1917 நவம்பர் மாதம் 7ஆம் தேதி ரஷ்யாவில் புரட்சி நடைபெற்றது. இது நமக்குத் தெரியும். தற்போது நவம்பர் 7 ரஷ்யப் புரட்சி நாளாக ரஷ்யாவைத் தவிர்த்து உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதுவும் நமக்குத் தெரியும். ஆனால், ரஷ்யாவில் புரட்சி எப்படி நடைபெற்றிருக்கும்? அதை இன்றைய இளம் தலைமுறையினர் அறிவதற்கான வாய்ப்புகள் மிகக் குறைவாக உள்ள நிலையில் அவர்கள் வாசிப்பதை மையமாகக் கொண்டது இக்கட்டுரை.
ரஷ்யாவில் புரட்சி. அது எப்படி நடந்திருக்கும்?. உலக நாடுகளில் ஆட்சி மாற்றங்கள் எப்படி நடந்திருக்கின்றன? இரண்டு வழிகளில் நடைபெறக் கூடிய ஆட்சி மாற்றங்களைப் பற்றியே நாம் அதிகமாக அறிந்திருக்கிறோம்.
1. ஒரு நாட்டில் புதிய அரசாங்கத்தைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறுகிறது. பல கட்சிகள் அத்தேர்தலில் போட்டியிடுகின்றன. அதில் ஒரு கட்சி வெற்றி பெறுகிறது. அக்கட்சியின் தலைவர் அந்நாட்டின் ஜனாதிபதியாகவோ, அல்லது அதிபராகவோ, அல்லது பிரதம மந்திரியாகவோ பதவியேற்றுக் கொள்கிறார். இது ஒரு வகையான ஆட்சிமாற்றம். ரஷ்யாவிலும் இப்படித்தான் நடந்ததா?.
2. ஒரு நாட்டிலுள்ள அரசின் கட்டுப்பாட்டின் கீழுள்ள ராணுவமானது அந்நாட்டின் உச்சகட்ட அரசு அதிகார இடமாக விளங்கும் பாராளுமன்றத்திற்குள் நுழைந்து, அதைக் கைப்பற்றி அங்கிருக்கும் அரசுப் பிரதிநிதிகளைக் கைது செய்து அல்லது கொன்று பாராளுமன்றத்தைக் கைப்பற்றுகிறது. ராணுவத்தின் தலைமை அதிகாரி தானே ஜனாதிபதியென்றோ, அதிபர் என்றோ அறிவிக்கிறார். இதை ராணுவப் புரட்சி என்கிறார்கள். இதுவும் ஒருவகையான ஆட்சி மாற்றம்தான். ரஷ்யாவிலும் இப்படித்தான் நடந்ததா?.
முதலில் சொன்னதை ஆட்சி மாற்றம் என்றும் அடுத்துச் சொன்னதைப் புரட்சி என்றும் குறிப்பிடு கிறோம். ரஷ்யாவில் நடைபெற்றதையும் புரட்சி என்றே கூறுகிறோம். அப்படியானால், இரண்டா வதாகச் சொன்னதுபோல்தான் ரஷ்யப் புரட்சி நடைபெற்றதா? ஆம். புரட்சி அப்படித்தான் நடை பெற்றது. ஆனால், அது ராணுவத்தால் நடத்தப்பட்ட புரட்சியல்ல. ஒரு கட்சியால் நடத்தப்பட்ட புரட்சி.
முதலில் சொன்ன வழிமுறையிலுள்ளபடியான ஒரு கட்சி, தனது உறுப்பினர்களான மக்களைத் திரட்டிக்கொண்டு இரண்டாவதாகச் சொன்ன வழிமுறையிலுள்ளதுபோன்று பாராளுமன்றத்திற்குள் நுழைந்து, அதைக் கைப்பற்றினால் எப்படியிருக்கும்?. ரஷ்யப் புரட்சி அப்படித்தான் நடைபெற்றது.
ரஷ்யப் புரட்சியை நடத்தியவர் லெனின் என்றே பலர் அறிந்து வைத்திருக்கிறோம். ஒரு வகையில் அது உண்மைதான் ஆனாலும் அதுவே முழுமையான உண்மையல்ல. ரஷ்யப் புரட்சியை நடத்தியது ரஷ்ய சமூக - ஜனநாயகக் கட்சி, அதாவது ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி. ரஷ்யாவில் புரட்சியை நடத்துகின்ற பொறுப்பை கட்சியானது லெனினிடம் ஒப்படைக்கிறது. அப்பொறுப்பினை அவர் ஏற்றுக் கொள்கிறார். பொறுப்பு என்பது பலவிதமான நெருக்கடியான நேரங்களிலும், பலவிதமான முடிவுகள் முன்வைக்கப்படுகின்ற நேரங்களிலும் லெனின் எடுக்கும் முடிவே இறுதி முடிவாக அமையும் என்பதுதான். சரியான நேரத்தில் சரியான முடிவுகளை அவர் எடுத்தார். அவர் கற்றிருந்த மார்க்சியக் கல்வி அவருக்கு அந்த ஆற்றலைக் கொடுத்திருந்தது.
