இருபதாம் நூற்றாண்டின் முதல் ஐம்பது ஆண்டுகள் கொந்தளிப்பும், குமுறலுமான அரசியல் காலமாகும். உலகம் முழுவதும் எல்லா நாடுகளிலும் மாபெரும் போராட்டங்களும், உள்நாட்டு போர்களும், புரட்சிகளும் நடந்தேறிய காலம். முதல் உலகப் போரின் முடிவில் சோவியத் யூனியனில் லெனின் தலைமையிலான சோவியத் கம்யூனிஸ்ட் கட்சி, பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்தை ஸ்தாபித்ததுடன் சோசலிச சமூகத்தையும் கட்டமைத்தது. இரண்டாம் உலகப்போரின் முடிவில் மாசேதுங் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி சீனாவில் ஜப்பான் ஏகாதிபத்தியத்தையும், மன்னர் ஆட்சியையும் ஒழித்து கட்டியதுடன் பாட்டாளி வர்க்கத்தின் தலைமையின்கீழ் புதிய ஜனநாயகத்தை ஸ்தாபித்ததுடன் சோஷலிச சமூகத்தை நோக்கிய பயணத்தை துவங்கியது.

சோவியத் யூனியனிலும், சீனாவிலும் ஏகாதிபத்தியத்தை எதிர்க்கும் அரசியல் நடவடிக்கைகளை உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான உள்நாட்டு யுத்தமாக மாற்றியதின் மூலமும், உள்நாட்டின் அரசியல் நெருக்கடிகளையும் உள்நாட்டு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான யுத்தமாக மாற்றியதின் மூலமுமே பாட்டாளி வர்க்க ஆட்சி ஸ்தாபிக்கப்பட்டது.

1960ஆம் ஆண்டுகளுக்கு பிறகு உலகம் முழுவதும் எண்ணிலடங்கா மாபெரும் அரசியல் போராட்டங்களும், மோதல்களும், கிளர்ச்சிகளும் நடைபெற்றாலும் இவைகள் ஏகாதிபத்தியத்தையும் உள்நாட்டு ஆளும் வர்க்கத்தையும் ஒருங்கே வீழ்த்தும் போராட்டங்களாக இருக்கவில்லை. இதனால் போராட்டத்தின் பலன் ஒரு சமயத்தில் உள்நாட்டு ஆளும் வர்க்கத்திற்கும், பிறிதொரு சமயம் ஏகாதிபத்தியத்திற்கும் பயனாய் அமைந்தது.

lenin speechஏகபோக நிதி மூலதனங்கள் தொடர்ந்து பலநாடுகளது நிதி ஆதாரங்களை சூறையாடி அந்நாடுகளில் பெரும் பொருளாதார நெருக்கடிகளை தோற்றுவித்தாலும், நெருக்கடிகளின் சுமையை அந்நாடுகளின் ஆளும் வர்க்கங்கள் தொழிலாளர்கள் மீதும் பொதுமக்களின் மீதும் சுமத்துகின்றனவேயொழிய, பன்னாட்டு நிதி மூலதனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் திராணியற்றவையாக உள்ளன.

ஏகாதிபத்தியங்களுக்கெதிராக செயல்படும் ஓரிரு நாடுகளின் (எ. கா - ஈராக் - லிபியா) தலைவர்களை கொன்று அந்நாடுகளில் தங்களுக்கு ஆதரவான ஆட்சியை ஏற்படுத்திக் கொண்டு, ஏகாதிபத்தியங்களும், ஏகபோக நிதி மூலதனங்களும் உலகம் முழுவதும் சுதந்திரமாக உலா வருகின்றன.

தொடர்ந்து நெருக்கடிகளை தோற்றுவிப்பதுதான் முதலாளித்துவத்தின் அடிப்படை பண்பு என்கிற மார்க்சிய நிலைப்பாட்டை புரிந்து கொண்டுள்ள இன்றைய ஆளும் வர்க்கங்கள் இத்தகைய நெருக்கடிகளால் உருவாக்கப்படும் மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை அவர்களே தலைமை தாங்கி வழிநடத்தவும் தயாராகி விட்டார்கள். ஏகாதிபத்தியங்களின் முரண்பாடுகளால் உருவாகும் போராட்டமானாலும், முதலாளித்துவத்தின் உள்முரண்பாடுகளால் உருவாகும் போராட்டங்களானாலும் இப்போராட்டங்களையும் இவர்களே வழிநடத்தி தங்கள் ஆட்சிகளுக்கெதிராக இப்போராட்டங்கள் வளர்ந்து விடாதவாறு பார்த்துக் கொள்கிறார்கள். கூடங்குளம் அணுஉலை போராட்டத்தையும், அண்ணா ஹசாரேவின் லோக்பால் மசோதா போராட்டத்தையும் உதாரணமாக கூறலாம்.

நடைபெறுகின்ற போராட்டங்களில் ஆளும்வர்க்க நலன்களையும், ஏகாதிபத்திய நலன்களையும் தோலுரித்துக் காட்டி மக்களின் தன்னெழுச்சியான போராட்டங்களை உள்நாட்டு ஆளும் வர்க்கங்களுக்கு எதிரான புரட்சிகரமான போராட்டமாக மாற்றுகின்ற வல்லமை இன்று கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு அவசியமானது.

சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் சிறப்பு அது ஏகாதிபத்தியத்தை பலவீனப்படுத்தியதுடன் "ஒரு சேர" உள்நாட்டு ஆளும் வர்க்கத்தையும் வீழ்த்தியது தான். கம்யூனிச சித்தாந்தத்தின் லட்சியமாகிய பாட்டாளி வர்க்க ஆட்சியை ஸ்தாபிப்பதை மட்டுமே தனது லட்சியமாக சோவியத் (போல்ஷ்விக்) கம்யூனிஸ்ட் கட்சி கொண்டிருந்தது. இதற்குரிய குண நலன்களுடன் கட்சியும் கட்டப்பட்டிருந்தது. இந்த நோக்கத்திற்காகவே கட்சியின் போர் தந்திரங்களும் உருவாக்கப்பட்டிருந்தன. ஆகையால் தான் லெனின், "எங்களுக்கென சுதந்திரமான ஒரு கட்சியை கட்டிக் கொண்டோம்" என சோவியத் யூனியனின் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் "தனிச்சிறப்பை" வெளிப்படுத்தினார்.

