periyar 366ருஷியா தேசம் விடுதலை அடைந்த விதத்தைப் பற்றி அமெரிக்காவிலுள்ள திரு. சுசீந்திர போஸ் என்னும் இந்திய கனவான் ஒருவர் எழுதி “ருஷிய மதப்புரட்சி” என்னும் வியாசத்தின் சுருக்கத்தை மற்றொரு புறம் பிரசுரித்திருக்கின்றோம்.

அதை வாசகர்கள் சற்று ஊன்றிப் படித்தால் மத சம்பந்தமாகவும், மதக்குருக்கள், மடாதிபதிகள், புரோகிதர்கள் ஆகியவர்கள் சம்மந்தமாகவும் நாம் 4, 5 வருஷ காலங்களாய் குடி அரசில் எழுதி வரும் விஷயங்களில் அநேகங்களை ஒத்து இருப்பதைக் காணலாம்.

பழய ருஷியாவில் உள்ள மத நிலைமை மத ஆச்சாரியார்கள் மடாதிபதிகள் ஆகியவர்கள் நிலைமையே தான் இன்றைய நமது இந்தியாவிலும் இருந்து வருகின்றது.

ஆகவே ருஷியாவின் அந்த பழய நிலை நீங்கிய பிறகு தான் எப்படி ருஷியா சுவாதீன நாடு ஆவதற்கு இடம் ஏற்பட்டதோ அது போலவே இந்தியாவும் மதக் கட்டுப் பாட்டிலிருந்தும் மத ஆச்சாரியர் கள் மடாதிபதிகள் ஆதிக்கத்தில் இருந்தும் புரோகிதர்கள் புரட்டில் இருந்தும் அடியோடு விடுபட்டால் ஒழிய உண்மையான சுவாதீன நாடாகாது என்பது நமது அபிப்பிராயமாகும்.

மதக்கட்டுப்பாட்டை ஏற்படுத்தினவர்களெல்லாம் ஒருவர்களாவது சமாதான முறையிலோ அகிம்சா தர்மத்திலோ மனச்சாட்சிப்படி நடக்க விட்டோ ஏற்படுத்தினதாகவும் அவைகளை காப்பாற்றும் முறையிலாவது நீதியையோ நியாயத்தையோ சமாதானத்தையோ கொண்டு காப்பாற்றி வந்ததாகவும் யாவராலும் கொள்ள முடியாது.

எந்த மத சரித்திரத்தைப் பார்த்தாலும் யுத்தம் செய்து அடித்து, குத்தி, மிரட்டி, கொன்று, கழுவேற்றி குடலைப் பிடுங்கி மற்றும் எவ்வளவோ சித்திரவதை முதலிய கொடுமைகளும் தந்திரம் புரட்டு பொய் முதலிய காரியங்கள் செய்தேதான் அவைகள் உண்டாக்கப்பட்டு இருப்பதோடு யாராவது தட்டிப்பேசினால் தர்க்கம் செய்தால், நியாயம் கேட்டால் அவர்களையும் அது போலவே அடித்தும் நாக்கருத்தும் கண்ணைப் பிடுங்கியும் சித்திரவதை முதலியவைகள் செய்தும் தண்டித்து மற்றும் பல வகையில் மிரட்டியும் பயப்படுத்தியுந்தான் காக்கப்பட்டு வந்தது, வருகின்றதே தவிர வேறில்லை.

இவற்றிற்கெல்லாம் அந்த அந்த மதஸ்தர்கள் சரித்திரங்களும் மதபிரசாரம் செய்த சரித்திரங்களும் அதற்கு முன் இருந்த மதக்காரர்கள் நடந்து கொண்ட சரித்திரங்களும் இப்போதும் சில சமயங்களில் சில இடங்களில் நடந்து வருகின்ற பிரத்தியட்ச நடவடிக்கைகளும் யாவர்க்கும் நன்றாய் விளங்கும்.

