நகர்ப்புற நக்சலைட்டுகள் என்ற முத்திரை குத்தி மனித உரிமை செயல்பாட்டாளர்களைக் கொடூரமாக நசுக்கி வருகிறது பாசிச ஒன்றிய ஆட்சி. அதில் ஒருவர்தான் டெல்லி பல்கலைக்கழகப் பேராசிரியராக இருந்த ஜி.என்.சாய்பாபா. 90% உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்டவர். சக்கர நாற்காலிகளால் தான் அவரால் நகர முடியும். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து அவருக்கு மாவோயிஸ்டுகளுடன் தொடர்பு இருக்கிறது என்று குற்றம் சாட்டி மகராஷ்டிரா சிறையிலே 7 ஆண்டுகளாக அடைத்து வைத்திருக்கிறது ஒன்றிய ஆட்சி. அவருக்கான பிணை கோரி வழக்கு வந்தது. வழக்கை விசாரித்த பம்பாய் உயர்நீதிமன்றம் அவரை சிறையிலிருந்து விடுவிக்க உத்தரவிட்டது. உத்தரவு பிறப்பித்த அடுத்த சில மணி நேரங்களிலேயே மகராஷ்டிரா மாநில அரசு உச்சநீதிமன்றத்தை அணுகியது. உச்சநீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு பம்பாய் நீதிமன்றத்தின் உத்தரவை இரத்து செய்து அறிவித்திருக்கிறது.

இதில் உச்ச நீதிமன்றம் கூறியிருக்கிற கருத்து தான் மிகவும் வியப்புக்குரிய ஒன்றாகும். “மாவோயிஸ்டுகளைப் பொறுத்தவரை அவர்கள் எவ்வளவுதான் உடல் ஊனமுற்று இருந்தாலும், அவர்களுடைய மூளை மிகவும் ஆபத்தானது. மூளை தான் அவர்களை செயல்பட வைக்கிறது. மாவோயிஸ்டுகளாக இருப்பவர்கள் வெறும் செயல்பாட்டாளர்கள் தான். அவர்களை செயல்பட வைக்கின்றவர்கள், இத்தகையவர்களின் மூளை தான். எனவே இவர்கள் தனிமைச் சிறையில் அடைக்கப்பட வேண்டும்” என்று நீதிபதிகள் தெரிவித்து இருக்கிறார்கள்.

அரசு வழக்கறிஞரான ‘துஷர் மேத்தா’ என்பவர் “இந்த UAPA சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர்கள் தனிமைச் சிறையில்தான் வைக்கப்பட வேண்டும்” என்று உறுதியாக வாதிட்டு இருக்கிறார். இத்தனைக்கும் சாய்பாபா சார்பில் வாதிட்ட வழக்கறிஞர், “அவரை வீட்டுச் சிறையில் வைக்கலாம். வீட்டிற்கு வெளியே பாதுகாவலரை போடுங்கள், அவரது தொலைப்பேசி இணைப்பையும் துண்டித்துக் கொள்ளுங்கள், ஆனால், 90% உடல் உறுப்புகள் பாதிக்கப்பட்ட ஒருவரை சக்கர நாற்காலியில் நகர்ந்து கொண்டு பல்வேறு விவாதங்களுக்குட்பட்ட ஒருவரை இப்படி அடைத்து வைத்திருப்பது மனிதாபிமானத்திற்கு எதிரானது” என்ற வாதத்தை உச்ச நீதிமன்றம் ஏற்க மறுத்துவிட்டது.

ஏற்கெனவே, பாதிரியார் ஒருவர் 86 வயதில் இதேபோல் சிறைபடுத்தப்பட்டு இறந்தே போனார். ஆக நகர்ப்புற நக்சலைட்டுகள் என்ற பெயரில் மனித உரிமைக்கு எதிரான இந்த சித்திரவதைகள் பாசிச ஆட்சியின் கொடூரத்திற்கு சரியான சான்றாகும். மனித உரிமை செயல்பாட்டாளர்கள் இவற்றிற்கு வலிமையான கண்டனக் குரலை எழுப்பியாக வேண்டும்.

- விடுதலை இராசேந்திரன்

Pin It