1960 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு எத்தகைய மாபெரும் அரசியல் போராட்டங்கள் நடந்தேறினாலும் அப்போராட்டங்கள் ஏகாதிபத்தியத்தையோ, உள்நாட்டு, ஆளும் வர்க்கத்தையோ வீழ்த்தவும் இல்லை, பலவீனப்படுத்தவும் இல்லை.

மாறாக 1960ஆம் ஆண்டுகளுக்கு பிறகு "பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம்" என்பது பல்வேறு கோணங்களில் மறுதலிக்கப்பட்டும் வருகிறது. சோவியத் யூனியனில் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சி சந்தர்ப்பவாதத்தை ஒழித்துக் கட்டிய பிறகே ஆளும் வர்க்கத்தை வீழ்த்தியது. காஷ்மீர் மக்களது போராட்டம், தமிழகத்தில் இந்தி எதிர்ப்பு போராட்டம், மாநில சுயாட்சிக்கான போராட்டம் என இந்தியா முழுவதும் பல்வேறு வகையான அரசியல் போராட்டங்கள் நடந்தாலும் அப்போராட்டங்கள் இந்திய ஆளும் வர்க்கத்தையோ அல்லது இதன் துணைநிற்கும் ஏகாதிபத்தியங்களையோ எவ்வகையிலும் பலவீனப்படுத்தவில்லை.

1975ல் இந்தியாவில் தோன்றிய அரசியல் நெருக்கடியும், 2006ல் தோன்றிய மூலதன நெருக்கடியும் கூட இந்திய ஆளும் வர்க்கத்தை பலவீனப்படுத்தவில்லை. இந்நிலையில் சோவியத் யூனியனின் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் தனிச்சிறப்பையும், பாட்டாளி வர்க்க சர்வாதிகாரத்துக்கான தத்துவார்த்த நிலைபாடுகளையும் புரிந்து கொள்வதும் இதன்பின்புலத்தில் சந்தர்ப்பவாதத்தை வீழ்த்துவதுமே இன்று கம்யூனிஸ்ட்டுகளின் பிரதான பணியாகும். இப்பணி இந்தியாவிற்கு மட்டுமின்றி உலகிற்கே அவசியமாகும்.

கட்சி

உண்மையான மார்க்ஸிய கட்சியை பெற்றிருக்க விரும்புகிற எல்லோருக்கும் ஒரு உதாரணமாக திகழும் புதிய கட்சியை போல்ஷ்விக் கட்சியை படைப்பதற்கு போல்ஷ்விக்குகள் விரும்பினார்கள். பழைய இஸ்க்ரா தோன்றியகாலம் முதல் அத்தகைய கட்சியை கட்டுவதற்கு போல்ஷ்விக்குகள் உழைத்துவந்தனர். என்ன நேர்ந்தபோதிலும், எத்தகைய கஷ்டங்கள் வந்த போதிலும் மனம் தளராமல் உறுதியுடன் விடாபிடியாக உழைத்து வந்தனர்.

இந்த வேலையில் லெனினுடைய நூல்கள் மிகவும் அடிப்படையான போக்கை நிர்ணயிக்கும் படியான - பங்கை வகித்தன. லெனின் எழுதிய “என்ன செய்ய வேண்டும்?” என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அவசியமான கருத்தையும், கண்ணோட்டத்தையும் கொடுத்து தயாரிப்பு செய்தது. லெனின் எழுதிய “ஓரடி முன்னால் ஈரடி பின்னால்” என்ற நூல்தான் அத்தகைய கட்சிக்கு அமைப்பு ரீதியான தயாரிப்பாக இருந்தது. லெனின் எழுதிய, “ஜனநாயகப் புரட்சியில் சமூக ஜனநாயகத்தின் இரு போர் தந்திரங்கள்” என்ற புத்தகம் அத்தகைய கட்சிக்கு அரசியல் ரீதியான தயாரிப்பாக இருந்தது. கடைசியாக லெனின் எழுதிய “பொருள் முதல்வாதமும், அனுபவவாத விமர்சனமும்” என்ற புத்தகம் தான் அத்தகைய கட்சிக்குத் தத்துவ ரீதியான அடித்தளமாக இருந்தது.

மற்ற எதையும்விட முதன்மையாக சோவியத் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்) கட்சியின் சரித்திரம் நமக்கு போதிப்பது என்னவென்றால், பாட்டாளி வர்க்க புரட்சிகரமான கட்சி இல்லாமல், பாட்டாளி வர்க்க புரட்சி வெற்றியடைய முடியாது. சந்தர்ப்பவாதத்தின் பிடிப்பில் சிக்காமல் சுயேச்சையாக இயங்குகிற, சமரச சரணாகதி பேர்வழிகளுக்கு துளிகூட விட்டுக்கொடுக்காத, முதலாளிகள்பாலும், அவர்களது அரசாங்க அதிகாரத்தின்பாலும் புரட்சிகரமான மனோபாவத்தை காட்டுகிற புரட்சிகரமான கட்சி இல்லாமல் பாட்டாளி வர்க்க சர்வாதிகாரம் வெற்றியடைய முடியாது.

தொழிலாளி வர்க்கத்திற்கு வழிகாட்டி செல்கிற முன்னனி படையே கட்சி, தொழிலாளி வர்க்கப் பட்டாளத்தின் முன்னனி கோட்டையே கட்சி. தொழிலாளி வர்க்க படையின் தளபதிகள் குழாமே கட்சி. தொழிலாளி வர்க்கத்துக்கு வழிகாட்டி முன்னனியில் செல்கிற தளபதிகள் குழாமில் இடம்பெற்றிருப்பதற்கு ஒருபோதும் சந்தர்ப்பவாதிகளையும், சரணாகதியடையச் செய்யும் பேர்வழிகளையும், தேசத்துரோகிகளையும் அனுமதிக்க முடியாது.

தொழிலாளிகள் வர்க்கம் முதலாளிகளை எதிர்த்து ஜீவமரணப் போராட்டம் நடத்தி கொண்டிருக்கிறபோது, அதனுடைய தளபதிகள் குழாமிலேயே துரோகிகள் இருப்பார்களேயானால், அதனுடைய கோட்டையிலேயே சரணாகதி பேர்வழிகள் இருப்பார்களேயானால் தொழிலாளி வர்க்கம் இரண்டு திசைகளிலிருந்தும் வரும் பீரங்கி நெருப்புகளுக்கிடையில் மாட்டி கொள்ளும். நேர்முகமாக வரும் குண்டுகளுக்கும், முதுகுக்கு பின்னால் இருந்துவரும் குண்டுகளுக்கும் இடையில் சிக்கி கொள்ளும். இத்தகைய சண்டை தொழிலாளி வர்க்கத்திற்கு தோல்வியையே உண்டுபண்ணும் என்பது தெளிவு.

