கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

uapa actமனித உரிமைகளை அடிப்படைச் சுதந்திரங்களை, தனியாகவோ, கூட்டாகவோ, அறியவும், வளர்த்தெடுக்கவும், பாதுகாக்கவும் தேசிய மற்றும் சர்வதேச அளவில் ஒவ்வொருவருக்கும் உரிமை உண்டு, என்பதனை ஐ.நாவின் மனித உரிமை காப்பாளர் பிரகடனம்-1998, உறுதிப் படுத்துகின்றது.

மனித உரிமைகளை பாதுகாக்க பல்வேறு தளங்களில் செயலாற்றும் மனித உரிமை காப்பாளர்கள் மீது கடந்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள தேசத்துரோக வழக்குகளில் 65% வழக்குகள் பீகார், உத்திர பிரதேசம், ஜார்கண்ட் கர்நாடகா, மற்றும் தமிழ்நாடு, ஆகிய ஐந்து மாநிலங்களைச் சார்ந்தவை.

இவற்றில் பெரும்பாலானவை பாஜக ஆட்சி நடைபெற்று வருகின்றது. 124A of IPC இந்தியத் தண்டனைச் சட்டத்தின் பிரிவாகிய தேச துரோகச் சட்டத்தின் கீழ் 2019 ஆம் ஆண்டில் 96 பேர் கைது செய்யப் பட்டிருந்தாலும், இரண்டே இரண்டு பேர்தான் தண்டிக்கப் பட்டுள்ளனர்.

தேச துரோக சட்டம் இந்தியாவில், சுதந்திரப் போராட்டத்தை ஒடுக்குவதற்காக ஆங்கிலேயர்களால் கொண்டு வரப்பட்ட கொடிய சட்டமாகும். சுதந்திரப் போராட்ட வீரர்களான பகத்சிங், இலாலா லஜபதிராய், வ.உ.சி மற்றும் காந்தியடிகள் போன்றவர்கள் இச்சட்டத்தின் மூலம் தண்டிக்கப்பட்டுள்ளனர். எனவே சனநாயகத்திற்காக போராடுபவர்கள் மீது பாயும் 124(A) சட்டம் என்பது மனித உரிமைகளுக்கு எதிரானதாகும்.

01.01 2010 முதல் 31.12.2020 வரை பதிவு செய்யப்பட்ட அனைத்து தேசத்துரோக வழக்குகளை கண்காணித்து, சட்ட தொடர்பான செய்தி வெளியிட்ட article 14 என்ற வலைதளத்தில், இந்தியாவில் கடந்த 10 ஆண்டுகளில் பதிவு செய்யப்பட்ட தேசத்துரோக வழக்குகள் 405, நபர்கள் மீது போடப்பட்டுள்ளன. இவற்றில் 96% வழக்குகள், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னரே பதிவு செய்யப்பட்டுள்ளது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு அல்லது அரசிற்கு எதிராக சுவரொட்டிகளை வைத்திருத்தல், அல்லது ஒட்டுதல், முழக்கங்களை எழுப்புதல், சமூக ஊடகங்களில் பதிவுகள் எழுதுதல் மற்றும் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட உரையாடல்கள் கொண்டிருப்பது அல்லது இணைய வழியில் கடிதம் அனுப்பி சதித் திட்டம் தீட்டுதல் போன்ற காரணங்களை முன்வைத்து இவைகள் "தேசத்துரோக" நடவடிக்கையாக கருதப்பட்டு வழக்குகள் பதிவு செய்யப் படுகின்றது.

தவறான செய்திகளை வெளியிட்டதாக குற்றச்சாட்டுகள் வைத்து, தி கேரவனின் நிறுவனர் மற்றும் ஆசிரியர் பரேஷ் நாத் மற்றும் ஆனந்த் நாத், மற்றும் நிர்வாக ஆசிரியர் வினோத் கே ஜோஸ் மற்றும் "நேஷனல் ஹெரால்டு ஆசிரியர் ஜாபர் ஆகா, ஆகியோர் மீது தேசத்துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் எழுத்தாளர் அருந்ததி ராய் அசீம் திரிவேதி, தற்சமயம் காங்கிரஸ் எம்பி சசிதரூர் இந்தியா டுடே பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் மற்றும் நேஷனல் ஹெரால்டின் மூத்த ஆலோசகர் ஆசிரியர் மிருனல் பாண்டே ஆகியோர் மீது டெல்லியில் குடியரசு தினத்தன்று நடந்த வன்முறைக்குப் பின்னர் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் ஊபா சட்டம் (UAPA), இச்சட்டத்தின் மூலம் யாரை வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் கைது செய்யலாம். முன்பிணை கிடையாது. கைது செய்யப்பட்டவர்தான், தன்னைக் குற்றமற்றவர் என மெய்ப்பிக்க வேண்டும் என்பது போன்ற கடும் சட்ட விதிகளை கொண்டிருக்கிறது இக்கொடூர ஆள் தூக்கிச்சட்டம்.

