அறநிலையத் துறை சட்டம் எதற்கும் நாங்கள் கட்டுப்பட மாட்டோம்; நாங்கள் வானுலகத்திலிருந்து நடராசப் பெருமானோடு “பாரா சூட்டில்” வந்து பூமிக்கு குதித்தவர்கள் என்று உச்சநீதி மன்றம் போய் தீர்ப்பு வாங்கி வைத்துள்ளவர்கள் தில்லை தீட்சதப் பார்ப்பனர்கள்.

அரசுக்கு கோயில் உண்டியல் கணக்குக் காட்ட மாட்டோம்; தில்லை நடராசன் வந்து கேட்கட்டும் என்பார்கள். வரவு செலவு கணக்குகளை சரி பார்க்க அறநிலையத் துறை அதிகாரிகள் வந்தால் கோயிலுக்குள் வராதே; போ வெளியே ‘கெட் அவுட்’ என்பார்கள்.

இப்படித்தான் பா.ஜ.க. பார்ப்பனர் எச். ராஜாவும் அண்மையில் பத்திரிகையாளர்களைப் பார்த்து ‘கெட் அவுட்’ என்று ஆவேசமாகக் கூறினார். பிறகு தான் தெரிந்தது அவர் அப்படிக் கூறிக் கொண்டது தனக்குத் தான் என்று.

‘பிரம்மா’வால் அந்தக் கால கருத்தரிப்பு மய்யத்தில் நெற்றி வழியாகப் பிறந்தவர்கள் என்று கூறிக் கொள்ளும் ‘பிராமணர்’ களுக்கு ‘பிறவித் திமிர்’ என்ற பண்பும் உண்டு. (விதி விலக்குகள் இருக்கலாம்).

தில்லை நடராசன் கோயிலில் ‘கனகசபை’ என்ற சிற்றம்பல மேடையில் ‘சூத்திரர்கள்’ தரிசன உரிமையையும் அண்மைக்காலமாக தீட்சதர்கள் தடுக்கிறார்களாம். “சூத்திரர்களே கெட் அவுட்” என்கிறார்கள்.

ஒரே மதத்துக்காரர்களை அதுவும் கடவுள் பக்தியுடன் தரிசனத்துக்கு வருவோரை இப்படி அவமதிக்கிறார்களே, இது என்னப்பா மதம்? என்று எச். ராஜா கேட்க மாட்டார். ‘சூத்திரர்’ அண்ணாமலையும் கேட்க மாட்டார். அந்தத் தில்லை ‘நடராசனும்’ கேட்க மாட்டான்.

இப்போது ஒரு செய்தி வந்திருக்கிறது. இரண்டு தீட்சதர்கள் கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காலம்காலமாகக் கோயில் கட்டுப்பாடு தங்கள் குடும்பத்தை விட்டுப் போய் விடக் கூடாது என்று ‘அவாள்கள்’ உறவுகளுக்கிடையே குழந்தைத் திருமணம் (பால்ய விவாகம்) செய்து கொண்டிருக்கிறார்கள். சட்டம் எங்களை நெருங்க முடியுமா? என்று சவால் விட்டார்கள். இப்போது வசமாக மாட்டிக் கொண்டு விட்டார்கள். காவல்துறை விசாரணைக்கு தீட்சதர்களை அழைத்துப் போக வந்தது. உடனே 100க்கும் மேற்பட்டோர் சிதம்பரத்தில் சாலை மறியல் செய்து மிரட்டிப் பார்த்தார்கள். ‘பாட்சா’ பலிக்கவில்லை. கடைசியில் ‘நடராசன்’ அருளோடு இழுத்துப் போய் வண்டியில் ஏற்ற வேண்டிய நிலை!

இந்த நிலையில் கோயில்களை அரசு கட்டுப்பாட்டிலிருந்து விடுவிக்க வேண்டுமாம், எச். ராஜாக்கள் கதறுகிறார்கள்.

கோயில்களை மட்டுமல்ல, தீட்சதர்கள், அர்ச்சகர்கள், பூதேவர்கள் அனைவரையுமே அரசியல் சட்டமோ கிரிமினல் சட்டமோ தண்டனை சட்டமோ கட்டுப்படுத்த முடியாது என்று சுப்பிரமணிய சாமியை வைத்து உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடர்ந்தாலும் ஆச்சரியமில்லை.

சுப்பிரமணியசாமி உச்சநீதிமன்றம் போவதைவிட இங்கேயே மதுரையிலேயே வழக்குப் போடலாம். வெற்றி வாய்ப்புகள் அதிகம் என்பது அடியேனின் யோசனை.

“சாமி”களைப் பற்றி ‘சாமி’களுக்குத் தெரியாததா என்ன?

- கோடங்குடி மாரிமுத்து

Pin It