தொழிலாளி வர்க்கத்தின் கட்சி தன்னுடைய அங்கத்தினர் வரிசையில் மறைந்து நிற்கும் சந்தர்ப்பவாதிகளை எதிர்த்து போராடாத வரையில், தன் அணியிலேயே மறைந்திருக்கும் சரணாகதி பேர்வழிகளானவர்களை ஒழிக்காத வரையில் - அக்கட்சிக்கு தன் வரிசையை சேர்ந்தவர்களிடையேயுள்ள ஒற்றுமையையும், கட்டுபாட்டையும் பாதுகாத்து காப்பாற்றி வைக்க முடியாது. பாட்டாளி வர்க்க புரட்சியின் தலைமை பதவி ஏற்க முடியாது. புதிய சோசலிச சமூகத்தை நிர்மாணிக்கும் பங்கை ஏற்க முடியாது.

கட்சி முன்னனி படை மட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்தின், வர்க்க உணர்ச்சிகொண்ட படை பகுதிமட்டுமல்ல, தொழிலாளி வர்க்கத்தின் அமைப்பு ரீதியாக உருவாக்கப்பட்ட படை பகுதியுமாகும். அதற்கு சொந்த கட்டுப்பாடு உண்டு. அக்கட்டுப்பாடு அதன் உறுப்பினர்கள் யாவரையும் கட்டுப்படுத்தும்.

புரட்சிகர தத்துவம் இல்லாமல் புரட்சிகர இயக்கம் எதுவும் இருக்க முடியாது. மிகவும் முன்னேற்றகரமான தத்துவத்தினால் வழிகாட்டப்பட்டு இயக்கப்படுகிற ஒரு கட்சியினால் தான், முன்னணிப் படை செய்ய வேண்டியிருக்கிற பங்கை நிறைவேற்றி பூர்த்தி செய்ய முடியும். தொழிலாளி வர்க்கத்தின் கட்சி ஒரு உண்மையான கட்சியாக விளங்க வேண்டுமென்றால், உற்பத்தி வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும், சமுதாயத்தின் பொருளாதார வளர்ச்சியின் விதிகளைப் பற்றியும் அந்த கட்சி அறிவு பெற்றிருக்க வேண்டும். மற்ற எல்லா விஷயங்களைவிட மேலாக இதில் அறிவு பெற்றிருத்தல் அவசியம்.

ஒரேவிதமான கற்களால் கட்டப்பட்ட கட்டிடம் போல் கட்சி இருக்க வேண்டும், வீரமிக்கதாக இருக்க வேண்டும், தெளிவாக வரையறுக்கப்பட்ட அமைப்பை பெற்றிருக்க வேண்டும். நபர்களின் வெறும் கூட்டமாக கட்சி இருக்குமானால், கட்சியினால் எப்போதும் ஒருமனப்பட்ட கருத்தை காண முடியாது, ஒருபோதும் தன் அங்கத்தினர்களின் ஐக்கியப்பட்ட செயலை கட்சியினால் அடைய முடியாது. இதன் பயனாய் தொழிலாளி வர்க்கத்தின் போராட்டத்தை அதனால் வழிகாட்டி நடத்த முடியாது.

பாட்டாளி வர்க்க கட்சி வெற்றிகளை கண்டு போதை கொள்ளுமேயானால், தன் வேலையில் தோன்றும் குறைபாடுகளை பார்க்காமல் இருக்க முற்படுமேயானால், தன்னுடைய தவறுகளை ஒப்புக்கொள்ள பயப்படுமேயானால், அத்தவறுகளை நேரங்கடப்பதற்குள் திருத்தி கொள்ளாமல் இருக்குமேயானால், பாட்டாளி வர்க்க கட்சியினால் தொழிலாளி வர்க்கத்திற்கு தலைமைதாங்க முடியாது.

கம்யூனிஸ்ட் கட்சி தன் சொந்த தவறுகளை மறைக்குமேயானால் கடினமான பிரச்சினைகளை தீர்க்கமுடியாதென்று தன் கண்களை பொத்தி கொள்ளுமேயானால், எல்லாம் சரியாகவே இருக்கின்றன என்று பாசாங்கு செய்வதன் மூலம் அது தன் குறைபாடுகளை மழுப்புமேயானால், தன்னுடைய குறைபாடுகள் எடுத்துக்காட்டப்படுவதை பார்த்து பொறுமையிழந்து ஆத்திரப்படுமேயானால், தன் குறைபாடுகளை தானே எடுத்து கூறி விமர்சனம் செய்வதை தொல்லையாக கருதி கை விடுமேயானால், தன்னைப்பற்றி மிகவும் பெருமையாக நினைத்துக் கொண்டு திருப்தி மனப்பான்மை கொள்ளுமேயானால், தன் வீண் பெருமைகளை பேசுவதில் மனம் மகிழுமேயானால் தனக்கு கிடைத்த வெற்றிகளை பார்த்து சந்தோஷப்பட்டு குறட்டை விடுமேயானால் அந்த கட்சி நிச்சயம் அழிந்து போகும்.

பாட்டாளி வர்க்க போராட்டம் எந்தெந்த விதங்களில் நடந்ததோ, எந்தெந்த உருவங்களை தரித்ததோ, அந்தந்த விதங்களிலெல்லாம் அந்தந்த உருவங்களிலெல்லாம், அப்போராட்டத்திற்கு போல்ஷ்விக் கட்சி தலைமை தாங்கிற்று. லெனின் கூறுவதுபோல் கம்யூனிஸ்ட் கட்சி விரிவான பாட்டாளி மக்களோடு, குறிப்பாக பாட்டாளிகளோடும், அரைகுறை பாட்டாளிகளுடனும் நெருங்கிய தொடர்பு வைத்துகொள்வதற்கும், தன்னை இணைத்து கொள்வதற்கும், ஒரளவுக்கு நீங்கள் விரும்பினால் அம்மக்களுடன் இரண்டறக்கலப்பதற்கும் ஆற்றல் படைத்திருக்குமேயானால் அந்த கட்சியை யாராலும் வெல்ல முடியாது. கம்யூனிஸ்டுகள் எவ்வளவு காலத்துக்கு மக்களுடன் பரந்த அளவில் தொடர்புவைத்து கொண்டிருக்கிறார்களோ, அதுவரையில் அவர்களை யாராலும் அசைக்க முடியாதென்பதை ஒரு விதியாகவே வைத்து கொள்ளலாம்.