ஆனால், 2016 முதல் 2019 வரை இக்கொடிய சட்டத்தின் கீழ் கைது செய்யப் பட்டவர்களில் 2.2% பேர்தான் நீதிமன்றத்தில் தண்டிக்கப்பட்டுள்ளனர். 2016 முதல் 2019 வரை ஊபாச் (UAPA)சட்டம் மூலம் 5,922 பேர் இந்தியாவில் கைது செய்யப் பட்டுள்ளனர்.

இதில் 132 பேர் மட்டும் தண்டிக்கப் பட்டுள்ளனர். இத்தகவலை உள்துறை அமைச்சகம் சார்பில் மாநிலங்களவையில் அறிக்கை சமர்ப்பிக்கப் பட்டுள்ளது. (The Hindu 11.2.2021) மேலும் குறிப்பாக 2019 ஆம் ஆண்டில் மட்டும் 1,948 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தேசியக் குற்றவியல் ஆவணக் காப்பகம் அறிவித்துள்ளது.

(UAPA) ஊபாச் சட்டத்தின் கீழ் சுதா பரத்வாஜ், வர வர ராவ், ஆனந்த் டெல்டும் டே, கௌதம் நவ்லாகா, சோமா சென், சுரேந்திர காட்லிங், ரோனா வில்சன், அருண் பெரைரா, வெர்னான் கொன்சால்வஸ், சுதிர் தாவேல், மகேஷ் ராவுட், ஹேனி பாபு, கபிர் காலா, தமிழகத்தை சார்ந்த 83 வயது நிறைந்த அருட் பணி ஸ்டேன்சாமி உட்ளிட்ட இந்தியா முழுவதும் அறியப்பட்ட, 16 மனித உரிமை காப்பாளர்கள் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஊபாச் (UAPA) சட்டத்தின் கீழ், சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

ஊபாச் (UAPA)சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள ரோனா வில்சன், "தேசியப் புலனாய்வு முகமை" (National Investigating Agency - NIA) போலித்தனத்தை வெளிக் கொண்டு வந்துள்ளார்.

"மாவோயிச அமைப்போடு " தொடர்பு உடையவர், நாட்டிற்கு எதிராகப் போர் தொடுக்க முனைந்தவர், பல்வேறு பயங்கரவாதக் குற்றங்களில் தொடர்பு உடையவர் குறிப்பாகப் பிரதம மந்திரி மோடியை படுகொலை செய்யச் சதித் திட்டம் தீட்டினார் என்றும் பல குற்றச்சாட்டுகளைச் சுமத்தி, ரோனா வில்சன் கைது செய்யப்பட்டதாகத் தேசியப் புலனாய்வு முகமை (National Investigating Agency - NIA) குற்றப்பத்திரிகையில் குறிப்பிட்டுள்ளது.

இதற்கு ஆதரமாக வில்சன் கணினியில் ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால், அந்த ஆதாரங்கள் அனைத்தும் பொய்யானவை எனவும், அவை வேண்டுமென்றே தனது கணினியில் திணிக்கப்பட்டது என்று, அமெரிக்காவிலுள்ள பார் கவுன்சில் உதவியோடு தடயவியல் ஆய்வகத்தில் தனது கணினியை சோதனையிட்ட போது உண்மை வெளிவந்தது.

இது சம்பந்தமாக ரோனா வில்சன் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்துள்ளார். மேலும் இதற்காக ஒரு சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்க வேண்டும் எனவும் ரோனா வில்சன் கோரியுள்ளார்.

தமிழகத்தில் கடந்த காலங்களில் மே 17, இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் வழக்கறிஞர் முருகன் உட்பட பல்வேறு மனித உரிமை செயல்பாட்டாளர்கள் மீது பதிவு செய்யப்பட்டது.

தற்போது சாதிய மதவாதம் பேசி மக்களை பிரிக்கும் பி.ஜே.பி தமிழகத்தில் கால் பதித்து விடக் கூடாது என அரசியல் களப்பணி செய்த, தமிழ்த்தேச மக்கள் முன்னணியை சார்ந்த தோழர்கள் பாலன், சீனிவாசன், செல்வராஜ் ஆகியோர் UAPA கொடும் சட்டத்தில் வழக்கு பதியப்பட்டு கைது செய்யப்படுள்ளனர்.

இவர்களுக்கு முன் மருத்துவர் தினேசும் கோவையில் கைது செய்யப்பட்டுள்ளார். இது போல் தொடர்ந்து மனித உரிமைக் களத்தில் உள்ளோர் எவரும் ஆள் தூக்கி சட்டங்கள் மூலம் கைது செய்யப்படலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இன் நிலையில் மக்களை அணிதிரட்டி வீதிகளில் போராட்ட களங்களை வலுசேர்ப்பதின் மூலமாகத்தான், இது போன்ற மனித விரோத சட்டங்களை சட்ட புத்தகத்தில் இருந்து நாம் நீக்க முடியும்.

- இ. ஆசீர்

மனித உரிமை காப்பாளர்கள் கூட்டமைப்பு