ஆதியில் உலகத்தில் ஏற்பட்ட ஆட்சிகள் எல்லாம் பெரிதும் மக்களைக் காப்பதற்கல்லாமலும் நாட்டை எதிரிகளிடமிருந்து தப்புவிப்பதற் கல்லாமலும் முக்கியமாய் மதத்திற்காகவென்றே ஆதிக்கம் பெற்று பிறகு அதை ஆட்சி முறை ஆக வைத்து அரசாட்சி ஆரம்பிக்கப்பட்டு வந்ததுடன் அதையே மதத்தின் பேராலேயே நடத்தி மக்களை அடிமைப்படுத்தியதோடு அதன் பேராலேயே மக்களிடமிருந்து பணமும் பறித்து வந்து பிறகு அது மெள்ள மெள்ள தனி அரசாட்சியாக மாறினதாகவே பெரிதும் சரித்திரம் காண முடிகின்றது.

இந்திய நாட்டு சரித்திரமும் அநேகமாக மகமதியர்கள் இந்தியாவுக்கு வரும் வரை மத ஆக்ஷியாகத்தான் ஆங்காங்கு கையில் வலுத்தவன் ஆண்டு கொண்டிருந்ததாக அறியலாம்.

மகமதியர்களும் கிருஸ்துவர்களும் இந்தியாவுக்கு வந்து இன்றைக்கு சுமார் ஆயிரம் வருஷகாலம் ஆகியிருந்தாலும் இந்துக்கள் என்பவர்கள் மீதுள்ள பழய மத ஆதிக்கம் சிறிதும் குறைவடையாமல் இருக்கவே அன்னிய ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்து அரசாக்ஷியின் பேரில் அப்படியே இருந்து வர ஏற்பாடு செய்து தாராளமாய் மனம் ஒப்பியே மத ஆதிக்கமும் சிறிதும்

குறைவுபடாமல் காப்பாற்றப்பட்டு வருகின்றது. ஆதலால் தான் மற்ற நாடுகளையெல்லாம் விட இந்தியாவுக்கு இன்றைய நிலையில் இரண்டு வித ஆதிக்கம் ஒழிய வேண்டி இருக்கின்றதென்றே சொல்லுகிறோம்.

எனினும் மேலே சொன்னபடி மத ஆதிக்கமே அன்னிய ஆதிக்கத்திற்கு இடம் கொடுத்துக் கொண்டிருக்கிற படியால் முதலில் மத ஆதிக்கம் ஒழிந்தால் பிறகு அன்னிய ஆதிக்கம் தானாக ஒழிய ஆரம்பித்துவிடும் என்பதே நமது கருத்து. (இன்றையத்தினம் நாம் அன்னிய ஆதிக்கம் என்று சொல்லுவது எதை என்றால் இந்தியர்கள் அல்லாதவர்கள் ஆதிக்கம் என்பதல்ல என்பதையும் அன்னிய நாட்டின் நன்மையை பிரதான மாய்க் கருதி ஆக்ஷி செய்யப்பட்டு வருகின்ற ஆதிக்கம் என்பதையும் ஒவ்வொருவரும் நன்றாய் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்)

மத ஆதிக்கமும் அன்னிய ஆதிக்கமும் ஆகிய இரண்டும் ஒரே அஸ்திவாரத்தின் மீதே கட்டப்பட்டிருக்கும் விஷயம். நன்றாய் கவனமாய் யோசித்துப் பார்த்தால் தான் விளங்கும்.

எப்படியெனில்:- மதத்தின் பேரால் நம் மக்கள் மீது இப்போது இருந்து வரும் ஆதிக்கமானது சிறிதாவது நமது நன்மையைக் கருதியது அல்லவென்பது சிறிதாவது நமக்கோ நமது நாட்டின் நன்மைக்கோ பயன் படக்கூடியது அல்லவென்பதும் அவை சிறிதாவது நமது அறிவுக்கோ சமூக உணர்ச்சிக்கோ ஜவாப்தாரித் தனமுடையது அல்லவென்பதும் அதைப்பற்றி ஏதாவது தட்டிப் பேசுவது கூட மதத்துரோகமும் ஜனங்களின் சமாதானக் குறைவு உண்டாக்கத் தக்கதாவதும் வகுப்புத் துவேஷத்தை உண்டு பண்ணுவது ஆகும் என்பதும் ஆக எப்படி சொல்லப்படுகின்றோமோ அப்படியே தான் அன்னிய ஆதிக்கத்திலும் நாம் ஏதாவது தட்டிப் பேசினால் கண்டிக்கப்படுகின்றோம்.

