லெனின் நினைவுக் கூட்டத்தில் லெனின் குறித்து தோழர்.ஸ்டாலினின் உரை:

இடம்: கிரெம்ளின் இராணுவப் பள்ளி

காலம்: ஜனவரி 28, 1924

Lenin and Stalinதோழர்களே, இன்று மாலை நீங்கள் இங்கே லெனின் நினைவுக் கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளதாகவும், பேச்சாளர்களில் ஒருவராக நான் அழைக்கப் பட்டுள்ளதாகவும் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லெனினின் செயல்பாடுகள் குறித்து நான் ஒரு உரை நிகழ்த்த வேண்டியது அவசியம் என்று நான் நினைக்கவில்லை. ஒரு மனிதராகவும் தலைவராகவும் லெனினின் சிறப்பியல்புகளை வெளிக்கொணரும் சில உண்மைகளைப் பற்றி மட்டும் நான் கூறுவது இன்னும் சிறப்பாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒருவேளை, இந்த உண்மைகளுக்கு இடையில் எந்த உள்ளார்ந்த தொடர்பும் இல்லாமல் இருக்கலாம். ஆனால் லெனின் குறித்து ஒரு பொதுவான கருத்தைப் பெறுவதற்கு அது அப்படி ஒன்றும் முக்கியத்துவம் வாய்ந்ததல்ல. எப்படியிருந்தாலும், இந்த தருணத்தில் நான் வாக்குறுதி அளித்ததை விட அதிகமாக என்னால் செய்ய இயலாது..

மலைக் கழுகு

நான் முதலில் லெனினுடன் 1903ல் அறிமுகம் ஆனேன். ஆம், அது ஒரு தனிப்பட்ட அறிமுகம் அல்ல, கடிதப் பரிமாற்றத்தால் ஏற்பட்டது. ஆனால் அது என் மீது ஒரு அழியாத பதிவை ஏற்படுத்தியது. கட்சியில் நான் செய்த எல்லா வேலைகளிலும் என்னை விட்டு அது விலகவேயில்லை. நான் அப்போது சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட்டிருந்தேன். தொண்ணூறுகளின் முடிவில் இருந்து லெனினின் புரட்சிகர நடவடிக்கைகள் பற்றி நான் அறிந்ததில், குறிப்பாக 1901 க்குப் பிறகு, இஸ்க்ரா-1 தோன்றிய பிறகு, லெனினுக்குள் எங்களுக்கான அசாதாரண திறமை வாய்ந்த ஒரு மனிதர் இருப்பதை எனக்கு உணர்த்தியது. அந்த நேரத்தில் நான் அவரை வெறுமனே கட்சியின் தலைவராகக் கருதவில்லை. ஆனால் அதன் உண்மையான நிறுவனர் என்றே கருதினேன். ஏனென்றால் அவர் மட்டும்தான் எங்கள் கட்சியின் உள்சாரத்தையும் அவசரத் தேவைகளையும் புரிந்து கொண்டார்.

நான் அவரை எங்கள் கட்சியின் மற்ற தலைவர்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தபோது, ​​அவர் தனது சக பணியாளர்களான பிளெக்கானோவ், மார்த்தோவ், ஆக்செல்ரோட் இன்ன பிறருக்கு மேல் மிகவும் உயர்ந்தவராக எனக்குத் தோன்றியது; அவர்களுடன் ஒப்பிடும்போது, ​​லெனின் தலைவர்களில் ஒருவர் மட்டுமல்ல, மிகவும் உயர்ந்த தகுநிலையில் இருந்தவர். ஒரு மலைக் கழுகு, போராட்டத்தில் எந்த பயமும் அறியாதவர். மேலும் ரஷ்ய புரட்சி இயக்கத்தின் முன்னறியாத பாதைகளில் கட்சியை தைரியமாக முன்னோக்கி அழைத்துச் சென்றவர். இந்த எண்ணம் என்னை மிகவும் ஆழமாகப் பற்றியது, வெளிநாட்டில் அரசியலுக்காக நாடு கடத்தப்பட்ட என் நெருங்கிய நண்பருக்கு இதைப் பற்றி எழுதத் தூண்டப்பட்டேன். அவருடைய கருத்தை எனக்குத் தெரிவிக்கும்படி கேட்டுக்கொண்டேன்.