சந்தர்ப்பவாதம்

சந்தர்ப்பவாத போக்கிற்கு பிரதான மூலாதாரம் பொருளாதாரவாதம் தான். தொழிலாளி வர்க்க இயக்கத்தில் பொருளாதாரவாதம் தலைதூக்கி மேலோங்குமேயானால் அது பாட்டாளிவர்க்க புரட்சி இயக்கத்தை மிகவும் பலவீனமடைய செய்வதுடன், மார்க்ஸிசத்தின் தோல்வியில் கொண்டு போய்விடும்.

தொழிலாளர்கள் தங்களுடைய உழைப்பு சக்தியை முதலாளிகளுக்கு விற்பனை செய்கின்றனர். இந்த விற்பனையில் தொழிலாளருக்கு நல்ல விலை கிடைக்க வேண்டும் என்பதற்காக நடத்தப்படும் தொழிற்சங்க போராட்டம்தான் முதலாளிகளையும், அரசாங்கத்தையும் எதிர்த்து நடத்தப்படும் பொருளாதார போராட்டம். முதலாளிகளையும், அரசாங்கத்தையும் எதிர்த்து வெறும் பொருளாதாரப் போராட்டத்தை நடத்தும் வேலையை மட்டும் செய்யும்படி கட்சியை கட்டுப்படுத்துவது என்றால் தொழிலாளர்களை நிரந்தர அடிமை படுகுழியில் தள்ளி தண்டிப்பது என்றுதான் அர்த்தம் என்று லெனின் காட்டினார்.

முதலாளித்துவ தத்துவம், அல்லது சோசலிச தத்துவம் இவ்விரண்டில் ஒன்றைத்தான் தேர்ந்தெடுக்க முடியும். இவ்விரண்டிற்கு நடுவே வேறு வழி கிடையாது. ஆகவே எந்த விதத்திலாவது சோசலிச தத்துவத்தை குறைத்து மதிப்பிட்டாலும், அதிலிருந்து ஒரு மாத்திரை அளவு விலகி சென்றாலும் முதலாளித்துவ தத்துவத்தை பலப்படுத்துவது என்றே அர்த்தம்.

உள்நாட்டில் தொழிலாளருக்கும், முதலாளிகளுக்குமிடையே வர்க்கப் போராட்டத்திற்கு பதில் 'வர்க்க சமாதானம்' நிலவ வேண்டுமென்றும் வெளிநாட்டில், மற்ற தேசங்களுடன் யுத்தம் நடக்க வேண்டும் என்றும் இந்த பேர்வழிகள் பிரச்சாரம் செய்தனர். உண்மையான பொறுப்பாளி யார் என்பதை மறைத்தனர், நங்கள் தேசத்து முதலாளிகள் மீது குற்றம் ஏதுமில்லை என்றனர். இவற்றின் மூலம் பொதுமக்களை ஏமாற்றினர், இந்த சந்தர்ப்பவாதிகள்

மக்களை ஏமாற்றுவதற்கு இரண்டாவது அகிலத்தை சேர்ந்த சந்தர்ப்பவாதிகள் முதலாளிகளுக்கு உதவிபுரிந்தனர். சோசலிசத்தின் உயரிய லட்சியத்தை பாட்டாளி வர்க்கத்தின் சர்வதேச ஒற்றுமையை, இரண்டாவது அகிலத்தின் சமூக ஜனநாயகவாதிகள் நயவஞ்சமாக காட்டி கொடுத்து துரோகம் செய்தனர். யுத்தத்தை தடுப்பதற்கு பதில் தாய்நாட்டை பாதுகாப்பது என்ற முகமூடியின் பெயரில் தேசத்து தொழிலாளர் விவசாயிகளை இன்னொரு தேசத்து தொழிலாளர், விவசாயிகளுக்கு எதிராக ஆத்திரமூட்டி தூண்டிவிடுவதில் முதலாளிகளுக்கு உதவி செய்தனர். இரண்டாவது அகிலத்தை சேர்ந்த கட்சிகள் உலக யுத்தத்திற்கு முன்பே சந்தர்ப்பவாத நோயால் பீடிக்கப்பட்டிருந்தன. புரட்சி போராட்டத்தை உதறித்தள்ளி விட வேண்டுமென்று சந்தர்ப்பவாதிகள் பகிரங்கமாக பிரச்சாரம் செய்து வந்தனர். "முதலாளித்துவம் தானாகவே வளர்ச்சியடைந்து அமைதியான முறையில் சோசலிசமாகிவிடும்" என்று போதித்தனர், இந்த சந்தர்ப்பவாதிகள்.

உலக மக்களின் விரோதிகள் உலக முதலாளிகள் என்ற உண்மையை எடுத்துகாட்டி வலியுறுத்தி ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றி, ஒவ்வொருவரும் தத்தம் ஆயுதங்களை தத்தம் முதலாளிகளுக்கு எதிராக முதலாளிகளின் மார்பில் திருப்பவேண்டும். இதன் மூலம்தான் யுத்தத்தை முடிக்க முடியும் என்று விளக்கி கூறினர் போல்ஷ்விக்குகள்.

யுத்தத்தை எதிர்த்து போல்ஷ்விக்கட்சியின் மத்திய குழு அறிக்கை வெளியிட்டது, கேவலமான முறையில் வெட்கமின்றி தன் கையாலாகாதனத்தை வெளிப்படுத்திய இரண்டாவது அகிலத்திற்கு பதிலாக மூன்றாவது அகிலம் ஒன்றை அமைக்க வேண்டுமென்று அந்த அறிக்கை அறைகூவல் விடுத்தது. ஏகாதிபத்திய யுத்தத்தை உள்நாட்டு யுத்தமாக மாற்றுவது, தன்றுடைய சொந்த ஏகாதிபத்திய சர்க்காரை யுத்தத்தில் முறியடிப்பது, மூன்றாவது அகிலத்தை அமைப்பது ஆகிய இவையே போல்ஷ்விக் கட்சியின் அடிப்படையான சித்தாந்தங்கள்.

தத்துவம்

"புரட்சிகரமான தத்துவம் இல்லை என்றால் புரட்சிகரமான இயக்கமும் இருக்கமுடியாது" என்று எத்தனையோ தடவை திரும்பத் திரும்ப கூறியவர் லெனினைத் தவிர வேறு யாருமல்ல.