அதாவது அன்னிய ஆக்ஷி சிறிதாவது நமது நாட்டு நன்மைக்காகவல்ல வென்பதும் அதனால் நமக்கும் நமது நாட்டுக்கும் சிறிதும் நன்மையில்லை என்பதும் நமக்கு ஜவாப்தாரித்தனமுடையதல்ல என்பதும் தட்டிப் பேசுவது ராஜத் துரோகமும் சமாதான பங்கமும் வகுப்புத் துவேஷமும் ஆகும் என்பது மாகும்.

ஆதலால்தான் மத ஆதிக்கத்தை நாம் முதலில் அழித்துவிட்டால் பிறகு அன்னிய ஆதிக்கத்திற்கு வலுவு தானாக குன்றிவிடும். நமக்காகவே ஆளப்படக்கூடிய ஆக்ஷி தானாக ஏற்பட்டுவிடும் என்று சொல்லுகிறோம்.

எனவே இந்த மேல் காட்டிய நமது தத்துவத்திற்கு ருஷியாவில் மதப் புரக்ஷியானது ஒரு சரியான உதாரணம் ஆகும் என்று கருதித்தான் அதை வாசித்துப் பார்க்க வேண்டுகிறோம்.

தவிரவும் ருஷியாவில் அந்தக் காலத்தில் இருந்து வந்த பணக்கார ஆதிக்கமே தான் சற்றேறக்குறைய இந்த நாட்டிலும் இப்போது இருந்து வருகின்றது என்று சொல்ல வேண்டியிருக்கிறது.

என்னவென்றால் பணக்காரனுடைய பணம் நாட்டின் நன்மைக்கும் ஏழைகளின் கஷ்டம் நீங்குவதற்கும் பயன்படுவதாயிருந்தால் நாம் அதைப்பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை.

ஏனெனில் எப்படி ஒரு இராஜ்ஜியத்தின் ஆக்ஷி அந்த நாட்டு மக்களுக்கு சொந்தமான தென்றும் அது அந்த நாட்டு மக்களின் நலத்துக் காகவே பயன்படத்தான் ஆளப்பட வேண்டுமென்றும் நாம் சொல்லுகின்றோமோ அது போலவே ஒரு நாட்டின் செல்வமும் பூமியும் மலையும் ஆறும் அந்த நாட்டு மக்களுக்கு சொந்தமென்றும் அந்த நாட்டு மக்களின் நன்மைக்காக பயன்படத்தான் அவை இருக்க வேண்டியது என்பது நியாயமும் அவசியமுமாகும்.

அப்படி இல்லாமல் “ஆக்ஷி மாத்திரம் மக்களுக்கு பொது வானது, சொத்து மாத்திரம் எனக்கு சொந்தமானது, அதை நான் என்ன வேண்டுமானாலும் என்னிஷ்டப்படி செய்து கொள்ள எனக்கு பாத்தியமுண்டு நாட்டு நன்மையைப் பற்றியோ ஏழைகள் நன்மையைப் பற்றியோ எனக்கு கவலை இல்லை” என்று ஒரு செல்வவான் சொல்லுவானேயானால் அது சிறிதும் நம்மால் ஒப்புக் கொள்ளக்கூடிய நியாயமாகாது.

ஏனெனில், பொது வாக நமது நாட்டின் வறுமை நிலைக்கு நமது நாட்டு பெரும் பெரும் செல்வவான்களும் பெரும் மிராசுதாரர்களும் பிரபுக்களும் காரணஸ்தர்கள் என்பதை நாம் சொல்லாமலிருக்க முடியாது.

மத ஆக்ஷிக்காரர்கள் எப்படி தங்கள் மத உணர்ச்சி உதவியினால் மக்களை அடிமைகளாக்கி ஆக்ஷி செலுத்துகின்றார்களோ அது போலவேதான் செல்வ ஆக்ஷிக்காரர்களும் தங்கள் செல்வநிலை உதவியால் மக்கள் மீது ஆதிக்கம் செலுத்தி அடிமை களாக்கி கஷ்டப்படுத்துகின்றார்கள்.

