என் கண்முன்னே
ஒருவன் தீயிலிட்டுக் கொளுத்தப்பட்டால்
வெந்து கருகும்
அவன் வேதனையைப்
பாட மாட்டேன்

அவன் உடம்பில்
பற்றி எரியும்
தீயின் நடனங்கள் குறித்து
திகைத்து நிற்பேன்

என் கண்முன்னே
ஒருவனின் நிலம் பறிக்கப்பட்டால்
அவன் துயரங்கள்
அறிய மாட்டேன்

அவன் நிலத்தில் முளைத்த புற்களைப் பாடுவேன்
பூக்களைப் பாடுவேன்

என் கண்முன்னே ஒருவன்
அகதியாக்கப்பட்டால்
அவன் கடந்து வந்த நீலக்கடலின்
நிறங்கள் வியப்பேன்

நாடு இழந்த
அவன் கண்ணீரை
பாட மாட்டேன்

சாலையோரத்தில்
வசிக்கும் ஒருவனின் மேற்கூரையை
ஆக்ரமிப்பு என்று
அரசாங்கம் அகற்றினால்

வீடின்றி
தெருவில் வீசப்படும்
அவன் குழந்தைகளைக்
காண மாட்டேன்

கூரை அகற்றப்பட்ட
இடத்தில் தோன்றும்
வானவில் ரசிப்பேன்

வசீகரப்பெண்களின் கண்களில் மயங்கி
கழுத்துக்கு கீழே
ஒளிவீசும்
சதைப்பேரழகை
உவமைகளால் கிறங்கச்செய்வேன்

அதே பெண்
வன்புணர்வு செய்யப்பட்டு
அங்கம் சிதைக்கப்பட்டால்
அவள் முகம் பார்க்க மாட்டேன்

என் கவித்துவ
தருணங்கள்
கலைந்து போய்
விடக்கூடும் என்கிற
அச்சத்தில்
திரும்பி பார்க்க மாட்டேன்

அத்தனை
அவலங்களுக்கும் காரணமான அரசுகள் தரும் விருதுகளை
அவமானங்கள் ஏதுமின்றி
பதக்கங்களாக
அணிந்து கொள்வேன்

அதிகாரம்
நிலைநிறுத்தப் படுவதும்
ஆதிக்கங்களின்
தாள் பணிவதும் தானே
சாதிக்கும் வழிகளின் சாமர்த்தியங்கள்

- அமீர் அப்பாஸ்