‘தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய ஆலய நுழைவுப் போராட்டத்தையொட்டி, விழுப்புரம் மாவட்டம் காங்கியனூரில் தலித் மக்கள் மீது காவல் துறையினர் மிருகத்தனமான தடியடித் தாக்குதல் நடத்தினர். இப்போராட்டத்திற்கு தலைமையேற்ற சி.பி.எம். சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதாவை காவல் துறையினர் கீழே தள்ளி, வயிற்றின் மேல் ஏறி நின்று, பூட்ஸ் கால்களால் உதைத்துள்ளனர். இதனால் அவரது கர்ப்பப்பை கடுமையாக பாதிப்படைந்து, தொடர்ச்சியான ரத்தக் கசிவு ஏற்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். இவருடன் சி.பி.எம். கட்சியினர் 104 பேர் கைது செய்யப்பட்டு, கடலூர் சிறையில் அடைக்கப்பட்டனர். இக்கொடுஞ்செயலைப் புரிந்த காவல் துறையினர் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்கள் மீதான வழக்குகளை திரும்பப் பெறவும் மார்க்சிஸ்ட் கட்சி வலியுறுத்தியபோதும், இதுவரை இதற்கான நடவடிக்கைகள் எதையும் தமிழக அரசு மேற்கொள்ளவில்லை.'' – ‘தீக்கதிர்', 17.10.2009
அண்மைக்காலமாக சி.பி.எம். கட்சி, வர்ணப் பாகுபாட்டால் (வர்க்கப் பாகுபாட்டால் அல்ல) கீழ் ஜாதியாக்கப்பட்ட தலித் மக்களின் பிரச்சினைக்காகக் குரல் கொடுக்கத் தொடங்கியுள்ளது. இதை வரவேற்கிறோம். ஆனால், இந்தியா முழுவதும் 25 கோடி மக்களாக ஊருக்கு அப்பால் வாழ நிர்பந்திக்கப்பட்டுள்ள தீண்டத்தகாத மக்களின் சிக்கலை, இவர்கள் ஆழமாகப் புரிந்து கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகிறோம். அதற்கு இக்கட்சியின் புரட்சிகர கம்யூனிச செயல் திட்டங்கள் மட்டும் போதாது. புரட்சியாளர் அம்பேத்கரின் சாதி ஒழிப்பு செயல்திட்டங்களை ஆழமாகப் புரிந்து கொண்டு செயல்படுத்த முன்வர வேண்டும்.
‘‘உளவியல் ரீதியாக சாதியும் தீண்டாமையும் ஒரே கோட்பாட்டின் அடிப்படையில் அமைந்த ஓர் ஒருங்கிணைந்த முறையாகும். சாதி இந்துக்கள் தீண்டாமையைப் பின்பற்றுகிறார்கள் என்றால், அதற்குக் காரணம் அவர்கள் சாதியில் நம்பிக்கை வைத்திருப்பதேயாகும். சாதி முறையை அழிக்காமல் தீண்டாமையை ஒழிக்கலாம் என்று நம்புவது சற்றும் பயனற்றது. சாதியும் தீண்டாமையும் வெவ்வேறானவை என்ற கருத்து தவறானது. இரண்டும் ஒன்றிலிருந்து மற்றொன்று பிரிக்க முடியாதவை. சாதி முறையின் நீட்சியே தீண்டாமை. இரண்டும் பிரிந்து நிற்க முடியாது. இரண்டும் சேர்ந்தே நிற்கின்றன; சேர்ந்தேதான் அவை வீழும்'' என்கிறார் அம்பேத்கர் (தொகுதி 5, பக். 94).
ஆனால் தீண்டாமையை மட்டும் தனியாக ஒழித்துவிட முடியும் என்று சி.பி.எம். நம்புகிறது. அவர்களுடைய நம்பிக்கைக்காக தலித்துகள் இந்துக்களாக வாழ முடியாது. அரதப் பழசான ஆலய நுழைவுப் போராட்டங்கள், இம்மக்களை நிரந்தர இந்துக்களாக்கவே பயன்படும். கோயிலில் நுழையும் உரிமை கிடைத்தால், ஒருவன் இந்(து)திய சட்டப்படி உரிமையுள்ள கீழ் ஜாதிக்காரன் ஆகிறான். இவர்களுக்கு முன்னாலேயே இவ்வுரிமையைப் பெற்றுள்ள பிற்படுத்தப்பட்ட மக்கள் உரிமையுள்ள சூத்திரர்கள்தானே! கோயில் நுழைவினால் யாரும் மேல் ஜாதியாகிவிட முடியாது; சம நிலையையும் பெற முடியாது. வேறு எதற்காக இந்த செயல் திட்டம்?
