sten swamyஎனக்கு மட்டும் நடந்தது எனக்கு மட்டும் நடந்தது அல்ல, இந்த நாட்டில் புதிதாக நடக்கும் நிகழ்வும் அல்ல. இது இந்தியா முழுவதும் நடக்கும் விரிவான நடவடிக்கை. நாட்டிலுள்ள அறிவுஜீவிகள், வழக்கறிஞர்கள், எழுத்தாளர்கள், கவிஞர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், மாணவர் தலைவர்கள் இந்த ஆட்சிக்கு எதிராக கண்டனம் தெரிவித்தமைக்கு கருத்து பகிர்ந்தமைக்கு கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை ஸ்டேன்சுவாமி தான் கைது செய்யப்படுவது உறுதியான நிலையில் வெளிப்படுத்தியது.

ஸ்டானிஸ்லாஸ் சுவாமி (எ)ஸ்டேன்சுவாமி

திருச்சி மாவட்டம் விரகனூரில் 1937 ஆம் ஆண்டு ஏப்ரல் 26 ம் தேதி பிறந்தவர் ஸ்டேன்சுவாமி. ஸ்டானிஸ்லாஸ் லூர்துசாமி என்பதுதான் அவரது இயற்பெயர். அது காலப்போக்கில் ஸ்டேன் சுவாமியாக மாறியது. செயின் ஜோசப் பள்ளியில் தனது பள்ளிப்படிப்பை முடித்தவர்.

1957 ஆம் ஆண்டில் யேசு சபையில் இணைந்து பாதிரியார் ஆவதற்கான இறையியல் கற்க ஆரம்பித்தார். 1967 ஆம் ஆண்டில் பிலிப்பைன்ஸ் நாட்டிலுள்ள மணிலாவில் சமூகவியல் முதுகலை கல்வியை முடித்தார். 1973 ஆம் ஆண்டில் ஜாம்ஷெட்பூர் திரும்பிய அவர் கத்தோலிக்க நிவாரண சேவைகள் தொண்டு இயக்குனராகப் பொறுப்பேற்றார். இதனை தொடர்ந்து சிலகாலம் பெங்களூரில் உள்ள இந்திய சமூக நிறுவனத்திலும் பொறுப்பேற்று செயல்பட்டார்.

மீண்டும் ஜாம்ஷெட்பூர் திரும்பிய ஸ்டேசன்சுவாமி படாய்பீர் கிராமத்திற்கு குடியேறினார். சுமார் 25 கி.மீ சுற்றளவில் வாழும் மக்களோடு தொடர்பு ஏற்படுத்தி அவர்களுக்கான பணிகள் செய்ய அவர்களின் மொழிகள் மற்றும் பழக்க வழக்கங்களை கற்க தொடங்கினார்.

அடர்த்தியான மத நம்பிக்கை கொண்ட ஸ்டேன்சுவாமி அதனைக் கடந்து ஆதிவாசி மக்களின் உரிமைகளுக்காக தனது முழு வாழ்க்கையை அர்ப்பணித்தார். ஆதிவாசி மக்களுக்கு எதிரான அரசின் கொள்கைகள், அரசியல் செயல்பாடுகளை முழுமையாக அறிந்து கொண்டார்.

ஆதிவாசி மக்களோடு ஸ்டேன்சுவாமி

1990 களின் இறுதியில் ராஞ்சி மற்றும் மேற்கு சிங்பூமில் "கோயல்-கரோ" அணைத்திட்டம் மற்றும் கும்லா மாவட்டங்களில் இந்திய இராணுவம் சார்பில் "நேத்ரஹாட் ஃபீலீடு ஃபயரிங் ரேஞ்" திட்டம் கொண்டு வரப்பட்டது. இதனால் ஆதிவாசிகள் தங்கள் நிலங்களிலிருந்து விரட்டப்பட்டார்கள்.

தங்கள் நிலங்களை பாதுகாக்க போராடும் ஆதிவாசிகளை ஒருங்கிணைக்க 2001 ஆம் ஆண்டு ஜூன் மாதம் ஸ்டேசன்சுவாமி ராஞ்சிக்கு சென்று புருலியான சாலையில் உள்ள கரானா குடியிருப்பில் குடியேறினார்.

