இஸ்ரேல் மென்பொருளைப் பயன்படுத்தி உளவு பார்த்தது அம்பலம்
மோடி ஆட்சியை எதிர்ப்பவர்களை தேச விரோதிகள் என்று முத்திரை குத்தி, ‘தேசபக்தி’க்கு முழு உரிமை கொண்டாடி வருகிறது பா.ஜ.க. ‘தேச விரோத’ சட்டத்தின் கீழ் சிறுபான்மையினரையும் சமூகத்துக்காகக் குரல் கொடுக்கும் சிந்தனையாளர்களையும் கைது செய்து ஆண்டுக்கணக்கில் சிறையிலடைத்து வருகிறது. இந்த நிலையில் ‘இஸ்ரேல்’ நிறுவனம் உருவாக்கிய ‘மென்பொருளை’ப் பயன்படுத்தி, இந்தியாவில் ஒன்றிய அமைச்சர்கள் 40 பத்திரிகை யாளர்கள், எதிர்க்கட்சித் தலைவர்களின் உரையாடல்களை ஒன்றிய அரசு ஒட்டு கேட்ட அதிர்ச்சியான தகவல்கள் வெளி வந்திருக்கின்றன. இந்த ‘மென் பொருள்’ தனியாருக்கு விற்கப்படுவது அல்ல; அரசுகளுக்கு மட்டுமே விற்பதற்காக இஸ்ரேல் தனியார் நிறுவனம் உருவாக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒன்றிய அரசு இதை மறுத்துள்ளது. ஆனாலும் ‘தி வொயர்’ மின்னிதழ் 18.7.2021 அன்று விரிவாக இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.
இந்த மென்பொருள் ஆப்பிள் மொபைல்களைக்கூட மிக எளிதில் ஹேக் செய்துவிட முடியும் என்று சொல்லப்படுகிறது. உலகம் முழுவதும் பல்வேறு அரசாங்க உளவு அமைப்புகளால் பயன்படுத்தப்பட்டு வரும் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் 2019இல் இந்தியாவிலும் பயன்படுத்தப்பட்டு ஏராளமானோரின் வாட்ஸ் - அப் மற்றும் தொலைப்பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டதாகக் கூறப் பட்டது. ஆனால் அப்போதைய மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நாடாளுமன்றத்தில் அரசாங்க நிறுவனங்களில் பெகாசஸ் பயன்படுத்தப்படவில்லை என்று திட்டவட்டமாகக் கூறியிருந்தார். அதேபோல், அமெரிக்கா, ரஷ்யா உள்ளிட்ட உலக நாடுகளும் இந்த பெகாசஸ் ஸ்பைவேர் பயன்பாட்டால் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்து வந்தன.
‘தி வயர்’ ஊடகத்தில் வெளியாகியிருக்கும் அந்த அறிக்கையில், சுமார் 40-க்கும் மேற்பட்ட இந்தியப் பத்திரிகையாளர்களின் தொலைப்பேசி எண்கள் பெகாசஸ் ஸ்பைவேரை பயன்படுத்தப்பட்டு அடையாளம் தெரியாத முகமைகளால் ஹேக் செய்யப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அந்த பட்டியலில், இந்துஸ்தான் டைம்ஸ், இந்தியா டுடே, நியூஸ் 18, தி இந்து மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட வெகுமக்கள் ஊடகங்களின் மூத்த மற்றும் தலைசிறந்த பத்திரிகையாளர்களின் பெயர்கள் இடம் பெற்றிருக்கிறது.
அடையாளம் தெரியாத ஏஜென்சி நிறுவனங்களால் பத்திரிகையாளர்கள் குறிவைக்கப்பட்டுள்ளதாகப் பகுப்பாய்வில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலும், மேற்குறிப்பிடப்பட்டுள்ள செய்தி நிறுவனங்களின் பத்திரிகையாளர்கள் 2019 இந்திய நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக 2018-ம் ஆண்டு முதலே குறிப்பாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களின் தொலைப்பேசி தரவுகள் மற்றும் உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெகாசஸ் ஸ்பைவேரை வடிவமைத்த இஸ்ரேலின் என்.எஸ்.ஓ நிறுவனம் தாங்கள் ஸ்பைவேரை சரிபார்க்கப்பட்ட அரசாங்க அமைப்புகளுக்கு மட்டுமே விற்பனை செய்ததாகக் கூறியிருக்கிறது. அதே போல், தங்களின் ஸ்பைவேரை பயன்படுத்தி பத்திரிகையாளர்களின் தொலை பேசிகளை ஹேக் செய்த வாடிக்கையாளர்களின் அடையாளங் களைப் பொதுவெளியில் பகிரங்கப்படுத்தவும் இஸ்ரேல் நிறுவனம் தயாராக இல்லை என்று ‘தி வயர்’ குறிப்பிட்டிருக்கிறது.
இந்த ஸ்பைவேர் பட்டியலில் இலக்காகி இருக்கும் 40 இந்தியப் பத்திரிகையாளர்களில் குறிப்பாகச் சிலர், சில சம்பவங்களுக்கு பிறகும், சில காரணங்களுக்காக குறி வைக்கப்பட்டுள்ளதாகச் செய்தி நிறுவனங்கள் தங்களது ஆய்வில் கண்டறிந்துள்ளன. தி வயர் ஊடகத்தின் இரண்டு நிறுவன ஆசிரியர்களின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. இணையதள இதழும் மோடி ஆட்சிக்கு எதிரான செய்திகளை துணிவுடன் வெளிப்படுத்தி வரும் ‘தி வயரின்’ ஆசிரியர் மற்றும் பங்களிப்பாளரான பத்திரிகை யாளர் ரோகினி சிங் ஆகியோரது தொலைப்பேசி தரவுகள் ஹேக் செய்யப்பட்டிருக்கிறது. அதில், ரோகினி சிங் குறிப்பாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா குறித்தும், அவரது மகன் ஜெய் ஷா மற்றும் பிரதமர் நரேந்திர மோடியுடன் இணக்கமாக இருந்து வந்த பிரபல தொழிலதிபர் நிகில் ஆகியோர் இடையேயான வணிக விவகாரங்கள் குறித்து தி வயரில் எழுதிய பிறகு, கண்காணிப்பு வளையத்தில் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
அதே போல், இந்தியன் எக்ஸ்பிரஸ் முன்னாள் பத்திரிகையாளர் சுஷாந்த் சிங் 2018-ன் நடுப்பகுதியில் இலக்காகியிருக்கிறார். சுஷாந்த் பிரான்ஸ் ரஃபேல் போர் விமான விவகாரம் குறித்ததான விரிவான கவர் ஸ்டோரி எழுதிய பிறகே அவருடைய தொலைப் பேசி உரையாடல்கள் ஒட்டுக் கேட்கப்பட்டுள்ளது என செய்தி நிறுவனங்களின் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. இந்தியப் பத்திரிகையாளர்கள் அதுவும் மத்திய அரசுக்கு எதிராகச் செய்தி சேகரிப்பில் ஈடுபட்டவர்கள், செய்தி வெளியிட்டவர்கள் என ஒரு சிலர் மட்டுமே குறிப்பாகக் குறிவைக்கப்பட்டுள்ளதால் இந்திய அரசாங்கமும் இஸ்ரேல் நிறுவனத்தின் வாடிக்கையாளாரா? என்று கேள்வி எழுகிறது. ஆனால், மத்திய அரசு இந்த அறிக்கை வெளியான சில நிமிடங்களில் மறுப்பு தெரிவித்திருக்கிறது.