கடந்த 1970-களில் தொடங்கி நாளது வரை தமிழ்ச் சூழலில் ரஷ்ய இலக்கியங்களின் பாதிப்பு தமிழ்ப் படைப்பாளிகளிடம் இருந்து வருகிறது. தாய், அன்னா கரீனைனா, தந்தையரும் தனயரும், கசாக்குகள், புத்துயிர்ப்பு, குற்றமும் தண்டனையும், போரும் அமைதியும், முதல் ஆசிரியர், ஜமீலா, வெண்ணிற இரவுகள் எனத் தமிழர்களை ஈர்த்த ரஷ்ய இலக்கியங்களின் வரிசை மிக நீண்டது. அந்த வரிசையில், நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கியின், 'வீரம் விளைந்தது' நாவல் குறிப்பிடத்தக்கதாக உள்ளது.
செர்மன் நாட்டுப் படையின் ஊடுருவல், உள்நாட்டு முதலாளிகளின் போர், ஜார் மன்னரின் வழித்தோன்றல்களின் தொடர்ந்த அச்சுறுத்தல்களுக்கு இடையில் செஞ்சேனையின் வீரம் செறிந்த போராட்டத்தையும், இந்நாவலின் நாயகன் பாவெல் கர்ச்சாகினின் தீரத்தையும் வெளிப்படுத்துவதாக இன்றளவும், 'வீரம் விளைந்தது' நாவல் நினைவுகூரப்படுகிறது. சென்ற நூற்றாண்டின் தொடக்கத்தில் இந்நாவல் வெளிவந்திருந்தாலும், இன்றளவும் உலகெங்கிலுமுள்ள போராடும் மக்களுக்கும், இளைஞர்களுக்கும் நம்பிக்கையூட்டுவதாக இந்நாவலின் பேசுபொருள் அமைந்துள்ளது.
கடந்த 1917-ஆம் ஆண்டு லெனின் தலைமையில் போல்ஷ்விக் கட்சியால் (ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி) வழி நடத்தப்பட்ட தொழிலாளர், உழவர் புரட்சி மாபெரும் வெற்றி பெற்றது. ஆட்சிப் பொறுப்பில் இருந்து வீழ்த்தப்பட்ட ஜார் மன்னரின் வழித்தோன்றல்கள், முதலாளிகள் புரட்சிக்கெதிராக ஆயுதமேந்திப் போராட ஆரம்பித்தனர். மறுபக்கம் செர்மனியின் படையும், புரட்சிக்கெதிரானவர்களின் உள்நாட்டு போரும் மூளத் தொடங்கின. இவற்றை எதிர்த்து ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி, தொழிலாளர்கள் இணைந்த செஞ்சேனை போராட ஆரம்பித்தது.
தனது சிறுவயதில் செஞ்சேனையில் இணைந்த பாவெல் பல போர்களில் ஈடுபட்டுக் காயமடைந்தாலும், சற்று உடல் நலம் தேறி மீண்டும் போர்க்களத்திற்குச் சென்றார். அவரது இடையறாத போர்க்களப் பணிகளால் உடல் நலம் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டு, முழுமையாக ஒய்வெடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது. போர்க்களம் செல்ல முடியாத, உடல் நலம் குன்றிய நிலையில் இளைஞர் சங்கப் பணிகள், எழுத்துப் பணி எனப் பல்வேறு பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருந்தார்.
போரில் பல முறை குண்டுகள் தாக்கியதன் பின் விளைவாக உடல் நலம் மோசமாகப் பாதிக்கப்பட்டதுடன், கை கால்கள் செயல் இழக்க ஆரம்பித்தன. பார்வையும் மோசமடைந்து, சிறிது காலத்தில் முழுமையாகப் பறிபோனது. தனது இளம் வயதிலேயே போர்க்களங்களில் செயலாற்றி, நடக்க இயலாமல் படுகாயமடைந்தாலும், மக்களுக்கான பணிகளில் தன்னை எந்த வகையிலாவது ஈடுபடுத்திக் கொள்ள வேண்டும் என்ற முனைப்புடன் பாவெல் செயல்பட்டு வந்தார். அவர் முன் இருந்த ஒரே வாய்ப்பு எழுத்து மட்டுமே. அதையும் அவர் சொல்லச் சொல்ல ஒருவர் எழுத வேண்டும் என்ற நிலையில், தன்னுடைய போராட்ட வாழ்வை அடிப்படையாகக் கொண்டு எழுத ஆரம்பித்த நாவல்தான், 'வீரம் விளைந்தது'.