புரட்சி நடந்து முடிந்த அந்த நாட்கள் மிகவும் பரபரப்பானவை. மிகவும் ஆச்சர்யம் மிக்கவை. உலக நாடுகள் ரஷ்யப் புரட்சியை பிற நாடுகளில் நடைபெற்றுள்ள ராணுவப் புரட்சியைப் போன்ற ஒன்றுதுதான் என்றே எண்ணியிருந்தன. லெனினை ஒரு ஆயுதந் தாங்கிய கட்சியின் தலைவர் என்று
தான் கருதியிருந்தன. கம்யூனிசம் எனும் கார்ல் மார்க்சினுடைய கற்பனையான சித்தாந்தத்தைக் கடைப் பிடிக்கின்ற, வெற்றிபெற முடியாத நடவடிக்கை என்றே அவை புரட்சி குறித்து நினைத்திருந்தன. ஆனால், புரட்சி வெற்றிபெற்றவுடன் லெனின் அறிவித்த விசயங்கள்தான் உலகின் கவனத்தை ரஷ்யாவின் பக்கம் திருப்பின. அந்த அறிவிப்புகள் நடைமுறைப்படுத்தப்பட்டவுடன்தான் உலக நாடுகள் இதுவரை அடைந்திராத அதிர்ச்சியை அடைந்தன. அவ்வாறு உலகைக் குலுக்கிப் பார்த்த அறிவிப்புகளில் ஓர் அறிவிப்புதான் தனிமனிதனின் மிதமிஞ்சிய சொத்துக்கள் அனைத்தும் அரசுடைமை ஆக்கப்படு கின்றது எனும் அறிவிப்பு, இன்றும் கற்பனை செய்ய முடியாத ஓர் அறிவிப்புதான் அது. முதலாளி களையும் பணக்காரர்களையும் ஒழித்தது அந்த அறிவிப்பு. என்ன ஆச்சரியம்? முதலாளிகளும் பணக்காரர்களும் இல்லாமல் உழைப்பவர்களை மட்டுமே கொண்டதாக ஒரு நாடா?. ஆம். அப்படி ஒரு நாடாக மாற்றப்பட்டது. அவ்வாறு மாற்றியது ரஷ்யக் கம்யூனிஸ்டுக் கட்சி.
அன்றிலிருந்து உலகம் முழுதும் கம்யூனிஸ்டுக் கட்சிகள் உருவாகத் தொடங்கின. இன்று எத்தனையோ நாடுகளில், எத்தனையோ கட்சிகள் இருக்கின்றன. அக்கட்சிகள் யாவும் அவைகள் இருக்கும் நாட்டின் எல்லையைத் தாண்டி ஒரு நூலளவுகூடப் பரவ முடியாதவைகளே. ஆனால், ஒரே சித்தாந்தத்தை ஏற்றுக்கொண்ட பல கட்சிகள் பல நாடுகளிலும் இருக்கமுடியுமென்றால் அவை கம்யூனிஸ்டுக் கட்சிகளாக மட்டுமே இருக்க முடியும் என்பதே கம்யூனிசம் ஓர் உலகளாவிய சித்தாந்தம் என நாம் புரிந்து கொள்ளலாம்.
ரஷ்யப் புரட்சியின் போது ரஷ்யாவில் ஒரே யரு கட்சி மட்டுமா இருந்தது? இல்லை. பல கட்சிகள் இருந்தன. அவற்றில் கம்யூனிசத்தை ஏற்றுக்கொண்ட கட்சிகளும் பலவாக இருந்தன. அவற்றின் பெயர்களைப் பார்க்கலாம்.
- முடியரசுவாதிகள்;
1.1 அக்டோபர்வாதிகள் உள்ளிட்ட பல குழுக்கள்;
- காடேட்டுகள்;
2.1 பொதுப்பிரமுகர் குழு;
- நரோத்னிய சோசலிஸ்டுகள் அல்லது துருதொவிக்குகள்;
- ருஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சி;
4.1 மென்ஷ்விக்குகள்;
4.2 மென்ஷ்விக் சர்வ தேசிய வாதிகள்;
4.3 போல்ஷ்விக்குகள்;
4.4 ஒன்றுபட்ட சமூக ஜனநாயகவாதிகள் அல்லது சர்வ தேசிய வாதிகள்;
4.5 எதீன்ஸ்துவோ;
- சோசலிஸ்டுப் புரட்சியாளர் கட்சி;
5.1 இடதுசாரி சோசலிஸ்டுப் புரட்சியாளர்கள்;
5.2 பெரும்வரையாளர்கள்.