கம்யூனிசத்திற்கு தத்துவ அடிப்படையாக இயக்கவியல் பொருள் முதல்வாதமும், வரலாற்று பொருள் முதல்வாதமும் இருக்கின்றன. இவை மார்க்ஸிய கட்சிக்கு தத்துவ அடிப்படையாக இருக்கின்றன.

ஆகவே, இந்த தத்துவங்களை தெரிந்து கொள்ள வேண்டியது தீவிர கட்சி உறுப்பினர் ஒவ்வொருவருடைய கடமையாகும். இவற்றை கவனித்து படிக்க வேண்டியது அத்தியாவசியம்.

மார்க்ஸிய லெனினியத் தத்துவத்தை தொழிலாளி வர்க்கத்தின் கட்சி பயின்று தேர்ச்சி பெறாத வரையில், அக்கட்சியினால் அவ்வர்க்கத்திற்கு தலைமை தாங்க முடியாது. தொழிலாளி வர்க்கத்தின் தலைமை செய்ய வேண்டியிருக்கிற காரியங்களை செய்யமுடியாது. பாட்டாளிவர்க்க புரட்சியை உருவாக்கமுடியாது, பாட்டாளிவர்க்க புரட்சியில் தலைமை தாங்கி நிற்கவும் முடியாது.

மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் தத்துவம் சமூக வளர்ச்சியின் விஞ்ஞானமாகும். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் விஞ்ஞானமாகும், பாட்டாளி வர்க்கத்தினுடைய புரட்சியின் விஞ்ஞானமாகும், கம்யூனிஸ்ட் சமூக நிர்மாணத்தின் விஞ்ஞானமாகும். மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் தத்துவத்தில் பூரண தேர்ச்சி பெறுவது என்றால் அத்தத்துவத்தின் அர்த்தத்தை கரைத்துகுடித்து ஜீரணிக்கவேண்டும். பாட்டாளிகளுடைய வர்க்கபோராட்டம் நடக்கும் வெவ்வேறு கட்டங்களில், வெவ்வேறு நிலைமைகளில், புரட்சி இயக்கத்தில் தோன்றுகிற வெவ்வேறுவிதமான நடைமுறை பிரச்சனைகளை தீர்ப்பதற்கு அதை பயன்படுத்த கற்றுக்கொள்ள வேண்டும்மென்றே அர்த்தம்.

மார்க்ஸிய - லெனினிய தத்துவத்தை கரைத்து குடித்து பயிற்சி பெறுவது என்றால் என்ன அர்த்தம்?மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் முதலியவர்கள் எழுதிய நூல்களிலிருந்து தனித்தனியாக சில வாக்கியங்களை மனப்பாடம் செய்தால், மார்க்ஸியலெனினிய தத்துவத்தில் தேர்ச்சி பெறுவதற்கு போதும் என்று தோன்றக்கூடும். அந்த வாக்கியங்களை சரியான சந்தர்ப்பத்தி்ல் எடுத்து காட்டுவதற்கு தெரிந்து கொண்டால் போதும் என்று தோன்றக்கூடும், இவ்விதம் மனப்பாடம் செய்த வாக்கியங்களும், வரையறைகளும், எல்லா சமயங்களுக்கும், எல்லா சந்தர்ப்பங்களுக்கும் ஏற்றவாறு பொருத்தமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் வேறு எதுவும் செய்யாமல், அந்த வாக்கியங்களிலேயே மனம் மகிழ்ந்து திருப்தியுடன் உட்கார்ந்திருந்தால் போதும் என்று தோன்றக்கூடும்.

ஆனால் மார்க்ஸிய - லெனினிய தத்துவத்தை இத்தகைய மனோபாவத்துடன் பழமொழிகளின் தொகுப்பு என்று மார்க்ஸிய - லெனினிய தத்துவத்தை கருதக்கூடாது. குருட்டுத்தனமாக நம்பிக்கை வைத்து மனப்பாடம் செய்து ஒப்பிப்பதற்கு ஏற்ற பாடங்களின் தொகுப்பு என்றுஎண்ணக்கூடாது, மதபோதனையாக நினைக்க கூடாது. இதேபோல் மார்க்ஸிஸ்டுகளை வெறும் நம்பிக்கையை ஆதாரமாககொண்டு போகிறவர்களாக கருதகூடாது. மார்க்ஸிஸ்ட் - லெனினிஸ்ட் தத்துவம் வறட்டுத்தனமாக உச்சரித்து கொண்டிருப்பதல்ல, அது செயலுக்கு வழிகாட்டி

மார்க்ஸிய - லெனினிசத்தின் வலிமையும் சக்தியும் எதிலிருந்து பிறக்கின்றன?சமுதாயத்தின் பெளதீக வாழ்வின் வளர்ச்சியின் தேவைகளை சரிவர பிரதிபலிக்கும் படியான ஒரு முற்போக்கான தத்துவத்தை பற்றுக்கேடாக கொண்டிருப்பதிலிருந்துதான், தத்துவத்தை ஒரு சரியான மட்டத்திற்கு உயர்த்தி வைத்ததிலிருந்துதான், மக்களை திரட்டவும், ஸ்தாபன ரீதியாக அணிவகுக்கவும், மாற்றியமைக்கவும் இந்த தத்துவம் பெற்றுள்ள சக்தியை ஒரு துளிகூட விடாமல் முழுக்க முழுக்க பயன்படுத்திகொள்வது தனது கடமை என்று கருதுவதிலிருந்துதான் அந்த வலிமையும், சக்தியும் பிறக்கின்றன.

மார்க்ஸிய - லெனினியத் தத்துவம், கட்சி எல்லா நிலைமைகளிலும் சரியான கருத்தையும், கண்ணோட்டத்தையும் காண்பதற்கு உதவி செய்கிறது. அன்றாட நிகழ்ச்சிகளில் ஒன்றுக்கொன்று உள்ள தொடர்பை புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. அந்த நிகழ்ச்சிகள் எந்தபாதையில் எவ்விதம் வளர்ந்து செல்லும் என்பதை முன்கூட்டியே அறிந்துகொள்ள உதவுகிறது. தற்காலத்தில் அவை எந்த விதத்தில் எந்த திசையில் செல்கின்றன என்பதை மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் அவை எந்த திசையில் எவ்விதம் வளரும் என்பதையும் புரிந்து கொள்வதற்கு உதவுகிறது. இதில்தான் மார்க்ஸிய - லெனினியத்தின் சக்தி அடங்கியிருக்கிறது.