அரசின் இரக்கமற்ற அடக்குமுறையில் பாதிக்கப்பட்ட ஆதிவாசி மக்களின் நிலை குறித்த செய்திகளை வெளியுகத்திற்கு கொண்டு வந்தார். மேலும் சிறையில் அடைக்கப்படும் ஆதிவாசி மக்களை பிணையெடுக்கும் பணிகளில் ஈடுபட்டார். இதனோடு ஆதிவாசி மக்களோடு போராட்டங்களிலும் பங்கேற்றுள்ளார்.

ஒருமுறை இந்திய இராணுவம் ஆதிவாசி மக்கள் போராட்டத்தை அடக்குவதற்காக பீரங்கி டேங் படைகளோடு வந்துள்ளனர் அப்போது ஸ்டேன்சுவாமியும் மக்களோடு மக்களாக டேங்குகள் வரும் சாலையை மறித்து தரையில் படுத்துள்ளார்.

டேங்குகளை எங்கள் மீது ஏற்றிவிட்டு செல்லுங்கள் என்று போராடியுள்ளனர். ஸ்டேன் சுவாமி மூலம் மக்களின் போராட்ட கோரிக்கையை அறிந்த இராணுவப்படை பின்வாங்கி சென்றுள்ளது. அது மட்டுமல்ல போராட்டத்தின் நோக்கமும் வெற்றி பெற்றுள்ளது.

பீமா கோரேகான் வழக்கு

1818 ஆம் ஆண்டு மஹாராஷ்டிரா மாநிலம் புனேவின் புறநர் பகுதியான பீமா கொரேகான் என்ற இடத்தில் ஆதிக்க சாதி வெறிகொண்ட பேஷ்வாக்கர் படைக்கு எதிரான போரில் தலித்துகள் ஆங்கிலப்படையில் இணைந்து வெற்றி கொண்டனர். போரின் 200 வது ஆண்டுவிழா தலித்துகளால் 2018 ஜனவரி 2ஆம் தேதி கொண்டாடப்பட்டது. இந்த நிகழ்வில் நடந்த வன்முறையின் இரண்டு தலித்துகள் கொல்லப்பட்டனர். சுமார் 300 நபர்கள் காயமடைந்தனர்.

இந்த வழக்கினை விசாரித்து வந்த தேசிய புலானய்பு முகமை (NIA) ஆதிவாசிகளின் நிலங்களை பறித்து சுரங்கங்கள் அமைத்து கணிம வளங்களை கொள்ளையடிக்கும் கார்பரேட்டுகளுக்கும் அதற்கு துணை போகும் அரசிற்கு எதிராக மக்களோடு போராடி வந்த ஸ்டேன்சுவாமியை மிகப்பெரிய சதித்திட்டத்தின் பின்னணியில் 2020 அக்டோபர் 8 ஆம் தேதியன்று கைது செய்தது.

ஆனால் ஸ்டேன்சுவாமி பீமா கொரேகான் என்ற இடத்திற்கு சென்றதே இல்லை. மேலும் கலவர சம்பவம் குறித்து பத்திரிகை மூலம் தான் அறிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஊபா (UAPA) சட்டம்

முதலாம் உலக்போரின் முடிவில் பஞ்சாப்பிலும் வங்காளத்திலும் இந்திய விடுதலைக்கான போராட்டங்கள் அதிகரித்தது. இதனை ஒடுக்கவதற்காக பிரித்தானிய அரசால் 1919ல் ரௌலட் சட்டம் (Rowlett Act) கொண்டு வரப்பட்டது. இதுவே ஊ.பா (UAPA) சட்டத்தின் தொடக்கமாகும்.