சிறிது காலம் கழித்து, நான் ஏற்கனவே சைபீரியாவில் நாடு கடத்தப்பட்டிருந்த போது - இது 1903 ஆம் ஆண்டின் இறுதியில் - எனது நண்பரிடமிருந்து இருந்து ஒரு உற்சாகமான பதிலையும், லெனினிடமிருந்து ஒரு எளிய, ஆனால் ஆழ்ந்த வெளிப்பாடுடன் கூடிய சுருக்கமானக் கடிதத்தையும் பெற்றேன். அவருக்கு அது கைமாறியுள்ளது. என் நண்பர் எனது கடிதத்தைக் காட்டியுள்ளார். லெனினின் குறிப்பு ஒப்பீட்டளவில் சுருக்கமாக இருந்தது, ஆனால் அதில் எங்கள் கட்சியின் நடைமுறைப் பணிகள் குறித்த துணிவான மற்றும் அச்சமற்ற விமர்சனமும், உடனடி எதிர்காலத்தில் கட்சியின் முழு வேலைத் திட்டமும் குறிப்பிடத்தக்க தெளிவுடனும் சுருக்கமாகவும் இருந்தது. லெனினால் மட்டுமே மிகவும் சிக்கலான விஷயங்களை மிகவும் எளிமையாகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும் துணிவாகவும் எழுத முடிந்தது. ஒவ்வொரு வாக்கியமும் அதிகம் பேசாது ஒரு துப்பாக்கிச் சூட்டைப் போல் ஒலித்தது. லெனின் எங்கள் கட்சியின் மலைக் கழுகு என்னும் என் கருத்தை இந்த எளிய துணிச்சலான கடிதம் மேலும் வலுப்படுத்தியது. பழைய தலைமறைவு ஊழியனுக்கான பழக்கத்தில், மற்ற கடிதங்களைப் போலவே, லெனினின் இந்த கடிதத்தையும் தீச்சுவாலைக்குக் கொடுத்ததற்காக என்னை மன்னிக்கவே முடியாது.

அந்த நேரத்திலிருந்தே லெனினுடன் எனது அறிமுகம் ஆரம்பமானது.

அடக்கம்:

நான் முதன் முதலில் லெனினை 1905 டிசம்பரில் டாம்மர் ஃபோர்ஸில் (ஃபின்லாந்து) நடந்த போல்ஷிவிக் மாநாட்டில் சந்தித்தேன். நான் எங்கள் கட்சியின் மலைக் கழுகை, ஒரு மாமனிதராக, அரசியல் ரீதியாக மட்டுமல்ல, உடல் ரீதியாகவும் மாமனிதராகக் காண்பேன் என்று நம்பினேன். ஏனென்றால் என் கற்பனையில் லெனினை ஒரு வாட்டசாட்டமான, கம்பீரமான மற்றும் கவர்ச்சிகரமானவராக நான் சித்தரித்திருந்தேன். அதனால் பின்னர், சராசரி உயரத்திற்கு குறைவாக, எந்த வகையிலும், உண்மையில் எந்த வகையிலும், சாதாரண மனிதர்களிடமிருந்து வேறுபடாத ஒரு சாதாரண தோற்றமுடைய மனிதரைப் பார்த்தது எனக்கு ஏமாற்றமாக இருந்தது.

ஒரு "பெரிய மனிதர்" கூட்டங்களுக்கு தாமதமாக வருவது வழக்கமான விஷயமாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இதனால் கூட்டம் அவரது வருகைக்காக மூச்சை அடக்கி காத்திருக்கக்கூடும். பின்னர், “பெரிய மனிதர்” நுழைவதற்கு சற்று முன்பு, எச்சரிக்கையும் கிசுகிசுப்பும் மேலேழும்: “ஹஷ்! ... அமைதி! ... அவர் வருகிறார். ”இந்த சடங்கு எனக்கு மிதமிஞ்சியதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இது ஒரு தாக்கத்தை ஏற்படுத்துகிறது. மரியாதையை வர வைக்கிறது. அதன் பிறகு மற்ற பிரதிநிதிகளுக்கு முன்பாகவே லெனின் மாநாட்டிற்கு வந்து விட்டார் எனத் தெரிந்ததும் எனக்கு ஏமாற்றம். மாநாட்டில் எங்கோ ஒரு மூலையில் தன்னைத் இருத்திக் கொண்டு, மிகவும் சாதாரண பிரதிநிதிகளுடன் மிகவும் சாதாரண ஒரு உரையாடலைத் தடையின்றி நடத்தி வந்தார். இது சில அடிப்படை நெறிகளை மீறுவதாக எனக்குத் தோன்றியது என்பதை நான் உங்களிடமிருந்து மறைக்க மாட்டேன்.

இந்த எளிமை மற்றும் அடக்கம், கவனிக்கப்படாமல் இருக்க முயற்சிப்பது, அல்லது குறைந்தபட்சம், தன்னை வெளிப்படுத்திக் கொள்ளாமல், தனது உயர்நிலையை வெளிக்காட்டாமல் இருக்கும் இந்தப் பண்பு மனித குலத்தின் "புதிய மக்களின், எளிய, சாதாரண வெகுமக்களின் புதிய தலைவரான லெனினின் மிகவும் வலுமிக்க பண்புகளில் ஒன்று என்பதை நான் பின்னாளிலே உணர்ந்தேன்.