ஆகவே மதம், அரசாங்கம், பிரபுத்துவம் ஆகிய மூன்றும் சேர்ந்து தான் நாட்டை (அதாவது நாட்டிலுள்ள பெரும்பான்மையான மக்களாகிய) ஏழைகளை வருத்துகின்றது.

ஆதலால் நாட்டுக்கு உண்மையாக விடுதலை வேண்டுமானால் இம்மூன்று துறையிலும் முறைப்படி பெரும் புரட்சி ஏற்பட்டால் தான் விடுதலையடைய முடியுமேயல்லாமல் வெறும் அரசியலைப் பற்றி அதன் அஸ்திவாரத்தை விட்டு விட்டு கூச்சல் போடுவதாலும் அரசாங்க ஆதிக்கத்தின் மீது கண்மூடிக் கொண்டு குறை கூறுவதாலும் ஒரு காரியமும் நடத்து விடாது.

நிற்க மேற்கண்ட இம்மூன்று விஷயத்திலும் புரட்சி ஏற்படும் போது இம்மூன்றிற்கும் உதவியாய் இருக்கின்ற ஆயுதங்களையும் முதலில் நாம் பிடுங்கிக் கொள்ள வேண்டும்.

அதென்னவென்றால் அது தான் கடவுள் என்பதாகும். எப்படியெனில் ஆட்சி ஆதிக்கக்காரன் “உங்களை ஆளும்படி கடவுள் எங்களை அனுப்பினார்” என்கின்றான். மத ஆதிக்கக்காரன், உங்களுக்காக “உங்களை மோட்சத்திற்கு அனுப்ப கடவுள் இந்த மதத்தை ஏற் படுத்தி அதைக் காப்பாற்ற எங்களை அனுப்பினார்” என்கின்றான்.

செல்வ ஆதிக்கக் காரன் “முன் ஜென்மத்தில் நான் செய்த புண்ணியத்தினால் இந்த செல்வத்தை கடவுள் எனக்குக் கொடுத்தார்” என்கின்றான். ஆகவே இம் மூன்று கொடியவர்களுக்கும் (மக்கள் விரோதிகளுக்கும்) ஆயுதங்களாக இருப்பது கடவுளாகும். ஆகவேதான் அதை நாம் முதலில் ஒழிக்க வேண்டி இருக்கின்றது.

ஏனெனில் அம்மூவர்களுக்கும் கடவுள் அனுகூலமாயிருப்பதால் அக்கடவுளை அவர்கள் எப்படி காப்பாற்ற முயலுகின்றார்களோ அது போலவே நமக்கு அக்கடவுள் விரோதமியிருக்கிற படியால் நாம் விடுதலை பெற கடவுளை முதலில் ஒழிக்க வேண்டியவர்களாயிருக்கின்றோம்.

அதாவது அம்மூவரையும் பார்த்து நாம் “உங்களை கடவுள் அனுப்பினாரோ கடவுள் உண்டாக்கினாரோ உங்களுக்குக் கடவுள் கொடுத்தாரோ என்பதைப் பற்றி எங்களுக்கு கவலையில்லை.

எங்களுக்கு இல்லாமல் செய்து கஷ்டப்படுத்தி உங்களுக்குக் கொடுத்து இருக்கும் கடவுளை நாங்கள் அரை நிமிஷமும் ஒப்புக் கொள்ள மாட்டோம், கால் வினாடியும் அந்தக் கடவுளை இருக்கவும் விட மாட்டோம்” என்று சொல்லி விட்ட பிறகு தான் உங்கள் ஆதிக்கங்களையும் ஒப்புக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி ஆக வேண்டும் என்கின்றோம்.

இந்தக் கொள்கையைக் கொண்டுதான் ருஷியர்களும் சம தர்மம் ஏற்பட வேண்டுமானால் முதலாவது கடவுள் ஒழிய வேண்டுமென்று நினைத்து அதற்காக முதல் முதலாக கடவுளைக்காட்டும் மதத்தின் பேரில் போர் புரிந்து வெற்றிபெற்று பிறகே அவர்கள் மற்ற காரியங்களும் செய்து கொள்ளத் தக்கவர்களானார்கள் என்பது விளங்குகிறது.

(குடி அரசு - துணைத் தலையங்கம் - 01.06.1930)

Pin It