இத்தனை கட்சிகளில் ருஷ்ய சமூக ஜனநாயகத் தொழிலாளர் கட்சியின் போல்ஷ்விக் பிரிவுதான் லெனினிற்குப் புரட்சி நடத்தும் பொறுப்பைக் கொடுத்த கட்சி.
எத்தனை கட்சிகள்?, எத்தனை பிரிவுகள்? அத்தனையும் ரஷ்யாவின் ஆட்சிமாற்றம் செய்வது குறித்துப் பல்வேறான திட்டங்களைக் கொண்டிருந்தன. ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுவதில்கூட பல விதமான கருத்து மாறுபாடுகள் இருந்தன. முதலில் மன்னராட்சி ஒழிக்கப்பட்டது, அதிலும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. பின்னர் இடைக்கால அரசாங்கம் அமைக்கப்பட்டது. அதிலும் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தன. ஆட்சியதிகாரத்தைக் கைப் பற்றிவிடலாம் என்கிற சந்தர்ப்பம் நெருங்கிவந்தது. அப்போதும்கூட வேண்டும், வேண்டாம் என மாறு பட்ட கருத்துக்கள் இருந்தன. கண்டவுடன் சுட்டுக் கொல்லப்படும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்ததால் தலைமறைவாக இருந்த லெனின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றுங்கள் என கட்சியின் உறுப்பினர்களுக்கு உத்தரவிட்டார். கட்சி என்றால் வேறெதுவுமல்ல. மக்களின் பிரதிநிதிகள்தான். கட்சி ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியது. இவ்வாறு ஆட்சியதிகாரம் கைப் பற்றப்பட்ட இடம் ஏராளமான விசாலமான அறைகளையும் கூடுமரங்களையும் கொண்டிருந்த ஸ்மோல்னி மாளிகை எனும் பிரம்மாண்டமான அரண்மனையாகும். அங்குதான் சமீபத்தில் உருவாக்கப் பட்ட இடைக்கால அரசாங்கம் செயல்பட்டு வந்தது.
ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் எனும் போல்ஷ்விக் பிரிவின் முடிவை ஏற்பவர்கள் அம்மாளிகையில் தங்களது ஆதரவோடு குழுமி யிருந்தார்கள். ஏற்கக்கூடாது என்பவர்களும் தங்களின் ஆதரவாளர்களோடு இருந்தார்கள். ஆட்சி முறை எதிலும் மாற்றமே செய்யக் கூடாது என்பவர்களும் கூட அம்மாளிகையில் குழுமியிருந்தனர். ஒழிக்கப் பட்ட ஜார் மன்னரின் ராணுவப் படையினர் அங்கிருந்தனர். அத்தனை பிரிவுகளின் முன்னணி யாளர்களும் ஆங்காங்கே இருந்த விசாலமான அறைகளுக்குள் இருந்து கொண்டு தங்களது நிலைப் பாட்டை ஆதரவாளர்களிடம் விளக்கிக் கொண்டிருந்தனர்.
அரண்மனைக்கு வெளியே நகரில் என்ன நடக்கிறது? பல்வேறு அமைப்புகளின் ஆயுதந் தாங்கிய படைகள் நகரைச் சுற்றிச்சுற்றி வந்து கொண்டிருக்கின்றன. அவைகளின் பெயர்களைப் பார்ப்போம். 1. இராணுவ அதிகாரிகளது ஒன்றியம். இது ஜார் மன்னருடைய ராணுவம்.
- தெக்கீன்ஸி படை. இது ராணுவத்திலுள்ள ஜெனரல் கர்னீலவுக்கு விசுவாசமான ஆசிய முஸ்லீம் பழங்குடியினத்தவர்களைக் கொண்டு உருவாக்கப் பட்ட மூர்க்கமான படை.
- வெண்காவலர் படை, இது ரஷ்ய முதலாளிகள் வைத்திருந்த ஆயுதப்படை.
- சாவுப் பட்டாளங்கள் அல்லது அதிர்ச்சிப் பட்டாளங்கள். இது இடைக்கால அரசாங்கத்தின் தலைவர் கெரன்ஸ்கி வைத்திருந்த படை.
- ஜார்ஜ் வீரர்கள் படை. இது ஜார் மன்னனால் ஜார்ஜ் சிலுவை விருது வழங்கப்பட்டவர்களுடைய படை.
- விவசாயிகளது ஒன்றியம். இது தொடக்கத்தில் புரட்சிகர விவசாயிகளுடையதாக இருந்து பின்னர் பணக்கார விவசாயிகளுடையதாக மாறிய படை.