தர்க்கத்தின் ஆற்றல்:

இந்த மாநாட்டில் லெனின் ஆற்றிய இரண்டு உரைகள் குறிப்பிடத்தக்கவை. ஒன்று தற்போதைய நிலைமை குறித்தது; இன்னொன்று விவசாயக் கேள்வி குறித்தது. துரதிர்ஷ்டவசமாக, அவை பாதுகாக்கப் படவில்லை. அவை அனைவரையும் ஈர்த்தது மேலும் முழு மாநாட்டையும் உற்சாகப் புயலென எழுப்பியது. மனத்திட்பத்தின் அசாதாரண ஆற்றல், வாதத்தின் எளிமை மற்றும் தெளிவு, சுருக்கமான மற்றும் எளிதில் புரிந்து கொள்ளக் கூடிய வாக்கியங்கள், நாடாளுமன்ற சொற்பொழிவாளர்களின் பாசாங்கோ, மயக்கும் சைகைகளோ மற்றும் தாக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட நாடக பாணி வசனங்களோ இல்லாமை - இவையாவும் வழக்கமான நாடாளுமன்ற சொற்பொழிவாளர்களின் உரைகளுக்கு மாறாக லெனினின் உரைகளை சாதகமாக்கின..

ஆனால் அந்த நேரத்தில் என்னை வசீகரித்தது லெனினின் உரைகளின் இந்த அம்சம் அல்ல. அவற்றின் தவிர்க்க முடியாத தர்க்க ஆற்றலால் நான் ஈர்க்கப்பட்டேன். அது சற்றே கடுமையானதாக இருந்தாலும், அவரது பார்வையாளர்களை அது உறுதியாகப் பற்றிக் கொண்டது. படிப்படியாக அது காந்தம் போல் கவர்ந்து. பின்னர் அவர்களை முழுமையாக வென்றது என்றே சொல்லலாம்.

பிரதிநிதிகள் பலர் சொன்னது எனக்கு நினைவிருக்கிறது: “லெனினின் உரைகளின் தர்க்கம் ஒரு வலிமையான கொடுக்கைப் போன்றது. அது ஒரு கவ்வியைப் போல் உங்களைச் சுற்றிலும் பற்றுகிறது. அதன் பிடியில் இருந்து உங்களை விடுவித்துக் கொள்ளும் ஆற்றல் அற்றுப் போவீர். ஒன்று நீங்கள் சரணடைய வேண்டும் இல்லை முழு தோல்வியுற்று விலக வேண்டும்."

லெனினின் உரைகளின் இந்த சிறப்பியல்பு அவரது பேச்சுக் கலையின் வலுவான அம்சமாக இருந்தது என்று நான் நினைக்கிறேன்.

சிணுங்காமை:

நான் இரண்டாவது முறையாக லெனினை சந்தித்தது 1906 இல் எங்கள் கட்சியின் இரண்டாவது ஸ்டாக்ஹோம் காங்கிரஸின் போது. இந்த மாநாட்டில் போல்ஷிவிக்குகள் சிறுபான்மையினராக இருந்தனர் என்பதும், தோல்வியை சந்தித்தனர் என்பதும் உங்களுக்குத் தெரியும். தோல்வியுற்ற நிலையில் லெனினை நான் பார்த்தது இதுவே முதல் முறை. ஆனால் தோல்வியின் பின்னர் சிணுங்கி, இதயத்தை இழக்கும் தலைவர்களைப் போல தோல்வி அவரை சிறுமைப் படுத்தவில்லை. மாறாக அது, லெனினை அழுத்தப்பட்ட ஆற்றலுடைய நீரூற்றாக மாற்றியது. இது அவரது ஆதரவாளர்களை புதிய போர்களுக்கும் எதிர்கால வெற்றிக்கும் ஊக்கமளித்தது.

லெனின் தோற்கடிக்கப்பட்டார் என்று சொன்னேன். ஆனால் அது என்ன வகையான தோல்வி? அவரது எதிர்ப்பாளர்களை, ஸ்டாக்ஹோம் காங்கிரஸின் வெற்றியாளர்களான பிளெக்கானோவ், ஆக்செல்ரோட், மார்த்தோவ் இன்ன பிறரை மட்டும் நீங்கள் பார்த்திருக்க வேண்டும். உண்மையான வெற்றியாளர்களுக்கான தோற்றம் அவர்களிடம் குறைவாகவே இருந்தது. ஏனென்றால் மென்ஷிவிசத்தைப் பற்றிய லெனினின் இரக்கமற்ற விமர்சனம் அவர்களின் உடலில் ஒரு முழு எலும்பையும் விடவில்லை என்றே சொல்லலாம்.

நாங்கள், போல்ஷிவிக் பிரதிநிதிகள் ஒன்றுகூடி, லெனினைப் பார்த்து, அவருடைய ஆலோசனையைக் கேட்டோம் என்பது எனக்கு நினைவிருக்கிறது. சில பிரதிநிதிகளின் உரைகள் சோர்வையும், விரக்தியையும் குறிப்பால் வெளிக்காட்டியது. இந்த உரைகளுக்கு லெனின் பற்களைக் கடித்தவாறே பதிலளித்ததை நான் நினைவு கூர்கிறேன்: "தோழர்களே, சிணுங்காதீர்கள், நாம் வெல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். ஏனென்றால் நாம் சொல்வது தான் சரி."