அரசியல்

முதலாளித்துவ அமைப்பிலிருந்து சோசலிச அமைப்புக்கு மாறிச் செல்வதும் முதலாளித்துவ நுகத்தடியிலிருந்து தொழிலாளிவர்க்கம் விடுதலையடைவதும் மெதுவாக ஏற்படும் மாறுதல்கள் மூலமாக - சீர்திருத்தங்கள் மூலமாக சாத்தியமில்லை

அதற்கு மாறாக முதலாளித்துவ முறையில் குணாம்ச ரீதியான மாறுதலை உண்டாக்குவதன் வழியாகத்தான், புரட்சியின் வழியாகத்தான் அவை சாத்தியமாகும். கொள்கையில் தவறிழைக்காமல் இருக்க வேண்டுமென்றால் நாம் புரட்சியாளனாக இருந்து தீரவேண்டும், சிர்திருத்தவாதியாக அல்ல. மூலதனத்தின் ஆதிக்கத்தை ஒழிப்பதும், முதலாளித்துவத்தின் சொத்துக்களை சமூக சொத்தாக மாற்றுவதும், சமாதான முறைகளினால் சாதிக்க முடியாது. பாட்டாளிவர்க்க புரட்சியின் மூலம், பாட்டாளிவர்க்க சர்வாதிகாரத்தை நிறுவுவதனால் மட்டும்தான் இவற்றை சாதிக்க முடியும்.

தொழிலாளி வர்க்கத்தின் புரட்சி இல்லாமல் ஏகாதிபத்தியத்தை வீழ்த்த முடியாது என்று லெனின் எப்போதும் போதித்து வந்திருக்கிறார். ஆகவே வெகு சீக்கிரத்தில் “செத்து மடியப் போகிற முதலாளித்துவம்” என்று ஏகாதிபத்தியத்தை வரையறுத்து கூறும்போது, பாட்டாளி வர்க்கம் செய்யும் சமூக புரட்சி ஆரம்பமாகவிருக்கும் தருணத்திற்கு கொஞ்சம் முந்தைய காலத்தை குறிப்பது ஏகாதிபத்தியம் என்று லெனின் விளக்கி கூறினார்.

முதலாளித்துவத்தின் அடிப்படையையே ஆட்டித் தகர்ப்பதற்காக பாட்டாளி வர்க்கம் செய்கிற புரட்சி, ஏகாதிபத்திய சகாப்தத்தில் வளர்கிறது. ஏகாதிபத்திய சகாப்தத்தில் புரட்சி தீ மூளுவதற்கு அவசியமான சக்திகள் முதலாளித்துவ நாடுகளில் ஒன்று திரண்டு குவிகின்றன என்று லெனின் எடுத்துக் காட்டினார்.

முன்னேற வேண்டும் என்ற நிலைமை ஏற்பட்டால் எப்படி முன்னேறுவது என்று போல்ஷ்விக்குகளுக்கு தெரியும் என்றும், முன்னணியில் நின்று முன்னேறுவதற்கு அவர்கள் கற்றுக் கொண்டு விட்டனர் என்றும், தாக்குதலில் எல்லா மக்களுக்கும் அவர்களால் தலைமைதாங்கி வழிகாட்டி இயக்கமுடியும் என்றும் புரட்சி காட்டிற்று.

ஆனால் நிலைமை சாதகமாக இல்லாமல் பாதகமாக மாறிவிட்டால், புரட்சி தணிந்து பின்வாங்கும்போது எப்படி ஒழுங்கு பிறழாத வகையில் வழியில் பின்வாங்குவது என்பது போல்ஷ்விக்குகளுக்கு தெரியும் என்றும், தங்களுடைய ஊழியர்களை காப்பற்றி வைப்பதற்காகவும், தங்களது சக்திகளை திரும்பவும் ஒன்று திரட்டுவதற்காகவும், புதிய நிலைமைக்கு ஏற்றவாறு தங்களுடைய போர் அணியைத்திருத்தி அமைத்து கொண்டவுடன் திரும்பவும் மீண்டுமொருமுறை விரோதியின் மீது தாக்குதல் தொடுப்பதற்காகவும் ஒழுங்கான வழியில், பீதியின்றி, பதற்றமின்றி, நிதானமாக எப்படி பின் வாங்குவது என்பதையும் அவர்கள் கற்றுகொண்டு விட்டார்கள் என்றும் புரட்சி காட்டிற்று.

யுத்தம் என்பது முதலாளித்துவத்துடன் இரண்டறக்கலந்து நிற்கிற தவிர்க்க முடியாத விளைவு என்று லெனின் சுட்டிக்காட்டினார். முதலாளித்துவ நாடுகளுக்கு யுத்தம் என்பது சர்வசாதாரன விஷயம். தொழிலாளி வர்க்கத்தை சுரண்டுவது எப்படி மிகவும் நியாயமான இயற்கையான விஷயமோ, அவ்வளவு நியாயமான இயற்கையான விஷயம்தான் யுத்தம் என்பது முதலாளித்துவத்திற்கு. புதிய சமுதாயத்தை கர்ப்பத்தில் தரித்துள்ள ஒவ்வொரு பழைய சமுதாயத்திற்கும் மருத்துவச்சியாயிருப்பது – பலாத்காரமே.

தொழிலாளி வர்க்கம் அரைகுறை அற்பசொற்ப கோரிக்கைகளுக்காக போராடவில்லை, சீர்த்திருத்தங்களுக்காக போராடவில்லை, ஜார் ஆட்சியில் இருந்து சகல ஜனங்களையும் விடுதலை செய்வதற்காக போராடிக் கொண்டிருக்கிறது என்று போல்ஷ்விக்குகளால் நடத்தப்பட்ட புரட்சிகரமான வேலை நிறுத்த இயக்கமும், ஆர்பாட்டங்களும் காட்டின. ஒரு புதிய புரட்சியை நோக்கி தேசம் முன்னேறிக் கொண்டிருந்தது. தொழிற்சங்கங்களை பற்றிய விஷயத்தில், போல்ஷ்விக்குகள் தொழிற்சங்கங்களில் தத்துவ தலைமை பதவியையும், அரசியல் தலைமை பதவியையும், கட்சி முயற்சி செய்து பெறவேண்டும் என்று தீர்மாணித்தார்கள்.

