்டமானது ஆர்ட்டிகள் 14 ‘சட்டத்தின் முன் அனைவரும் சமம்’ மற்றும் ஆர்ட்டிகள் 21 ‘வாழ்வதற்கான உரிமையும், தனி மனித சுதந்திரம்’ இவற்றிற்கு எதிராக உள்ளது.

• சட்டப்பிரிவு 497 “பெண்களின் கண்ணியத்தைச் சிதைப்பதாக இருப்பதால் இதை ரத்து செய்து தீர்ப்பளிக்கிறோம் என்று தெரிவித்தனர்.

சிம்பிளா சொன்னால் அடுத்தவன் வீட்டு பெட்ரூமை எட்டிப் பார்க்காதீங்க, சேர்ந்து வாழ்வதோ, பிரிந்து செல்வதோ சம்பந்தப் பட்டவர் பாடு, அவர்கள் முடிவு எடுத்துக் கொள்வார்கள். முதலில் அவரவர் வீட்டில் இருக்கும் மனைவியின் உணர்வு களுக்கு மதிப்புக் கொடுத்து நடந்து கொள்கிற வழியைப் பாருங்கள்.

திருமண அமைப்பைச் சட்டப்படிக் குற்றமாக்க வேண்டும்

ஒரு பெண் எதற்காக ஆணுக்கு அடிமையாக இருக்க வேண்டியது? உலக ஜனத் தொகையில் சரி பகுதியாக இருக்கும் ஆண்களுக்கு அடிமையாக இருக்க வேண்டியதுதான் அவர்கள் பகுத்தறிவு பெற்றிருப்பதற்குப் பயனா? குறைந்த அளவு ஒழுக்கத் தோடு, நாணயத்தோடு வாழ வேண்டுமென்று இல்லையே! பெண்ணாகப் பிறந்தால் கணவனுக்குத் தொண்டு செய்ய வேண்டும். குட்டி போட வேண்டும். தன் அறிவைப் பயன்படுத்தக்கூடாது. மதம், கடவுள், இலக்கியம், மோட்சம், இவை நம் அறிவைக் கெடுத்து விட்டன. மனித சமுதாயம் அறிவோடு வாழ வேண்டும். சுதந்திரத்தோடு வாழ வேண்டும். - 23.04.1969 – தஞ்சைத் திருமண விழா உரை, விடுதலை – 02.05.1969

Pin It