சிணுங்கும் அறிவுஜீவியின் மேல் வெறுப்பு, நம்முடைய சொந்த பலத்தில் நம்பிக்கை, வெற்றியின் மீதான நம்பிக்கை – அவையே லெனின் எங்களிடம் ஏற்பத்திய தாக்கம். போல்ஷிவிக்குகளின் தோல்வி தற்காலிகமானது. மிக விரைவில் அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்பது உணரப்பட்டது.

"தோல்வி குறித்து சிணுங்குவதில்லை" – லெனினின் இந்த நடைமுறை பண்பே அவரது படையினை இறுதிவரை விசுவாசமாகவும், தன் வலிமையில் நம்பிக்கை உடையதாகவும் இருக்க அவருக்கு உதவியது.

தற்பெருமை இல்லை

1907 இல் லண்டனில் நடைபெற்ற அடுத்த மாநாட்டில் (3), போல்ஷிவிக்குகள் வெற்றி பெற்றனர். லெனினை வெற்றியாளர் நிலையில் பார்த்தது இதுவே முதல் முறை. வெற்றி சில தலைவர்களின் தலைகளை சுற்ற வைத்து அவர்களை அகந்தையும், தற்பெருமையும் கொண்டவர்களாக்குகிறது. பெரும்பாலான சந்தர்ப்பங்களில் அவர்கள் வெற்றி புகழ் கொண்டு, அவர்களின் புகழிலே ஓய்வெடுக்கவும் தொடங்குகிறார்கள். ஆனால் லெனின் சிறிதளவு கூட அத்தகைய தலைவர்களை ஒத்திருக்கவில்லை. மாறாக அவர், ஒரு வெற்றியின் பின்னர் தான் குறிப்பாக விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் இருந்தார். லெனின் பிரதிநிதிகளிடம் வற்புறுத்தியதை நான் நினைவு கூர்கிறேன்: “முதல் விஷயம் வெற்றியால் போதையேறக் கூடாது. தற்பெருமை கொள்ளக்கூடாது; இரண்டாவது விஷயம் வெற்றியை பலப்படுத்துவது; மூன்றாவது, எதிரிக்கு இறுதி அடி கொடுப்பது, ஏனென்றால் அவர் தாக்கப்பட்டார். ஆனால், எந்த வகையிலும் அழியவில்லை. இத்துடன் மென்ஷெவிக்குகளுடன் எல்லாம் முடிந்துவிட்டது.” என்று முட்டாள்தனமாகக் கூறிய பிரதிநிதிகள் மீது அவர் வெறுப்புடன் வசைமழை பொழிந்தார்.

மென்ஷிவிக்குகள் இன்னும் தொழிலாள வர்க்க இயக்கத்தில் வேர்களைக் கொண்டிருக்கிறார்கள் என்பதையும், அவர்கள் திறமையுடன் போராட வேண்டும் என்றும், ஒருவரின் சொந்த பலத்தை மிகைப்படுத்தி மதிப்பிடுவதையும், குறிப்பாக, எதிரியின் வலிமையைக் குறைத்து மதிப்பிடுவதையும் தவிர்க்க வேண்டும் என்று காட்டுவது அவருக்குக் கடினமல்ல.

"வெற்றியில் தற்பெருமை கொள்வதில்லை" - இது லெனினின் ஆளுமையின் பண்பாகும். இது எதிரியின் வலிமையை எடைபோடவும், சாத்தியமான ஆச்சரியங்களுக்கு எதிராக கட்சியை காப்பதற்கும் அவருக்கு உதவியது.

கோட்பாட்டில் உறுதிப்பாடு:

கட்சித் தலைவர்கள் தங்கள் கட்சியின் பெரும்பான்மையினரின் கருத்தை பாராட்டாமல் இருக்க முடியாது. பெரும்பான்மை என்பது ஒரு தலைவரால் கணிக்க முடியாத ஒரு ஆற்றல். இதை வேறு எந்த கட்சித் தலைவரையும் காட்டிலும் லெனின் குறைவாக அறியாதவரில்லை.

ஆனால் லெனின் ஒருபோதும் பெரும்பான்மையினரிடம் சிறைபடவில்லை, குறிப்பாக அந்த பெரும்பான்மைக்கு எந்த கோட்பாட்டு அடிப்படையும் இல்லாத போது. எங்கள் கட்சியின் வரலாற்றில் பெரும்பான்மையினரின் கருத்து அல்லது கட்சியின் தற்காலிக நலன்கள் பாட்டாளி வர்க்கத்தின் அடிப்படை நலன்களுடன் முரண்பட்ட நேரங்கள் உண்டு. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், லெனின் ஒரு போதும் தயங்கமாட்டார், கட்சியின் பெரும்பான்மைக்கு எதிராக கோட்பாட்டிற்கு ஆதரவாக தனது நிலைப்பாட்டை உறுதியாக எடுத்தார். மேலும், இதுபோன்ற சந்தர்ப்பங்களில் அவர் அனைவருக்கும் எதிராக தனித்து நிற்க வேண்டும் என்று அவர் அஞ்சவில்லை - அவர் அடிக்கடி சொல்வது போல் - “கோட்பாட்டை அடிப்படையாகக் கொண்ட கொள்கை மட்டுமே சரியான கொள்கை” என்று கருதினார்.

