தமிழகத்தின் பல ஊர்களில் நந்தினி படுகொலைக்கு நீதி கேட்டு கழகம் ஆர்ப்பாட்டங்களை நடத்தி வருகிறது.
அரியலூர் : கூட்டு பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்ட தலித் சிறுமி நந்தினி படுகொலையை கண்டித்து அரியலூர் மாவட்டம் செந்துரை அருகில் சிறுகடம்பூரில் 04-01-2017 அன்று திராவிடர் விடுதலைக்கழகம் சார்பில் அரியலூர் பேருந்து நிலையம் அருகில் அண்ணா சிலை பின்புறம் காலை 10.00மணிக்கு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .
ஆர்ப்பாட்டத்தை விழுப்புரம் அய்யனார், கழகத் தலைமை செயற் குழு உறுப்பினர் தொகுத்து வழங்கினார் . முன்னதாக புதுச்சேரி சிந்தனையாளர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தீனா, நாமக்கல் மாவட்ட திவிக செயலாளர் வைரவேல், புதுச்சேரி திவிக அமைப்பாளர் இளையரசன், சமூக ஆர்வலர் தமிழரசன், தமிழ் வழிக் கல்வி இயக்கம் சின்னப்பத் தமிழர், மக்கள் கண்காணிப்பகம் இராமு, பெரம்பலூர் மாவட்ட திவிக. செயலாளர் துரை.தாமோதரன் ஆகியோர் கண்டன உரை ஆற்றினர்.
பெரியார் திராவிடர் கழகம் - சுயமரியாதை சமதர்ம இயக்கம் காசு.நாகராசு, திருச்சி பெரியார் சரவணன், மாநில கொள்கை பரப்பு செயலாளர், தமிழக வாழ்வுரிமை கட்சி. துரை அருண் வழக்கறிஞர், திவிக, சென்னை ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாவட்ட செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, அரிய லூர் மாவட்டம் செல்வ நம்பி உரையாற்ற, ஆர்ப்பாட்டத்தை ஒருங்கிணைத்த இராவண கோபால் நன்றி தெரிவிக்க சுமார் 2.00 மணியளவில் ஆர்ப்பாட்டம் நிறைவு பெற்றது. மேலும் சென்னை மாவட்ட திவிக பொறுப்பாளர்கள் இரா.செந்தில், ஜான் மண்டேலா மற்றும் கல்லூரி மாணவர்கள் வினோத் குழுவினரும் விடுதலை சிறுத்தைகள், தமிழக வாழ்வுரிமை கட்சியை சேர்ந்த தொண்டர்களும் ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர். ஆர்ப்பாட்டம் நடத்திட உறுதுணையாக இருந்த அரியலூர் மு.சே.கலைச்செல்வனுக்கு நன்றிகளை உரித்தாக்குகிறோம்
மதுரையில் : திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் 31.1.2017 அன்று காலை 11 மணியளவில் மதுரை பெரியார் பேருந்து நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மதுரை மாவட்ட கழகச் செயலாளர் மா.பா.மணிகண்டன் தலைமை தாங்கினார். ஆதிதமிழர் பேரவை துனை பொதுச் செயலாளர் கார்த்திக், மாவட்ட செயலாளர் ஆதவன் , ஆதித் தமிழர் கட்சி மாவட்ட செயலாளர் சிதம்பரம், திவிக மாநகர் பொறுப்பாளர். காமாட்சி பாண்டி, சத்திய மூர்த்தி, சரவணன், சங்கரன் கோவில் ராமசாமி, அருள். பாலா உள்ளிட்ட 53 பேர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது செயல்படாத தீண்டாமை ஒழிப்புப் பிரிவு காவல் அலுவலகம் நோக்கி முற்றுகையிட செல்ல முயன்ற தோழர்கள் 20 பேரை காவல்துறை கைது செய்தது. தோழர்கள் மாலை விடுவிக்கப்பட்டனர்.