குரல்வளையை நெரித்துவிட்டு
அழைத்துப் போகின்றனர்
அவளை அவர்கள்
இனி அவளால் பேசமுடியாது
இலைக்கண்களை நறுக்கிவிட்டுச் செல்கின்றனர்
அழும் அதன் வேர்களைப் புறக்கணித்து
இனி அதனால் வண்ணங்களைப் பூக்க முடியாது
அவள் உழைக்கும் கைகளில் விலங்கிட்டு
இறுக்கி வைத்திருக்கின்றனர்
போராட்டத்திற்கு அவை உயர்தல் கூடாதென
கிளைகளை வெட்டிவிட்டுக் கடக்கின்றனர்
சுவாசத்தின் உறுப்பை அறுத்ததை உணராமல்
உரிமைகளை நோக்கி நடக்கும் அவள் கால்களை
சங்கிலியால் பிணைத்து இருக்கின்றனர்
அடுத்த விடுதலையை அடையக் கூடாததற்காய்
உயிர்சுரந்த மரத்தண்டுகளை துண்டுகளாக்குகின்றனர்
ஜீவக்காற்றின் ஊற்றுகளை அடைத்தது தெரியாமல்
அவள் எண்ணங்களை அறுக்க எத்தனிக்கின்றனர்
ஒளியை அவள் தூண்டாமலிருக்க
அதன் வேர்களை அகழ்கிறார்கள்
வாழ்வுச் சூழல் முடிவதைப் பார்க்காதவர்களாக
அவள் மானுட விடிவிற்கானவள்
அது பூவுலகின் நிரந்தரத்திற்கானது.
கீற்றில் தேட...
தொடர்புடைய படைப்புகள்
தலித் முரசு - அக்டோபர்09
மானுட விடிவிற்கானவள்
- விவரங்கள்
- யாழன் ஆதி
- பிரிவு: தலித் முரசு - அக்டோபர்09