இந்த விஷயத்தில் குறிப்பான சிறப்பியல்புடைய இரண்டு உண்மைகள். பின்வருமாறு:

முதல் உண்மை: 1909-11 காலகட்டத்தில், எதிர் புரட்சியால் கட்சி அடித்து நொறுக்கப்பட்ட போது முழுமையான சிதைவிலிருந்தது. அது கட்சியில் நம்பிக்கையின்மையான காலம், கட்சியிலிருந்து மொத்தமாக வெளியேறினர், அறிவுஜீவிகள் மட்டுமல்ல, ஓரளவு தொழிலாளர்களும்கூட; சட்டமறுப்பு இயக்கத்தின் தேவை மறுக்கப்பட்ட ஒரு காலம்,கலைப்பு மற்றும் சரிவின் காலம். மென்ஷிவிக்குகள் மட்டுமல்ல, போல்ஷிவிக்குகளும் கூட பல பிரிவுகளையும் போக்குகளையும் கொண்டிருந்தனர். பெரும்பாலானோர் தொழிலாள வர்க்க இயக்கத்திலிருந்து துண்டிக்கப்பட்டிருந்தனர்.. அந்த காலகட்டத்தில் தான் சட்டமறுப்பு இயக்கத்தை முற்றிலுமாக கலைத்து, தொழிலாளர்களை சட்டபூர்வமான, தாராளவாத ஸ்டோலிபின் கட்சியாக ஒழுங்கமைக்கும் எண்ணம் எழுந்தது என்பது உங்களுக்குத் தெரிந்திருக்கும். அந்த நேரத்தில் பரவலான தொற்றுநோய்க்கு ஆளாகாமல், கட்சி கொள்கையின் பதாகையை உயர்த்திப் பிடித்து, கட்சியின் சிதறிய மற்றும் சிதைந்த ஆற்றல்களை வியக்க வைக்கும் பொறுமை மற்றும் அசாதாரண விடாமுயற்சியுடன் திரட்டி,தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் ஒவ்வொரு கட்சி விரோத போக்கையும் எதிர்த்துப் போராடி, அசாதாரண துணிவுடனும், இணையற்ற விடாமுயற்சியுடன் கட்சி கொள்கையை பாதுகாத்தது லெனின் மட்டுமே.

கட்சி கோட்பாட்டிற்கான இந்த போராட்டத்தில், லெனின் தான் பின்னர் வெற்றியாளராக நிரூபித்தார் என்பதை நாங்கள் அறிந்தோம்.

இரண்டாவது உண்மை: இது 1914-17 காலகட்டத்தில், ஏகாதிபத்தியப் போர் முழு வீச்சில் இருந்தபோது, ​​அனைத்து அல்லது கிட்டத்தட்ட அனைத்து சமூக ஜனநாயக மற்றும் சோசலிசக் கட்சிகள் பொது தேசபக்தி வெறிக்கு ஆளாகி அந்தந்த நாடுகளின் ஏகாதிபத்தியத்தின் சேவையில் தங்களை நிலைநிறுத்திக் கொண்டன. இரண்டாம் அகிலம் அதன் நிறம் வெளுத்து முதலாளித்துவத்தின் கீழ் இழுத்துச் செல்லப்பட்ட ஒரு காலகட்டம், பிளெக்கானோவ், காவுத்ஸ்கி, கியூஸ்டே போன்றவர்களால் கூட பேரினவாதத்தின் அலைகளைத் தாக்குப்பிடிக்க முடியவில்லை.

அந்த காலகட்டத்தில், கிட்டத்தட்ட ஒரே ஒருவராக சமூக-பேரினவாதம் மற்றும் சமூக-சமாதானத்திற்கு எதிராக ஒரு உறுதியான போராட்டத்தை நடத்தியதும், கியூஸ்டெஸ் மற்றும் காவுத்ஸ்கியின் துரோகத்தை கண்டனம் செய்ததும், அரை மனதுடனான இடைப்பட்ட "புரட்சியாளர்களை" இழிந்துரைத்ததும் லெனின் மட்டுமே. லெனின் ஒரு சிறிய சிறுபான்மையினரால் மட்டுமே ஆதரிக்கப்படுகிறார் என்பதை அறிந்திருந்தார், ஆனால் அவருக்கு அது ஒரு முக்கியமான தருணம் அல்ல, ஏனென்றால் எதிர்காலத்தை தன் முன் கொண்ட ஒரே சரியான கொள்கை முரணற்ற சர்வதேசத்தின் கொள்கை, கோட்பாடுகளின் அடிப்படையிலான கொள்கை மட்டுமே சரியானக் கொள்கை என அவர் அறிந்திருந்தார்..

ஒரு புதிய சர்வதேசத்திற்கான இந்த போராட்டத்திலும், லெனினே வெற்றியாளராக நிரூபித்தார் என்பதை நாங்கள் அறிந்தோம்..