பாட்டாளி வர்க்கம், சமூகத்தில் அது அமர்ந்திருக்கும் நிலைபாட்டின் காரணமாக சமூகத்திலுள்ள வர்க்கங்களிலேயே மிகவும் முன்னேற்றம் அடைந்த புரட்சிகரமான வர்க்கமாகும். ஆதிமுதல் அந்தம்வரையில் ஒரேபிடியாக புரட்சியில் முரண்பாடின்றி இருந்து வரும் ஒரே புரட்சிகர வர்க்கமாகும். இந்த காரணத்தினாலேயே ரஷ்யாவிலுள்ள பொதுவான ஜனநாயக புரட்சி இயக்கத்தில் தலைமை தாங்கி செல்லும்படியான பிரதான பாத்திரத்தை ஏற்கும்படி பாட்டாளி வர்க்கம் அழைக்கப்படுகிறது.

வரலாற்றின் கடந்த காலங்களில் எப்போதும் இல்லாத அளவிற்கு "சமூக உண்மைகள்" பலவாறு திரிக்கப்பட்டும் எளிதில் நெருங்க முடியாதவாறு மங்கலாக்கப்பட்டும் உள்ள தற்போதைய நிலையில், சமூக மாற்றமும் வரலாற்று வளர்ச்சியும் மந்தகதியடைந்துள்ளது. இத்தகைய மந்த நிலையை உடைத்தெறிந்து சமூக மாற்றத்தைத் துரிதப்படுத்தும் நடவடிக்கைகளில் ஒன்றே, போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றை கற்பதும் கற்பிப்பதும் ஆகும்.

போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைப் பயில்வதற்கு இந்த அளவு நிகழ்கால வரலாற்று அவசியத்தை அளிப்பது எது?பாட்டாளி வர்க்கத்தின் கதிமோட்சத்திற்கு முழுமுதல் வழிகாட்டியாய் இருக்கும் ஒரே தத்துவமான மார்க்சியத்தில், முதலாளி வர்க்கம் கள்ளத்தனமான முறையில் பலவகையான திருத்தல்வாதக் கருத்துக்களைக் கலப்படம் செய்து வருகிறது. இந்த திருத்தல் வாதங்களையெல்லாம் "செழுமைப்படுத்தும் வாதங்கள்" என்று எண்ணி ஏமாந்து பாட்டாளி வர்க்கப் பிரதிநிதிகளில் அநேகம்பேர் உண்மையில் இந்த நச்சு வாதங்களால் தாக்குண்டு பலவீனப்பட்டிருக்கும் இக்கால "நிலைமையே" போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றைப் பயில்வதற்கும், பரப்புவதற்குமான நிகழ்கால வரலாற்று அவசியத்தை அளிக்கின்றது.

காரல் மார்க்ஸ் காலம் தொடங்கி அவரது இயக்கவியல் தத்துவத்திற்கு எதிரான இயக்கமறுப்பியல் தத்துவத்தின் பல்வேறு வகையான போக்குகள் இன்றுவரை உலவிக்கொண்டுதான் இருக்கின்றன. இதில் தற்போதைய முக்கியத்துவம் என்னவெனில், இந்த இயக்கமறுப்பியல் கருத்துக்கள் மார்க்சியவாதிகள் என்ற போர்வையில் உள்ளவர்களால், மார்க்சிய தோரணையில் முன்வைக்கப்படுவதாகும். இவ்வகையில் தற்போது நம்மிடையே பரவலான புழுக்கத்தில் இருப்பது "பண்பாட்டு மார்க்சியம்" (Cultural Marxism) என்கிற போக்காகும். இப்பண்பாட்டு மார்க்சியம் என்கிற போக்கு பின்நவீனத்துவம் எனப்படுகிற நவீன முதலாளித்துவ தத்துவத்தின் ஒரு பிரிவாக இருந்து செயல்படுகிறது. மேலும், பண்பாட்டு மார்க்சியம் என்கிற இந்த இயக்கமறுப்பியல் கோட்பாடு, ஸ்தாபனம் மற்றும் அரசியல் நிலைகளுக்கு வரும்போது "அடையாள வாதம்" என்கிற அவதாரமெடுக்கிறது.

நேரடியான பின் நவீனத்துவ வாதங்கள் தற்போது நீர்த்துப் போன நிலையை அடைந்து வருவதால், அது கணந்தோரும், இடந்தோரும் தன்னை உருமாற்றிக் கொண்டே செல்கிறது. எனவே, அதன் தற்போதைய உருவம், அரசியல் அரங்கில் "அடையாள அரசியல்" (Identity Politics) என்பதாக இருக்கிறது. இந்த அடையாள அரசியல் கிளப்பும் அபத்தவாதங்களை இனங்காட்டுவதற்கு அதன் மீதான ஒரு விவாதம் அவசியப்படுகிறது. இதைப்போல், இன்னும் பலவாறாக கருத்துக்களை முன்வைக்கும் அடையாள அரசியலானது தனது தலையாய நோக்கமாகக் கொண்டிருப்பது "சர்வதேச பாட்டாளி வர்க்க ஐக்கியம்" என்ற பேரமைப்பைக் குறிவைத்து சிதைப்பதாகும்.

சர்வதேசப் பாட்டாளிகள் ஐக்கியத்தை தேசிய அடையாளம் என்பதை முன்னிறுத்தி உடைப்பது. ஒரு தேசத்தின் பாட்டாளிகள் என்ற ஐக்கியத்தை மொழி மற்றும் தேசிய இன அடையாளங்களைக் காட்டி உடைப்பது. மொழி அல்லது தேசிய இன அடிப்படையிலான பாட்டாளிகள் ஐக்கியத்தை சாதி அடையாளங்களைக் கூறி உடைப்பது. பாலின சமத்துவம், ஐக்கியம் என்பவைக்கு மாறாக பாலின வேறுபாடுகளை இணக்கம் காண முடியாததாக வேறு பிரிப்பது என, இந்த உடைப்பு அல்லது கலைப்பு வேலை இன்னும் இன்னும் குறுகிக் கொண்டே சென்று முடிவில் வறட்டுத் தனிமனித வாதத்தில் கொண்டு போய்த் தள்ளுகின்றது.