'புரட்சி', 'மக்கள் எழுச்சி' என்ற சொல்லாடல்களுக்கான முதன்மைப் பங்கு, இளைஞர்கள், தங்களது சமூகப் பங்களிப்பை எந்த வகையில் நல்க வேண்டும் என்பதை நாவல் எடுத்துரைத்தது. 1932-ஆம் ஆண்டு ரஷ்ய மொழியில் 'வீரம் விளைந்தது' நாவல் வெளியானது. உடல் நலம் மோசமடைந்து 1936-ஆம் ஆண்டு நிக்கொலாய் இறந்தாலும், அவரது நாவல் உலக அளவில் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு இளைஞர்களால், எளிய மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாவலின் கதாநாயகன் பாவெல்லும், தாய் நாவலின் பாவெல்லும் இன்றளவும் இளைஞர்களுக்கான முன்னுதாரணமாக உள்ளனர் என்றால் மிகையல்ல.
உலக அளவில் கொண்டாடப்பட்டு வரும் இந்நாவலின் இளையோர் பதிப்பை ஆங்கிலத்தில் இருந்து தமிழில் மறு ஆக்கம் செய்துள்ள ஆதி வள்ளியப்பன் மிகுந்த பாராட்டிற்குரியவர். வடிவமைப்பும், அழகிய ஓவியங்களும், எளிய தமிழாக்கமும், தரமும் பள்ளி மாணவர்கள், இளைஞர்கள் என அனைவரையும் வீரம் விளைந்தது நூல் கவர்ந்திழுக்கும் என்பதில் ஐயமில்லை.
ரூடால்ஃப் கார்க்லின் சிறுவர்களைக் கவர்ந்திழுக்கும் அழகிய ஓவியங்களுடன் தரமான முறையில் புக்ஸ் பார் சில்ரன்ஸ் இந்நூலை வெளியிட்டுள்ளது. தொடர்ச்சியாக ரஷ்ய இலக்கியங்களின் நீண்ட வரிசையை இளையோர் பதிப்பாக வெளிக்கொண்டு வரும் முயற்சியில் புக்ஸ் பார் சில்ரன்ஸ் ஈடுபடும் என்ற நம்பிக்கையை இப்பதிப்பு தருகிறது.
'உலகெங்கும் சாதாரண, எளிய மக்களின் உரிமைகளுக்காப் போராட வேண்டிய, புரட்சி நடத்த வேண்டிய அவசியத்தை வலியுறுத்திய முக்கிய படைப்பான வீரம் விளைந்தது, காலம் காலமாக உத்வேகம் அளித்து வரும் நாவல்களில் ஒன்று' எனக் குறிப்பிடும் ஆதி வள்ளியப்பனின் இம்முயற்சி பாராட்டிற்குரியது. அந்த வகையில், அடுத்தடுத்து ரஷ்ய இலக்கியங்களை இளையோர் பதிப்பாக வெளிக் கொண்டு வரவேண்டிய பணியை ஆதி வள்ளியப்பன் மேற்கொள்வார் என நம்பலாம். இளையோருக்கான நூல் வரிசையில் கொண்டாடப்பட வேண்டிய படைப்பாக மட்டுமின்றி பாதுகாக்கப்பட வேண்டிய படைப்பாகவும் 'வீரம் விளைந்தது' நாவல் உள்ளது.
வெளியீடு:
வீரம் விளைந்தது
புக்ஸ் பார் சில்ரன்ஸ்
நிக்கொலாய் ஒஸ்திரோவ்ஸ்கி (ஆங்கில மொழிபெயர்ப்பு; ஷீனா வேக்ஃபீல்ட்)
- ஏ.சண்முகானந்தம்