"கோட்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட ஒரு கொள்கை மட்டுமே சரியான கொள்கை" – இந்த வாய்ப்பாட்டின் படி லெனின் தாக்குதலின் மூலம் "தோற்கடிக்க முடியாத" புதிய நிலைகளை எடுத்து, பாட்டாளி வர்க்கத்தின் சிறந்த கூறுகளை புரட்சிகர மார்க்சியத்திற்கு வென்றெடுத்தார்

வெகுஜனங்களிடம் நம்பிக்கை

கோட்பாட்டாளர்கள் மற்றும் கட்சிகளின் தலைவர்கள், நாடுகளின் வரலாற்றை நன்கு அறிந்தவர்கள் மற்றும் புரட்சிகளின் வரலாற்றை ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை படித்தவர்கள், சில நேரங்களில் வெட்கக்கேடான நோயால் பாதிக்கப்படுகிறார்கள். இந்த நோய் வெகுஜன பயம், என்று அழைக்கப்படுகிறது. வெகுஜனங்களின் படைப்பு ஆற்றலில் அவநம்பிக்கை இது சில சமயங்களில் தலைவர்களிடையே ஒரு வகையான மேட்டுக்குடி அணுகுமுறையை உருவாக்குகிறது, அவர்கள் புரட்சிகளின் வரலாற்றில் தேர்ச்சி பெறாவிட்டாலும், பழைய ஒழுங்கை அழிக்கவும், புதியதை உருவாக்கவும் விதிக்கப்படுகிறார்கள். இந்த வகையான மேட்டுக்குடி அணுகுமுறை, மக்கள் கட்டற்று போகக்கூடும், மக்கள் "அதிகமாக அழிக்கக்கூடும்" என்ற அச்சமே காரணமாகும்; புத்தகங்களிலிருந்து வெகுஜனங்களுக்குக் கற்பிக்க முயற்சிக்கும் ஆனால் மக்களிடமிருந்து கற்றுக் கொள்ள வெறுக்கும் ஒரு வழிகாட்டியாக ஆகும் விருப்பமே இதற்கு காரணமாகிறது.

அத்தகைய தலைவர்களின் மறுதளிப்பே லெனின். பாட்டாளி வர்க்கத்தின் படைப்பு சக்தியிலும், அதன் வர்க்க உள்ளுணர்வின் புரட்சிகர செயல்திறனிலும் லெனின் போன்று இவ்வளவு ஆழமான நம்பிக்கை வைத்திருந்த வேறு எந்த புரட்சியாளரையும் நான் அறியவில்லை. "புரட்சியியை குழப்பம்" என்றும் "வெகுஜனங்களின் அங்கீகரிக்கப்படாத நடவடிக்கைகளின் கலவரம்" என்றும் மோசமாக விமர்சிப்பவர்களை லெனினைப் போல இரக்கமின்றி துன்புறுத்தக்கூடிய வேறு எந்த புரட்சியாளரையும் நான் அறியவில்லை.

ஒரு உரையாடலின் போது ஒரு தோழர் “புரட்சியை சாதாரண விஷயங்களின் ஒழுங்கின் படி பின்பற்ற வேண்டும்” என்று கூறியபோது லெனின் கிண்டலாகக் குறிப்பிட்டார்: “புரட்சியாளர்களாக இருக்க விரும்பும் மக்கள் வரலாற்றில் மிகவும் சாதாரண ஒழுங்கு என்பது விஷயங்களின் புரட்சிகர ஒழுங்கு என்பதை மறந்துவிடுவது பரிதாபம். "

ஆகவே, வெகுஜனங்களை மேலோட்டமாகக் குறைத்து மதிப்பிட்டு, புத்தகங்களிலிருந்து அவர்களுக்குக் கற்பிக்க முயன்ற அனைவரையும் லெனின் அவமதித்தார். எனவே, லெனினின் நிலையான கட்டளை: மக்களிடமிருந்து கற்றுக் கொள்ளுங்கள், அவர்களின் செயல்களைப் புரிந்துகொள்ள முயற்சி செய்யுங்கள், வெகுஜனங்களின் போராட்டத்தின் நடைமுறை அனுபவத்தை கவனமாகப் படிக்கவும் என்பதே.

வெகுஜனங்களின் படைப்பு ஆற்றலில் நம்பிக்கை - இது லெனினின் செயல்பாட்டுப் பண்பாகும், இது தன்னிச்சையான செயல்முறையைப் புரிந்து கொள்ளவும், அதன் இயக்கத்தை பாட்டாளி வர்க்க புரட்சியின் வழியில் செலுத்தவும் அவருக்கு உதவியது.