பாட்டாளி வர்க்கத்தின் லட்சிய இலக்கான "சர்வதேசிய ஐக்கியம்" என்ற பேரமைப்பைப் பற்றிய கொள்கைப் பிடிப்பை முதலில் தளர்த்தி விட்டால், ஒப்பீட்டளவில் பேரமைப்பு ஒன்றை அடையாள வேறுபாட்டைக் காட்டி சிறு சிறு அமைப்புக்களாக கலைப்பது எளிதாகிறது. இவ்வாறு ஒவ்வொரு நிலையிலும் தான் முண்மொழியும் அமைப்பை தானே கலைத்து கூறுபோட்டுக் கொண்டே சென்று, முடிவில் ஒரு தனிமனிதன் தனக்குத் தானே ஒரு அமைப்பு என்று கருத வைப்பதுடன், அந்தத் தனிமனிதன் இல்லாது போகும் நிலையில் அமைப்பற்ற வெறுமையே நிலவுகிறது என்று அசட்டுத்தனமாக நிறுவும் போக்கே அடையாள அரசியலாக இருக்கிறது. ஆனால் இப்போக்கிற்கு நேர் எதிரானதாகவே உண்மையான மார்க்சியம் இருக்கின்றது.

மேலும், பாட்டாளி வர்க்கம் எதிர்கொள்ளும் பலநிலைப்பட்ட ஒடுக்கு முறைகள் யாவும் ஒரு பொது அமைப்பிலிருந்து (முதலாளித்துவம்) நிகழ்த்தப்படுவதாகும் என்றும் அந்த பொது அமைப்பை பாட்டாளிகள் தங்களுக்குள் ஐக்கியப்பட்டு தகர்ப்பதன் மூலமே அவரவரின் விடுதலை நிலைமைகள் சாத்தியமாகும் என்றும் மார்க்சியம் வலியுறுத்துகின்றது.

பாட்டாளி வர்க்க சர்வதேசிய ஐக்கியம் என்பது விஞ்ஞான வழிப்பட்டதாக இருக்கிறது. மார்க்சிய தத்துவமானது இயற்கையின் இயக்கத்திற்கும், ஒழுங்கமைந்த இயக்க விதிகளையே சமூகத்தின் இயக்கப் போக்குடனும், ஒழுங்கமைவுடனும் இணைந்து விளங்குகிறது. புறத்தில் இருக்கின்ற எந்த ஒரு பொருளும் இயற்கையின் பேரமைப்பிற்கு அப்பாற்பட்டதல்ல என்பது போலவே, சமுதாயப் பேரமைப்பின் ஐக்கியத்திற்குள்ளேயே அனைவரது இயக்கமும் இருக்கின்றது. பொருளாதார ரீதீயில், பாட்டாளி வர்க்கத்தினர், தலைசிறந்த பெளதீக நடவடிக்கையாகிய "உற்பத்தியால்" பிணைக்கப்பட்டுள்ளனர். உற்பத்திக்கான நடவடிக்கைகளில் பங்கெடுக்கும் அதேநேரத்தில், ஒருவருக்கொருவர் தங்களுக்கிடையிலான உறவுகளையும் ஏற்படுத்துகின்றனர். இந்த "உற்பத்தி உறவுகள்" விரிவடைந்து கொண்டே செல்வதற்கு ஏற்ப, உற்பத்தியில் ஈடுபடுகின்றவர்களுக்கிடையில் "ஐக்கியம்" ஏற்பட வேண்டிய எல்லையும் பேரளவினதாக மாறிச் செல்கிறது. தற்போதைய உற்பத்தி நடவடிக்கைகள் எல்லைகள் கடந்து சர்வதேசமய மடைந்துள்ளதால் இந்த உலகலாவிய உற்பத்தி முறை சர்வதேசமயப்பட்ட "உற்பத்தி உறவுகளை" உருவாக்கியிருக்கின்றது என்பதே மார்க்சிய விஞ்ஞானத்தின் நிறவுகையாகும்.

உண்மை இவ்வாறிருக்க, அடையாள வாதம் எனும் மேற்கூறிய முதலாளித்துவ வாதத்தின் நோக்கம் எண்ணவெனில் முதலாளித்துவ வர்க்கம் தற்போது எந்த அளவுக்கு உலகமயமாகி வருகின்றதோ அதே அளவுக்குப் பாட்டாளி வர்க்கத்திடம் உலகமயப்பட்ட உணர்வும் அதற்கான உலகக் கண்ணோட்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என்பதே, எனவேதான், உலகமயப்பட்ட உற்பத்தியின் காரணமாக உலகமயப்பட்ட உறவுகளுக்குள் ஒன்றிணைக்கப்பட்டுள்ள பாட்டாளி வர்க்க யதார்த்தத்தை மூடி மறைத்து, வேறுபாடுகளை முன் நிறுத்தி ஒற்றுமைக்கெதிராக பாட்டாளிகளை யதார்த்தத்திற்கு புறம்பாக "பொய்ப்பிரக்ஞை” (False consciousness) கொள்ளச் செய்கின்றது. கார்ல் மார்க்ஸ் குறிப்பிட்டு எச்சரித்த இந்த பொய்ப்பிரக்ஞையே பாட்டாளிகள் தங்களுக்குள் அணிசேரவிடாமல் அவர்களை ஆளுக்கொரு திசையில் கொண்டு போய் அலைக்கழித்துக் கொண்டிருக்கிறது.

எவ்வாறிருப்பினும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்காத உணர்வுகள் நிரந்தரமானவையாக இருக்க முடியாது என்பதையே பாட்டாளிவர்க்கத்தின் முந்தைய வெற்றிகள் நிரூபித்துக் காட்டியுள்ளன. எனவே பாட்டாளிவர்க்கமும் அவர்களது பிரதிநிதிகளும் விழிப்புடன் இருப்பதற்கு போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு பற்றிய தெளிவு முன் நிபந்தனையான ஒன்றாகும்.

நமது காலத்தின் அபத்தமும் ஆபத்தும் நிறைந்த அடையாள அரசியல் போன்ற கலைப்பு வாதங்களுக்கு எதிரான நித்திய வழிகாட்டியாக இருப்பது புரட்சிகர மார்க்சியத் தத்துவத்தின் ஸ்தாபன வடிவமான “போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறாகும்”. ஏனெனில் போல்ஷ்விக் கம்யூனிஸ்ட் கட்சியானது பாட்டாளிகளை அணிதிரட்டி பாட்டாளி வர்க்கப் புரட்சியை நடத்திக் காட்டிய முதல் வரலாற்று சாட்சியாக இருக்கின்றது.

- ப.மீனாட்சி சுந்தரம், சென்னை

Pin It