அடுத்து வடகிழக்கு மாநிலங்களில் போராடக் கூடியவர்களை ஒடுக்குவதற்காக ஆயுதப்படை சிறப்பு சட்டம் 1958 (Armed Forces Special Act) கொண்டு வரப்பட்டது. இதன்பின் சட்டவிரோத செயல்பாடுகளின் தடுப்பு சட்டம் 1967 (UAPA-Unlawful Activities (Prevention) Act) கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் 2004 ஆம் ஆண்டு காங்கிரஸ் அரசு பொடா சட்டத்தில் இருந்த சில கூறுகளை எடுத்து இணைத்து திருத்தம் செய்தது.

2019ம் ஆண்டில் பா.ஜ.க அரசு மீண்டும் சட்டம் திருத்தம் செய்தது. அதில் 43E, பிரிவில் உள்ள 15,16ன் சட்டப் பிரிவின் கீழ் கைது செய்யப்படும் நபர் தான் நிரபராதி என்பதனை நிரபராதி என்று நிரூபிக்கும் வரை குற்றவாளி என்கிறது இந்தச்சட்டப் பிரிவு.

இது நீதி ஒழுங்கிற்கு முரணானது மேலும் இது இந்திய அரசியல் சட்டம் பிரிவு 19, 20, 21 க்கு எதிரானதாகும். எனவே ஊபா(UAPA) சட்டம் என்பது அடிப்படை மனித உரிமைகளுக்கு எதிரானதாகும். மேலும் சுரங்கக் கம்பெனிகள், தொழில் நிறுவணங்களின் சுரண்டல்களை எதிர்த்து அமைதியான முறையில் போராடுபவர்களை வாயை மூடச் செய்வது அல்லது கொல்வதற்காகத்தான் ஊபா ( UAPA) சட்டம் உருவாக்கப்பட்ட தின் நோக்கமாக இருக்கின்றது.

துப்பாக்கியால் கொல்லப்பட்ட செயற்பாட்டாளர்கள்.

இந்தியாவில் மனித உரிமைகளுக்காக பேசுகிறவர்களை குறி வைத்து திட்டமிட்டு சில ஆண்டுகளுக்கு முன் கொலை செய்யப்பட்டார்கள். 2015 ஆகஸ்ட் 30ம் தேதியன்று வடக்கு கர்நாடாகாவில் உள்ள தார்வாட்டில் டாக்டர் கல்புர்க்கி துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இதற்கு முன்பாக கோலாலம்பூரில் தங்கள் குடியிருப்பிற்கு அருகே காலை நேர நடைப்பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமூக செயற்பாட்டாளர் கோவிந்த் பன்சாரேவும் அவரது மனைவியும் சுட்டுக் கொல்லப்பட்டனர். 2013 ம் ஆண்டு ஆகஸ்ட் 30ம் தேதியன்று பகுத்தறிவாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார்.

2017 செப்டம்பர் 5ம் தேதியன்று பெங்களூரில் தன் வீட்டருகே எழுத்தாளர் கௌரிலங்கேஸ் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டார். இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டை சேர்ந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் பொதுச் செயலாளர் துரை.இரவிக்குமாரின் உயிருக்கு அச்சுருத்தலும் வந்தது.

டாக்டர் எம்.எம்.கல்புர்க்கி கொலைக்குப்பின் நடந்த எழுத்தாளர் கௌரிலங்கேஷ் கொலை வழக்கையும் விசாரித்து வரும் சிறப்பு போலீஸ் குழு “சனாதன் சன்ஸ்தா” மற்றும் அதனுடன் இணைந்த இந்து ஜனாஜாக்ருதி அமைப்பினை சார்ந்தவர்கள் தான் கொலையில் ஈடுபட்டிருப்பதாக கண்டறிந்து கொலையாளிகளை கைது செய்துள்ளார்கள்.

இதன்மூலம் வலதுசாரி சித்தாந்தம் கொண்ட அமைப்புகளால் கொலைக்கான திட்டங்கள் உருவாக்கப்பட்டு மனித உரிமை காப்பாளர்கள் இந்தியா முழுவதும் அடையாளம் காணப்பட்டு படுகொலை செய்யப்பட்டனர்.

சட்டத்தின் மூலம் சாமி கொல்லபட்டாரா?