பொது இடங்களில் உரிமையைக் கோருவது ஜனநாயகத்தின் பாற்பட்டது. சாதியின் உற்பத்திக் கேந்திரமான இந்து கோயில்களில் அவ்வுரிமையைப் பெற முனைவது, இந்து மதத்தில் கீழ் ஜாதிகளுக்கான உரிமையைக் கோரி, இந்து அடிமையாக செத்துப்போவதற்கே வழிவகுக்கும். பெரியார் அயராது பாடுபட்ட சுயமரியாதை கிடைக்காது. அனைத்து ஜாதியினரும் அர்ச்சகரானாலும், பார்ப்பன மேலாதிக்கம்தான் ஒழியும். ஆனால், கீழ் ஜாதிக்காரன் மணியாட்டும் உரிமையைப் பெற்றுவிடுவதாலேயே அவனுடைய ஜாதி ஒழிந்துவிடப் போவதில்லை!
கோயில் நுழைவுப் போராட்டங்களை நடத்தி, தீண்டாமையை ஒழிக்கும் சி.பி.எம். கட்சி, 14 கோரிக்கை கொண்ட பட்டியலை தமிழக முதல்வரிடம் கொடுக்கிறது. அவரும் அதை வாங்கிக் கொண்டு, 1969 முதல், தான் நிறைவேற்றிய நீண்ட பட்டியலை கொடுக்கிறார். இப்படி மாறி மாறி பட்டியல்களை வாசிப்பதாலும், மனு கொடுப்பதாலும் – தீண்டாமை ஒழிந்து விடாது. எது தீண்டாமை? பிருந்தா காரத் சட்டத்தை மீறி உத்தப்புரம் செல்கிறார். அவர் காவல் துறையால் தடுக்கப்பட்டவுடன், அவரை விடுவிக்க முதல்வர் தொலைபேசியிலேயே ஆணைகளைப் பிறப்பிக்கிறார். அவரைத் தடுத்த குற்றத்திற்காக, அடுத்த நாளே ஓர் அய்.ஏ.எஸ். தலைமையில் விசாரணைக் குழு அமைக்கப்படுகிறது. ஆனால், அதே கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் கோயில் நுழைவுக்காக அதே சட்டத்தை மீறினால், அவரை கீழே தள்ளி, எட்டி உதைக்கிறது போலிஸ். பிருந்தா காரத்திற்கு ஒரு நீதி; லதாவுக்கு ஒரு நீதி. இதுதாண்டா தீண்டாமை!
தீண்டாமையை ஒழிக்கும் இவர்களின் பட்டியல்கள், எதைக் கிழித்துவிடும்? ஒருவனுடைய ஜாதியை அவனுடைய பிறப்பு தீர்மானிக்கும்வரை, அதற்கு இறப்பு இல்லை. இல்லவே இல்லை. அதனால்தான் தொடக்க காலங்களில் பல்வேறு போராட்டங்களை நடத்தி, எண்ணற்ற செயல் திட்டங்களை உருவாக்கி, சிந்தனை ரீதியாகவும் செயல் ரீதியாகவும் உழைத்து, இந்திய அரசமைப்புச் சட்டத்தையே எழுதி, அரசியல் உரிமைகளைப் பெற்றுத் தந்தும், இறுதியில் எந்த வழிமுறையும் பயன்படாது என நிராயுதபாணியாக பத்து லட்சம் மக்களுடன் நின்று உரத்துச் சொன்னாரே – ‘நான் இந்துவாக சாக மாட்டேன்' என்று. அந்த ஒற்றை வரியில்தான் இருக்கிறது சாதி – தீண்டாமை ஒழிப்பும், சமூக விடுதலையும்!