கீற்றில் தேட...

தொடர்புடைய படைப்புகள்

இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறை சட்டம் 1973 மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872 ஆகிய மூன்று குற்றவியல் சட்டங்களுக்கும் மாற்றாக கடந்த ஆண்டு பாஜக அரசு கொண்டு வந்த பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா (BNSS) 2023 மற்றும் பாரதிய சாக் ஷியா அதினியம் (BSA) 2023 என்ற மூன்று சட்டங்கள் ஜூலை ஒன்றாம் தேதி முதல் நடைமுறைக்கு வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டிருந்த போது புதிய குற்றவியல் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டதால் இவை குறித்த ஆக்கப்பூர்வமான விவாதம் எதுவும் நடைபெறவில்லை. நாடாளுமன்ற நிலைக்குழு உறுப்பினர்கள் எழுப்பிய சந்தேகங்களும், சட்ட அறிஞர்கள், வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் சங்கங்கள் மற்றும் நீதிபதிகள் சுட்டிக் காட்டிய குறைபாடுகளும் சரி செய்யப்படாமலேயே புதிய குற்றவியல் சட்டங்கள் அமல்படுத்தப்பட்டுள்ளதால் அதை எதிர்த்து பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர்.court symbolsபுதிய குற்றவியல் சட்டங்கள் இயற்றப்படுவதற்கான தேவை எதுவும் எழாத சூழலில் பா.ஜ.க அரசு உள்நோக்கத்துடன் இந்த சட்டங்களை நிறைவேற்றியுள்ளது. பழைய சட்டங்களில் இடம்பெற்றிருந்த 90 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட அம்சங்கள் புதிய குற்றவியல் சட்டங்களில் மீண்டும் இடம் பெற்றுள்ளது. இதற்கு பதிலாக ஏற்கெனவே நடைமுறையிலிருந்த சட்டங்களில் கால மாற்றங்களால் தேவைப்படாத சட்டப்பிரிவுகளை நீக்குவது, புதிய சட்டப்பிரிவுகளை சேர்ப்பது போன்ற திருத்தங்களை மட்டும் மேற்கொண்டு அதே சட்டங்களையே நடைமுறையில் வைத்திருக்கலாம். அதை விடுத்து பா.ஜ.க அரசு செய்திருக்கும் இந்த முயற்சியை சட்டத்துறையில் இந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்கும் சூழ்ச்சியாகவே பார்க்க வேண்டியுள்ளது. இந்திய ஒன்றியத்தில் 9 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் மட்டுமே இந்தி அலுவல் மொழியாக உள்ளது. 56.37 சதவிகித இந்தியர்கள் இந்தி அல்லாத பிற மொழிகளை தாய்மொழியாகக் கொண்டவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

"இந்திய அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 348(1) இல் உச்ச நீதிமன்றத்திலும், ஒவ்வொரு உயர் நீதிமன்றத்திலும் நடக்கும் அனைத்து நடவடிக்கைகளும், நாடாளுமன்றத்தில் அல்லது ஒரு மாநிலத்தின் சட்டமன்றத்தில் அறிமுகப்படுத்தப்பட வேண்டிய அனைத்து சட்ட முன்வடிவுகள் அல்லது திருத்தங்கள், நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட அனைத்துச் சட்டங்கள் மற்றும் குடியரசுத் தலைவர் அல்லது ஒரு மாநிலத்தின் ஆளுநரால் பிரகடனப்படுத்தப்பட்ட அனைத்து ஆணைகள் மற்றும் இந்த அரசியலமைப்பின் கீழ் நாடாளுமன்றம் அல்லது சட்டமன்றத்தால் உருவாக்கப்பட்ட ஏதேனும் சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட அனைத்து உத்தரவுகள், விதிகள், ஒழுங்குமுறைகள் மற்றும் துணைச் சட்டங்கள் ஆகிய அனைத்தும் ஆங்கில மொழியில் இருக்க வேண்டும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதிலிருந்து சமஸ்கிருத மொழியில் பெயர் சூட்டப்பட்டுள்ள புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு எதிரானவை என்பதை உணர்ந்து கொள்ளலாம்.

புதிய குற்றவியல் சட்டங்கள் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் கூட்டுப் பட்டியல் - 3 இன் கீழ் வருவதால் மாநில அரசுடன் விரிவான ஆலோசனை நடத்திய பிறகே இவை இயற்றப்பட்டிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் குறைந்தபட்சம் மாநிலங்களின் கருத்துகளைக் கூட கேட்காமல் இந்தச் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாகக் கூறி தமிழ்நாடு அரசு இச்சட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படுவதை கடுமையாக எதிர்க்கிறது. அத்துடன் BNS மற்றும் BNSS சட்டங்களின் பல்வேறு பிரிவுகள் தெளிவற்றதாகவும், முரண்பாடுகள் கொண்டதாகவும் இருப்பதை தமிழ்நாடு அரசு சுட்டிக் காட்டியுள்ளது.

புதிய குற்றவியல் சட்டங்களில் தேசத்துரோகம் என்பது நீக்கப்பட்டு அதற்குப் பதிலாக "இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒற்றுமைக்குத் தீங்கு விளைவிப்பது" குற்றமாக சேர்க்கப்பட்டுள்ளது. இதில் குறிப்பிடப்படும் அம்சங்கள் தெளிவற்றவையாக இருப்பதால் இப்பிரிவு கருத்துச் சுதந்திரத்தை பாதிக்கும் வாய்ப்பு உள்ளது. அரசுக்கு எதிரான எதிர்ப்புகளை முடக்க இப்பிரிவு பயன்படுத்தப்படும். தேசத்துரோக குற்றத்திற்கு முன்பு அதிகபட்சமாக மூன்று ஆண்டுகள் தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் இப்போது அதிகபட்சமாக ஆயுள் தண்டனை வரை விதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சாதாரண போராட்டங்களைக் கூட அரசுக்கு எதிரான செயல்பாடாகக் காட்டி ஒருவரைக் கைது செய்ய முடியும்.

புதிய சட்டங்கள் காவல் துறைக்குக் கூடுதல் அதிகாரங்களை அளிக்கிறது. லலிதா குமாரி எதிர் உத்திரப்பிரதேசம் மாநிலம் வழக்கில் உச்சநீதிமன்றம் "ஒரு குற்றம் நடைபெற்றதாக புகார் எழுந்தால் உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட வேண்டும்" என்று தீர்ப்பளித்துள்ளது. ஆனால் ஒரு குற்றம் நடந்திருக்கிறதா என்பதை உறுதி செய்ய BNSS காவல்துறைக்கு 14 நாட்கள் அவகாசம் அளித்துள்ளதால் அது வரை முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யாமல் இருக்க முடியும்.

காலனிய ஆதிக்க மனநிலையிலிருந்து விலகுவதற்காகத் தான் புதிய குற்றவியல் சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு கூறினாலும் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இயற்றப்பட்ட சட்டங்களை விட கொடூரமானதாக இந்த புதிய சட்டங்கள் இருக்கிறது என்பதே உண்மை. ஆகவே புதிய குற்றவியல் சட்டங்களை எதிர்த்து வழக்கறிஞர்கள் நடத்தி வரும் போராட்டங்களில் மக்களும் தீவிரமாக பங்கேற்க வேண்டும். அனைவரின் கருத்துகளுக்கும் மதிப்பளித்து ஒன்றிய அரசு புதிய குற்றவியல் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.

- வழக்கறிஞர் இராம.வைரமுத்து