புரட்சியின் மேதை:

லெனின் புரட்சிக்காகவே பிறந்தவர். அவர் உண்மையில், புரட்சி வெடிப்புகளின் மேதையாகவும் புரட்சிகர தலைமைக் கலையின் மிகச்சிறந்த தலைவராகவும் இருந்தார். புரட்சி எழுச்சியின் காலத்தைப் போல அவர் ஒரு போதும் அவ்வளவு சுதந்திரமாகவும் மகிழ்ச்சியாகவும் உணர்ந்ததில்லை. இதன் மூலம் லெனின் அனைத்து புரட்சிகர எழுச்சிகளுக்கும் சமமாக ஒப்புதல் அளித்தார் , அல்லது எல்லா நேரங்களிலும் எல்லா சூழ்நிலைகளிலும் புரட்சி வெடிப்புகளுக்கு ஆதரவாக இருந்தார் எனும் பொருளில் நான் சொல்லவில்லை. இல்லவே இல்லை. நான் சொல்வது என்னவென்றால், லெனினின் நுண்ணறிவின் மேதமை ஒருபோதும் புரட்சி வெடித்த காலத்தைப் போல முழுமையாகவும் தெளிவாகவும் வெளிப்படவில்லை. புரட்சியின் காலங்களில் அவர் உண்மையில் மலர்ந்தார், ஒரு பார்வையாளராக ஆனார், வர்க்கங்களின் இயக்கத்தையும் புரட்சியின் சாத்தியமான வளைவு சுழிவையும் முன் நோக்கினார், அவை அவரது உள்ளங்கையில் கிடப்பதைப் போல பார்த்தார்.. இதுவே எங்கள் கட்சி வட்டாரங்களில் " புரட்சி அலைகளில் லெனின் நீரிலுள்ள ஒரு மீனைப் போல நீந்துகிறார்."என சொல்லப்பட்டதற்கு நல்ல காரணமாக அமைந்தது.

இதனாலே லெனினின் செயல் தந்திர முழக்கங்கள் “ஆச்சரியமான” தெளிவுடனும் அவரது புரட்சிகர திட்டங்கள் “திகைக்க வைக்கும்” துணிவுடனும் இருந்தது.

லெனினின் இந்த பண்பின் சிறப்பியல்புடைய இரண்டு உண்மைகளை நான் நினைவு கூர்கிறேன்.

முதல் உண்மை: அக்டோபர் புரட்சிக்கு சற்று முந்தைய காலகட்டத்தில், நாட்டிலும், போர்முனையிலும் ஏற்பட்ட நெருக்கடியால் கோபமுற்ற மில்லியன் கணக்கான தொழிலாளர்களும், விவசாயிகளும் வீரர்களும் அமைதியையும் சுதந்திரத்தையும் கோரிய போது, தளபதிகளும் முதலாளித்துவ வர்க்கமும் "இறுதி வரை போரிடும்" பொருட்டு ஒரு இராணுவ சர்வாதிகாரத்திற்காக பணியாற்றிய போது; "பொதுக் கருத்து" என்று அழைக்கப்படுபவை மற்றும் "சோசலிசக் கட்சிகள்" என்று அழைக்கப்படுபவை அனைத்தும் போல்ஷிவிக்குகளுக்கு விரோதமாக அவர்களை ஜேர்மன் உளவாளிகள்" என்று முத்திரை குத்திய போது, ​​ "; போல்ஷிவிக் கட்சியை கெரென்ஸ்கி தலைமறைவாக்க முயன்ற போது - ஏற்கனவே அதில் கொஞ்சம் வெற்றியும் பெற்ற போது-; ஆஸ்திரிய - ஜேர்மன் கூட்டணியின் இன்னும் சக்திவாய்ந்த, ஒழுக்கமான படைகள் எங்கள் சோர்வுற்ற, சிதைந்துபோன படைகளை எதிர்கொண்டபோது, ​​மேற்கு-ஐரோப்பிய “சோசலிஸ்டுகள்” “முழுமையான வெற்றிக்கான போர்” என்ற பெயரில் தங்கள் அரசாங்கங்களுடன் ஆனந்தமான கூட்டணியில் வாழ்ந்தனர். . .

அத்தகைய தருணத்தில் ஒரு எழுச்சியைத் தொடங்குவது என்றால் என்ன பொருள்? அத்தகைய சூழ்நிலையில் ஒரு எழுச்சியைத் தொடங்குவது எல்லாவற்றையும் அபாயத்திற்கு உட்படுத்துவது. ஆனால் லெனின் ஆபத்துக்கு அஞ்சவில்லை, ஏனென்றால் அவர் அறிந்திருந்தார், அவர் தனது தீர்க்கதரிசனக் கண்ணால், ஒரு எழுச்சி தவிர்க்க முடியாதது, அது வெல்லும்; ரஷ்யாவில் ஒரு எழுச்சி ஏகாதிபத்தியப் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு வழிவகுக்கும், அது மேற்கு நாடுகளின் போரினால் சோர்ந்து போன மக்களைத் தூண்டும், அது ஏகாதிபத்தியப் போரை உள்நாட்டுப் போராக மாற்றும்; இந்த எழுச்சி சோவியத் குடியரசுக்கு வழியமைக்கும் என்றும், சோவியத் குடியரசு உலகம் முழுவதும் புரட்சிகர இயக்கத்திற்கு ஒரு அரணாக செயல்படும் என்பதையும் கண்டார்.