- செம் படை (ரெட் ஆர்மி). இது கம்யூனிஸ்டுக் கட்சியின் ஆயுதப் படை. இப்படை மட்டும் தன்னை ஓர் உள்நாட்டுப் போருக்குத் தயாராக்கிக் கொண் டிருந்தது. பிற படைகள் அனைத்தும் யாரும் கலகமோ கலவரமோ செய்துவிடாமல் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன. வேடிக்கை பார்த்துக்கொண்டே உலாவிக் கொண்டிருந்தன.
கற்பனை செய்து பாருங்கள். ஒருநாட்டின் ஆளுங்கட்சியின் படைகள், எதிர்க்கட்சிகளின் படைகள், அதிகாரத்தைப் பறிக்க முயலுகின்ற கம்யூனிஸ்டுக் கட்சியின் படைகள் என பல படைகள் தலை நகரத்தில் ஆயுதங்களோடு உலாவிக் கொண் டிருக்கின்றன. எது வேண்டுமானாலும் நடக்கலாம். என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். எப்போது வேண்டுமானாலும் நடக்கலாம். மக்களோ இவர்களுக்கிடையில் தங்களது வேலைகளைப் பார்த்துக்கொண்டும் இவர்களை வேடிக்கை பார்த்துக்கொண்டுமிருக்கிறார்கள்.
லெனின் புரட்சிக்கு அழைப்பு விடுக்கிறார். செம்படை தாக்குதலைத் தொடங்குகிறது. ஸ்மோல்னி அரண்மனைக்குள் நுழைகிறது. இதை ஏற்றுக் கொள்ளாத பிற அமைப்புகள் கண்டனக் குரல்களை எழுப்புகின்றன. பல தலைவர்கள் நைஸாக நழுவிடுகின்றனர். பல தலைவர்கள் கைது செய்யப் படுகின்றனர். சிலர் பின்னர் போல்ஷ்விக் நிலைப் பாட்டினை ஏற்றுக்கொண்டு செயல்படத் தொடங்கு கின்றனர்.
அந்தப் பிரம்மாண்டமான அரண்மனையில் குழுமியுள்ள கட்டுக்கடங்காத மக்கள் திரளினூடே மாறுவேடத்தில் தலைவர் லெனின் நுழைகிறார். பெரும் ஆரவாரம். மேடையில் ஏறுகிறார். புரட்சி வெற்றிபெற்றதாக அறிவிக்கிறார். கட்சி தனக்குக் கொடுத்த கடமையை நிறைவேற்றினார். உடனடி யாகக் கட்சிக் கமிட்டி கூடுகிறது. புரட்சிகர அரசாங்கத்தின் முதல் ஆட்சி மன்றக் குழுவினையும் அதன் தலைவராக லெனினையும் அறிவிக்கிறது. நீங்கள் அவரை ரஷ்யாவின் ஜனாதிபதியென்றோ அல்லது தலைவரென்றோ அல்லது பிரதம மந்திரி யென்றோ அழைத்துக் கொள்ளலாம். ஆனால், அவர் இப்போது ரஷ்யப் பாட்டாளி வர்க்கத்தின் தலைவர்.
கோடிக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னால் தோன்றியது இந்தப் பூமி. சில ஆயிரம் ஆண்டு களுக்கு முன்னால் தோன்றியது மனித இனம். சில நூறு ஆண்டுகளுக்கு முன்னால் உருவாக்கப்பட்டதுதான் இந்த அரசு நிர்வாக முறை. சில பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை அவை மாற்றமடைந்து கொண்டேயும் வந்தன. ஆனால் அந்த முறையை முழுமையாகப் புரட்டிப் போட்டதுதான் ரஷ்யப் புரட்சி. இதன் மூலமாக முற்றிலும் புதியதொரு அரசமைப்பு முறையை இந்த உலகிற்கு அறிமுகப்படுத்தியதுதான் ரஷ்யப் புரட்சி.
ரஷ்யப் புரட்சியைக் கண்முன்னால் காண வேண்டுமா? ஜான் ரீடு எனும் அமெரிக்கர் எழுதியுள்ள உலகைக் குலுக்கிய பத்து நாட்கள் படியுங்கள். அது ரஷ்யப் புரட்சியின் திரைக்கதை.
உலகைக் குலுக்கிய பத்து நாட்கள்
ஜான் ரீடு
வெளியீடு: நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்.,
41- பி, சிட்கோ இண்ட்ஸ்ட்ரியல் எஸ்டேட்
அம்பத்தூர், சென்னை - 600 098.
தொலைபேசி எண்: 044 - 26359906
விலை : 550/-