ஊபா (UAPA) சட்டத்தின் கீழ் மனித உரிமை செயற்பாட்டாளர்கள் சுதா பரத்வாஜ், கவிஞர் வரவரராவ், ஆனந்த் டெல்டும்டே, கௌதம் நவ்லாகா, சோமா சென், சுதேந்திர காட்லிங், ரோனா வில்சன், அருண் பெரைரா, வெர்ணான், கொன்சால்வஸ், சுதிர்தவேல், மகேஸ்ராவுட், ஹேனிபாபு, கபிர்கலா இவர்களோடு இறுதியாக ஆதிவாசிகளின் உரிமை போராளி ஸ்டேன்சுவாமி உட்பட 16 நபர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட தெலுங்கானாவைச் சேர்ந்த கவிஞர் வரவர ராவ் கைது செய்யப்படும்போது அவருக்கு வயது 78, உடல் நிலை சரியில்லாமல் மும்பை தலோஜா மத்திய சிறையில் பல முறை மயங்கி விழுந்த பின்பும் ஒரு கட்டத்தில் அவரது உடல் நலத்தில் எவ்வித முன்னேற்றம் இல்லை என்ற நிலையில்தான் 6 மாத நிபந்தனைகளுடன் பிப்ரவரி 22ம் தேதி மும்பை உயர்நீதிமன்றம் பிணை வழங்கியது.

ஸ்டேன் சுவாமி 84 வயது மூப்பு ஒரு பக்கம் இருந்தாலும் அவர் ஏற்கனவே நடுங்குவாத (Parkinson Disease) நோயினால் பாதிக்கப்பட்டவர் கை நடுக்கத்தால் தண்ணீர் கூட அவரால் குடிக்க முடியாது. மேலும் இரண்டு காதுகளும் கேட்காது, இரண்டு முறை குடலிறக்க அறுவை சிகிச்சை செய்துள்ளார். இதனால் அடிக்கடி அதிகமான வலியால் சிரமப்பட்டுள்ளார்.

பலமுறை சுயநினைவு இழந்து சிறையில் கீழே விழுந்துள்ளார். அவருக்கு உள்ள உடல் உபாதைகளெல்லாம் நீதிமன்றத்திற்கு தெரிவித்தும் பிணை கிடைக்கவில்லை. தன்னால் சுயமாக தண்ணீர் குடிக்க முடியாத நிலையில் ஸ்டேன்சுவாமி உறிஞ்சி குழல் கேட்ட போதும் நீதிமன்றம் வழங்க முன்வரவில்லை. இந்த நிலையில்தான் அவருக்கு கொரோனா தொற்றும் ஏற்பட்டது.

தேசிய புலனாய்வு முகமையும் ( NIA) நீதிமன்றங்களும் வேண்டுமென்றே மருத்துவ சிகிச்சைக்கு ஏற்பாடு செய்ய தாமதப்படுத்தியது மற்றும் மறுத்ததின் காரணத்தினாலே ஜூலை 5ம் தேதி ஆதிவாசி மக்களின் அன்பை பெற்ற சுவாமியின் உயிர் போனது.

ஒரு நபரின் கைதுக்கு பின் பொருப்புள்ள நிறுவனங்கள் உயிரை பாதுகாக்க முன்வராமல் மரணம் ஏற்படுகிறது என்றால் அது நிறுவனங்கள் செய்த கொலைதான் எனவே ஸ்டேன் சுவாமியும் நிறுவனக் கொலையானார்.

எனவே கடந்த ஆண்டுகளில் மனித உரிமைகளுக்காக பேசியவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டதிற்கு எதிராக மக்கள் போராடியதால் விழிப்படைந்த கொலைகார அதிகார சக்திகள் புதிய யுத்தியாக சட்டத்தின் பெயரில் மனித உரிமை செயற்பாட்டாளர்களை கொலை செய்தல் தொடர்கிறதோ என்ற சந்தேகம் மேலோங்குகிறது.

- இ.ஆசீர், மனித உரிமை காப்பாளர் கூட்டமைப்பு

Pin It