லெனினின் புரட்சிகர தொலைநோக்கு இணையற்ற துல்லியத்துடன் பின்னர் உறுதிப்படுத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிந்தோம்.

இரண்டாவது உண்மை: அக்டோபர் புரட்சியின் ஆரம்ப நாட்களில், கலகம் செய்த தளபதி ஜெனரல் துகோனினை, ​​மக்கள் ஆணையர்களின் அவை ஜெர்மனியருடன் விரோதத்தை முடிவுக்கு கொண்டுவந்து போர் நிறுத்த பேச்சு வார்த்தையை ஆரம்பிக்குமாறு வலியுறுத்த முயன்ற போது நடந்தது. லெனின், கிரைலென்கோவுடன் (வருங்கால தளபதி) நான் பெட்ரோகிராடில் உள்ள பொது பணியாளர் தலைமையகத்திற்குச் சென்றேன், துக்கோனினுடன் நேரடி கம்பி தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தினேன். அது ஒரு பயங்கரமான தருணம். துகோனினும், கள தலைமையகமும் மக்கள் ஆணையர்கள் அவையின் உத்தரவுக்கு கீழ்ப்படிய மறுத்துவிட்டன.

இராணுவ அதிகாரிகள் முற்றிலும் கள தலைமையகத்தின் கட்டுப்பாட்டில் இருந்தனர். படைவீரர்களை பொறுத்தவரை, பதினான்கு மில்லியனுக்கும் அதிகமான இந்த இராணுவம் என்ன சொல்லும் என்று யாராலும் சொல்ல முடியவில்லை, இது சோவியத் சக்திக்கு விரோதமாக இருந்த இராணுவ அமைப்புகள் என்று அழைக்கப்படுபவைகளுக்கு அடிபணிந்திருந்தது. பெட்ரோகிராடில், இராணுவ கேடட்டுகளின் கலகம் உருவெடுப்பது எங்களுக்குத் தெரிய வந்தது, கெரென்ஸ்கி பெட்ரோகிராடில் அணிவகுத்து வந்தார். நேரடி கம்பித் தொடர்பு இடைநிறுத்தப்பட்ட பிறகு, லெனினின் முகம் திடீரென்று ஒரு அசாதாரண ஒளியுடன் பிரகாசித்தது எனக்கு நினைவிருக்கிறது. அவர் ஒரு முடிவுக்கு வந்திருந்தார் என்பது தெளிவாகிறது. "வயர்லெஸ் நிலையத்திற்கு செல்லலாம், அது நமக்கு நல்ல வாய்ப்பைத் தரும். தளபதி துகோனைனை பதவி நீக்கம் செய்து, அவருக்குப் பதிலாக தோழர் கிரைலென்கோ தளபதியை நியமிப்போம், தலைமை அதிகாரிகளை பற்றி படையினரிடம் முறையிட்டு, தளபதிகளைச் சுற்றி வளைத்து, ஆஸ்ட்ரோ-ஜெர்மன் வீரர்களுடன் பகைமகளை விடுத்து, தொடர்புகளை ஏற்படுத்தவும் அமைதிக்கான காரணத்தை தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளுமாறும் அவர்களுக்கு அழைப்பு விடுப்போம்.

இது "இருட்டில் ஒரு பாய்ச்சல்" ஆகும். ஆனால் லெனின் இந்த "பாய்ச்சலில்" இருந்து பின்வாங்கவில்லை; மாறாக, அவர் அதை ஆவலுடன் செய்தார், ஏனென்றால் இராணுவம் சமாதானத்தை விரும்புவதால், அமைதியை வெல்லும் என்று அவர் அறிந்திருந்தார், ஒவ்வொரு தடையையும் அதன் பாதையிலிருந்து துடைத்தார்; சமாதானத்தை ஏற்படுத்தும் இந்த முறை ஆஸ்ட்ரோ-ஜேர்மன் படையினரிடம் அதன் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும், விதிவிலக்கு இல்லாமல் ஒவ்வொரு முன்னணியிலும் அமைதிக்கான முழு ஆளுகையை கொண்டுவரும் என்பதையும் அவர் அறிந்திருந்தார்.

இங்கேயும், லெனினின் புரட்சிகர தொலைநோக்கு பின்னர் மிகத் துல்லியத்துடன் உறுதிப் படுத்தப்பட்டது என்பதை நாங்கள் அறிந்தோம்.

மேதையின் நுண்ணறிவு, வரவிருக்கும் நிகழ்வுகளின் உள் அர்த்தத்தை விரைவாகப் புரிந்துகொள்வதும் முன் நோக்குவதுமான லெனினின் இந்தப் பண்பு தான் புரட்சி இயக்கத்தின் திருப்புமுனைகளில் சரியான உத்திகளையும் தெளிவான நடைமுறையையும் வகுக்க அவருக்கு உதவியது.

தமிழாக்கம்: சமந்தா

Pin It